காம-க்ரோத-விமுக்தானாம்
யதீனாம் யத-சேதஸாம்
அபிதோ ப்ரஹ்ம-நிர்வாணம்
வர்ததே விதிதாத்மனாம்
Synonyms:
காம — காமத்திலிருந்து; க்ரோத — கோபம்; விமுக்தானாம் — முக்தியடைந்தவர்களில்; யதீனாம் — புனிதமானவர்களில்; யத-சேதஸாம் — மனதை முழுதும் அடக்கியவரில்; அபித: — வெகு விரைவில் உறுதி செய்யப்படுகிறான்; ப்ரஹ்ம-நிர்வாணம் — பரத்தில் முக்தி; வர்ததே — உண்டென்று; விதித-ஆத்மனாம் — தன்னுணர்வை அடைந்தோரில்; .
Translation:
யாரெல்லாம் கோபத்திலிருந்தும் எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, தன்னுணர்வும் தன்னொழுக் கமும் நிறைந்து பக்குவத்தை அடைவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்கின்றனரோ, அவர்கள், கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி.
Purport:
முக்தியை அடைவதற்காகத் தொடர்ந்து பாடுபடும் சாதுக்களில் கிருஷ்ண பக்தனே மிகச் சிறந்தவனாவான். இவ்வுண்மையினை பாகவதம்(4.22.39) பின்வருமாறு உறுதி செய்கின்றது.
யத்-பாத-பங்கஜ-பலாஷ-விலாஸ-பக்த்யா
கர்மாஷயம் க்ரதிதம் உத்க்ரதயந்தி ஸந்த:
தத்வன் ந ரிக்த-மதயோ யதயோ (அ)பிருத்த
ஸ்ரோதோ-கணாஸ் தம் அரணம் பஜ வாஸுதேவம்
“பக்தி தொண்டின் மூலம் பரம புருஷ பகவானான வாஸூதேவரை வழிபட முயற்சி செய். பலன்நோக்குச் செயல்களுக்கான ஆழமான ஆசைகளை வேரறுத்து, இறைவனின் பாத கமலங்களுக்கு சேவை செய்து, திவ்யமான ஆனந்தத்தில் ஆழ்ந்திருக்கும் பக்தர்கள், தங்களது புலன்களின் உந்துதல்களை திறம்பட கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் மிகச்சிறந்த சாதுக்களாலும் அதுபோன்று கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல.”
செயலின் பலனை அனுபவிப்பதற்கான ஆசைகளைக் கட்டுப்படுத்த, மிகச்சிறந்த சாதுக்களும் பெருமுயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் கடினமாகத் திகழுமளவிற்கு, இவ்விருப்பங்கள் கட்டுண்ட ஆத்மாவினுள் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன. கிருஷ்ண உணர்வின் மூலம் இடையறாது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, தன்னுணர்வில் பக்குவமடைந்துள்ள கிருஷ்ண பக்தன், வெகு விரைவில் பரத்தில் முக்தியடைகிறான். தன்னுணர்வின் முழு ஞானத்தையுடைய அவன், எப்போதுமே ஸமாதி நிலையிலிருக்கிறான். ஓர் உதாரணம் கூறுவோமானால்,
தர்ஸன-த்யான -ஸம்ஸ்பர்ஷைர்
மத்ஸ்ய-கூர்ம-விஹங்க மா:
ஸ்வான்-யபத்யானி புஷ்ணந்தி
ததாஹம் அபி பத்ம-ஜா
“மீன் பார்வையாலும், ஆமை தியானத்தாலும், பறவைகள் தொடுவதாலும் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றன. பத்மஜனே, அதுபோன்றே நானும் செய்கிறேன்.”
மீன் தனது குஞ்சுகளைப் பார்வையாலேயே வளர்க்கின்றது. ஆமை அதன் குட்டிகளை தியானத்தினால் வளர்க்கின்றது. ஆமையின் முட்டைகள் கரையில் இருக்க, நீரினுள் இருக்கும் ஆமை அம்முட்டைகளின்மீது தியானம் செய்கின்றது. அதுபோலவே, கிருஷ்ண உணர்விலுள்ள பக்தன், இறைவனின் இடத்தை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும், கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதன் மூலம் அவரை இடையறாது எண்ணி, தன்னை அவ்விடத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியும். அவன் ஜடத் துன்பங்களின் வலியினை உணர்வதில்லை. இந்நிலை ப்ரஹ்ம நிர்வாணம் (பரத்தில் இடையறாது லயித்திருப்பதால் ஜடத் துயரங்கள் மறைந்துள்ள நிலை) எனப்படுகிறது.