வீத-ராக-பய-க்ரோதா
மன் மயா மாம் உபாஷ்ரிதா:
பஹவோ க்ஞான-தபஸா
பூதா மத்-பாவம் ஆகதா:
Synonyms:
வீத — விடுபட்டு; ராக — பற்றுதல்; பய — பயம்; க்ரோதா — கோபம்; மன்-மயா — முழுதும் என்னில்; மாம் — என்னில்; உபாஷ்ரிதா: — முழுக்க நிலைபெற்று; பஹவ: — பலர்; க்ஞான — ஞானம்; தபஸா — தவத்தால்; பூதா:— தூய்மைபெற்று; மத்-பாவம் — என் மீதான திவ்யமான அன்பினை; ஆகதா: — அடைந்துள்ளனர்.
Translation:
பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு, முழுதும் என்னில்லயித்து, என்னை சரணடைந்த பற்பல நபர்கள் என்னைப் பற்றிய அறிவால் இதற்கு முன் தூய்மையடைந்துள்ளனர். இவ்வாறாக, அவர்கள் எல்லாரும் என் மீது திவ்யமான அன்புடையவர்களாயினர்.
Purport:
மேலே கூறப்பட்டுள்ளபடி, பௌதிகத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவன், பரம பூரண உண்மையின் வியக்தித்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகும். உடலைச் சார்ந்த வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள மக்கள், பரமன் எவ்வாறு ஒரு நபராக இருக்க முடியும் என்பதை அறிவது ஏறக்குறைய அசாத்தியமாகும்; ஏனெனில், அவர்கள் அந்த அளவிற்கு பௌதிகத்தில் மூழ்கியுள்ளனர். பூரண அறிவுடனும் நித்தியமான ஆனந்தத்துடன் அழிவற்ற திவ்யமான உடல் ஒன்று இருக்கக்கூடும் என்பதை இத்தகைய பௌதிகவாதியினால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. பௌதிகக் கண்ணோட்டத்தில், உடல் அழிவுக்குட்பட்டது, அறியாமை நிறைந்தது, துன்பமயமானது. எனவே, சாதாரண மக்களிடம் பகவானின் தனிப்பட்ட ரூபத்தைப் பற்றி கூறும்போதும், அவர்கள் அதே உடல் உணர்வையே மனதில் கொண்டுள்ளனர். ஜட உணர்வில் இருக்கும் அத்தகு மக்கள், பிரம்மாண்டமான பௌதிகத் தோற்றத்தையே கடவுளாக நினைக்கின்றனர்; எனவே, கடவுளுக்கு உருவமில்லை என்று கூறுகின்றனர். ஜடத்தில் மூழ்கியிருக்கும் காரணத்தால், “முக்திக்குப் பிறகும் தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளலாம்,” என்னும் கருத்து அவர்களை அச்சமூட்டுகின்றது. தனித்தன்மையும் வியக்தித்துவமும் ஆன்மீக வாழ்விலும் உண்டு என்பதை அவர்கள் கேள்வியுறும்போது, மீண்டும் வியக்திகளாவதை எண்ணி அச்சமுற்று, அருவ சூன்யத்தில் ஜக்கியமாகிவிட விரும்புவது இயற்கையே. ஆத்மாக்களை கடலில் கலந்துவிடும் நீர்க்குமிழிகளுக்கு அவர்கள் ஒப்பிடுகின்றனர். வியக்தித்துவமின்றி அடைக்கூடிய ஆன்மீக நிலையின் உச்சப் பக்குவம் அவ்வளவே. ஆன்மீக வாழ்வின் பக்குவ ஞானமில்லாத, பயம் கொண்ட நிலை இது. இது மட்டுமின்றி, ஆன்மீக நிலை என்று ஒன்றிருப்பதையே புரிந்துகொள்ள முடியாத பலரும் உண்டு. பற்பல கொள்கைகளாலும் வெவ்வேறு தத்துவக் கற்பனைகளின் முரண்பாடுகளாலும், மிகுந்த குழப்பமுற்ற இவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, உயர்ந்த காரணம் எதுவும் கிடையாது, அனைத்தும் இறுதியில் சூன்யமே என்று முட்டாள்தனமாக முடிவெடுக்கின்றனர்.
இத்தகைய மக்கள் நோயுற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். சிலர் பௌதிகத்தில் அதிகப் பற்றுதல் கொண்டிருப்பதால் ஆன்மீக வாழ்வைக் கண்டு கொள்வதில்லை; சிலர் உயர் ஆன்மீக மூலத்துடன் இரண்டற கலக்க விரும்புகின்றனர்; வேறு சிலர் பலவித ஆன்மீகக் கற்பனைகளினால் விரக்தியுற்று கோபமடைந்து எதையுமே நம்பாதவர்களாக உள்ளனர். இந்த கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள்களிடம் தஞ்சமடைகின்றனர், இவர்களது உணர்ச்சிப் பூர்வமான கற்பனைகள் சில சமயங்களில் ஆன்மீக தரிசனங்களாக ஏற்கப்படுகின்றன. ஆன்மீக வாழ்வைப் புறக்கணித்தல், ஆன்மீகத் தனித்துவத்தைக் கண்டு பயப்படுதல், விரக்தியான வாழ்வினால் எழும் சூன்யத்திற்கான எண்ணம்—பற்றுதலின் இம்மூன்று நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். ஜட நோக்கம் கொண்ட வாழ்வின் இந்த மூன்று நிலைகளிலிருந்து விடுபட, பக்தித் தொண்டின் விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டலின்படி, கடைப்பிடித்து பகவானிடம் முழுமையாகத் தஞ்சமடைய வேண்டும். பக்தித் தொண்டின் இறுதி நிலை பாவ, இறைவனின் மீதான திவ்யமான அன்பு என்று அழைக்கப்படுகின்றது.
பக்தித் தொண்டு குறித்த விஞ்ஞானத்தை விளக்கும் பக்தி ரஸாம்ருத சிந்து (1.4.15-16) எனும் நூலின்படி:
ஆதௌ ஷ்ரத்தா தத: ஸாது-
ஸங்கோ (அ)த பஜன- க்ரியா
ததோ (அ)னர்த நிவ்ருத்தி:ஸ்யாத்
ததோ நிஷ்டா ருசிஸ் தத:
அதோ ஸக்திஸ் ததோ பாவஸ்
தத: ப்ரேமாப் யுதஞ்சதி
ஸாதகானாம் அயம் ப்ரேம்ண:
ப்ராதுர்பாவே பவேத் க்ரம:
“முதலில் ஒருவன் தன்னுணர்வுக்கான ஆரம்ப ஆவலைப் பெற்றிருக்க வேண்டும். இஃது அவனை ஆன்மீகத்தில் முன்னேறியவர்களுடன் உறவு கொள்ள முயற்சிக்கும் நிலைக்குக் கொண்டுவரும். அடுத்த நிலையில், உயர்ந்த ஆன்மீக குருவிடம் தீட்சை பெறும் ஆரம்ப நிலை பக்தன், அவரது கண்காணிப்பின்கீழ் பக்தித் தொண்டினைத் தொடங்குகிறான். ஆன்மீக குருவின் வழிகாட்டலின்கீழ் பக்தித் தொண்டைச் செயலாற்றுவதால், ஒருவன் வாழ்வின் எல்லா ஜடப் பற்றுதல்களிலிருந்தும் விடுபட்டு, தன்னுணர்வில் உறுதிபெற்று, பூரண புருஷோத்தமரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி கேட்பதில் ருசியைக் காண்கிறான். இந்த ருசி, அவனை கிருஷ்ண உணர்வின் மீது பற்றுதல் கொள்ளும் நிலைக்குக் கொண்டுச் செல்கிறது. அந்நிலை முதிர்ச்சி பெறும்போது, திவ்யமான இறையன்பின் ஆரம்ப நிலையான பாவ நிலையை அடைகிறான். அந்த இறையன்பின் உண்மையான நிலையே பிரேமை எனப்படும், அதுவே வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவ நிலையாகும்.” அந்த பிரேமை நிலையில், ஒருவன் இறைவனின் அன்புத் தொண்டில் இடையறாது ஈட்டுபட்டுள்ளான். எனவே, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டலின்கீழ் பக்தித் தொண்டினைப் பயிற்சி செய்வதால், எல்லாவிதமான பௌதிகப் பற்றுதல், ஆன்மீகத் தனித்துவத்தைக் கண்ட பயம், சூன்யவாத தத்துவத்தினால் எழும் விரக்தி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு உன்னத நிலையை அடைய முடியும். அதன்பின் இறுதியில் பரம புருஷரின் திருநாட்டைச் சென்றடையலாம்.