Wednesday, October 16

பகவத் கீதை – 2.20

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே

Synonyms:
ந — என்றுமில்லை; ஜாயதே — பிறப்பு; ம்ரியதே — இறப்பு; வா — அல்லது; வா—அல்லது, கதாசித்—எக்காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர்), ந—என்றுமில்லை, அயம்—இந்த, பூத்வா—தோன்றியது; வா — அல்லது; ந—கிடையாது, பூய—மீண்டும் தோன்றுவது; அஜ:—பிறப்பற்றவன், நித்ய:—நித்தியமானவன், ஷாஷ்வத:—என்றும் நிலைத்திருப்பவன்; அயம் — இந்த; புராண: — மிகப் பழமையானவன்; ந — இல்லை; ஹன்யதே — கொல்லப்படுவது; ஹன்யமானே — கொல்லப்படும் போது; ஷரீரே — உடல்.

Translation:
ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன், உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.

Purport:
பரமாத்மாவின் சிறிய அணு போன்ற நுண்ணிய பகுதியும் குணத்தால் அவரைப் போன்றதே. உடல் மாற்றமடைகின்றது, ஜீவாத்மாவோ மாற்றமடைவதில்லை. சிலசமயங்களில் ஆத்மா, நிலையானது (கூட-ஸ்த) என்று அழைக்கப்படுகின்றது. உடல் ஆறுவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டது. தாயின் உடலிலுள்ள கருப்பையிலிருந்து அது பிறவி எடுத்து, சிலகாலம் தங்கி, வளர்ந்து, சில பலன்களை உற்பத்தி செய்து, படிப்படியாக தேய்ந்து, கடைசியில் உணர்வற்று மறைந்து போகின்றது. இருப்பினும், ஆத்மா இத்தகைய மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. ஆத்மா பிறப்பது கிடையாது; இருப்பினும், அவன் உடலை ஏற்பதால் அவ்வுடல் பிறக்கின்றது. ஆத்மா அங்கே பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. பிறப்புள்ள எதற்கும் மரணமும் உண்டு. ஆத்மா பிறப்பற்றவன் என்பதால், அவனுக்கு இறந்த, நிகழ், எதிர்காலங்களும் கிடையாது. அவன் நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன்—அதாவது, அவன் தோன்றியதாக நாம் சரித்திரத்தில் எங்கும் காண முடியாது. ஆனால் உடல் சார்ந்த எண்ணத்தில் மூழ்கியுள்ள மக்கள், ஆத்மாவிற்கும் பிறப்பு மற்றும் வரலாற்றினைக் கேட்கின்றனர். உடல் முதுமையடைவதைப் போல, ஆத்மா ஒருபோதும் முதுமையடைவதில்லை. எனவேதான் முதியோன் என்று அழைக்கப்படுபவனும்கூட, தனது குழந்தைப் பருவம் அல்லது இளமையில் இருந்த அதே உணர்வை உணர்கிறான். உடலின் மாற்றங்கள் ஆத்மாவைப் பாதிப்பதில்லை. ஒரு மரத்தைப் போன்றோ, மற்ற எந்த ஜடப் பொருளைப் போன்றோ, ஆத்மா சீரழிவதில்லை. ஆத்மாவினால் உற்பத்திப் செய்யப்படும் பொருள்களும் கிடையாது. உடலின் உற்பத்திப் பொருள்களான குழந்தைகள் வெவ்வேறு ஆத்மாக்களே; உடலின் ஏற்றுக் கொண்டுள்ளதால் ஒரு குறிப்பிட்ட மனிதனின் குழந்தைகளாகத் தோன்றுகின்றனர். ஆத்மா இருப்பதால்தான் உடல் வளர்கின்றது. ஆனால் ஆத்மாவிற்கு சந்ததியோ மாற்றதோ இல்லவேயில்லை. எனவே, ஆத்மா, உடலின் ஆறுவித மாற்றங்களிலிருந்து விடுபட்டதாகும்.

கட உபநிஷத்திலும் (1.2.18) இதே போன்ற ஒரு செய்யுளைக் காண்கிறோம்.

ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சின்
நாயம் குதஸ்சின் ந பபூவ கக்ஷ்சித்
அஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே

இதன் பொருளும் விளக்கமும் கீதையிலுள்ளதைப் போன்றதேயாகும். அறிவு நிரம்பியவன் எனும் பொருள்படக்கூடிய விபஷ்சித் என்னும் ஒரு சொல் மட்டுமே இங்கு விசேஷமாகக் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆத்மா எப்போதும் அறிவும் உணர்வும் நிரம்பியவன். எனவே, உணர்வே ஆத்மாவின் அறிகுறியாகும். இதயத்தினுள் அமைந்துள்ள ஆத்மாவை ஒருவனால் காண முடியாவிட்டாலும், உணர்வு இருப்பதன் மூலமாக ஆத்மா இருப்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். சில சமயம் மேக் கூட்டத்தாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ, வானிலிருக்கும் சூரியனை நம்மால் காண முடிவதில்லை; இருப்பினும், அதன் ஒளி எப்போதும் இருப்பதால், அது பகல் நேரம் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். விடியற்காலையில் வானில் இருப்பதை நாம் சற்று ஒளி தோன்றியவுடன், சூரியன் வானில் இருப்பதை நாம் உணர்கிறோம். அதுபோல, எல்லா உடல்களிலும்—மனிதனோ மிருகமோ—ஏதாவது ஒரு வகையில் உணர்வு காணப்படுவதால் ஆத்மாவின் இந்த உணர்வு, பரமனின் உணர்விலிருந்து வேறுபட்டது; ஏனெனில், பரமனின் உன்னத உணர்வு, இறந்த, நிகழ மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பூரண அறிவுடையதாகும். தனி ஜீவாத்மாவின் உணர்வு மறதியுடையது. அவன் தனது உண்மையான இயற்கையை மறந்திருக்கும்போது, கிருஷ்ணரின் உயர்ந்த உபதேசங்களிலிருந்து தெளிவும் அறிவும் பெறுகின்றான். ஆனால், கிருஷ்ணர் அத்தகைய மறதியுள்ள ஆத்மா அல்ல. அவர் மறதியுடையவராக இருந்தால், கீதையிலுள்ள அவரது அறிவுரைகள் பயனற்றதாகும்.

ஆத்மா இரு வகைப்படும்—ஒன்று, நுண்ணியத் துகளைப் போன்ற ஆத்மா (அணு-ஆத்மா), மற்றது பரமாத்மா (விபு-ஆத்மா). இதுவும் பின்வருமாறு கட உபநிஷத்தில் (1.2.20) உறுதி செய்யப்பட்டுள்ளது:

அணோர் அணீயான் மஹதோ மஹீயான்
ஆத்மாஸ்ய ஜந்தோர் நிஹிதோ குஹாயாம்
தம் அக்ரது: பஷ்யதி வீத-ஷோகோ
தாது: ப்ரஸாதான் மஹிமானம் ஆத்மன

“பரமாத்மா அணு ஆத்மா (ஜீவாத்மா) இருவருமே உடல் எனப்படும் ஒரே மரத்தில் ஒரே இதயத்தில்தான் வசிக்கின்றனர். எல்லா ஜட ஆசைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் விடுபட்டவன் மட்டுமே. பரமாத்வாவின் கருணையால், ஆத்மாவின் புகழைப் புரிந்துகொள்ள முடியும்.” பின்வரும் அத்தியாயங்களில் விளக்கப்படுவதைப் போல, கிருஷ்ணரே பரமாத்மாவிற்கு மூலமாவார். அணு ஆத்மாவான அர்ஜுனன், தன் உண்மை இயல்பை மறந்த நிலையில் உள்ளான்; எனவே, கிருஷ்ணராலோ, அவரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாலோ (ஆன்மீக குருவாலோ) அவன் தெளிவடைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question