Tuesday, June 25

பகவத் கீதை – 16.1

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ-பகவான் உவாச

அபயம் ஸத்த்வ-ஸம்ஷுத்திர்
ஜ்ஞான-யோக-வ்யவஸ்திதி:
தானம் தமஷ் ச யக்ஞஷ் ச
ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம்


அஹிம்ஸா ஸத்யம் அக்ரோதஸ்
த்யாக: ஷாந்திர் அபைஷுனம்
தயா பூதேஷ்வ் அலோலுப்த்வம்
மார்தவம் ஹ்ரீர் அசாபலம்

தேஜ: க்ஷமா த்ருதி: ஷெளசம்
அத்ரோஹோ நாதி-மானிதா
பவந்தி ஸம்பதம் தைவீம்
அபிஜாதஸ்ய பாரத


வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

ஸ்ரீ-பகவான் உவாச—புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அபயம்—அச்சமின்மை; ஸத்த்வ-ஸம்ஷுத்தி—தனது இருப்பைத் தூய்மைப்படுத்துதல்; க்ஞான—ஞானத்தினால்; யோக—இணைத்தலின்; வ்யவஸ்திதி:—நிலை; தானம்—தானம்; தம:—மனதைக் கட்டுப்படுத்துதல்; ச—மற்றும்; யக்ஞ:—யாகம் செய்தல்; ச—மற்றும்; ஸ்வாத்யாய:—வேத இலக்கியங்களைக் கற்றல்; தப:—தவம்; ஆர்ஜவம்—எளிமை; அஹிம்ஸா—அகிம்சை; ஸத்யம்—வாய்மை; அக்ரோத—கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை; த்யாக:—துறவு; ஷாந்தி—அமைதி; அபைஷுனம்—குற்றம் காண்பதில் விருப்பமின்மை; தயா—கருணை; பூதேஷு—எல்லா உயிர்களிடத்தும்; அலோலுப்த்வம்—பேராசையிலிருந்து விடுபட்ட தன்மை; மார்தவம்—கண்ணியம்; ஹ்ரீ:—வெட்கம்; அசாபலம்—மனவுறுதி; தேஜ:—வீரம்; க்ஷமா—மன்னிக்கும் தன்மை; த்ருதி:—தைரியம்; ஷெளசம்—தூய்மை; அத்ரோஹ:—பொறாமையின்மை; ந—இல்லாமல்; அதி-மானிதா—மதிப்பை எதிர்பார்த்தல்; பவந்தி—ஆகின்றன; ஸம்பதம்—குணங்கள்; தைவீம்—தெய்வீக இயற்கையில்; அபிஜாதஸ்ய—பிறந்தவனின்; பாரத—பரதனின் மைந்தனே.

மொழிபெயர்ப்பு

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அச்சமின்மை, தனது நிலையை தூய்மைப்படுத்துதல், ஆன்மீக ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுதல், தானம், சுயக்கட்டுப்பாடு, யாகம் செய்தல், வேதங்களைக் கற்றல், தவம், எளிமை, அகிம்சை, வாய்மை, கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை, துறவு, சாந்தி, குற்றம் காண்பதில் விருப்பமின்மை, எல்லா உயிர்களின் மீதும் கருணை, பேராசையிலிருந்து விடுபட்ட தன்மை, கண்ணியம், வெட்கம், மனவுறுதி, வீரம், மன்னிக்கும் தன்மை, தைரியம், தூய்மை, பொறாமையின்மை, மரியாதையை எதிர்பார்க்காமல் இருத்தல் ஆகிய தெய்வீக குணங்கள், பரதனின் மைந்தனே, தெய்வீக இயல்புடைய உன்னதமான மனிதரைச் சார்ந்தவை.

பொருளுரை

பதினைந்தாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஜடவுலகம் என்னும் ஆலமரம் விளக்கப்பட்டது. அதிலிருந்து வெளிவரும் உபவேர்கள் உயிர்வாழிகளின் மங்களமான, அமங்களமான செயல்களுக்கு ஒப்பிடப்பட்டன. தேவர்களையும் அசுரர்களையும் பற்றி ஒன்பதாம் அத்தியாயத்திலும் விளக்கப்பட்டது. வேதச் சடங்குகளின்படி, முக்திக்கான பாதையில் முன்னேற்றம் பெறுவதற்கு ஸத்வ குணத்தின் செயல்கள் மங்களகரமானதாக கருதப்படுகின்றன. இத்தகு செயல்கள் தைவீ ப்ரக்ருதி, தெய்வீக இயற்கை என்று அறியப்படுகின்றன. தெய்வீக இயற்கையில் நிலைபெற்றவர்கள் முக்தியின் பாதையில் முன்னேற்றமடைகின்றனர். அதே சமயத்தில், ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் செயலாற்றுபவர்களுக்கு முக்திக்கான வாய்ப்பு ஏதுமில்லை. அவர்கள் இந்த ஜடவுலகில் மனிதராகவே தொடர வேண்டும், அல்லது வீழ்ச்சியுற்று மிருக இனங்களுக்கோ அதை விட தாழ்ந்த இனங்களுக்கோ செல்ல வேண்டியிருக்கும். இந்த பதினாறாம் அத்தியாயத்தில் தெய்வீக இயற்கை மற்றும் அதன் குணங்கள், அசுர இயற்கை மற்றும் அதன் குணங்கள் ஆகிய இரண்டையும் பகவான் விளக்குகின்றார். இந்த குணங்களின் நன்மை தீமைகளையும் அவர் விளக்குகின்றார்.

தெய்வீக குணங்களுடன் அல்லது நாட்டங்களுடன் பிறந்தவனைக் குறிப்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள அபி4ஜாதஸ்ய என்னும் சொல் மிகவும் முக்கியமானதாகும். தெய்வீக சூழ்நிலையில் குழந்தையைப் பெற்றெடுத்தல், கர்பாதான-ஸம்ஸ்கார என்று வேத சாஸ்திரங்களில் அறியப்படுகின்றது. தெய்வீக குணங்களுடைய குழந்தையை பெற்றோர்கள் விரும்பினால், மனித இனத்தின் சமுதாய வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பத்து கொள்கைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். நல்ல குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காம வாழ்வும் கிருஷ்ணரே என்று நாம் முன்பே பகவத் கீதையில் கற்றுள்ளோம். கிருஷ்ண உணர்வில் உபயோகிக்கப்பட்டால் காம வாழ்க்கை கண்டிக்கப்படுவதில்லை. கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள், குறைந்த பட்சம், நாய்களையும் பூனைகளையும் போன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது, மாறாக, குழந்தைகள் பிறந்த பின்னர், அவர்கள் கிருஷ்ண உணர்வை அடையும்படி அவர்களைப் பெற்றெடுக்க வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வில் ஆழ்ந்திருக்கும் தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளின் நல்வாய்ப்பாகும்.

சமுதாயத்தின் அதன் வாழ்வின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகவும் தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகவும் பிரிக்கும் அமைப்பு, வர்ணாஷ்ரம தர்மம் என்று அறியப்படுகிறது. இந்த வர்ணாஷ்ரம தர்மம் என்பது மனித சமுதாயத்தினை பிறப்பின் அடிப்படையில் பிரிப்பது அல்ல. இப்பிரிவுகள் கல்வித் தகுதிகளைப் பொறுத்தவை. இவை சமூகத்தை அமைதியுடன் வளமான நிலையில் வைப்பதற்கானவை. இங்கு விளக்கப்பட்டுள்ள குணங்கள், ஒரு மனிதனை ஆன்மீக அறிவில் முன்னேற்றம் பெறச் செய்து அதன் மூலம் அவன் ஜடவுலகிலிருந்து முக்தி பெறுவதற்கு உதவும் தெய்வீக குணங்களாகும்.

வர்ணாஷ்ரம அமைப்பில், துறவு வாழ்வை ஏற்றுள்ள சந்நியாசி, மற்ற எல்லா சமூக நிலைகள் மற்றும் அமைப்பில் உள்ளவர்களுக்கு தலைவராக அல்லது ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஒரு பிராமணர், சமூகத்தின் இதர மூன்று பிரிவுகளான சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர்களின் ஆன்மீக குருவாகக் கருதப்படுகின்றார். ஆனால் அமைப்பின் தலைவராக விளங்கும் சந்நியாசி, பிராமணர்களுக்கும் ஆன்மீக குருவாவார். சந்நியாசியின் முதல் தகுதி, அச்சமின்மையாக இருக்க வேண்டும். ஏனெனில், சந்நியாசி, எந்த வித ஆதரவும் இன்றி, அல்லது ஆதரவுக்கான உத்திரவாதமின்றி, தனியாக இருக்க வேண்டும் பரம புருஷ பகவானுடைய கருணையை மட்டுமே அவர் நம்பியிருக்க வேண்டும். “என்னுடைய உறவுகளைத் துறந்த பின், என்னை யார் பாதுகாப்பர்?” என்று ஒருவன் எண்ணினால், அவன் துறவு நிலையை ஏற்கக் கூடாது. பரமாத்மாவின் உருவில் எப்போதுமே இதயத்தில் வீற்றிருக்கும் பரம புருஷ பகவானான கிருஷ்ணர், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதிலும், ஒருவன் என்ன செய்ய விரும்புகின்றான் என்பதை அவர் எப்பொழுதும் அறிகின்றார் என்பதிலும் அவன் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு பரமாத்மாவான கிருஷ்ணர் தம்மிடம் சரணடைந்த ஆத்மாவை கவனித்துக் கொள்வார் என்பதில் அவன் முழு உறுதியுடன் இருக்க வேண்டும். “நான் ஒருபோதும் தனியாக இருப்பதில்லை. இருள் நிறைந்த வனப்பகுதியில் நான் வாழ்ந்தாலும் கிருஷ்ணர் என்னுடன் உள்ளார், அவர் எனக்கு எல்லாப் பாதுகாப்பையும் அளிப்பார்” என்று நினைக்க வேண்டும். இந்த உறுதியே அபயம், அச்சமின்மை என்று அழைக்கப்படுகிறது. துறவு வாழ்வில் இருப்பவருக்கு இத்தகு மனநிலை அவசியம்.

+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question