ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச
வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
ஸர்வஸ்ய—எல்லா உயிரினங்கள்; ச—கூட; அஹம்—நான்; ஹ்ருதி— இதயத்தில்; ஸன்னிவிஷ்ட:—வீற்றுள்ளேன்; மத்த:—என்னிடமிருந்து; ஸ்ம்ருதி:—ஞாபகசக்தி; க்ஞானம்—அறிவு; அபோஹனம்—மறதி; ச—மற்றும்; வேதை:—வேதங்களால்; ச—மேலும்; ஸர்வை:—எல்லா; அஹம்—நானே; ஏவ—நிச்சயமாக; வேத்ய—அறியப்பட வேண்டியவன்; வேதாந்த-க்ருத்—வேதாந்தத்தை தொகுத்தவனும்; வேத-வித்—வேதங்களை அறிபவனும்; ஏவ—நிச்சயமாக; ச—கூட, அஹம்—நானே.
மொழிபெயர்ப்பு
நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.
பொருளுரை
பரமாத்மாவின் உருவில் முழுமுதற் கடவுள் எல்லாரின் இதயத்திலும் வீற்றுள்ளார், அவரிடமிருந்தே எல்லாச் செயல்களும் தொடங்குகின்றன. உயிர்வாழி தனது முந்தைய பிறவியின் அனைத்து விஷயங்களையும் மறக்கின்றான், ஆனால் அவனது செயல்கள் எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கின்ற பரம புருஷருடைய வழிநடத்தலுக்கு ஏற்ப அவன் மீண்டும் செயல்பட்டாக வேண்டும். அவன் தனது முந்தைய செயல்களுக்கேற்ப காரியங்களை தொடங்குகின்றான். தேவையான அறிவு அவனுக்கு வழங்கப்படுகின்றது, ஞாபகசக்தியும் வழங்கப்படுகிறது, மேலும் அவன் தனது முந்தைய பிறவியை மறக்கின்றான். இவ்வாறு இறைவன் எங்கும் நிறைந்தவராக மட்டுமின்றி, ஒவ்வொரு தனிப்பட்ட இதயத்திலும் உறைபவராக உள்ளார். பல்வேறு செயல்களுக்குப் பலன்களை வழங்குபவரும் அவரே. அருவ பிரம்மனாக, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக, மற்றும் இதயத்தில் உறையும் பரமாத்மாவாக வழிபபடப்படுவது மட்டுமின்றி, வேதம் என்னும் அவதார ரூபத்திலும் அவர் வழிபடப்படுகிறார். மக்கள் தங்களது வாழ்வை சரியான முறையில் வடிவமைத்து, முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நற்பாதையினை வேதங்கள் வழங்குகின்றன. அவை பரம புருஷ பகவான் கிருஷ்ணரைப் பற்றிய அறிவை நல்குகின்றன. கிருஷ்ணர் வியாசதேவராக அவதரித்தபோது வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தார். மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு வியாச தேவரால் கொடுக்கப்பட்ட விளக்கவுரையான ஸ்ரீமத் பாகவதம், வேதாந்த சூத்திரத்தின் உண்மை அறிவை வழங்குகின்றது. முழுமுதற் கடவுள் கட்டுண்ட ஆத்மாக்களின் விடுதலைக்காக கருணையே வடிவாக உள்ளார்; அவர் உணவுப் பொருள்களை வழங்கி அவற்றைச் செரிக்கவும் செய்கின்றார், உயிர்வாழியின் செயல்களுக்கு சாட்சியாக உள்ளார், வேதங்களின் வடிவில் ஞானத்தை வழங்குகிறார், அது மட்டுமின்றி, பகவத் கீதையின் ஆசிரியராக பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வடிவிலும் ஞானத்தை வழங்குகின்றார். அவரே கட்டுண்ட ஆத்மாவின் வந்தனைக்குரியவர். இவ்வாறாக, கடவுள் மிகவும் நல்லவர்; மிகவும் கருணை வாய்ந்தவர்.