Thursday, September 19

பகவத் கீதை – 14.6

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்
ப்ரகாஷகம் அனாமயம்
ஸுக-ஸங்கேன பத்னாதி
க்ஞான-ஸங்கேன சானக

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
தத்ர—அவற்றில்; ஸத்தவம்—ஸத்வ குணம்; நிர்மலத்வாத்—ஜடவுலகில் மிகவும் தூய்மையாக இருப்பதால்; ப்ரகாஷகம்—பிரகாசப்படுத்துகின்ற; அனாமயம்—பாவ விளைவுகள் ஏதுமில்லாத; ஸுக—இன்பத்தின்; ஸங்கேன—தொடர்பினால்; பத்னாதி—பந்தப்படுத்துகின்றது; க்ஞான—ஞானத்தின்; ஸங்கேன—தொடர்பினால்; ச—மேலும்; அனக—பாவமற்றவனே.

மொழிபெயர்ப்பு
பாவமற்றவனே, மற்றவற்றைவிட தூய்மையானதான ஸத்வ குணம், பிரகாசப்படுத்துவதாகவும் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் அமைகின்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் இன்பத்தின் தொடர்பினாலும் ஞானத்தின் தொடர்பினாலும் பந்தப்பட்டுள்ளனர்.

பொருளுரை
ஜட இயற்கையினால் கட்டுப்படுத்தப்படும் உயிர்வாழிகளில் பல்வேறு வகையுண்டு. ஒருவன் மகிழ்ச்சியாகவும், அடுத்தவன் மிகவும் சுறுசுறுப்பாகவும், மற்றவன் உதவியற்றவனாகவும் உள்ளான். மனோ நிலையின் இத்தகு பல்வேறு தோற்றங்கள், இயற்கையினால் உயிர்வாழிகள் கட்டுண்ணடிருப்பதற்கு காரணமாக அமைகின்றன. அவர்கள் வெவ்வேறு விதத்தில் கட்டுண்டிருப்பது எவ்வாறு என்பது பகவத் கீதையின் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. முதலில் ஸத்வ குணத்தைப் பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. இந்த ஜடவுலகில் ஸத்வ குணத்தை வளர்ப்பதன் பலன் என்னவெனில், மற்ற குணங்களினால் கட்டுண்டிருப்பவர்களைக் காட்டிலும் ஒருவன் அறிவுடையவனாக ஆகின்றான். ஸத்வ குணத்தில் உள்ள மனிதன் ஜடத் துன்பங்களால் அவ்வளவாக பாதிக்கப்படுவதில்லை, மேலும் ஜட அறிவில் தான் உயர்ந்த நிலையில் இருப்பதாக அவன் உணர்கின்றான். ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருக்க வேண்டிய பிராமணன், இதற்கு பிரதிநிதியாக உள்ளான். ஸத்வ குணத்தில் இருப்பவன் ஏறக்குறைய தனது பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டுள்ளான் என்ற எண்ணம், அவனுக்கு ஓர் இன்பத்தை அளிக்கின்றது. உண்மையில், ஸத்வ குணம் என்றால், பெரும் அறிவு என்றும் பெரும் இன்பம் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

இங்குள்ள சிக்கல் என்னவெனில், ஓர் உயிர்வாழி ஸத்வ குணத்தில் நிலைபெறும்போது, அவன் மற்றவர்களைவிட அறிவில் முன்னேறியவனாகவும் சிறந்தவனாகவும் தன்னைக் கருதும் நிலைக்கு வருகின்றான். இவ்வாறு அவன் கட்டுண்டவனாகி விடுகிறான். விஞ்ஞானிகளும் தத்துவவாதிகளும் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். ஒவ்வொருவரும் தங்களது அறிவினால் பெருமை கொண்டுள்ளனர்; மேலும், பொதுவாக அவர்கள் தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதால், ஒருவகையான பௌதிக சுகத்தை உணர்கின்றனர். கட்டுண்ட வாழ்வில் உணரப்படும் இந்த முன்னேறிய சுகம், அவர்களை ஜட இயற்கையின் ஸத்வ குணத்தினால் பந்தப்படுத்துகின்றது. இதனால் ஸத்வ குணத்தில் செயலாற்றுவதில் அவர்கள் மிகவும் கவரப்படுகின்றனர். அவ்வழியில் செயலாற்றுவதற்கு அவர்களக்கு கவர்ச்சி இருக்கும் வரை, அவர்கள் இயற்கையின் குணங்களில் ஏதேனும் ஓர் உடலை எடுத்தாக வேண்டும். இவ்வாறாக ஆன்மீக உலகிற்கு மாற்றப்படுவதற்கோ, முக்தி பெறுவதற்கோ வாய்ப்பில்லாமல் ஆகி விடுகின்றது. தத்துவவாதியாக, விஞ்ஞானியாக அல்லது கவிஞனாக தொடர்ந்து பிறவியெடுக்கும் அவன், பிறப்பு இறப்பு என்னும் அதே அசௌகரியத்தில் மீண்டும் மீண்டும் பிணைக்கப்படுகின்றான். ஆனால் ஜட சக்தியின் மயக்கத்தினால், அத்தகு வாழ்வு இன்பமயமானது என்று அவன் எண்ணுகின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question