ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே க்ஞானம்
ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாக-மோஹெள தமஸோ
பவதோ(அ)க்ஞானம் ஏவ ச
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
ஸத்த்வாத்—ஸத்வ குணத்திலிருந்து; ஸஞ்ஜாயதே—வளர்கின்றது; க்ஞானம்—ஞானம்; ரஜஸ:—ரஜோ குணத்திலிருந்து; லோப:—பேராசை; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; ப்ரமாத—பைத்தியக்காரத்தனம்; மோஹெள—மயக்கம்; தமஸ:—தமோ குணத்திலிருந்து; பவத:—வளர்கின்றது; அக்ஞானம்—அறியாமை; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்.
மொழிபெயர்ப்பு
ஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம், மற்றும் மயக்கமும் விருத்தியாகின்றன.
பொருளுரை
தற்போதைய நாகரிகம் உயிர்வாழிகளுக்கு மிகவும் சாதகமற்றதாக இருப்பதால், கிருஷ்ண உணர்வு பரிந்துரைக்கப்படுகின்றது. கிருஷ்ண உணர்வின் மூலமாக, சமுதாயம் ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்ள முடியும். ஸத்வ குணம் வளர்ச்சியடையும்போது, விஷயங்களை மக்கள் உள்ளது உள்ளபடிக் காண்பர். தமோ குணத்தில் இருக்கும் மக்கள் மிருகங்களைப் போன்றவர்கள், எதையும் தெளிவாகக் காண இயலாதவர்கள். உதாரணமாக, ஒரு மிருகத்தைக் கொல்வதால் அதே மிருகத்தின் மறுபிறவியில் தான் கொல்லப்படுவதற்கான வாய்ப்பினை ஏற்பதை, தமோ குணத்தில் இருக்கும் மக்கள் காண்பதில்லை. உண்மையான ஞானத்தைப் பற்றிய கல்வி மக்களிடம் இல்லாததால், அவர்கள் பொறுப்பற்றவர்களாகி விடுகின்றனர். இத்தகு பொறுப்பற்ற தன்மையை நிறுத்த, பொதுமக்களின் மத்தியில் ஸத்வ குணத்தை வளர்ப்பதற்கான கல்வி அவசியம். ஸத்வ குணத்தில் உண்மையான கல்வியை அவர்கள் பெறும்போது, பூரண ஞானத்தைப் பெற்று, விஷயங்களை உண்மையாக அறியும் அறிவாளிகளாகின்றனர். பிறகு மக்கள் மகிழ்ச்சியுடன் வளமாக இருப்பர். அத்தகு மக்கள் பெரும்பான்மையினராக இல்லாவிட்டாலும் சரி, மக்கள்தொகையின் ஒரு குறிப்பிட்ட பங்கினர் கிருஷ்ண உணர்வவை வளர்த்துக் கொண்டு ஸத்வ குணத்தில் நிலைபெற்றால், உலகெங்கிலும் அமைதிக்கும் வளமைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறின்றி, ரஜோ குணத்திற்கும் தமோ குணத்திற்கும் உலகம் தன்னை அர்ப்பணித்து இருந்தால், அமைதியோ வளமோ இருக்க முடியாது. ரஜோ குணத்தில், மக்கள் பேராசை உடையவர்களாகின்றனர், புலனின்பத்திற்கான அவர்களது ஏக்கத்திற்கு எல்லையில்லை. புலனுகர்ச்சிக்குத் தேவையான வசதிகளும் அதற்கு வேண்டிய பணமும் ஒருவனிடம் இருந்தாலும் கூட, மகிழ்ச்சியோ மன அமைதியோ அங்கு இல்லை என்பதை யாராலும் காண முடியும். அவை சாத்தியமாவதில்லை, ஏனெனில் அவன் ரஜோ குணத்தில் உள்ளான். ஒருவனுக்கு மகிழ்ச்சி வேண்டுமெனில், அவனது பணம் அவனுக்கு உதவாது; கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்து அவன் ஸத்வ குணத்திற்குத் தன்னை உயர்த்திக் கொள் வேண்டும். ரஜோ குணத்தில் ஈடுபட்டிருக்கும்போது, ஒருவனது மனம் மகிழ்ச்சியின்றி இருப்பது மட்டுமல்ல, அவனது தொழிலும் வேலையும் கூட மிகவும் சிரமமானவை. தனது நிலையை தக்கவைத்துக் கொள்ள அவன் பல்வேறு திட்டங்களை[யம் வழிமுறைகளையும் கண்டுபிடித்து, போதுமான அளவு பணத்தைச் சேகரிக்க வேண்டும். இவையெல்லாம் துன்பமானவை. தமோ குணத்தில், மக்கள் பைத்தியமாகி விடுகின்றனர். தங்களது சூழ்நிலைகளால் வருத்தமுற்று, அவர்கள் போதைப் பொருள்களிடம் அடைக்கலம் கொள்கின்றனர். இவ்வாறு மென்மேலும் அறியாமையில் மூழ்குகின்றனர். இவர்களது எதிகாலம் மிகவும் இருளானது.