Wednesday, October 16

பகவத் கீதை – 12.13,14

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அத்வேஷ்டா ஸர்வ–பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸம-து:க-ஸுக: க்ஷமீ

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷ்சய :
மய்-யர்பித–மனோ–புத்திர் யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
அத்வேஷ்டா—பொறாமையற்ற; ஸர்வ–பூதானாம்—எல்லா உயிர்களிடத்திலும்; மைத்ர:—நட்புடன்; கருண:—அன்புடன்; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; நிர்மம:—உரிமையாளர் என்ற உணர்வின்றி; நிரஹங்கார:—அஹங்காரம் இன்றி; ஸம—சமமாக; து:க—துன்பத்திலும்; ஸுக:—இன்பத்திலும்; க்ஷமீ—மன்னித்து; ஸந்துஷ்ட:—திருப்தியுடன்; ஸததம்—எப்போதும்; யோகீ—பக்தியில் ஈடுபட்டுள்ளவன்; யத-ஆத்மா—சுய கட்டுப்பாடு; த்ருட-நிஷ்சய—உறுதியுடன்; மயி—என் மீது; அர்பித—ஈடுபடுத்தி; மன—மனதை; புத்தி:—புத்தியுடன்; ய:— எவனொருவன்; மத்-பக்த:—எனது பக்தன்; ஸ:—அவன்; மே—எனக்கு; ப்ரிய:—பிரியமானவன்.

மொழிபெயர்ப்பு
எவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக, தன்னை உரிமையாளராகக் கருதாதவனாக, அஹங்காரத்திலிருந்து விடுபட்டவனாக, இன்ப துன்பங்களில் சம நிலையுடையவனாக, சகிப்புத் தன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயக்கட்டுப்பாடு உடையவனாக, தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்தி உறுதியுடன் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, என்னுடைய அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

பொருளுரை
மீண்டும் தூய பக்தித் தொண்டின் விஷயத்திற்கு வரும் இறைவன், இந்த இரு பதங்களில் தூய பக்தனின் தெய்வீக குணங்களை விவரிக்கின்றார். ஒரு தூய பக்தன் எந்தச் சூழ்நிலையிலும் சஞ்சலமடைவதில்லை. யார் மீதும் அவன் பொறாமை கொள்வதும் இல்லை. தனது எதிரிக்கு எதிரியாகவும் அவன் ஆவதில்லை; “எனது சொந்த கர்ம வினையினால் இந்த நபர் எனக்கு எதிரியாகச் செயல்படுகிறார். எனவே, அவரை எதிர்ப்பதைவிட துன்பப்படுவதே சிறந்தது,” என்று பக்தன் நினைக்கின்றான். ஸ்ரீமத் பாகவத்தில் (10.14.8), தத் தே (அ)னுகம்பாம் ஸு ஸமீக்ஷ்யமாணோ புஞ்ஜான ஏவாத்ம–க்ருதம் விபாகம், என்று கூறப்பட்டுள்ளது. பக்தன் எப்போதெல்லாம் துயரத்தில் உள்ளானோ, சிக்கலில் வீழ்ந்து விட்டானோ, அப்போதெல்லாம் அவன் அவற்றை தன் மீதான இறைவனின் கருணையாக எண்ணுகின்றான். “நான் தற்போது துன்பப்படுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக துன்பத்தைக் கொடுக்கவல்ல எனது முந்தைய பாவவினைகளுக்கு நன்றி. நான் அனுபவிக்க வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் நான் அடையாமல் இருப்பதற்கு முழுமுதற் கடவுளின் கருணையே காரணம். அந்த பரம புருஷ பகவானின் கருணையினால் நான் மிகவும் குறைவான துன்பத்தையே பெற்றுள்ளேன்,” என்று அவன் நினைக்கின்றான். எனவே, பல்வேறு துன்பமிக்க சூழ்நிலைகளிலும் பக்தன் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கின்றான். மேலும், பக்தனானவன் தனது எதிரி உட்பட அனைவரிடமும் எப்போதும் அன்புடையவனாகவே உள்ளான். நிர்மம் என்றால் உடலைச் சார்ந்த வலிகளுக்கும் துன்பங்களுக்கும் பக்தன் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்று பொருள் (ஏனெனில், தான் இந்த ஜட உடலல்ல என்பதை அவன் பக்குவமாக அறிந்துள்ளான்). பக்தன் தன்னை உடலுடன் அடையாளம் கொள்ளாத காரணத்தினால், அவன் அஹங்காரத்திலிருந்து விடுபட்டு, இன்ப துன்பத்தில் சமநிலையுடன் உள்ளான். சகிப்புத் தன்மையுடைய அவன், முழுமுதற் கடவுளின் கருணையினால் என்ன வருகின்றதோ அதைக்கொண்டு திருப்தியடைகிறான். பெரும் சிரமத்துடன் அடையப்படும் பொருள்களுக்காக அவன் முயற்சி செய்வதில்லை; எனவே, எப்போதும் மகிழ்ச்சியாக உள்ளான். ஆன்மீக குருவிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகளில் நிலை பெற்றிருப்பதில், அவன் பரிபூரணமான யோகியாவான், மேலும் அவனது புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அவன் உறுதியுடன் உள்ளான். பக்தித் தொண்டின் நிலைத்த உறுதியிலிருந்து அவனை யாரும் விலக்கமுடியாது என்பதால், தவறான வாதங்களினால் அவன் அடித்துச் செல்லப்படுவதில்லை. கிருஷ்ணரே நித்தியமான பகவான் என்பதில் அவன் முழு உணர்வுடன் இருப்பதால் யாரும் அவனுக்குத் தொல்லை கொடுக்க முடியாது. இத்தகு தகுதிகள் அனைத்தும் மனதையும் புத்தியையும் முழுமுதற் கடவுளின் மீது முழுமையாக பதியச் செய்வதற்கு அவனுக்கு உதவும். பக்தித் தொண்டின் இத்தகு உயர்நிலை ஐயமின்றி மிகவும் அரிதானதே, இருப்பினும் பக்தித் தொண்டின் ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் அத்தகு உயர்நிலையில் பக்தன் நிலை பெறுகின்றான். இதுமட்டுமின்றி, பூரண கிருஷ்ண உணர்வில் ஆற்றப்படும் தனது பக்தனின் செயல்கள் தனக்கு எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுப்பதால், அத்தகு பக்தன் தனக்கு மிகவும் பிரியமானவன் என்று பகவான் கூறுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question