Wednesday, October 16

பகவத் கீதை – 10.3

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

யோ மாம் அஜம் அனாதிம் ச
வேத்தி லோக-மஹேஷ்வரம்
அஸம்மூட: ஸ மர்த்யேஷு
ஸர்வ–பாபை: ப்ரமுச்யதே

Synonyms:

ய: — யாராயினும்; மாம் — என்னை; அஜம் — பிறப்பற்ற; அனாதிம் — ஆதியற்ற; ச — மேலும்; வேத்தி — அறிகிறானோ; லோக — உலகங்களின்; மஹேஷ்வரம் — பரம ஆளுநர்; அஸம்மூட: — குழப்பமடையாத; ஸ: — அவன்; மர்த்யேஷு — மரணத்திற்கு உட்பட்டவர்களின் மத்தியில்; ஸர்வ-பாபை: — எல்லாவித பாவ விளைவுகளிலிருந்தும்; ப்ரமுச்யதே — விடுதலை பெறுகிறான்.

Translation:

எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.

Purport:

ஏழாம் அத்தியாயத்தில்(7.3) கூறப்பட்டுள்ளபடி, மனுஷ்யாணாம் ஸஹஸரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே-ஆன்மீக உணர்வின் தளத்திற்குத் தம்மை உயர்த்திக் கொள்ள முயல்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஆன்ம உணர்வினைப் பற்றிய சற்றும் அறிவற்ற கோடிக்கணக்கான சாதாரண மனிதர்களைவிட அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். ஆனால் தமது ஆன்மீக நிலையைப் புரிந்து கொள்ள உண்மையிலேயே முயற்சி செய்யும் அத்தகு சிறந்த மனிதர்களில், கிருஷ்ணரே பரம புருஷ பகவான், அவரே எல்லாவற்றின் உரிமையாளர், அவர் பிறப்பற்றவர் என்னும்அறிவு நிலையை வந்தடைபவனே ஆன்மீக உணர்வை அடைந்தவர்களில் மிகவும் வெற்றி பெற்றவனாவான். கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்த அந்த நிலையில் மட்டுமே. ஒருவன் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.

“பிறப்பற்ற” எனும் பொருள் தரக்கூடிய அஜ எனும் சொல் பகவானைக குறிக்க இங்கே உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் அத்தியாயத்தில் அஜ எனும் சொல்லினால் விளக்கப்படும் உயிர்வாழிகளிடமிருந்து அவர் வேறுபட்டவர். ஜடப் பற்றுதலினால் பிறந்து இறந்து கொண்டிருக்கும் உயிர்வாழிகளிலிருந்து, பகவான் வேறுபட்டவர். கட்டுண்ட ஆத்மாக்களின் உடல்கள் மாறுதலுக்கு உட்பட்டவை, ஆனால் அவருடைய உடலோ மாறுதலற்றது. அவர் இந்த ஜடவுலகிற்கு வரும்போதுகூட அதே பிறப்பற்றவராகத்தான் வருகின்றார். எனவே தான், பகவான் தனது உயர்ந்த சக்தியான அந்தரங்க சக்தியினால் எப்போதும் தோன்றுகிறார் என்றும் தாழ்ந்த சக்தியான ஜட சக்தியினால் அல்ல என்றும் நான்காம் அத்தியாயத்தில் கூறப்பட்டது.

இந்த பதத்திலுள்ள வேத்தி லோக மஹேஷ்வரம் எனும் சொற்கள், பிரபஞ்சத்திலுள்ள எல்லா லோகங்களுக்கும் பரம உரிமையாளர் பகவான் கிருஷ்ணரே என்பதை ஒருவன் அறிய வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. படைப்பிற்கு முன்பிலிருந்தே இருக்கும் அவர், தனது படைப்பிலிருந்து வேறுபட்டவர். தேவர்கள் அனைவரும் இந்த ஜடவுலகில் படைக்கப்பட்டவர்களே, ஆனால் கிருஷ்ணரைப் பொறுத்தவரையில், அவர் படைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, எனவே பிரம்மா, சிவன் போன்ற மாபெரும் தேவர்களிடமிருந்தும் கிருஷ்ணர் வேறுபட்டவர், மேலும் பிரம்மா, சிவன் உட்பட எல்லா தேவர்களையும் படைத்தவர் அவரே என்பதால், எல்லா உலகங்களின் பரம ஆளுநர் அவரே.

எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் படைக்கப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் வேறு பட்டவர், அவரை இவ்வாறு உள்ளபடி அறிபவன் எல்லா பாவ விளைவிகளிலிருந்தும் உடனடியாக விடுபடுகிறான். பரம புருஷரைப் பற்றிய அறிவினை அடைவதற்கு, ஒருவன் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும விடுபட்டிருக்க வேண்டும். பகவத் கீதையில் கூறியிருப்பது போல, பக்தித் தொண்டால் மட்டுமே அவரைப் புரிந்து கொள்ள முடியும், வேறு எந்த வழியாலும் அல்ல.

கிருஷ்ணரை சாதாரண மனிதராக அறிய ஒருவன் முயலக் கூடாது. முட்டாள்கள் மட்டுமே அவரை சாதாரண மனிதராக எண்ணுகின்றனர் என்று முன்பே கூறப்பட்டது. ஆதே கருத்து இங்கு வேறுவிதமாக கூறப்பட்டுள்ளது. முட்டாளாக இல்லாத மனிதன், அதாவது பகவானுடைய உண்மையான நிலையைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு புத்தியுடையவன், எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் எப்போதும் விடுபட்டவனாவான்.

கிருஷ்ணர் தேவகியன் மைந்தனாக அறியப்படும் பட்சத்தில், அவர் பிறப்பற்றவராவது எங்ஙனம்? இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது அவர் தேவகி, வாசுதேவரின் முன்பு தோன்றியபோது, சாதாரணக் குழந்தையைப் போலப் பிறக்கவில்லை. முதலில் தனது மூல ரூபத்தல் தோன்றி, பின்னால் அவர் தன்னை சாதாரணக் குழந்தையைப் போல மாற்றிக் கொண்டார்.

கிருஷ்ணருடைய வழிகாட்டுதலின்கீழ் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் தெய்வீகமானவை. அச்செயல்கள், ஜட விளைவுகளால் களங்கமடைவது இல்லை.ஜட செயல்கள் மங்களகரானவை, அமங்களமானவை என்று பிரிக்கப்படுகின்றன. ஆனால் இவ்வுலகிலுள்ள அத்தகு கருத்து ஏறக்குறை மனக் கற்பனையே ஏனெனில் இந்த ஜடவுலகில் மங்களகரமானவை என்று எதுவும் கிடையாது. ஜட இயற்கை முழுவதும் அமங்களமானவையே என்பதால், அனைத்துமே அமங்களமானதுதான். சிலவற்றை மங்களகரமானதாகக் கருதுவது நமது கற்பனையே. உண்மையான மங்களம் என்பது, பூரண பக்தியுடனும் சேவை மனப்பான்மையுடனும் கிருஷ்ண உயர்வில் செய்யப்படும் செயல்களைப் பொருத்தாகும். எனவே, நமது செயல்கள் மங்களகரமானதாக அமைய வேண்டும் என்றால்,நாம் பரம புருஷருடைய வழிகாட்டதலின் கீழ் செயல்பட வேண்டும். அத்தகு வழிகாட்டுதல் ஸ்ரீமத் பாகவதம். பகவத்கீதை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நூலிலிருந்தும், நேர்மையான ஆன்மீக குருவிடமிருந்தும் பெறலாம். பரம புருஷரின் பிரதிநிதி என்பதால், ஆன்மீககுருவின் வழிகாட்டுதல் பகவானின் நேரடி வழிகாட்டுதலேயாகும். ஆன்மீக குரு , சாதுக்கள், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றின் வழிகாட்டுதலும் ஒன்றே. இந்த மூன்று மூலங்களிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது. இத்தகு வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படும் எல்லா செயல்களும், இந்த ஜடவுலகின் பாவ புண்ணியத்திலிருந்து விடுபட்டவையாகும். செயல்களைச் செய்வதில் பக்தனிடமுள்ள திவ்யமான மனப்பான்மை உண்மையான துறவாகும். இதுவே சந்நியாசம். பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் முதலாவது பதத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல, எவனொருவன் பரம புருஷரால் ஆணையிடப்பட்டதன் காரணத்தால் தனது கடமையில் ஈடுபட்டுள்ளானோ, எவனொருவன் தனது செயல்களின் பலன்களில் தஞ்சமடைவதில்லையோ (அனாஷ் ரித: கர்ம-பலம்), அவனே உண்மையான துறவியாவான். பரம புருஷரின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுபவனே, உண்மையான சந்நியாசியும் யோகியும் ஆவான். வெறுமே சந்நியாச உடையைத் தாங்கிக் கொண்டு போலி யோகியாக இருப்பவன் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question