ஏகாதசி விரதம் இருப்பது எப்படி ?
ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எல்லாவகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும். குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட அனைத்து பலகாரங்களையும் உண்ணக் கூடாது.
நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும்.
காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சோர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.
சமையல் எண்ணெய் வகையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை மட்டும் சேர்க்கலாம். மற்றெல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பார் அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பயறு வகைகள் அல்லாத காய்கறிகளச் சேர்த்துக் கொள்வர்.