கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர். அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின் உடலிலிருந்து, பற்பல ஆயூதங்களுடனும் அஸ்திரங்களுடனும் ஓர் அழகான மங்களகரமான மகள் தோன்றினாள். அசுரனுடன் தொடர்ந்து போரிட்ட தேவி, இறுதியில் அவனது தலையை வெட்டி வீழ்த்தினாள். பகவான் விஷ்ணு துயிலெழுந்த போது, முராசுரன் மரணமடைந்திருப் பதையும், தன்முன் கூப்பிய கரங்களுடன் இருக்கும் தேவியையும் கண்டு, “நீ யார்?” என்று வினவினார். “தங்கள் உடலிலிருந்து தோன்றியவள் நான், உறக்கத்திலிருந்த தங்களை இந்த அசுரன் கொல்ல முயன்றதால், நான் இவனைக் கொன்று விட்டேன்,” என்று அவள் பதிலளித்தாள். மகிழ்ச்சியுற்ற பகவான், “என்னுடைய ஆன்மீக சக்தியான நீ, ஏகாதசி (பதினொன்றாவது) திதியில் தோன்றியதால், ஏகாதசி என்று அழைக்கப்படுவாய். நீ தோன்றிய நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நிலையை அடைவர்,” என்று வரம் நல்கினார். பின்னர், சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி, ஒவ்வொரு மாதத்திலும் இருமுறை வெவ்வேறு ரூபங்களில் தோன்றினாள்.
(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)