Sunday, November 10

Vijaya Ekadashi (Tamil) / விஜய ஏகாதசி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மாசிமாதம் – கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை விஜய ஏகாதசியாக ‌கொண்டாடுவர். விஜய ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.ஏகாதசிவிரத மஹாத்மிய கதைகள் அர்ஜூனனின் மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் அளித்தாலும், திருப்தி அடையாமல், ஜெயா ஏகாதசி விரத மஹிமையை கேட்டு முடித்தவுடன், ஸ்ரீகிருஷ்ணரிடம், ” ஹே மதுசூதனா! தாங்கள் கிருபை புரிந்து, பால்குண மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிக்கும் விதி, இவற்றைப்பற்றி விஸ்தாரமாக கூற வேண்டுகிறேன்.” என்றான். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “ஹே பார்த்தா! மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, விஜய ஏகாதசி என்னும் பெயரால்அழைக்கப்படுகிறது. இவ் விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றி கிட்டுகிறது. மிகவும் மேன்மை வாய்ந்த இவ்விரத மஹாத்மியகதையைக் கேட்பதாலும், படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன.

ஒரு சமயம் தேவரிஷி நாரதர், ஜகத்தைப் படைப்பவரான தன் தந்தை பிரம்ம தேவரிடம், “தந்தையே ! தாங்கள் எனக்கு மாசி-பங்குனி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் விஜயா ஏகாதசியின் விரத விதானத்தை கூறி அருள வேண்டும்.” என்றார். பிரம்மதேவர் பதிலளிக்கையில், “மகனே நாரதா!, விஜயா ஏகாதசி விரதமானது முற்பிறவி மற்றும் இப்பிறவி இரண்டின் பாபத்தையும் அழிக்க வல்லது. இவ்விரதம் அனுஷ்டிக்கும் விதியை இதுவரை நான் யாருக்கும்சொன்னதில்லை. நீ கேட்ட கேள்வியின் பதில், இவ்வுலக ஜீவராசிகள் அனைத்திற்கும் பயன் அளிக்கும் என்பதால் கூறுகிறேன். இவ்விரதத்தின் பலனானது, அனுஷ்டிப்பவர் அனைவருக்கும் அனைத்திலும் வெற்றியை அளிக்கக்கூடியது. ஆகையால் நான் விவரித்து கூறப் போகும் இவ்விரத மஹாத்மியத்தை கவனத்துடன் கேள்.”என்றார்.

திரேதாயுகத்தில், புருஷோத்தமனான ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி, தனது பதினான்கு வருட வனவாசத்தின் போது பஞ்சவடியில், மனைவி சீதா மற்றும் தமையன்லக்ஷ்மணனுடன் வசித்து வந்தார். அக்கால கட்டத்தில், மஹா பாபியான இலங்கை வேந்தன் இராவணன், அன்னை சீதா தேவியை அபகரித்துச் சென்றான். சீதையின் நிலையை அறியாது, இழந்த சோகத்தால் துக்கம் பீடிக்க, கவலையுடன் அன்னையை தேடி அலைந்தனர். வனத்தில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து, கடைசியில் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஜடாயுவை கண்டு, அவரருகில் சென்றனர்.

ஜடாயு, அன்னை சீதையை இராவணன் கவர்ந்து சென்ற விபரத்தை பகவான் ஸ்ரீராமனிடம் கூறி விட்டு, அண்ணலின் மடியில் தனது உயிரை நீத்து, ஸ்வர்க்கலோகம் அடைந்தார். சீதை இருக்கும் இடம் அறிந்து, ஸ்ரீராமரும் லக்ஷ்மணனும், அன்னையைத் தேடும் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும், சுக்ரீவன் இருப்பிடத்தை அடைந்தனர். ராமபக்த ஹனுமான் முலம் சுக்ரீவனுடன் தோழமை பூண்டு, வானர ராஜன் வாலியை வதம் செய்தார் ஸ்ரீராமர். ஸ்ரீஹனுமான், கடலைக் கடந்து, லங்கா நகருக்குச் சென்று, அன்னை சீதையைக் கண்டு அண்ணல் ஸ்ரீ ராமர், சுக்ரீவன் இருவரின் தோழமைப் பற்றி விவரித்து உரைத்தார். லங்கையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியிடம் அசோகவனத்தில் அன்னை சீதையின் நிலையைப் பற்றி விவரமாக கூறினார்.

அன்னையின் நிலைஅறிந்ததுடம், அன்னையை மீட்பதற்காக, வானர ராஜன் சுக்ரீவனின் அனுமதியுடன் வானரர் மற்றும் கரடிகளின் சேனையுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டனர் ஸ்ரீராமலக்ஷ்மணர்கள். பயணம் இறுதியில் தென் கோடி சமுத்திரத்தின் கரையில் வந்து நின்றது. முதலை, மீன் ஆகிய ஜீவராசிகள் அடங்கிய பரந்து விரிந்த சமுத்திரத்தைப் பார்த்த ஸ்ரீராமர், லக்ஷ்மணனிடம், ” ஹே லக்ஷ்மணா, அனேக நீர் வாழ் ஜீவராசிகள் அடங்கிய பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தை எங்ங‌னம் கடப்பது?” என்று வியந்து நின்றார்.

அதற்கு லக்ஷ்மணன்,” மதிப்பிற்குரிய சகோதரா! தாங்களே புருஷோத்தமனான ஆதிபுருஷன் ஆவீர். தாங்கள் அனைத்தும் அறிவீர். இங்கிருந்து அரை யோஜ‌னை தூரத்தில் குமாரி தீபம் என்னும் இடத்தில் வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமம் இருக்கிறது. அவர் அனேக பிரம்ம ஜனனங்களை கண்டவர். தாங்கள் அவரிடத்தில் சென்று நம் வெற்றிக்கான உபாயத்தை கேட்பது உசிதம்.” என்றான்.லக்ஷ்மணனின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராமர் அதன்படி வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்று முனிவரைக் கண்டு தனது பணிவானவணக்கத்தைச் சமர்ப்பித்து அவர் முன் அமர்ந்தார். மனிதனாக‌ அவதாரம் எடுத்துள்ள புருஷோத்தமனான ஸ்ரீ ராமரை அறிந்து கொண்ட வக்தால்ப்ய முனிவர், ஸ்ரீ ராமரிடம்,” ஹே ஸ்ரீ ராம்!, எக்காரியத்திற்காக இங்கு நீ எழுந்தருளியுள்ளாய்.” என்று வினவினார்.

அதற்கு ஸ்ரீராமர்,” ஹே மஹரிஷி!, நான் என்னுடைய படைகளுடன் சமுத்திரத்தின் கரையில் முகாமிட்டுள்ளேன். என் மனைவி சீதையை இலங்கை வேந்தனான இராவணன் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்துள்ளான். ஆகவே என் மனைவி சீதையை மீட்பதற்காகவும், அரக்கர்களை யுத்தத்தில் வெல்லவும் பிரம்மாண்டமான இச் சமுத்திரத்தைக் கடந்து இலங்கை செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இதற்கான உபாயத்தைவேண்டி தங்களிடம் வந்துள்ளேன். தாங்கள் தயவு கூர்ந்து பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தைக் கடப்பதற்கான உபாயத்தைக் கூறி அருள வேண்டும்.” என்றார்.

வக்தால்ப்ய ரிஷிஸ்ரீ ராமரிடம்,” ஹே ராமா!, தங்களுக்கு மேலான ஒரு விரதத்தைப் பற்றி கூறுகிறேன். கேளுங்கள். இதை அனுஷ்டிப்பதால் தங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.”என்றார்.இதைக் கேட்டு உற்சாகமடைந்த ஸ்ரீ ராமர் ” முனிவரே, அப்படி ஒரு மகத்தான விரதம் எது? அதன் பெயர் என்ன? அதை அனுஷ்டிப்பதால் எடுத்த காரியம் யாவிலும் வெற்றிகிட்டுமா?” என்று வினவினார். முனிவரின் ஆக்ஞைப்படி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனது படைகளுடன் விதிப்பூர்வமாக விஜயா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தின்பலனால் அவருக்கு அரக்கர்களுடனான யுத்தத்தில் வெற்றி கிட்டியது. இவ்வாறு கூறிய பிரம்ம தேவர், நாரதரிடம், ” மகனே, இவ்விரத நாளன்று, எவர் ஒருவர் இவ்விரத மஹாத்மியத்தை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ, அவருக்கு வாஜ்பேய யக்ஞம் செய்த பலன் கிட்டுகிறது” என்றார்.இதைக் கூறிய ஸ்ரீகிருஷ்ணர், ‘ஹே ராஜன்!, எவர் ஒருவர்இவ்விரதத்தை விதி பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவருக்கு இவ்வுலகில் மட்டுமல்லாது மேலுலகிலும் வெற்றி நிச்சயம்’ என்று அருளினார்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question