Thursday, April 18

புருஷோத்தம மாதத்தின் மஹிமைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பல வருடங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான முனிவர்கள் யாகங்கள் செய்வதற்காக நைமிசாரண்யத்தில் ஒன்று கூடினர்.; மாபெரும் முனிவர் சூத கோஸ்வாமியும் அங்கு வந்து சேர்ந்ததை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். எல்லோரும் அவரை மிக அழகிய வியாஸ ஆசனத்தில் அமரச் செய்தனர்.

முனிவர்கள் சூத கோஸ்வாமியிடம் இருகரம் கூப்பி கேட்டு கொண்டனர். “சூத கோஸ்வாமியே பகவான் கிருஷ்ணரின் அற்புதமான லீலைகள் பலவற்றில் மிகச்சிறந்த ஓன்றை நாங்கள் இந்த பௌதிக கடலில் இருந்து மீண்டு ஆன்மீக உலகம் திரும்புச்செல்லும் விதமாக தயவு செய்து எடுத்துரையுங்கள்.”

சூத கோஸ்வாமி கூறினார். “முனிவர்களே நான் இப்போது ஹஸ்தினாபுரத்தில் சுகதேவ கோஸ்வாமியின் தாமரை திருவாயிலிருந்து ஸ்ரீ மத் பாகவதம் முழுவதையும் பகவானின் எண்ணற்ற லீலைகளையும் கேட்டு வந்துள்ளேன். அதில் முக்கியமான ஒன்றை கூறுகிறேன்.”

முன்னொரு நாள் நாரத முனிவர் பத்ரிகாஸ்ரமத்தில் நர நாராயண ரிஷியை காண சென்றார். அவருக்கு வந்தனைகள் செய்தபின் பின்வருமாறு கூறினார்.

“பகவானே இந்த பௌதிக உலகத்தில் எல்லா உயிர்வாழிகளும் புலனின்பத்தில் ழூழ்கியுள்ளனர். அவர்கள் வாழ்வின் உன்னத குறிக்கோளை மறந்து விட்டனர். எல்லோரும் தன்னை உணர்ந்து பகவானின் திருத்தலத்தை சென்றடையும் விதமாக தங்கள் உபதேசங்களை வழங்குங்கள்.”

நர நாராயண ரிஷி பின்வருமாறு கூறலானார். நாரதரே, எல்லாவிதமான கர்மவினைகளையும் பாவ விளைவுகளையும் அகற்றவல்ல பகவான் கிருஷ்ணரின் உன்னத லீலைகளை கேளுங்கள். நான் இப்போது புருஷோத்தம மாதத்தின் மஹிமைகளை எடுத்துரைக்க உள்ளேன்.

நாரதர் வினவினார் நான் கார்த்திக், வைசாக், மார்கழி போன்ற பல மாதங்களின் மஹிமைகளை கேட்டுள்ளேன். புருஷோத்தம மாதம் யாது ? நாம் இந்த மாதத்தை எவ்வாறு அனுசாரிக்க வேண்டும் ? இந்த மாதத்தின் முழு விபரம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நர நாராயண ரிஷி, நாரதரே பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிர மஹராஜருக்கு ஏற்கனவே எடுத்துரைத்த விஷயத்தை நான் இப்போது கூறுகிறேன். ஒரு முறை யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் தனது ராஜ்யம் மற்றும் திரௌபதியை இழந்து , துச்சாதனன் திளெபதியின் துயில் உரித்த அந்த அபாயமான சூழ்நிலை உனக்கு நினைவிருக்கலாம். அதன்பிறகு பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர்.

பகவான் கிருஷ்ணர் காட்டில் பாண்டவர்களை சந்தித்தபோது அவர்கள் புத்துணர்வு பெற்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பகவான் பாண்டவர்களின் நிலையை கண்டு கௌரவர்களின் மேல் மிகுந்த கோபம் அடைந்தார். பாண்டவர்கள் பயந்து பிரார்த்தனைகளின் ழூலம் பகவானின் கோபத்தை தணித்தனர் . அதன் பிறகு அர்ஜுனன் கேட்ட பல கேள்விகளுக்கு பகவான் கிருஷ்ணர் திருப்தியுற்று பதில் உரைத்தார். பகவான் கூறினார் ‘நான் இப்பொழுது புருஷோத்தம மாதத்தின் அற்புதமான வரலாற்றை உரைக்க உள்ளேன் என்றார்.

அர்ஜுணா ! ஒரு காலத்தில் தெய்வீக ஏற்பாட்டின் படி கூடுதலாக இந்த மாதம் வந்தது. எல்லோரும் இதை மலமாதம் என்றும், புனித காரியங்கள் செய்வதற்கு நல்ல நாட்கள் கணக்கிடுகையில் இந்த மாதத்தை நிராகரித்தனர். மேலும் இந்த மாதத்தை மலம் போல தீண்டத்தகாத விஷயமாகவும் இந்த மாதத்தில் மங்கள மானவை ஒன்றுமே இல்லை என்றும் தகாத வார்த்தைகளை கூறியும் ஏளனம் செய்தனர்.

இந்த மாதத்தின் பெண் உருவகமான அவர் உடனே வைகுண்ட லோகம் சென்று பகவான் விஷ்ணுவின் பாதத்தில் மிகுந்த துயரத்துடன் வணங்கினார். அவளது கண்கள் கலங்கி துயரத்துடன் பகவான் விஷ்ணுவிடம் மன்றாடினார். கருணைக்கடலே ! இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் என்னை புறக்கணித்து ஏளனம் செய்கின்றனர். உங்கள் கருணை எங்கே போயிற்று ! என் மேல் ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறீர்கள் ! தயவு செய்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள். என்னைவிட மிகுந்த துயரத்தில் யாரும் இருக்க முடியாது. எல்லா மாதங்களும் மிருந்த சந்தோஷத்துடன் தைரியமாக சென்று கொண்டிருக்கிறது ஆனால் எனக்கு பெயர் கூட இல்லை எனக்கு கணவர் மற்றும் பாதுகாப்பாளர் இல்லை. அதனால் நான் உடனேயே இறக்க விரும்புகிறேன் என்று கூறி மயக்கமுற்று விழுந்தார்.

பகவான் விஷ்ணு இந்த மாதத்தின் பெண் உருவகமான அவருக்கு சாமரம் வீச கருடனிடம் ஆணையிட்டார். சிறிது நேரத்தில் அவர் எழுந்த பிறகு பகவான் விஷ்ணு கூறினார். ‘குழந்தாய்! உன்னுடைய துயரமான நிலை விரைவில் ஒரு முடிவிற்கு வரவிருக்கிறது. பகவான் கிருஷ்ணர் வசிக்கும் கோலோக விருந்தாவனத்திற்கு உடனேயே உன்னை அழைத்துச் செல்கிறேன் ;’என்று கூறினார். வெகு தொலைவிலேயே கோலோகத்தின் பிரகாசமான ஓளியின் காரணத்தால் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. வாயிற் காப்பாளர் பகவான் விஷ்ணுவிற்கு வணக்கம் செலுத்தினார். பிறகு அங்கு பல கோபியர்களின் மத்தியில் பகவான் கிருஷ்ணரை கண்டு பகவான் விஷ்ணு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பகவான் விஷ்ணு கூடுதல் மாத உருவகமான பெண்ணையும் நமஸ்கரிக்க செய்தார். ஆனாலும் அவரது அழுகை நிற்கவில்லை. பகவான் கிருஷ்ணர் கேட்டார் ஏன் கோலோக விருந்தவனத்திலும் கூட அழுகிறாய்.

பகவான் விஷ்ணு அந்த பெண்ணின் துயரமான சூழ்நிலையை பகவான் கிருஷ்ணரிடம் விளக்கினார். ; இருகரம் கூப்பி பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ‘உங்களைவிட வேறுயாருமே இந்த பெண்ணிற்கு அடைக்கலம் அளிக்க இயலாது. இவரது துயரத்தை நீக்குங்கள். ’

 அதற்கு பகவான் கிருஷ்ணர், பகவான் விஷ்ணுவிடம் கூறினார். ‘நீங்கள் என்னிடம் இந்த மாதத்தை அழைத்து வந்தமைக்காக உமக்கு பெரும் புகழ் கிட்டும். நான் இந்த மாதத்தை எனக்கு சாமமாக மாற்றுகிறேன். குணங்கள், ஜஸ்வர்யங்கள், புகழ், வெற்றி, பக்தர்களுக்கு பரிபாலனம் செய்வது என எல்லாவற்றிலும் என் சக்திக்கு இணையாக மாற்றுகிறேன். நான் என்னுடைய பெயரையே புருஷோத்தம மாதம் என்று வைத்து இந்த மாதத்தின் உருவகமான பெண்ணின் கணவராகி பாதுகாப்பு அளிப்பேன். இந்த மாதம் மற்ற எல்லா மாதங்களின் எஜமானராக மாறுவார். அதன் பிறகு எல்லோரும் நிச்சயமாக இந்த மாதத்தை நமஸ்கரித்து வழிபட வேண்டும் என்பது எனது ஆணை. இந்த மாதத்தை வழிபடுபவர்கள் தனது எல்லா பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு இந்த பௌதிக வாழ்கை கூட மகிழ்ச்சி மிக்கதாக மாறி இறுதியில் எனது திருத்தலத்தை வந்தடைவார்கள்.

கருடத்வஜனே என்னடைய கோலோகம் கடுமையான தவம் புரிபவராலோ , புண்ணிய காரியங்களில் ஈடுபடும் ஆத்மாக்களாலோ, வாழ்கை முழுவதும் பிரம்மச்சர்யம் கடைபிப்பது மற்றும் ஒன்றுமே உண்ணாமல் விரதம் இருப்பவராலோ அடைய முடியாது இந்த புருஷோத்தம மாதத்தை அனுசர்த்து எனது பக்தராக மாறினால் அவர் மிக எளிதாக இந்த பௌதிக கடலை கடந்து, எனது ஆன்மிக உலகிற்கு திரும்பி விடுவார்.’

ஆனால் துரதிஷ்டவசமான அறிவிற் குறைந்தவர்கள் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சாடனம் செய்யாமலும் பகவான் கிருஷ்ணர் மற்றும் அவரது பக்தர்களுக்கு மரியாதை செலுத்தாமலும் இந்த மாதத்தை ஏளனம் செய்பவர்களுக்கு எண்ணற்ற காலங்களுக்கு நரக லோகத்தில் தள்ளப்படுவார்கள். இந்த புருஷோத்தம மாதத்திற்கு பக்தி தெண்டு செய்யாதவர்களின் வாழ்வு எவ்வாறு வெற்றி கரமாக அமையும்!

  இந்த புருஷோத்தம மாதத்தில் செய்ய வேண்டியவையான

  1 . புனித நதியில் நீராடி.

  2.என்னுடைய புனித நாமத்தை ஜபம் செய்து

  3. என் சேவைக்காக எனது பக்தர்களிடம் நன்கொடை அளித்து எனக்கு பக்தித் தொண்டு புரிய வேண்டும்’ என்று கூறினார்.

புருஷோத்தம மாதத்தின் வரலாற்றை எடுத்துக்கூறிய பகவான் கிருஷ்ணர் , யுதிஷ்டிரர் மற்றும் திரௌபதியை கருனை மிக்க பார்வையால் பார்த்துவிட்டு அர்ஜூனனிடம் தொடர்ந்து கூறினார்.

‘மனிதரில் சிங்கம் போன்றவனே இப்போது உனக்கு புரிந்திருக்கும்.; பாண்டவர்களாகிய நீங்கள் ஏன் இந்த துயர நிலைக்கு ஆளாக்கப்படீர்கள் என்று. கடந்து சென்ற புருஷோத்தம மாதத்தின் மஹிமையை உணராமல் நீங்கள் அந்த மாதத்தை அனுசரிக்காத காரணத்தால் உங்கள் பிரார்த்த கர்மாவினால் துன்பப்படுகிறீகள். நீங்கள் இந்த புருஷோத்தம மாதத்தை வழிபட வில்லை என்றால் எனக்கு தூய பக்தித்தொண்டு புரிய முடியாது. மேலும் இது தொடர்பாக நான் திரௌபதியின் முந்தைய பிறவி பற்றிய வரலாற்றை கூறுகிறேன். திரௌபதி முந்தைய பிறவியில் மேதாவி ரிஷியின் மகளாக பிறந்தாள். அவள் மிகவும் அழகாக இருந்தாலும் அவள் தந்தை அவளது திருமணம் பற்றி அவ்வளவாக கவலைப்படவில்லை. சிறிது நாட்களில் மேதாவி ரிஷியும் இறந்தார்.

அவள் தனது பிற தோழிகள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழச்சியாக வாழ்வது கண்டு தனக்கு திருமணமாகாத காரணத்தால் துயரத்தில் நாட்களை கழித்தாள் . திடீரென துர்வாச முனிவர் தனது ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் .அவருக்கு பணிவிடை செய்த பிறகு தன்னுடைய துயரத்தை கண்களில் நீர்மல்க வெளிப்படுத்தினாள்.

துர்வாச முனிவர் அவாள்ன் துயரத்தின் காரணத்தை வினவிய போது அவள் கூறினாள். ”முனிவரே ! உங்களுக்கு இறந்தகாலம்; நிகழ் காலம், எதிர்காலம் எல்லாம் தெரியும். எனக்கு எந்தவொரு அடைக்கலமும் இல்லை. எனது பெற்றோர்கள் மடிந்து விட்டனர் மற்றும் எனக்கு சகோதரர் யாரும் இல்லை, என்னை பாதுபாப்பதற்கு கணவரும் இல்லை. இந்த துக்ககரமான சூழ்நிலையிலிருந்து வெளிவருவதற்கு எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள்.

துர்வாச முனி கூறினார். ‘ மிகவும் அழகு மிக்கவளே ! மூன்று மாதம் கழித்து மங்களகரமான மற்றும் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான புருஷோத்தம அதிக மாதம் வரவிருக்கிறது. கார்த்திகை மாதம் உட்பட எல்லா மாதங்களின் புகழ், புருஷோத்தம மாதத்தின் பதினாறில் ஒரு பங்கிற்கு கூட இணையாகாது.

ஓரே ஓரு முறை புனித நீரில் இந்த மாதத்தில் நீராடினால் கங்கையில் 12,000 வருடங்களுக்கு நீராடுவதற்கு சமானம். புனித நீரில் நீராடுதல், _ கிருஷ்ணரின் சேவைக்கு நன்கொடை அளித்தல் மற்றும் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜபம் செய்தல் போன்றவற்றை இந்த புருஷோத்தம அதிக மாதத்தில் கடைப்பிடித்தால் எல்லா விதமான துன்பங்களும் உங்களை விட்டு விலகி உன்னுடைய எல்லா வித ஆசைகளும் நிறைவேற்றப்பட்டு பக்குவ நிலையை அடைவாய். எக்காரணம் கொண்டு மறந்து விடாதே.’பிராமண குலத்தில் பிறந்த அந்த பெண்ணிற்க்கு முனிவர் கூறியவற்றில் சிறிதும் நம்பிக்கை இல்லாமல், மிகுந்த கோபத்துடன் பின்வறுமாறு கூறலானார். எவ்வாறு இந்த மலமாதம் மற்ற மாதங்கள் மார்கழி, கார்த்திகை, வைசாகம் போன்ற வற்றைவிட எவ்வாறு புகழ் வாய்ந்ததாக இருக்கமுடியும் ? எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை ஏமாற்றுகிறீர்கள். எந்த வித புண்ணிய செயல்களுக்கும் இந்த மாதம் சிறிதும் ஏற்றதல்ல.

துர்வாச முனிவர் மிகுந்த கோபத்துடன் கண்கள் சிவப்பாகமாறி சபிக்க நினைத்தார். தன்னுடைய நண்பர் மேதாவி ரிஷியின் மகள் என்பதால் கோபத்தை அடக்கி கொண்டு. ‘துரதிஷ்டமானவளே சாஸ்திரங்களின் முடிவை ஒரு குழந்தை போல ஏற்க மறுக்கிறாய். என் மேல் நீ செய்த அபராதத்தை பெரியதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புருஷோத்தம மாதத்திற்கு எதிராக நீ செய்த அபராதத்திற்கு நீ மாபெரும் தீய விளைவுகளை சந்தித்தாக வேண்டும்’ என்று கூறி தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு சென்றார்.

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறினார், துர்வாச முனிவர் சென்ற உடனேயே அந்த பிராமணி அதே தருணத்தில் தன்னுடைய அழகு மற்றும் எல்லா ஜஸ்வர்யங்களையும் இழந்து மிகவும் அசிங்கமாக காணப்பட்டாள்.

அந்த பிராமணி சிவபெருமான் ‘ஆஷூதோஸ் ’எளிதில் திருப்தி அடையக்கூடியவர் என்பதால், அவரை நோக்கி 9,000 வருடங்களுக்கு கடும் தவம் புரிந்தாள். கோடைக்காலத்தில் தன்னைச்சுற்றி நெருப்பை வளர்த்துக் கொண்டும், குளிர்கலாத்தில் குளிர்ந்த தண்ணீரில் இருந்து கொண்டும் தவம் புரியலானாள்.

சிவபெருமான் அவளிடம் திருப்தி அடைந்து அவள் முன் தோன்றிய பிறகு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார் அதற்கு அவள் நீங்கள் எனக்கு கணவரை அளிக்க வேண்டும் என்று மிகுந்த களைப்புடன் இருந்த காரணத்தால் ஜந்து முறை கூறினார்.

அதற்கு சிவபெருமான் நீ ஜந்து முறை கணவர் வேண்டும் என்று கேட்டதால் உனக்கு அடுத்தபிறவியில் ஜந்து கணவர்கள் கிடைப்பார்கள் என்று கூறினர்.; அவள் மிகவும் வெட்கமடைந்து, ஒரு பெண் எவ்வாறு ஜந்து கணவருடன் வாழ முடியும், உங்கள் வரத்தை சிறிது மாற்றிக் கொள்ளுங்கள் என்றாள். ; சிவபெருமான்; ‘நானும் துர்வாசரும் ஓன்றுதான். நாங்கள் போற்றிப்புகழும் இந்த புருஷோத்தம மாதத்திற்கு நீ அபராதம் செய்துள்ளாய். அதனால் நீ ஜந்து கணவர்களுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.’ என்று கூறி மறைந்தார்.

அந்த பிராமணி தனது எதிர்காலம் பற்றிய மிகுந்த பயத்துடன் தன் உடலை காலத்தின் கட்டுப்பாட்டால் நீத்தார். அதே தருணத்தில் துருபத மன்னன் மிகப் பெரிய யாகம் செய்ததன் விளைவாக அவருக்கு இந்த பிராமணி மகளாக பிறந்து, திரௌபதி என்று அழைக்கப்பட்டாள்.; அவள் தன் பிறவியில் புருஷோத்தம அதிக மாதத்திற்கு அபராதம் செய்ததால், எல்லா பாண்டவர்களின் முன்பு துச்சாதனன் துயில் உரிக்க நேர்ந்தது. அதிர்ஷ்டவசமாக என்னை நினைத்து அடைக்கலம் அடைந்ததால் நான் அவளை காப்பாற்றினேன்.

இனிமேல் வரக்கூடிய புருஷோத்தம அதிக மாதத்தை மறந்து விடாதீர்கள். யாரொருவர் புருஷோத்தம அதிக மாதத்தின் உருவகமான பெண் மற்றும் என்னை வழிபட மறுக்கிறார்களோ அவர்கள் எந்தவொரு நல்லதிர்ஷ்டத்தையும் பெறமுடியாது. ஆகவே புருஷோத்தம மாதத்தை நம்பிக்கையுடன் வழிபட்டால் உங்கள் வனவாசம் முடிவு பெறும் வேளையில் எல்லா விதமான நல்லதிர்ஷ்டத்தையும் பெற முடியும் என்று கூறி துவாரகைக்கு சென்றார்.

சிறிது நாட்களுக்குபிறகு வந்த புருஷோத்தம அதிக மாதத்தை பாண்டவர்கள், திரௌபதி எல்லோரும் மிகுந்த ஸ்ரத்தையுடன் அனுசரித்ததன் விளைவாக இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்று, மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு இறுதியில் பகவானின் திருத்தலத்திற்கு திரும்ப சென்றனர்.


புருஷோத்தம மாதம் நாள்காட்டி

சூரியன் மற்றும் சந்திரனின் அசைவுகளின் கணக்குப்படி வந்த இரண்டு நாள்காட்டியிலும் நாள் வித்தியாசம் தோன்றியது அதாவது

1 நிலா வருடம் 354 நாட்கள்

1 சூரிய வருடம் 365 நாட்கள்

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிலா வருடத்தை சூரிய வருடத்தில் இணைக்கும் போது 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள் அதிகமாக இருக்கின்றது. 19 வருடத்தில் 7 முறை இந்த அதிக மாதம் வருகின்றது. பகவான் கிருஷ்ணரே அந்த அதிக மாதம் உருவில் வந்து வானியல் மற்றும் ஜோதிடவியல் கணக்கீடுகளை சரி செய்கிறார்.

பத்ம புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்ட விளக்கங்கள்

1.ஒரு புருஷோத்தம மாத விரதம், 1000 கார்த்திகை விரதங்களுக்கு இணையாகும்.

2. புருஷோத்தம மாத விரதத்தை அனுசரிப்பவர் அஷ்வ மேத யாகம் செய்த பலனை அடைவதுடன் எல்லா புனித நதிகளும் அவரின் மேனியில் வசிக்கும். அவர் கோலோக விருந்தாவனத்தை இறுதியில்; அடைவார்.

3. கருணைமிக்க புருஷோத்தம மாதம் கற்பக விருட்ஷகமாக பக்தர்களின் எல்லாவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றும் .

4. புருஷோத்தம மாதத்தை அனுசாரிப்பவர்களின் தெரியாமல் செய்த அபாரதங்களை பகவான் கிருஷ்ணர் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை.

5. அவர் ;ராதா மற்றும் கிருஷ்ணரின் நேரடி சேவையை அடைவார்.

புருஷோத்தம மாதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமமான

“ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”

என்ற நாமத்தை உச்சரிப்போம்


புருஷோத்தம மாதத்தில் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரம்

(1)

கோவர்தன தரம் வந்தே கோபாலம் கோப ரூபிணாம்
கோகுலத்சவ மே ஈசானம் கோவிந்தம் கோபிகா ப்ரியம்

மொழிபெயர்ப்பு

கோவர்தன மலையை தன் விரலால் தூக்கியவரை நான் வணங்குகின்றேன். அவர் ஒரு அழகிய ஆயர்குல சிறுவனின் வடிவத்தை கொண்டவர். அவர் கோபர்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். தினமும் திருவிழா காணும் அந்த கோகுலத்தின் இறைவன் அவரே.

—————–*********—————–

(2)

வந்தே நவகண ஷியாம் த்விபுஜம் முரளிதரம்
பீதாம்பர தரம் தேவம் சரதாம் புருஷோத்தமம்

மொழிபெயர்ப்பு

இரண்டு கரங்களில் புல்லாங்குழலை தாங்கியிருக்கும் நவகணஷியாம் பகவான் ஸ்ரீ கிருஷ்னருக்கு (புத்தம் புதிய மழை மேகத்தின் நிறத்தை கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) நான் என் வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன். மஞ்சள் நிற பீதாம்பரம் அணிந்த மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும் புருஷோத்தமரான முழுமுதற்கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகின்றேன்.


புருஷோத்தம மாத விரதத்தை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

🌷உங்களுடைய சக்திக்கேற்ப சங்கல்பங்களை மேற்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரை திருப்தி படுத்த முயலுங்கள். உங்களுடைய சக்தியை மீறிய சங்கல்பங்களை மேற்கொண்டு, மாதத்தின் பாதியில் விரதத்தை முறியடிப்பதை காட்டிலும் அது சிறந்தது. 

🌷மாதம் முழுவதும் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்க வேண்டும். தரையில் உறங்க வேண்டும்.

🌷அதிகாலை பிரம்ம முஹுர்த்த நேரத்தில் எழுந்திரிக்க வேண்டும்.

🌷ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ராதா கிருஷ்ணரின் ரூப மற்றும் குண லீலைகளை ஸ்மரணம் செய்ய வேண்டும். கூடுதல் மாலைகள் ஜபம் செய்ய வேண்டும்.

🌷தினமும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு நெய் தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்.

🌷தினமும் துளசி மகாராணியை வலம்வர வேண்டும்.

🌷ஆலயத்தை தினமும் நான்கு முறை பிரதக்ஷணம் (பரிக்ரமம்) செய்ய வேண்டும்.

🌷தினமும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு ரோஜா, தாமரை மற்றும் ஒரு லட்சம் துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். (அல்லது இயன்ற அளவு).

🌷தினமும் சூரிய உதயத்திற்கு முன்னரே புனித தீர்த்தத்தில் குளிக்க வேண்டும்.

🌷தினமும் ஸ்ரீமத் பாகவதம் ராதா கிருஷ்ண லீலைகளை படிக்க வேண்டும். (10 காண்டம் / அத்தியாயம் 14 )

🌷தினமும் ஜெகன்னாத அஷ்டகம், சோராஷ்டகம், நந்த நந்தனாஷ்டகம், ஜெய ராதா மாதவ மற்றும் இதர வைஷ்ணவ ஆச்சார்யாரைகளின் பஜனைகளை பாட வேண்டும்.

🌷இந்த மாதம் முழுவதும் அமைதியாக இருப்பேன் மற்றும் உண்மையாக இருப்பேன் என்று உறுதி எடுக்க வேண்டும்.

🌷பக்தர்கள், பிராமணர்கள், சாதுக்கள், கோமாதா மற்றும் சாஸ்திரங்கள் – இவைகளை நிந்திக்க கூடாது.

🌷தரையில் அமர்ந்து வாழை இலையில் பிரசாதத்தை உட்கொள்ளுங்கள். (கட்டாயம் கிடையாது)

🌷நகத்தையும் முடியையும் வெட்டாதீர்கள். (கட்டாயம் கிடையாது)

🌷தினமும் கிருஷ்ணரையோ பிராமணர்களையோ 33 முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

🌷ஒரு முகமாக தினமும் காலையும் மாலையும் பகவானை பற்றி நினைத்து அவர்களின் நாமம், ரூபம், லீலைகள் போன்றவற்றை ஸ்மரணம் செய்ய வேண்டும். ஹரே கிருஷ்ணா மகா மந்திரத்தை ஜபம் செய்து, மகா பிரசாதத்தை மட்டுமே ஏற்க வேண்டும். என்று பக்தி வினோத் தாகூர்: “நிரபேக்ஷ விரதத்தின் முறை பற்றி கூறியுள்ளார்.

🌷எண்ணையில் சமையல் செய்ய கூடாது மற்றும் எண்ணை உடலிலோ அல்லது தலையிலோ தேய்க்க கூடாது (குறிப்பாக கடுகு எண்ணை).

🌷ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். கிழ்கண்ட பத்தியங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்:

🍁பால் மட்டும்

🍁பழங்கள் மட்டும் (பால் மட்டும் காய்கறிகள் கிடையாது)

🍁பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் (தானியங்கள் கிடையாது)

🍁சாதுர்மாச விரதத்தின்படி அணைத்து உணவுகளும்

ஹரி பக்தி விலாசம் (4 .437 ): புருஷோத்தம மாதத்தில் பகவான் கிருஷ்ணரை வழிபட்டு, 33 பால்கோவாக்களை கிரஹஸ்தர்கள் பிராமணர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் முந்தைய வருடம் கடைபிடித்த விரதத்தின் பலன்களை இழக்க நேரிடும்”.
வழங்கியவர் :- மஹாநிதி ஸ்வாமி


🌷அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, ஸ்ரீ ஸ்ரீ ராதா சியாமசுந்தரை வழிபாடு செய்து, பின்வருமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்: “முழுமுதற் கடவுளே! சியாமசுந்தரரே! சனாதனரே! புருஷோத்தமரே ! என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள். என்னுடைய இந்த விரதத்தை நீங்களும், ஸ்ரீமதி ராதாராணியும் ஏற்றுக்கொள்ளுங்கள். என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்களை பொன்னிற ஆடையணிந்த சியாமசுந்தரருக்கு சமர்ப்பிக்கிறேன்.”.

🌷ஸ்ரீ ஸ்ரீ ராதா சியாம்சுந்தரருக்கு புஷ்பாஞ்சலி மற்றும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

🌷பிராமணர்களுக்கு உணவளித்து தானமாக தங்களுக்கு இயன்றவற்றை கொடுக்க வேண்டும் (ஆடைகள், செல்வம், காலணிகள்). ஸ்ரீமத் பாகவதத்தை, கிரஹஸ்த வைஷ்ணவ பிராமணருக்கு வழங்குவது மிகவும் சிறப்பாகும். இந்த செயல், அணைத்து முன்னோர்களையும் விடுவித்து பகவானின் சங்கத்தில் கொண்டு சேர்க்கும்.

🌷நீங்கள் அரிசி, கோதுமை, நெய் போன்றவற்றை உட்கொண்டிருந்தால் அதையே பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

🌷நீங்கள் தரையில் உறங்கியிருந்தால், மெத்தையையும் தலையணையையும் பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

🌷நீங்கள் வாழை இலையில் சாப்பிட்டிருந்தால், நெய்யும் சர்க்கரையும் பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

🌷நீங்கள் முடியையும் நகத்தையும் வெட்டாமல் இருந்திருந்தால், கண்ணாடியை பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

🌷நீங்கள் நெய் தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்திருந்தால், விளக்கு மற்றும் பானைகளை பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

🌷நீங்கள் ஏதேனும் சங்கல்பத்தை விரதத்தின் போது உடைத்திருந்தால், பல்வேறு விதமான பழ ரசங்களை பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

புராணங்களைப் படித்து அதில் இருக்கும் ஒவ்வொரு நெறிமுறையையும் பின்பற்றுவது இந்த கலியுகத்தில் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உதாரணமாக கங்கையில் நீராட வேண்டுமெனில் நாம் வட இந்தியா செல்ல வேண்டும். இது நம்மில் பல பேருக்கு இயலாத காரியம் ஆகும். ஆகவே கலியுக தர்மமான ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் ஒன்றை மட்டுமே ஜெபித்து ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமான ஶ்ரீ கோலோக விருந்தாவனத்திற்கு செல்ல முடியும். ஆதலால் கீழ்க்கண்ட ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அதிக எண்ணிக்கையில் ஜபம் செய்வது சிறந்தது.


+2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question