ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 10 / அத்தியாயம் 14 / பதம் 1-40
பதம் 10.14.1
ஸ்ரீ-ப்ரஹ்ம உவாச
நௌமீட்ய தே (அ)ப்ர-வபுஷே தடித்-அம்பராய
குஞ்ஜாவதம்ஸ-பிரபிச்ச-லஸன்-முகாய
வன்ய-ஸ்ரஜே கவல-வேத்ர-விஷண-வேணு-
லக்ஷ்ம-ஸ்ரீயே ம்ருது-பதே பஸுபாங்கஜாய
மொழிபெயர்ப்பு
பிரம்மதேவன் கூறினார்: போற்றுதற்குரிய பகவானே! நீரே முழுமுதற் கடவுளும், வணங்குதற்குரிய தெய்வமும் ஆவீர். அதனால் உம்மை மகிழ்விப்பதற்காக எனது பணிவான வந்தனங்களையும், பிரார்த்தனைகளையும் உனக்கு நான் அர்ப்பணிக்கின்றேன். ஓ, ஆயர் குலத்தலைவனின் மைந்தனே, வானில் தவழும் மேகத்தினைப் போல் உமது உன்னத உடல் கருநீல வண்ணமுடையதாக இருக்கின்றது. நீர் அணிந்திருக்கும் ஆடையோ மின்னலைப் போன்று ஒளி வீசுகின்றது. உமது முகத்தின் எழில், உமது செவிகளின் தொங்கும் குன்றி மணிக் குண்டலங்களினாலும், தலையில் சூடியிருக்கும் மயிலிறகினாலும் மேலும் அதிகரிக்கின்றது. வனத்திலுள்ள மலர்களினாலான மாலையினை அணிந்து கொண்டு, நிலை மேய்க்கும் கோலினையும், ஊதும் கொம்பு மற்றும் புல்லாங்குழலினையும், ஒரு கவளம் உணவினையும் நீர் உமது கரங்களில் ஏந்திக்கொண்டு மிக்க அழகுடன் காட்சி தருகின்றீர்.
பதம் 10.14.2
அஸ்யாபி தேவ வபுஷோ மத்-அனுக்ரஹஸ்ய
ஸ்வேச்சா-மயஸ்ய ந து பூத-மயஸ்ய கோவேபி
நேஸே மஹி த்வ அவஸிதும் மனஸாந்தரேண
ஸாக்ஷாத் தனவல கிம் உதாத்ம-ஸுகானுபூதே:
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே, உமது பக்தர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகத் தோன்றி, எனக்கு கருணை காட்டியிருக்கும் உமது உன்னத உடலின் சக்தியினை அளவிடுவதற்கு என்னாலோ அல்லது பிறராலோ நிச்சயம் முடியாது. எனது மனம் உலகியலிலிருந்து முற்றிலும் விலகியிருந்த போதிலும்கூட, என்னால் உமது சுயவடிவத்தினை அறிந்து கொள்ள முடியவில்லை. பிறகு என்னால் எவ்வாறு நீர் உமக்குள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தத்தினை அறிய முடியும்?
பதம் 10.14.3
ஜ்ஞானே ப்ரயாஸம் உதபாஸ்ய நமந்த ஏவ
ஜீவந்தி ஸன்-முகரிதாம் பவதீய-வார்தாம்
ஸ்தானே ஸ்திதா: ஸ்ருதி-கதாம் தனு-வாங்-மனோபிர்
யே ப்ராயஸோ (அ)ஜித ஜிதோ (அ)பி அஸி தைஸ் த்ரி லோக்யாம்
மொழிபெயர்ப்பு
யாவர் தமது நிலைநிறுத்தப்பட்டச் சமுதாய நிலைகளில் இருக்கும் பொழுதே யூக அறிவு முறைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தமது உடல், உள்ளம், சொல்லுடன் அனைத்து மரியாதைகளையும் உமக்கும், உமது செயல்களுக்கும் அர்ப்பணித்து, உம்மாலும், உமது தூய பக்தர்களாலும் அருளிச் செய்யப்பட்ட சரிதங்களிடத்துத் தமது வாழ்வினை ஒப்படைக்கின்றனரோ, அவர்கள், மூவுலகங்களிலும் அவராலும் வெல்ல முடியாதவராக நீர் இருந்தபோதிலும், உமது மேலாண்மையினை நிச்சயம் வெல்வர்.
பதம் 10.14.4
ஸ்ரேய:-ஸ்ருதிம் பக்திம் உதஸ்ய தே விபோ
க்விஸ்யந்தி யே கேவல-போத-லப்தயே
தோபாம் அஸௌ க்லேஸல ஏவ ஸிஷ்யதே
நான்யத் யதா ஸ்தூல-துஷாலகாதினாம்
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே! உமக்குச் செய்யும் பக்தித் தொண்டே ஆத்ம உணர்வு பெறுவதற்கானச் சிறந்த வழியாகும். யாரேனும் ஒருவன் இப்பாதையினைப் புறக்கணித்து யூக ஞானத்தினை வளர்ப்பதில் ஈடுபடுவானென்றால், அவன் மிகுந்த தொல்லைக்கு ஆளாவதோடு தான் விரும்பிய பலனையும் அடைவதில்லை. வெறும் உமியைக் குத்துபவனுக்கு அரிசி கிடைக்காதது போல் கற்பனா யூகம் செய்பவனால் ஆத்ம உணர்வு பெறமுடியாது. அவன் அடையக் கூடியது துன்பம் ஒன்றேயாகும்.
பதம் 10.14.5
புரேஹ பூமன் பஹவோ (அ)பி யோகினஸ்
த்வத்-அர்பிதேஹா நிஜ-கர்ம-லப்தயா
விபுத்ய பக்த்யைவ கதோபநீதயா
ப்ரபேதிரே (அ)ஞ்ஜோ (அ)ச்யுத தே கதிம் பராம்
மொழிபெயர்ப்பு
எல்லாம் வல்ல பகவானே! இவ்வுலகில் பல யோகிகள் தமது முயற்சிகள் அனைத்தையும் உமக்கு ஈடுபடுத்துவதோடு தங்களது அறச்செயல்களை நம்பிக்கையுடன் நிறைவேற்றியும் பக்தித் தொண்டு எனும் நிலையினை அடைந்தனர். உம்மைப் பற்றிக் கேட்டல், ஜெபித்தல் என்னும் முறைகளினால் நிறைவு செய்யப்பட்டப் பக்தித் தொண்டின் மூலம் அவர்கள் உம்மை உணர்ந்தனர் என்பதோடு, குற்றமற்றவரே, அவர்களால் உம்மை எளிதில் சரணடைந்து உமது உயர்ந்த இருப்பிடத்தை அடையவும் முடிந்தது.
பதம் 10.14.6
ததாபி பூமன் மஹிமாகுணஸ்ய தே
விபோதும் அர்ஹதி அமலாந்தர்-ஆத்மபி:
அவிக்ரியாத் ஸ்வானுபவாத் அபேதோ
ஹி அனன்ய-போத்யாத்மதயா ந சான்யதா
மொழிபெயர்ப்பு
எனினும் பக்தி இல்லாதவரால் உமது முழு வடிவத்தினை ஒருக்காலும் உணர முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் தமது இதயத்தில் இருக்கும் பரமாத்மாவுடன் நேரடி உணர்வினை வளர்த்துக் கொள்வதின் மூலம், உமது விரிவான அருவ பிரம்மத்தினை உணர்வது அவர்களுக்குச் சாத்தியமாகும். இதனைக் கூட அவர்கள், பௌதீக வேறுபாட்டுக் கருத்துக்கள் அனைத்திலுமிருந்து தமது மனம் மற்றும் புலன்களைத் தூய்மை செய்தும், புலன் மீதான பற்றினை ஒழித்த பிறகுமே அடைகின்றனர். இதன் பின்னரே உமது அருவத் தன்மையானது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
பதம் 10.14.7
குணாத்மனஸ் தே (அ)பி குணான் பிமாதும்
ஹிதாவதீர்ணஸ்ய க ஈஸிரே (அ)ஸ்ய
காலேன யைர் வா விமிதா: ஸு-கல்பைர்
பூ-பாம்ஸவ: கே மிஹிகா த்ய-பாஸ:
மொழிபெயர்ப்பு
ஒரு காலத்தில் கற்றிறிந்த அறிஞர்களோ அல்லது விஞ்ஞானிகளோ பூமியிலுள்ள அணுக்கள் எல்லாவற்றையும் பனித்துளியின் கூறுகளையும், சூரியனிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும் வீசும் ஒளிக்கதிர்களிலுள்ள அணுத்திரள்களையும் கூட எண்ணுகின்ற திறன் பெறுவர். அவர்களில் யாரால், அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் இப்பூமிக்கு இறங்கி வந்திருக்கும் முழுமுதற் கடவுளை உம்மிடமிருக்கும் அளவற்ற உன்னத குணங்களை எண்ண முடியும்?
பதம் 10.14.8
தத் தே (அ)னுகம்பாம் ஸு-ஸமீக்ஷமாணோ
புஞ்ஜான ஏவாத்ம-க்ருதம் விபாகம்
ஹிருத்-வாக்-வபுர்பிர் விததன் நமஸ் தே
ஜீவேத யோ முக்தி-பதே ஸ தாய பாக்
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே! உமது அளவற்ற கருணை வேண்டி நம்பிக்கையுடன் காத்திருப்பவன், அக்காலக் கட்டத்தில் தான் செய்த முன்னையப் பாவங்களின் பலன்களைப் பொறுமையுடன் அனுபவித்துக் கொண்டும், தனது மனம், வாக்கு, காயத்தினால் உமக்கு மரியாதையுடன், தனது வணக்கங்களையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்தானென்றால் அவன் நிச்சயம் விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையனாவான். ஏனெனில் அவ்விடுதலையானது அவனுக்கு மரபு வழியாக வரும் உரிமையாகி விடுகிறது.
பதம் 10.14.9
பஸ்யேஸ மே (அ)நார்யம் அனந்த ஆத்யே
பராத்மணி த்வய்ய் அபி மாயி-மாயினி
மாயாம் விதத்யேக்ஷிதும் ஆத்ம-வைபவம்
ஹி அஹம் கியான் ஐச்சம் இவார்சிர் அக்நௌ
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே! எனது அநாகரீகமான அருவருக்கத்தக்க நடத்தையினைப் பாரும். அளவற்றவராகவும், ஆதிபரமாத்மாவகவும் இருக்கும் நீர், மாயாசக்திகளின் தலைவர்களைக் கூட மயங்கச் செய்யும் சக்தியுடையவராவீர், இருந்தும் உமது பலத்தைச் சோதிப்பதற்காக, உம்மை மறைப்பதற்கு எனது மாயா சக்தியை நான் பயன்படுத்த முயன்றேன். உம்மோடு ஒப்பிடுவதற்கு நான் யார்? பெரு நெருப்பிற்கு முன்னே சிறுநெருப்புப் பொறி போன்றவன் நான்.
பதம் 10.14.10
அத: க்ஷமஸ்வாச்யுத மே ரஜோ-புவோ
ஹி அஜாநதஸ் த்வத்-ப்ருதக்-ஈஸ-மானின:
அஜாவலேபாந்த-தமோ-(அ)ந்த-ச க்ஷுஷ
ஏக்ஷர (அ)னுகம்ப்யோ மயி நாதவான் இதி
மொழிபெயர்ப்பு
ஆகையினால், ஓ குற்றமற்றவரே! எனது குற்றங்களைள மன்னித்தருள்வீராக. நான் ரஜோ குணத்தில் பிறந்த மூடனாவேன். அதனால்தான் உமது மேலாண்மையிலிருந்து சுதந்திரம் உடைய நெறியாளனாக என்னை நான் கருதிக் கொண்டேன். எனது கண்கள் அறியாமை இருளில் குருடாகிப் போனதினால் இப்பிரபஞ்சத்தின் பிறப்பற்றப் படைப்பாளனாக என்னை நான் நினைத்துவிட்டேன். நான் உமது தொண்டன் ஆதலினால் உமது கருணைக்கு உரியவன் என்பதை நீர் அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பதம் 10.14.11
க்வாஹம் தமோ-மஹத்-அஹம்-க-சராக்னி-வார்-பூ-
ஸம்வேஷ்டிதாண்ட-கட-ஸப்த-விதஸ்தி-காய:
க்வேத்ருக்-விதாவிகணிதாண்ட-பராணு-சர்யா
வாதாத்வ-ரோம-விவரஸ்ய ச தே மஹித்வம்
மொழிபெயர்ப்பு
எனது கையினால் அளந்தால் ஏழடி உயரமிருக்கும் சிறிய பொருளாகிய நான் யார்? ஜட இயற்கை, பௌதீகச் சக்தி. ஆணவம், ஆகாயம், காற்று, நீர், நிலம் போன்றவற்றினால் ஒரு பானை போன்றிருக்கும் பிரபஞ்சத்துடன் நான் இணைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் உமது மகிமை என்ன? சாளரங்களின் வழியே பறந்துவரும் தூசிகள் போன்று எண்ணற்ற பிரபஞ்சங்கள் உமது உடலிலுள்ள ரோமக் கால்களின் வழியே மிதந்து செல்கின்றன.
பதம் 10.14.12
உத்கக்ஷபணம் கர்ப-கதஸ்ய பாதயோ:
கிம் கல்பதே மாதுர் அதோக்ஷஜாகஸே
கிம் அஸ்தி-நாஸ்தி-வ்யபதேஸ-பூஷிதம்
தவாஸ்தி கு னேக்ஷ: கியத் பி அனந்த:
மொழிபெயர்ப்பு
ஓ, பகவான் அதோக்ஷஜரே! தனது கருப்பையிலுள் இருக்கும் குழந்தை தன்னைக் கால்களினால் உதைப்பதை ஓர் அன்னை குற்றமாகக் கருதுவாளா? பல்வேறு தத்துவ ஞானிகளால், உண்மையென்றும், பொய்யென்றும் தீர்மானிக்கப்படும் எதுவும் உமது உதரத்திற்கு வெளியே இருக்கின்றதா?
பதம் 10.14.13
ஜகத்-த்ரயாந்தோததி-ஸம்ப்லவோதே
நாராயணஸ்யோதர-நாபி-நானாத்
விநிர்கதோ (அ)ஜஸ் த்வ இதி வாங் ம்ருஷா
கிந்த்வ ஈஸ்வர த்வன் ந விநிர்கதோ (அ)ஸ்மி
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே, மூவுலகங்களும் இறுதியில் ஊழி வெள்ளத்தில் மூழ்கும்பொழுது, உமது அம்சாவதாரமான நாராயணர் அவ்வெள்ளத்தின் மேல் பள்ளி கொண்டிருப்பாரென்றும், அப்போது அவரது நாபியிலிருந்து தோன்றும் தாமரை மலரிலிருந்து பிரம்மதேவன் பிறப்பார் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இவ்வார்த்தைகள் பொய்ம்மையன்று. நான் உம்மிடமிருந்து பிறக்கவில்லையா என்ன?
பதம் 10.14.14
நாராயணஸ் த்வம் ந ஹி ஸர்வ-தேஹினாம்
ஆத்மாஸி அதீஸாகில-ஸாக்ஷி
நாராயணோ (அ)ங்கம் நர-பூ-ஜலாயனாத்
தச் சாபி ஸத்யம் ந தவைவ மாயா
மொழிபெயர்ப்பு
ஓ, பரமநெறியாளரே, உடல் பெற்ற உயிர்கள் அனைத்திலும் நீரே பரமாத்மாவாகவும், படைக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் நீரே நித்திய சாட்சியாகவும் இருப்பதினால் நீர் ஆதி நாராயணர் இல்லையா? உண்மையில் பகவான் நாராயணர் உமது விரிவாவார், அவர் நாராயணர் என்றழைக்கப்படுவதன் காரணம் அவரே பிரபஞ்சத்தின் ஆதி வெள்ளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றார். அவர் சத்தியமானவர் ஆவார், ஏனெனில் அவர் உமது மாயா சக்தியின் படைப்பல்லர்.
பதம் 10.14.15
தச் சேஜ் ஜல-ஸ்தம் தவ ஸஜ் ஜகத்-வபு:
கிம் மே ந த்ருஷ்டம் பகவம்ஸ் ததைவ
கிம் வா ஸு-த்ருஷ்டம் ஹ்ருதிமே தததைவ
கிம் நோ ஸபதி ஏவ புனர் வ்யதர்ஸி
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே, இப்பிரபஞ்சம் முழுவதற்கும் அடைக்கலமாக விளங்கும் உமது உன்னத உடல், வெள்ளத்தின் மீது உண்மையில் இருக்க, நான் தேடியபோது நீர் ஏன் எனது கண்களுக்குக் காணப்படவில்லை? மேலும் எனது இதயத்தினுள்ளும் உம்மை நான் நன்கு காண முடியாதவனாக இருந்த போதிலும், நீர் ஏன் உம்மை திடீரென்று வெளிப்படுத்தினீர்?
பதம் 10.14.16
அத்தைவ மாயா-தமனாவதாரே
ஹி அஸ்ய ப்ரபஞ்சஸ்ய பஹி: ஸ்புடஸ்ய
க்ருத்ஸ்னஸ்ய சாந்தர் ஜடரே ஜனன்யா
மாயாத்வம் ஏவ ப்ரகடீ-க்ருதம் தே
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே! இந்த அவதாரத்தில், மாயையினைக் கட்டுப்படுத்தும் உயர் நெறியாளர் நீர் ஒருவரே என்பதை நீர் நிரூபித்திருக்கின்றீர். இப்போது நீர் இப்பிரபஞ்சத்தில் இருந்த போதிலும், இப்பிரபஞ்சப் படைப்பு முழுவதும் உமது உன்னத உடலினுள்ளேயே இருக்கின்றது — இவ்வுண்மையினை, உமது அன்னை யசோதைக்கு, உமது வயிற்றினுள் இருக்கும் பிரபஞ்சத்தினை நீர் காட்சிப்படுத்தியதின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றீர்!
பதம் 10.14.17
யஸ்ய குக்ஷால் இதம் ஸர்வம் ஸாத்மம் பாதி யதா ததா
தத் த்வய்ய் அபீஹ தத் ஸர்வம் கிம் இதம் மாயயா விநா
மொழிபெயர்ப்பு
நீர் உள்ளிட்ட இப்பிரபஞ்சம் உமது வயிற்றினுள் எப்படி வெளிப்பட்டதோ, அதே பிரபஞ்சம், அதே வடிவத்தில்தான் இப்போது புறத்தேயும் வெளிப்பட்டிருக்கிறது. உமது, கற்பனைக் கெட்டாத சக்தியினாலன்றி மேலே கூறியது எவ்வாறு நடை பெறக்கூடும்?
பதம் 10.14.18
அத்யைவ த்வத் ருதே (அ)ஸ்ய மம ந தே மாயாத்வம் ஆதர்ஹிதம்
ஏகோ (அ)ஸி ப்ரதமம் ததோ வ்ரஜ-ஸுஹ்ருத்-வத்ஸா: ஸமஸ்தா அபி
தாவந்தோ (அ)ஸி சதுர்-புஜாஸ் தத் அகிலை: ஸாகம் மயோபா-ஸிதாஸ்
தாவந்தி ஏவ ஜகந்தி அபூஸ் தத் அமிதம் ப்ரஹ்மாத்வயம் ஸிஷ்யதே
மொழிபெயர்ப்பு
நீர் இன்று உம்மையும், உமது கற்பனைக்கெட்டாத சக்தியினால் படைக்கப்பட்ட இத்தோற்றங்களையும் இன்று எனக்குக் காண்பிக்கவில்லையா? முதலில் நீர் தனியாகத் தோன்றினீர், பிறகு நீர் உம்மை பிருந்தாவனத்தில் உள்ள கன்றுகளாகவும், உமது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்களாகவும் தோன்றச் செய்தீர். அடுத்து நீர் சம எண்ணிக்கையுடைய சதுர்ப்புஜ விஷ்ணு வடிவங்களாகத் தோன்றினீர். இவ்வடிவங்கள் அனைத்தும் நான் உள்ளிட்ட உயிர்கள் அனைவராலும் வணங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதன் பிறகு நீர் சம எண்ணிக்கையுடைய முழுப் பிரபஞ்சங்களாகத் தோன்றினீர். இப்போது நீர் இறுதியில், இரண்டற்ற ஒன்றும், அளவற்றதுமான உமது பரம முழுமெய்ப்பொருள் வடிவத்திற்குப் திரும்பியுள்ளீர்.
பதம் 10.14.19
அஜாநதாம் த்வத்-பதவீம் அநாத்மனி
ஆத்மாத்மனா பாஸி விதத்ய மாயாம்
ஸ்ருஷ்டாவ் இவாஹம் ஜகதோ விதான
இவ த்வம் ஏஷோ (அ)ந்த இவ த்ரிநேத்ர:
மொழிபெயர்ப்பு
உமது உண்மையான உன்னத நிலையினை அறியாதவர்களுக்கு நீர், உமது கற்பனைக்கெட்டாத சக்தியின் விரிவினால் உம்மால் தோற்றுவிக்கப்பட்ட பௌதீக உலகின் ஒரு பாகமாக காட்சியளிக்கின்றீர். இவ்வாறு பிரபஞ்சப் படைப்பில் நீர் என்னைப் போல் (பிரம்மதேவனாக) தோன்றுகின்றீர், அதனைக் காப்பதில் உம்மைப்போல் (விஷ்ணுவாக) தோன்றுகின்றீர், அதனை அழிப்பதில் நீர், முக்கண்ணனாகத் (சிவபெருமானாக) தோன்றுகின்றீர்.
பதம் 10.14.20
ஸுரேஷ்வ ருஷிஷ்வ ஈஸ ததைவ ந்ருஷ்வ பி
திர்யக்ஷு யாத: ஸ்வ அபி தே (அ) ஜனஸ்ய
ஜன்மாஸதாம் துர்மத-நிக்ரஹாய
ப்ரபோ விதாத: ஸத்-அனுக்ரஹாய ச
மொழிபெயர்ப்பு
ஓ. பகவானே, ஓ, பரம படைப்பாளரே, எஜமானரே, நீர் பௌதீகப் பிறப்பு எடுத்ததில்லை, இருந்தும் நம்பிக்கையற்ற அசுர்களின் வீன் பெருமையினை அழித்து, உமது பக்தர்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நீர், தேவர்களிடத்தும், முனிவர்களிடத்தும், மனிதர்களிடத்தும், விலங்குகளிடத்தும், ஏன் நீர்வாழ் உயிர்களிடத்தும் கூடப் பிறப்பெடுக்கின்றீர்.
பதம் 10.14.21
கோ வேத்தி பூமன் பகவன் பராத்மன்
யோகேஸ்வரோதீர் பவதஸ் த்ரி- லோக்யாம்
க்வ வா கதம் வா கதி வா கதேதி
விஸ்தாரயன் க்ரீடஸி யோக-மாயாம்
மொழிபெயர்ப்பு
ஓ, பரம்பொருளே! ஓ, முழுமுதற் கடவுளே! ஓ, பரமாத்மாவே! ஓ, யோகேஸ்வரரே! உமது லீலைகள் இம்மூவுலகங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆயினும் உமது ஆன்மீகச் சக்தியை நீர் எங்கே, எவ்வாறு, எப்பொழுது பயன்படுத்தி இவ்வெண்ணற்ற லீலைகளை நிகழ்த்துகின்றீர் என்பதை யாரால் அறியக் கூடும்? உமது ஆன்மீகச் சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பது ஒருவராலும் அறிந்து கொள்ள முடியாது.
பதம் 10.14.22
தஸ்மாத் இதம் ஜகத் அஸேஷம் அஸத்-ஸ்வரூபம்
ஜ்வப்நாபம் அஸ்த-திஷணம் புரு-து: க-து: கம்
த்வய்ய் ஏவ நித்ய-ஸுக-போத-தனாவ் அனந்தே
மாயாத உத்யத் அபி யத் ஸத் இவாவபாதி
மொழிபெயர்ப்பு
ஆகையினால் ஒரு கனவைப் போன்ற இப்பிரபஞ்சமானது இயற்கையில் பொய்ம்மையேயாகும், இருந்தபோதிலும் அது மெய்யாகத் தோன்றுகிறது. இவ்வாறு அது ஒருவனது உணர்வினை மறைத்து மீண்டும் மீண்டும் ஒருவனை துன்பத்திற்காளாக்குகிறது; இப்பிரபஞ்சம் உண்மைபோல் தோன்றுகிறது. ஏனென்றால் இது உமது மாயா சக்தியினின்று தோன்றுகிறது. உமது அளவற்ற உன்னத வடிவங்களோ முற்றிலும் நித்திய ஆனந்தமும், ஞானமும் நிறைந்தவையாக இருக்கின்றன.
பதம் 10.14.23
ஏகஸ் த்வம் ஆத்மா புருஷ: புராண:
ஸத்ய: ஸ்வயம்-ஜ்யோதிர் அனந்த ஆத்ய:
நித்யோ (அ)க்ஷரோ (அ)ஜஸ்வ-ஸுகோ நிரஞ்ஜன:
பூர்ணாத்வயோ முக்த உபாதிதோ (அ)ம்ருத:
மொழிபெயர்ப்பு
நீர் ஒருவரே பரமாத்மா, ஆதி முழுமுதற் கடவுள், முழு மெய்ப்பொருள்-சுயமாகத் தோன்றியவர், ஆரம்பமும், முடிவும் அற்றவர் ஆவீர். நீர் நித்தியர், குற்றமற்றவர், பரிபூரணர், பகையற்றவர், பௌதீக விஷயங்களிலிருந்து விடுதலை பெற்றவரும் ஆவீர். உமது ஆனந்தத்திற்கு எந்த விதமானத் தடையுமில்லை. அதுபோல் பௌதீக மாசுக்களுடன் உமக்கு எந்தவிதமானத் தொடர்புமில்லை. உண்மையில் நீர் அழிவற்ற அமரத்துவ அமிர்தம் ஆவீர்.
பதம் 10.14.24
ஏவம்-விதம் த்வாம் ஸகவாத்மனாம் அபி
ஸ்வாத்மானம் ஆத்மாத்மதயா விசக்ஷதே
குர்வ்-அர்க-லப்தோபநிஷத்-ஸுசக்ஷுஷா
யே தே தரந்தீவ பவான்தோம்புதிம்
மொழிபெயர்ப்பு
சூரியனைப் போன்ற ஆன்மீக குருவிடமிருந்து, ஞானத்தின் தெளிந்த பார்வை பெற்றிருப்பவனால் உம்மை, ‘இவ்வாறு அனைத்து ஆத்மாக்களினுள்ளும் ஆத்மாவாக விளங்கும் பரமாத்மாவாகப் பார்க்க முடியும். மேலும் உமது ஆதி வடிவத்தினை அறிந்து கொண்டவர்கள் மாயா மலிந்த வாழ்க்கைக் கடலினைக் கடக்கும் திறனுடையோராகின்றனர்.
பதம் 10.14.25
ஆத்மானம் ஏவாத்மதயாவிஜாநதாம்
தேனைவ ஜாதம் நிகிலம் ப்ரபஞ்சிதம்
ஜ்ஙானேன பூயோ (அ)பி ச தத் ப்ரவீயதே
ரஜ்ஜ்வாம் அஹேர் போக-பவாபவௌ யதா
மொழிபெயர்ப்பு
ஒரு கயிற்றினைத் தவறாகப் பாம்பென்று கருதுவோன் அச்சமடைகிறான், எனினும் அது கயிறுதான் பாம்பல்ல என்று உணர்ந்து கொண்டபின் அச்சந் தவிர்க்கிறான். அதுபோல் உம்மை எல்லா ஆத்மாக்களிலும் இருக்கும் பரமாத்மாவாக அறிந்து கொள்பவனுக்கு பரந்து பட்ட மாயா பௌதீக வாழ்க்கை உண்டாகிறது. ஆனால் உம்மைப் பற்றிய ஞானமோ அவ்வாழ்க்கை நீங்குவதற்கு காரணமாகிறது.
பதம் 10.14.26
அஜ்ஞான-ஸம்ஞௌ பல-பந்த-மோக்ஷள
த்வௌ நாம நான்யௌ ஸ்த தே-ஜ்ஞ-பாவாத்
அஜஸ்ர சிதி ஆத்மனி கேவலே பரே
விசார்யமாணே தரணாவ் இவாஹனீ
மொழிபெயர்ப்பு
பௌதீகத்தளை மற்றும் பௌதீக விடுதலை என்னும் இரு கருத்துக்களும் அறியாமையின் வெளிப்பாடுகளாகும். ஒருவன் தூய ஆத்மாவானது, ஜடத்திலிருந்து வேறானது மட்டுமல்ல, முழு உணர்வுடையதுமாகும் என்று சரியாகப் புரிந்து கொள்ளும்பொழுது, உண்மை ஞானத்தின் இலக்கிற்கு வெளியே இருந்த மேற்கூறிய கருத்துக்கள் உடனே மறைகின்றன. அச்சமயம், சூரியனது நோக்கில் இரவு மற்றும் பகலுக்கு எவ்வாறு முக்கியத்துவம் இல்லையோ அது போல் பந்தம், மற்றும் விடுதலைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இருப்பதில்லை.
பதம் 10.14.27
த்வாம் ஆத்மானம் பரம் மத்வா பரம் ஆத்மானம் ஏவ ச
ஆத்மா புனர் பஹிர் ம்ருக்ய அஹோ (அ)ஜ்ஞ-ஜனதாஜ்ஞதா
மொழிபெயர்ப்பு
நீர் மாயையிலிருந்து வெளிப்படும் ஏதோ ஓர் தோற்றமென்றும், உண்மையிலேயே ஆத்மாவாக இருக்கும் உம்மைப் பௌதீக உடலென்றும் கருதும் அறியாமை மிக்க மனிதர்கள் மூடத்தனத்தைச் சற்றுக் காண்பீராக. இம்மூடர்கள் பரமாத்மாவானது உமக்கு வெளியே தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று என்று முடிவு செய்கின்றனர்.
பதம் 10.14.28
அந்தர் பவே (அ)னந்த பவந்தம் ஏவ
ஹி அதத் த்யஜந்தோ ம்ருகயந்தி ஸந்த:
அஸந்தம் அபி அந்தி அஹிம் அந்தரேண
ஸந்தம் குணம் தம் கிம் உயந்திஸந்த:
மொழிபெயர்ப்பு
ஓ, எல்லையில்லாத பகவானே! தெய்வீக பக்தர்கள் உம்மிடமிருந்து எல்லாம் வேறாக இருக்கின்றன என்னும் எண்ணத்தைப் புறக்கணித்து தமது உடல்களினுள்ளேயே உம்மைத் தேடுகின்றனர். வேறுபாடு காணும் மனிதர்கள் தம் முன்னே கிடப்பது பாம்பு என்னும் மாயையிலிருந்து விடுபடும் வரை கயிற்றின் உண்மைத் தன்மையினை எங்ஙனம் போற்றுவர்?
பதம் 10.14.29
அதாபி தே தேவ பதாம்புஜ-த்வய-
ப்ரஸாத-வேஸானுக்ஹீத ஏவ ஹி
ஜானாதி தத்த்வம் பகவன்-மஹிம்னோ
ந சான்ய ஏகோ (அ)பி சிரம் விசின்லன்
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே! உமது தாமரைத் திருவடிகளின் அணுவளவு கருணையினை ஒருவன் பெற்றால் கூட அவனால் உமது மகிமையினைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு மாறாக வேதத்தினை நீண்ட நெடுங்காலமாகக் கற்றவர்களாக இருப்பினும், அவர்கள் உம்மை யூக அறிவினால் அறிய முயற்சிப்பார்களேயானால் அவர்களால் நிச்சயம் உம்மை அறிய முடியாது.
பதம் 10.14.30
தத் அஸ்து மே நாத ஸ பூரி-பாகோ
பரோ (அ)த்ர வான்யத்ர து வா கிரஸ்சாம்
யேனாஹம் ஏகோ (அ)பி பவஜ்-ஜனானாம்
பூத்வா நிஷேவே தவ பாத-பல்லவம்
மொழிபெயர்ப்பு
ஆகையினால் போற்றுதற்குரிய பகவானே, இப்பிறப்பில் நான் பிரம்மாவாக இருப்பினும் அல்லது மறுபிறப்பில் நான் எதுவாக பிறப்பினும் உமது பக்தர்களில் ஒருவனாக நான் எண்ணப்படும் பாக்கியம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். நான் எப்பிறப்புப் பெற்றாலும், ஏன், விலங்காகப் பிறப்பினும் கூட உமது பக்தித்தொண்டில் மட்டுமே நான் ஈடுபட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.
பதம் 10.14.31
அஹொ (அ)தி-தன்யா வ்ரஜ-கோ-ரமண்ய:
ஸ்தன்யாம்ருதம் பீதம் அதீவ தே முதா
யாஸாம் விபோ வத்ஸதராத்மஜாத்மனா
யத்-த்ருப்தயே (அ)த்யாபி ந சாவம் அத்வரா:
மொழிபெயர்ப்பு
ஓ, எல்லாம் வல்ல இறைவனே! பிருந்தாவனத்திலுள்ள பசுக்களும், கோபிகா ஸ்திரீகளும் எத்துணை பாக்கியசாலிகள். நீர் கன்றுகளைப் போன்றும், அவர்களது குழந்தைகளைப் போன்றும் உருமாறி, உமக்கு முழு திருப்தி ஏற்படும் வரையில் அவர்களின் முலைப்பால் என்னும் அமிர்தம் உண்டீர். ஆதிகாலந்தொட்டு, இன்று வரையிலும் செய்யப்படும் வேத வேள்விகள் கூட அத்துணை திருப்தியளித்ததில்லை.
பதம் 10.14.32
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த-கோப-வ்ரஜௌகஸாம்
யன்-மித்ரம் பரமானந்தம் பூர்ணம் ப்ரஹ்ம ஸநாதனம்
மொழிபெயர்ப்பு
ஓ, நந்த மகாராஜனும், விரஜ பூமியில் வசிப்போரும் எத்துணை பாக்கியசாலிகள்! அவர்களது அதிர்ஷ்டத்திற்கு அளவே இல்லை. ஏனென்றால் முழு மெய்ப்பொருளாகவும் பரமானந்தத்திற்கு ஆதாரமான பரப்பிரம்மமாக இருப்பவரும் அல்லவா அவர்களது நண்பனாக இருக்கின்றனர்.
பதம் 10.14.33
ஏஷாம் து பாக்ய-மஹிமாச்யுத தாவத் ஆஸ்தாம்
ஏகாதஸைவ ஹி வயம் பத பூரி-பாக:
ஏதத்-த்ருஷீக-சஷகைர் அஸக்ருத் பிமா:
ஸ்ரவாதயோ (அ)ங்த்ரி-உதஜ-மத்வ-அம்ருதாஸவம் தே
மொழிபெயர்ப்பு
பிருந்தாவனத்திலுள்ளோரின் பாக்கியமானது கற்பனைக்கும் எட்டாததாக இருந்தபோதிலும், சிவபெருமானின் தலைமையின் கீழ் பல்வேறு புலன்களுக்கும் ஆதிபத்தியத் தேவர்களாக விளங்கும் நாங்கள் பதினோரு தேவர்களும் மிகுந்த பாக்கியசாலிகளே ஆவோம், ஏனென்றால் பிருந்தாவனத்தைச் சேர்ந்த இப்பக்தர்களின் புலன்கள் என்னும் குவளைகளின் மூலமே நாங்கள் உமது தாமரைத் திருவடிகளிலிருந்து வரும் அமிர்தத்தினைத் தொடர்ந்து பருகிக் கொண்டிருக்கின்றோம்.
பதம் 10.14.34
தத் பூரி-பாக்யம் இஹ ஜன்ம கிம் அபி அடவ்யாம்
யத் கோகுலே (அ)பி கதமாங்க்ரி-ரஜோ-(அ)பிஷேகம்
யஜ்-ஜீவிதம் து நிகிலம் பகவான் முகுந்தன்
த்வ அத்யாபி யத்-பத-ரஜ: ஸ்ருதி-ம்ருக்யம் ஏவ
மொழிபெயர்ப்பு
கோகுலத்தில் ஏதேனும் ஒன்றாக நான் பிறந்து அங்கு வசிப்பேரரின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசி என் தலைமீது விழுமானால் அதுவே எனக்குப் பெரும் பாக்கியமாகும். அவர்களது உயிரும், ஆத்மாவாகவும் இருப்பவர் முழுமுதற் கடவுளான முகுந்தனே ஆவார். அவரது தாமரைத் திருவடிகளின் தூசியினை வேத மந்திரங்கள் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கின்றன.
பதம் 10.14.35
ஏஷாம் கோஷ-நிவாஸினாம் உதபவான் கிம்தேவ ராதேதி நஸ்
சேதோவிஸ்வ-பவாத் பலம் த்வத்-அபாரக்குத்ராபி அயன் முஹ்யந்தி
ஸத்-வேஷாத் இவ பூதனாபி ஸ-குலா த்வாம் ஏவ தேவாபிதா
யத்-தாமார்த-ஸுஹ்ருத்-ப்ரியாத்ம-தனய-ப்ரா-ணாஸயஸ்த்வத்-க்ருதே
மொழிபெயர்ப்பு
எங்கும் உம்மைக் காண முடியும் என்பதைக் காட்டிலும், வேறு என்ன நன்மை பெறலாம் என்று சிந்திக்க முயன்றதின் விளைவினால் எனது மனம் குழப்பமுற்றது. எல்லா ஆசிகளின் உருவமாக நீரே விளங்குகின்றீர். அவ்வாசிகளை நீர் பிருந்தாவனத்திலுள்ள ஆயர்குலத்தினர்க்கே அருள்கின்றீர். பக்தையைப் போல் வேடமிட்டு வந்த பூதனாவிற்கும் அவளது உறவினர்க்கும் நீர் ஏற்கெனவே உம்மை அளித்துவிட ஏற்பாடு செய்திருந்தீர். ஆகையினால் தமது இல்லங்கள், செல்வம், நண்பர்கள், பாசமிக்க உறவினர்கள், உடல்கள், குழந்தைகள், மற்றும் தமது உயிர், மனம் எல்லாவற்றையும் உமக்கே அர்ப்பணித்திருக்கும் இப்பிருந்தாவனத்திலுள்ள பக்தர்களுக்கு அளிப்பதற்கு உம்மிடம் வேறு என்ன இருக்கிறது?
பதம் 10.14.36
தாவத் ராகாதய: ஸ்ருதனாஸ் தாவத் காரா-க்ருஹம் க்ருஹம்
தாவன் மோஹோ (அ)ங்க்ரி-நிகடோ யாவத் க்ருஷ்ண ந தே ஜனா:
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவான் கிருஷ்ணரே! மக்கள் உமது பக்தர்களாகாத வரையில் அவர்களது உலகியல் பற்றுக்களும், விருப்பங்களும் திருடர்களாகவும், அவர்களது இல்லங்கள் சிறைக் கொட்டடிகளாகவும், அவர்களது உறவினர்கள் மீது அவர்கள் கொண்ட பாசம் கால் விலங்குகளாகவும் இருக்கும்.
பதம் 10.14.37
ப்ரபஞ்சம் நிஷ்பிரபஞ்சோ (அ)பி விடம்பயஸி பூ-தலே
ப்ரபன்ன-ஜனதானந்த-ஸந்தோஹம் ப்ரதிதும் ப்ரபோ
மொழிபெயர்ப்பு
ஓ, பிரபுவே, உலக வாழ்க்கையோடு உமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென்ற போதிலும், உம்மைச் சரணடைந்திருக்கும் பல்வகை உயர்ந்த ஆனந்தங்களுக்காக நீர் இப்பூமிக்கு வந்து உலக வாழ்க்கையினைப் பாவனை செய்கின்றீர்.
பதம் 10.14.38
ஜானந்த ஏவ ஜானந்து கிம் பஹூக்த்யா மே ப்ரபோ
மனஸோ வபுஷோ வாசோ வைபவம் தவ கோசர:
மொழிபெயர்ப்பு
சிலர் கூறுகின்றனர்: “கிருஷ்ணரைப் பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்று. அவர்கள் அவ்வாறே நினைக்கட்டும், என்னைப் பொருத்தவரையில் இவ்விஷயத்தைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆயினும் பகவானே, என்னால் ஒன்று மட்டும் கூறமுடியும். உமது வைபவங்கள் அனதத்தும் எனது மனம், வாக்கு, காயத்திற்கு அப்பாற்பட்டவை என்று.
பதம் 10.14.39
அனுஜானீஹி மாம் க்ருஷ்ண ஸர்வம் த்வம் வேத்ஸி ஸர்வ-த்ருக்
த்வம் ஏவ ஜகதாம் நாதோ ஜகத் ஏதத் தவார்பிதம்
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய கிருஷ்ண பகவானே, தற்போது நான் தங்களிடமிருந்து விடைபெறுவதற்கான அனுமதியை பணிவுடன் வேண்டுகிறேன். தாங்களே அனைத்தையும் அறிவபரும் காண்பவரும் ஆவீர். பிரபஞ்சம் அனைத்திற்கும் தாங்களே உரிமையாளர் என்றபோதிலும், இந்த பிரபஞ்சத்தை தங்களுடைய தாமரைப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 10.14.40
ஸ்ரீ-க்ருஷ்ண வ்ருஷ்ணி-குல-புஷ்கர-ஜோஷ-தாயின்
க்ஷ்மா-நிர்ஜர-த்விஜ-பஸூததி-வ்ருத்தி-காரின்
உத்தர்ம-ஸார்வர-ஹர க்ஷிதி-ராக்ஷஸ-த்ருக்
ஆ-கல்பம் ஆர்கம் அர்ஹன் பகவன் நமஸ் தே
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே, நீர் தாமரை மலர் போன்றிருக்கும் விருஷ்ணி குலத்திற்கு இன்பம் அருளி, பூமியினை உடைய மகா சமுத்திரங்களாகவும், தேவர்களாகவும், அந்தணர்களாகவும், பசுக்களாகவும் விரிவடைந்திருக்கின்றீர். அதர்மத்தின் இருட்டினை அறவே நீக்கி இப்பூமியில் தோன்றிய அசுரர்களை எதிர்க்கின்றீர். ஓ, முழுமுதற் கடவுளே இப்பிரபஞ்சம் இருக்கும் வரையிலும், சூரியன், ஒளி வீசும் வரையிலும் நான் எனது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிப்பேன்.