Tuesday, April 23

Prayers of Gajendra (Tamil) / கஜேந்திரனின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 8 / அத்தியாயம் 3 / பதம் 2-29


பதம் 2

ஸ்ரீ – கஜேந்ர உவாச

ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதச் சித் – ஆத்மகம்
புருஷாயாதி – பீஜாய பரேசாயாபிதீமஹி

மொழிபெயர்ப்பு

யானைகளின் அரசனான கஜேந்திரன் கூறியது: பரம புருஷரான வாசுதேவனுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன் (ஓம் நமோ பகவதே வாஸுதேவாய). அவரால்தான், ஆத்மாவின் இருப்பால் இந்த ஜட உடல் செயற்படுகிறது. எனவே அனைத்திற்கும் அவரே மூல காரணமாவார். பிரம்மா மற்றும் சிவனைப் போன்ற மேன்மையானவர்களாலும் அவர் வழிபடத்தக்கவராவார். மேலும் ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திற்குள்ளும் அவர் புகுந்துள்ளார். அவரை நான் தியானிக்கிறேன்.

பதம் 3

யஸ்மின் இதம் யதஸ் சேதம் யேனேதம் ய இதம் ஸ்வயம்
யோ ‘ஸ்மாத் பரஸ்மாச் ச பரஸ் தம் ப்ரபத்யே ஸ்வயம்புவம்

மொழிபெயர்ப்பு

பரமபுருஷர், அனைத்தையும் தாங்கிக் கொண்டுள்ள பரம பீடமாவார். எதிலிருந்து அனைத்தும் உண்டாக்கப்பட்டுள்ளதோ அந்த மூலப் பொருளும் அவரேயாவார். மேலும் இப்பிரபஞ்ச தோற்றத்தின் சிருஷ்டிக்கர்த்தாவும், அதற்குரிய ஒரே காரணமும் அவரேயாவார். ஆயினும், அவர் காரண விளைவிலிருந்து வேறுபட்டவராவார். அனைத்திலும் சுய தேவை பூர்த்தி கொண்டவரான அந்த முழுமுதற் கடவுளிடம் நான் சரணடைகிறேன்.

பதம் 4

ய: ஸ்வாத்மனீதம் நிஜ – மாயயார்பிதம்
க்வசித் விபாதம் க்வ ச தத் திரோஹிஹதம்
அவித்த – த்ருக் ஸாக்ஷி உபயத் தத் ஈக்ஷதே
ஸ ஆத்ம – மூலோ ‘வது மாம் பராத் – பர:

மொழிபெயர்ப்பு

முழுமுதற்கடவுள், தமது சுய சக்தியை விரிவடையச் செய்வதன் மூலமாக, இப்பிரபஞ்ச தோற்றத்தை சில சமயங்களில் கண்ணுக்குப் புலப்படும் வகையிலும், மேலும் சில சமயங்களில் புலப்படாதவாறும் வைத்திருக்கிறார். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவரே பரம காரணம் மற்றும் விளைவாகவும், பார்வையாளர் மற்றும் சாட்சியாகவும் இருக்கிறார். இவ்வாறாக அவர் அனைத்திற்கும் மேலானவராவார். அந்த முழுமுதற்கடவுள் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக.

பதம் 5

காலேன பஞ்சத்வம் இதேஷு க்ருத்ஸ்னசோ
லோகேஷு பாலேஷு ச ஸர்வ – ஹேதுஷு
தமஸ் ததாஸீத் கஹனம் கபீரம்
யஸ் தஸ்ய பாரே ‘பிவிராஜதே விபு:

மொழிபெயர்ப்பு

காலப்போக்கில், கிரகங்களும் அவற்றின் நிர்வாகிகளும், காவலர்களும் உட்பட, பிரபஞ்சத்தின் எல்லாக் காரணத் தோற்றங்களும், விளைவுத் தோற்றங்களும் அழிக்கப்படும்போது, காரிருள் சூழ்ந்த ஒரு நிலை ஏற்படுகின்றது. ஆயினும், இவ்விருளுக்கும் மேலாக முழுமுதற் கடவுள் இருக்கிறார். அவரது தாமரைப் பாதங்களில் நான் புகலிடம் கொள்கிறேன்.

பதம் 6

ந யஸ்ய தேவா ரிஷய: பதம் விதுர்
ஐந்து: புன: கோ ‘ர்ஹதி கந்தும் ஈரிதும்
யதா நடஸ்யாக்ருதிபிர் விசேஷ்டதோ
துரத்யயானுக்ரமண: ஸ மாவது

மொழிபெயர்ப்பு

நாடக மேடையிலுள்ள நடிகரொருவர், கவர்ச்சியான உடைகளால் மூடப்பட்டு, பல விதமான அசைவுகளுடன் நடனமாடுவதால், அவரை சபையோர் புரிந்து கொள்வதில்லை; அதைப்போலவே, பரம நடிகரின் செயல்களையும், அம்சங்களையும் தேவர்களால் அல்லது மகா முனிவர்களால் கூட புரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க, மிருகங்களைப் போன்ற புத்தியற்றவர்களால் நிச்சயமாக அது முடியாது. தேவர்கள் மற்றும் முனிவர்களாலோ அல்லது புத்தியற்றவர்களாலோ பகவானின் அம்சங்களைப் புரிந்து கொள்ளவோ, அல்லது அவரது உண்மை நிலையை வார்த்தைகளால் வர்ணிக்கவோ முடியாது. அத்தகைய முழுமுதற்கடவுள் எனக்கு அபயமளிப்பாராக.

பதம் 7

தித்ருக்ஷவோ யஸ்ய பதம் ஸுமங்களம்
விமுக்த – ஸங்கா முனய: ஸுஸாதவய:
சரந்தி அலோக – வ்ரதம் அவ்ரணம் வனே
பூதாத்ம – பூத: ஸுஹ்ருத: ஸ மே கதி:

மொழிபெயர்ப்பு

எல்லா ஜீவராசிகளையும் சமமாகக் காண்பவர்களும், எல்லோரிடமும் சினேகமாய் இருப்பவர்களும், காட்டில் பிரம்மச்சரிய, வானப்பிரஸ்த மற்றும் சந்நியாஸ விரதங்களை குறையற்றவாறு பயிற்சி செய்பவர்களுமான துறவிகளும், பெரும் முனிவர்களும், சர்வ மங்களமளிக்கும் முழுமுதற்கடவுளின் தாமரைப் பாதங்களைத் தரிசிக்க விரும்புகின்றனர். அதே முழுமுதற்கடவுளே என்னுடைய இலக்காகவும் இருப்பாராக.

பதம்ங்கள் 8-9

ந வித்யதே யஸ்ய ச ஜன்ம கர்ம வா
ந நாம – ரூபே குண – தோஷ ஏவ வா
ததாபி லோகாப்யய – ஸம்பவாய ய:
ஸ்வ – மாயயா தானி அனுகாலம் ருச்சதி
தஸ்மை நம: பரேசாய ப்ரஹ்மணே ‘னந்த – சக்தயே
அரூபாயோரு – ரூபாய நம ஆஸ்சர்ய – கர்மணே

மொழிபெயர்ப்பு

முழுமுதற்கடவுளுக்கு பௌதிகமான பிறப்போ, செயல்களோ, நாமமோ, உருவமோ, குணங்களோ அல்லது குறைகளோ கிடையாது. எதற்காக இந்த ஜட உலகம் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றதோ, அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவர் நமது ஆதியான அந்தரங்க சக்தியின் மூலமாக, பகவான் ஸ்ரீ ராமராகவோ அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகவோ ஒரு மனித உருவில் வருகின்றார். அவருக்கு அளவற்ற சக்தியுண்டு. மேலும் பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டுள்ள அநேக ரூபங்களில் அவர் அற்புதமாக செயற்படுகின்றார். எனவே அவரே பரபிரம்மமாவார். அவருக்கு என் வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 10

நம ஆத்ம – ப்ரதீபாய ஸாக்ஷிணே பரமாத்மணே
நமோ கிராம் விதூராய மனஸஸ் சேதஸாம் அபி

மொழிபெயர்ப்பு

முழுமுதற்கடவுள், எல்லோருடைய இதயங்களிலும் சாட்சியாக இருக்கும் சுயப்பிரகாசம் கொண்ட பரமாத்மாவாக இருக்கிறார். தனிப்பட்ட ஆத்மாவிற்கு அவர் ஞான உபதேசம் அளிக்கிறார். மேலும் அவர் மனம், சொல் அல்லது உணர்வு ஆகியவற்றின் பயிற்சியால் அடையப்படாதவராவார். அத்தகைய முழுமுதற்கடவுளுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 11

ஸத்வணே ப்ரதிலப்யாய நைஷ்கர்மயேண விபஸ்சிதா
நம: கைவல்ய – நாதாய நிர்வாண – ஸுக – ஸம்விதே

மொழிபெயர்ப்பு

உன்னத பக்தியோக முறையில் செயலாற்றுபவர்களான தூய பக்தர்களால் முழுமுதற்கடவுள் உணரப்படுகிறார். அவரே களங்கமற்ற மகிழ்ச்சியை அளிப்பவரும், உன்னத உலகின் எஜமானருமாவார். ஆகவே எனது மரியாதையை நான் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 12

நம: சாந்தாய கோராய மூடாய குண – தர்மிணே
நிர்விசேஷாய ஸாம்யாய நமோ ஞான – கனாய ச

மொழிபெயர்ப்பு

எங்கும் பரவியிருப்பவரான பகவான் வாசுதேவரிடமும், பரமபுருஷரின் பயங்கர ரூபமாகிய பகவான் நரசிம்ஹ தேவரிடமும், ஒரு மிருகமாகத் (பகவான் வராஹதேவர்) தோன்றிய பகவான் ரூபத்திற்கும், அருவவாதத்தைப் பிரச்சாரம் செய்த பகவான் தத்தாதிரேயருக்கும், பகவான் புத்தருக்கும், மற்றெல்லா அவதாரங்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். பௌதிக குணங்களற்றவரும், ஆனால் இவ்வுலகினுள் நற்குணம், தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம் ஆகிய முக்குணங்களை ஏற்பவரான பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். மேலும் அருவமான பிரம்ம ஜோதிக்கும் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 13

க்ஷேத்ர – க்ஞாய நமஸ் துப்யம் ஸர்வாத்யக்ஷாய ஸாக்ஷிணே
புருஷாயாத்ம – மூலாய மூல – ப்ரக்ருதயே நம:

மொழிபெயர்ப்பு

பரமாத்மாவும், அனைத்திற்கும் கண்காணிப்பாளரும், நிகழ்பவை அனைத்திற்கும், சாட்சியுமாகிய உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். நீரே பரமபுருஷரும், ஜட இயற்கை மற்றும் மொத்த ஜட சக்தி ஆகியவற்றின் மூலமும் ஆவீர். ஜட உலகின் உரிமையாளராக இருப்பவரும் நீரே. ஆகவே, நீரே பூரண முழுமையாவீர். உமக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

பதம் 14

ஸர்வேந்ரிய – குண – த்ரஷ்ட்ரே ஸர்வ – ப்ரத்யய – ஹேதவே
அஸதா ச்சாயயோக்தாய ஸத் – ஆபாஸாய தே நம:

மொழிபெயர்ப்பு

எம்பெருமானேத, நீரே புலன்களின் எல்லா நோக்கங்களையும் கவனிப்பவராவீர். உமது கருணையின்றி, சந்தேகங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமல்ல. ஜட உலகம் உம்மை ஒத்திருக்கும் ஒரு நிழலைப் போன்றதாகும். உண்மையில், இந்த உலகை ஒருவன் உண்மையானதென ஏற்கின்றான். ஏனெனில், உமது இருப்பைப் பற்றிய ஒரு காட்சியை இது அளிக்கிறது.

பதம் 15

நமோ நமஸ் தே ‘கில – காரணாய
நிஷ்காரணாயாத்புத – காரணாய
ஸர்வாகமாம்னாய – மஹார்ணவாய
நமோ ‘பவர்காய பராயணாய

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, நீரே சர்வ காரணங்களுக்கும் காரணம், ஆனால் உமக்கு எந்த காரணமும் இல்லை. ஆகவே நீரே அனைத்திற்கும் அற்புத காரணமாவீர். பஞ்சராத்ரங்களும், வேதாந்த சூத்திரமும் உம்மைப் பிரதிநிதிப்பவையாகும். இத்தகைய சாஸ்திரங்களில் அடங்கியுள்ள வேத அறிவிற்கு நீரே புகலிடமாவீர். மேலும் நீரே பரம்பரா முறையின் பிறப்பிடமாகவும் இருக்கிறீர். உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உம்மால் மட்டுமே சக்தியை அளிக்க முடியும் என்பதால், எல்லா ஆன்மீகிகளுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவரும் நீரே. எனது பணிவான வணக்கங்களை நான் உமக்கு சமர்ப்பிப்பேனாக.

பதம் 16

குணாரணி – ச்சன்ன – சித் – உஷ்மபாய
தத் – க்ஷோப – விஸ்பூர்ஜித – மானஸாய
நைஷ்கர்ம்ய – பாவேன விவர்ஜிதாகம
ஸ்வயம் – ப்ரகாசாய நமஸ் கரோமி

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, அரணி கட்டையினுள் நெருப்பு மறைந்திருப்பதைப் போலவே, நீரும், எல்லையற்ற உமது அறியும் ஜட இயற்கைக் குணங்களால் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள். இருந்தாலும், உமது மனம், ஜட இயற்கைக் குணங்களிடம் கவனம் கொண்டிருக்கவில்லை. ஆன்மீக அறிவில் முன்னேறியவர்கள், வேத இலக்கியங்களில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களல்ல. அத்தகைய முன்னேற்றமடைந்த ஆத்மாக்கள் உன்னத நிலையில் இருப்பதால், அவர்களின் தூய மனங்களில் நீரே சுயமாகத் தோன்றுகிறீர். ஆகவே எனது பணிவான வணக்கங்களை நான் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 17

மாத்ருக் ப்ரபன்ன – பசு – பாச – விமோக்ஷணாய
முக்காய பூரி – கருணாய நமோ ‘லயாய
ஸ்வாம்சேன ஸர்வ – தனு – ப்ருன் – மனஸி – ப்ரதீத –
ப்ரத்யக் – த்ருசே பகவதே ப்ருஹதே நமஸ் தே

மொழிபெயர்ப்பு

பரம முக்தி நிலையில் இருப்பவரான உம்மிடம் என்னைப் போன்ற ஒரு மிருகம் சரணாகதி அடைந்திருப்பதால், இந்த ஆபத்தான நிலையிலிருந்து நிச்சயமாக நீர் என்னை விடுவிப்பீர். உண்மையில், நீர் பரம கருணா மூர்த்தியாக இருப்பதால், இடைவிடாமல் என்னை நீர் காப்பாற்ற முயல்கிறீர். உமது விரிவங்கமாகிய பரமாத்ம அம்சத்தில், எல்லா உடல்பெற்ற ஜீவன்களின் இதயங்களிலும் நீர் இருக்கின்றீர். நீர் நோடியான உன்னத அறிவென்று புகழப்படுகின்றீர். மேலும் நீர் எல்லையற்றவராவீர். முழுமுதற்கடவுளாகிய உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 18

ஆத்மாத்ம – ஜாப்த – க்ருஹ – வித்த – ஜனேஷு ஸக்தைர்
துஷ்ப்ராப்பணாய குண – ஸங்க – விவர்ஜிதாய
முக்தாத்மபி: ஸ்வ – ஹ்ருதயே பரிபாவிதாய
ஜ்ஞானாத்மனே பகவதே நம ஈஸ்வராய

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, ஜடக் களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பவர்கள் உம்மை எப்போதும் தங்களுடைய இதயத்தில் தியானிக்கின்றனர். மனக்கற்பனை, வீடு, உறவினர்கள், நண்பர்கள், செல்வம், தொண்டர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியவற்றில் நான் அளவுக்கதிகமாக பற்றுக் கொண்டிருக்கிறேன். என்னைப் போன்றோருக்கு உம்மை அடைவதென்பது மிகமிக கஷ்டமாகும். நீர், இயற்கைக் குணங்களால் களங்கப்படாதவரான முழு முதற்கடவுளாவீர். ஆத்ம ஞானம் முழுவதற்கும் களஞ்சியமாக இருப்பவரும், பரம ஆளுனராக இருப்பவரும் நீரே. எனவே எனது பணிவான வணக்கங்களை நான் உமக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 19

யம் தர்ம – காமார்த்த – விமுக்தி – காமா
பஜந்த இஷ்டாம் கதிம் ஆப்னுவந்தி
கிம் சாசிஷோ ராதி அபி தேஹம் அவ்யயம்
கரோது மே ‘தப்ர – தயோ விமோக்ஷணம்

மொழிபெயர்ப்பு

முழுமுதற்கடவுளை வழிபட்டபின், மதம், பொருளாதார முன்னேற்றம், புலனின்பம் மற்றும் முக்தி ஆகிய நான்கு கொள்கைகளில் ஆர்வம் உள்ளவர்கள், தாங்கள் விரும்பியதை அவரிடமிருந்து பெறுகின்றனர். எனவே மற்ற வரங்களைப் பற்றி கூற என்ன இருக்கிறது? உண்மையில், இத்தகைய பேராசைகளை நோக்கமாகக் கொண்டு வழிபடுபவர்களுக்கு பகவான் சிலசமயங்களில் ஓர் ஆன்மீக உடலை வழங்குகிறார். பரம கருணாமூர்த்தியான அந்த முழுமுதற்கடவுள், இப்பொழுது நேரிட்டுள்ள அபாயத்திலிருந்தும், பௌதிகமான வாழ்க்கை முறையிலிருந்தும், முக்தி எனும் வரத்தை எனக்கு அளிப்பாராக.

பதம்ங்கள் 20-21

ஏகாந்தினோ யஸ்ய ந காஞ்சனார்தம்
வாஞ்சந்தி யே வை பகவத் – ப்ரபன்னா:
அதி – அத்புதம் தச் – சரிதம் ஸுமங்களம்
காயந்த ஆனந்த – ஸமுத்ர – மக்னா:
தம் அக்ஷரம் ப்ரஹ்ம பரம் பரேசம்
அவ்யக்தம் ஆத்யாத்மிக – யோக – கம்யம்
அதீந்ரியம் ஸூக்ஷ்மம் இவாதிதூரம்
அனந்தம் ஆத்யம் பரிபூர்ணம் ஈடே

மொழிபெயர்ப்பு

பகவானுக்குத் தொண்டு செய்வதைத்தவிர வேறு விருப்பம் இல்லாதவர்களான கலப்பற்ற பக்தர்கள், பூரண சரணாகதியில் அவரை வழிபடுவதுடன், அதி அற்புதமானவையும், மிகவும் மங்களகரமானவையுமான அவரது செயல்களைப் பற்றி எப்பொழுதும் கேட்டுக்கொண்டும், பாடிக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறாக அவர்கள் எப்பொழுதும் ஓர் உன்னதமான ஆனந்தக் கடலில் மூழ்கியுள்ளனர். இத்தகைய பக்தர்கள் பகவானிடமிருந்து எந்த வரத்தையும் கேட்பதில்லை. இருந்தாலும், நான் ஆபத்தான நிலையில் இருக்கிறேன். இதனால் நான் அந்த முழுமுதற்கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவர் நித்தியமாக இருப்பவரும், கண்ணுக்குத் தெரியாதவரும், பிரம்மாவைப் போன்ற மகாபுருஷர்கள் அனைவருக்கும் இறைவனும், உன்னதமான பக்தி – யோகத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியவருமாவார். அவர் மிகமிக சூட்சுமமானவராக இருப்பதால், அவர் என் புலன்களால் அடையப்பட முடியாதவராகவும், எல்லாப் புற உணர்வுகளுக்கும் மேற்பட்டவராகவும் இருக்கிறார். அவர் எல்லையற்றவரும், காரண மூலமும், அனைத்திலும் பூரண நிறைவுமாவார். எனது வணக்கங்களை நான் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பதங்கள் 22 – 24

யஸ்ய ப்ரஹ்மாதயோ தேவா வேதா லோகாஸ் சராசரா:
நாம – ரூப – விபேதேன ஃபல்குயா ச கலயா க்ருதா:
யதார்சிஷோ ‘கனே: ஸவிதுர் கபஸ்தயோ
நிர்யாந்தி ஸம்யாந்தி அஸக்ருத் ஸ்வ – ரோசிஷ:
ததா யதோ ‘யம் குண – ஸம்ப்ரவாஹோ
புத்திர் மன: கானி சரீர – ஸர்கா:
ஸ வை ந தேவாஸுர – மர்த்ய – தீர்யந்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஜன்து:
நாயம் குண: கர்ம ந ஸன் ந சாஸன்
நிஷேத – சேஷோ ஜயதாத் அசேஷ:

மொழிபெயர்ப்பு

முழுமுதற்கடவுள் அவரது அற்பமான பின்னப்பகுதிகளாகிய ஜீவ தத்துவத்தைப் படைக்கிறார் பிரம்மதேவர் முதற்கொண்டு, தேவர்கள், மற்றும் வேத அறிவின் விரிவுகள் (ஸாம, ரிக், யஜுர் மற்றும் அதர்வ), வெவ்வேறு பெயர்கள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் ஆகியவற்றுடன் கூடிய அசைவன, அசையாதன ஆகிற மற்றெல்லா ஜீவராசிகளையும் அவர் படைக்கிறார். ஒரு தீயின் பொறிகள் அல்லது சூரியனின் பிரகாசமான கதிர்கள் அவற்றின் பிறப்பிடத்திலிருந்து வெளிப்பட்டு பின் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே கலந்து விடுகின்றன. அதைப்போலவே, மனம், புத்தி, புலன்கள், சூட்சுமமான ஜட உடல்கள், வெவ்வேறு இயற்கைக் குணங்களின் தொடர்ந்த உருமாற்றங்கள் ஆகிய அனைத்தும் பகவானிடமிருந்து வெளியாகி மீண்டும் அவருக்குள்ளேயே கலந்து விடுகின்றன. அவர் தேவருமல்ல, அசுரனுமல்ல, மனிதனுமல்ல, பறவையோ அல்லது மிருகமும் அல்ல. அவர் பெண்ணோ, ஆணோ அல்லது ஆண் பெண் என்று பகுக்க முடியாதவரோ அல்ல. அவர் ஒரு மிருகமும் அல்ல. அவர் ஒரு பௌதிக குணமோ, ஒரு பலன் நோக்குக் கருமமோ, தோன்றுபவரோ அல்லது தோன்றாதவரோ அல்ல. அவர் “இதல்ல, இதல்ல” எனும் பகுத்தறிவின் கடைசிச் சொல்லாவார். அவர் எல்லையற்றவராவார். அந்த முழுமுதற்கடவுளுக்கு சர்வ மங்களம்!

பதம் 25

ஜிஜீவிஷே நாஹம் இஹாமுயா கிம்
அந்தர் பஹிஸ் சாவ்ருதயேப – யோன்யா
இச்சாமி காலேன ந யஸ்ய விப்லவஸ்
தஸ்யாத்ம – யோகாவரணஸ்ய மோக்ஷம்

மொழிபெயர்ப்பு

நான் முதலையின் தாக்குதலிலிருந்து விடுவிக்கப்பட்டபின் தொடர்ந்து உயிர்வாழ விரும்பவில்லை. உள்ளும், புறமும் அறியாமையால் மறைக்கப்பட்டுள்ள ஒரு யானையின் உடலால் என்ன பயன்? நான் அறியாமைத் திரையிலிருந்து நித்தியமான மோட்சத்தை மட்டுமே விரும்புகிறேன். அத்திரை காலத்தின் ஆதிக்கத்தால் அழிக்கப்படுவதில்லை.

பதம் 26

ஸோ ‘ஹம் விஸ்வ – ஸ்ருஜம் விஸ்வம்
அவிஸ்வம் விஸ்வ – வேதஸம்
விஸ்வாத்மானம் அஜம் ப்ரஹ்ம
ப்ரணதோ ‘ஸ்மி பரம் பதம்

மொழிபெயர்ப்பு

இப்பொழுது ஜட வாழ்விலிருந்து முழுமையாக விடுபட விருப்பங்கொண்டு, எனது பணிவான வணக்கங்களை நான் அந்த பரம புருஷருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவரே பிரபஞ்சத்தைப் படைத்தவரும், பிரபஞ்ச ரூபமாக இருப்பவரும், அதேசமயம் இப்பிரபஞ்ச தோற்றத்திற்கு மேற்பட்டவராக இருப்பவருமாவார். அவரே இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நன்கு அறிந்தவராகவும், பிரபஞ்சத்தின் பரமாத்மாவாகவும் இருக்கிறார். அவர் பிறப்பற்றவரும், உன்னத நிலையிலுள்ள இறைவனுமாவார். எனது பணிவான வணக்கங்களை நான் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 27

யோக – ரந்தித – கர்மாணோ ஹ்ருதி யோக – விபாவிதே
யோகினோ யம் ப்ரபஸ்யந்தி யோககேசம் தம் நதோ ‘ஸ்மி அஹம்

மொழிபெயர்ப்பு

பரமாத்மாவும், எல்லா யோக சித்திகளுக்கும் எஜமானரும், பக்தியோகத்தைப் பயில்தனால், பலன் நோக்குக் கருமங்களின் விளைவுகளிலிருந்து பூரணமான தூய்மையையும், விடுதலையையும் பெறும் பொழுது, பக்குவமடைந்த யோகிகளால் இதய மத்தியில் காணப்படுபவருமான அந்த பரமனுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 28

நமோ நமஸ் துப்யம் அஸஹ்ய – வேக –
சக்தி – த்ரயாயாகில – தீ – குணாய
ப்ரபன்ன – பாலாய துரந்த – சக்தயே
கத் – இந்ரியாணாம் அனவாப்ய – வர்த்மனே

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, நீரே மூவகைச் சக்திகளிலுள்ள எதிர்க்கப்பட முடியாத வலிமையின் ஆளுனராக இருக்கிறீர். எல்லாப் புலன் இன்பத்திற்கும் நீரே ஊற்றாகக் காணப்படுகிறீர். தஞ்சமடைந்த ஆத்மாக்களைக் காப்பவரும் நீரே. நீர் எல்லையற்ற சக்தியைப் பெற்றிருக்கிறீர். ஆனால் தங்களுடைய புலன்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால் நீர் அணுகப்பட முடியாதவராக இருக்கிறீர். மேன்மேலும் எனது பணிவான வணக்கங்களை நான் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 29

நாயம் வேத ஸ்வம் ஆத்மானம் யச் – சக்த்யாஹம் – தியா ஹதம்
தம் துரத்யய – மாஹாத்மியம் பகவந்தம் இதோ ‘ஸ்மி அஹம்

மொழிபெயர்ப்பு

யாருடைய மாயா சக்தியால், பகவானின் பின்னப்பகுதியான ஜீவன், தேகாபிமானத்தின் வசப்பட்டு தனது உண்மையான அடையாளத்தை மறந்து விடுகின்றானோ, அந்த முழுமுதற் கடவுளுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். யாருடைய பெருமைகளைப் புரிந்து கொள்வது கடினமானதோ, அந்த முழுமுதற் கடவுளிடம் நான் தஞ்சமடைகிறேன்.

+2
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question