Tuesday, June 25

Prayers by wife of Kaliya (Tamil)/ நாக பத்தினிகளின் பிரார்த்தனை

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 10 / அத்தியாயம் 16 / பதம் 33-53

பதம் 33

நாக-பத்ன்ய ஊசு:

ந்யாய்யோ ஹி தண்ட: க்ருத-கில்பிஷே (அ)ஸ்மிம்ஸ்
தவாவதார: கல-நிக்ரஹாய
ரிபோ: ஸுதானாம் அபி துல்ய-த்ருஷ்டிர்
தத்ஸே தமம் பலம் ஏவானுஸம்ஸன்

மொழிபெயர்ப்பு

காளிங்கனின் மனைவியர் கூறினர்: இக்குற்றவாளிக்குத் தாங்கள் அளித்த தண்டனை நியாயமானதே. துஷ்டர்களையும், கொடியவர்களையும் அழிப்பதற்கே நீர் இப்பூலகில் அவதரித்திருக்கின்றீர். உமது பகைவர்களிடத்தும், உமது சொந்த புதல்வர்களிடத்தும் நீர் சமபார்வை உடையவர். வாழ்கின்ற ஓர் உயிருக்கு நீர் தண்டனை அளிக்கின்றீர் என்றால் அது அவனது நன்மைக்கே என்பதை நீர் நன்கறிவீர்.

பதம் 34

அனுக்ரஹோ (அ)யம் பவத: க்ருதோ ஹி நோ
தண்டோ (அ)ஸதாம் தே கலு கல்மஷாபஹ:
யத் தந்தஸூகத்வம் அமுஷ்ய தேஹின:
க்ரதோ (அ)பி தே(அ)னுக்ரஹ ஏவ ஸம்மத:

மொழிபெயர்ப்பு

நீர் துஷ்டர்களுக்கு அளிக்கும் தண்டனையின் மூலம் அவர்களது மாசினை அகற்றுகின்றீர், அதனால் இப்போது நீர் செய்திருப்பது எங்களுக்கு உண்மையில் அனுக்கிரஹமேயாகும். உண்மையில் பந்தப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற காரணத்தினால், எங்கள் கணவன் ஒரு பாம்பின் உடலைப் பெற்றுக் கொடிய பாவியாக விளங்குகின்றான். அவனிடத்து நீர் கொண்ட சினமானது உண்மையில் உமது கருணையாகவே கருதப்படுகிறது.

பதம் 35

தப: ஸுதப்தம் கிம் அனேன பூர்வம்
நிரஸ்த-மானேன ச மான-தேன
தர்மோ (அ)த வா ஸர்வ-ஜனானுகம்பயா
யதோ பவாம்ஸ் துஷ்யதி ஸர்வ-ஜீல:

மொழிபெயர்ப்பு

தனது மனதில் காவமின்றி, பிறரிடத்து மரியாதையுடன் எமது கணவன் அவனது முந்தைய பிறவிகளில் முறையாகவும், எச்சரிக்கையுடனும் தவங்கள் செய்திருந்தானா? அதனால் அவன் மீது நீர் மகிழ்ச்சியடைந்தீரா? அல்லது அவன் தனது முந்தையப் பிறவிகளில் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டு தனது சமய தர்மங்களை எச்சரிக்கையுடன் நிறைவேற்றினானா, அதனால் உயிர்கட்கெல்லாம் உயிராக விளங்கும் நீர், இப்போது அவன் மீது நீர் திருப்தியடைந்திருக்கின்றீரா?

பதம் 36

கஸ்யானுபாவோ (அ)ஸ்ய நதேவ வித்மஹே
தவாங்க்ரி-ரேணு-ஸ்பரஸாதிகார:
யத்-வாஞ்சயா ஸ்ரீர் லலனாசரத் தபோ
விஹாய காமான் ஸு-சிரம் த்ருத-வ்ரத

மொழிபெயர்ப்பு

ஓ, பகவானே, உமது தாமரைத் திருவடிகளின் தூசி தனது தலையில் படுதற்கு நாகமாகிய இக்காளிங்கன் என்ன தவம் செய்தானென்று நாங்கள் அறியோம். இதற்காகத்தானே அதிர்ஷ்ட தேவதையாகிய இலட்சுமிதேவி தனது இச்சைகள் அனைத்தையும் துறந்து காலாகாலங்களுக்கும் தவங்கள் மற்றும் விரதங்களை பின்பற்றுகின்றாள்.

பதம் 37

ந நாக-ப்ருஷ்டம் ந ச ஸார்வ-பௌமம்
ந பாரமேஷ்ட்யம் ந ரஸாதிபத்யம்
ந யோக-ஸித்தீர் அபுனர்-பவம் வா
வாஞ்சந்தி யத்-பாத ரஜ-ப்ரபன்னா:

மொழிபெயர்ப்பு

உமது தாமரைத் திருவடிகளின் தூசியினை அடையப் பெற்றோர் சொர்க்கத்தின் ஆட்சியோ, பானளவு அதிகாரமோ, பிரம்மதேவனின் பதவியோ, மண்ணுலக ஆட்சியோ விரும்புவதில்லை. அவர்கள் யோக சாதனைகளின் நிறைவினையோ அல்லது விடுதலையினையோ கூட விரும்புவதில்லை.

பதம் 38

தத் ஏஷ நாதாப துராபம் அன்னயஸ்
தமோ-ஜனி: க்ரோத-வஸோ (அ)பி அஹீஸ:
ஸம்ஸார-சக்ரே ப்ரம்மத: ஸகீரிணோ
யத்-இச்சத: ஸ்யாத் விபவ: ஸமக்ஷ:

மொழிபெயர்ப்பு

ஓ, பகவானே, நாகங்களின் அரசனான இக்காளிங்கன் அறியாமைக் குணத்தில் பிறந்து, விரோத உணர்வோடு இருந்த போதிலும் கூட, பிறரால் எய்துவதற்கு அரிய ஒன்றினை அவன் எய்தியிருக்கின்றான். ஆசைகள் நிறைந்தவர்களாக, ஜனன மரணப் பிறப்புக்களில் மீண்டும் மீண்டும் சுழலும் உடல் பெற்ற ஆத்மாக்கள், உமது தாமரைத் திருவடிகளின் தூசியினை அடைவதின் மூலம் தமது கண் முன்னே அனைத்து வளங்களும் வெளிப்படக் காண்பர்.

பதம் 39

நமஸ் துப்யம் பகவதே புருஷாய மஹாத்மனே
பூதாவாஸாய பூதாய பராய பரமாத்மனே

மொழிபெயர்ப்பு

முழுமுதற் கடவுளாகிய உமக்கு எமது வந்தனங்கள் உரியதாகும். உயிர்களின் இதயங்களில் பரமாத்மாவாக வீற்றிருந்த போதிலும் நீர் எங்கும் நிறைந்தவராவீர். படைக்கப்பட்ட உலகியல் பொருட்களின் ஆதி அடைக்கலமாக நீர் இருந்தபோதிலும், அவற்றைப் படைப்பதற்கு முன்பே நீர் இருக்கின்றீர். எல்லாவற்றிற்கும் காரணமாக நீர் இருந்த போதிலும், பரமாத்மாவான நீர், உலகியற் காரணம் மற்றும் காரியம் இரண்டிற்கும் மேலானவராக இருக்கின்றீர்.

பதம் 40

ஜ்ஞான-விஜ்ஞான-நிதயே ப்ரஹ்மணே (அ)னந்த-ஸக்தயே
அகுணாயாவிகாராய நமஸ் தே ப்ராக்ருதாய ச

மொழிபெயர்ப்பு

அனைத்து உன்னத உணர்வுகள் மற்றும் ஆற்றலுக்கு உறைவிடமாக விளங்குபவரும், அளவற்ற சக்திகளை உடையவருமான முழுமெய்ப்பொருளே உமக்கு எங்கள் வந்தனங்கள் உரியதாகுக. பௌதீகக் குணங்கள் மற்றும் மாற்றங்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக நீர் இருந்தபோதிலும் ஜட இயற்கையின் பரம நடத்துனராக நீரே இருக்கின்றீர்.

பதம் 41

காலாய கால-நாபாய காலாவயவ-ஸாக்ஷிணே
விஸ்வாய தத்-உபத்ரஷ்ட்ரே தத்-கர்த்ரே விஸ்வ-ஹேதவே

மொழிபெயர்ப்பு

காலனாகவும், காலத்தின் அடைக்கலமாகவும், காலத்தின் அனைத்துப் படிநிலைகளுக்கும் சாட்சியாகவும் இருப்பவரான உமக்கு வந்தனங்கள். நீரே பிரபஞ்சமாகவும், அதிலிருந்து தனித்து அதனைக் காண்பவராகவும் இருக்கின்றீர். நீரே அதனைப் படைப்பவராகவும், அதன் காரணங்கள் அனைத்தின் முழுமையாகவும் இருக்கின்றீர்.

பதம் 42 – 43

பூத-மாத்ரேந்த்ரிய-ப்ராண-மனோ-புத்தி-ஆஸயாத்மனே
த்ரி-ருணேனாபிமானேன கூட-ஸ்வாத்மானுபூதயே
நமோ (அ)னந்தாய ஸுக்ஷ்மாய கூட-ஸ்தாய விபஸ்சிதே
நானா-வாதானுரோதாய வாச்ய-வாசக-ஸக்தயே

மொழிபெயர்ப்பு

பரு உலகப் பூதங்களின் இறுதி ஆத்மாவாகவும், உணர்வின் சூக்கும அடிப்படையாகவும், புலன்களாகவும், உயிர்க் காற்றாகவும், மனம், புத்தி மற்றும் உணர்வாகவும் இருக்கும் உமக்கு உமது வந்தனங்கள் உரியதாகுக. உமது ஏற்பாட்டினால், மிகவும் நுண்ணியதான ஜீவாத்மாக்கள், ஜட இயற்கையின் முக்குணங்களுடன் தம்மைத் தவறாக அடையாளங்கண்டு, அதனால் அவர்களது சுயத்தைப் பற்றிய உண்மை உணர்வு மறைக்கப்பட்டிருக்கின்றனர். எல்லையற்ற பரமபுருஷ பகவானாகவும், பரம சூக்குமமாகவும், மாறாத உன்னதத்தில் எப்போதும் நிலைபெற்றிருப்பவராகவும், எதிர்மறைக் கருத்துடைய பல்வேறு சித்தாந்தங்களுக்கு அனுமதியளிப்பவராகவும், பல்வேறு கருத்துக்கள் மற்றும் அவற்றை வெளிப்படும் வார்த்தைகளைத் தாங்கும் சக்தியாகவும் இருக்கும் முழுமுதற் கடவுளாகிய உமக்கு எமது வந்தனங்களை சமர்ப்பிக்கின்றோம்.

பதம் 44

நம: ப்ரமாண-மூலாய கவயே ஸாஸ்த்ர-யோனயே
ப்ரவ்ருத்தாய நிவ்ருத்தாய நிகமாய நமோ நம:

மொழிபெயர்ப்பு

அதிகாரப்பூர்வமானச் சான்றுகள் அனைத்தின் அடிப்படையாகவும், வெளிப்படுத்தப்பட்ட வேதங்களின் கர்த்தாவாகவும் இறுதி ஆதாரணமாகவும் இருப்பவரும், புலனுகர்ச்சியைத் தூண்டுவதாகவும், உலகின் மேல் பற்றின்மையினை உண்டு பண்ணுவதுமாகிய இவ்வேத இலக்கியங்களில் உம்மை வெளிப்படுத்து பவராகவும் இருக்கும் உமக்கு எமது வந்தனங்களை மீண்டும் மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 45

நம: க்ருஷ்ணாய ராமாய வஸுதேவ-ஸுதாய ச
ப்ரத்யும்நாயானிருத்தாய ஸாத்வதாம் பதயே நம:

மொழிபெயர்ப்பு

நாங்கள், எமது வந்தனங்களை பகவான் கிருஷ்ணருக்கும், பகவான் இராமச்சந்திர மூர்த்திக்கும், வசுதேவரின் மைந்தர்களுக்கும், பகவான் பிரத்யும்நருக்கும், பகவான் அநிருத்தருக்கும் சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் எமது மரியாதைக்குரிய வந்தனங்களை பகவான் விஷ்ணுவின் தெய்வீக பக்தர்கள் அனைவரின் நாயகராக இருப்பவருக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 46

நமோ குண-ப்ரதீபாய குணாத்மச்-சாதனாய ச
குண-வ்ருத்தி-உபவக்ஷ்யாய குண-த்ரஷ்ட்ரே ஸ்வ-ஸம்விதே

மொழிபெயர்ப்பு

பல்வேறு வகையான பௌதீக மற்றும் ஆன்மீக குணங்களை வெளிப்படுத்தும், ஓ, பகவானே, உமக்கு எமது வந்தனங்கள். நீர் உம்மைப் பௌதீகக் குணங்களினுள் மறைத்துக் கொள்கின்றீர், இருந்தும் அதே குணங்களின் செயல்பாடானது இறுதியில் உமது இருப்பினை அறிவிக்கின்றது. அத்தகு குணங்களுக்கு அப்பால் ஒரு சாட்சியாக நீர் நிற்கின்றீர். மேலும் நீர் உமது பக்தர்களால் மட்டுமே முற்றிலும் அறியக்கூடியவராக இருக்கின்றீர்.

பதம் 47

அவ்யாக்ருத-விஹாராய ஸர்வ-வ்யாக்ருத-ஸித்தயே
ஹ்ருஷீகேஸ நமஸ்தே (அ)ஸ்து முனயே மௌன-ஸீவினே

மொழிபெயர்ப்பு

ஓ, புலன்களின் நாயகரான பகவான் ரிஷிகேஸரே, கற்பனைக்கெட்டாத பெருமைளையுடைய லீலைகள் செய்யும் நீர், எமது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்க விடுவீராக. உமது இருப்பானது பௌதீகப் பொருட்கள் அனைத்தையும் படைத்து, வெளிப்படுத்துவதற்கு ஒருவர் தேவை என்பதிலிருந்து உணரப்படுகிறது. உமது பக்தர்கள் உம்மை இவ்வழியே அறிந்து கொண்ட போதிலும் பக்தி அற்றோரிடம் நீர் மௌனமாகவும், சுயதிருப்தியில் ஆழ்ந்தவராகவும் இருக்கின்றீர்.

பதம் 48

பராவர-கதி-ஜ்ஞாய ஸர்வாத்யக்ஷாய தே நம:
அவிஸ்வாய ச விஸ்வாய தத்-த்ரஷ்ட்தே (அ)ஸ்ய ச ஹேதவே

மொழிபெயர்ப்பு

உயர்ந்த தாழ்ந்த பொருட்கள் அனைத்தின் இலக்குகளையும் நன்கறிபவரும், எல்லாவற்றையும் நெறிப்படுத்துபவருமான உமக்கு எமது வந்தனங்கள் உரித்தாகுக. பிரபஞ்சப் படைப்பிலிருந்து நீர் வேறானவர் ஆவீர், இருந்தும் நீரே, பௌதீகப் படைப்பின் மாயை எதில் வளர்ச்சி பெறுகிறதோ அதன் அடிப்படையாகவும், அம்மாயையினைப் பார்ப்பவராகவும் இருக்கின்றீர். உண்மையில் இவ்வுலகின் மூல காரணர் நீரே ஆவீர்.

பதம் 49

த்வம் ஹி அஸ்ய ஜன்ம-ஸ்திதி-ஸம்யமான் விபோ
குணைர் அனீஹோ (அ)க்ருத-கால-ஸக்தி-த்ருக்
தத்-தத்-ஸ்வபாவான் ப்ரதிபோதயன் ஸத:
ஸமீக்ஷயாமோக-விஹார ஈஹஸே

மொழிபெயர்ப்பு

ஓ, எல்லாம் வல்ல பகவானே, பௌதீகச் செயலில் நீர் ஈடுபடுவதற்கு எந்தவிதமானக் காரணமும் இல்லை என்றபோதிலும், இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்தற்காக நீர் உமது நித்திய கால சக்தியின் மூலம் செயல்படுகின்றீர். இதனை நீர், படைப்பிற்கு முன்பு துயில் கொண்டிருந்த இயற்கைக் குணங்களின் வேறுபாடுடையச் செயல்களை விழித்தெழச் செய்வதின் மூலம் செய்கின்றீர். உமது பார்வையினால் நீர் மிகவும் சரியாக இப்பிரபஞ்சத்தின் அனைத்துச் செயல்களையும் விளையாட்டாக நிறைவேற்றுகின்றீர்.

பதம் 50

தஸ்யைவ தே (அ)மூஸ் தனவஸ் த்ரி-லோக்யாம்
ஸாந்தா அஸாந்தா மூட-யோனய:
ஸாந்தா: ப்ரியாஸ் தே ஹி அ துனாவிதும் ஸதாம்
ஸ்தாதுஸ் ச தே சர்ம-பரீப்ஸயே ஹத:

மொழிபெயர்ப்பு

ஆகையினால் இம்மூவுலகங்களிலும் உள்ள பௌதீக உடல்கள் அனைத்தும் சத்துவ குணத்தில் சாந்தமாக இருப்பவை, ரஜோ குணத்தில் கிளர்ச்சியுடனிருப்பவை, தமோ குணத்தில் அறிவின்றிருப்பவை உமது படைப்புக்களேயாகும். இருந்த போதிலும், சத்துவ குணத்தில் சாந்தமுடைய உடல்களைப் பெற்றிருக்கும் ஆத்மாக்கள், குறிப்பாக உமக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவர். அவர்களைக் காப்பதற்கும் அவர்களது சமயதர்மங்களைக் காப்பதற்குமாகவே நீர் இப்போது இப்பூமியில் அவதிரித்திருக்கின்றீர்.

பதம் 51

அபராத: ஸக்ருத் பர்த்ரா ஸோடவ்ய: ஸ்வ-ப்ரஜ க்ருத:
க்ஷந்தும் அர்ஹஸி ஸந்தாத்மன் மூடஸ்ய இவாம் அஜானத:

மொழிபெயர்ப்பு

குறைந்தபட்சம் ஒரு தடவை, ஓர் ஆசிரியன் தனது குழந்தை அல்லாத மாணவனின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும். ஆதலினால் ஓ, பரம சாந்த ஆத்மாவே, நீர் யார் என்பதை அறிந்து கொள்ளாத எமது மூடக் கணவனை நீர் மன்னித்தருள வேண்டும்.

பதம் 52

அனுக்ருஹ்ணீஷ்வ பகவான் ப்ராணாம்ஸ் த்யஜதி பன்னக:
ஸ்த்ரீணாம் ந: ஸாது ஸோச்யானாம் பதி: ப்ராண: ப்ரதீயதாம்.

மொழிபெயர்ப்பு

ஓ, பரமபுருஷ பகவானே, அருள் புரிவீராக, எம்மைப் போன்ற பெண்களிடம் இரக்கம் காட்டுவது மகான்களுக்கே உரியதாகும். நாகமான இக்காளிங்கன் தனது உயிரை இழப்பதற்கு இருந்தான். எமது உயிர் மற்றும் ஆத்மாவாக விளங்கும் எமது கணவனை எம்மிடம் திருப்பி அளிப்பீராக.

பதம் 53

விதேஹி தே கிங்கரீணாம் அனுஷ்டேயம் தவாஜ்ஞயா
யச் ச்ரத்தயானுதிஷ்டன் வை முச்யதே ஸர்வதோ பயாத்

மொழிபெயர்ப்பு

உமது பணிப்பெண்களாகிய நாங்கள் என்ன செய்தல் வேண்டும் என்பதை எமக்கு உரைப்பீராக. உமது ஆணையை எவன் நம்பிக்கையுடன் நிநைவேற்றுகின்றானோ, அவன் தனது அனைத்து அச்சங்களிலிருந்தும் தானே விடுதலை பெறுகின்றான்.

+1
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question