Wednesday, May 22

Prayers by Queen Kunti (Tamil) / குந்தி மகாராணியின் பிரார்த்தனை

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 1 / அத்தியாயம் 8 / பதம் 18- 43

பதம் 18

குந்தி உவாச
நமஸ்யே புருஷம் த்வாத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே: பரம்
அலக்ஷ்யம் ஸர்வ-பூதானாம் அந்தர் பஹிர் அவஸ்திதம்

மொழிபெயர்ப்பு

ஸ்ரீமதி குந்தி கூறினாள்: கிருஷ்ணா, தாங்கள் ஆதி புருஷரும், ஜட இயற்கைக் குணங்களால் பாதிக்கப்படாதவருமாவீர். எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். அனைத்திற்கும் உள்ளேயும், வெளியேயும் தாங்கள் இருப்பினும், யாருக்கும் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள்.

பதம் 19

மாயா-ஜவனிகாச்சன்னம் அக்ஞாதோக்ஷஜம் அவ்யயம்
ந லக்ஷ்யஸே மூட-த்ருசா நடோ நாட்யதரோ யதா

மொழிபெயர்ப்பு

நீங்கள் குறையுடைய புலன் உணர்வின் எல்லைக்கு அப்பாற்பட்டவராவீர். நீங்கள் மாயச் சக்தியின் திரையால் மூடப்பட்டுள்ள குறையற்றவராகவே என்றும் இருக்கிறீர்கள். நடிகரைப் போல் உடை அணிந்திருப்பவரை அடையாளம் காண முடியாததைப் போலவே, முட்டாள்களின் கண்களுக்கு நீங்கள் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள்.

பதம் 20

ததா பரமஹம்ஸானாம் முனீனாம் அமலாத்மனாம்
பக்தி-யோக-விதானார்தம் கதம் பஸ்யேம ஹி ஸ்த்ரிய:

மொழிபெயர்ப்பு

ஜடத்தையும், ஆன்மீகத்தையும் பகுத்தறிந்ததால் தூய்மை பெற்று முன்னேறியுள்ள ஆன்மீகிகள் மற்றும் மனக் கற்பனையாளர்கள் ஆகியோரின் இதயங்களில், பக்தித் தொண்டைப் பற்றிய தெய்வீக விஞ்ஞானத்தை விருத்தி செய்வதற்காக தாங்களே வந்து அவதரிக்கிறீர்கள். அப்படியிருக்கும்பொழுது, பெண்களான எங்களால் எப்படி உங்களைப் பூரணமாக அறியமுடியும்?

பதம் 21

க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவ கீ-நந்தனாய ச
நந்த-கோப-குமாராய கோவிந்தாய நமோ நம:

மொழிபெயர்ப்பு

எனவே, வசுதேவரின் புதல்வரும், தேவகியின் இன்பமும், நந்தருக்கும், விருந்தாவனத்தின் மற்ற இடையர்களுக்கும், மேலும் பசுக்களுக்கும், புலன்களுக்கும் உற்சாகம் அளிப்பவருமான பகவான் ஸ்ரீ கிருஷணருக்கு எனது மரியாதையான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 22

நம: பங்கஜ-நாபாய நம: பங்கஜ-மாலினே
நம: பங்கஜ-நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, தாமரையைப் போன்ற நாபியையும், எப்பொழுதும் தாமரைப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பவரும், தாமரையைப் போல் குளிர்ந்த பார்வையை உடையவரும், தாமரைகள் பொறிக்கப்பட்ட பாதங்களை உடையவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

பதம் 23

யதா ஹ்ருஷீகேச கலேன தேவகீ
கம்ஸேன ருத்தாதிசிரம் சுசார்பிதா|
விமோசிதாஹம் ச ஸஹாத்மஜா விபோ
த்வயைவ நாதேன முஹுர் விபத்-கணாத்

மொழிபெயர்ப்பு

இறைவற்கிறைவனும், புலன்களுக்கு அதிபதியுமான ஹ்ரிஷீகேசனே, பொறாமை கொண்ட கம்ச மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு, துன்பத்திற்கு ஆளாகியிருந்த உங்களுடைய தாயான தேவகியையும், என்னையும், என் மகன்களையும் கூட தொடர்ச்சியான பல அபாயங்களில் இருந்து தாங்கள் விடுவித்தீர்கள்.

பதம் 24

விஷான் மஹாக்னே: புருஷாத தர்சனாத்
அஸத்-ஸபாயா வன வாஸ-க்ருச்ரத:
ம்ருதே ம்ருதே ’நேக மஹாரதாஸ்த்ரதோ
த்ரௌணி-அஸ்த்ரதஸ் சாஸ்ம ஹரே’பிரக்ஷிதா:

மொழிபெயர்ப்பு

எனதருமை கிருஷ்ணா, பகவானாகிய தாங்கள் விஷப் பலகாரத்திலிருந்தும், பெருந் தீயிலிருந்தும், நரபட்சணிகளிடமிருந்தும், துஷ்டர்களின் சபையிலிருந்தும், எங்களுடைய வனவாசத்தின்போது ஏற்பட்ட துன்பங்களில் இருந்தும் மற்றும் பெரும் தளபதிகள் போர் செய்த யுத்தக்களத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுது அஸ்வத்தாமனின் ஆயுதத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்.

பதம் 25

விபத: ஸந்து தா: சஸ்வத் தத்ர தத்ர ஜகத்-குரோ
பவதோ தர்சனம் யத் ஸ்யாத் அபுனர் பவ-தர்சனம்

மொழிபெயர்ப்பு

அந்த விபத்துக்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப நிகழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனால் உங்களையும் திரும்பத்திரும்ப எங்களால் காண முடியும். ஏனெனில், உங்களைக் காண்பதென்றால் பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சியை இனி நாங்கள் காணமாட்டோம் என்பதாகும்.

பதம் 26

ஜன்மைஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபிர் ஏதமான-மத: புமான்
நைவார்ஹதி அபிதாதும் வை த்வாம் அகிஞ்சன-கோசரம்

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் முற்றிலும் விரக்தி அடைந்தவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி மற்றும் உடலழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலும், ஒருவரால் உண்மையான உணர்வுடன் உங்களை அணுக முடியாது.

பதம் 27

நமோ ’கிஞ்சன-வித்தாய நிவ்ருத்த-குண-வ்ருத்தயே
ஆத்மாராமாய சாந்தாய கைவல்ய-பதயே நம:

மொழிபெயர்ப்பு

பௌதிக ஏழ்மையில் உள்ளவர்களின் செல்வமாகிய தங்களுக்கு எனது வணக்கங்கள். ஜட இயற்கைக் குணங்களின் செயல், விளைவுகளுடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் சுயதிருப்தியுடையவர் என்பதால், சாந்த சொரூபியாகவும், அத்வைதிகளின் தலைவராகவும் இருக்கிறீர்கள்.

பதம் 28

மன்யே த்வாம் காலம் ஈசானம் அனாதி-நிதனம் விபும்
ஸமம் சரந்தம் ஸர்வத்ர பூதானாம் யன் மித: கலி:

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, தங்களை நான் நித்திய காலமாகவும், பரம ஆளுநராகவும், துவக்கமோ முடிவோ, இல்லாதவராகவும், எங்கும் பரவியிருப்பவராகவும் கருதுகிறேன். உங்களுடைய கருணையை விநியோகிப்பதில் நீங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்கிறீர்கள். ஜீவராசிகளுக்கு இடையிலுள்ள சண்டை சச்சரவுகளுக்கு சமூக தொடர்புகளே காரணம்.

பதம் 29

ந வேத கஸ்சித் பகவம்ஸ் சிகீர்ஷிதம்
தவேஹமானஸ்ய ந்ருணாம் விடம்பனம்
ந யஸ்ய கஸ்சித் தயிதோ ’ஸ்தி கர்ஹிசித்
த்வேஷ்யஸ் ச யஸ்மின் விஷமா மதிர் ந்ருணாம்

மொழிபெயர்ப்பு

பகவானே, மனித செயலைப் போல் காணப்படும் உங்களுடைய திவ்யமான லீலைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே அவை வழிதவறிச் செய்கின்றன. உங்களால் ஆதரிக்கப்படும் பொருளோ, அல்லது வெறுக்கப்படும் பொருளோ எதுவுமில்லை என்றாலும், வெறும் கற்பனையால், நீங்கள் பாராபட்சம் கொண்டவரென மக்கள் நினைக்கின்றனர்.

பதம் 30

ஜன்ம கர்ம ச விஸ்வாத்மன் அஜஸ்யாகர் துர் ஆத்மன:
திர்யன்-ந்ரூஷிஷு யாதஹ்ஸு தத் அத்யந்த-விடம்பனம்

மொழிபெயர்ப்பு

பிரபஞ்சத்தின் ஆத்மாவே, தாங்கள் செயலற்றவர் என்றபோதிலும், செயற்படுகிறீர்கள், தாங்கள் பிறப்பற்றவராகவும், ஜீவசக்தியாகவும் இருப்பினும், பிறப்பை ஏற்கிறீர்கள். நீங்கள் மிருகங்கள், மனிதர்கள், முனிவர்கள் மற்றும் நீரினங்கள் ஆகியோருக்கிடையில் அவதரிக்கிறீர்கள். உண்மையில் இது திகைப்பூட்டுவதாகும்.

பதம் 31

கோபி ஆததே த்வயி க்ருதாகஸி தாம தாவத்
யா தே தசாஸ்ரு-கலிலாஞ்சன-ஸம்ப்ரமாக்ஷம்
வக்த்ரம் நினீய பய-பாவனயா ஸ்திதஸ்ய
ஸா மாம் விமோஹயதி பீர் அபி யத் பிபேதி

மொழிபெயர்ப்பு

எனதன்புள்ள கிருஷ்ணா, நீங்கள் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டபொழுது, உங்களை கட்டிப்போடுவதற்காக யசோதை கயிற்றைக் கையிலெடுத்தாள். இதனால் அமைதியிழந்த உங்களுடைய கண்களிலிருந்து பெருகி வழிந்த கண்ணீர், கண்ணிமையில் பூசப்பட்டிருந்த மையை அழித்தது. மேலும் பய சொரூபியே உங்களைக் கண்டு அஞ்சியபோதிலும், நீங்கள் அதனால் அச்சத்திற்கு உள்ளானீர்கள். இக்காட்சி என்னை குழப்பமடையச் செய்கிறது.

பதம் 32

கேசித் ஆஹுர் அஜம் ஜாதம் புண்ய-ஸ்லோகஸ்ய கீர்தயே
யதோ: ப்ரியஸ்யான்வவாயே மலயஸ்யேவ சந்தனம்

மொழிபெயர்ப்பு

பிறப்பற்றவர், புண்ணியர்களான அரசர்களை மேன்மைப்படுத்துவதற்காக பிறக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். மற்றும் சிலர் உங்களுடைய பிரியமான பக்தர்களில் ஒருவரான யது மகாராஜனை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் பிறக்கிறார் என்று கூறுகின்றனர். மலய மலைகளில் சந்தனம் தோன்றுவதைப் போலவே, அவரது குடும்பத்தில் நீங்கள் தோன்றுகிறீர்கள்.

பதம் 33

அபரே வஸுதேவஸ்ய தேவக்யாம் யாசிதோ ’ப்யகாத்
அஜஸ் த்வம் அஸ்ய க்ஷேமாய வதாய ச ஸுர-த்விஷாம்

மொழிபெயர்ப்பு

வசுதேவர் மற்றும் தேவகி ஆகிய இருவரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்ததால், அவர்களுடைய மகனாக நீங்கள் பிறந்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். சந்தேகமின்றி தாங்கள் பிறப்பற்றவர்தான். எனினும் அவர்களுடைய நன்மைக்காவும், தேவர்களிடம் பொறாமை கொண்டுள்ளவர்களை அழிப்பதற்காகவும் நீங்கள் பிறக்கிறீர்கள்.

பதம் 34

பாராவதாரணாயான்யே புவோ நாவ இவோததௌ
ஸீதந்த்யா பூரி-பாரேண ஜாதோ ஹி ஆத்ம-புவார்தித:

மொழிபெயர்ப்பு

கடலிலுள்ள படகைப் போல் அதிக சுமை ஏற்றப்பட்ட உலகம் மிகவும் பாதிப்படைந்தது என்றும், உங்களது மகனான பிரம்மா உங்களிடம் வேண்டியதால், தொல்லைகளைக் குறைப்பதற்காக நீங்கள் தோன்றினீர்கள் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.

பதம் 35

பவே ’ஸ்மின் க்லிஸ்யமானானாம் அவித்யா-காம-கர்மபி:
ஸ்ரவண-ஸ்மரணார்ஹாணி கரிஷ்யன் இதி கேசன

மொழிபெயர்ப்பு

பௌதிக துன்பங்களினால் துன்புறும் பந்தப்பட்ட ஆத்மாக்கள் கேட்டல், நினைவிற்கொள்ளுதல் மற்றும் வழிபடுதல் முதலான பக்தித் தொண்டு முறைகளைப் பின்பற்றி முக்தியடைய வேண்டும் என்பதற்காக, அம்முறைகளைப் புதுப்பிப்பதற்காகவே நீங்கள் தோன்றினீர்கள் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

பதம் 36

ஸ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி அபிக்ஷ்ணச:
ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:
த ஏவ பஸ்யந்தி அசிரேண தாவகம்
பவ-ப்ரவாஹோபரமம் பதாம்புஜம்

மொழிபெயர்ப்பு

கிருஷ்ணா, உங்களுடைய தெய்வீக செயல்களைப் பற்றி எப்பொழுதும் கேட்டு, பாடி அதைத் திரும்பவும் சொல்பவர்களால் அல்லது மற்றவர்கள் அவ்வாறு செய்வதில் ஆனந்தம் அடைபவர்களால் நிச்சயமாக உங்களுடைய தாமரைப் பாதங்களைக் காண முடியும். அப்பாதங்கள் மட்டுமே தொடர்ந்த பிறவிச் சக்கரத்தை நிறுத்தக்கூடியவையாகும்.

பதம் 37

அபி அத்ய நஸ் த்வம் ஸ்வ-க்ருதேஹித ப்ரபோ
ஜிஹாஸஸி ஸ்வித ஸுஹ்ருதோ நுஜீவின:
யேஷாம் ந சான்யத் பவத: பதாம்புஜாத்
பராயணம் ராஜஸு யோஜிதாம்ஹஸாம்

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, இதுவரை எல்லா கடமைகளையும் நீங்களாகவே நிறைவேற்றினீர்கள். இப்பொழுது எல்லா அரசர்களும் எங்களிடம் விரோதம் கொண்டுள்ளனர். எங்களைப் பாதுகாக்கக்கூடியவர் வேறொருவரும் இல்லாத இச்சமயத்தில், உங்களுடைய கருணையையே நாங்கள் முற்றிலும் நம்பியிருக்கிறோம் என்றபோதிலும், இன்று எங்களைப் புறக்கணித்து விட்டு நீங்கள் சென்றுவிடப் போகிறீர்களா?

பதம் 38

கே வயம் நாம-ரூபாப்யாம் யதுபி: ஸஹ பாண்டவா:
பவதோ ’தர்சனம் யர்ஹி ஹ்ருஷீகாணாம் இவேசிது:

மொழிபெயர்ப்பு

ஓருடலிலிருந்து உயிர் மறைந்துவிடும்பொழுது, அக்குறிப்பிட்ட உடலின் பெயரும், புகழும் முடிந்து விடுகின்றன. அதைப் போலவே, எங்களுடனேயே நீங்கள் இருக்காவிட்டால், பாண்டவர்களுடையதும், யாதவர்களுடையதும் மற்றும் எங்களுடையதுமான எல்லா புகழும், செயல்களும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

பதம் 39

நேயம் சோபிஷ்யதே தத்ர யதேதானீம் கதாதர
த்வத்-பதைர் அங்கிதா பாதி ஸ்வ-க்ஷண-விலக்ஷிதை:

மொழிபெயர்ப்பு

ஓ கதாதர (கிருஷ்ணா), எங்களது இராஜ்ஜியம் இப்பொழுது உங்களுடைய பாத சுவடுகளின் அடையாளங்களால் பொறிக்கப்படுவதால் அது அழகாக காட்சியளிக்கிறது. ஆனால் நீங்கள் பிரிந்து சென்றபின் இந்நிலை நீடிக்காது.

பதம் 40

இமே ஜன-பதா: ஸ்வ்ருத்தா: ஸுபக்வௌஷதி-வீருத:
வனாத்ரி-நதி-உதன்வன்தோ ஹி ஏதந்தே தவ விக்ஷிதை:

மொழிபெயர்ப்பு

மூலிகைகளும், தானியங்களும் ஏராளமாக விளைகின்றன. மரங்களில் கனிகள் நிறைந்தும், நதிகள் ஓடியவாறும், குன்றுகளில் தாதுப்பொருட்கள் நிறைந்தும், சமுத்திரங்களில் செல்வம் நிறைந்தும் காணப்படுகின்றன. இதனால் இவ்வெல்லா நகரங்களும், கிராமங்களும், எல்லா விதத்திலும் செழிப்புடன் விளங்குகின்றன. அவற்றின் மீதுள்ள உங்களுடைய அருட்பார்வையே இவையனைத்திற்கும் காரணமாகும்.

பதம் 41

அத விஸ்வேச விஸ்வாத்மன் விஸ்வ-மூர்தே ஸ்வகேஷு மே
ஸ்னேஹ-பாசம் இமம் சிந்தி த்ருடம் பாண்டுஷு வ்ருஷ்ணிஷு

மொழிபெயர்ப்பு

ஆகவே, அகில லோகநாயகனே, அகிலத்தின் ஆத்மாவே, விஸ்வரூப மூர்த்தியே, எனது உறவினர்களான பாண்டவர்களிடமும், விருஷ்ணிகளிடமும் எனக்குள்ள பாசப் பிணைப்பை தயவுசெய்து துண்டித்து விடுங்கள்.

பதம் 42

த்வயி மே ’நன்ய-விஷயா மதிர் மது-பதே ’ஸக்ருத்
ரதிம் உத்வஹதாத் அத்தா கங்கேவௌகம் உதன்வதி

மொழிபெயர்ப்பு

மதுவின் இறைவனே, கங்கை தடையில்லாமல் எப்பொழுதும் கடலை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதைப் போலவே, என்னுடைய கவனம் வேறு யாரிடமும் திங்மைாறிச் சென்றுவிடாமல், எப்பொழுதும் உங்களால் கவரப்பட்டதாகவே இருக்க அருள்புரியுங்கள்.

பதம் 43

ஸ்ரீ-க்ருஷ்ண க்ருஷ்ண-ஸக வ்ருஷ்ணி-ருஷபாவனி-த்ருக்
ராஜன்ய-வம்ச-தஹனானபவர்க-வீர்ய
கோவிந்த கோ-த்விஜ-ஸுரார்தி-ஹராவதார
யோகேஸ்வராகில-குரோ பகவன் நமஸ்தே

மொழிபெயர்ப்பு

அர்ஜுனனின் நண்பரே, கிருஷ்ணா, விருஷ்ணி வம்சத்தினரில் முதன்மையானவரே, இந்த பூமியின் மீது விளையும் தொல்லைகளுக்கு மூல காரணமாகவுள்ள அந்த அரசியல் கட்சிகளை அழிப்பவர் தாங்களே. உங்களுடைய வீரியம் ஒருபோதும் குறைவதில்லை. நீங்கள் ஆன்மீக உலகின் உரிமையாளராவீர். மேலும் பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பக்தர்களின் துன்பங்களைப் போக்குவதற்காகவே நீங்கள் அவதரிக்கிறீர்கள். எல்லா யோக சக்திகளையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். முழு பிரபஞ்சத்தின் குருவும் நீங்களே. நீங்கள்தான் சர்வவல்லமையுடைய பகவானாவீர். எனது பணிவான வணக்கங்களை உங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.

+2
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question