பவித்ரோபன ஏகாதசியின் விரத மகிமையைப் பற்றிப் பார்ப்போமா:-
இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார்.மஹாராஜாவான ஸ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் “அரக்கன் மதுவை அழித்ததால் “மதுசூதனன்” என்ற திருநாமம் பெற்றவரே சிரவண மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஆகையால் கிருஷ்ண பரமாத்வாவே தயை கூர்ந்து இந்த ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை விரிவாக சொல்லுங்கள்” என்று வேண்டிக் கொண்டார்.முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரிடம், “மஹாராஜனே, இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்! என்று கிருஷ்ண பரமாத்மா விரத மகிமையை எடுத்துரைத்தார்.பரமாத்மா கிருஷ்ணர் கூறுதல்:-இந்த ஏகாதசியானது மிகவும் புனிதமானது. இந்த ஏகாதசி திதியின் மகிமையைக் கேட்பவர் “அஸ்வமேதயாகம்” செய்த பலனை அடைவர்.துவாபர யுகத்தின் தொடக்கத்தில், “மஹிஷ்மதி புரி” என்னும் ராஜ்யத்தை “மஹிஜித்” என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான்.அனைத்து வளங்களும், சுகங்களும் அந்த நாட்டில் இருந்தாலும், அரசன் உற்சாகமின்றி, ஊக்கமில்லாமல் கடமையே என்று ஆட்சி செய்து வந்தான். ஏனென்றால் அரசனுக்குப் பின் ஆட்சி செய்ய ஆண் வாரிசான புத்திரன் இல்லை என்ற சோகம் அவனை வாட்டி வதைத்தது.திருமணத்திற்கு பின் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் “புத்திரன்” மட்டும் இல்லையெனில் இந்த உலக வாழ்க்கை மட்டுமின்றி, எவ்வுலக வாழ்க்கையிலும் ஆனந்தம் கிட்டாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.புத்திரன் என்ற சொல்லுக்கு ‘நரகத்திலிருந்து காத்து விடுதலை அளிப்பவர்” என்று அர்த்தம்.ஆகையால் இல்லறத்தார் தங்கள் வாழ்க்கை பரிபூரணமாக “புத்திரன்” பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.நல்மகனை ஈன்றெடுத்து, நல்ல பயிற்சியும் அளித்து ஒரு தலை சிறந்த நல்ல புத்திரனாக அவனை உருவாக்குவது தந்தையின் கடமையாகவே இருக்கிறது. அக்கடமையை சரிவர நிறைவோற்றுவோர் புத்ரனால் “பூ” என்ற நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைவார்கள்.இந்த நியதியானது “சரணாகதி” என்று சரணடைந்த பக்தர்களையோ அல்லது நானே (ஸ்ரீ கிருஷ்ணர்) அனைத்துமாக இருப்பவன் என்று சரணாகதி அடைந்த பக்தர்களை கட்டுப்படுத்தாது. ஏனெனில் கிருஷ்ண பரமாத்வான நானே அவர்களுக்கு மகனாகவும், பெற்றோராகவும் அமைகிறேன்.மேலும், சாணக்கியர் கூறுகிறார்,உண்மை, சத்யம், என் அன்னை, ஞானம், அறிவு, என் தந்தை, என் தொழில், என் சகோதரன், கருணை என் நண்பன், அமைதி என் மனைவி, மன்னித்தல் என் புத்திரன்.ஆக சத்யம், ஞானம், தர்மம் (தொழில்), கருணை, அமைதி, மன்னிப்பு ஆகிய இவை ஆறும் எனது குடும்பத்தினர் என்று கூறுகிறார்.ஸ்லோகம்:-
“சத்யம் மாதா, பிதா ஞானம்தர்மோ ப்ராதா தயா சகாதர்மோ ப்ராதா தயா சகாசாந்தி பத்னி க்ஷமா புத்ராசடேதே மம வந்தாவா!!!”என்று ஸ்லோகத்தில் கூறியிருக்கிறார் சாணக்கியர்.
இறைவனின் பக்தர்களிடம் உள்ள “இருபத்தி ஆறு” முக்கிய குணங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுவது “மன்னித்தல்” என்னும் நற்பண்பு. எனவே, பக்தர்கள் இந்த நற்பண்பை கூடுதல் முயற்சி மேற்கொண்டு தங்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மன்னித்தல் என்னும் நண்பன்:-இந்த ஸ்லோகத்தில் சாணக்கியர் கூறுவது, “க்ஷமா” அதாவது “மன்னித்தல்” தனது புத்ரன் என்று கூறுகிறார். அதற்கு பக்தர்கள் இறைவனை அடைய வேண்டி துறவு பாதையில் இருந்தாலும், புனிதமான ஏகாதசி விரத்தை மேற்கொண்டு “மன்னித்தல் என்னும் நண்பனான புத்திரனை” அடைய வேண்டி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.மஹிஜித்தனுக்கு வாரிசு:-அரசன் மஹிஜித்தனும் தனக்கு வாரிசு அமைய வேண்டி நெடுங்காலம் கடினமான பூஜை, ஆராதனை, பிரார்த்தனை எல்லாம் செய்து வந்தான். நாட்கள் செல்ல, செல்ல, ஆண்டுகள் பல கழிந்து சென்றன. எதுவும் பலனளிக்கவில்லை. அரசனின் கவலை பல மடங்கு அதிகரித்தது.ஒருநாள் தனது அமைச்சரவையைக் கூட்டி, “ஞானத்தில் சிறந்த சான்றோர்களே!! இப்பிறவியில் நான் ஒரு தவறும் செய்யவில்லை. சட்டத்திற்குப் புறம்பாக கேடு விளைவித்து சேகரித்த சொத்துக்களும் எனது கருவூலத்தில் இல்லை.தெய்வம், தேவர்கள் அல்லது பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தானத்தை அபகரித்ததும் இல்லை.அரசனின் கடமையாக ராஜ்ஜியங்களை வெல்வதற்காக போர் புரிந்த போதும், இராணுவ விதிமுறைகளை மீறாமல் கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு போர் புரிந்துள்ளேன்.
எனது நாட்டின் குடிமக்களை எனது குழந்தைகளாகத் தான் நினைத்து அவர்களை இன்று வரை நான் பாதுகாத்து வந்துள்ளேன். எனது சொந்தங்கள் உற்றார், உறவினர் சட்டத்தை மீறி இருந்தால், விசாரித்து அதற்குரிய தண்டனையை பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக அளித்துள்ளேன்.என் எதிரி மென்மையானவராகவும், பக்திமானாகவும் இருந்தால் அவரை வரவேற்று உபசரித்துள்ளேன். ஒரு நேர்மையான அரசனுக்கு உரிய அனைத்து தர்மங்களையும் தவறாது கடைப்பிடித்து அரசாளும் எனக்கு “ஏன் ஆண் வாரிசு இதுவரை பிறக்கவில்லை?” என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன்.ஆகையால், பூமியில் இருமுறை பிறவி எடுக்கும் “புனித ஆத்மாக்களே!” கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கையும் கொண்டு, வேதங்கள் காட்டும் வழியில் வாழும் எனக்கு ஆண்வாரிசு இல்லாமல் இருப்பதற்கான காரணத்தைத் தயை கூர்ந்து தெரிவியுங்கள்” என்றான் மன்னன்.இதைக்கேட்ட அரசனின் அமைச்சர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். அவர்களுக்கும் இதற்கான சரியான விடை கிடைக்காததால், தவத்தில் சிறந்த மஹரிஷிகளின் ஆசிரமத்தை அணுகி அவர்களிடம் அரசனின் கேள்விக்கான விடையைத் தேடினர்.அவர்களின் முயற்சியின் நிறைவில் உத்தமமான, தூய, தெய்வீக, தம்மிடம் உள்ளத்தில் மன நிறைவு கொண்ட, கடும் உபவாச விரதத்தை மேற்கொண்டு இருக்கும் மஹரிஷி ஒருவரின் ஆஸ்ரமத்தை அடைந்தனர்.யார் அந்த மஹரிஷி :-ஐம்புலன்களையும் அடக்கி, சினத்தை வெற்றி கண்டு, தனது தொழில் தர்மத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்று, நான்கு வேதங்களிலும் அபார ஞானமும், நிகரில்லாத தம் தவ வலிமையினால் பெற்ற வரத்தால், பிரம்மாவின் ஆயுளுக்கு நிகராக தம் தவ வலிமையினால் பெற்ற வரத்தால், பிரம்மாவின் ஆயுளுக்கு நிகராக தனது ஆயுளையும் விருத்தி செய்த “மஹாமுனி லோமச ரிஷியின் ஆஸ்ரமம்” ஆகும்.
மஹாமுனி லோமச முனிவர் முக்காலமும் உணர்ந்த த்ரிகால ஞானியாவர். ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், அவரது உடலில் இருந்து ஒரு முடி வெளியே விழும். (ஒரு கல்பம் என்பது பிரம்மாவிற்கு 12 நேரமாகும். அதாவது 4,320,000,000 வருடங்கள்).அத்தகைய தவசிரேஷ்டரைக் கண்ட மகிழ்ச்சியினால் அமைச்சர்கள் அனைவரும் தங்களது வணக்கத்தைத் தெரிவித்தனர். மஹரிஷியின் தரிசனத்தின் சாந்நித்தியத்தில் கட்டுண்ட அமைச்சர்கள், மெதுவாக மீண்டு, மஹரிஷியிடம் மிகவும் பணிவாக – “நாங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாக்கியத்தால், இன்று தங்களது தரிசனம் கிடைக்கப் பெற்றோம்” என்றனர்.மஹரிஷி லோமசர் அமைச்சர்களின் விநயத்தைக் கண்டு, அவர்களிடம்,, “நீங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன? என்னை ஏன் பாராட்டுகிறீர்கள்? என்று வினவினார். “உங்கள் பிரச்சினை தான் என்ன? என்பதை முதலில் கூறுங்கள். கட்டாயம் என்னால் இயன்றவரை அதை தீர்க்க வழி சொல்கிறேன்” என்றார்.எங்களைப் போன்ற மஹரிஷிகள் மற்றவர்களுக்கு உதவுவதே தலையாய கடமையாகும். அதில் சந்தேகம் வேண்டாம்! என்றார்.பகவான் மஹாவிஷ்ணுவின் மீது கொண்ட அபார பக்தியின் விளைவால், லோமச மஹரிஷி அனைத்து நல்ல குணங்களையும் பெற்றிருந்தார். ஸ்ரீமத் பாகவதம் (5:8:12) ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. அதாவது,”யஸ்யஸ்தி பக்திர் பகவதை அகிஞ்சனாசர்வைர் குணைஸ் தத்ர சமஸ்தே சுராஹராவ் அபக்தஸ்ய கூடோ மாஹட்குதாமனோரதேநசதி தவதோ பஹி!”.விளக்கம் :-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது திடமான பக்தி ப்ரேமையில் ஈடுபட்டு இருப்பவர்களிடம், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பரிவார தேவதைகளின் அனைத்து நற்குணங்களும் காணப்படும். அதேசமயம், முழு முதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி ப்ரேமை இல்லாதவர்களிடம் நற்குணங்கள் காணப் பெறாது.ஏனெனில், அவர்களின் மனமானது மாய வெளித்தோற்றமான ஆதாயத்தின் (லோகாயத சுகங்களின்) மீது லயித்துள்ளது என்று அமைச்சர்களுக்கு உபந்யாசம் செய்தார் லோமச மஹரிஷி.அமைச்சர்கள் லோமசரிடம் சிக்கலை கூறுதல்:-லோமச முனிவரின் அமுத மொழியைக் கேட்ட அரசனின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் மஹரிஷியிடம், “தவசிரேஷ்டரே! எங்களை ஆட்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை தெரியாமல், அதை தேடி அலைந்து, கடைசியில் தங்களது ஆசிரமத்தைக் கண்டு தங்களிடம் அதற்கான விடையை வேண்டி வந்தோம்” என்றார்கள்.
இவ்வுலகில் “தங்களைத் தவிர யாராலும் எங்கும் சிக்கலைத் தீர்க்க இயலாது” என்றார்கள்.மன்னனுக்கு ஆண்வாரிசு இல்லாத காரணத்தைப் பற்றி லோமசரிடம் கூறினார்கள் அமைச்சர்கள்.அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்ட மஹரிஷி, சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து, மஹிஜித்தின் (மன்னன்) முந்தைய பிறவியைப் பற்றி அறிந்து கொண்டார்.அரசனின் முற்பிறவி:-உங்கள் அரசன் தன்னுடைய முற்பிறவியில் வணிகனாகப் பிறந்திருந்தார். அப்பிறவியில் செல்வம் எத்தனை இருந்தாலும், போதாது என்ற பற்றாக்குறை மனப்பான்மையால் பாவச்செயல்கள் புரிந்தான்.வர்த்தகத்தில் மேலும் பொருள் ஈட்டுவதற்காக நிறைய கிராமங்களுக்கு பயணம் செய்தார். அப்படி பயணம் புரிகையில், துவாதசி நாளன்று அதாவது ஜேஷ்ட மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசிக்கு மறுநாள் மதிய வேளையில், அங்குமிங்கும் அலைந்ததால் தாகம் ஏற்பட்டு, நீர் சுனையைத் தேடி, கடைசியில் கிராமத்தின் எல்லையில் ஒரு அழகிய குளத்தைக் கண்டார்.ஓடிச் சென்று நீர் அருந்தும் வேளையில், ஒரு பசுவானது புதிதாக ஈன்ற கன்றுக்குட்டியுடன் அங்கு வந்தது. அவ்விரண்டு ஜீவன்களும் மதிய வெப்பத்தின் தாக்கத்தால், தாகம் மேலிட நீர் அருந்துவதற்காக அங்கு வந்தது.இவ்விரண்டு ஜீவன்களும் நீர் அருந்த முற்பட்ட போது, உங்கள் அரசன் மிகவும் கோபத்துடன் முரட்டுத்தனத்துடன் அவைகளை விரட்டி விட்டு, சுயநலத்துடன் தன்னுடைய தாகத்தைத் தீர்த்துக் கொண்டான்.தாகத்தில் தவித்த பசுவையும், கன்றுக்குட்டியையும் துரத்திய செயல், மன்னனை இப்பிறவியில் ஆண்வாரிசு இன்றி தவிக்கும்படி நேர்கிறது. அரசன் முற்பிறவியில் செய்த நல்ல செயல்களுக்கு பலனாக இப்பிறவியில் தொல்லையில்லாத அமைதியான ராஜ்ஜியத்தை ஆளும் தகுதியை பெற்றான் என்றுரைத்தார்.இதைக்கேட்ட அரசனின் அமைச்சர்கள், தங்கள் மன்னன் முற்பிறவியில் செய்த பாவத்திலிருந்து விடுபட வழியைக் கேட்டனர்.
அதைக்கேட்ட லோமசர், “சிராவண மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி “புத்ராதா ஏகாதசி” என்றழைக்கப்படுகிறது. இவ்விரதத்தை நாட்டின் மன்னன் உட்பட, மக்கள் அனைவரும் விதிமுறைப்படி கடைப்பிடியுங்கள். நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், இரவில் கண் விழித்து பகவான் கிருஷ்ணரின் புகழைப் பாடுதல், ஸ்ரீமத் பாகவத பாராயணம், புராணம் படித்தல் என்று விரதத்தை சரியாக அனுஷ்டியுங்கள். மறுநாள் நீங்கள் பெற்ற விரத பலன்களை அரசருக்கு அளித்திடுங்கள். கட்டாயம் அவருக்கு “ஆண்மகன் பிறப்பான்” என்று உபாயம் கூறினார் லோமச மஹரிஷி.மகரிஷி கூறிய வார்த்தைகளைக் கேட்ட அமைச்சர்கள், மஹரீஷி லோமசரிடம் தத்தமது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு மன்னனின் ராஜ்ஜியத்திற்கு திரும்பினர்.மஹிஷமதிபுரி பட்டணத்திற்குச் சென்ற பின், மன்னனிடம் சென்று லோமச மஹரிஷி கூறியதைத் தெரிவித்தார்கள். அதன்பின் அனைவரும் பக்திச் சிரத்தையுடன் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தனர்.இவ்விரதத்தின் பலன்களை அரசருக்கு அளித்தார்கள். இவ்விரதத்தின் மகிமையால் அரசி அழகான ஆண் மகனைப் பெற்றெடுத்தாள்.
இந்த ஏகாதசி “புத்ரதா ஏகாதசி என்றும், புத்ர சந்தான பிராப்தியை வழங்கும் ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் பருப்பு மற்றும் தானிய வகைகளைத் தவிர்த்து உபவாசம் மேற்கொள்ள வேண்டும்.”கலியுகத்தில் புத்ரதா ஏகாதசியின் மஹிமைகளை இந்த ஏகாதசி தினத்தன்று கேட்பவர்களும், படிப்பவர்களும், நிச்சயம் தங்களது பாவங்கள் நீங்கப்பெற்று, புத்ர சந்தான பிராப்திக்கான அருளாசியைப் பெறுவதோடு, இப்பிறவின் முடிவில் சொர்க்கத்தை அடையும், பாக்கியமும் பெறுவர்” என்று கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்குச் சொல்லி முடித்தார்.ப்ரஹ்ம வைவர்த்த புராணம், சிராவண மாதம் சுக்ல பட்ச ஏகாதசி னற்றும் “பவித்ரோபன, புத்ரதா ஏகாதசி என்றழைக்கப்படும் ஏகாதசி மஹிமை படலம் நிறைவுற்றது.இன்றைய தினத்தில் இறைவனின் சன்னதிக்குச் சென்று, இறையருளைப் பெற்று, அவனை ஆராதித்து, முடிவில் அவனைச் சரணடைவோமாக!
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணாகிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரேஹரே ராமா ஹரே ராமாராம ராம ஹரே ஹரே