ஹரே கிருஷ்ண இயக்கம் என்று பரவலாக அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மிகவும் குறுகிய காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். தற்போது இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கிருஷ்ண பக்தர்கள் வாழும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போரினால் உலக நாடுகளெல்லாம் அச்சம்கொள்ளும் அளவிற்கு ரஷ்யா வலிமையாக இருந்த காலகட்டத்தில், கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றியிருந்த கம்யூனிச நாடான ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி விதைக்கப்பட்டு வளர்ந்த விதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதாகும். இத்தகு அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது? அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!
ஸ்ரீல பிரபுபாதரின் ரஷ்ய விஜயம்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966ஆம் ஆண்டு தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரால் அமெரிக்காவில் ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீல பிரபுபாதர் உலகின் இதர நாடுகளுக்கும் பயணம் செய்து கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்தார். அதன் ஒரு பகுதியாக 1971ஆம் ஆண்டில் பேராசிரியர் கோதோஸ்கியின் அழைப்பின் பேரில் இரும்புத்திரை நாடு என்று அறியப்பட்ட ரஷ்யாவிற்கான தமது அதிகாரபூர்வமான பயணத்தை மேற்கொண்டார். ஆயினும், ரஷ்ய அரசு அவர் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுத்து, அவரை உளவுத்துறை நிறுவனமான கே.ஜி.பி.யின் நேரடிக் கண்காணிப்பில் நான்கு நாள்கள் மட்டும் மாஸ்கோ நகரிலுள்ள விடுதி ஒன்றில் தங்குவதற்கு அனுமதித்தது.
அந்தப் பயணத்தின்போது, ஸ்ரீல பிரபுபாதருடன் சென்றிருந்த அவரது மேற்கத்திய சீடரான சியாமசுந்தர தாஸ் மாஸ்கோ நகரின் வீதியில் அனடோலி பின்யயேவ் என்ற ரஷ்ய இளைஞரை சந்தித்தார். அந்த இளைஞரை ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் ஸ்ரீல பிரபுபாதரிடம் சியாமசுந்தரர் அறிமுகப்படுத்தினார். அவரின் ஆன்மீக நாட்டத்தை உணர்ந்த ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ண பக்தியின் அடிப்படைக் கொள்கைகளையும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர உச்சாடனத்தைப் பற்றியும் அவருக்கு உபதேசம் வழங்கினார். அந்த ரஷ்ய இளைஞரை சீடனாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீல பிரபுபாதர் அவருக்கு தீக்ஷையளித்து, அனந்த சாந்தி தாஸ் என்ற பெயரையும் வழங்கினார்.
ஸ்ரீல பிரபுபாதரின் தீர்க்க தரிசனம்
மாஸ்கோ நகரின் கிரெம்ளின் மாளிகையைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர் வெகுவிரைவில் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் சிதைந்து வீழ்ச்சியடையும் என்றும், பெருமளவிலான ரஷ்ய மக்கள், ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினைப் பரப்பியவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமுமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றுவர் என்றும் அன்றே கணித்தார். இறுதியாக, பேராசிரியர் கோதோஸ்கியுடன் சில மணி நேரங்கள் உரையாடிய ஸ்ரீல பிரபுபாதர் கம்யூனிச கொள்கையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பிறகு தமது குறுகிய ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர், அவர் ரஷ்யாவிற்குச் செல்லவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர் ரஷ்யாவிலிருந்து கிளம்பிய பின்னர், சோவியத் யூனியனின் முதல் ஹரே கிருஷ்ண பக்தராகத் திகழ்ந்த அனந்த சாந்தி தாஸ், ரஷ்யா முழுவதிலும் ஹரி நாம ஸங்கீர்த்தனம் மற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தக விநியோகத்தின் மூலமாக கிருஷ்ண பக்தியை தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஸ்ரீல பிரபுபாதர் தமது இதர சீடர்கள் வாயிலாக அவருக்கு பலவிதங்களில் உதவியும் ஊக்கமும் அளித்தார். அனந்த சாந்தி தாஸ் தமது துடிப்பான பிரச்சாரத்தினாலும் ஆன்மீக குருவான ஸ்ரீல பிரபுபாதரின் கருணையினாலும் நூற்றுக்கணக்கான மக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றினார்.
இடது: ஸ்ரீல பிரபுபாதரால் தீக்ஷையளிக்கப்பட்ட ரஷ்யாவின் முதல் ஹரே கிருஷ்ண பக்தர், அனந்த சாந்தி தாஸ், வலது: அனந்த சாந்தி தாஸ் கிருஷ்ண பக்தியை தீவிரமாக ரஷ்ய மக்களிடம் பிரச்சாரம் செய்தல்
சிறைவாசமும் பிரச்சாரமும்
கிருஷ்ண பக்தி தத்துவம் கம்யூனிச கொள்கையான நாத்திகவாதத்திற்கு எதிராக இருந்தமையால், ரஷ்யாவின் உளவுத்துறை அனந்த சாந்தி தாஸரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தது. அனந்த சாந்தி தாஸரின் பிரச்சாரத்தினால் நூற்றுக்கணக்கான மக்கள் கிருஷ்ண பக்தியை தீவிரமாகப் பயிற்சி செய்வதைக் கண்ட உளவுத்துறை அவரை சிறையில் அடைத்தது. அவர் சிறையிலும் தமது பிரச்சாரத்தினைத் தொடர்ந்தமையால், உளவுத்துறை அதிகாரிகளால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வேறு நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கும் அவரது பிரச்சாரத்தின் தாக்கத்தினால் பெருமளவிலான மக்கள் கிருஷ்ண பக்தியைப் பின்பற்றத் தொடங்கினர். இதனைக் கண்ட உளவுத்துறை அவரை பல்வேறு நகரங்களிலுள்ள சிறைகளில் மாறிமாறி அடைத்து விடுதலை செய்து வந்தது. அவரும் சென்ற எல்லா நகரங்களிலும் பிரச்சாரத்தினைத் தொடர்ந்தார். இவ்விதமாக, குருவின் கருணையினால் அனந்த சாந்தி தாஸர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் கணிசமான எண்ணிக்கையில் கிருஷ்ண பக்தர்களை உருவாக்கினார்.
நூதன பிரச்சாரம்
பகவான் கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் கருணையினால் அனந்த சாந்தி தாஸரிடம் இருந்த அதே உற்சாகமும் ஊக்கமும் தைரியமும் அவரால் உருவாக்கப்பட்ட பக்தர்களிடமும் வெளிப்பட்டது. ரஷ்யாவில் இறை நம்பிக்கையை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது மாபெரும் குற்றமாகக் கருதப்பட்டது. எனவே, அரசாங்கத்திற்குத் தெரியாமல் இரகசிய அறையில் சிறிய அளவிலான அச்சிடும் கருவியைப் பயன்படுத்தி ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களை ஆங்கிலத்திலிருந்து ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்த கிருஷ்ண பக்தர்கள் நூதன முறையில் அதனை விநியோகித்தனர்.
அந்நூல்களை விமான நிலையம், ரயில் நிலையம். பேருந்து நிலையம், விடுதி அறைகள், கப்பல்கள், அங்காடிகள் முதலிய பொதுமக்கள் அமரும் இடங்களில் வைத்துவிட்டு தலைமறைவாகி விடுவர். நூலகங்களிலிருந்த கம்யூனிச புத்தகங்களின் அட்டைகளைப் பிரித்து அதனுள் கிருஷ்ண உணர்வு நூல்களை வைத்து தைத்துவிடுவர்.
இவ்வாறு பக்தர்களால் பல்வேறு பகுதிகளில் வைக்கப்படும் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படித்து பக்தர்களின் சங்கத்திற்காக ஏங்குபவர்கள், ஹரே கிருஷ்ண பக்தர்களை வீதியில் கண்டவுடன் அவர்களுடன் இணைந்து மறைவான இடங்களில் பகவத் கீதையைப் படிப்பர். கே.ஜி.பி. உளவுத்துறை அதிகாரிகள் பக்தர்களின் மறைவிடத்தை மோப்பம் பிடித்து நெருங்கும் வேளையில் பக்தர்கள் பிரபுபாதரின் நூல்களை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவர்.
கிருஷ்ண பக்தர்களை சிறைச்சாலையில் போர்க் கைதிகளைப் போல் அடைத்த நகரங்கள்
(இடது: ஸ்மோலென்ஸ்க், வலது: ஓர்யோல்)
பக்தர்களாக மாறிய உளவுத்துறை அதிகாரிகள்
ஹரே கிருஷ்ண பக்தர்களின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை அறியும் பொருட்டு ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைக் கைப்பற்றி அவற்றைப் படித்த உளவுத்துறை அதிகாரிகளும் படிப்படியாக கிருஷ்ண பக்தர்களாக மாறத் தொடங்கினர். பக்தர்களாக மாறிய அதிகாரிகள் சில சமயங்களில் தங்களது திட்டங்களை பக்தர்களுக்கு முன்னரே தெரிவிப்பதும் உண்டு. ஒரு காலகட்டத்தில் ஹரே கிருஷ்ண பக்தர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள், உயர்மட்ட அதிகாரிகளிடம் செல்லாமல், கீழ்நிலை கே.ஜி.பி. அதிகாரிகளின் மத்தியிலேயே உலவிக் கொண்டிருந்தன.
உளவுத்துறை அதிகாரிகளே பக்தர்களாக மாறியதை அறிந்த ரஷ்ய அரசின் கோபம் உச்சத்தை எட்டியது. உளவுத்துறை அதிகாரிகளின் செயல்களில் சந்தேகமடைந்த அரசு வேறு சில அதிகாரிகளை நியமித்து அவர்களைக் கண்காணித்தது.
அடக்குமுறை தாக்குதல்கள்
பாப் பாடல்கள், மேற்கத்திய கலாச்சாரம், ஹரே கிருஷ்ண இயக்கம் ஆகிய மூன்று விஷயங்களும் ரஷ்யாவினால் தேச விரோத சக்திகளாகக் கருதப்பட்டன. ஹரே கிருஷ்ண இயக்கம் கம்யூனிசத்தின் அடிப்படையான கடவுள் மறுப்பு கொள்கைக்கு நேரெதிராக இருந்த காரணத்தினாலும், அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இயக்கம் என்பதாலும் ரஷ்ய அரசாங்கம் கிருஷ்ண பக்தர்கள்மீது சொல்லொண்ணா தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டது. கிருஷ்ண பக்தர்கள் பலர் ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க், ஓர்யோல், சைபீரியா முதலிய நகரங்களின் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு போர்க் கைதிகளைப் போன்று நடத்தப்பட்டனர்.
ரஷ்ய அரசாங்கத்தினர் கொத்து
கொத்தாக கிருஷ்ண பக்தர்களை மன நோயாளிகளுக்கான சிறைச்சாலையில் அடைத்து சித்ரவதை செய்தனர். நரம்பு மண்டல பாதிப்பு, மூளைச் சிதைவு, முகச் சிதைவு முதலிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விஷ ஊசிகளை பக்தர்களின் உடலில் வலுக்கட்டாயமாகச் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுகாதாரமற்று அழுக்காக இருந்த இருட்டு அறையில் அடைக்கப்பட்டு சுவாசிக்க போதுமான காற்றுகூட இல்லாமல் துன்புற்றனர்; முறையான உணவு வழங்கப்படாததால், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் பல் ஆட்டம் கண்டு, ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டது; கடுங்குளிர், உடல்களில் புழு-பூச்சிகள் மேயும் நிலை, சிறைக்காவலர்களின் கண்மூடித்தனமான தாக்குதல், மயக்க ஊசி மூலமாக சிறை மருத்துவர்களிடமிருந்து மன அழுத்தம், நீராடினால் கடும் தண்டனை, கொலைகார கைதிகளுடன் ஏற்படும் கடும் மோதல்கள் என அவர்கள் அனுபவித்த சித்ரவதைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதுமட்டுமின்றி, கடவுள் நம்பிக்கையைக் கைவிட மறுத்த பல பக்தர்களை வீதியிலும் சிறைகளிலும் அடித்தே கொன்றனர். தொலைக்காட்சிகளில் கிருஷ்ண பக்தர்களை குற்றவாளிகளாகச் சித்தரித்து பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அச்சமில்லா பக்தர்கள்
கிருஷ்ண பக்தர்கள் கைது செய்யப்படும்போது ரஷ்ய உளவு அதிகாரிகள் முதலில், புத்தகங்கள் எங்கிருந்து வருகின்றன? நூல்களை அச்சடிக்கும் இரகசிய அறை எங்குள்ளது? என்ற வினாக்களையே எழுப்புவர். ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தமையால், எவ்வளவோ சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட
போதிலும், எந்தவொரு பக்தரும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகத்தை அச்சடிக்கும் கருவி இருந்த இரகசிய அறையினை இறுதி வரை காட்டிக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையிலும் கிருஷ்ண பக்தி
ஸச்சி ஸுத தாஸ், ஸர்வ பாவன தாஸ் முதலிய பக்தர்கள் சிறைச்சாலையில் இருந்தபோதும், காய்ந்த ரொட்டித் துண்டுகளைக் கொண்டு ஜப மாலையைத் தயாரித்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்தனர். பற்பசையைத் திலகமாக உடலில் தரித்தனர். படுக்கை விரிப்பினை வேஷ்டியாக (வைஷ்ணவர்கள் அணியும் பஞ்ச கச்சமாக) அணிந்தனர்.
ரஷ்ய அரசாங்கம் கிருஷ்ண பக்தர்கள்மீது பல நீதிமன்ற வழக்குகளைத் தொடுத்ததால் சந்நியாச தாஸ், ஜப தாஸ், அமல பக்த தாஸ், ஸர்வ பாவன தாஸ், வக்ரேஸ்வர பண்டித தாஸ், கமல மால தாஸ், விஸ்வாமித்ர தாஸ், ஆஸுதோச தாஸ், ஆத்மானந்த தாஸ், விருந்தாவன தாஸ், மகேஸ்வர தாஸ், ஸச்சி ஸுத தாஸ் முதலிய பக்தர்கள் பல வருடங்களை சிறையில் கழித்தனர்.
இவ்வாறு பக்தர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், வெளியிலிருந்த பக்தர்களோ ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களை எவ்வித தொய்வுமின்றி அச்சிட்டு விநியோகித்தனர். ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களான ஹரிகேஷ ஸ்வாமி, கீர்த்தராஜ தாஸ் ஆகிய இருவரும் அவ்வப்போது ரஷ்யாவிற்கு வருகை புரிந்து பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பலவிதங்களில் உதவினர்.
கிருஷ்ண பக்தியை உயிர் மூச்சாக பிரச்சாரம் செய்த பக்தர்களில் ஒருவரான ஸச்சி ஸுத தாஸ்
கிருஷ்ணரின் பாதுகாப்பு
குரு, கிருஷ்ணரின் சேவையில் பூரண நம்பிக்கை கொண்டு உடலை விடும் பக்தர்களுக்கு ஆன்மீக உலகில் நிச்சயமாக சிறப்பான வரவேற்பு இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம்கொள்ளத் தேவையில்லை. இவ்விதத்தில் கிருஷ்ணர் தம்மைச் சார்ந்து வாழும் பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளை முழுமையாகப் பாதுகாத்து நித்தியமான ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கிறார்.
சிலசமயம் நாம உச்சாடனத்தில் தீவிரமாக மூழ்கியிருக்கும் பக்தர்களை சிறைக்காவலர்கள் தாக்கியபோது, தங்களுக்கு புலப்படாத அச்சத்தை உணர்ந்ததாக காவலர்கள் ஒப்புக் கொண்டனர். 1971ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ஆண்டு வரை பக்தர்கள் கடும் சித்ரவதைகளை பலவிதங்களில் அனுபவித்தனர். ஸச்சி ஸுத தாஸ் 1988ஆம் ஆண்டில் சிறைச்சாலையில் நாம ஜபம் செய்தவாறு உடலைத் துறந்தார்.
பிறந்தது விடிவுகாலம்
ஸ்ரீல பிரபுபாதர் ஆருடம் கூறியபடி, சோவியத் யூனியன் சிதைந்து போனது. உலகின் எல்லா திசைகளிலும் பரவியிருந்த கிருஷ்ண பக்தர்கள், ரஷ்யாவின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். 1988ஆம் ஆண்டில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மாஸ்கோவில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. 1989ஆம் ஆண்டில் உலகத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியமையால், அப்போதைய ரஷ்ய அதிபரான கோர்பச்சேவ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து ஹரே கிருஷ்ண பக்தர்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். ரஷ்யாவில் கிருஷ்ண பக்தியைப் பரப்பி புரட்சியை ஏற்படுத்திய அனந்த சாந்தி தாஸ் 2013ஆம் ஆண்டில் உடலைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ரஷ்யா
இன்று ஸ்ரீல பிரபுபாதரின் அருள்வாக்கினை மெய்ப்பிக்கும்வண்ணம், ரஷ்யாவில் இலட்சக்கணக்கான மக்கள் சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றி கிருஷ்ண பக்தியைப் பயின்று வருகின்றனர். ரஷ்யாவிலுள்ள ஒவ்வொரு நகரத்திலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். மாஸ்கோவில் பிரம்மாண்டமான புதிய கோயில் கட்டுவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான இல்லங்களில் கிருஷ்ணருக்கு விக்ரஹ வழிபாடு நிகழ்கிறது, எத்தனை எத்தனையோ ஹரி நாம ஸங்கீர்த்தனங்கள் தினமும் நிகழ்கின்றன. நமது ஊரின் ஆண்-பெண்கள் பஞ்சகச்சமும் சேலையும் உடுத்த தயங்கும் சூழ்நிலையில், உறைபனி கொட்டும் அந்த ஊரில் அழகிய வைஷ்ணவ உடையில் வலம் வருகின்றனர்.
காட்டுத் தீயினைப் போல கிருஷ்ண பக்தி இயக்கம் அங்கு பரவி வருகின்றது. இன்றும் ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு பல சவால்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது; இருப்பினும், ரஷ்யாவில் பக்தியின் மரம் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு பெரிய மரமாக வளர்ந்து ஆழமாக வேரூன்றியுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி, முந்தைய சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த உக்ரைன், லட்வியா, எஸ்தோனியா, லித்துவானியா முதலிய பல்வேறு இதர நாடுகளிலும் சீரும்சிறப்புமாக வளர்ந்து வளருகிறது.
கம்யூனிச நாடான ரஷ்யாவின் இரும்புத் திரையை தகர்த்து கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காக, கிருஷ்ண பக்தர்கள் அனுபவித்த பல இன்னல்களும் உயிர் தியாகங்களும் நிச்சயம் அனைவரின் இதயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். சைதன்ய மஹாபிரபுவின் கருணையினால் அவரது சேனாதிபதி பக்தராக உலகிற்கே குருவாகத் திகழ்ந்த ஸ்ரீல பிரபுபாதர் தமது ஒரேயொரு சீடரின் மூலமாக பல இலட்சக்கணக்கானவர்களின் இதயத்தில் கிருஷ்ண உணர்வு என்னும் தீபத்தை ஏற்றியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு தனது சீடர் மூலமாக எதையும் சாதிக்க இயலும் என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று ஏதேனும் உண்டோ?
சோவியத் ஹரே கிருஷ்ண பக்தர்களை விடுவிக்க பக்தர்கள் போராடுதல்
நன்றி : BTG Tamil
வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்