Saturday, July 27

பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் #பரம ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ‘அதிக’ (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி ‘பத்மினி ஏகாதசி’ என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி ‘பரம ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் ‘அதிக’ மாதம் வந்துள்ளது.

யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார். “பரம்பொருளே, மதுஸூதனா! ‘அதிக’ மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்” என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “ஓ யுதிஷ்டிரா, என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி மகிமை பற்றி உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன். கேளுங்கள்” என்று கூறி தொடர்கிறார்.


முன்பு ‘காம்பில்யா’ எனும் நகரில், ‘சுமேதா’ எனும் மிகவும் பக்திமானாகிய அந்தணர் ஒருவர் இருந்தார். அவருக்கு மிகவும் கற்புக்கரசியான ‘பவித்ரா’ எனும் மனைவி இருந்தார். மிகவும் இளமையான, அழகான கண்களையுடைய அவர் தனது கணவர் மேல் மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டவராக விளங்கினார்.

முற்பிறவியில் செய்த வினைகள் காரணமாக சுமேதா-பவித்ரா தம்பதியினர் வாழ்வதற்கு சரியான இடம் இன்றியும், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அளவு கூட போதிய உணவின்றி தவித்தனர். சுமேதா செல்வந்தர்களிடம் போதிய உதவியை தானமாக பெற்று வந்தாலும், அது அன்றாட வாழ்விற்கே போதுமானதாக இல்லாமல் இருந்தது.

இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், தனது இல்லத்திற்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு பவித்ரா, தனது உணவை அளித்துவிட்டு அன்றைய தினம் தான் பட்டினியாக இருந்து விடுவது வழக்கம். ஆனால், அவரது முகத்தில் எந்த ஒரு சிறு ஏமாற்றமும் இருக்காது. வந்த விருந்தினர்களிடம் புன்னகை தவழ உரையாடுவார்.

இருப்பினும், பல நாட்கள் இது போல உணவின்றி இருந்து வந்ததால், பவித்ராவின் உடல் மெலியத் தொடங்கியது. தனது மனைவியின் உடல்நிலை கண்டும், தனது வருமானம் இல்லாத நிலை கண்டும் சுமேதா மிகுந்த மன வருத்தம் கொண்டார்.

சுமேதா தனது வருத்தத்தை, ‘நமது கர்ம வினை காரணமாக நமக்கு இந்தப் பிறவியில் செல்வம் எனும் பாக்கியம் நமது இல்லத்தில் இல்லாமல் உள்ளது. எனது வருமானத்தின் மூலமோ அல்லது எனக்கு தானமாகக் கிடைக்கும் பொருட்கள் மூலமோ மூன்று வேளை உணவினைக் கூட நாம் சரியாக உண்ண முடியவில்லை. நமது இல்லத்திற்கு வரும் விருந்தினர்களைக்கூட சரியான முறையில் கவனிக்க முடியவில்லை. அதனால், நான் வெளியூர் சென்று வேறு ஏதாவது உத்யோகம் செய்து பொருள் ஈட்ட முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்’ என தனது மனைவி பவித்ராவிடம் கூறினார்.

தமது கர்மவினை காரணமாக இந்த பிறவி எப்படி இருப்பினும் நமது முயற்சியை கண்டிப்பாக செய்யவேண்டும், முயற்சியே செய்யாமல் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் கூறியுள்ளதையும் தனது மனைவி பவித்ராவிடம் சுட்டிக்காட்டினார் சுமேதா.

இதனைக்கேட்ட பவித்ரா, மிகவும் மன வேதனை கொண்டவராய், தனது கணவரின் கைகளை பற்றிக்கொண்டு, ‘எனது அன்பிற்குரியவரே, உம்மை விட சிறந்த கல்விமான் இங்கு இல்லை. உம்மை விட சிறந்த பக்திமான் இங்கு இல்லை. இருப்பினும், இந்தப்பிறவியில் நமக்குத் தேவையான செல்வ வளம் கிடைக்காமல் நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம். நாம் பூர்வ ஜென்மத்தில் எதனை பிறருக்கு செய்துள்ளோமோ அல்லது கொடுத்துள்ளோமோ அதனையே இந்த பிறவியில் நாம் பெறுகின்றோம். நாம் இருவருமே, கடந்த பிறவியில் பிறருக்கு பெரிய உதவிகளோ அல்லது தானமோ செய்யவில்லை என்று நினைக்கின்றேன். அதனாலேயே இந்தப் பிறவியில் நமக்கு போதிய செல்வ வளம் கிட்டவில்லை என்பது தெரிகிறது. இந்த பிறவியில் ஒருவருக்கு மலையளவு தங்கம் இருப்பினும் கூட, முற்பிறவியில், பிறருக்கு தானம் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால், மலையளவு தங்கம் கூட கரைந்து அவர் ஏழையாகி விடுவார். எனவே, ஒருவர் முற்பிறவியில் பொன், பொருள், மனை, கல்வி என எதனை பிறருக்கு தானமாக வழங்கினாரோ அவை இந்த பிறவியில் அவருக்கு கிடைக்கும்’ என்று பவித்ரா கூறி மேலும் தொடர்கையில், ‘நீங்கள் இங்கிருந்து என்னைப்பிரிந்து சென்றால் அது மிகுந்த மனவேதனை தரும். மேலும், உங்களுக்கு உரிய சேவை புரியாமல் இருப்பதையும் நான் விரும்பவில்லை. எனவே நாம் வேறு உபாயம் காண்போம்’ என்று பவித்ரா தனது கணவரிடம் தெரிவித்தார்.

இதனைக்கேட்ட சுமேதாவும், ‘சரி அந்த பகவானே நமக்கு அருள் புரியட்டும்’ என்று தனது வெளியூர் செல்லும் எண்ணத்தை கைவிட்டார்.

பின்னர், ஒரு சில தினங்கள் சென்ற பிறகு, அந்த நகருக்கு கௌண்டின்ய முனிவர் வருகை புரிந்தார். அவருக்கு சுமேதா மற்றும் பவித்ரா தம்பதியினர் தங்களது சாஷ்டாங்க நமஸ்காரத்தை தெரிவித்து அவருக்கு ஆசனம் அளித்து அமரச்செய்து உபசரித்தனர். பின்னர், பவித்ரா முனிவரிடம் தனது சந்தேகத்தை வினவினார்.

‘முனிவர்களில் சிறந்தவரே, நாங்கள் இந்த பிறவியில் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் இருப்பினும் எங்களுக்கு போதிய செல்வம் இன்றி ஏழ்மையில் உழல்கிறோம். ஒருவர் தனது முற்பிறவியில் உரிய தானங்கள் எதுவும் செய்யாமல் இருப்பினும், இந்த பிறவியில் செல்வ வளம் பெற என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஸ்வாமி ஸ்தலம் செல்லவேண்டுமா? குறிப்பிட்ட ஸ்லோகம் எதுவும் சொல்ல வேண்டுமா? ஏதாவது குறிப்பிட்ட விரதம் உள்ளதா? என்ன செய்தால் இந்த பிறவியில் புண்ணியம் கிடைக்கும், மற்றும் செல்வ வளம் பெற முடியும்? தயவு செய்து எங்களுக்கு இதற்குரிய விடை கூறி அருள் புரிய வேண்டும்’ என்று பணிவுடன் வேண்டுகிறார் பவித்ரா.

சிறிய மௌனத்திற்கு பிறகு கௌண்டின்ய முனிவர் இவ்வாறு கூறலானார், ‘தம்பதிகளே, உங்களுக்கு செல்வ வளத்தை அளிக்கக்கூடிய விரதம் “பரம ஏகாதசி” ஆகும். ஆம்! புருஷோத்தம மாதம் எனும் அதிக மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசி தினத்தில், முழு உபவாசம் இருந்து பகவான் ஸ்ரீ ஹரியை துதிப்பதன் மூலம், முற்பிறவியில் உரிய தானங்களை செய்யாமல் இருப்பினும் இப்பிறவியில் செல்வ வளத்தை பெற முடியும். முன்னர், இது போன்ற ஒரு ‘பரம ஏகாதசி’ தினத்தில் குபேரன் மிகக் கடுமையாக விரதம் இருந்த முறையினைக் கண்டு, சிவபெருமான் மனம் மகிழ்ந்து குபேரபுரிக்கு அதிபதியாக மாற்றினார்.

இதனைக்கேட்டு மனமகிழ்ந்த சுமேதா பவித்ரா தம்பதியினர் முனிவருக்கு மீண்டும் தங்களது நமஸ்காரங்களை தெரிவித்து நன்றி கூறினர். பின்னர் முனிவர் கூறியபடியே ‘பரம ஏகாதசி’ அன்று முழு உபவாசம் இருந்து அதன் பின்னர் தொடர்ந்து 5 நாட்களும் உபவாசம் இருந்து பகவான் நாமாவை ஜபம் செய்தபடியே இருந்தனர்.

சில தினங்களில், அந்த ராஜ்ய அரசன் இந்த அந்தணர் தம்பதிகளை தேடி வந்து, அவர்களுக்கு ஒரு அழகிய இல்லம், பொன், பொருள், தானியங்கள் மற்றும் ஒரு பசு ஆகியவற்றையும் வழங்கினார். பிரம்மதேவர் தனது கனவில் தோன்றி இட்ட கட்டளையை தான் நிறைவேற்றியதாக கூறினார். சுமேதா பவித்ரா தம்பதியினர் பல காலம் நல்ல நிலையில் வாழ்ந்து பகவான் நாமாவை எப்பொழுதும் ஜெபித்து பின்னர் வைகுண்ட பிராப்தி பெற்றனர்.

இவ்வாறு, பரம ஏகாதசி விரதத்தின் மகிமை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர், யுதிஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துக்கூறினார். இந்த விரதக்கதையினை கேட்டவர்களும், படித்தவர்களும் மேலும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகிறார்கள் என்றும் கோ தானம் செய்த பலன் பெறுகிறார்கள் என்றும் ஸ்கந்த புராணம் எடுத்துரைக்கின்றது.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும் ‘பரம ஏகாதசி’ தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:

👉 வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளைகளோ இருக்கலாம்.)

👉 வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.

👉 வாய்ப்பு இருப்பவர்கள் தொடர்ந்து ‘பஞ்ச ராத்ரிகா’ எனும் 5 தினங்கள் தொடர் விரதம் இருக்கலாம்.

👉 வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம்.

👉 வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம்.

குறைந்தது 108 மறை சொல்லவேண்டிய மந்திரம்
“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”

விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், ‘கோ’ தானம் செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question