Wednesday, December 4

முன்னுரை

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இதே உருவில் தான் நான் முதலில் பகவத் கீதை உண்மையுருவில் நூலை எழுதினேன். ஆனால் இந்நூல் முதலில் பிரசுரமான போது, ஸ்ரீமத் பகவத் கீதையின் பெரும்பாலான மூலப் பதங்களுக்கு விளக்கவுரைகள் இல்லாமல், விளக்கப் படங்கள் இல்லாமல், துரதிர்ஷ்டவசமாக நானூறு பக்கங்களுக்கு குறைவாக வெளியிடப்பட்டது. ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ ஈஷோபநிஷத் போன்ற எனது இதர நூல்களெல்லாம், மூலப்பதம், உச்சரிப்பு வடிவம், வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம், மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரைகளுடன் வெளியிடப்பட்டிருப்பதால், நூல் அதிகாரப்பூர்வமானதாகவும் புலமையுடையதாகவும் ஆவதோடு, அதன் உட்பொருளும் தெள்ளத் தெளிவானதாக ஆக்கப்படுகின்றது. எனவே, எனது மூல கையெழுத்துப் பிரதியைச் சுருக்க வேண்டிவந்தபோது நான் அவ்வளவாக மகிழ்வடையவில்லை. ஆனால், பிற்பாடு பகவத்கீதை உண்மையுருவில் நூலுக்கான தேவை கணிசமான முறையில் அதிகரிக்கவே, பற்பல அறிஞர்களும் பக்தர்களும் இந்நூலை முழு வடிவில் வெளியிடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். இவ்வாறு, கிருஷ்ண பக்தி இயக்கத்தை வலுவான முன்னேற்றப் பாதையில் நிறுவுவதற்காக, முழு பரம்பரையின் பொருள் விளக்கங்களோடு கூடிய ஞானத்தின் இந்த மாபெரும் நூலின் மூலப்பிரதியை வெளியிடுவதற்கான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது கிருஷ்ண பக்தி இயக்கம் பகவத்கீதை உண்மையுருவில் எனும் இந்நூலை ஆதாரமாகக் கொண்டதால், நேர்மையானதும் சரித்திரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் இயற்கையானதும் திவ்யமானதுமாகும். கொஞ்சங் கொஞ்சமாக அகில உலகிலும் — குறிப்பாக இளைய தலைமுறையிடையே — மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. மேலும், முதிய தலைமுறையினரும் கூட மேன்மேலும் இதில் கருத்துடையவர்களாகின்றனர். வயதான பெரியோரும் இவ்வியகத்தினால் மிகவும் கவரப்படுகின்றனர். எனது சீடர்களின் தந்தை, பாட்டனார் என எண்ணற்றோர் எமது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆயுள் உறுப்பினராக இணைவதன் மூலம் எங்களுக்கு உற்சாகமளித்து வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தாய் தந்தையார் பலர், என்னைச் சந்தித்து, கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகம் முழுவதும் தலைமை வகித்து நடத்துவற்காக, தங்களது விசுவாசத்தைத் தெரிவிக்கின்றனர். நான் இந்த இயக்கத்தை அமெரிக்காவில் ஆரம்பித்தது, உண்மையில், அமெரிக்க மக்களது நல்லதிர்ஷ்டத்தாலேயே பலரும் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால் இவ்வியக்கத்தின் உண்மையான தந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. ஏனெனில், இது பன்னெடுங் காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு சீடப் பரம்பரை மூலமாக மனித சமுதாயத்திற்குக் கீழிறங்கி வருவதாகும். இவ்விஷயத்தில் எனக்கு ஏதேனும் நன்மதிப்பு இருந்தால், அது தனிப்பட்ட முறையில் என்னைச் சேர வேண்டியதே அல்ல. இதற்கான பெருமையனைத்தும் எனது நித்திய ஆன்மீக குருவான தெய்வத்திரு ஓம் விஷ்ணுபாத பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய 108 ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி மஹாராஜா பிரபுபாதரையே சேரும்.

எனக்கென்று தனிப்பட்ட முறையில் ஏதேனும் பெருமை இருந்தால், அது பகவத்கீதையைக் கலப்படமின்றி, உண்மையுருவில், உள்ளது உள்ளபடி அளிக்க முயன்றது மட்டுமேயாகும். எனது இந்த பகவத் கீதை உண்மையுருவில் வெளிவரும் முன்பு வெளியான கீதையின் ஆங்கிலப் பதிப்புகளில் பெரும்பாலானவை யாரேனும் ஒருவரது சுய ஆவலைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவையே. ஆனால் பகவத் கீதையை உண்மையுருவில் அளிப்பதற்கான எமது முயற்சியோ முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரது நோக்கத்தை வெளிப்படுத்துவதாகும். கிருஷ்ணரது விருப்பத்தை எல்லாரும் அறிய செய்வதே எமது தொழிலாகும். அரசியல்வாதி, தத்துவஞானி அல்லது விஞ்ஞானி போன்ற ஏதோ ஒரு ஜட கற்பனையாளரது சுய அபிப்பிராயத்தை பிரபலப்படுத்துவதல்ல. ஏனெனில், அவர்கள் அறிவாளிகளாகத் தோன்றும் போதிலும், கிருஷ்ணரைப் பற்றிய அறிவு அவர்களிடம் சிறிதும் இல்லை. மன்மா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு போன்று கிருஷ்ணர் கூறுகையில், அறிஞர்களாக பெயரளவில் அறியப்பட்ட சிலர், “கிருஷ்ணரும் அவரது உள்ளிருந்து கூறும் ஆன்மாவும் வேறு” என்று கூறுவது போல, நாம் தவறான முறையில் அர்த்தம் கற்பிப்பதில்லை. கிருஷ்ணர் பூரணமானவர்; எனவே, கிருஷ்ணரது நாமம், கிருஷ்ணரது ரூபம், கிருஷ்ணரது குணம், கிருஷ்ணரது லீலைகளுக்கிடையில் வேறுபாடு ஏதுமில்லை. கிருஷ்ணரது பக்தரல்லாத (சீடப் பரம்பரையின் மூலம் பக்தியைப் புரிந்துகொள்ளாத) எவருக்குமே, அவரது இந்த பூரண நிலையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். பொதுவாக, அறிஞர், அரசியல்வாதி, தத்துவஞானி, ‘ஸ்வாமி ‘, என பெயரளவில் அறியப்படுவோர், கிருஷ்ணரைப் பற்றிய பக்குவ ஞானமின்றி கீதைக்குக் கருத்துரை எழுதுகின்றனர். அதன் மூலம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் புறக்கணிக்கவோ அழிக்கவோ முயற்சி செய்கின்றனர். இத்தகைய நெறி விரோதக் கருத்துக்கள், மாயாவாத பாஷ்யங்கள் என அறியப்படுகின்றன. “மாயாவாதக் கண்ணோட்டத்தில் பகவத்கீதையைப் புரிந்துகொள்ள முயல்பவர் அனைவரும் பெரும் அபத்தத்தையே செய்கின்றனர்” என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்பெரும் அபத்தத்தின் விளைவாக, கீதையை இத்தவறான முறையில் கற்போர், ஆன்மீகப் பாதையின் வழியில் நிச்சயமாக குழப்பப்பட்டு, முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பச் செல்ல இயலாதவர்களாகி விடுவது உறுதி.

பிரம்மாவின் ஒரு தினத்தில் ஒரு முறை, அதாவது நமது 860,00,00,000 வருடங்களுக்கு ஒரு முறை, பந்தப்பட்ட ஆத்மாக்களை வழி நடத்தும் நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகிற்கு வருகிறார்; அதே நோக்கத்துடன் பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே இலட்சியமாகும். பகவத் கீதையிலே கூறப்பட்டுள்ள இந்நோக்கத்தை நாம் அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிடில் பகவத் கீதையோ, அதனை மொழிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையோ புரிந்துகொள்ள முயல்வதில் அர்த்தமில்லை. முதலாவதாக, பல கோடி வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத்கீதையை சூரிய தேவனுக்கு உபதேசித்தார். கிருஷ்ணரது அதிகாரத்தன்மையை ஏற்று, அதற்கு தவறான விளக்கம் ஏதுமளிக்காமல், நாம் இந்த உண்மையை ஏற்க வேண்டும்; அதன் மூலம், பகவத் கீதையின் சரித்திர முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். கிருஷ்ணரது விருப்பத்தைக் கவனிக்காமல், பகவத் கீதைக்கு விளக்கமளிப்பது மாபெரும் குற்றமாகும். இந்தக் குற்றத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது முதல் சீடரான அர்ஜுனனால், அவர் எவ்வாறு நேரடியாகப் புரிந்துக் கொள்ளப்பட்டரோ, அவ்வாறே (புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக) அவரைப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பகவத்கீதையின் இத்தகு அறிவே உண்மையில் பலனளிப்பதும் வாழ்வின் நோக்கத்தை அடைவதில் மனித சமுதாயத்திற்கு சேவை செய்யத் தகுதியுடையதுமாகும்.

வாழ்வின் உன்னதமான பக்குவத்தை அளிப்பதால், ‘கிருஷ்ண பக்தி இயக்கம் ‘ மனிதகுலத்திற்கு இன்றியமையாததாகும். இஃது எவ்வாறு என்பது பகவத் கீதையில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஜடக் கற்பனையாளர்கள் தமது அசுர நாட்டங்களைப் பரப்புவதற்கும், வாழ்வின் எளிய நோக்கங்களைப் பற்றிய சரியான அறிவிலிருந்து மக்களை வழிதவறச் செய்வதற்கும் பகவத் கீதையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கடவுளாகிய கிருஷ்ணர் எவ்வாறு மிகமிகப் பெரியவர் என்பதையும் உயிர் வாழிகளின் (ஜீவாத்மாக்களின்) உண்மை நிலை என்ன என்பதையும் ஒவ்வொருவரும் அறிய வேண்டும். உயிர் வாழிகள் அனைவரும் நித்தியமாகத் தொண்டரே என்பதையும், கிருஷ்ணருக்குத் தொண்டாற்றாவிடில், அவன் ஜட இயற்கையின் முக்குணங்களின் பல்வேறு விதங்களில், மாயைக்குத் தொண்டாற்ற வேண்டிவரும் என்பதையும், இதன் விளைவாக பிறப்பு இறப்புச் சுழலில் முடிவின்றி அவன் அலைய வேண்டிவரும் என்பதையும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிவரும். முக்தி பெற்றுவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் மாயாவாத கற்பனையாளரும் இந்தத் திட்டத்திற்கு கீழ்படவே வேண்டும். இந்தஅறிவு, மாபெரும் விஞ்ஞானத்தை உள்ளடக்கி இருப்பதால், ஒவ்வொரு உயிர் வாழியும் தனது சுய நன்மைக்காக இதனைக் கேட்க வேண்டும்.

பொதுவாக, முக்கியமாக இக்கலி யுகத்தில், கிருஷ்ணரது வெளிப்புறச் சக்தியால் மிகவும் கவரப்பட்ட மக்கள் “ஜட இன்பங்களை அதிகரிப்பதால் ஒவ்வொருவனும் மகிழ்வடைவான்” என்ற தவறான எண்ணத்துடன் உள்ளனர். ஜட சக்தி என்றறியப்படும் வெளிப்புறச் சக்தி மிக வலிமை வாய்ந்தது என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. ஏனெனில், ஜட இயற்கையின் கடும் நியதிகளால் ஒவ்வொருவரும் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளனர். உயிர்வாழி இறைவனின் ஆனந்த அம்சம் என்பதால் அவருக்கு உடனடியாக தொண்டு புரிவதே அவனது இயற்கையான செயலாகும். அறியாமையின் ஆதிக்கத்தால், தன்னை என்றுமே மகிழ்வடையச் செய்யாத பல்வேறு பொருட்களில், தனது சுயப் புலனுகர்விற்குத் தொண்டாற்றுவதன் மூலம் இன்புற முயல்கிறான் ஒருவன். தனது சுய ஜடப்புலன்களை திருப்தி செய்ய முயல்வதை விட்டு, இறைவனது புலன்களை திருப்திபடுத்த வேண்டும். இதுவே, வாழ்வின் உன்னதமான பக்குவ நிலை. இறைவன் இதையே விரும்புகிறார்; இதையே வற்புறுத்தி கேட்கிறார். பகவத் கீதையின் இந்த மையப் பொருளை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். பகவத் கீதை உண்மையுருவில் என்னும் இந்நூல், அந்த அந்நோக்கத்தில் எவ்வித களகங்கமுமின்றி எம்மால் அளிக்கப்படுவதால் இறைவனது நேரடி வழிகாட்டலின்கீழ் பகவத் கீதையின் நடைமுறை அறிவைப் பெற்று உண்மையிலேயே பலனடைவதில் ஆர்வமுடையோர் கிருஷ்ண பக்தி இயக்கத்திடமிருந்து உதவி பெற வேண்டும். எனவே, இங்கே யாம் அளித்துள்ள பகவத் கீதை உண்மையுருவில் எனும் இப்புத்தகத்தைப் படிப்பதால் மக்கள் உன்னதமான பலனடைவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு யாரேனும் ஒரே ஒர மனிதர், இறைவனின் தூய பக்தரானாலே, எமது முயற்சி பெரும் வெற்றியடைந்ததாக கருதுவோம்.

அ.ச.பக்திவேதாந்தசுவாமி

12 மே, 1971

சிட்னி, ஆஸ்ரேலியா.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question