Wednesday, October 16

அறிமுகம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அறிமுகம்

ஓம் அக்ஞான – திமிராந்த ஸ்ய

க்ஞானாஞ்ஜன – ஷலாகயா

சக்ஷுர் உன்மீலிதம் யேன

தஸ்மை ஸ்ரீ – குரவே நம:

ஸ்ரீ – சைதன்ய – மனோ – (அ)பீஷ்டம்

ஸ்தாபிதம் யேன பூதலே

ஸ்வயம் ரூப: கதா மாஹ்யம் த

தாதி ஸ்வ – பதாந்திகம்

நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களைச் சமர்பிக்கிறேன்.

பகவான் ஸ்ரீ சைதன்யரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான இயக்கத்தை இப்பௌதிக உலகில் நிறுவிய ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் எப்போது தமது பாதக் கமலங்களில் எனக்குஅடைக்கலம் தருவார்.

வந்தே (அ)ஹம் ஸ்ரீ-குரோ: ஸ்ரீ-யுத-பத –

கமலம் ஸ்ரீ-குரூன் வைஷ்ணவாம்ஷ் ச

ஸ்ரீ-ரூபம் ஸாக்ரஜாதம் ஸஹ-கண-

ரகுநாதான் விதம் தம் ஸ-ஜீவம்

ஸாத் வைதம் ஸாவதூதம் பரிஜன-

ஸஹிதம் க்ருஷ்ண-சைதன்ய-தேவம்

ஸ்ரீ-ராதா-க்ருஷ்ண-பாதான் ஸஹ-கண-

லலிதா-ஸ்ரீ-விஷாகான்விதாம்ஷ் ச

எனது ஆன்மீக குருவின் பாத கமலங்களுக்கும் எல்லா வைஷ்ணவர்களின் பாதங்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்பித்துக் கொள்கிறேன். ஸ்ரீல ரூபகோஸ்வாமி, அவரது மூத்த சகோதரர் ஸநாதன கோஸ்வமி, ரகுநாத தாஸ, ரகுநாத பட்ட, கோபால பட்ட, ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள். அத்வைத ஆச்சாரியர், கதாரர், ஸ்ரீவாஸர் மற்றும் பக்தர் குழாமுடன், ஸ்ரீ நித்யானந்தருக்கும் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யருக்கும் எனது பணிவான வணக்கங்கள். ஸ்ரீமதி ராதாராணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர்களது தோழிகளான லலிதா, விசாகைக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

ஹே க்ருஷ்ண கருணா-ஸிந்தோ

தீன-பந்தோ ஜகத் பதே

கோபேஷ கோபிகா-காந்த

ராதர-காந்த நமோ (அ)ஸ்து தே

என்னருமை கிருஷ்ணா, பரிதவிப்பவரின் நண்பரும் படைப்பின் மூலமும் நீரே. கோபியர்களின் நாயகரும் நாயகரும் ராதாராணியின் காதலரும் நீரே. உமக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

தப்த-காஞ்சன-கௌராங்கி

ராதே ஸ்ருந்தாவனேஷ்வரி

வ்ருஷபானு-ஸுதே தேவி

ப்ரணமாமி ஹரி-ப்ரியே

விருந்தாவனத்தின் ராணியும், உருக்கிய பொன்னிற மேனி கொண்டவருமான ராதாராணிக்கு வணக்கம். மன்னர் விருஷபானுவின் மகளான தாங்கள், பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்.

வாஞ்சா-கல்பதருப்யஷ் ச

க்ருபா-ஸிந்துப்ய ஏவ ச

பதிதானாம் பாவனேப்யோ

வைஷ்ணவேப் யோ நமோ நம:

நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லாரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவர்களுமான, பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய பிரபு-நித்யானந்த

ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பிரபு நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

பகவத் கீதை கீதோபநிஷத் என்றும் அறியப்படும். வேத இலக்கியங்களில் மிக முக்கிய உபநிஷதமான இந்நூல் வேத ஞானத்தின் சாரமாகும். பகவத் கீதைக்கு எத்தனையோ ஆங்கில உரைகள் இருக்க, இன்னொன்றின் அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். இந்த வெளியீட்டின் அவசியம் பின்வருமாறு விளக்கப்படலாம். சமீப காலத்தில் ஓர் அமெரிக்கப் பெண்மணி பகவத் கீதையின் ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சிபாரிசு செய்யுமாறு என்னை வேண்டினாள். அமெரிக்காவில் என்னவோ பகவத் கீதையின் ஆங்கிலப் பதிப்புகள் பல கிடைக்கலாம். ஆனால் நான் பார்த்தவரை, அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ, அவற்றில் ஒன்றைக்கூடி பிரமாணமானதாகக் கூற இயலாது. ஏனெனில், அவை ஒவ்வொன்றிலும் பகவத் கீதையின் உள்நோக்கத்தைத் தொடாமல், ஒவ்வொரு கருத்துரையாளரும் தனது சொந்த அபிப்பிராயத்தையே பெரும்பாலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பகவத் கீதையின் உள்நோக்கம் பகவத் கீதையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. உதரணமாக, ஒரு குறிப்பிட்ட மருந்தை நாம் உட்கொள்ள விரும்பினால், அந்த மருந்தின் தலைப்புக் காகித்தில் உள்ள விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். ஒரு நண்பர் கூறுவது போலவோ, நமக்குத் தோன்றிய படியோ மருந்துண்ண முடியாது. தலைப்புக் காகிதத்தின் மேல் கூறப்பட்டள்ளபடியோ, மருத்துவர் ஒருவரது அறிவுரையின்படியோ மருந்து உட்கொள்ளப்பட வேண்டும். அது போல பகவத் கீதையைக் கூறியவரது வாழிகாட்டுதலின் படியே, கீதையை உண்மையுருவில் எடுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும். பகவத் கீதையை உபதேசித்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் பரம புருஷராக, முழுமுதற் கடவுளாக, பகவானாகக் கூறப்பட்டுள்ளார். பகவான் என்ற சொல் சில வேளைகளில் சக்தி வாய்ந்த நபரையோ தேவரையோ குறிக்கலாம், எனவே இங்குள்ள பகவான் என்னும் சொல், ஸ்ரீ கிருஷ்ணரை மிகச்சிறந்த நபராக குறிப்பிடுவது நிச்சயம். ஆனால் அதே நேரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதை நாம் அறிய வேண்டும். வேத ஞானத்தின் அதிகாரிகளாக இந்தியாவில் தோன்றிய சங்கராசாரியார், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நிம்பார்க் ஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு போன்ற பல்வேறு ஆச்சாரியர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றனர். பகவத் கீதையில் பகவானே தன்னை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக நிலை நாட்டுகின்றார். பிரம்ம சம்ஹிதையிலும், எல்லாப் புராணங்களிலும், குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்திலும் (க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்) அவர் இவ்விதமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். எனவே, முழுமுதற் கடவுள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். எனவே, முழுமுதற் கடவுள் தானகவே விளக்கியுள்ளபடி நாம் பகவத் கீதையை அதன் உண்மையுருவில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கீதையின் நான்காம் அத்தியாத்தில் (4.1-3) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

இமம் விவஸ்வதே யோகம்

ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்

விஸ்வான் மனவே ப்ராஹ

மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்

ஏவம் பரம்பரா-ப்ராப்தம்

இமம் ராஜர்ஷயோ விது

ஸ காலேனேஹ மஹதா

யோகோ நஷ்ட பரந்தப

ஸ ஏவாயம் மயாதே (அ)த்ய

யோக ப்ரோக்த புராதன

பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி

ரஹஸ்யம் ஹ்யேதத் உத்தமம்

பகவத்கீதை எனும் இந்த யோக முறை முதலில் சூரியதேவனுக்குச் சொல்லப்பட்டதாகவும், சூரியதேவன் அதை மனுவுக்கும் மனு இக்ஷ்வாகுவுக்கும் விளக்கியதாக அர்ஜுனனிடம் பகவான் கூறுகிறார். இவ்விதமாக, ஒருவர் பின் ஒருவராக சீடப் பரம்பரையில் இந்த யோக முறை வந்து கொண்டிருந்தது. காலப் போக்கில் மறைந்து விட்டதால் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இப்போது அர்ஜுனனுக்கு உபதேசிக்க வேண்டியுள்ளது.

தனது நண்பனும் பக்தனுமானதால் இந்தப் பரம இரகசியத்தை அர்ஜுனனிடம் உரைக்கப்பதாக பகவான் கூறுகிறார். பகவத் கீதை பகவானின் பக்தர்களுக்கான நூல் என்பதே இதன் உள்ளுரையாகும். ஞானி (அருவவாதி), யோகி (தியானம் செய்பவன்), பக்தன் என மூன்று விதமான ஆன்மீகவாதிகள் உண்டு. பழைய பரம்பரை முறிந்ததனால், புதிய பரம்பரையின் முதல் சீடனான அர்ஜுனனை ஆக்குவதாக பகவான் அவனிடம் தெளிவாகக் கூறுகிறார். எனவே, சூரியதேவனிலிருந்து தொடங்கி மற்றவர்கள் வழியாகத் தொடர்ந்து கீழிறங்கி வந்து கொண்டிருந்த பரம்பரையின் அதே சிந்தனையில் மற்றொரு பரம்பரையை நிறுவ வேண்டுமென்பதும், அர்ஜுனனால் தனது உபதேசங்கள் புதிதாக மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பதும் பகவானின் விருப்பம். அர்ஜுனன் பகவத்கீதையை அறிந்துணர்வதற்கான அதிகாரம் பொருந்தியவனாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பனாகவும், நேரடிச் சீடனாகவும், பக்தனாகவும் இருந்ததால் பகவத் கீதை அவனுக்கு உபதேசிக்கப்பட்டது என்பதை நாம் காண்கிறோம். எனவே, அர்ஜுனனுக்கு சமமான தகுதிகள் இருக்கும் ஒருவரே பகவத் கீதையை நன்றாக அறிய முடியும். அதாவது பகவானின் நேரடி உறவு கொண்ட பக்தராக அவர் இருக்க வேண்டும். ஒருவர் பகவானுடைய பக்தராக மாறியவுடன், அவரும் பகவானுடன் நேரடித் தொடர்புடையவராகிறார். இது மிகவும் விரிவான விஷயமாகும் என்றாலும், ஒரு பக்தர் பகவானுடன் ஐந்து விதங்களில் ஏதாவதொரு வழியில் உறவுடையவராகிறார் என்று சுருக்கமாகக் கூறலாம்.

1.சாந்தமான பக்தராகஇருக்கலாம்;

2.தொண்டு செய்யும் பக்தராக இருக்கலாம்;

3.நண்பராக பக்தர் இருக்கலாம்;

4.பெற்றோராக பக்தர் இருக்கலாம்;

5.காதலராக பக்தர் இருக்க¬லாம்;

அர்ஜுனன் பகவானுடன் ‘நண்பன் ‘ என்ற முறையில் உறவு கொண்டிருந்தான். பௌதிக உலகில் காணும் நட்பிற்கும் இந்த நட்பிற்கும் ஆழ்ந்த வேறுபாடு நிச்சயமாக உண்டு. எல்லாராலும் அடைய முடியாத திவ்யமான நட்பு இது. உண்மையில் அனைவருக்குமே பகவானுடன் ஒரு குறிப்பிட்ட உறவுமுறை உண்டு, பக்திமய சேவையில் பக்குவமடையும் போது அவ்வுறவு உணரப்படுகிறது. ஆனால் நம் வாழ்வின் தற்போதைய நிலையில், பரம புருஷ பகவானை மட்டுமின்றி அவருடனான நித்திய உறவையும் நாம் மறந்திருக்கின்றோம். கோடிக்கணக்கான ஜீவராசிகள் உள்ள போதிலும் ஒவ்வொரு ஜீவனும், பகவானுடன் ஒரு குறிப்பிட்ட உறவைக் கொண்டுள்ளான். இது ஸ்வரூப என்றழைக்கப்படுகிறது. பக்தித் தொண்டு என்னும் வழிமுறையின் மூலம் அந்த ஸ்வரூபத்திற்கு புத்துயிரளிக்க முடியும். அந்த நிலை ஸ்வரூப-ஸித்தி (தனது சுயநிலையை அடைதல்) என்று கூறப்படுகின்றது. பக்தனான அர்ஜுனன், பகவானுடன் நட்பு ரீதியில் தொடர்பு கொண்டவனாக இருந்தான்.

அர்ஜுனன் இந்த பகவத் கீதையை எவ்வாறு ஏற்றுக் கொண்டான் என்பது கவனிக்கத்தக்கதாகும். அவன் ஏற்றுக்கொண்ட விதம் பத்தாம் அத்தியாயத்தில் (10.12-14) கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன உவாச

பரம் ப்ரஹ்ம பரம தாம

பவித்ரம் பரமம் பவான்

புருஷம் ஷாஷ்வதம திவ்யம்

ஆதி-தேவம் அஜம் விபும்

ஆஹுஸ் த்வாம் ருஷய ஸர்வே

தேவர்ஷிர் நாரத ஸ்ததா

அஸிதோ தே வலோ வ்யாஸ

ஸ்வயம்சைவ ப்ரவீஷி மே

ஸர்வம் எதத் ருதம் மன்யே

யன் மாம் வத ஸி கேஷவ

ந ஹி தே பகவான் வ்யக்திம்

விது ர் தே வா ந தானவா

“அர்ஜுனன் கூறினான்: நீரே பரம புருஷ பகவான், பரந்தாமர், தூய்மையானவர், பரம சத்தியம், நித்தியமானவர், தெய்வீகமானவர், மூல புருஷர், பிறப்பற்றவர், மிகச் சிறந்தவர். உம்மைப் பற்றிய இவ்வுண்மையை நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற சிறந்த முனிவர்கள் எல்லாம் உறுதி செய்கின்றனர். இப்போது நீரே இதை எனக்குக் கூறுகின்றீர். கிருஷ்ணா, நீர் எனக்குக் கூறியவை எல்லாவற்றையும் உண்மையென முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். எம்பெருமானே, தேவர்களோ அசுரர்களோ உமது தன்மையை அறியார்கள்.”

புருஷோத்தமரான முழுமுதற் கடவுளிடமிருந்து பகவத் கீதையைக் கேட்டபின், அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை பரபிரம்மனாக ஏற்றுக் கொண்டான். ஒவ்வொரு உயிரும் பிரம்மனே, ஆனால் உன்னத உயிர்வாழியான முழுமுதற்கடவுள், மிகவுயர்ந்த பிரம்மனாவர். பரந்தாமர் என்றால் அவரே அனைத்தும்உறையும் உன்னத இருப்பிடம் என்று பொருள். பவித்ரம் என்றால், தூய்மையானவர், பௌதிக அசுத்தால் களங்கப்படாதவர் என்று பொருள்; புருஷம் என்றால் அவரே உன்னத அனுபவிப்பாளர்; திவ்யம் என்றால் திவ்யமானவர்; ஆதி தேவம் என்றால் எல்லா தேவர்களும் ஆதியான முழுமுதற் கடவுள்; அஜம் என்றால் பிறப்பற்றவர்; விபு ம் என்றால் மிகப்பெரியவர்.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனது நண்பர் என்பதால் இவற்றையெல்லாம் முகஸ்தியாக அர்ஜுனன் கூறிக்கொண்டிருந்தான் என்று தற்போது ஒருவர் எண்ணலாம். பகவத் கீதையைப் படிப்பவரது மனங்களிலிருந்து இத்தகைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக, தன்னால் மட்டுமின்றி, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற அதிகாரம் பெற்ற நபர்களாலும், ஸ்ரீ கிருஷ்ணர் புருஷேத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை அடுத்த பக்கத்தில் கூறி, தனது புகழுரைக்குச் சான்று கூறுகிறான் அர்ஜுனன். இந்த அதிகாரிகள் எல்லா ஆச்சாரியர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விதத்தில், வேத ஞானத்தை உண்மையுருவில் வழங்குபவர்களாவர். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் எல்லாவற்றையும் பூரண பக்குவமுடையதாக அர்ஜுனன் ஏற்றுக் கொள்கிறான். ஸர்வம்—ஏதத் ருதம் மன்யே “நீ உரைப்பவை அனைத்தையும் உண்மையென நான் ஏற்கிறேன்.” மேலும், பகவானின் வியக்கித்துவத்தைப் புரிந்து கொள்வது மிகக் கடினமென்றும் பெரும் தேவர்களால் கூட அவரை அறிய முடியாதென்றும் அர்ஜுனன் கூறுகிறான். மனிதர்களைவிடச் சிறந்தவர்களால் கூட பகவானை அறிய முடியாது என்பது இதன் பொருள். இப்படியிருக்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனாக ஆகாமல், ஒரு மனிதன் அவரைப் புரிந்து கொள்ளுதல் எவ்வாறு சாத்தியமாகும்?

எனவே, பகவத் கீதை பக்தி உணர்வுடன் அணுக்கப்பட வேண்டும். தான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமமானவன் என்றோ, ஸ்ரீ கிருஷ்ணர் சாதரண மனிதர் என்றோ எண்ணக் கூடாது, அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர் என்று கூட எண்ணக் கூடாது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாவார். எனவே, பகவத் கீதையைப் புரிந்து கொள்ள முயல்பவர், குறைந்த பட்சம் ஏட்டளவிலாது ஸ்ரீ கிருஷ்ணரை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும், அந்த அடக்கமான மனோநிலையினால் பகவத் கீதையை நம்மால் புரிந்து கொள்ள இயலும் — இதுவே பகவத் கீதையின் கூற்றும் அர்ஜுனனின் கூற்றுமாகும். பகவத் கீதை ஓர் ஆழ்ந்த புதிர் என்பதால், அடக்கமான நிலையில் பயின்றாலன்றி இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம்.

பகவத் கீதை என்றால் என்ன? பௌதிக வாழ்வின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத் கீதையின் நோக்கமாகும். குருக்ஷேத்திரத்தில் போர் புரிவதில் அர்ஜுனனுக்கு கஷ்டமிருந்ததைப் போல ஒவ்வொரு மனிதனும் பல விதங்களில் கஷ்டப்படுகிறான். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்தான், அதன் பயனாக கீதை உபதேசிக்கப்பட்டது. அர்ஜுனன் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் பௌதிக வாழ்வின் கவலைகளில் மூழ்கியுள்ளோம். நமது வாழ்க்கை நிலையற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது. உண்மையில் நாம் நிலையற்ற தன்மையால் அச்சுறுத்தப் படக்கூடியவர்களல்ல. நம் உண்மை நிலையோ நித்தியமானது. ஆனால் எவ்வாறோ அஸத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். அஸத் என்பது இல்லாததைக் குறிக்கிறது.

துன்பப்படும் பற்பல மனிதர்களுள் ஒரு சிலரே தனது நிலையை பற்றியும், தாங்கள் யார், இது போன்ற விரும்பத்தகாத சூழ்நிலையில் தாங்கள் தள்ளப்படக் காரணம் என்ன என்பதைப் பற்றியும் ஆராய்வார்கள். ஒருவன், தனது தனது துன்பத்திற்கு காரணம் கேட்கும் நிலைக்கு எழுப்படாதவரை, தான் துன்பத்தை விரும்பவில்லை, துன்பத்திற்கெல்லாம் தீர்வை விரும்புகிறேன் என்பதை உணராதவரை, பக்குவமான மனிதனாக கருதப்படவதில்லை. அவனது மனதில் இத்தகு கேள்விகள் எழும்போது தான் மனிதத் தன்மை தொடங்குகிறது. பிரம்ம சூத்திரத்தில் இந்த ஆய்வு, ப்ரஹ்ம – ஜிக்ஞாஸா என்றழைக்கப்படுகிறது. அதாதோ ப்ரஹ்ம-ஜிக்ஞாஸா. பூரணத்தின் இயற்கையை ஆயாதவரை, மனிதனின் ஒவ்வொரு செயலும் தோல்வியாக கருதப்படுகிறது. எனவே, ‘நாம் ஏன் துன்புறுகிறோம், எங்கிருந்து வந்தோம், மரணத்திற்கு பின் எங்கே செல்வோம் ‘ என்று வினவத் தொடங்குபவர்களே, பகவத் கீதையை பயிலத் தகுந்த மாணவராவர். ஒரு நேர்மையான மாணவர் முழுமுதற் கடவுளிடம் அசையாத மதிப்புடையவராக இருக்க வேண்டும். அர்ஜுனன் அத்தகு மாணவனாகத் திகழ்ந்தான்.

வாழ்வின் உண்மையான நோக்கத்தை மனிதன் மறக்கும் போது, அதனை மீண்டும் நிறுவுதல் என்னும் முக்கியக் குறிக்கோளுடன் பகவான் தோன்றுகின்றார். இருப்பினும், விழிப்புணர்ச்சி பெற்ற பற்பல மனிதர்களில் யாரேனும் ஒருவனே தன்னிலையை அறிவதில் உண்மையான ஆர்வத்துடன் இருக்கக்கூடும். அவனுக்காகவே இந்த கீதை பேசப்படுகிறது. உண்மையில் நாமெல்லோரும் அறியாமையெனும் பெண்புலியால் விழுங்கப்பட்டுள்ளோம். ஆனால் பகவானோ உயிர்வாழிகளின் மீது குறிப்பாக மனிதர்கள் மீது மிகவும் கருணையுடையவராக இருக்கிறார். தனது நண்பனான அர்ஜுனனை மாணவனாக்கிக் கொண்டு இந்த நோக்கத்திற்காகவே அவர் பகவத் கீதையை உபதேசித்தார்.

பகவான் கிருஷ்ணரின் தோழரான அர்ஜூனன், எல்லாவித அறியாமைக்கும் அப்பாற்பட்டவன் இருந்தும் வாழ்வின் சிக்கல்களைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம் அவன் வினவ வேண்டும் என்பதற்காகவும், வருங்காலத் தலைமுறைகளின் நன்மைக்காக அச்சிக்கல்களுக்கு விளக்கமளித்து ஒரு வாழ்க்கைத் திட்டத்தை பகவான் வகுக்க வேண்டும் என்பதற்காவுமே அர்ஜுனன் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அறியாமைக்கு உட்படுத்தப்பட்டான். இந்த வாழ்க்கை திட்டப்படி நடந்து, மனித வாழ்வின் இலட்சியத்தை பக்குவபடுத்திக் கொள்ள மனிதனால் இயலும்.

பகவத் கீதை, ஐந்து அடிப்படை உண்மைகளை தெளிவாகவும் முழுமையாகவும் விளக்குகின்றது. முதலாவதாக இறைவனின் விஞ்ஞானமும் பின்னர் ஜீவராசிகளின் (உயிர்வாழிகளின்) ஸ்வரூப நிலையும் விளக்கப்படுகிறது. ஈஸ்வரன் எனும் ஆள்பவரும், ஜீவன்கள் எனும் ஆளப்படுவர்களும் இருக்கின்றனர். “நான் ஆளப்படவில்லை சுதந்திரமானவன்” என்று ஒருவன் கூறினால் அவன் அறிவற்றவனே. குறைந்த பட்சம், கட்டுண்ட வாழ்விலுள்ள ஜீவன், ஒவ்வொரு விதத்திலும் ஆளப்படுகிறான். எனவே, உயர் ஆட்சியாளரும் (ஈஸ்வரனும்) ஆளப்படும் உயிர்களும் (ஜீவன்களும்) பகவத்கீதையின் கருப்பொருளாக அமைகின்றனர். பிரக்ருதி (ஜட இயற்கை), காலம் (ஜட இயற்கை தோன்றியிருக்கும் காலம் அல்லது முழு பிரபஞ்சத்தின் ஆயுட்காலம்), கர்மா (செயல்) ஆகியவையும் விவாதிக்கப்படுகின்றன. பிரபஞ்சத் தோற்றம் பல்வேறு செயல்கள் நிறைந்தது. எல்லா உயிர்வாழிகளும் பலதரப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பகவத் கீதையிலிருந்து, கடவுள் யார், ஜீவாத்மாக்கள் யாவர், பிரக்ருதி என்றால் என்ன, பிரபஞ்சத் தோற்றம் என்றால் என்ன, அஃது எவ்வாறு காலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. உயிர்வாழிகளின் செயல்கள் யாவை, என்பனவற்றையெல்லாம் நாம் அறிதல் அவசியம்.

பகவத் கீதையின் இந்த ஐந்து அடிப்படை கருப்பொருட்களில், முழுமுதற் கடவுள், அல்லது கிருஷ்ணர், அல்லது பிரம்மன், அல்லது உயர் ஆட்சியாளர், அல்லது பரமாத்மா (நீங்கள் விரும்பும் பெயரை உபயோகித்துக் கொள்ளலாம்) என்று அழைக்கப்படுபவரே எல்லோரிலும் சிறந்தவர் என்பது நிறுவப்படுகிறது. உயிர்வாழிகள், குணத்தின் அடிப்படையில் உயர் ஆட்சியாளர்களைப் போன்றவர்களே. பகவத் கீதையின் பின் அத்தியாயங்களில் விளக்கப்படுவதைப் போல, பௌதிக இயற்க்கையின் பிரஞ்ச விவகாரங்களில் பகவானுக்கு உயர் அதிகாரம் உண்டு. பௌதிக இயற்கை சுதந்திரமானதல்ல, முழுமுதற் கடவுளின் ஆணைகளுக்கிணங்கியே அவள் செயல்படுகின்றாள். பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், மயாத் யக்ஷேண ப்ரக்ருதி ஸுயதே ஸ-சராசரம் — இப்பௌதிக இயற்க்கை என் கண்காணிப்பின் கீழ் இயங்குகின்றது. “பிரபஞ்ச இயற்கையில் வினோதமான சம்பவங்கள் நிகழும்போது நாம் இந்த பிரபஞ்ச காட்சிக்குப் பின்னால் ஆளுநரொருவர் இருப்பதை அறிய வேண்டும். ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்கவே இயலாது. ஆளுநர் இருப்பதைக் கவனிக்காமலிருப்பது குழந்தைத்தனமே. உதாரணமாக, குதிரையினாலோ வேறு எந்த மிருகத்தினலோ இழுக்கப்படாத மோட்டார் வாகனத்தின் ஓட்டம், ஒரு குழந்தைக்கு மிகவும் வினோதமாகத் தோன்றலாம். ஆனால் அறிவுள்ள மனிதனுக்கு அந்த மோட்டார் இயந்திரத்தின் தொழில்நுட்பம் தெரியும். ஒவ்வொரு இயந்திரத்திற்குப் பின்னும் மனிதனின் (ஓட்டுநரின்) திறமை உள்ளது என்று அவன் அறிவான். இதுபோல முழுமுதற் கடவுளும் ஓர் ஓட்டுநராவார், அவரது வழிகாட்டுதலின் படியே அனைத்தும் இயங்குகின்றன. ஜீவன்கள், பின்வரும் அத்தியாயங்களில் கண்டுள்ளபடி, அவரது அம்ங்களாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். தங்கத்தின் ஒரு துகள் எவ்வாறு தங்கமோ, கடல் நீரின் ஒரு துளி எவ்வாறு உப்பு கரிக்கின்றதோ, அது போல நம் ஈஸ்வரன் எனப்படும் உயர் ஆளுநரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களாகையால், அந்த முழுமுதற் கடவுளின் குணங்களனைத்தும் அணுவளவில் நம்மிடம் உள்ளது. ஏனெனில் நாம் மிகச்சிறிய ஈஸ்வரன்கள், கீழ்படிந்த ஈஸ்வரன்கள். நாம் இயற்கையை கடடுப்படுத்த முயல்கிறோம். (இப்போது விண்வெளியையும் கிரகங்களையும் கட்டுப்படுத்த முயல்வது போல), ஆனால் கட்டுப்படுத்த விரும்பும் இது போன்றத் தன்மை கிருஷ்ணரிடம் உள்ளதாலேயே நம்மிடமும் இருக்கின்றது. பௌதிக இயற்கையின் மீது ஆட்சி செலுத்த நாம் விரும்பினாலும், நாம் பரம ஆளுநர்களல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது.

ஜட இயற்கை என்றால் என்ன? இது கீதையில் கீழ்நிலை பிரக்ருதி அல்லது கீழ்நிலை இயற்கையாக விளக்கப்பட்டுள்ளது. உயிர்வாழிகள், உயர்நிலை பிரக்ருதியாக விளக்கப்பட்டுள்ளனர். பிரக்ருதி, கீழ்நிலையானாலும் சரி, உயர்நிலையானாலும் சரி எப்போதுமே கட்டுப்படுத்தப்படுகின்றது. பிரக்ருதி என்பது பெண்பால், மனைவியின் செயல்கள் கணவனால் கட்டுப்படுத்துவதைப் போல, பிரக்ருதியும் பகவானால் கட்டுப்படுத்தப்படுகிறாள். பிரக்ருதி எப்போதும் கீழ்படிந்திருப்பதும், ஆள்பவரான இறைவனால் ஆதிக்கம் செலுத்தப்படுவதுமாகும். உயிர்வாழிகள், பௌதிக இயற்கை ஆகிய இரண்டுமே முழுமுதற் கடவுளால் கட்டுபடுத்தப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர். கீதையின் படி, உயிர்வாழிகள், பரம புருஷரின் அம்சங்கள் என்ற போதிலும். பிரக்ருதியாகவே கருதப்பட வேண்டியவர்கள். பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயம், ஐந்தாவது பதத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அபரேயம் இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் / ஜீவ-பூதாம் — இந்த பௌதிக இயற்கை எனது கீழ்நிலை பிரக்ருதியாகும். ஆனால் இதற்கு அப்பால் ஜீவ-பூதாம் (உயிர்வாழிகள்) என்ற வேறொரு பிரக்ருதி உள்ளது.

பௌதிக இயற்கை மூன்று குணங்களால் அமைந்ததாகும் — நற்குணம் (ஸத்வ), தீவிர குணம் (ரஜோ), அறியாமை குணம் (தமோ) என்பன அவை. இக்குணங்களுக்கு மேல் நித்தியமான காலம் உள்ளது. இயற்கை குணங்களின் கலவையாலும், நித்தியமான காலத்தின் பார்வை மற்றும் கட்டுப்பாட்டினாலும் செயல்கள் நடைபெறுகின்றன — அவை கர்மா என்றழைக்கப்படுகின்றன. இந்த செயல்கள் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து செய்யப்பட்டு வருகின்றன, அவற்றின் பலன்களால் நாம் இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிக்கின்றோம். உதராணமாக, ஒரு வியாபாரியான நான், புத்திசாலிதனத்துடன் கடுமையாக உழைத்து மிகுந்த செல்வம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், அப்போது நான் இன்பமடைகிறேன், ஆனால் வியாபாரத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்டால் துன்பப்படுவேன். இதுபோல வாழ்வின் எல்லா நிலைகளிலும் நாம் நமது செயல்களின் விளைவுகளை, இன்பமாகவோ துன்பாகவோ அனுபவிக்கின்றோம். இதுவே கர்மா என்றழைக்கப்படுகிறது.

ஈஸ்வரன் (பரம புருஷர்), ஜீவா (உயிர்வாழி), பிரக்ருதி (இயற்கை), காலம் (நித்தியமான காலம்), கர்மா (செயல்) ஆகியவை அனைத்தும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தில், பகவான், உயிர்வாழிகள், ஜடஇயற்கை, காலம் ஆகியவை நித்தியமானவை. பிரக்ருதியின் தோற்றம் தற்காலிகமானதாக இருக்கலாம், ஆனால் அது பொய்யல்ல. சில தத்துவவாதிகள் இயற்கையின் தோற்றம் பொய் என்று கூறுகின்றனர், ஆனால் பகவத் கீதையின் தத்துவப்படி, வைஷ்ணவர்களின் தத்துவப்படி, இஃது அவ்வாறல்ல. உலகின் தோற்றம் பொய்யாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; உண்மையானதாக, ஆனால் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது வானில் நகர்ந்து செல்லும் மேகம், அல்லது பயிர்களை வளமுறச் செய்யும் மழைக்காலத்திற்கு ஒப்பிடப்படுகிறது. மழைக்காலம் முடிந்து மேகங்கள் அகன்று மழையால் வளம்பெற்ற பயிர்களெல்லாம் வாடிவிடுகின்றன. இதுபோல, பௌதிக தோற்றமானது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி, சில காலம் இருந்து, பின் மறைகிறது. இவையே பிரக்ருதியின் செயல்களாகும். ஆனால் இந்தச் சுழற்சி நித்தியமாகச் செயல்படுவதால், பிரக்ருதி நித்தியமானதாகும், பொய்யல்ல. பகவான் இதை ‘என்னுடைய பிரக்ருதி ‘ என்று குறிப்பிடுகிறார். இந்த ஜட இயற்கை பகவானிடமிருந்து பிரித்த சக்தியாகும். இதுபோல ஜீவாராசிகளும் பகவானின் சக்தியே; ஆனால் அவர்கள் பிரிவுபடாதவர்கள், நித்தியமான உறவு கொண்டவர்கள். எனவே, பகவான், உயிர்வாழி, ஜடஇயற்கை, காலம் இவை ஒன்றோடொன்று தொடர்புடைய நித்தியமான விஷயங்கள், இருப்பினும் கர்மா நித்தியமானதல்ல. கர்மத்தின் விளைவுகள் மிகப் பழையதாக இருக்கலாம். அஃது உண்மையே. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து செய்த செயல்களின் பலன்களை நாம் இன்ப துன்பமாக அனுபவிக்கிறோம். ஆனால் நமது கர்மத்தின் விளைவுகளை நம்மால் மாற்ற இயலும், இம்மாற்றம் நமது அறிவின் பக்குவத்தை பொறுத்தது. நாம் பற்பல செயல்களில் ஈடுபட்டுள்ளோம். இந்தச் செயல்கள் எல்லாவற்றின் விளைவு, பின்விளைவுகளிலிருந்து விடுபெற எந்தச் செயலை செய்ய வேண்டும் என்பதை நிச்சயமாக நாம் அறிய மாட்டோம். ஆனால் இதுவும் பகவத் கீதையில் விளக்கப்படவுள்ளது.

முழுமுதற் கடவுள் (ஈஸ்வரன்) உன்னத உணர்வு நிலையில் உள்ளார். உயிர்வாழிகளான ஜீவன்கள் பகவானின் அம்சங்கள் என்பதால், அவர்களும் உணர்வுடையவர்கள். ஜட இயற்கை, உயிர்வாழி ஆகிய இரண்டுமே முழுமுதற் கடவுளின் சக்தியாக (பிரக்ருதியாக) விளக்கப்படுகின்றன. ஆனால் இவையிரண்டில் ஒன்றான ஜீவன், உணர்வுடையவன். ஆனால் மற்ற பிரக்ருதியோ உணர்வற்றது. இதுவே வித்தியாசம். பகவானைப் போல உணர்வுடன் இருப்பதால், ஜீவ-ப்ரக்ருதி உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான். பகவானுடைய உணர்வு, உயர்ந்த உணர்வாகும். அத்தகு உயர்ந்த உணர்வும், உயிர் வாழிகளான ஜீவனின் உணர்வும் சமமானவை என்று வாதிடக் கூடாது. தனது பக்குவத்தின் எந்த நிலையிலும், ஜீவன் உயர் உணர்வுடையவனாக ஆக முடியாது; எனவே, ஜீவனால் அப்படி ஆக முடியும் என்னும் கொள்கை நம்மை வழிதவறி நடத்திச் செல்வதாகும். ஜீவன் உயர்வுடையவனாக இருக்கலாம்; ஆனால் பக்குவமான உணர்வோ உயர் உணர்வோ அவனிடம் கிடையாது.

ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வேறுபாடு பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயத்தில் விளக்கப்படும். க்ஷேத்ரக்ஞ எனப்படும் பகவான் உயிர் வாழிகளைப் போல உணர்வுடையவரே; ஆனால் உயிர்வாழிகள் தமது குறிப்பிட்ட உடலைப் பற்றி மட்டுடே உணர்கின்றனர். பகவனோ எல்லா உடல்களையும் உணர்கிறார். ஓவ்வொரு உயிர்வாழியின் இதயத்திலும் வாழ்வதால், அனைத்து ஜீவன்களின் தனிப்பட்ட இயக்கத்தையும் அவர் உணர்ந்தவராக இருக்கிறார். நாம் இதனை மறக்கக் கூடாது. மேலும், பரம புருஷ பகவான், பரமாத்மாவின் வடிவில் ஒவ்வொரு ஜீவனின் இதயத்திலும் ஆள்பவராக (ஈஸ்வரனாக) உறைகின்றார் என்றும், ஜீவன் தனது இச்சைகேற்ப செயல்பட அவரே வழிகாட்டுகிறார் என்றும் விளக்கப்பட்டிருக்கிறது. உயிர்வாழி தான் என்ன செய்ய வேண்டுமென்பதை மறக்கிறான். முதன் முதலில் அவன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்பட முடிவெடுக்கிறான். பின்னர் தனது சொந்த கர்மத்தின் செயல்களிலும் விளைவுகளிலும் சிக்கிக் கொள்கிறான். ஆடைகளை அணிந்து களைவது போல, உடலை விட்ட பின், வேறொரு உடலில் புகுகிறான். இவ்வாறு மாறும் போது தனது கடந்த கால செயல்களுக்கேற்ப விளைவுகளையும் பின்விளைவிகளையும் அனுபவிக்கிறான். தூய்மையுடன் ஸத்வ குணத்தில் நிலைபெற்று, தான் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் யாவை என்பதை அவன் புரிந்துகொள்ளும் போது, இந்தக் கர்மங்களை மாற்றிவிட முடியும். அவன் அவ்வாறு செய்வதால் தனது கடந்த காலச் செயல்களின் விளைவுகளையும் பின்விளைவுகளையும் மாற்றிவிட முடியும். எனவே, கர்மா என்பது நித்தியமானதல்ல. இதன் காரணத்தினால்தான், ஐந்து விஷயங்களில் (ஈஸ்வரன், ஜீவா, ப்ரக்ருதி, காலம் மற்றும் கர்மா) நான்கு நித்தியமானவை, கர்மா நித்தியமானதல்ல என்கிறோம்.

பகவான், உயிர் வாழிகள், ஆகிய இருவரின் உணர்வும் ஆன்மீகமானவை — உணர்வுகள் ஆன்மீகமானவை என்பதன் அடிப்படையில் உன்னத உணர்வுடய ஈஸ்வரன், உயிர் வாழியை ஒத்துள்ளார். உணர்வுஜடத்தின் சேர்க்கையால் உற்பத்தியாவதல்ல. அஃது ஒரு தவறான கொள்கையாகும். ஜடக் கலவையின் சில குறிப்பிட்ட நிலைகளில் உணர்வு உற்பத்தியாகின்றது என்னும் கொள்கை பகவத் கீதையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வண்ணக் கண்ணாடியின் மூலம் பிரதிபலிக்கப்படும் ஒளி வண்ணமுடையதாகக் காணப்படுவதை போல, பௌதிக சூழ்நிலையின் திரைகளால், உணர்வு திரிந்து பிரதிபலிக்கப்படலாம். இருப்பினும், பகவானின் உணர்வு ஜடத்தால் பாதிக்கப்படாததாகும். மயாத்யக்ஷேண ப்ரக்ருதி என்கிறார் பகவான் கிருஷ்ணர். அவர் இந்த ஜடவுலகிற்கு இறங்கி வருகையில், அவரது உணர்வு ஜடத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பகவத் கீதை போன்ற ஆன்மீக விஷயங்களைப் பேச அவருக்கு தகுதியிருக்காது. பௌதிகத்தின் களங்கமான உணர்விலிருந்து விடுபடாத ஒருவரால் ஆன்மீக உலகைப் பற்றி எதுவும் கூற இயலாது. எனவே, இறைவன் பௌதிகத்தால் களங்கப்படுபவரல்ல. நமது உணர்வோ, நமது தற்போதய நிலையில் பௌதிகத்தால் களங்கப்பட்டுள்ளது. களங்கப்பட்ட இவ்வுணர்வை நாம் தூய்மைப்படுத்த வேண்டுமென்று பகவத் கீதை கற்பிக்கின்றது. தூய உணர்வு நிலையில் நமது செயல்கள் ஈஸ்வரனின் இச்சையுடன் ஒருங்கிணைந்து இருக்கும், அது நம்மை மகிழ்விக்கும். இதற்காக நமது தினசரிச் செயல்கள் அனைத்தையும் நாம் நிறுத்திவிட வேண்டும் என்பதல்ல. மாறாக நமது செயல்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும், தூய்மையான செயல்கள் ‘பக்தி ‘ என்று அழைக்கப்படுகின்றன. பக்திச் செயல்கள் சாதாரணச் செயல்களைச் செயல்களைப் போலத் தோன்றலாம், ஆனால் அவை களங்கமற்றவை. ஒர் அறிவற்ற மனிதன் வேண்டுமானால், பக்தனும் சாதாரண மனிதனைப் போல செயல்படுவதாகவும் தொழில் புரிவதாகவும் எண்ணலாம். ஆனால், இறைவனின் செயல்களோ பக்தனின் செயல்களோ, அசுத்த உணர்வாலோ பௌதிகத்தாலே களங்கமடைவதில்லை என்பதை மதிகுன்றிய அம்மனிதன் அறிவதில்லை. அச்செயல்கள் இயற்கையின் முக்குணஙகளுக்கு அப்பாற்பட்டு விளங்கும் திவ்யமான செயல்களாகும். எனினும், தற்போதைய நிலையில் நம்முடைய உணர்வு களங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பௌதிகமாக அசுத்தப்பட்டிருக்கும் போது, நாம் ‘கட்டுண்டவர்கள் ‘ என்று அழைக்கப்படுகிறோம். கட்டுண்ட நிலையில், ‘நான் ஜட இயற்கையின் படைப்பு ‘ என்ற பொய்யான உணர்வு வெளிப்படுகிறது. இதுவே ‘அஹங்காரம் ‘ எனப்படும். உடல் தொடர்பான எண்ணங்களில் மூழ்கியவனால் தனது நிலையைப் புரிந்து கொள்ள முடியாது. உடல் சம்பந்தமான கருத்துகளிலிருந்து அவனை விடுதலை பெறச் செய்வதற்காகவே பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது. இந்த விவரத்தை பகவானிடமிருந்து பெறுவதற்காக அர்ஜுனன் தன்னையே அந்த நிலையில் வைத்துக் கொண்டான். வாழ்க்கையின் உடல் சார்ந்த எண்ணங்களிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும்; இதுவே ஆன்மீகவாதியின் ஆரம்பச் செயலாகும். விடுதலை பெற விரும்புபவன், முக்தி பெற விரும்புபவன் முதலில் தான் இந்த ஜட உடலல்ல என்பதை உணர வேண்டும். முக்தி என்றால் பௌதிக உணர்விலிருந்து விடுதலை என்பதே பொருள். ஸ்ரீமத் பாகவத்திலும் (2.10.6) ‘முக்தி என்றால் என்ன ‘ என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. முக்திர் ஹித்வான்யதா -ரூபம் ஸ்வரூபபேண வ்யவஸ்திதி:—முக்தி என்றால் ஜட உலகின் களங்கப்பட்ட உணர்விலிருந்து விடுதலை பெற்று, தூய உணர்வில் நிலைபெறுவதாகும். இத்தகைய தூய உணர்வை எழுப்புவதையே பகவத்கீதையின் அறிவுரைகள் அனைத்தும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. எனவே தான், கீதையின் இறுதிக்கட்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை, “இப்போது தூய உணர்விலிருக்கிறாயா?” என்று வினவினார். தூய உணர்வு என்றால், இறைவனின் கட்டளைக்கேற்ப செயல்படுவதாகும். இதுவே தூய உணர்வின் உட்பொருளாகும். இறைவனின் அம்சங்கள் என்பதால் நம்மிடமும் உணர்வு உள்ளது; இருப்பினும், கீழான குணங்களால் பாதிக்கப்படக்கூடிய தன்மையும் நம்மிடம் உள்ளது. ஆனால் எல்லாரிலும் உயர்ந்தவரான பகவான், எப்போதுமே பாதிக்கப்படாமல் இருக்கிறார். இதுவே முழுமுதற் கடவுளுக்கும் சிறிய தனிப்பட்ட ஆத்மாவிற்கும் இடையிலான வேற்றுமையாகும்.

‘உணர்வு ‘ என்றால் என்ன? “நான்” என்ற எண்ணமே உணர்வு. ‘நான் ‘ என்பது என்ன? களங்கப்பட்ட நிலையில் ‘நான் ‘ என்றால், “நான் காணும் எல்லாவற்றிற்கும் நானே இறைவன், நானே அனுபவிப்பவன்” என்று பொருள். ஒவ்வொரு ஜீவனும் தன்னையே முதலாளியாகவும் இப்பௌதிக உலகின் படைப்பாளியாகவும் கருதுவதாலேயே இவ்வுலகம் சுழன்று கொண்டிருக்கிறது. ஜட உணர்விற்கு இரு பிரிவுகள் உள்ளன: நானே படைப்பவன், நானே அனுபவிப்பவன். ஆனால் உண்மையில் முழுமுதற் கடவுளே, படைப்பவரும் அனுபவிப்பவருமாவார், அந்த பரம புருஷரின் அம்சமாகிய உயிர்வாழி படைப்பவனுமல்ல, அனுபவிப்பவனுமல்ல; இணைந்து செயல்படுபவனே. அவன் படைக்கப்பட்டவனும், அனுபவிக்கபடுபவனுமாவான். உதாரணமாக ஒரு இயந்திரத்தின் பாகம் அந்த முழு இயந்திரத்துடன் இணைந்து செயல்படுகிறது; உடலின் உறுப்புகள் மொத்த உடலுடன் இணைந்து செயல்படுகின்றன. கைகள், கண்கள், கால்கள், போன்றவையனைத்தும் உடலின் பாகங்களே, ஆனால் உண்மையில் அவை அனுபவிப்பர்களல்ல, வயிறே அனுபவிக்கின்றது. கால்கள் நகர, கைகள் உணவையளிக்க, பற்கள் அரைக்க, உடலின் அங்கங்களெல்லாம் வயிற்றைத் திருப்தி செய்வதில் ஈடுபடுகின்றன. ஏனெனில், உடல் என்னும் நிறுவனத்தை வளம் பெறச் செய்வதில் வயிறே முதன்மையிடம் பெறுகிறது. எனவே, எல்லாம் வயிற்றுக்குக் கொடுக்கப்படுகின்றன. வேரில் நீரூற்றுவதால் தாவரத்தை வளம் பெற செய்கிறோம், வயிற்றில் உணவூட்டுவதால் உடலை வளம் பெறச் செய்கிறோம். உடல் ஆரோக்கியமான முறையில் வைத்திருக்கப்பட வேண்டுமெனில், உடலின் உறுப்புகள் வயிற்றை பேணுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். இது போல பரம புருஷரே படைப்பவரும் அனுபவிப்பவருமானதால், துணைபுரியும் ஜீவன்களான நாம் அவரை திருப்தி செய்ய ஒத்துழைக்க வேண்டியவர்கள். வயிற்றினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவு, உடலின் மற்ற அங்கங்கள் எல்லாவற்றிற்கும் உதவுவதைப் போல, இந்த ஒத்துழைப்பு உண்மையில் நமக்கே உதவியாகும். உணவை வயிற்றுக்கு கொடுப்பதற்குப் பதிலாக தாமே உட்கொள்ள வேண்டும் என்று கையின் விரல்கள் நினைத்தால் அவை ஏமாற்றமடையும். படைப்பதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் பரம புருஷரே மையமாவார், உயிர்வாழிகளெல்லாம் அவருக்கு ஒத்துழைப்பவர்கள். அத்தகைய ஒத்துழைப்பால் அவர்களும் அனுபவிக்க முடியும். இந்த உறவு எஜமானருக்கும் சேவகனுக்கும் இடையேயான உறவைப் போன்றது. எஜமானர் முழு திருப்தி அடைந்தால், சேவகனும் திருப்தியடைகிறான். அதுபோலவே, பரம புருஷரும் திருப்தி செய்யப்பட வேண்டும். பௌதிக உலகின் படைப்பாளியாகவும் அனுபவிப்பாளனாவும் ஆவதற்கான விருப்பம் உயிர்வாழியிடம் உள்ள போதிலும் (ஏனெனில், தோற்றமளிக்கும் இப்பிரபஞ்சத்தை படைத்த பரம புருஷரிடம் இவ்விருப்பங்கள் உள்ளன), உயிர்வாழிகள் பரம புருஷரை திருப்தி செய்தாக வேண்டும்.

எனவே, பகவத் கீதையிலிருந்து, பூரணம் என்பது, பரம ஆளுநர், ஆளுகைக்குட்பட்ட ஜீவன்கள், பிரபஞ்சத் தோற்றம், நித்தியமான காலம், கர்மா ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது என்பதைக் காணலாம். இவை இந்நூலில் விளக்கப்படுகின்றன. இவையணைத்தும் முழுமையாகச் சேர்ந்து பூரணத்தை உருவாக்குகின்றன, இந்த பூரணம் ‘பரம பூரண உண்மை ‘ என்று அழைக்கப்படுகின்றது. பூரணமும் பரம பூரண உண்மையும், பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரேயாவார். எல்லாத் தோற்றங்களும் அவரது பல்வேறு சக்திகளால் உருவானவையே. அவரே பூரணமானவர்.

அருவ பிரம்மன் பரம புருஷருக்குக் கீழ்பட்டதே (ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம்) என்று பகவத் கீதையில் விளக்கப்பட்டிருக்கின்றது. பிரம்மன் சூரிய ஒளியின் கதிர்களைப் போன்றதென்று பிரம்ம சூத்திரமும் தெளிவாக விளக்குகின்றது. புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் ஒளிமயமான கதிர்களே அருவ பிரம்மனாகும். அருவ பிரம்மனைப் பற்றிய கருத்தும் பரமாத்மாவை பற்றிய கருத்தும், பூரண உண்மையின் முழுமையற்ற அறிவே. பரமாத்மாவையும் அருவ பிரம்மனையும் உணர்வதைக் காட்டிலும் புருஷேத்தமர் என்னும் பரம புருஷ பகவானை உணர்வதே உயர்ந்தது என்பதை நாம் பதினைந்தாம் அத்தியாயத்தில் காணலாம். புருஷோத்தமான முழுமுதற் கடவுள் ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹஎன்றழைக்கப்படுகிறார். பிரம்ம சம்ஹிதை இவ்வாறே தொடங்குகிறது: ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ: / அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ–காரண-காரணம்”கோவிந்தனனான கிருஷ்ணரே எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவார். அவரே ஆதி காரணம். அவர் நித்தியமான அறிவு நிரம்பிய ஆனந்தமயமான ரூபத்தைக் கொண்டுள்ளார்.” அருவ பிரம்மனை உணர்வது அவரது ஸத் (நித்திய) நிலையை உணர்வதாகும். பரமாத்மாவை உணர்வது அவரது ஸத்-சித் (நித்தியமும் முழு அறிவுமுடைய) நிலையை உணர்வதாகும். ஆனால் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை உணர்வது, அவரது அனைத்து ஆன்மீக நிலைகளையும் (ஸத், சித், ஆனந்த நிலைகளை) முழு விக்ரஹமாக (ரூபமாக) உணர்வதாகும்.

குன்றிய அறிவுடையவர்கள் பரம உண்மையை, அருவமாகக் கருதுகின்றனர். ஆனால் அவர் ஆன்மீக உருவமடைய ஒரு நபர் என்பது எல்லா வேத இலக்கியங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம். (கட உபநிஷத் 2.2.13) நாம் அனைவரும் தனித் தன்மையுடன் கூடிய தனிப்பட்ட உயிர் வாழிகளாக இருப்பதைப் போலவே, பரம புரண உண்மையும் இறுதி நிலையில் ஒரு நபரே (வியக்தியே). அந்த புருஷோத்தமரான முழு முதற் கடவுளை உணர்வதே எல்லா தெய்வீக நிலைகளையும் பூரணமாக உணர்வதாகும். பூரணம் உருவமற்றவரல்ல. அவர் உருவமற்றவராக இருந்தால் (மற்றவைகளைவிட ஏதாவதொரு விதத்தில் குறைந்தவராக இருந்தால்), அவரை பூரணமானவராகக் கூற முடியாது. நமது அனுபவத்திற்கு உட்பட்டவை, நமது அனுபவத்தைக் கடந்தவை என அனைத்துமே பூரணத்திடம் இருந்ததாக வேண்டும், இல்லையேல் அவர் பூரணமானவரல்ல.

பூரணமான பரம புருஷ பகவான் அளவற்ற சக்திகளை (பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ரூயதே) உடையவராவர். அந்த பல்வேறு சக்திகளில் கிருஷ்ணர் எவ்வாறு இயங்குகிறார் என்பதும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. நாம் வைக்கப்பட்டிருக்கும் இந்த பௌதிக உலகமும் தன்னில் பூரணமானதே. ஏனெனில், நிரந்தரமற்ற தோற்றமுடைய இப்பௌதிக உலகின் பகுதிப் பொருள்களான இருபத்து நான்கு மூலப் பொருள்கள் (ஸாங்க்ய தத்துவத்தின்படி), இந்த அகிலத்தின் பராமரிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து வசதிகளையும் உற்பத்தி செய்யுமளவிற்கு பூரணமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவையற்றது எதுவுமில்லை, தேவைப்பட்டு இல்லாததும் எதுவுமில்லை. இப்பௌதிக தோற்றத்தின் காலம், பரம பூரணத்தின் சக்தியினால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் காலம் முடிவுபெற்றவுடன், பூரணத்தின் பூரண ஏற்பாட்டின் மூலம் இந்த நிரந்திரமற்ற தோற்றங்கள் அனைத்தும் அழிக்கப்படும். பூரணமான சிறு உறுப்புக்களான ஜீவன்களுக்கு பூரணத்தை உணர்வதற்கான பூரண வசதி உண்டு. பூரணத்தைப் பற்றிய அறிவு, பூரணமின்றி இருப்பதால், எல்லா விதக் குறைபாடுகளும் உணரப்படுகின்றன. பகவத் கீதை வேத அறிவின் பூரண ஞானத்தைக் கொண்டுள்ளது.

எல்லா வேத ஞானமும் தவறுகளற்றதாகும். இந்துக்கள் வேத அறிவை முழுமையானதாகவும் தவறுகளற்றதாகவும் ஏற்கின்றனர். உதரணமாக பசுஞ்சாணம் மிருகத்தின் மலமாகும். ஸ்மிருதி எனப்படும் வேத நியதிகளின்படி ஒருவன் மிருகத்தின் மலத்தை தொட்டால் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக குளிக்க வேண்டும். ஆனால் வேத நூல்களில் பசுஞ்சாணம் சுத்தப்படுத்தும் பொருளாக கருதப்படுகிறது. இது முரண்பாடானது ஒருவர் கருதலாம். ஆனால் இது வேத நியதியானதால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. மேலும் இதை ஏற்றுக் கொள்பவர் தவறிழைக்க மாட்டார். சமீபகாலத்தில் “பசுஞ்சாணம் கிருமிநாசினியின் எல்லாக் குணங்களையும் உடையது” என்பது நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்லாத் தவறுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்ட வேதஞானம் முழுமையானதாகும். பகவத் கீதை அத்தகைய எல்லா வேத ஞானத்திற்கும் சாரம்சமாக விளங்குகிறது.

வேதஞானத்தை ஆராய்தல் என்னும் கேள்விக்கு இடமில்லை. பக்குவ மற்ற புலன்களைக் கொண்டு ஆராய்வதல் நமது ஆராய்ச்சி பக்குவமற்றதாகும். பகவத் கீதையில் கூறியுள்ளபடி, பரம்பரையின் மூலம் கீழிறங்கி வரும் பக்குவாமான அறிவை நாம் பெற வேண்டும். நாம் சரியான மூலத்திலிருந்து (சீடப் பரம்பரையிலிருந்து) அறிவைப் பெற வேண்டும். அப்பரம்பரை பரம ஆன்மீக குருவான பகவானிடமிருந்து தொடங்கி, மற்ற ஆன்மீகக் குருக்களின் மூலம் தொடரப்படக் கூடிய சீடத்தொடராக இருக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து பாடம் பயின்ற மாணவனான அர்ஜுனன். அவர் சொல்வதையெல்லாம் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறான். பகவத் கீதையின் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு மற்றொரு பகுதியை மறுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அது தவறு. பகவத்கீதை, அதிலுள்ள எதையும் நீக்காமல், தேவையற்ற கருத்துரைகள் ஏதுமின்றி, நமது எண்ணப்படி அர்த்தங்கள் கூறாமல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வேத ஞானத்தின் மிகப் பக்குவமான படைப்பாக கீதையை ஏற்றுக் கொள்ளுதல் அவசியம். வேத ஞானம் ஆன்மீக மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது. இதனை முதலில் உரைத்தவர் பகவானே. நான்கு விதக் குறைபாடுகளால் பீடிக்கப்பட்ட சாதரண உலக மனிதனின் சொற்களிலிருந்து பகவானின் சொற்கள் வேறுபட்டவை. எனவே, அச்சொற்கள் அபௌருஷேய என்றழைக்கப்படுகின்றன. ஒரு சாதாரண மனிதன் (1) நிச்சயமாகத் தவறு செய்யக்கூடியவன், (2) பெரும்பாலும் அறியாமையிலிருக்கிறான், (3) மற்றவர்களை ஏமாற்றும் குணமுடையவனாக இருக்கிறான், (4) பக்குவமற்றப் புலன்களால் கட்டுப்படுத்தபட்டவனாக இருக்கின்றான். இந்த நான்கு குறைபாடுகளை உடையவன் உயர் ஞானத்தின் பக்குவமான விவரத்தை அளிக்க முடியாது.

வேத ஞானம், இதுபோன்ற குறைபாடுள்ள ஜீவன்களால் உபதேசிக்கப்படுவதில்லை. படைப்பின் முதல் உயிர்வாழியான பிரம்மாவின் இதயத்தில் இஃது உரைக்கப்பட்டது. இறைவனிடமிருந்து தான் பெற்ற இந்த ஞானத்தை, பிரம்ம தேவர் தனது மகன்களுக்கும் சீடர்களுக்கும் அப்படியே உபதேசித்தார். பகவான் பூரணமானவர், எல்லாவிதத்திலும் பக்குவமானவர். மேலும், அவர் பௌதிக இயற்கையின் விதிகளுக்கு உட்படுவதற்கு வாய்ப்பேதுமில்லை. எனவே பகவானே இவ்வகிலம் முழுமைக்கும் உரிமையாளர், அவரே உண்மையில் படைப்பவர், பிரம்மாவையும் படைப்பவர் அவரே—நாம் இவற்றை அறியுமளவிற்கு புத்திசாலிகளாக இருக்க வேண்டும். பதினென்றாம் அத்தியாயத்தில் பகவான் ப்ரபிதாமஹ என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், பிதாமஹ (தாத்தா) என்றழைக்கப்படும் பிரம்ம தேவரைப் படைத்தவர் பகவான். எனவே, எந்தப் பொருளையும் தனக்குச் சொந்தம் என்று யாரும் உரிமைக் கொண்டாடக் கூடாது. தனது பராமரிப்புக்காக தனது பங்காக பகவானால் ஒதுக்கப்பட்டதையே ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பகவானால் நமக்காக ஒதுக்கப்பட்ட பங்கை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. பகவத் கீதையிலும் இது விளக்கப்பட்டுள்ளது. முதலில், குருக்ஷேத்திரப் போரில் போரிடக்கூடாதென்று அர்ஜுனன் முடிவு செய்தான். அஃது அவனது சுய முடிவாகும். தனது உறவினர்களைக் கொன்ற பின் நாட்டை அனுபவிக்க தன்னால் இயலாது என்று இறைவனிடம் கூறினான் அர்ஜுனன். இஃது உடலை அடிப்படையாக கொண்ட முடிவாகும். ஏனெனில், அர்ஜுனன், தன்னை உடல் என்றும், உடலின் உறவுகளை, சகோதரர்கள், மருமகன்கள், மைத்துனர்கள், பிதாமகர்கள் என்றும் எண்ணினான். எனவே, தனது உடல் தேவைகளைத் திருப்தி செய்ய விரும்பினான். இந்தக் கண்ணோட்டத்தை மாற்றவே பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது. இறுதியில், கரிஷ்யே வசனம் தவ—”தங்கள் வாக்குப்படி நான் செயல்படுகிறேன்” என்று கூறிய அர்ஜுனன், பகவானின் ஆணைக்கிணங்கப் போர்புரிய முடிவு செய்கிறான்.

நாய்களையும் பூனைகளையும் போல் சண்டையிட்டுக் கொள்வதற்காக மனிதன் இவ்வுலகில் பிறக்கவில்லை. மனித வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாதாரண மிருகங்களைப் போல் செயல்பட மனிதன் மறுக்க வேண்டும். அந்தளவிற்கு அவன் புத்திசாலியாக இருக்க வேண்டும். அவன் தனது வாழ்வின் இலட்சியத்தை உணர வேண்டும். இதற்கான வழிமுறை எல்லா வேத இலக்கியங்களிலும் உள்ளது, இதன் சாராம்சம் கீதையில் கூறப்பட்டுள்ளது. வேத இலக்கியம் மனிதர்களுக்காவே, மிருகங்களுக்காக அல்ல. மிருகங்கள் மற்ற (உயிருள்ள) மிருகங்களைக் கொல்லலாம், அதில் பாவம் வருவதற்கான கேள்வியே இல்லை. ஆனால் கட்டுப்பாடற்ற தன் சுவையைத் திருப்தி செய்து கொள்வதற்காக, மனிதன் மிருகத்தைக் கொன்றால் இயற்கையின் விதியை மீறியதற்காக அவன் பொறுப்பேற்க வேண்டும். வேறுபட்ட இயற்கை குணங்களுக்கு ஏற்ப மூன்று விதமான செயல்கள் இருகின்றன என்று பகவத் கீதை விளக்கமாகக் கூறுகின்றது—நற்செயல்கள், தீவிரச் செயல்கள், அறியாமைச் செயல்கள் என்பவை அவை. இதுபோல மூன்று வகையான உணவுப் பொருள்களும் உண்டு—நற்குணத்தின் உணவுகள், தீவிர குணத்தின் உணவுகள் மற்றும் அறியாமை குணத்தின் உணவுகள். இவையெல்லாம் மிகத் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன. பகவத் கீதையின் அறிவுரைகளை நாம் முறையாக உபயோகித்தால் நமது முழு வாழ்வும் தூய்மையடையும், இறுதியில் இந்த பௌதிக வானிற்கு அப்பாலுள்ள நமது இலக்கை நாம் சென்றடைய முடியும்.

அந்த இலக்கு, நித்தியமான ஆன்மீக வானம் என்று அழைக்கப்படும் ஸநாதன வானமாகும். இந்த பௌதிக உலகில் அனைத்தும் தற்காலிகமாக இருப்பதை நாம் காண்கிறோம். அனைத்தும், உருவாகி, சிறிது நேரம் இருந்து, சில உப பொருள்களை உற்பத்தி செய்து, தளர்ந்து, இறுதியில் அழிகின்றது. ஒரு பழத்தையோ இந்த மனித உடலையோ எதை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும், இதுவே பௌதிக உலகின் சட்டம். ஆனால் நிரந்தமற்ற இந்த உலகிற்கு அப்பால். மற்றொரு உலகம் உள்ளதைப் பற்றிய தகவல் நம்மிடம் உள்ளது. ஸநாதன என்றழைக்கப்படும் அந்த நித்தியமான உலகம் வேறொரு இயற்கையிலானது. ஜீவனும் ஸநாதன (நித்தியமானவன்), என்று வர்ணிக்கப்படுகிறான், பகவானும் பதினென்றாம் அத்தியாயத்தில் ஸநாதன என்று அழைக்கப்படுகிறார். பகவானுடன் நமக்கு நெருங்கிய உறவுள்ளது. குணத்தின் அடிப்படையில் நாமனைவரும் ஒன்றே—ஸாநாதன உலகம், ஸாநாதன ஜீவன்கள். எனவே, பகவத் கீதையின் முழுநோக்கம், ஜீவனின் நித்திய கடமையான ஸ்நாதன தர்மத்தை மீண்டும் புதுப்பிப்பதாகும். நாம் தற்காலிகமாக பற்பல வேலைகளில் ஈடுப்பட்டிருக்கிறோம். ஆனால் நிரந்தரமற்ற இவ்வெல்லாச் செயல்களையும் விட்டுவிட்டு, பரம புருஷ பகவானால் பரிந்துரைக்கப்படும் செயல்களை மேற்கொண்டால், நமது செயல்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தி விடலாம். இதுவே நமது தூய வாழ்க்கையாகும்.

பரம புருஷ பகவானும் அவரது திவ்யமான இருப்பிடமும் ஸநாதனமானதாகும், உயிர்வாழிகளும் அப்படிபட்டவர்களே. ஸ்நாதன உலகில், பகவானுடன் உயிர்வாழிகள் உறவு கொள்வதே மனித வாழ்வின் பக்குவமாகும். ஜீவன்கள் பகவானின் மகன்கள் என்பதால், அவர் ஜீவன்களின் மீது மிகவும் கருணையுடையவராக இருக்கிறார். பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அறிவிக்கிறார், ஸர்வ-யோனிஷு… அஹம் பீஜ-ப்ரத: பிதா—”நானே எல்லாரின் தந்தை.” பல்வேறு கர்மங்களுக்கேற்ப, பலவித உயிரினங்கள் இருப்பது உண்மையே, ஆனால் அவை எல்லாவற்றிற்கும் தானே தந்தை என்கிறார் பகவான். எனவே, இந்த நிலையிழந்த கட்டுண்ட ஆத்மாக்களை மீட்க பகவான் தோன்றுகிறார். இதன் மூலம் ஸநாதனமான ஜீவன்கள், பகவானுடனான தங்களது நித்தியமான ஸநாதன உறவை மீண்டும் பெற்று, ஸநாதன உலகத்திற்குத் திரும்ப முடியும். கட்டுண்ட ஆத்மாக்களை மீட்பதற்காக பகவான் தானே பல்வேறு அவதாரங்களாக வருகிறார், தனது அந்தரங்க சேவகர்களை மகன்களாக, சகாக்களாக, ஆச்சாரியர்களாகவும் அனுப்புகிறார்.

எனவே, ஸநாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் மத வழிமுறையல்ல. இவ்வழிமுறை நித்தியமான ஜீவன் நித்தியமான முழுமுதற் கடவுளுடன் உறவு கொள்ளக்கூடிய நித்தியமான செயலாகும். ஸநாதன தர்மம் என்பது முன்பே குறிப்பிட்டபடி, ஜீவனின் நித்தியமான கடமையாகும். ஸ்ரீபாத இராமானுஜாசாரியார் ஸநாதன என்ற வார்த்தையை “ஆதி அந்தம் இல்லாத” என்று விளக்கியுள்ளார். எனவே, ஸநாதன தர்மத்தைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, ஸ்ரீபாத இராமானுஜாசாரியாரின் முடிவை ஏற்று, அதற்குத் தொடக்கமும் முடிவுமில்லை என்றே கொள்ளுதல் வேண்டும்.

ஆங்கில வார்த்தையான ரிலிஜன் (religion) என்பது ஸநாதன தர்மம் என்பதிலிருந்து சற்று வேறுபட்டதாகும். ரிலிஜன் என்பது ஒரு வித நம்பிக்கையைக் குறிக்கும்—ஆனால் நம்பிக்கை என்பது மாறக்கூடும். ஒரு குறிபிட்ட முறையில் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம், அவர் தமது நம்பிக்கையை மாற்றி வேறொரு முறையைக் கடைபிடிக்கலாம். ஆனால் ஸநாதன தர்மம் என்பது மாற்ற முடியாத செயலைக் குறிக்கின்றது. உதாரணமாக, நீரிலிருந்து திரவத் தன்மையும், நெருப்பிலிருந்து வெப்பத்தையும் பிரித்து விட முடியாது. அதுபோலவே, நித்திய உயிர்வாழியின் நித்தியமான செயலைக் அதிலிருந்து பிரிக்க முடியாது. ஸநாதன தர்மம் உயிர்வாழியுடன் நித்தியமாக தொடர்பு கொண்டுள்ளது. எனவே, ஸநாதன தர்மத்தைப் பற்றி பேசும் போது, நாம் ஸ்ரீபாத இராமானுஜாசாரியரின் முடிவுக்கிணங்க அஃது ஆரம்பமும் முடிவும் அற்றது என்றே கொள்ள வேண்டும். தொடக்கமும் முடிவும் இல்லாது, எல்லைகளால் வரையறுக்கப்பட முடியாமல் திகழக்கூடிய ஒன்றை ஒரு குறிப்பிட்ட (மதப்) பிரிவைச் சார்ந்ததாக ஒரு போதும் கருதக் கூடாது. ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைச் சேர்ந்த சிலர் ஸநாதன தர்மமும் ஒரு (மதப்) பிரிவென்று தவறாகக் கருதுவர். ஆனால் இது விஷயமாக நாம் ஆழமாகப் சென்று, நவீன விஞ்ஞானத்தின் கவனித்து பார்த்தால், ஸநாதன தர்மமானது, இவ்வுலகின் எல்லா மக்களுடைய, ஏன், பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுடைய கடமை என்பதை அறிய முடியும்.

ஸநாதனமல்லாத மத நம்பிக்கைக்கு மனித வரலாற்றின்; கால அட்டவணையில் ஏதாவது தொடக்கம் இருக்கலாம், ஆனால் உயிர்களுடன் நித்தியமாக இருக்கும் ஸநாதன தர்மத்தின் வரலாற்றில் இது போன்ற ஆரம்பமே இல்லை. அதிகாரபூர்வமான சாஸ்திரங்கள், உயிர்வாழிகளுக்கு பிறப்போ இறப்போ இல்லை என்று கூறுகின்றன. ஆத்மா என்றும் பிறப்பதில்லை, என்றும் அழிவதில்லை என்று கீதையில் கூறப்படுகின்றது. நித்தியமானதும் அழிவற்றதுமான ஜீவன், தனது தற்காலிக பௌதிக உடல் அழிவடைந்த பின்னும் தொடர்ந்து வாழ்கிறான். ஸநாதன தர்மம் என்ற கருதின் அடிப்படையில், மதம் என்பதன் உட்பொருளை நாம் சமஸ்கிருத வார்த்தையின் மூலத்திலிருந்து அறிய முயல வேண்டும். ஒரு குறிப்பிட்ட பொருளுடன் ஒன்றியிருக்கும் தன்மையை தர்மம் எனும் சொல் குறிக்கிறது. நெருப்புடன் வெப்பமும் ஒளியும் இருக்கிறதென்று நாம் முடிவு செய்கிறோம், வெப்பமும் ஒளியும் இல்லாவிடில் நெருப்பு என்ற சொல்லுக்கு பொருளே இல்லை. இது போன்ற உயிர்வாழியின் முக்கியமான இன்றியமையாத அங்கத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டும். அந்த இன்றியமையாத அங்கம் அதன் நித்திய குணமாகும், அந்த நித்திய குணம் அதன் நித்திய தர்மமகும்.

ஸநாதன கோஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம், ஒவ்வொர் உயிர்வாழியின் ஸ்வரூபம் என்ன என்று வினாவிய போது, உயிர் வாழியின் உண்மைநிலை (ஸ்வரூப), புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதே என்று அவர் பதிலளித்தார். பகவான் சைதன்யரின் இந்த கூற்றை ஆய்ந்து நோக்கினால், ஒவ்வொரு உயிர்வாழியும் மற்றொரு உயிருக்கு சேவை செய்வதில் எப்போதும் ஈடுபட்டுள்ளதை நம்மால் எளிதாகக் காண முடியும். ஓர் உயிர்வாழி மற்ற உயிர்வாழிகளுக்கு பல்வேறு விதங்களில் சேவை செய்கிறான், அவ்வாறு செய்வதால் வாழ்வை அனுபவிக்கிறான். சேவகன் எஜமானுக்கு சேவை செய்வதைப் போல, கீழ் நிலை மிருகங்கள் மனிதனுக்கு சேவை செய்கின்றன. ஒருவன் தனது எஜமானருக்கு சேவை செய்ய, அவர் அடுத்தவருக்கும், அடுத்தவர் மற்றொருவருக்கும் என தொடர்ந்து ஒவ்வொருவரும் சேவை செய்து கொண்டுள்ளனர். ஒரு நண்பன் மற்றொருவனுக்கும், தாய் மகனுக்கும், மனைவி கணவனுக்கும், கணவன் மனைவிக்கும் சேவை செய்கின்றனர். இந்த உணர்வில் நாம் தேடிக் கொண்டு போனால், “சேவை” என்ற செயலை பெறுத்தவரை, உயிர்வாழிகளின் சமுதாயத்தில் விலக்கே இல்லை என்பது காணப்படும். சேவை செய்வதில் தனக்கிருக்கும் தகுதியை காட்டிக் கொள்வதற்காக, அரசியல்வாதி தனது அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கிறான். எனவே, வாக்காளர்கள், அவன் சமுதாயத்திற்கு சேவை செய்வான் என்று நம்பி தங்களது மதிப்புமிக்க வாக்குகளை அளிக்கின்றனர். கடைக்காரன் வாடிக்கையாளருக்கும், கலைஞன் செல்வந்தனுக்கும் சேவை செய்கிறான். செல்வந்தன் தன் குடும்பத்திற்கும், குடும்பம் தேசத்திற்கும் என ஒவ்வொருவரும் “சேவை செய்தல்” என்னும் நித்தியமான உயிர்வாழிகளின் நிரந்தரச் செயலைச் செய்கின்றனர். இவ்வாறாக எந்த உயிர்வாழியும் மற்றொரு உயிர்வாழிக்கு சேவை செய்வதிலிருந்து விலகியிருப்பதில்லை என்பதை நாம் காண முடிகிறது. எனவே, சேவையே உயிர்வாழியின் நிலையான துணை என்றும், சேவை புரிவதே அவனது நித்தியமான தர்மம் என்றும் நாம் நிச்சயமாக முடிவு செய்யலாம்.

இருந்தும், ஒரு குறிப்பிட்ட நேரம் சூழ்நிலை இவற்றின் அடிப்படையில் மனிதன் தன்னை ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைச் சேர்ந்தவனாக, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், பௌத்தன் அல்லது வேறு ஒரு பிரிவைச் சேர்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறான். இத்தகு அடையாளங்கள் ஸநாதன தர்மமல்ல. ஓர் இந்து தனது நம்பிக்கையை மாற்றி முஸ்ஸிமாகவும், ஒரு முஸ்ஸிம் தனது நம்பிக்கையை மாற்றி இந்துவாகவும், ஒரு கிறுஸ்துவன் தனது நம்பிக்கையை மாற்றி வேறொரு மதத்தினாகவும் மாறிக்கொண்டே போகலாம். ஆனால், பிறருக்குச் சேவை செய்தல் எனும் நித்தியக் கடமையானது எந்த சூழ்நிலையிலும் மத நம்பிக்கை மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை. இந்துவோ முஸ்ஸிமோ கிறிஸ்தவனோ எல்லாச் சூழ்நிலையிலும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரது சேவகனே. எனவே ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைப் பயிற்சி செய்வது ஸநாதன தர்மத்தை பயிற்சி செய்வ தாகாது. சேவை செய்வதே ஸநாதன தர்மாகும்.

உண்மையில், நாம் முழுமுதற் கடவுளுடன் சேவையின் மூலம் உறவு கொண்டுள்ளோம். முழுமுதற் கடவுள் பரம அனுபவிப்பாளராவார். உயிர்வாழிகளான நாம் அவரது சேவகர்கள். நாம் அவரது ஆனந்திற்காகப் படைக்கப்பட்டுள்ளோம், பரம புருஷ பகவானின் அந்த நித்திய இன்பத்தில் பங்குபெற்றால் நாமும் மகிழ்ச்சியுடையவராக ஆவோம். இல்லையேல் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. சுயமாக மகிழ்வது இயலாது. உதாரணமாக, உடலின் எந்த பகுதியும் வயிற்றுடன் ஒத்துழைக்காமல் மகிழ இயலாது. முழுமுதற் கடவுளுக்கு திவ்யமான அன்புக் தொண்டு புரியாமல் உயிர்வாழி மகிழ்ச்சியாயிருத்தல் என்பது சாத்தியமல்ல.

பகவத்கீதையில், பல்வேறு தேவர்களை வழிபடுவதும், அவர்களுக்கு சேவை செய்வதும் அங்கீகரிக்கப்படவில்லை. ஏழாம் அத்தியாயம் இருபதாவது பதத்தில் கூறப்பட்டுள்ளது:

காமைஸ் தைஸ் ஹ்ருத-க்ஞானா:

பிரபத்யந்தே (அ)ன்ய–தேவதா:

தம் தம் நியமம் ஆஸ்தாய

ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா

“பௌதிக ஆசைகளால் புத்தியை இழந்தவர்கள் தேவர்களை சரணடைந்து, தங்களது சொந்த இயற்கைக்கேற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் கடைபிடிக்கின்றனர்.” காமத்தால் உந்தப்படுபவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடாமல் தேவர்களை வழிபடுகின்றனர் என்று இங்கே நேரடியாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் என்ற பெயரை நாம் குறிப்பிடும் பொழுது, நாம் எவ்வித (மதப்) பிரிவைச் சேர்ந்த பெயரையும் குறிப்பிடவில்லை. கிருஷ்ண என்றால் உன்னதமான ஆனந்தம் என்று பொருள், முழுமுதற் கடவுள் எல்லா ஆனந்த்திற்கும் இருப்பிடமாக விளங்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமெல்லாரும் சுகத்தைத் தேடி ஏங்கிக் கொண்டிருக்கிறோம், ஆனந்த-மயோ (அ)ப்யாஸாத் (வேதாந்த சூத்திரம் 1.1.12) பகவானைப் போலவே உணர்வுமிக்கவர்களான உயிர்வாழிகள், இன்பத்தை நாடுகின்றனர். பகவானின் இன்பம் நித்தியமானதாகும், உயிர் வாழிகள் அவருடன் உறவு கொண்டு, ஒத்துழைத்து, அவரது சங்கத்தில் பங்கு கொண்டால், அவர்களும் மகிழ்ச்சியடைய முடியும்.

மகிழ்ச்சி ததும்பும் தனது விருந்தாவன லீலைகளைக் காட்டுவதற்காக, பகவான் இப்பௌதிக உலகில் தோன்றுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விருந்தாவனத்திலிருந்த போது, நண்பர்களான இடையர் சிறுவர்களிமும் இளம் பெண்களான கோபியர்களிடமும் மற்ற விருந்தாவன வாசிகளிடமும் பசுக்களிடமும் நிகழ்த்திய செயல்களனைத்தும் இன்பம் நிறைந்தவையாக இருந்தன. விருந்தாவனத்தின் அனைத்து மக்களும் கிருஷ்ணரைத் தவிர வேறொன்றையும் அறியார். இருந்தும், பகவான் கிருஷ்ணர் தனது தந்தை நந்த மஹாராஜாவை இந்திரதேவனை வழிபடுவதிலிருந்து தடுத்தார். ஏனெனில் மக்கள் எந்த தேவர்களையும் வழிபட வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை அவர் நிறுவ விரும்பினார். மக்களுடைய இறுதி இலட்சியம் முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதே என்பதால், அவர்கள் அவரை (கிருஷ்ணரை) மட்டுமே வழிபட வேண்டும்.

பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயம், ஆறாவது பதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடம் விவரிக்கப்பட்டுள்ளது:

ந தத் பாஸயதே ஸூர்யோ

ந ஷ ஷாங்கோ ந பாவக:

யத் கத்வா ந நிவர்தந்தே

தத் தாம பரமம் மம

“எனது அந்த பரம இருப்பிடம் சூரியனாலோ சந்திரனாலோ நெருப்பினாலோ மின்சக்தியாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அங்கு வந்தடைந்த எவரும் இந்த ஜடவுலகிற்கு ஒருபோதும் திரும்பி வருவதில்லை.”

அந்த நித்திய வானத்தின் தன்மையை இந்தப் பதம் விவரிக்கிறது. வானத்தைப் பற்றிய ஜட அறிவு நமக்கு இருக்கலாம், ஆனால் அந்த அறிவு சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. ஆனால், சூரியனுக்கோ, சந்திரனுக்கோ, மின்சக்திக்கோ, எவ்வித நெருப்பிற்கோ நித்திய வானில் அவசியமில்லை; ஏனெனில், தன்னிடமிருந்து வெளிப்படும் கதிர்களான பிரம்மஜோதியினால் ஆன்மீக வானமானது ஏற்கனவே ஒளியேற்றப்பட்டுள்ளது என்று இறைவன் இந்த பதத்தில் கூறுகின்றார். பிற கிரகங்களை அடைய நாம் மிகவும் கடின முயற்சிகள் செய்து வருகின்றோம், ஆனால் பரம புருஷ பகவானின் இருப்பிடத்தை அறிந்து கொள்வது கடினமல்ல. இந்த இருப்பிடம் கோலோகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம சம்ஹிதையில் (5.37) இஃது அழகான விவரிக்கப்பட்டுள்ளது: கோலோக ஏவ நிவஸத்-யகிலாத்ம-பூத:—கடவுள் தனது இருப்பிடமான கோலோகத்தில் நித்திய வாசம் செய்கிறார். எனினும் அவரை இந்த உலகிலிருந்தே அணுகஇயலும். இதற்காகவே அவர் தனது உண்மை வடிவை ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை வெளிபடுத்த இங்கு வருகின்றார். அவர் தனது சுய ரூபத்தில் தோன்றுவதால், அவர் எப்படி இருப்பார் என்பதை கற்பனை செய்ய வேண்டிய அவசியம் நமக்கில்லை. இதுபோன்ற கற்பனை மனோரதங்களைத் தடுப்பதற்காகவே அவர் கீழிறங்கி வந்து, தனது சியாமசுந்தர ரூபத்தைக் காட்டுகிறார். துரதிர்ஷ்டவசமாக மனிதரைப் போன்று நம்மில் ஒருவராக இருந்து நம்முடன் விளையாடுவதால், மந்த புத்தியுடையோர் அவரை இழிந்துரைக்கின்றனர். பகவானை நம்மில் ஒருவராக கருதிவிடக் கூடாது. அவர் தனது அற்புத சக்தியால் தனது சுய ரூபத்தில் நம்முன் தோன்றி லீலைகள் புரிகிறார். அந்த லீலைகள் அவரது இருப்பிடத்தில் காணப்படும் லீலைகளின் மாதிரிகளே.

ஆன்மீக வானின் ஒளிக்கதிர்களில் எண்ணற்ற கிரகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. பிரம்ம ஜோதி, மிகவுயர்ந்த லோகமான கிருஷ்ண லோகத்திலிருந்து வெளிப்படுகிறது. இதன் கதிர்களில் பௌதிகத் தன்மைக்கு அப்பாற்பட்ட கிரகங்களான, ஆனந்த-மய, சின்-மாயா கிரகங்கள் மிதக்கின்றன. பகவான் கூறுகின்றார், ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக: / யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம. அந்த ஆன்மீக வானத்தை அடைபவர், பௌதிக வானிற்கு மீண்டும் இறங்கி வரவேண்டிய அவசியமில்லை. பௌதிக வானில் மிகவுயர்ந்த லோகமான பிரம்மலோகத்தை அடைந்தாலும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்ற இதே துன்பங்களைக் காண்போம்—அவ்வாறிருக்க சந்திரனுக்குச் செல்வதைப்பற்றி செல்லவே வேண்டாம். ஜட வாழ்வின் இந்நான்கு துன்பங்களிலிருந்து பௌதிக பிரபஞ்சத்தின் எந்த கிரகமும் விடுபட்டதல்ல.

உயிர்வாழிகள் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு பிராயாணம் செய்கின்றனர். ஆனால் இயந்திரங்களின் உதவியால் நாம் விரும்பும் கிரகத்திற்குச் சென்று விட முடியாது. நாம் வேறொரு உலகத்திற்குச் செல்ல விரும்பினால், அவவாறு செல்வதற்கென்று குறிப்பிட்ட வழிமுறை உள்ளது. அதுவும் கூறப்பட்டுள்ளது: யாந்தி தேவ-வ்ரதா தேவான் பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:. கிரங்களிடையே பயணம் செய்ய விரும்பினால் நமக்கு இயந்திரங்களின் ஏற்பாடுகள் அவசியமில்லை. கீதை கற்பிக்கிறது: யாந்தி தேவ-வ்ரதா தேவான். சந்திரன், சூரியன், உயர் கிரகங்கள் ஆகியவை ஸ்வர்க லோகம் என்றழைக்கப்படுகின்றன. உயர்நிலை, நடுநிலை, கீழ்நிலை என்று மூன்று வித கிரக அமைப்புகள் உள்ளன. பூமி, நடுநிலை கிரகத்தைச் சேர்ந்ததாகும். உயர்நிலை கிரகங்களுக்கு (தேவலோகத்திற்கு) பயணம் செய்வது எப்படி என்பதற்கு மிகச் சுலபமான வழியை கீதை நமக்குத் தெரிவிக்கின்றது. யாந்தி தேவ-வ்ரதா தேவான். ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் குறிப்பிட்ட தேவரை வழிபடுவதால். சந்திரனுக்கோ சூரியனுக்கோ மற்ற எந்த உயர் கிரகத்திற்கோ போய்விடலாம்.

இருப்பினும் இந்த ஜடவுலகிலுள்ள எந்த கிரகத்திற்கும் செல்லும்படி பகவத் கீதை நம்மை அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், நாம் மிகவுயர்ந்த லோகமான பிரம்ம லோகத்திற்கே பயணம் செய்வோமாயினும் (அதற்கு நாற்பதாயிரம் வருடம் பயணம் செய்யும் ஓர் இயந்திரத்தை உருவாக்கி, அதில் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவு காலம் உயிரோடிருப்பது யார்?), பௌதிகத் துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் துன்பங்களை அங்கும் காண வேண்டியிருக்கும். ஆனால் மிகவுயர்ந்த கிரகமான கிருஷ்ண லோகத்திற்கோ ஆன்மிக வானத்திற்குட்பட்ட ஏதாவதொரு கிரகத்திற்கோ சென்றால், இந்த பௌதிக துயரங்களைக் காண மாட்டோம். இந்த ஆன்மீக கிரகங்கள் எல்லாவற்றிலும் மிகவுயர்ந்த கிரகமான கோலோக விருந்தாவனம் எனும் கிரகம், மூல புருஷோத்தமரான ஸ்ரீ கிருஷ்ணரின் வாசஸ்தலமாகும். இந்த விவரங்கள் எல்லாம் பகவத் கீதையில் தரப்பட்டுள்ளன. எப்படி இந்த ஜடவுலகை விட்டு வெளியேறி, எவ்வாறு ஆன்மிக வானில் உண்மையான, ஆனந்தமயமான வாழ்வைத் தொடங்குவது என்பது பற்றிய விவரம் கீதையின் உபதேசங்களின் மூலமாக நமக்கு அளிக்கப்படுகின்றது.

பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாத்தில் பௌதிக உலகின் உண்மைச் சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது:

ஊர்த்வ-மூலம் அத:-ஷாகம்

அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்

சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி

யஸ் தம் வேத ஸவேத-வித்

கிளைகள் கீழும் வேர்கள் மேலுமாக உள்ள ஒரு மரத்தைப் போன்று இங்கு பௌதிக உலகம் விளக்கப்பட்டுள்ளது. வேர்கள் மேற்புறமான மரத்தைப் பற்றிய அனுபவம் நமக்குண்டு. ஒரு நதிக் கரையிலோ நீர்த் தேக்கக் கரையிலோ நின்றால், நீரில் பிரதிபலிக்கும் மரங்கள் தலைகீழாக இருப்பதைக் காணலாம். கிளைகள் கீழே செல்ல வேர்கள் மேல் நோக்கி இருக்கின்றன. இதுபோன்றதே பௌதிக உலகம்—இஃது ஆன்மீக உலகின் பிரதிபிம்பம். இப்பௌதிக உலகம் உண்மையின் நிழல் போன்றதாகும். நிழலில் உண்மையோ, ஆதாரமோ இல்லை, ஆனால் நிழலிருந்து உண்மையும் ஆதாரமும் உள்ளதென்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். பாலைவனத்தில் நீர் கிடையாது. ஆனால் கானல் நீரானது, நீர் எனப்படும் பொருள் இருப்பதை உணர்த்துகின்றது. பௌதிக உலகில் மகிழ்சியெனும் நீர் இல்லை, உண்மையான மகிழ்சியெனும் நீர் ஆன்மீக உலகில் மட்டுமே உள்ளது.

ஆன்மீக உலகை நாம் பின்வருமாறு அடைவதாக பகவான் உணர்த்துகிறார் (பகவத்கீதை 15.5):

nirmāna-mohā jita-saṅga-doṣā

adhyātma-nityā vinivṛtta-kāmāḥ

dvandvair vimuktāḥ sukha-duḥkha-saṁjñair

gacchanty amūḍhāḥ padam avyayaṁ tat

அந்த பதம் அவ்யயம், நித்திய ராஜ்யம், நிர்மான மோஹனான ஒருவனால் அடையப்படுகிறது. இதன் பொருளென்ன? நாம் அடையாளங்களின் பின் அலைகிறோம். ஒருவர் ‘ஐயா ‘வாக விரும்புகிறார், ஒருவர் ‘பிரபு ‘வாக விரும்புகிறார், ஒருவர் ஜனாதிபதியாகவும் ஒருவர் பணக்காரராகவும் ஒருவர் மன்னராகவும், இவ்வாறு ஏதாவதொரு உயர்நிலையை பெற விரும்புகின்றனர். இந்த அடையாளங்களில் பற்றுக் கொண்டிருக்கும் வரை நாம் உடலோடு பற்றுக் கொண்டிருப்பதாக பொருள், ஏனெனில், அடையாளங்கள் உடலைச் சேர்ந்தவை. ஆனால் நாம் இந்த உடலல்ல, இதை உணர்வதே ஆன்மீகத்தின் முதல் படியாகும். தற்போது, பௌதிக இயற்கையின் மூன்று குணங்களுடன் நாம் உறவு கொண்டுள்ளோம். பகவானுக்கு பக்திதொண்டு செய்வதன் மூலமாக நாம் பற்றற்றவர்களாக வேண்டும். இறைவனுக்குச் செய்யப்படும் பக்தித் தொண்டில் நாம் பற்றுதல் கொள்ளாவிடில், பௌதிக இயற்கையின் குணங்களிலிருந்து நாம் விடுபட இயலாது. நம்மிடையே உள்ள காமம், ஆசை, மற்றும் இயற்கையை ஆட்சி செய்ய நினைக்கும் எண்ணம் ஆகியவற்றின் விளைவுகளே அடையாளங்களும் பற்றுதல்களும். பௌதிக இயற்கையை கட்டுப்படுத்த நினைக்கும் நமது எண்ணத்தை நாம் கைவிடாத வரை, ஸநாதன-தாமமான பரமனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லும் வாய்ப்பு நமக்கு இல்லை. அழிவற்ற, நிரந்தரமான அத்திருநாட்டை அடைய முயற்சிப்பவன், பொய்யான ஜட இன்பங்களின் கவர்ச்சியால் மயக்கப்படாமல் பரம புருஷ பகவானின் சேவையில் நிலைபெற்றிருக்க வேண்டும். இவ்வாறு நிலைப்பெற்றவன் எளிதாக அந்த உன்னத திருநாட்டினை அடைய இயலும்.

கீதையின் மற்றொரு இடத்தில் (8.21) கூறப்பட்டுள்ளது:

அவ்யக்தோ (அ)க்ஷர இத்-யுக்தஸ்

தமாஹு: பரமாம் கதிம்

யம் ப்ராப்ய ந நிவர்தந்தே

தத் தாம பரமம் மம

அவ்யக்த என்றால் தோன்றாது என்று பொருள். ஜடவுலகம் கூட நமக்கு முழுவதுமாகத் தோன்றுவதில்லை. இந்த பௌதிக பிரபஞ்சத்தின் நட்சத்திரங்கள் அனைத்தையும் பார்க்குமளவிற்குக் கூட நமது புலன்களுக்கு பக்குவமில்லை. வேத இலக்கியங்களிலிருந்து எல்லா கிரகங்களைப் பற்றிய பல்வேறு விவரங்களை நாம் பெற முடியும். நாம் அதனை நம்பலாம் அல்லது நம்பாமல் இருக்கலாம். எல்லா முக்கிய கிரஹங்களும், வேத இலக்கியங்களில், முக்கியமாக ஸ்ரீமத் பாகவத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், பௌதிக வானிற்கு அப்பாற்பட்ட ஆன்மீக உலகம் அவ்யக்த (தோன்றாதது) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்த உன்னத திருநாட்டினை அடைய ஒருவன் இச்சையும் ஏக்கமும் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்தத் திருநாட்டை அடைந்தவன் இப்பௌதிக உலகிற்குத் திரும்ப வேண்டியது இல்லை.

அடுத்ததாக, பரம புருஷ பகவானின் அந்த வாசஸ்தலத்தை அடையும் வழி என்ன என்ற கேள்வி எழலாம். இது பற்றிய விவரம் கீதையின் எட்டாம் அத்தியாத்தில் கொடுக்கப்பட்டுள்ளது:

அந்த-காலே ச மாம் ஏவ

ஸ்மரன் முக்த்வா கலேவரம்

ய: ப்ரயாதி ஸ மத் பாவம்

யாதி நாஸ்த்-யத்ர ஸம்ஷய:

“வாழ்வின் முடிவில், எவனொருவன் என்னை நினைத்தவாறே உடலை நீக்குகிறானோ, அவன் உடனே என் தன்மையை அடைகிறான். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” (பகவத் கீதை 8.5) மரண சமயத்தில் எவன் கிருஷ்ணரை நினைக்கின்றானோ, அவன் கிருஷ்ணரிடம் செல்கிறான். ஒருவன் ஸ்ரீ கிருஷ்ணரின் உருவத்தை நினைவில் கொள்ள வேண்டும்; அவ்வுருவை எண்ணிக் கொண்டே தன் உடலை விடுபவன், நிச்சயமாக ஆன்மீக உலகத்தை அடைகிறான். மத்-பாவம் என்பது பகவானின் பரத்தன்மையைக் குறிக்கிறது. பகவான் ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹமாவார்—அதாவது, அவரது ரூபம், நித்தியமான, முழு அறிவு கொண்ட, ஆனந்தமயமானதாகும். நமது தற்போதைய உடல் ஸச்-சித்-ஆனந்தமல்ல. அது ஸத் அல்ல, அஸத். அது நித்தியமானதல்ல, அழியக்கூடியது. அது சித், அறிவு நிறைந்தல்ல, அறியாமை நிறைந்தது. ஆன்மிக உலகைப் பற்றிய தகவல் நம்மிடம்இல்லை—இந்த பௌதிக உலகிலிருக்கும் பல பொருள்களையும் நாம் அறியாமலிருப்பதால், இதிலும் நமக்குப் பூரண அறிவில்லை. இந்த உடலும் நிரானந்தமாகும், ஆனந்தம் நிறைந்திருப்பதற்குப் பதிலாக துன்பம் நிறைந்ததாக உள்ளது. இவ்வுலகில் நாம் பெறும் துன்பங்கள் அனைத்தும் உடலினால் வருபவையே; ஆனால் பரம புருஷ பகவானான கிருஷ்ணரை எண்ணியவாறே உடலை விடுபவன், உடனேயே ஸச்-சித்-ஆனந்த உடலை அடைகிறான்.

இந்த ஜடவுலகில் ஒர் உடலை விட்டு நீங்கி, மறு உடலைப் பெறுவதற்கான வழிமுறை முறைப்படுத்தப்பட்டுள்ளது. மறுபிறவியில் எந்தவிதமான உடலை ஒருவன் அடைவான் என்பது தீர்மானிக்கப்பட்ட பின்னரே, அவன் மரணமடைகிறான். இதனை முடிவு செய்வது ஜீவாத்மாவல்ல, அவனுக்கு மேற்பட்ட உயர்அதிகாரிகளே. இப்பிறவியில் நமது செயல்களுக்கேற்ப, நாம் உயர்வு தாழ்வுகளை அடைகிறோம். நமது தற்போதைய பிறவி, நமது மறுபிறவிக்கு நம்மை நாம் தயார் செய்து கொள்வதற்கானதாகும். எனவே, இந்தப் பிறவியில் இறைவனின் திருநாட்டிற்கு உயர்வு பெற நாம் நம்மைத் தயார் செய்தால், இந்த ஜவுடலை விட்டு வெளியேறிய பின் இறைவனைப் போன்ற ஆன்மீக உடலை அடைவது நிச்சயம்.

முன்பே விளக்கியபடி, பிரம்மவாதி, பரமாத்வாதி, பக்தர்கள் என பலவிதமான ஆன்மீகவாதிகள் உள்ளனர். மேலும் முன்பே கூறியபடி பிரம்மஜோதி என்னும் ஆன்மீக வானில் எண்ணற்ற ஆன்மீக கிரகங்கள் உள்ளன. பௌதிக உலகிலுள்ள ஒட்டுமொத்த கிரகங்களைக் காட்டிலும் பன்மடங்கு மிகுந்தது இவற்றின் எண்ணிக்கை. இப்பௌதிக உலகானது சிருஷ்டியின் கால்பங்காக மதிப்பிடப்பட்டுள்ளது (ஏகாம்ஷேன ஸ்திதோ ஜகத்). இப்பௌதிக உலகில் கோடான கோடி பிரபஞ்சங்களும், அவற்றில் கோடிக்கணக்கான கிரகங்களும் சூரியன்களும் சந்திரன்களும் நட்சத்திரங்களும் உள்ளன. ஆனால் இந்த ஜடவுலகம் முழுவதும், படைப்பின் மிக நுண்ணய பகுதியே. படைப்பின் பெரும் பகுதி ஆன்மீக வானில் உள்ளது. பரபிரம்மனுடன் ஐக்கியமாக விரும்புபவன், முழுமுதற் கடவுளின் பிரம்ம ஜோதிக்கு மாற்றப்பட்டு ஆன்மீக வானத்தை அடைகிறான். இறைவனுடன் உறவை அனுபவிக்க விரும்பும் பக்தன், வைகுண்ட கிரகங்களை அடைகிறான். எண்ணற்ற இக்கிரகங்களில், பரம புருஷ பகவான் தனது சுய விரிவுகளான நான்கு கைகள் கொண்ட, பிரத்யும்னர், அநிருத்தர், கோவிந்தன் முதலான பெயர்கள் கொண்ட நாரயணராக பக்தனுடன் உறவு கொள்கிறார். எனவே, ஆன்மீகவாதிகள் வாழ்வின் இறுதியில் பிரம்ம ஜோதியையோ, பரமாத்மாவையோ, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரையோ எண்ணுகின்றனர். இவர்கள் எல்லாருமே ஆன்மீக வானத்தை அடைகின்றனர் என்ற போதிலும், முழுமுதற் கடவுளுடன் அந்தரங்கத் தொடர்பு கொண்டவர்களான பக்தர்கள் வைகுண்ட கிரங்களை அல்லது கோலோக விருந்தவனத்தை அடைகின்றனர். மேலும், எவ்வித ‘சந்தேகமும் இல்லை ‘ என்று பகவான் கூறுகிறார். இஃது உறுதியாக நம்பப்பட வேண்டும். நமது கற்பனைக்கு ஒத்துவராததால் ஒரு பொருளை நாம் மறுக்கக் கூடாது. நமது மனப்பான்மை அர்ஜுனனைப் போல, “நீங்கள் கூறியவற்றையெல்லாம் நாம் நம்புகிறேன்” என்று இருக்க வேண்டும். எனவே, மரண நேரத்தில் கடவுளை, பிரம்மனாகவோ, பரமாத்மாகவோ, பகவானாகவோ தியானிப்பவர்கள் நிச்சயமாக ஆன்மீக வானத்தை அடைகின்றனர் என்று பகவான் கூறுவதில், எவ்வித சந்தேகமும் இல்லை. இதை நம்பாதிருத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை.

மரண நேரத்தில் பரமனை எண்ணி ஆன்மீக உலகை அடைவதற்கான பொதுவான கொள்கையும் பகவத் கீதையில் (8.6) விளக்கப்பட்டுள்ளது:

யம் யம் வாபி ஸ்மரன் பாவம்

த்யஜத்-யந்தே கலேவரம்

தம் தம் ஏவைதி கௌந்தேய

ஸதா தத் பாவ–பாவித:

“எந்த மனோநிலையில் ஒருவன் தற்போதைய உடலை நீக்குகின்றானோ, மறுபிறவியில் வாழ்வின் அதே நிலையை தவறாமல் அடைகிறான்.” தற்போது, நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், ஜட இயற்கை பகவானின் சக்திகளில் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தில் (6.7.61) பகவானின் சக்திகள் வர்ணிக்கப்பட்டுள்ளன:

விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா

க்ஷேத்ர-க்ஞாக்யா ததா பரா

அவித்யா-கர்ம-ஸம்க்ஞான்ய

த்ருதீயா ஷக்திர் இஷ்யதே

முழுமுதற் கடவுளிடம் பலதரப்பட்ட எண்ணற்ற சக்திகள் உள்ளன, அவை நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை. இருப்பினும், சிறந்த கற்றறிந்த ஞானிகளும் முக்தி பெற்ற ஆத்மாக்களும் இந்த சக்திகளை ஆராய்ந்து அவற்றை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வெல்லா சக்திகளும் விஷ்ணு சக்திகளே. அதாவது, பகவான் விஷ்ணுவிடம் பலதரப்பட்ட சக்திகள் உண்டு என்று பொருள். முதல் சக்தி, பரா, அல்லது ஆன்மீக சக்தி எனப்படும். முன்பே விளக்கியபடி, உயிர்வாழிகளும் ‘உயர் ‘ சக்தியைச் சேர்ந்தவர்கள். மற்ற சக்திகள், அதாவது ஜட சக்திகள், அறியாமை குணத்தைச் சார்ந்தவை. மரண நேரத்தில் நாம் இந்த ஜடவுலகின் கீழ்ச் சக்தியிலேயே தொடர்ந்து இருக்கலாம், அல்லது ஆன்மீக உலகின் சக்திக்கு நம்மை மாற்றிக் கொள்ளலாம். எனவே, பகவத் கீதை (8.6) கூறுகிறது:

யம் யம் வாபி ஸ்மரன் பாவம்

த்யஜத்-யந்தே கலேவரம்

தம் தம் ஏவைதி கௌந்தேய

ஸதா தத் பாவ-பாவித:

“எந்த மனோநிலையில் ஒருவன் தற்போதைய உடலை நீக்குகின்றானோ, மறுபிறவியில் வாழ்வின் அதே நிலையை தவறாமல் அடைகிறான்.”

நமது வாழ்வின் பழக்கம், பௌதிக சக்தியைப் பற்றியோ, ஆன்மீக சக்தியை பற்றியோ எண்ணுவதாகும். அத்தகு எண்ணங்களை பௌதிக சக்தியிலிருந்து முற்றிலுமாக ஆன்மீக சக்திக்கு மாற்றுவது எங்ஙனம்? நாவல்கள், செய்தித்தாள்கள் போன்ற பற்பல புத்தகங்கள் நமது சிந்தனைகளை ஜட சக்தியால் நிரப்புகின்றன. இத்தகு புத்தகங்களில் மூழ்கியுள்ள நமது சிந்தனையை வேத இலக்கியங்களுக்கு மாற்ற வேண்டும். எனவே, புராணங்களைப் போன்ற பல்வேறு வேத இலக்கியங்களை சாதுக்கள் இயற்றியுள்ளனர். புராணங்கள் கற்பனையானவையல்ல; அவை சரித்திரக் குறிப்புகள். சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய லீலை 20.122) கீழ்வரும் பதம் உள்ளது:

மாயா-முக்த ஜீவேர நாஹி ஸ்வத: க்ருஷ்ண-க்ஞான

ஜீவேரே க்ருபாய கைலா க்ருஷ்ண வேத-புராண

மறதி வாய்ந்த உயிர்வாழிகள், அதாவது கட்டுண்ட ஆத்மாக்கள் பரம புருஷ பகவானுடனான தங்களது உறவை மறந்து, ஜட இயக்கங்களைப் பற்றி சிந்திப்பதிலேயே மூழ்கியுள்ளனர். அவர்களது சிந்திக்கும் சக்தியை ஆன்மீக வானத்திற்குத் திருப்புவதற்காகவே, கிருஷ்ண துவைபாயன வியாசர் பல வேத இலக்கியங்களைத் தந்துள்ளார். முதலில் வேதங்களை நான்காகப் பிரித்த அவர், பின்னர் அவற்றை புராணங்களாக விவரித்து, அவற்றைப் புரிந்துகொள்ள இயலாதவர்களுக்காக மஹாபாரதத்தை இயற்றினார். மஹாபாரதத்தில்தான் பகவத்கீதை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் எல்லா வேத இலக்கியங்களும் வேதாந்த சூத்திரத்தில் சுருக்கமாக தொகுப்பட்டன, எதிர்கால வழிநடத்துதலுக்காக வேதாந்த சூத்திரத்திற்கு, ஸ்ரீமத் பாகவதம் எனும் இயல்பான கருத்துரை நூலையும் அவர் இயற்றினார். நாம் நமது மனதை எப்போதும் இந்த வேத நூல்களைக் கற்பதில் ஈடுபடுத்த வேண்டும். பௌதிகவாதிகள் எவ்வாறு செய்தித்தாள், பத்திரிக்கை, பல்வேறு பௌதிக நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதில் கவனம் செலுத்துகின்றனரோ, அது போல வியாசதேவரால் நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த வேத இலக்கியங்களைப் படிப்பதில் நமது கவனத்தை நாம் மாற்ற வேண்டும். இவ்விதமாக, மரண நேரத்தில் முழுமுதற் கடவுளை நினைத்தல் சாத்தியமாகும். இதுவே பகவானால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரே வழி. “இதில் சந்தேகமில்லை” என்று கூறுவதன் மூலம், இதன் பலனுக்கு பகவானே உறுதியளிக்கிறார்:

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு

மாம் அனுஸ்மர யுத்ய ச

மய்யர்பித-மனோ-புத்திர்

மாம் ஏவைஷ்யஸ்-யஸம்ஷய:

“எனவே, அர்ஜுனா, எப்போதும் என்னை இந்த கிருஷ்ண ரூபத்தில் நீ எண்ணுவாயாக. அதே சமயத்தில் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் தொடர்ந்து செய்ய வேண்டும். உனது செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உனது மனதையும் அறிவையும் என்னில் நிறுத்தினால், நீ என்னிடம் வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. (பகவத் கீதை 8.7)

வெறுமே அவரை நினைத்துக் கொண்டு, தொழிலை விட்டுவிடும்படி அர்ஜுனனிடம் பகவான் கூறவில்லை. பழக்கத்தில் கொண்டுவர முடியாத எதையும் கடவுள் உபதேசிப்பதில்லை. இப்பௌதிக உலகில் உடலைக் காப்பாற்றுவதற்கு மட்டுமாவது ஒருவன் செயல்பட்டுதான் ஆகவேண்டும். மனித சமுதாயம், தொழிலின் அடிப்படையில், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு சமூக நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிராமண குலம் எனப்படும் அறிஞர் குழு ஒருவிதத்திலும், சத்திரியர் எனப்படும் ஆளும் குழு மற்றொரு விதத்திலும் செயல்பட, வியாபரிகளும் தொழிலாளர்களும் தத்தமது கடமைகளில் ஈடுபடுகின்றனர். மனித சமுதாயத்தில், தொழிலாளி, வியாபாரி, ஆட்சி செய்பவன், விவசாயி அல்லது உயர்தரப் பிரிவைச் சேர்ந்தவனான இலக்கியவாதி, விஞ்ஞானி, வேதாந்தி என எப்படி இருந்தாலும், ஒருவன் தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உழைத்தே ஆக வேண்டும். எனவே, அர்ஜுனன் தனது தொழிலை விட்டுவிட வேண்டியதில்லை என்றும், அதில் ஈடுபட்டிருக்கும் போதே தன்னை (கிருஷ்ணரை) நினைவுகொள்ள வேண்டும் (மாம் அனுஸ்மர) என்றும் பகவான் கூறகிறார். வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் கிருஷ்ணரை தியானிக்க அவன் பழக்கப்படுத்திக் கொள்ளா விட்டால் மரணத்தின் போது, ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்தல் இயலாது. பகவான் சைதன்யரும் இதையே அறிவுறுத்துகிறார். அவர் கூறுகிறார், கீர்தனீய: ஸதா ஹரி:—கடவுளின் திருநாமத்தை எப்போதும் கீர்த்தனம் செய்யப் பழக வேண்டும். கடவுளின் பெயர்களும் கடவுளுக்கும் வேற்றுமை இல்லை. எனவே, “என்னை நினை” என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு செயதாஹ் உபதேசமும், “பகவானின் கிருஷ்ணரின் நாமங்களைக் கூறுங்கள்” என்ற பகவான் சைதன்யரின் உபதேசமும் ஒன்றே. கிருஷ்ணருக்கும் அவரது பெயர்களுக்கும் வேறுபாடில்லாததால், இந்த உபதேசங்களிலும் வேறுபாடில்லை. பூரண நிலையில், வார்த்தைக்கும் வார்த்தையால் உரைக்கப்படும் பொருளுக்கும் வித்தியாசமில்லை. எனவே, ஒரு நாளில் இருபத்துநான்கு மணி நேரமும் பகவானின் நாமங்களைக் கூறுவதன் மூலம், நாம் அவரை இடைவிடாது எண்ண பழகிக் கொள்வதோடு, எப்போதும் அவரை நினைக்கும் படியாக நமது வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ளவும் வேண்டும்.

இஃது எவ்வாறு சாத்தியம்? ஆச்சாரியர்கள் பின்வரும் உதாரணத்தைத் தருகின்றனர். திருமணமான பின்னும் ஒரு பெண், வேறோர் ஆணிடம் பற்றுதல் கொண்டிருத்தால், அல்லது ஓர் ஆண் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணிடம் பற்றுதல் கொண்டிருத்தால், அந்தப் பற்றுதல் மிகவும் நெருங்கியதாக கருதப்படுகிறது. இவ்வாறு பற்றுதல் கொண்டவன் எப்போதும் தன் அன்பிற்குரிய பெண்ணை நினைத்துக் கொண்டிருப்பான். தனது காதலனை எண்ணிக் கொண்டிருக்கும் மனைவி, தனது வீட்டுக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவனைச் சந்திப்பதைப் பற்றி எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பாள். உண்மையில், தன் கணவன் தனது தொடர்பைப் பற்றி சந்தேகம் கொள்ளாத வகையில் அவள் தனது கடமைகளை மிகக் கவனமுடன் செய்கிறாள். அதுபோலவே நமது உன்னத காதலரான ஸ்ரீ கிருஷ்ணரை எப்போதும் எண்ணிக்கொண்டு, அதே சமயம் நமது உலகக் கடமைகளை மிக நன்றாக நாம் செயலாற்ற வேண்டும். மிகவும் பலமான அன்பு இங்கே அவசியமாகிறது. பரம புருஷ பகவானுடன் நமக்கு மிக ஆழமான காதல் இருக்குமெனில், நமது கடமைகளை நிறைவேற்றும் போதே அவரை எண்ணிக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வகையான அன்பை நாம் விருத்தி செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக, அர்ஜுனன் எப்போதும் கிருஷ்ணரை எண்ணிக் கொண்டிருந்தான். கிருஷ்ணரின் நெருங்கிய நித்திய நண்பனான அதே நேரத்தில் அவன் சிறந்த போர் வீரனுமாவான். போரை விட்டு விட்டு, கானகம் சென்று தவம் புரியும் படி, கிருஷ்ணர் அவனுக்கு அறிவுரை கூறவில்லை. யோகப் பயிற்சியைப் பற்றி பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கியபோது, அவன் அது தன்னால் இயலாது என்று கூறினான்.

அர்ஜுன உவாச

யோ (அ)யம் யோகஸ் த்வயா ப்ரோக்த:

ஸாம்யேன மதுஸூதன

ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி

சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்

“அர்ஜுனன் கூறினான்: மதுசூதனரே, நீர் இப்போது சுருக்கமாக விளக்கிய யோகப் பயிற்சி முறை செயல்முறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததாகவும் எனக்குத் தோன்றுகிறது; ஏனெனில், மனம் நிலையற்றதும் அமைதியற்றதுமாக இருக்கிறது.” (பகவத் கீதை 6.33)

ஆனால் பகவான் கூறுகிறார்:

யோகினாம் அபி ஸர்வேஷாம்

மத் கதேனாந்தராத்மனா

ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்

ஸ மே யுக்கதமோ மத:

“யோகிகள் எல்லோரிலும், சிறந்த நம்பிக்கையோடு என்னில் வாசம் புரிபவனும், தன்னுள் என்னை எப்போதும் எண்ணிக் கொண்டு, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிபவனுமே, என்னுடன் யோகத்தில் மிக நெருங்கியவனாகிறான். எல்லாரிலும் அவனே மிகச் சிறந்தவன். இதுவே எனது அபிப்பிராயம்.” (பகவத் கீதை 6.47) எனவே, எவனோருவன் எப்போதும் பகவானை எண்ணுகிறானோ அவன் ஒரே சமயத்தில் மிகச்சிறந்த யோகியும், மிகவுயர்ந்த ஞானியும், உன்னதமான பக்தனுமாகத் திகழ்கிறான். சத்திரியனான அர்ஜுனன், போர்த் தொழிலை விட முடியதென்றும், கிருஷ்ணரை எண்ணிப் போர் புரிந்தால், இறக்கும் தருவாயில் இவரை நினைவு கொள்ள முடியும் என்றும், அர்ஜுனனிடம் கிருஷ்ணர் மேலும் விளக்கினார். ஆனால் அவன் திவ்யமான அன்புத் தொண்டில் பகவானிடம் முழுமையாகச் சரணடைந்திருக்க வேண்டும்.

உண்மையில் நாம் நமது உடலால் உழைப்பதில்லை, மனதாலும் அறிவாலும் உழைக்கிறோம். எனவே அறிவும் மனமும் பகவானின் சிந்தனையில் ஈடுபட்டிருந்தால், இயற்கையாகவே புலன்களும் அவரது சேவையில் ஈடுபடும். மேல்நோக்காகப் பார்த்தால் புலன்களின் செயல்கள் மாறுபடாமல் இருக்கும், ஆனால் உணர்வு மாற்றப்பட்டு விடுகிறது. பகவத் கீதை, மனதையும் அறிவையும் பகவானின் நினைவில் ஆழ்த்துவது எவ்வாறு என்பதைக் கற்பிக்கின்றது. இந்தச் சிந்தனையே கடவுளின் திருநாட்டிற்கு ஒருவனை மாற்றும். கிருஷ்ணரின் சேவையில் மனம் ஈடுபடு இருந்தால், புலன்கள் தாமாகவே அவரது சேவையில் ஈடுபடுகின்றன. ஸ்ரீ கிருஷ்ணரின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்திருத்தல் என்னும் இக்கலை, பகவத் கீதையின் இரகசியமாகும்.

நவீன மனிதன் நிலவை அடைய மிகவும் பாடுபட்டிருக்கிறானே ஒழிய, தன்னை ஆன்மீகத்தில் உயர்த்திக் கொள்ள அவ்வளவு சிரமப்பட்டு முயலவில்லை. ஒருவனுடைய வாழ்வில் இன்னும் ஐம்பது வருடங்கள் மீதமிருக்குமானால் அவன் அந்தக் குறுகிய காலத்தை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் நினைவில் கழிக்கப் பயிற்சி செய்து கொள்ளவேண்டும். இந்த பயிற்சி பக்தி என்னும் வழிமுறையாகும்.

ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ:

ஸ்மரணம் பாத-ஸேவனம்

அர்சனம் வந்தனம் தாஸ்யம்

ஸக்யம் ஆத்ம-நிவேதனம்

(ஸ்ரீமத் பாகவதம் 7.5.23)

இந்த ஒன்பது முறைகளில் எளிமையானதாக, ஸ்ரவணம் (உணர்ந்த நபரிடமிருந்து பகவத் கீதையைக் கேட்டல்), பரம புருஷரை நோக்கி ஒருவனது சிந்தனையைத் திருப்பக் கூடியதாகும். இது பகவானை நினைவிற் கொள்ளும் நிலைக்கு அவனை உயர்த்தி, உடலை விட்ட பின்பு, முழுமுதற் கடவுளுடன் உறவு கொள்வதற்குத் தகுந்த ஆன்மீக உடலை அடைய வழிவகுக்கும்.

இறைவன் மேலும் கூறுகிறார்:

அப்யாஸ-யோக-யுக்தேன

சேதஸா நான்ய–காமினா

பரமம் புருஷம் திவ்யம்

யாதி பார்தானுசிந்தயன்

“அர்ஜுனனே பரம புருஷ பகவானான என் மீது தியானம் செய்து, மனதில் இடையறாது என்னை எண்ணிக் கொண்டு, இப்பாதையிலிருந்து பிறழாமல் இருப்பவன் என்னை அடைவது உறுதி.” (பகவத் கீதை8.8)

இது மிகக் கடினமான முறையல்ல. இருப்பினும் ஏற்கனவே பயிற்சியில் உள்ள ஒருவரிடமிருந்து (அனுபவமுள்ளவரிமிருந்து) இதனைப் பயில வேண்டும். தத்-விக்ஞானார்தம் ஸ குரும் ஏவாபி கச்சேத்—ஏற்கனவே பயிற்சியில் உள்ள நபரை அவசியம் அணுக வேண்டும். மனம் எப்போதும் இங்குமங்குமாக பறந்து கொண்டிருப்பதால், முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் வடிவத்திலோ, அவரது நாமத்தின் ஒலியிலோ மனதை எப்போதும் லயப்படுத்த ஒருவன் பயில வேண்டும். மனம் இயற்கையாகவே அமைதியற்றது. இங்குமங்கும் அலைவது; ஆனால் கிருஷ்ணரின் ஒலி அதிர்வில் அஃது ஓய்வு பெறும். இவ்வாறு ஒருவன் ஆன்மீக வானில் ஆன்மீக உலகில் வாழும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளை (பரமம் புருஷம்) தியானித்து, அவரை அடைய வேண்டும். உணர்தலின் இறுதி நிலையும் பரம கதியும் அடைவதற்கான வழிமுறை பகவத் கீதையில் காட்டப்பட்டுள்ளன. இந்த ஞானத்தின் கதவுகள் எல்லாருக்கும் திறந்துள்ளன. யாருக்கும் தடை இல்லை. அனைத்து பிரிவைச் சார்ந்தவர்களும் கிருஷ்ணரை அவரது நாமத்தை சொல்லி அணுக முடியும்; ஏனெனில், அவரைப் பற்றிக் கேட்பதும் அவரை நினைப்பதும் எல்லாருக்கும் சாத்தியமாகும்.

பகவான் மேலும் கூறுகின்றார் (பகவத் கீதை9.32- 33):

மாம் ஹி பார்த வ்யாபஷ்ரித்ய

யே (அ)பிஸ்பு: பாப–யோனய:

ஸ்திரியோ வைஷ்யாஸ் ததா

ஷூத்ராஸ் தே (அ)பியாந்தி பராம் கதிம்

கிம் புனர் ப்ராஹ்மணோ: புண்யா

பக்தா ராஜர்ஷயஸ் ததா

அநித்யம் அஸுக ம் லோகம்

இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்

வணிகன், பெண், உழைப்பாளி மற்றும் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள மனிதனும் பரம கதியை அடைய முடியும் என்று பகவான் கூறுகிறார். மிகத் தேர்ந்த அறிவுடையராக இருக்க வேண்டிய அவசியமில்லை. கருத்து என்னவெனில், பக்தி யோக நெறியை ஏற்றுக்கொண்டு, முழுமுதற் கடவுளை வாழ்வின் எல்லாமாக, உன்னத இலட்சியமாக, இறுதி நோக்கமாக ஏற்றுக் கொண்ட எவரும், அவரை ஆன்மீக வானில் அணுகலாம். பகவத் கீதையின் நெறிகளைக் கடைப்பிடிப்பவன், தனது வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்வதோடு, வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காண்கிறான். இதுவே, பகவத் கீதை மொத்தின் கருத்தும் சாரமும் ஆகும்.

முடிவாக, பகவத் கீதை மிகக் கவனத்துடன் கற்க வேண்டிய திவ்யமான இலக்கியமாகும். கீத-ஷாஸ்திரம் இதம் புண்யம் ய: படேத் ப்ரயத: புமான்—பகவத்கீதையின் உபதேசங்களை முறையாகப் பின்பற்றுபவன், வாழ்வின் எல்லா வித துயரங்களிலிருந்தும் ஏக்கத்திலிருந்தும் விடுபட முடியும். பய-ஷோகாதி-வர்ஜித: இவ்வாழ்வின் பயம் முழுவதிலிருந்தும் விடுபட்டு, அவன் மறுவாழ்வில் ஆன்மீக வாழ்வை அடைகிறான். (கீதை மஹாத்மியம் 1)

இதைத் தவிர மேலும் பலனுள்ளது:

கீதாத் யாயன-ஷீலஸ்ய

ப்ராணாயம-பரஸ்ய ச

நைவ ஸாந்தி ஹி பாபானி

பூர்வ-ஜன்ம-க்ருதானி ச

“பகவத் கீதையை முழு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஒருவன் படித்தால், பகவானின் அருளால் அவனது பூர்வ ஜன்ம பாவங்கள் செயல்படமால் போகும்.” ( கீதை மஹாத்மியம் 2) பகவத் கீதையின் இறுதிப் பகுதியில் (18.66) பகவான் பகிரங்கமாக அறிவிக்கிறார்:

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய

மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ

மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

எல்லாவிதமான தர்மங்களில் கைவிட்டு, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கிறேன். பயப்படாதே. இவ்வாறு தன்னிடம் சரணடைபவனது பொறுப்புக்களையெல்லாம் ஏற்பதோடு, அவனது பாவங்களின் விளைவுகளிலிருந்தும் பகவான் அவனுக்கு விடுதலை அளிக்கிறார்.

மல-நிர்மோசனம் பும்ஸாம்

ஜல-ஸ்நானம் தினே தினே

ஸக்ருத் கீதாம்ருத-ஸ்நானம்

ஸம்ஸார-மல-நாஷ னம்

“தினமும் குளிப்பதன் மூலம் ஒருவன் தன்னை சுத்தம் செய்து கொள்கிறான். ஆனால் கீதை எனும் புனித கங்கையில் ஒருமுறை குளிப்பதன் மூலம், ஜட வாழ்வின் களங்கள் எல்லாவற்றையும் கழுவி விடுகிறான்.” (கீதைமஹாத்மியம் 3)

கீதா ஸு-கீதா கர்தவ்யா

கிம் அன்யை: ஷாஸ்த்ர-விஸ்தரை:

யா ஸ்வயம் பத்மனாபஸ்ய

முக-பத்மாத் வினி:ஸ்ருதா

பரம புருஷ பகவானே கீதையை உபதேசித்திருப்பதனால், வேறு எந்த வேத நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. பகவத் கீதையை தொடர்ந்து கவனத்துடன் கேட்பதும் படிப்பதுமே அவசியம். தற்போதைய யுகத்தில் பௌதிகச் செயல்களிலே மிகவும் ஆழ்ந்துள்ள மனித குலத்தினரால், எல்லா வேத நூல்களையும் படிப்பதென்பது இயலாது. ஆனால், இது தேவையானதுமல்ல. பகவத் கீதை என்னும் இந்த ஒரு நூலே போதுமானது. ஏனெனில், இஃது எல்லா வேத நூல்களின் சாரமும் முழுமுதற் கடவுளால் உபதேசிக்கப்பட்டதுமாகும். (கீதை மஹாத்மியம் 4)

இங்கே கூறப்பட்டுள்ளது போல:

பாரதாம்ருத-ஸர்வஸ்வம்

விஷ்ணு-வக்த்ராத் வினி:ஸ்ருதம்

கீதா-கங்கோதகம் பீத்வா

புனர் ஜன்ம ந வித்யதே

“கங்கையின் நீரைக் குடிப்பவன் முக்தி அடைகிறான், இப்படியிருக்க பகவத் கீதையின் அமிர்தத்தை குடிப்பவரைப் பற்றி என்ன சொல்வது? பகவத் கீதை மஹாபாரதத்தின் அமிர்தம், இது மூலவிஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது.” (கீதை மஹாத்மியம் 5) பகவத் கீதை முழுமுதற் கடவுளின் திருவாயிலிருந்து பொழிவது, கங்கையோ அவரது திருப்பாதங்களிலிருந்து வெளிப்படுவது. உண்மையில், முழுமுதற் கடவுளின் திருவாய்க்கும் திருபாதங்களுக்கும் வேறுபாடில்லாவிடினும், நமது பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் பகவத் கீதையை கங்கைக் காட்டிலும் முக்கியமானதாக மதிக்கலாம்.

ஸர்வோபனிஷதோ காவோ

தோக்தா கோபால-நந்தன:

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா

துக்தம் கீதாம்ருதம் மஹத்

“எல்லா உபநிஷத்துகளின் சாரமான கீதோபநிஷத் என்றழைக்கப்படும் பகவத் கீதை பசுவைப் போன்றது. இடையர் குலச் சிறுவனாக புகழ்பெற்று விளங்கும் பகவான் கிருஷ்ணரால் கறக்கப்படுகிறது. அர்ஜுனன் கன்று போன்றவன். அறிவு சான்றவரும் தூய பக்தர்களும் பகவத் கீதை எனும் அமிர்தப் பாலைக் குடிக்க வேண்டியவர்கள்.” (கீதை மஹாத்மியம் 6)

ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீ-புத்ர–கீ தம்

ஏகோ தேவோ தேவகீ-புத்ர ஏவ

ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி

கர்மாப்-யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா

(கீதை மஹாத்மியம் 7)

தற்சமயத்தில், ஒரு நூல், ஒரு கடவுள், ஒரு மதம், ஒரு தொழில் என்ற கருத்துக்களில் மனிதன் மிகவும் ஆவலாக இருக்கின்றான். எனவே, ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீ-புத்ர-கீதம்— உலகம் முழுமைக்கும் ஒரே பொது நூல் இருக்கட்டும்—பகவத் கீதை. ஏகோ தேவோ தேவகீ புத்ர ஏவ—உலகம் முழுமுமைக்கும் ஒரே கடவுள் இருக்கட்டும்—ஸ்ரீ கிருஷ்ணர். ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி—மேலும், ஒரே மந்திரம், ஒரே பிரார்த்தனை-அவரது திருநாமத்தை உச்சரித்தல்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. கர்மாப்-யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா—மேலும் ஒரே ஒரு செயலிருக்கட்டும்—பரம புருஷ பகவானுக்குத் தொண்டாற்றுதல்.

சீடப் பரம்பரை

ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது: (பகவத் கீதை 4.2). இந்த “பகவத் கீதை உண்மையுருவில்” கீழ்க்கண்ட சீடப் பரம்பரை மூலமாகப் பெறப்படுகிறது.

1. கிருஷ்ணர்

2. பிரம்மா

3. நாரதர்

4. வியாசர்

5. மத்வாசாரியர்

6. பத்மநாபர்

7. நரஹரி

8. மாதவர்

9. அக்ஷோப்யர்

10. ஜய தீர்த்தர்

11. ஞானசிந்து

12. தயாநிதி

13. வித்யாநிதி

14. ராஜேந்திரர்

15. ஜயதர்மர்

16. புருஷோத்தமர்

17. பிரம்மண்யதீர்த்தர்.

18. வியாச தீர்த்தர்

19. லக்ஷ்மிபதி

20. மாதவேதந்திர பூரி

21. ஈஸ்வர பூரி (நித்யானந்தர், அத்வைதர்)

22. பகவான் சைதன்யர்

23. ரூபர் (ஸ்வரூப, ஸனாதா)

24. ரகுநாதர், ஜீவர்

25. கிருஷ்ணதாஸ்

26. நரோத்தமர்

27. விஸ்வநாதர்

28. (பலதேவர்), ஜகநாதர்

29. பக்திவினோத

30. கௌரகிஷோர்

31. பக்திசித்தாந்த சரஸ்வதி

32. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அறிமுகம்

ஓம் அக்ஞான – திமிராந்த ஸ்ய

க்ஞானாஞ்ஜன – ஷலாகயா

சக்ஷுர் உன்மீலிதம் யேன

தஸ்மை ஸ்ரீ – குரவே நம:

ஸ்ரீ – சைதன்ய – மனோ – (அ)பீஷ்டம்

ஸ்தாபிதம் யேன பூதலே

ஸ்வயம் ரூப: கதா மாஹ்யம் த

தாதி ஸ்வ – பதாந்திகம்

நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களைச் சமர்பிக்கிறேன்.

பகவான் ஸ்ரீ சைதன்யரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான இயக்கத்தை இப்பௌதிக உலகில் நிறுவிய ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் எப்போது தமது பாதக் கமலங்களில் எனக்குஅடைக்கலம் தருவார்.

வந்தே (அ)ஹம் ஸ்ரீ-குரோ: ஸ்ரீ-யுத-பத –

கமலம் ஸ்ரீ-குரூன் வைஷ்ணவாம்ஷ் ச

ஸ்ரீ-ரூபம் ஸாக்ரஜாதம் ஸஹ-கண-

ரகுநாதான் விதம் தம் ஸ-ஜீவம்

ஸாத் வைதம் ஸாவதூதம் பரிஜன-

ஸஹிதம் க்ருஷ்ண-சைதன்ய-தேவம்

ஸ்ரீ-ராதா-க்ருஷ்ண-பாதான் ஸஹ-கண-

லலிதா-ஸ்ரீ-விஷாகான்விதாம்ஷ் ச

எனது ஆன்மீக குருவின் பாத கமலங்களுக்கும் எல்லா வைஷ்ணவர்களின் பாதங்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்பித்துக் கொள்கிறேன். ஸ்ரீல ரூபகோஸ்வாமி, அவரது மூத்த சகோதரர் ஸநாதன கோஸ்வமி, ரகுநாத தாஸ, ரகுநாத பட்ட, கோபால பட்ட, ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள். அத்வைத ஆச்சாரியர், கதாரர், ஸ்ரீவாஸர் மற்றும் பக்தர் குழாமுடன், ஸ்ரீ நித்யானந்தருக்கும் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யருக்கும் எனது பணிவான வணக்கங்கள். ஸ்ரீமதி ராதாராணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர்களது தோழிகளான லலிதா, விசாகைக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

ஹே க்ருஷ்ண கருணா-ஸிந்தோ

தீன-பந்தோ ஜகத் பதே

கோபேஷ கோபிகா-காந்த

ராதர-காந்த நமோ (அ)ஸ்து தே

என்னருமை கிருஷ்ணா, பரிதவிப்பவரின் நண்பரும் படைப்பின் மூலமும் நீரே. கோபியர்களின் நாயகரும் நாயகரும் ராதாராணியின் காதலரும் நீரே. உமக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

தப்த-காஞ்சன-கௌராங்கி

ராதே ஸ்ருந்தாவனேஷ்வரி

வ்ருஷபானு-ஸுதே தேவி

ப்ரணமாமி ஹரி-ப்ரியே

விருந்தாவனத்தின் ராணியும், உருக்கிய பொன்னிற மேனி கொண்டவருமான ராதாராணிக்கு வணக்கம். மன்னர் விருஷபானுவின் மகளான தாங்கள், பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்.

வாஞ்சா-கல்பதருப்யஷ் ச

க்ருபா-ஸிந்துப்ய ஏவ ச

பதிதானாம் பாவனேப்யோ

வைஷ்ணவேப் யோ நமோ நம:

நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லாரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவர்களுமான, பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய பிரபு-நித்யானந்த

ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பிரபு நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

பகவத் கீதை கீதோபநிஷத் என்றும் அறியப்படும். வேத இலக்கியங்களில் மிக முக்கிய உபநிஷதமான இந்நூல் வேத ஞானத்தின் சாரமாகும். பகவத் கீதைக்கு எத்தனையோ ஆங்கில உரைகள் இருக்க, இன்னொன்றின் அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். இந்த வெளியீட்டின் அவசியம் பின்வருமாறு விளக்கப்படலாம். சமீப காலத்தில் ஓர் அமெரிக்கப் பெண்மணி பகவத் கீதையின் ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சிபாரிசு செய்யுமாறு என்னை வேண்டினாள். அமெரிக்காவில் என்னவோ பகவத் கீதையின் ஆங்கிலப் பதிப்புகள் பல கிடைக்கலாம். ஆனால் நான் பார்த்தவரை, அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ, அவற்றில் ஒன்றைக்கூடி பிரமாணமானதாகக் கூற இயலாது. ஏனெனில், அவை ஒவ்வொன்றிலும் பகவத் கீதையின் உள்நோக்கத்தைத் தொடாமல், ஒவ்வொரு கருத்துரையாளரும் தனது சொந்த அபிப்பிராயத்தையே பெரும்பாலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பகவத் கீதையின் உள்நோக்கம் பகவத் கீதையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. உதரணமாக, ஒரு குறிப்பிட்ட மருந்தை நாம் உட்கொள்ள விரும்பினால், அந்த மருந்தின் தலைப்புக் காகித்தில் உள்ள விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். ஒரு நண்பர் கூறுவது போலவோ, நமக்குத் தோன்றிய படியோ மருந்துண்ண முடியாது. தலைப்புக் காகிதத்தின் மேல் கூறப்பட்டள்ளபடியோ, மருத்துவர் ஒருவரது அறிவுரையின்படியோ மருந்து உட்கொள்ளப்பட வேண்டும். அது போல பகவத் கீதையைக் கூறியவரது வாழிகாட்டுதலின் படியே, கீதையை உண்மையுருவில் எடுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும். பகவத் கீதையை உபதேசித்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் பரம புருஷராக, முழுமுதற் கடவுளாக, பகவானாகக் கூறப்பட்டுள்ளார். பகவான் என்ற சொல் சில வேளைகளில் சக்தி வாய்ந்த நபரையோ தேவரையோ குறிக்கலாம், எனவே இங்குள்ள பகவான் என்னும் சொல், ஸ்ரீ கிருஷ்ணரை மிகச்சிறந்த நபராக குறிப்பிடுவது நிச்சயம். ஆனால் அதே நேரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதை நாம் அறிய வேண்டும். வேத ஞானத்தின் அதிகாரிகளாக இந்தியாவில் தோன்றிய சங்கராசாரியார், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நிம்பார்க் ஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு போன்ற பல்வேறு ஆச்சாரியர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றனர். பகவத் கீதையில் பகவானே தன்னை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக நிலை நாட்டுகின்றார். பிரம்ம சம்ஹிதையிலும், எல்லாப் புராணங்களிலும், குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்திலும் (க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்) அவர் இவ்விதமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். எனவே, முழுமுதற் கடவுள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். எனவே, முழுமுதற் கடவுள் தானகவே விளக்கியுள்ளபடி நாம் பகவத் கீதையை அதன் உண்மையுருவில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கீதையின் நான்காம் அத்தியாத்தில் (4.1-3) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question