Tuesday, November 19

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம்.

கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல்

“அம்மா பசிக்குது,” என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பில் திளைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஓர் இடைஞ்சல். கிருஷ்ணருக்காக அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கிவர அதைக் கவனிப்பதற்காக கிருஷ்ணரை இறக்கி வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள் அன்னை யசோதை. வந்ததே கோபம் கிருஷ்ணருக்கு. அருகிலிருந்த வெண்ணெய் பானைகளை உடைத்து வெண்ணெயை தானும் உண்டு குரங்குகளுக்கும் கொடுக்க ஆரம்பித்தார்.

திரும்பி வந்த அன்னை அலங்கோல காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். இடுப்பு நோக நெற்றி வியர்க்க மிகுந்த சிரமத்துடன் தயிரைக் கடைந்து தயார் செய்தவற்றைக் காணாது திகைத்தாள் யசோதை பிராட்டி. தன் கிருஷ்ணனைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்திருக்க மாட்டார்கள் என்று எண்ணி கிருஷ்ணரைத் தேடினாள். செய்த செயல் தவறு. அன்னை நிச்சயம் கோபப்படுவாள் என்பதை அறிந்த கிருஷ்ணர். அன்னையைக் கண்டதும் ஓடத் தொடங்கினார். அன்னையும் ஓடினாள், ஓடினாள். முடிந்தவரை ஓடினாள். கிருஷ்ணரும் ஓடினார். ஓடினார். அகப்படாமலே ஓடினார். யசோதையின் கூந்தல் அவிழ்ந்தது. உடல் தளர்ந்தது. கிருஷ்ணரோ கைக்கெட்டிய தூரத்தில், ஆனால் கையில் அகப்படாமல் ஓடிக் கொண்டே இருந்தார். அகிலத்தையே பிடித்து வைத்திருக்கும் அவரை அவ்வளவு எளிதில் பிடித்து விட முடியுமா?

யசோதை கிருஷ்ணரைக் கட்டிப் போடுதல்

அன்னையின் அசதியைப் பார்க்கிறார் அந்த அச்சுதன், விருப்பத்துடன் பிடிபட்டுக் கொள்கிறார். பயமே யாரைக் கண்டு பயப்படுமோ, அந்த பரந்தாமன் அன்னையின் கையிலிருந்த குச்சியைக் கண்டு பயப்படுகிறார். குழந்தையை அதிகம் பயமுறுத்தக் கூடாது என்று நினைத்து யசோதை குச்சியைக் கீழே போட்டு விடுகிறாள். ஆனாலும். குறும்புக்காரனை ஏதேனும் செய்தால்தான் மீண்டும் குறும்பு செய்ய மாட்டான் என்று (தவறாக) எண்ணி. கட்டிப்போடுதல் நல்லது என்று நினைத்தாள். எல்லாரையும் எப்போதும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவரை கட்டிப்போட முடியுமா?

சிறிய பையன். சிறிய கயிறு போதும்! ஆனால் எந்தக் கயிற்றை எடுத்து வந்தாலும் அவரைக் கட்டிப்போட முடியவில்லை. இரண்டு அங்குலம் போதவில்லை. இரண்டு கயிறுகளை இணைத்தாள். அப்போதும் இரண்டு அங்குலம் போதவில்லை. மேன்மேலும் கயிறுகளை இணைத்தாள். போதாத இரண்டு அங்குலம் போதாமலே இருந்தது, முயன்றாள். முயன்றாள். முயன்று கொண்டே இருந்தாள். வீட்டிலிருந்து எல்லா தாம்புக் கயிறுகளையும் கொண்டு வந்து முயற்சித்தாள், அப்போதும் இரண்டு அங்குலம் போதவில்லை.

அன்னையின் விடா முயற்சியைக் கண்டு மனம் இசைகிறார். கயிறுக்கு கட்டுப்படாத அந்த கள்வர் உண்மையில் அன்பிற்கு அடங்கிய அச்சுதனாக ஆனார். இறுதியாக யசோதையும் கட்டிவிட்டாள் கண்ணனை.

உடம்பிலே உறுத்தக்கூடிய பல முடிச்சுகளுடன் (கண்ணி) நுட்பமாக இருந்த (நுண்) சிறிய தாம்புக் கயிற்றினால் (சிறு தாம்பினால்) யசோதை பிராட்டி தன்னைக் கட்டும்படி தானே செய்து கொண்டார் (கட்டுண்ண பண்ணிய இந்த ஆச்சரியமான மாய சக்திகளைக் கொண்ட கிருஷ்ணர் (பெருமாயன்) என்று மதுரகவி ஆழ்வார் இதனை மிகவும் மதுரமாக மொழிந்துள்ளார்– கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணி யபெரு மாயன். (நாலாயிர திவ்ய பிரபந்தம் 937)

மரத்தை முறித்து நடை பயின்றவன்

சிறிய குழந்தைகள் நடைவண்டி வைத்து நடப்பது வழக்கம். பரந்தாமன் இங்கே உரல் வண்டி வைத்து தவழ்கிறார்.

உரலுடன் கட்டிவிட்டாள் கண்ணனை, கண்ணன் கட்டுப்படுவானா? குறும்புகள் குறைந்திடுமோ? நிச்சயம் இல்லை. கட்டிப்போட்ட அன்னை அங்கிருந்து அகன்று விட உரலோடு தவழ்கிறார். முன்னே பார்க்கிறார். நெடுநெடுவென வளர்ந்த இரட்டை மருத மரங்கள். அம்மரங்களின் பழங்கதையை அறிந்த பரந்தாமன் புதுக்கதையை எழுத தவழ்ந்தார். மருத மரங்களுக்கிடையே தவழ்கிறார். உரலோ மரங்களில் மாட்டிக்கொள்கிறது, இவர் அதனை அங்குமிங்கும் சற்று அசைத்து இழுக்கிறார். அவர் அசைந்தால் அகிலமே அசைந்திடும். மருத மரங்கள் மசியாதா? பேரொலியை எழுப்பி இரு மரங்களும் வீழ்ந்து மாய்ந்தன. மரங்களிலிருந்து தோன்றினர் இரண்டு தேவர்கள். இருவரும் கிருஷ்ணருக்கு பிரார்த்தனை செய்து சாப விமோசனம் பெற்றனர். அவர்கள் அங்கே மரங்களாக நின்றது ஏன்? அந்த மரத்தை முறித்து கிருஷ்ணர் நடை பயின்றது ஏன்?

நாரதரின் சாபம்

அந்த மருத மரங்கள் இரண்டும் உண்மையில் செல்வத்தின் அதிபதியான குபேரனின் இரண்டு மகன்களாவர். அவர்களின் பெயர் நளகூவரன். மணிக்ரீவன். செல்வம் இருந்தால் மதுவில் மயங்கி மங்கையின் மடியில் கிடப்பது இயற்கையே. மது மங்கையில் மயங்கிய அவர்கள் இருவரும் மந்தாகினி கங்கையினுள் இறங்கி அழகிய இளம் மங்கையருடன் ஜலக்கிரீடையில் லயித்திருந்தனர். அப்போது நாரத முனிவர் அந்தப் பக்கமாக செல்ல நேர்ந்தது. அங்கிருந்த பெண்கள் உடனடியாக வெட்கப்பட்டு தம்மை ஆடைகளால் மறைத்துக் கொண்டனர். மதுவில் மதியிழந்திருந்த அந்த தேவர்கள் இருவரும் நாரதரைப் பற்றி கவலைப்படாமல் ஆடையின்றியே இருந்தனர். செல்வத்தால் செருக்குற்றிருந்த இருவரையும்

மாற்ற நினைத்த நாரதர் தனது காரணமற்ற கருணையால் அவர்களுக்கு சாபம் கொடுக்க முடிவு செய்தார். வெறுக்கத்தக்க நிலையில் இருந்த அவ்விருவரையும் காப்பாற்றுவது நாரதரைப் போன்ற நற்குணம் படைத்தவரின் கடமையாகும். மிகவுயர்ந்த பொறுப்பிலுள்ள குபேரனின் மகன்கள் பொறுப்பின்றி மிருகங்களைப் போல நிர்வாணமாக இருந்ததால். அவர்களை நகர இயலாத மரங்களாக மாறும்படி நாரதர் சாபமிட்டார். அதே நேரத்தில் மரங்களாக இருக்கும்போதும். தங்களது முந்தைய செயல்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும்படி நாரதர் சாபமிட்டார்.

நூறு தேவ வருடங்கள் மரங்களாக இருந்த பின்பு பகவான் கிருஷ்ணரால் விடுவிக்கப்படுவர் என்று சாபத்தோடு இணைந்த வரத்தையும் நாரதர் வழங்கினார். அதன்படி மருத மரங்களாக நீண்ட நெடுங்காலம் நின்றிருந்த அவர்கள் கிருஷ்ணரின் கருணையால் சாப விமோசனம் பெற்றனர்.

ஏன் விடுவிக்க வேண்டும்?

கிருஷ்ணரின் நோக்கம் பக்தர்களை விடுவிப்பதே. நளகூவரன். மணிக்ரீவன் ஆகிய இருவரும் பக்தர்களல்ல. செல்வச் செருக்கில் மமதையில் வாழ்ந்தவர்கள். அவர்களை ஏன் கிருஷ்ணர் விடுவிக்க வேண்டும்? விருந்தாவனத்தில் இன்பமயமாக அன்னை யசோதையுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் இவர்கள் ஏன் குறுக்கே தொல்லை? பக்தியில் ஈடுபடாத இவர்களுக்கு நந்தரின் தோட்டத்தில் நின்றபடி தனது பால்ய லீலைகளை ரசிப்பதற்கு கிருஷ்ணர் எவ்வாறு வாய்ப்பளித்தார்?

இங்குதான் மாபெரும் இரகசியம் பொதிந்துள்ளது. பகவானுக்கும் பக்தனுக்கும் இடையிலுள்ள உறவு மிகவும் நெருக்கமானதாகும். பகவான் விரும்பியதை பக்தன் செய்கிறான். பக்தன் விரும்புவதை பகவானும் செய்கிறார். பெரும்பாலான மக்கள் பக்தனுக்கு பகவான் ஆசி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு உயர்வதில்லை. ஆனால். உண்மையான பக்தனோ பகவான் தனக்கு என்ன கொடுப்பார் என்பதைப் பாராமல் தன்னை முற்றிலுமாக பகவானிடம் ஒப்படைக்கிறான். அப்படி அந்த பக்தன் தூய்மையாக இருக்கும்போது கிருஷ்ணர் அந்த அன்பினால் வசப்படுகிறார்

பக்தன் ஏதேனும் வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றுவதை தனது கடமையாக நினைத்து அன்புடன் அச்செயலை செய்கிறார். அதுபோன்று நிகழ்ந்தது தான் இந்த மருத மரங்களின் விடுதலை. நாரதர் உரைத்தார். நந்தலாலா உடைத்தார்: மாமுனிவரின் மொழிகள், மாயவனின் செயல்கள்.

பக்தன் சொல் தட்டா பகவான்

தனது பக்தன் யாருக்கேனும் ஏதேனும் வாக்குறுதி கொடுத்தால் கிருஷ்ணர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். சில நேரத்தில் கிருஷ்ணர் தான் கொடுத்த வாக்குறுதியைக்கூட மீறலாம். ஆனால் தனது பக்தன் கொடுத்த வாக்குறுதியை என்றும் மீற மாட்டார். அதனால் தான் தனது பக்தன் என்றும் அழிவடைய மாட்டான் என்று பகவத் கீதையில் (9.31) கிருஷ்ணர் கூறுகிறார். அதையும்கூட பகவான் கிருஷ்ணர் தன்னுடைய பக்தனான அர்ஜுனனைக் கொண்டு கூறுகிறார். அதாவது தனது பக்தனால் ஏதேனும் உரைக்கப்பட்டால், கிருஷ்ணர் அதனை தனது வார்த்தைகளைக் காட்டிலும் முக்கியமானதாக ஏற்கிறார். இது பக்தியின் இரகசியமாகும்.

இதனால்தான் பக்தியைப் பயிற்சி செய்பவர்கள் மத்தியில் பகவானின் தூய பக்தர்களுக்கு பகவானைப் போலவே மதிப்பளிக்கப்படுகிறது. தூய பக்தர்களாக இருக்கும் ஆச்சாரியர்களைப் பின்பற்றுதல் என்பது பக்தியின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. ஒரு ஜீவனை விடுவிப்பதற்கு


தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்
தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த
தாமோ தரா! கொட்டாய் சப்பாணி
தாமரைக் கண்ணனே! சப்பாணி

“தாவி மோர்ப் பானைகளை உருட்டி விட்டு தயிரையும் நெய்யையும் விழுங்கிவிட்டு, இப்படி பெரிய காரியத்தைச் செய்தவரா (ஒன்றுமறியா குழந்தைபோல தவழ்கின்றார்’ என்று சொல்லி இடைச்சிகள் தாம்பால் கட்டவும் கைகளால் அடிக்கவும் அதனால் காய்ப்பேறிக் கிடக்கின்ற தாமோதரனே! கைகளைத் தட்டுவாய், தாமரைக் கண்ணனே தட்டுவாய் கைகளை. திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி, 5.3)


ஆச்சாரியர் உறுதியெடுக்கும்போது கிருஷ்ணர் அதனை நிறைவேற்றுவார். கிருஷ்ணரின் தூய பக்தர்கள் கிருஷ்ணரை எப்போதும் இதயத்தில் தாங்கியவர்கள். அவர்களால் யாருக்கு வேண்டுமானாலும் கிருஷ்ணரைக் கொடுக்க முடியும். எனவேதான். பக்தி என்பது ஆச்சாரியரின் வழியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

பக்தனின் பக்தி சக்தி

எனவே. பக்தியில் முன்னேறி கிருஷ்ணரின் கருணையைப் பெற விரும்புவோர் அனைவரும் கிருஷ்ணரின் திருப்பாதங்களை பக்தர்களின் திருப்பாதங் களின் மூலமாகப் பிடிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். கிருஷ்ணரை நேரடியாகப் பிடித்தல் சாத்தியமல்ல. பக்தனிடம் மயங்கியிருக்கும் பரமனின் கருணையைப் பெற வேண்டுமெனில். பக்தனைத்தான் அணுக வேண்டுமே தவிர பகவானை நேரடியாக அணுகக் கூடாது.

கிருஷ்ணரை வழிபடுவதைக் காட்டிலும் அவரது பக்தர்களை வழிபடுதல் சிறந்தது என்று சிவபெருமான் பத்ம புராணத்தில் பார்வதி தேவியிடம் கூறுகிறார். ஆச்சாரியர்களை கிருஷ்ணருக்கு சமமாக மதிக்க வேண்டும் என்று கிருஷ்ணரே ஸ்ரீமத் பாகவதத்தில் (11.17.27) கூறுகிறார். “எனது பக்தன் என்று கூறுபவன் எனது பக்தனல்ல. எனது பக்தனுடைய பக்தன் என்று .. கூறுபவனே எனது பக்தன். என்று கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஆதி புராணத்தில் கூறுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் தன்னை கிருஷ்ணருடைய பக்தர்களுக்கு பக்தர்களுக்கு பக்தர்களுக்கு பக்தனாக முன்வைக்கிறார் (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய 6560060 13.80).

கடவுள் இல்லை என்று நினைக்கும் முட்டாள்களை விட கடவுளின் மீதான பயத்துடன் செயல்படுவோர் உயர்ந்தவர்கள். கடவுளின் மீதான பயத்துடன் இருப்பவர்களை விட அவர் மீது மதிப்பு மரியாதையுடன் செயல்படுபவர்கள் உயர்ந்தவர்கள். வெறும் மதிப்பு மரியாதை மட்டுமின்றி அன்புடன் பக்தி செய்யும் பக்தர்கள் மிகவுயர்ந்தவர்கள். அவர்கள் கிருஷ்ணரை நேசிக்கின்றனர். கிருஷ்ணரும் அவர்களை நேசிக்கின்றார். அந்த பக்தர்களின் தாள் தொழுவோம்.

பக்தர்களிடம் இருக்கக்கூடிய பக்தி சக்தி கிருஷ்ணரையே வசீகரிக்கக்கூடியது. அந்த பக்தி சக்தியை பக்தர்களால்தான் மற்றவர்களுக்கு வழங்க முடியும். இதனை நன்றாக உணர்ந்து என்றென்றும் பக்தர்களைப் பின்பற்றி அவர்களின் கருணையைப் பெறுவோமாக.


மாயன் தாமோதரனை துதிப்போம். பாவங்களைப் போக்குவோம்

அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே, இமைக்கும் பொழுதும் இடைச்சி – குமைத்திறங்கள், ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே, பேசியே போக்காய் பிழை.

“மனமே! ஆராய்ந்து பார்த்தால் ஒரு கண நேரத்தைக்கூட வீணாகக் கழிக்க முடியுமோ? யசோதையின் கையிலே அகப்பட்டு அவன் நலிவுப்பட்ட பாடுகளை பரிகாசம் செய்தாவது, இன்பத்துடன் துளசி மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றி (எதையாவது) பேசிக் கொண்டேயிருந்து, உனது பாவங்களைப் போக்கிக்கொள்வாயாக. (நம்மாழ்வார். பெரிய திருவந்தாதி, நாலாயிர திவ்ய பிரபந்தம் 2622)

-Thank you to BTG – Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question