துக்காராம் மகராஜ் ஒருமுறை புண்ய ஸ்தல யாத்ரை சென்றார் பக்தர்களுடன் . வழியெல்லாம் ஊர் ஊராக நடந்து சென்றார்கள். வழியெங்கும் அநேகர் அவரது விட்டல நாம சங்கீர்த்தன மழையில் நனைந்தனர்.
பஜனை பிரவாஹமாக அவர்கள் சென்ற தெருவெல்லாம் ஓடி வழிந்து குளிர்வித்தது.
ரஞ்சனா என்று சிறிய அழகிய கிராமத்தை அடைந்தார்கள். அங்கு மூலா என்ற நதியும் பிருவா என்ற நதியும் இணைந்து சங்கமமாகிறது. அந்த புண்ய நதியில் ஸ்நானம் செய்து விட்டு அவர்கள் அன்றைக்கு பிக்ஷைக்கு உஞ்சவ்ரித்தி எடுத்தார்கள்.
துக்காராம் மறுநாளைக்கு என்று மட்டுமல்ல மறு வேளைக்குக்கூட எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் அல்லவா?. எனவே அன்றாட பிக்ஷை உஞ்சவ்ரித்தி மூலம் தான். அவர்கள் விட்டல சங்கீர்த்தனம் பண்ணிக்கொண்டு அந்த கிராமத்தின் ஒரு பிரதான வீதியில் வந்து கொண்டிருந்தார்கள்.
அங்கங்கு நின்று பிக்ஷாவந்தனம் பெற்றுக்கொள்வார்கள். குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு மேற்கொண்டு செல்லமாட்டார்கள். அன்றையப் பொழுதின் ஆகாரம் அவ்வளவு தான்.
அவர்கள் ஒரு வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்கள் என்றேனே, அந்த வீட்டில் ஒரு பிராமண குடும்பம் வெகுகாலமாக வாழ்ந்து வந்தது. ரொம்பவும் ஆச்சாரமான குடும்பம். அனுதினமும் அக்னிஹோத்ரம், நித்ய ஸ்ராத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். வெளியே எங்கும் ஆகாரம் எடுக்க மாட்டார்கள். இது பரம்பரை பரம்பரையாக அந்த வீட்டில் நடந்து வருகிறது.
அந்த வீட்டின் பிராமணர் ஒரு விட்டல பக்தரும் கூட என்பதால் வாசலில் விட்டல நாம சங்கீர்த்தனம் ஒலிக்கும்போது வீட்டில் உள்ளே அப்போது தான் பூர்ணாஹுதி முடிந்தது. அனைத்து த்ரவியங்களும் வஸ்த்ரமும் பக்ஷணங்களும், நெய்யோடு ஆஹூதி ஹோமத்தில் போடப்பட்டு தேவ ப்ரீத்தி குடும்ப பிரார்த்தனையோடு முடிந்திருந்தது. ஹோமம் பிரார்த்தனையோடு வாசலில் விட்டல பஜனையும் சேர்ந்தது நல்ல சகுனம் என்று அந்த பிராமணருக்கு பரம திருப்தி. வெளியே வந்தார். யார் என்று பார்த்தவர் பிரமித்தார்.
ஏனென்றால் அவர் அடிக்கடி பண்டரிபுரம் செல்வார் ஒருமுறை ஆடி கிருத்திகை அன்று பண்டரிநாதன் சந்நிதியில் துக்காராம் சுவாமிகளின் விட்டல நாம சங்கீர்த்தனங்கள், அபங்கங்கள் எல்லாம் காது குளிரக் கேட்டவர். அவரது மானசீக குருவாக துக்காராமை ஏற்றவர்.
வாசலிலேயே குருஜியின் காலில் விழுந்து வணங்கினார் உள்ளே வரவேற்றார். குடும்பமே மகிழ்ந்தது அந்த பூஜ்யர் வரவால். அனைவருக்கும் விட்டல பிரசாதம் கொடுத்தார்.
தூரத்தில் ஒரு பையன் கண்கொட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததை பார்த்து விட்டு அவனை ஜாடையாக அருகே வா என்று அழைத்தார் துக்காராம்.
ஒரு நிமிஷம் அவரையே கவனித்து விட்டு அவன் உள்ளே ஓடிவிட்டான்.
சிரித்தார் துக்காராம்.
பிராமணர் குடும்ப விஷயங்கள் எல்லாம் சொல்லும்போது துக்காராம் அந்தப் பையனைப் பற்றி கேட்டார்.
“ஒரு சிறிய அழகிய விட்டலன் இங்கிருந்தானே அவன் யார்?”
அவர் இதைக்கேட்டது தான் தாமதம். மடை திறந்தால் போல பிராமணர் கண்களில் கங்கா ப்ரவாஹம். சோகம் மனதைப்பிழிய அவர் ஓ வென்று அழுதார்.
அவரை ஆச்வாசப்படுத்திவிட்டு துக்காராம் “என்ன துக்கம் உங்களுக்கு” என்றார்.
“அவன் என் மகன். ஒரே மகன். எட்டு வயதாகியும் இன்னும் உபநயனம் நடக்கவில்லையே”.
” தக்க வேளையில் நடக்கும். இதற்கு ஏன் கவலை?
“அவனுக்கு பிறவியிலிருந்தே வாய் பேசாது பிறவி ஊமை. எப்படி உபநயனம் செய்வது? எப்படி காயத்ரி மந்த்ரம் சொல்லமுடியும்?
” விட்டலா இது என்ன கொடுமை?” என்று மனம் வருந்தினார் துக்காராம். “அந்தக் குழந்தையைக் கொஞ்சம் அழைக்கிறீர்களா இங்கே” என்றார் துக்காராம்.
பயத்தோடு பையன் நெருங்கினான். ஏன் பயம் என்றால் பல பேர் இதுவரை மந்திரம் செய்கிறேன், மருந்து கொடுக்கிறேன் என்றெல்லாம் அவனைச் சித்ரவதை செய்திருக்கிறார்கள். ஆதலால் அவனுக்கு யாராவது வந்தால் தனக்கு துன்பம் என்று கருதி தப்பிக்கப் பார்ப்பான். துக்காராமையும் அப்படியே எடைபோட்டான்.
அருகே வந்த பையனை அன்போடு உச்சிமுகர்ந்து உடம்பு பூரா ஆசையாக தடவிக் கொடுத்தார். அவனுக்கு ரொம்ப பிடித்து விட்டது அவரை. அவர் அவனை அணைத்துக்கொண்டார். விட்டல பிரசாதமாக ஒரு சில துளசி தளங்களை அவன் வாயில் போட்டார்.
“விட்டலா, உன் பெயரை “விட்டலா” என்று சொல்லு பார்க்கலாம் என்றார்.
பையன் வாயைத் திறந்து என்னென்னவோ செய்தான். பேச முயன்றான் வாய் திறந்தது ஒரு சில வினாடிகளில் அவன் குரல் “விட்டலா, விட்டலா விட்டலா விட்டலா” என்று கணீர் கணீர் என்று அந்த வீட்டில் முதல் முதலாக ஒலித்தது அனைவரும் அதிசயத்தில் மூழ்கினார்கள்.
ஊமைப்பையன் பேசினான்…
கேட்ட அனைத்து குடும்பத்தினரும் ஆச்சர்யத்திலும் ஆனந்தத்திலும் பேச்சின்றி ஊமையானார்கள்.
முதல் வார்த்தை “விட்டலா” வுக்குப் பிறகு அந்தப்பையன் கொள்ளை பேச்சு பேசினான் இரவெல்லாம் பேசினான். அன்றிரவு அங்கு தங்கிய துக்காராமிடம் எண்ணற்ற கேள்விகள் எல்லாம் கேட்டான். அவர் சந்தோஷமாக அவனுக்கு எல்லாவற்றையும் விவரித்து பதில் சொன்னார்.
இரவு அவர் பக்கத்திலேயே படுத்துத் தூங்கினான்..
மறுநாள் அந்த வீட்டிலே அவனுக்கு உபநயனம் நடந்தது. அவனுக்கு விட்டல பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து விட்டு துக்காராமும் பக்தர்களும் பிரயாணம் தொடர்ந்தனர்.
நாமமே பலம் நாமமே சாதனம்
இராம் கிருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி