Saturday, July 27

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 1

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

1.1

பாடல்:-

உரை

த்ருத்ராஷ்ர உவாச

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே

சமவேதா யுயுத்ஸவ:

மாமகா: பாண்டவஸ் சைவ

கிமகுர்வத சஞ்ஜய

மொழிபெயர்ப்பு:-

திருதராஷ்ட்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருக்ஷேத்திரத்தில் போர் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு, என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?

கருத்து:-

     பகவத் கீதை, கீதாமஹாத்மியத்தில் (கீதை பற்றிப் புகழுரை) சுருக்கிக் கூறப்பட்ட, பரவலாகப் படிக்கப்படும் மதவிஞ்ஞான நூலாகும். ஆங்கு, சுயநோக்குடைய கருத்துக்களின்றி, ஸ்ரீ கிருஷ்ண பக்தர் ஒருவர் உதவியோடு கீதையை ஆராய்ந்து படித்து அறிய முயல வேண்டியதென்று கூறப்பட்டுள்ளது. தூய அறிவின் உதாரணம் கீதையிலேயே இருக்கின்றது – பகவானிடமிருந்து நேரடியாகக் கேட்டு உபதேசத்தைப் புரிந்து கொண்ட அர்ஜுனன் வழியில், அந்த சீட பரம்பரையில் (சுயநோக்குடைய கருத்துக்களின்றி) பகவத் கீதையைப் புரிந்து கொள்ள ஒருவன் அதிர்ஷ்டம் உடையவனாயிருந்தால், அவன் வேதஞானக் கல்விகள் எல்லாவற்றையும், உலகின் எல்லா நூல்களின் அறிவையும் கடந்தவனாகிவிடுகிறான். மற்ற நூல்களில் காணப்படும் எல்லாவற்றையும் ஒருவன் கீதையில் காணமுடியும், அதுமட்டுமல்ல வேறெங்கும் காணாத விஷயங்களைக் கூட அதில் காணலாம். இதுவே பகவத் கீதையின் தனித்தரம். முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரால் நேரடியாக உபதேசிக்கப்பட்டதால் இது தவறற்ற பூரணமான மதவிஞ்ஞானமாகும்.      இந்த மேலான தத்துவஞானத்திற்கும், மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, திருதராஷ்டிரனுக்கும், சஞ்ஜயனுக்கும் இடையே விவாதிக்கப்பட்ட விஷயங்களே அடிப்படையை உருவாக்குகின்றன. வேதகாலத்தின் நினைவுக்கெட்டா பொழுதிலிருந்து புண்ணிய யாத்திரைப் புனிதத் தளமான குருக்ஷேத்திரத்தின் போர்க்களத்தில் இந்தத் தத்துவம் உருவானதாக அறியப்படுகின்றது.  மனித சமுதாயத்தை வழி நடத்த இப்பூவுலகில் பகவான் தாமே இருந்தபோது, அவரால் உபதேசிக்கப்பட்டது இது.      ‘தர்மக்ஷேத்திரம்’ எனும் சொல் மிக முக்கியமானது – (மதச் சடங்குகள் செய்யப்படும் தலம்) – ஏனெனில் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனன் தரப்பில் முழு முதற் கடவுள் இருந்தார். குருக்களின் தந்தையான திருதராஷ்டிரருக்குத் தன் புதல்வர் இறுதியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தைப் பற்றி மிகவும் சந்தேகமிருந்தது; அவரது இந்த சந்தேகத்திலேயே, “என் மகன்களும் பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர்” என்று தனது காரியதரிசியான சஞ்ஜயனிடம் வினவினார் திருதராஷ்டிரர்.  தீர்மானமாகப் போரில் ஈடுபடுவதற்காகவே அந்தக் களத்தில் அவரது மகன்களும், அவரது இளைய சகோதரரான பாண்டுவின் மகன்களும் ஒன்று கூடியிருந்தனர் என்பது அவருக்கு நிச்சயமாயிருந்தது. இருப்பினும் இவ்வாறு கேட்பது முக்கியமானதே. சகோதரருக்கும், தாயாதிகளுக்கும் இடையே உடன்பாட்டை அவர் விரும்பவில்லை என்பதோடு, போர்க்களத்தில் அவரது மகன்களின் கதி என்னாகும் என்பதை நிச்சயமாக அறிய விரும்பினார். ஏனெனில் வேதங்களில் – மேலுலகவாசிகளுக்கும் கூட – வந்தனைக்குரிய தலமாகக் கூறப்பட்டுள்ளதான குருக்ஷேத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், போரின் விளைவில் புனிதத் தளத்திற்கு இருக்கக்கூடிய செல்வாக்கைப் பற்றி மிகவும் பயந்தார் திருதராஷ்டிரர். இயற்கையிலேயே நற்குணவான்களான பாண்டவர்களுக்கு முக்கியமாய் அர்ஜுனனுக்கும் இந்த இடம் நல்ல விளைவுகளை உண்டாக்குமென்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். சஞ்ஜயன் வியாசரின் சீடனானதால் அவரது கருணையால், திருதராஷ்டிரனின் அறையில் இருக்கும்போதே குருக்ஷேத்திரப் போர்க்களத்தை அவனால் காண முடிந்தது. எனவே, திருதராஷ்டிரர் போர்க்கள நிலைமையை அவனிடம் கேட்கலானார்.      பாண்டவர்களும், திருதராஷ்டிர புத்திரரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. ஆயினும் திருதராஷ்டிரரின் உள்ளக் கிடக்கை இங்கு வெளியாகின்றது. வேண்டுமென்றே அவர் தன் மகன்களை மட்டும் குருவம்சத்தினர் என்று பாராட்டுவதன் மூலம், பாண்டவர்களை வம்சத்தின் மரபுரிமையினின்றும் பிரித்துப் பேசினார். இவ்விதமாக திருதராஷ்டிரருக்கு தன் சகோதரனின் பிள்ளைகளிடம் உள்ள உறவின் பிரத்தியேக நிலைமையை ஒருவன் புரிந்து கொள்ளலாம். நெல்வயலில் தேவையற்ற களைகள் பிடிங்கி எறியப்படுவதைப் போல, குருக்ஷேத்திரம் என்னும் புனிதப் போர்க்களத்தில், தர்மத்தின் பிதாவான ஸ்ரீ கிருஷ்ணர் பங்குகொண்ட அந்தப் புண்ணியத் தலத்தில், தேவையற்ற களைகளான திருதராஷ்டிரர் மகன் துரியோதனனும், பிறரும் ஒழிக்கப்பட்டு, மிக நேர்மையான அறங்காப்போர், யுதிஷ்டிரனின் தலைமையில் பிரபுவால் நிலைநிறுத்தப்படுவார்கள் என்பது இந்த விஷயத்தின் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கப்படுகிறது. வேத, சரித்திர முக்கியத்துவம் நீங்கலாக இதுவே ‘தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ என்ற சொற்களின் கருத்து.


1.2

பாடல்:-

உரை

ஸஞ்ஜய உவாச

த்ருஷ்ட்வா து பாண்டவானீகம்

வ்யுடம் துர்யோதனஸ் ததா

ஆசார்யம் உபஸங்கம்ய

ராஜா வசனம் அப்ரவீத்

மொழிபெயர்ப்பு:-

சஞ்ஜயன் கூறினான்: மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகிப் பின்வருமாறு கூறினான்.

கருத்து:-

     திருதராஷ்டிரர் பிறவியிலிருந்தே பார்வையில்லாதவர். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆன்மீகப் பார்வையும் இல்லை. தனது மகன்களும் தர்மத்தின் விஷயத்தில் தனக்குச் சமமான குருடர்கள் என்பதும், பிறவியிலிருந்தே நல்லவர்களான பாண்டவர்களுடன் அவர்கள் உடன்பாடு செய்துகொள்ளப் போவதில்லை என்பதும் அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. இருந்தும், புனிதத் தலத்தின் தாக்கத்தினால் அவர் சந்தேகம் கொண்டார். போர்க்கள நிலைமையைப் பற்றிய அவரது கேள்வியின் உள்நோக்கத்தை சஞ்ஜயனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஏங்கும் மன்னனுக்கு உற்சாகமூட்ட விரும்பிய சஞ்ஜயன், அவரது மைந்தர்கள் போர்க்களத்தின் புனிதத் தன்மையால் பாதிக்கப்பட்டு சமாதானம் ஏதும் செய்துகொள்ளப் போவதில்லை என்பதை உறுதி செய்தான். எனவே ‘பாண்டவர்களின் படை பலத்தைப் பார்வையிட்ட துரியோதனன் உடனேயே தன் தளபதியான துரோணாசாரியரிடம் சென்று உண்மை நிலையை உரைக்கலானான்’ என்று மன்னரிடம் தெரிவித்தான் சஞ்ஜயன். துரியோதனன் ‘மன்னன்’ என்று குறிப்பிடப்பட்டாலும் நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தளபதியிடம் போக வேண்டியிருந்தது. எனவே, அரசியல்வாதியாக இருப்பதற்கு அவன் பொருத்தமானவனே. துரியோதனன் ராஜதந்திரமாக நடந்து கொண்டாலும், பாண்டவர்களின் சேனையைக் கண்டதால் அவனுக்கு ஏற்பட்ட பயத்தை மறைக்க இயலாமல் போயிற்று.

1.3

பாடல்:-

உரை

பஷ்யைதாம் பாண்டு-புத்ராணாம்

ஆசார்ய மஹதீம் சமூம்

வ்யூடாம் த்ருபத-புத்ரேண

தவ ஷிஷ்யேண தீமதா

மொழிபெயர்ப்பு:-

ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பாருங்கள்.

கருத்து:-

     சிறந்த அந்தணத் தளபதியான துரோணாச்சாரியரின் குறைகளை, சிறந்த ராஜதந்திரியான துரியோதனன் சுட்டிக் காட்ட விரும்பினான். அர்ஜுனனின் மனைவி திரௌபதியின் தந்தையான துருபத மன்னனுடன் துரோணாசாரியருக்கு சில அரசியல் விரோதம் இருந்து வந்தது. அவ்விரோதத்தின் விளைவாக, துருபதன் ஒரு பெரிய யாகத்தைச் செய்து துரோணாசாரியரைக் கொல்லும் சக்தி பெற்ற மகனை வரமாகப் பெற்றிருந்தான். துரோணர் இதை மிக நன்றாக அறிந்திருந்தபோதிலும், துருபதன் மகனான திருஷ்டத்யும்னன் தன்னிடம் போர்க் கல்விக்காக ஒப்படைக்கப்பட்டபோது, அந்தணருக்கே உரிய தாராள மனப்பான்மையுடன் போர் தந்திரத்தின் இரகசியங்கள் அனைத்தையும் அவனுக்குக் கற்பித்தார்.  தற்போது குருக்ஷேத்திப் போர்க்களத்தில் திருஷ்டத்யும்னன் பாண்டவர்களின் தரப்பில் உள்ளான். துரோணச்சாரியரிடமிருந்து போர்க் கலையை கற்றிருந்த அவனே, பாண்டவர்களின் சேனையை அணிவகுத்திருந்தான். துரோணாசாரியர் எச்சரிக்கையாகவும் விட்டுக் கொடுக்காமலும் போர்புரிய வேண்டும் என்பதற்காக, துரியோதனன் அவரது இந்தத் தவறைச் சுட்டிக் காட்டுகிறான்.  அன்பிற்குரிய இதர மாணவர்களான பாண்டவர்களிடமும் அவர் தயை காட்டாமல் போரிட வேண்டுமென்பதையும் அவன் இதன் மூலம் சுட்டிக் காட்ட விரும்புகிறான். குறிப்பாக, அர்ஜுனன் அவருக்கு மிகமிக பிரியமான திறமைசாலி மாணவனாவான். இதனால் ஏற்படும் கருணை, போரின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று துரியோதனன் எச்சரிக்கின்றான்.

1.4

பாடல்:-

உரை

அத்ர ஷூரா மஹேஷ் வாஸா

பீமார்ஜுன-ஸமா யுதி

யுயுதானோ விராடஷ் ச

த்ருபதஷ் ச மஹா-ரத:

மொழிபெயர்ப்பு:-

அந்தச் சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர்:  யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.

கருத்து:-

     துரோணாசாரியரின் மிகச்சிறந்த போர் வலிமைக்கு முன் திருஷ்டத்யும்னன் முக்கியத் தடையாக இல்லாவிட்டாலும், இதர வீரர்கள் பலர் பயத்திற்கு காரணமாக இருந்தனர். வெற்றியின் பாதையில் பெரும் தடைக் கற்களாக அவர்களை இங்கு துரியோதனன் குறிப்பிடுகிறான்; ஏனெனில், அவர்கள் ஒவ்வொரும் பீமனையும் அர்ஜுனனையும் போலவே எதிர்க்கப்பட முடியாதவர்கள். பீம அர்ஜுனரின் பலத்தை நன்கறிந்த துரியோதனன், மற்றவர்களை அவர்களுடன் ஒப்பிட்டான்.

1.5

பாடல்:-

உரை

த்ருஷ்டகேதுஷ் சேகிதான:

காஷிராஜஷ் ச வீர்யவான்

புருஜித் குந்திபோஜஷ் ச

ஷைப்யஷ் ச நர-புங்கவ:

மொழிபெயர்ப்பு:-

மேலும், திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர் வீரர்கள் பலரும் உள்ளனர்.

கருத்து:-

1.6

பாடல்:-

உரை

யுதாமன்யுஷ் ச விக்ராந்த

உத்தமௌஜாஷ் ச வீர்யவான்

ஸெளபத்ரோ த்ரௌபதேயாஷ் ச

ஸர்வ ஏவ மஹா-ரதா:

மொழிபெயர்ப்பு:-

வீரனான யுதாமன்யு, பலமுள்ள உத்தமௌஜன், சுபத்ரையின் புதல்வன் மற்றும் திரௌபதியின் குமாரர்களும் இருக்கின்றனர். இப்படை வீரர்கள் அனைவரும் மாபெரும் ரத வீரர்கள்.

கருத்து:-

1.7

பாடல்:-

உரை

அஸ்மாகம் து விஷிஷ்டாயே

தான் நிபோத த்விஜோத்தம

நாயகா மம ஸைன்யஸ்ய

ஸம்க்ஞார்தம் தான் ப்ரவீமி தே

மொழிபெயர்ப்பு:-

ஆனால், பிராமணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்து கொள்வதற்காக எனது சேனையை வழிநடத்தும் தகுதி வாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன்.

கருத்து:-

1.8

பாடல்:-

உரை

பவான் பீஷ்மஷ் ச கர்ணஷ் ச

க்ருபஷ் ச ஸமிதிம் ஜய:

அஷ்வத்தாமா விகர்ணஷ் ச

ஸெளமதத்திஸ் ததைவ ச

மொழிபெயர்ப்பு:-

மரியாதைக்குரிய தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாசாரியர், அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்ரவன் முதலியோர், போரில் எப்போதும் வெற்றி காண்பவர்களே.

கருத்து:-

எப்போதும் வெற்றியையே அடையும் தன்னிகரற்ற மாவீரர்கள் அனைவரையும் துரியோதனன் குறிப்பிட்டான். விகர்ணன் துரியோதனனின் தம்பிகளில் ஒருவன், அஷ்வத்தாமன் துரோணரின் புதல்வனாவான், மற்றும் பாலீக நாட்டு மன்னனான சோமதத்தனின் மகனே பூரிஷ்ரவன் (அல்லது ஸெளமதத்தி). மன்னர் பாண்டுவை குந்தி மணம் செய்வதற்கு முன் பிறந்த கர்ணன், அர்ஜுனனுக்கு சகோதரனாவான். கிருபாசாரியரின் சகோதரியை மணந்தவர் துரோணாசாரியர்.

1.9

பாடல்:-

உரை

அன்யே ச பஹவ: ஷுரா

மத் அர்தே த்யக்த-ஜீவிதா:

நானா-ஷஸ்த்ர-ப்ரஹரணா:

ஸர்வே யுத்த-விஷா ரதா:

மொழிபெயர்ப்பு:-

எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்தத்தில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக உள்ளனர்.

கருத்து:-

     ஜயத்ரதன், கிருதவர்மன், சல்லியன் போன்றோர் துரியோதனனுக்காக உயிரையும் இழக்கத் துணிந்தவர்கள். வேறு விதமாகச் சொன்னால், பாவியான துரியோதனனின் தரப்பில் சேர்ந்ததன் பயனாக, இவர்கள் அனைவரும் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இறக்கப்போவது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இருப்பினும், மேற்கூறப்பட்ட தனது நண்பர்களின் கூட்டுப் பலத்தால் தனது வெற்றி நிச்சயமே என்று துரியோதனன் எண்ணுகிறான்.

1.10

பாடல்:-

உரை

அபர்யாப்தம் தத் அஸ்மாகம்

பலம் பீஷ்மாபிரக்ஷிதம்

பர்யாப்தம் த்விதம் ஏதேஷாம்

 பலம் பீமாபிரக்ஷிதம்

மொழிபெயர்ப்பு:-

பாட்டனார் பீஷ்மரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நமது பலம் அளக்கவியலாதது. ஆனால் பீமனால் கவனமாக பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக்கூடியதே.

கருத்து:-

     இங்கு துரியோதனன் சேனைகளின் பலத்தை ஒப்பிட்டு மதிப்பிடுகிறான். மிகவும் அனுபவமிக்க படைத் தளபதியான பாட்டனார் பீஷ்மரால் பாதுகாக்கப்படுவதால், தனது படையின் பலம் அளவிட இயலாதது என்று எண்ணுகிறான். அதே சமயம், பீஷ்மரின் முன்பு தூசி போன்றவனும் குறைந்த அனுபவமுள்ள தளபதியுமான பீமனால் பாதுகாக்கப்படும் பாண்டவ சேனையின் பலம் அளக்கக்கூடியதாகும். துரியோதனன் எப்போதுமே பீமனிடம் பொறாமை கொண்டிருந்தான்; ஏனெனில் தான் ஒருவேளை மடிய வேண்டியிருந்தால், பீமன் மட்டுமே தன்னைக் கொல்வான் என்பதை அறிந்திருந்தான். அதே சமயம், பன்மடங்கு உயர்ந்த தளபதி பீஷ்மர், தனது தரப்பில் போர் புரிவதால் தனக்கு வெற்றி கிட்டும் என்று அவன் உறுதியாக நம்புகிறான். போரில் தான் வெற்றி வாகை சூடுவது உறுதி என்பதே அவனது முடிவான தீர்மானமாகும்.

1.11

பாடல்:-

உரை

அயனேஷு ச ஸர்வேஷு

யதா-பாகம் அவஸ்திதா:

பீஷ்மம் ஏவாபிரக்ஷந்து

பவந்த: ஸர்வ ஏவ ஹி

மொழிபெயர்ப்பு:-

படை அணிவகுப்பின் நுழைவாயிலில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும்.

கருத்து:-

     பீஷ்மரது ஆற்றலைப் புகழ்ந்த துரியோதனன், மற்றவர்கள் தங்களுக்குக் குறைவான முக்கியத்துவமளிக்கப்பட்டதாக எண்ணிவிடுவார்களோ என்று நினைத்து, தமது வழக்கமான ராஜதந்திரப் பாணியில் மேற்கண்டவாறு கூறி நிலைமையைச் சரிகட்ட முயல்கிறான். பீஷ்மர் ஐயமின்றி மாபெரும் போர் வீரரே, ஆனாலும் அவரது முதுமையைக் கருதி, எல்லாக் கோணங்களிலிருந்தும் அவரது பாதுகாப்பை ஒவ்வொருவரும் நினைக்க வேண்டுமென்பதை துரியோதனன் வலியுறுத்தினான். அவர் களத்தில் இறங்கி ஒரேபுறத்தில் போரிடுவதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டு விடலாமல்லவா? எனவே, மற்ற மாவீரர்கள் தங்களது இடத்தை விட்டு நகர்ந்து, வியூகத்தை எதிரிகள் உடைக்க வழிவிடக்கூடாதென்று அவன் எச்சரித்தான். குரு வம்சத்தினரின் வெற்றி பீஷ்மதேவரையே சார்ந்திருக்கிறது என்பதை அவன் ஐயமற உணர்ந்திருந்தான். பற்பல பெருந்தலைவர்கள் கூடியிருந்த சபையில், அர்ஜுனனின் மனைவியான திரௌபதி, உடைகளைக் களைந்து நிர்வாணமாகும்படி பலவந்தப்படுத்தப்பட்டாள். அப்போது ஆதரவற்ற நிலையில் பிஷ்மரிடமும் துரோணரிடமும் நீதிக்காக முறையிட்டபோது அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்தனர். எனவே, போரில் அவர்களது முழு ஒத்துழைப்பைப் பற்றி துரியோதனனுக்கு மிகுந்த நம்பிக்கையிருந்தது. இவ்விரு போர்த் தலைவர்களும், பாண்டவர்களிடம் பாசம் கொண்டவர்கள் என்பதை அவன் அறிந்திருந்தபோதிலும், சூதாட்டத்தின்போது நடந்து கொண்டதைப் போல, தற்போதும் அப்பாசத்தினை முற்றிலும் துறந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறான்.

1.12

பாடல்:-

உரை

தஸ்ய ஸஞ்ஜனயன் ஹர்ஷம்

குரு-வ்ருத்த: பிதாமஹ:

ஸிம்ஹ-நாதம் வினத் யோச்சை:

ஷ ங்கம் தத்மௌ ப்ரதாபவான்

மொழிபெயர்ப்பு:-

பின்னர், குரு வம்சத்தின் மாபெரும் வீரரும் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.

கருத்து:-

பேரனான துரியோதனனின் உள்மனதைப் புரிந்துகொண்ட குரு வம்சப் பெரியவரான பீஷ்மர் அவனிடம் தனக்குள்ள இயற்கையான பரிவினால், தனது சங்கை உரக்க முழங்கி (சிங்கம் போன்ற தனது நிலைக்குத் தகுந்தாற் போல), அவனுக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றார்.  மேலும் பரம புருஷ பகவானான கிருஷ்ணர் எதிர்தரப்பில் இருந்ததால், போரில் துரியோதனன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பேதுமில்லை என்பதை சங்கொலி மூலம் மறைமுகமாக, பரிதாபத்திற்குரிய தனது பேரனுக்கு உணர்த்தினார்.  இருப்பினும், போர் புரிவது தனது கடமை என்பதால், அதற்காக எல்லாவித துயரத்தையும் ஏற்கத் துணிந்தவர் பீஷ்மர்.

1.13

பாடல்:-

உரை

தத: ஷங்காஷ் ச பேர்யஷ் ச

பணவானக-கோமுகா:

ஸஹஸைவாப்யஹன்யந்த

ஸ ஷப்தஸ் துமுலோ (அ)பவத்

மொழிபெயர்ப்பு:-

அதன்பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள் என அனைத்தும் ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

கருத்து:-

1.14

பாடல்:-

உரை

தத: ஷ்வேதைர் ஹயைர் யுக்தே

மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ

மாதவ: பாண்டவஷ் சைவ

திவ்யௌ ஷங்கௌ ப்ரதத்மது:

மொழிபெயர்ப்பு:-

மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.

கருத்து:-

     பீஷ்மதேவரால் ஒலிக்கப்பட்ட சங்குடன் ஒப்பிடுகையில், ஸ்ரீ கிருஷ்ண அர்ஜுனர்களின் கைகளிலிருந்த சங்குகள் திவ்யமானவை என வர்ணிக்கப்படுகின்றன. கிருஷ்ணர் பாண்டவர்களின் தரப்பிலிருந்ததால், எதிர்தரப்பினருக்கு வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கைக்கு இடமேயில்லை என்பதை தெய்வீக சங்குகளின் முழக்கம் சுட்டிக் காட்டுகிறது. ஜயஸ் து பாண்டு-புத்ராணம் யேஷாம் பக்ஷே ஜனார்தன: பாண்டவர்களைப் போன்று, பகவான் கிருஷ்ணரோடு எப்போதும் நல்லுறவு கொள்பவர்களுக்கே வெற்றி. பகவான் எங்கிருந்தாலும் அங்கே அதிர்ஷ்ட தேவதையும் (இலட்சுமியும்) உள்ளார்; ஏனெனில், இலட்சுமி தன் நாயகனை விட்டு என்றும் பிரிந்து வாழ்வதில்லை. எனவே, பகவான் விஷ்ணுவின் (கிருஷ்ணரின்) திவ்ய சங்கொலியின் முழக்கம், வெற்றியும் செல்வமும் அர்ஜுனனுக்காக காத்துக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. மேலும், இவ்விரு நண்பர்களும் அமர்ந்திருந்த ரதம் அக்னி தேவரால் பரிசளிக்கப்பட்டதாகும். மூவுலகில் எங்குச் சென்றாலும் எல்லாத் திக்குகளையும் வெல்லக்கூடியதான ஆற்றலை அந்த ரதம் பெற்றிருந்தது.

1.15

பாடல்:-

உரை

பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஷோ

தேவதத்தம் தனஞ்ஜய:

பௌண்ட்ரம் தத்மௌ மஹா-ஷங்கம்

பீம-கர்மா வ்ருகோதர:

மொழிபெயர்ப்பு:-

பகவான் கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார்; அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், பெருந்தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர்.

கருத்து:-

     பகவான் கிருஷ்ணர், இங்கு ரிஷிகேசர் என்றழைக்கப்படுகிறார்.  ஏனெனில், அவரே அனைத்து புலன்களின் உரிமையாளராவார்.  உயிர்வாழிகள் கிருஷ்ணரின் அம்சம் என்பதால், அவர்களின் புலன்களும் கிருஷ்ணரது புலன்களின் அம்சங்களே. ஜீவாத்மாவிடம் புலன்கள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத அருவாதிகள், அவர்களை புலன்களற்றவர்களாக (அருவமானவர்களாக) வர்ணிப்பதற்கு எப்போதும் ஏக்கம் கொண்டுள்ளனர். எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் அமர்ந்துள்ள இறைவன் அவர்களின் புலன்களை வழிநடத்துகிறார். ஆனால் அவரது வழிகாட்டுதல், ஜீவனின் சரணாகதியைப் பொறுத்ததே. ஒரு தூய பக்தனின் விஷயத்தில், பகவானே அவனது புலன்களை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறார். இங்கே குருஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனின் தெய்வீகப் புலன்களை நேரடியாகக் கட்டுப்படுத்துவதால், அவர் ரிஷிகேசர் என்ற குறிப்பிட்ட பெயரால் இங்கு அழைக்கப்படுகிறார். தனது பலதரப்பட்ட செயல்களுக்கேற்ப பகவானுக்கு பல்வேறு திருநாமங்கள் உண்டு. உதாரணமாக மது என்னும் அரக்கனைக் கொன்றதால் அவருக்கு மதுசூதனர் என்று பெயர்; புலன்களுக்கும் பசுக்களுக்கும் இன்பம் தருவதால் அவருக்கு கோவிந்தன் என்று பெயர்; வசுதேவரின் புதல்வனாகத் தோன்றியதால் அவருக்கு வாசுதேவர் என்று பெயர்; தேவகியை அன்னையாக ஏற்றதால் அவருக்கு தேவகி-நந்தனர் என்று பெயர்; விருந்தாவனத்தில் யசோதைக்கு தனது பால்ய லீலையின் பாக்கியத்தை அளித்ததால், அவருக்கு யசோதா-நந்தனர் என்று பெயர்; நண்பனான அர்ஜுனனுக்குத் தேரோட்டியதால், பார்த்தசாரதி என்று பெயர். இதுபோல குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனை வழிநடத்தியதால், ரிஷிகேசர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.      இப்பதத்தில், அர்ஜுனன், தனஞ்ஜயன் என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில், பல்வேறு யாகங்களைச் செய்வதற்குப் பணம் தேவைப்பட்ட போது, அவன் அதிகமான செல்வத்தைச் சேகரித்து தனது அண்ணனுக்கு உதவினான். அதுபோலவே, பெருமளவில் உணவு உட்கொள்வது மட்டுமின்றி அரக்கனான இடும்பனைக் கொல்லுதல் போன்ற சாகசச் செயல்களைப் புரிவதால், பீமன், விருகோதரன் என்று அழைக்கப்படுகிறான். எனவே, பாண்டவர் தரப்பில் பகவானிலிருந்து தொடங்கி பல்வேறு வீரர்கள் முழங்கிய சங்கொலிகள், போர் வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. மறுதரப்பிலோ இதுபோன்ற சிறப்புகள் ஏதுமில்லை, பரம வழிகாட்டியான பகவான் கிருஷ்ணரும் அவர்கள் பக்கமில்லை, செல்வத் திருமகளும் இல்லை. எனவே, அவர்கள் தோல்வியடைவது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. சங்கொலியின் முழக்கங்கள் இச்செய்தியையே தெரிவிக்கின்றன.

1.16-18

பாடல்:-

உரை

அனந்தவிஜயம் ராஜா

குந்தீ-புத்ரோ யுதிஷ்டிர:

நகுல: ஸஹதேவஷ் ச

ஸுகோஷ-மணிபுஷ்பகௌ

காஷ்யஷ் ச பரமேஷ் வாஸ:

ஷிகண்டீ ச மஹா-ரத:

த்ருஷ்டத்யும்னோ விராடஷ் ச

ஸாத்யகிஷ் சாபராஜித:

த்ருபதோ த்ரௌபதேயாஷ் ச

ஸர்வஷ: ப்ருதி வீ- பதே

ஸெளபத்ரஷ் ச மஹா-பாஹு:

ஷங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக்

மொழிபெயர்ப்பு:-

குந்தியின் புதல்வரான மன்னர் யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் எனும் சங்குகளையும் முழங்கினர். பெரும் வில்லாளியான காசிராஜன், பெரும் வீரரான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்லவியலாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் மாவீரனான சுபத்ரையின் மகனைப் போன்ற பலரும் தத்தமது சங்குகளை முழங்கினார்கள், மன்னரே.

கருத்து:-

     பாண்டவர்களை எதிர்த்து, தன் மைந்தர்களை அரியணை ஏற்றுவதற்காக மன்னர் திருதராஷ்டிரர் மேற்கொண்ட அறிவற்ற கொள்கை மெச்சத்தக்கதல்ல என்பதை சஞ்ஜயன் மிகவும் சமர்த்தியமாக மன்னரிடம் சுட்டிக் காட்டுகிறான். குரு வம்சம் முழுவதும் அந்த மாபெரும் போரில் அழியப் போவதை அறிகுறிகள் தெளிவாகக் காட்டிவிட்டன. பெரியவரான பீஷ்மர் முதல், அபிமன்யுவைப் போன்ற பேரப் பிள்ளைகள் மற்றும் உலகின் பல்வேறு நாட்டு மன்னர்கள் வரை, அனைவரும் அங்கு கூடியிருந்தனர், அனைவரும் அழிக்கப்பட்டனர். தம் மைந்தர்கள் பின்பற்றிய கொள்கைகளை ஊக்குவித்த திருதராஷ்டிரரே அம்மாபெரும் நாசத்திற்குக் காரணமானார்.

1.19

பாடல்:-

உரை

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம்

ஹ்ருதயானி வ்யதாரயத்

நபஷ் ச ப்ருதிவீம் சைவ

துமுலோ (அ)ப்யனுநாதயன்

மொழிபெயர்ப்பு:-

பல்வேறு சங்கொலிகளின் முழக்கம் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க, திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறிப் போயின.

கருத்து:-

பீஷ்மரும் துரியோதனன் தரப்பிலிருந்த பிறரும் தத்தமது சங்குகளை ஒலித்தபோது, பாண்டவர் தரப்பில் இதயச் சிதறல் எதுவும் ஏற்படவில்லை. அதுபோன்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பாண்டவ படையினரது சங்கொலியால் திருதராஷ்டிர புதல்வர்களின் இதயங்கள் சிதறின என்று இந்தப் பதத்தில் பிரத்யேகமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பாண்டவர்களது திறனும், பகவான் கிருஷ்ணரிடம் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையுமே இதற்கு காரணமாகும். மாபெரும் நாசத்திற்கிடையிலும் முழுமுதற் கடவுளிடம் தஞ்சம் கொண்டிருப்போர் அச்சமுற வேண்டியதே இல்லை.

1.20

பாடல்:-

உரை

அத வ்யவஸ்திதான் த்ருஷ்ட்வா

தார்தராஷ்ட்ரான் கபி-த்வஜ:

ப்ரவ்ருத்தே ஷஸ்த்ர-ஸம்பாதே

தனுர் உத்யம்ய பாண்டவ:

ஹ்ருஷீகேஷம் ததா வாக்யம்

இதம் ஆஹ மஹீ-பதே

மொழிபெயர்ப்பு:-

அச்சமயத்தில், அனுமானின் கொடியைத் தாங்கிய தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், தனது வில்லை ஏந்தி அம்புகள் எய்யத் தயாரானான். மன்னரே அணிவகுக்கப்பட்ட படையில் திருதராஷ்டிரரின் மைந்தர்களைக் கண்டவுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்.

கருத்து:-

     போர் தொடங்க உள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடி வழிகாட்டலின்படி (எதிர்பார்க்காத அளவில்) நல்ல முறையில் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களது படை பலத்தைக் கண்டு திருதராஷ்டிர புதல்வர்களின் நம்பிக்கை ஏறக்குறைய சிதைவடைந்து விட்டதை மேற்கண்ட உரையிலிருந்து அறிகிறோம். அர்ஜுனனின் கொடியிலுள்ள அனுமானின் சின்னம் வெற்றியின் மற்றோர் அறிகுறியாயிற்று. ஏனெனில், இராமருக்கும் இராவணனுக்கும் நடைபெற்ற யுத்தத்தில், அனுமான் இராமரின் தரப்பில் ஒத்துழைத்தார், இராமர் வெற்றிவாகை சூடினார். தற்போது அர்ஜுனனின் ரதத்தில் இராமரும் அனுமானும் அவனுக்கு உதவுவதற்காக வீற்றுள்ளனர். பகவான் கிருஷ்ணர், சாக்ஷாத் இராமரே, மேலும், எங்கெல்லாம் இராமர் உள்ளாரோ, அங்கெல்லாம் அவரது நித்திய சேவகனான அனுமானும், நித்ய நாயகியும் அதிர்ஷ்ட தேவதையுமான சீதையும் வீற்றிருப்பர். எனவே, எத்தகு எதிரியையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் அர்ஜுனனுக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக புலன்களின் அதிபதியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு வழிகாட்ட உள்ளார். எனவே, போரை இயக்கத் தேவையான நல்லறிவுரைகள் அர்ஜுனனுக்கு எளிமையாகக் கிட்டும். பகவானால் அவரது நித்திய பக்தனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மங்களகரமான சூழ்நிலைகள், வெற்றி உறுதி என்பதை தெளிவுபடுத்தும் சின்னங்களாகும்.

1.21-22

பாடல்:-

உரை

அர்ஜுன உவாச

ஸேனயோர் உபயோர் மத்யே

ரதம் ஸ்தாபயமே (அ)ச்யுத

யாவத் ஏதான் நிரீக்ஷே (அ)ஹம்

யோத்து காமான் அவஸ்தி தான்

கைர் மயா ஸஹ யோத்தவ்யம்

அஸ்மின் ரண-ஸமுத்யமே

மொழிபெயர்ப்பு:-

அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும் என்பதைப் பார்க்கும்படி, தயவுசெய்து எனது ரதத்தை இரு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்தவும்.

கருத்து:-

     பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்ற போதிலும் தனது காரணமற்ற கருணையால் தன் நண்பனின் சேவையில் ஈடுபட்டிருந்தார். தனது பக்தர்களிடம் தனக்குள்ள பிரியத்தில் அவர் என்றுமே தவறுவதில்லை என்பதால், இங்கு அச்யுதா (வீழ்ச்சியடையாதவர்) என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டி என்ற நிலையில் அர்ஜுனனது ஆணைகளை அவர் நிறைவேற்றியாக வேண்டும் என்பதால், அவர் அதற்குத் தயங்கவில்லை. அவர் அச்யுதா என்று அழைக்கப்படுகிறார்.  தனது பக்தனுக்காகத் தேரோட்டியின் நிலையை அவர் ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவரது உன்னத நிலைக்கு இழிவு ஏதும் ஏற்படவில்லை. எல்லாச் சூழ்நிலையிலும் அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், புலன்களின் அதிபதியான ரிஷிகேசர். பகவானுக்கும் அவரது சேவகனுக்கும் இடையே உள்ள உறவு திவ்யமானதும் மிகச் சுவையானதுமாகும். சேவகன் எப்போதுமே பகவானுக்கு ஏதாவது சேவை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறான். பகவானோ பக்தனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை எப்போதும் எதிர்நோக்குகிறார். தான் மற்றவர்களுக்கு ஆணையிடும் நிலையில் இருப்பதைக் காட்டிலும், தனது தூய பக்தன் தனக்கு ஆணையிடும் நிலையை ஏற்றுக்கொள்வதில் பகவான் பேரின்பம் காண்கிறார். அவரே எஜமானர் என்பதால், அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்பட்டவர்கள், அவருக்கு ஆணையிடுமளவிற்கு அவரைவிட உயர்நிலையில் எவரும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் வீழ்ச்சியடையாதவர் என்றபோதிலும் தூய பக்தன் தனக்கு ஆணையிடுவதைக் காணும் போது திவ்யமான இன்பத்தை அனுபவிக்கின்றார்.      பகவானின் தூய பக்தனான அர்ஜுனன், தன் தாயாதிகளிடமும் சகோதரர்களிடமும் போர் புரிய விரும்பவில்லை. ஆனால் எவ்வித சமாதானத்திற்கும் இணங்காத துரியோதனனின் பிடிவாதத்தாலேயே அவன் போர்களத்திற்கு வர நேர்ந்தது. எனவே, போர்க்களத்தின் தலைவர்கள் யார் என்பதைக் காண அவன் பேராவல் கொண்டிருந்தான். போர்க்களத்தில் சமாதான முயற்சி என்ற கேள்விக்கே இடமில்லை என்றாலும், அவர்களை மீண்டும் பார்க்கவும், தேவையற்ற இந்தப் போரில் ஈடுபட அவர்கள் எந்த அளவுக்கு தயாராக இருந்தனர் என்பதைப் பார்க்கவும் அவன் விரும்புகிறான்.

1.23

பாடல்:-

உரை

யோத்ஸ்யமானான் அவேக்ஷே (அ)ஹம்

ய ஏதே (அ)த்ர ஸமாகதா:

தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்

யுத்தே ப்ரிய-சிகீர்ஷவ:

மொழிபெயர்ப்பு:-

கெட்ட புத்தியுடைய, திருதராஷ்டிரரின் மகனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு, இங்கு போர் புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.

கருத்து:-

     தனது தந்தை திருதராஷ்டிரருடன் கூட்டுச் சேர்ந்து, பாண்டவர்களின் அரசை சதித்திட்டங்களால் ஆக்கிரமிக்க துரியோதனன் விரும்பினான் என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகும்.  எனவே, துரியோதனன் தரப்பில் இணைந்தவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே இருக்க வேண்டும்.  போர்க்களத்தில் போர் தொடங்குவதற்கு முன் அத்தகையவர்கள் யார் என்பதை அர்ஜுனன் காண விரும்பினானே தவிர, அவர்களோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் அவனுக்கு இல்லை.  கிருஷ்ணர் அருகில் அமர்ந்திருந்ததால் வெற்றியில் அர்ஜுனனுக்கு முழு நம்பிக்கை இருந்தது. இருப்பினும், தான் சந்திக்க உள்ள படையின் பலத்தை மதிப்பிடுவதற்காக அவர்களைக் காண விரும்பினான்.

1.24

பாடல்:-

உரை

ஸஞ்ஜய உவாச

ஏவம் உக்தோ ஹ்ருஷீகேஷோ

குடாகேஷேன பாரத

ஸேனயோர் உபயோர் மத்யே

ஸ்தாபயித்வா ரதோத்தமம்

மொழிபெயர்ப்பு:-

சஞ்ஜயன் கூறினான்: பரத குலத்தவரே, அர்ஜுனன் இவ்வாறு கூறியவுடன், பகவான் கிருஷ்ணர் அவனது உத்தம ரதத்தை இருதரப்பு சேனைகளுக்கு மத்தியில் கொண்டு நிறுத்தினார்.

கருத்து:-

     இந்தப் பதத்தில் அர்ஜுனன் குடாகேசன் என்று அழைக்கப்படுகிறான்;. குடாகா என்றால் உறக்கம்.  உறக்கத்தை வெல்பவன் குடாகேசன் என்று அழைக்கப்படுகிறான்.  உறக்கம் என்றால் அறியாமை என்றும் பொருள். கிருஷ்ணருடனான தனது நட்பால் தூக்கத்தையும் அறியாமையையும் அர்ஜுனன் வென்றிருந்தான். கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தன் என்பதால், அவனால் ஒரு கணமும் கிருஷ்ணரை மறக்க முடியாது. ஏனெனில், இதுவே பக்தனின் இயற்கையாகும். உணர்விலும் சரி, உறக்கத்திலும் சரி, பக்தனால் கிருஷ்ணரது நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகளை நினைப்பதிலிருந்து ஒருபோதும் விடுபட்டிருக்க முடியாது. இவ்வாறாக, கிருஷ்ண பக்தன், கிருஷ்ணரைப் பற்றி நினைப்பதன் மூலமாக, உறக்கத்தையும் அறியாமையையும் வெல்ல முடியும். இதுவே கிருஷ்ண உணர்வு அல்லது ஸமாதி என்று அழைக்கப்படுகிறது. எல்லா உயிர்களின் புலன்களையும் மனதையும் வழிநடத்தும் ரிஷீகேசர் என்பதால், சேனைகளின் நடுவே தேரை நிறுத்தச் சொல்லும் அர்ஜுனனின் நோக்கத்தை கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வாறு தேரை நிறுத்திய அவர் பின்வருமாறு பேசினார்.

1.25

பாடல்:-

உரை

பீஷ்ம-த்ரோண-ப்ரமுகத:

ஸர்வேஷாம் ச மஹீ-க்ஷிதாம்

உவாச பார்த பஷ்யைதான்

ஸமவேதான் குரூன் இதி

மொழிபெயர்ப்பு:-

பீஷ்மர், துரோணர், மற்றும் உலகத் தலைவர்களின் முன்னிலையில், “பார்த்தா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தினரைப் பார்” என்று பகவான் கூறினார்.

கருத்து:-

எல்லா உயிர்களின் பரமாத்மாவான பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனின் மனதில் நடந்து கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள ரிஷிகேசர் என்னும் சொல், அவர் ‘அனைத்தையும் அறிபவர்’ என்பதைக் குறிக்கிறது. அதுபோலவே பார்த்தன் [பிருதாவின் (குந்தியின்) மகன்], என்னும் சொல்லால் அர்ஜுனனைக் குறிப்பிடுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அர்ஜுனன், தனது தந்தை வசுதேவரின் சகோதரியான பிருதாவின் மைந்தன் என்பதால், தான் அவனது தேரோட்டியாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டதை, நண்பர் என்ற முறையில் கூற விரும்பினார் கிருஷ்ணர். அவ்வாறிருக்க இப்போது, “குரு வம்சத்தினரைப் பார்” என்று அவர் கூறுவதன் பொருள் என்ன? அர்ஜுனன் அங்கேயே போர் புரியாமல் நின்றுவிட விரும்பினானா? தனது அத்தை பிருதாவின் மகனிடத்தில் இது போன்ற செயல்களை கிருஷ்ணர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அர்ஜுனனின் மனம் இங்கே பகவானால் நகைச்சுவை கலந்த முறையில் கண்டறியப்பட்டுள்ளது.

1.26

பாடல்:-

உரை

தத்ராபஷ்யத் ஸ்திதான் பார்த:

பித்ரூன் அத பிதாமஹான்

ஆசார்யான் மாதுலான் ப்ராத்ரூன்

புத்ரான் பௌத்ரான் ஸகீம்ஸ்ததா

ஷ்வஷுரான் ஸுஹ்ருதஷ் சைவ

ஸேனயோர் உபயோர் அபி

மொழிபெயர்ப்பு:-

போர்க்களத்தில் இருதரப்புச் சேனைகளின் நடுவே நின்றபடி, தந்தைமார்கள், பாட்டனார்கள், ஆச்சாரியர்கள், மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள், மற்றும் பல நலன் விரும்பிகளும் கூடியிருப்பதை அர்ஜுனனால் பார்க்க முடிந்தது.

கருத்து:-

     போர்க்களத்தில் எல்லாவிதமான உறவினைரையும் அர்ஜுனனால் காண முடிந்தது. பூரிஷ்வரன் போன்ற தனது தந்தையின் கூட்டாளிகளையும், பீஷ்மர், சோமதத்தர் போன்ற பாட்டனார்களையும், துரோணாசாரியர், கிருபாசாரியர் போன்ற ஆச்சாரியர்களையும், சல்லியன், சகுனி போன்ற மாமாக்களையும், துரியோதனன் போன்ற சகோதரர்களையும், லக்ஷ்மணன் போன்ற மகன்களையும், அஸ்வத்தாமன் போன்ற நண்பர்களையும், கிருதவர்மன் போன்ற நலன் விரும்பிகளையும் கண்டான். அவனது நண்பர்கள் பலர் அடங்கிய படைகளையும் அவனால் காண முடிந்தது.

1.27

பாடல்:-

உரை

தான் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய:

ஸர்வான் பந்தூன் அவஸ்திதான்

க்ருபயா பரயாவிஷ்டோ

விஷீதன் நிதம் அப்ரவீத்

மொழிபெயர்ப்பு:-

குந்தி மகனான அர்ஜுனன் பலதரப்பட்ட நண்பர்களையும் உறவினர்களையும் பார்வையிட்டபோது, கருணையில் மூழ்கி இவ்வாறு கூறினான்.

கருத்து:-

1.28

பாடல்:-

உரை

அர்ஜுன உவாச

த்ருஷ்ட்வேமம் ஸ்வ-ஜனம் க்ருஷ்ண

யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்

ஸீதந்தி மம காத்ராணி

முகம் ச பரிஷுஷ்யதி

மொழிபெயர்ப்பு:-

அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, போரிடும் உணர்வுடன் என் முன் கூடியுள்ள எனது நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு என் உடல் அங்கங்கள் நடுங்கி, வாய் உலர்வதை உணர்கிறேன்.

கருத்து:-

     தேவர்களிடம் (தெய்வீகமானவர்களிடம்) காணக்கூடிய அனைத்து நற்குணங்களையும், நேர்மையான இறை பக்தியுடைய எந்த மனிதனிடமும் காண முடியும். அதே சமயம், தெய்வ பக்தியற்ற ஒருவன், கல்வி, பண்பாடு முதலியவற்றில் முன்னேறியவனாக இருப்பினும், தெய்வீக குணங்கள் அவனிடம் இருக்காது. எனவே, தனது உறவினர்களையும் நண்பர்களையும் போர்க்களத்தில் கண்ட அர்ஜுனன், தங்களுக்குள் சண்டையிட முடிவு செய்திருந்த அவர்களின் மீதான இரக்கத்தால் மூழ்கிப் போனான். தனது வீரர்களைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே அவன் அவர்களிடம் இரக்கம் கொண்டிருந்தான். ஆயினும் தற்போது எதிர்தரப்பு வீரர்களிடம்கூட, அவர்களது நிச்சயமான மரணத்தை எண்ணி மிகவும் இரக்கப்படுகிறான். இவ்வாறு சிந்திக்கும்போது, அவனது உடல் அங்கங்கள் நடுங்கி, வாய் உலர்ந்து போகிறது. மற்றவர்களின் போரிடும் எண்ணத்தைக் கண்டு அவன் ஏறக்குறைய பெரும் ஆச்சரியமுற்றான். உண்மையில் வம்சம் முழுவதுமே, அவனுடன் இரத்த சம்பந்தம் உள்ள உறவினர்கள் அனைவருமே, அவனுடன் போர் புரிய வந்திருந்தனர். இஃது அன்பான பக்தனான அர்ஜுனனை மூழ்கடித்தது. இங்கு கூறப்படாதபோதிலும், அவனது உடல் அங்கங்கள் நடுங்கி வாய் உலர்ந்ததோடு மட்டுமின்றி, இரக்கத்தால் அழவும் செய்தான் என்பதை நாம் மனக் கண்ணில் எளிமையாகக் காண முடியும். அர்ஜுனனிடம் காணப்பட்ட இது போன்ற அறிகுறிகள் பலவீனத்தால் அல்ல, இறைவனின் தூய பக்தனுக்கே உரிய மென்மையான இதயத்தினாலேயே. எனவே, ஸ்ரீமத் பாகவத்தில் (5.18.12) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “பகவானிடம் சலனமற்ற பக்தியில் ஈடுபட்டுள்ளவனிடம் தேவர்களிடமுள்ள எல்லா நற்குணங்களும் பொதிந்திருக்கும். ஆனால் பகவானின் பக்தனாக இல்லாதவனிடமோ மதிப்பற்ற பௌதிக குணங்களே இருக்கும்; ஏனெனில், அவன் எப்போதும் மனத் தேரில் பயணம் செய்பவனும் கவர்ச்சி மிக்க பௌதிக சக்தியால் நிச்சயம் கவரப்படக்கூடியவனும் ஆவான்.”

1.29

பாடல்:-

உரை

வேபதுஷ் ச ஷரீரே மே

ரோம–ஹர்ஷஷ் ச ஜாயதே

காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்

த்வக் சைவ பரிதஹ்யதே

மொழிபெயர்ப்பு:-

என் உடல் முழுவதும் நடுங்குகின்றது, மயிர்க்கூச்செறிகின்றது, என் வில்லான காண்டீபம் கையிலிருந்து நழுவுகின்றது, தோல் எரிகின்றது.

கருத்து:-

     இரு விதமான உடல் நடுக்கமும் இரு விதமான மயிர்க் கூச்சமும் உண்டு. இந்தச் சின்னங்கள், மிகுந்த ஆன்மீக பரவசத்தினாலோ, பௌதிகச் சூழ்நிலையின் பெரும் பயத்தினாலே ஏற்படுபவை. தெய்வீக உணர்வு பெற்ற நிலையில் பயம் என்பதே கிடையாது. அர்ஜுனனுடைய தற்போதைய நிலையில் ஏற்படும் அறிகுறிகள், உயிர் நஷ்டத்தை உத்தேசித்த பௌதிகப் பயத்தால் ஏற்பட்டவையே. மற்ற அறிகுறிகளிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது; தனது புகழ்பெற்ற வில்லான காண்டீபத்தை நழுவ விடுமளவிற்கு பொறுமை இழந்துள்ளான், உள்ளே அவனது இதயம் எரிந்ததால் தோல் எரிவதுபோல் உணர்ந்தான். இவையனைத்தும் வாழ்வைப் பற்றிய பௌதிக உணர்வால் ஏற்படுபவையாகும்.

1.30

பாடல்:-

உரை

ந ச ஷக்னோம்-யவஸ்தாதும்

ப்ரமதீவ ச மே மன:

நிமித்தானி ச பஷ்யாமி

விபரீதானி கேஷவ

மொழிபெயர்ப்பு:-

இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. என் மனம் குழம்பி என்னையே மறக்கின்றேன். கேசி என்ற அரக்கனை அழித்தவரே, கிருஷ்ணரே, கெட்ட சகுனங்களை நான் காண்கிறேன்.

கருத்து:-

     பொறுமையிழந்த அர்ஜுனனால் போர்க்களத்தில் நிற்க முடியவில்லை, மனம் பலவீனமுற்றதால் தன்னையே மறக்கலானான். ஜடப் பொருள்களின் மீதான அளவுகடந்த பற்றுதல் ஒருவனை குழம்பிய நிலைக்கு இட்டுச் செல்லும். பயம் த்விதீயாபினிவேஷத: ஸ்யாத் (பாகவதம் 11.2.37): இத்தகைய பயமும் மனநிலையின் இழப்பும் பௌதிக நிலைகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் உண்டாகிறது. போர்க்களத்தில் அர்ஜுனன் துக்ககரமான விளைவுகளை மட்டுமே கண்டான்—எதிரிகளைத் தோற்கடித்து வெற்றி பெறுவதிலும் அவன் மகிழ்ச்சியடைய மாட்டான். நிமித்தானி விபரீதானி என்னும் சொற்கள் மிக முக்கியமானவை. எதிர்பார்ப்புகளில் ஏமாற்றத்தையே காணும் மனிதன், “நான் ஏன் இங்கு இருக்கிறேன்?” என்று எண்ணுகிறான். ஒவ்வொருவரும் தன்னிலும் தன் சுயநலத்திலும் ஆர்வமுடையவர்களாக உள்ளனர். யாருமே பரமனின் மீது ஆர்வம் காட்டுவது இல்லை. கிருஷ்ணரின் ஏற்பாட்டினால், அர்ஜுனன் தனது உண்மையான சுயநலனை அறியாதிருப்பது போலத் தோற்றமளிக்கிறான். ஒருவரது உண்மையான சுயநலன் விஷ்ணுவிடம், கிருஷ்ணரிடம் உள்ளது. கட்டுண்ட ஆத்மா இதனை மறந்திருப்பதால் உலகத் துன்பங்களால் அவதியுறுகிறான். இப்போரில் பெறப்படும் வெற்றி, தனக்கு துக்கத்தையே கொடுக்கும் என்று எண்ணுகிறான் அர்ஜுனன்.

1.31

பாடல்:-

உரை

ந ச ஷ்ரேயோ (அ)னுபஷ்யாமி

ஹத்வா ஸ்வ-ஜனம் ஆஹவே

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண

ந ச ராஜ்யம் ஸுகானி ச

மொழிபெயர்ப்பு:-

சொந்த உறவினரை இப்போரில் கொல்வதால் என்ன நன்மை வருமென்பதை என்னால் காண முடியவில்லை. எனதன்பு கிருஷ்ணரே, இதில் பெறக்கூடிய வெற்றியையோ இராஜ்யத்தையோ இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

கருத்து:-

     ஒருவனது உண்மையான சுயநலன் விஷ்ணுவிடம் (கிருஷ்ணரிடம்) உள்ளது என்பதை அறியாத கட்டுண்ட ஜீவன்கள், மகிழ்ச்சியை எதிர்பார்த்து உடலோடு சம்பந்தப்பட்ட உறவுமுறைகளால் கவரப்படுகின்றனர். இத்தகு குருட்டு வாழ்வில், உலக இன்பங்களுக்கான காரணத்தைக்கூட மறந்து விடுகின்றனர். சத்திரியனுக்கு உரித்தான நீதிக் கோட்பாடுகளை அர்ஜுனன் மறந்து விட்டதாகத் தெரிகிறது. கிருஷ்ணரின் நேரடி ஆணையின் கீழ் போர் முனையில் மரணமடையும் சத்திரியன், ஆன்மீகப் பண்பாட்டில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் துறவி—இவ்விரண்டு மனிதர்களுமே, மாபெரும் சக்தியுடைய ஒளி வீசும் சூரிய கிரகத்தில் புகும் தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகின்றது. தனது உறவினர்களை மட்டுமின்றி எதிரிகளைக்கூட கொல்லத் தயங்குகிறான் அர்ஜுனன். பசியில்லாதவன் சமைக்க விரும்பாததைப் போல, உறவினரைக் கொல்வதால் வாழ்வில் மகிழ்விருக்காது என்பதை அறிந்த அர்ஜுனன் போர் புரிய விரும்பவில்லை. வனத்திற்குச் சென்று விரக்தியில் தனிமையான வாழ்க்கை வாழ அவன் தற்போது முடிவு செய்துள்ளான். ஆனால் சத்திரியன் என்ற முறையில் அவனுக்கென்று ஓர் அரசாங்கம் அவசியமாகும்; ஏனெனில், வேறு எந்தத் தொழிலிலும் சத்திரியர்கள் ஈடுபட முடியாது. அர்ஜுனன் நாட்டை ஆள்வதற்கான ஒரே வாய்ப்பு, தனது தாயாதி சகோதரர்களிடம் சண்டையிட்டு, தந்தை வழி வரும் அரசை திரும்பப் பெற்றுக்கொள்வதே, ஆனால் அதைச் செய்ய அவன் விரும்பவில்லை. எனவே, காட்டிற்குச் சென்று விரக்தியில் தனியாக வாழ்வதற்கே தன்னைத் தகுதியுள்ளவனாக எண்ணுகிறான்.

1.32 – 35

பாடல்:-

உரை

கிம் நோ ராஜ்யேன கோவிந்த

கிம் போகைர் ஜீவிதேன வா

ஏஷாம் அர்தே காங்க்ஷிதம் நோ

ராஜ்யம் போகா: ஸுகானி ச

த இமே (அ)வஸ்திதா யுத்தே

ப்ராணாம்ஸ் த்யக்த்வா தனானி ச

ஆசார்யா: பிதர: புத்ராஸ்

ததைவ ச பிதாமஹா:

மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா:

ஷ்யாலா: ஸம்பந்தினஸ் ததா

ஏதான் ந ஹந்தும் இச்சாமி

க்னதோ (அ)பி மதுஸூதன

அபி த்ரைலோக்ய-ராஜ்யஸ்ய

ஹேதோ: கிம் நு மஹீ-க்ருதே

நிஹத்ய தார்தாராஷ்ட்ரான் ந:

கா ப்ரீதி: ஸ்யாஜ் ஜனார்தன

மொழிபெயர்ப்பு:-

கோவிந்தனே, ஆட்சி, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையையே கூட யாருக்காக நாம் விரும்புகிறோமோ, அவர்களே இப்போர்க்களத்தில் அணிவகுத்திருக்க, அவற்றை அடைவதால் என்ன பலன் வரப் போகின்றது? மதுசூதனரே, ஆச்சாரியர்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டனார்கள், மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள், மற்றும் இதர உறவினர்கள் அனைவரும் தங்கள் வாழ்வையும் செல்வத்தையும் இழக்கத் தயாராக என்முன் நின்றிருக்க, அவர்கள் என்னைக் கொல்லலாம் என்ற பட்சத்திலும் நான் ஏன் அவர்களைக் கொல்ல விரும்ப வேண்டும்? உயிர்களையெல்லாம் காப்பவரே, இந்த பூமி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகம் கிடைப்பதாயினும், நான் இவர்களுடன் போர் செய்யத் தயாராக இல்லை. திருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் எவ்வித ஆனந்தத்தை அனுபவிக்கப் போகிறோம்?

கருத்து:-

     கிருஷ்ணரை அர்ஜுனன் ‘கோவிந்தன்’ என்றழைத்தான். ஏனெனில், அவரே புலன்களுக்கும் பசுக்களுக்கும் இன்பமளிப்பவர். இந்த விசேஷமான வார்த்தையை உபயோகிப்பதன் மூலம், தனது புலன்களை எது திருப்தி செய்யும் என்பதை கிருஷ்ணர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அர்ஜுனன் குறிப்பிடுகிறான். ஆனால் கோவிந்தன், நமது புலன்களைத் திருப்தி செய்வதற்காக அல்ல. நாம் கோவிந்தனது புலன்களைத் திருப்தி செய்ய முயன்றால், நமது சொந்தப் புலன்கள் தாமாகவேத் திருப்தியடைகின்றன. ஜடவாழ்வில் ஒவ்வொருவரும் தத்தமது புலன்களைத் திருப்தி செய்ய விரும்புகின்றனர். மேலும், அத்திருப்திக்கு தேவையானவற்றை கடவுள் அளிக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். ஜீவன்களின் தகுதிக்கேற்றவாறு அவர்களது புலன்களை இறைவன் திருப்தி செய்வாரேயன்றி, அவர்கள் பேராசைப்படுமளவிற்கு அல்ல. ஆனால் ஒருவன் மாற்றுவழியைப் பின்பற்றும் போது—அதாவது, தன் சுயப் புலன்களைத் திருப்தி செய்ய விரும்பாமல், கோவிந்தனின் புலன்களைத் திருப்தி செய்ய முயலும் போது—கோவிந்தனின் கருணையால், ஜீவனின் எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன. அர்ஜுனனுக்கு குலத்தினரோடும் உறவினரோடுமுள்ள ஆழமான பாசம், அவர்கள் மீது இயற்கையாகவே அவனுக்குள்ள இரக்கத்தால் இங்கே சற்று வெளிப்படுகிறது. எனவே, அவன் போர் புரியத் தயாராக இல்லை. தனது செல்வத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் காட்ட அனைவரும் விரும்புவர். ஆனால், போர்க்களத்தில் அனைத்து உறவினர்களும் நண்பர்களும் கொல்லப்பட்டபின், வெற்றியினால் தனக்கு வரும் செல்வத்தை பகிர்ந்துகொள்ள முடியாது என அச்சமுற்றான் அர்ஜுனன். உலக வாழ்வின் ஒரு சிறந்த உதாரணம் இது. தெய்வீக வாழ்வோ இதிலிருந்து வேறுபட்டதாகும். பக்தன் இறைவனின் விருப்பங்களைத் திருப்தி செய்ய விரும்புவான் என்பதால், அவர் விருப்பப்பட்டால், அவரது சேவைக்காக எல்லா விதமான செல்வத்தையும் ஏற்றுக்கொள்ள முடியும்; அவர் விரும்பாவிடில் ஒரு பைசாவையும் ஏற்கக் கூடாது. அர்ஜுனன் தன் உறவினர்களைக் கொல்ல விரும்பவில்லை. அப்படியே அவர்களைக் கொல்லும் அவசியமிருந்தால் கிருஷ்ணர் தாமே அவர்களைக் கொல்லட்டும் என விரும்பினான். போர்க்களத்திற்கு வரும் முன்னரே அவர்கள் எல்லாரையும் கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையும், தான் வெறும் கருவியாக செயல்பட வேண்டியவனே என்பதையும் அவன் அறியவில்லை. அவ்வுண்மையை பின்வரும் அத்தியாயங்களில் காணலாம். இறைவனின் இயல்பான பக்தனான அர்ஜுனன், விஷமிகளான சகோதரர்களை எதிர்க்க விரும்பவில்லையாயினும், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பகவானின் திட்டம். தவறு செய்பவனை பகவானின் பக்தன் பழி வாங்குவதில்லை. ஆனால் (தீயவர்களால்) பக்தனுக்குச் செய்யப்படும் கொடுமைகளை பகவான் சகித்துக் கொள்வதில்லை. தனக்கு தீங்கிழைப்பவரைக்கூட பகவான் மன்னிக்கலாம், ஆனால் தனது பக்தர்களுக்குத் தீங்கிழைப்பவர் எவரையும் அவர் மன்னிப்பதே இல்லை. எனவே, அர்ஜுனன் மன்னிக்க விரும்பியபோதிலும், தீயவரை அழிப்பதில் பகவான் தீர்மானமாக இருந்தார்.

1.36

பாடல்:-

உரை

பாபம் ஏவாஷ்ரயேத் அஸ்மான்

ஹத்வைதான் ஆததாயின:

தஸ்மான் நார்ஹா வயம் ஹந்தும்

தார்தராஷ்ட்ரான் ஸ-பாந்தவான்

ஸ்வ-ஜனம் ஹி கதம் ஹத்வா

ஸுகின: ஸ்யாம மாதவ

மொழிபெயர்ப்பு:-

இத்தகைய அக்கிரமக்காரர்களைக் கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களையும் நமது நண்பர்களையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. அதிர்ஷ்ட தேவதையின் கணவரே, கிருஷ்ணரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?

கருத்து:-

     வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையினர்: (1) விஷம் கொடுப்பவர் (2) வீட்டிற்கு நெருப்பு வைப்பவர் (3) பயங்கர ஆயுதங்களால் தாக்குபவர் (4) செல்வத்தைக் கொள்ளையடிப்பவர் (5) பிறர் நிலத்தை ஆக்கிரமிப்பவர் (6) பிறர் மனைவியைக் கடத்திச் செல்பவர். இந்த அக்கிரமக்காரர்களை உடனே கொல்லலாம், அதனால் பாவம் ஏதுமில்லை. இவ்வாறு அக்கிரமக்காரர்களைக் கொல்லுதல் எல்லா சாதாரண மனிதர்களுக்கும் பொருந்தும், ஆனால் அர்ஜுனன் சாதாரண மனிதனல்ல. அவன் குணத்தால் சாதுவாக இருந்ததால், அவர்களிடம் நற்குணங்களோடு உறவுகொள்ள நினைத்தான். இருப்பினும் இவ்வாறான சாதுத்தனம் ஒரு சத்திரியனுக்கு உரியதல்ல. ஆட்சியில் இருக்கும் பொறுப்பான மனிதன் சாதுவின் குணங்களுடன் இருக்க வேண்டும் என்றபோதிலும், கோழையாக இருக்கக் கூடாது. உதாரணமாக, பகவான் இராமரிடம் சாதுவின் குணங்கள் பொதிந்திருந்த காரணத்தினால், இன்றும் மக்கள் அவரது அரசாங்கத்தில் (இராம ராஜ்ஜியத்தில்) வாழ விரும்புகின்றனர். ஆனால் பகவான் இராமர் ஒருபோதும் கோழைத்தனத்தைக் காட்டவில்லை. இராமரின் மனைவி சீதையைக் கடத்திச் சென்ற இராவணன் அவருக்கு அக்கிரமம் இழைத்தவனாவான்.  அதனால் அவர் அவனுக்கு உலக சரித்திரத்தில் இணையற்ற, தேவையான பாடத்தை நன்கு கற்பித்தார். இருப்பினும், அர்ஜுனனின் விஷயத்தில் அக்கிரமக்காரர்கள், வித்தியாசமானவர்கள்—சொந்த பாட்டனார், சொந்த ஆச்சாரியர், நண்பர்கள், மகன்கள், பேரன்கள் முதலியோர்—என்பதைக் கருத வேண்டும். அதனால் அவர்களின் மீது சாதாரண அக்கிரமக்காரர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதைப் போல செயல்படக் கூடாது என்று அர்ஜுனன் எண்ணினான். அதற்கும் மேலாக, சாதுக்கள் மன்னிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். எந்த அரசியல் அவசர நிலைமையையும்விட சாதுக்களைப் பொறுத்தவரையில் இத்தகைய அறிவுரைகளே முக்கியமானவை. அரசியல் காரணங்களுக்காக சொந்த உறவினர்களைக் கொல்வதைக் காட்டிலும், நற்குணத்தையும் தர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களை மன்னித்துவிடுதல் சிறந்தது என்று எண்ணினான் அர்ஜுனன். தற்காலிகமான உடல் சுகத்திற்காகக் கொலை செய்வதை அவன் இலாபமென்று கருதவில்லை. ராஜ்யங்களும் அவற்றினால் பெறப்படும் சுகங்களும் நிலையானவை அல்ல. அவ்வாறிருக்க உறவினரைக் கொல்வதன் மூலம் தனது சுய வாழ்க்கைக்கும் நித்திய விடுதலைக்கும் ஏன் ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டும்? இவ்விஷயத்தில் “மாதவ” அல்லது ‘அதிர்ஷ்ட தேவதையின் கணவர்’ என்று கிருஷ்ணரை அர்ஜுனன் அழைப்பதும் மிக முக்கியமானதாகும். அதிர்ஷ்ட தேவதையின் கணவரான அவர், இறுதியில் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய செயலைச் செய்யும்படித் தன்னைத் தூண்டக் கூடாது என்று அர்ஜுனன் சுட்டிக் காட்ட விரும்புகிறான். கிருஷ்ணரோ யாருக்குமே துரதிர்ஷ்டத்தைக் கொடுப்பவரல்ல என்பதால், அவரது பக்தர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.

1.37 – 38

பாடல்:-

உரை

யத் யப் யேதே ந பஷ்யந்தி

ஸோபோபஹத-சேதஸ:

குல-க்ஷய-க்ருதம் தோஷம்

மித்ர-த்ரோஹே ச பாதகம்

கதம் ந க்ஞேயம் அஸ்மாபி:

பாபாத் அஸ்மான் நிவர்திதும்

குல-க்ஷய-க்ருதம் தோஷம்

ப்ரபஷ்யத்பிர் ஜனார்தன

மொழிபெயர்ப்பு:-

ஜனார்தனரே, பேராசையால் இதயத்தை இழந்த இம்மனிதர்கள், நண்பர்களுக்கு துரோகம் செய்வதையும் குலநாசம் செய்வதையும் பாவம் என்று அறியவில்லை. ஆனால் அவற்றைக் குற்றம் என்று அறிந்த நாம், ஏன் இப்பாவச் செயல்களில் ஈடுபட வேண்டும்?

கருத்து:-

     போட்டியாளர்களால் சூதாட்டத்திற்கோ போருக்கோ அறை கூவப்பட்டால் சத்திரியன் மறுக்கக் கூடாது. எனவே, இந்த நியதிப்படி, துரியோதனனின் கும்பலால் சவால் விடப்பட்டிருக்கும் அர்ஜுனன், போரை மறுக்க முடியாது. இதன் தொடர்பில், இத்தகைய சவாலின் விளைவுகளைக் காண முடியாமல் மறுதரப்பினர் குருடர்களாக இருப்பதாகக் கருதினான் அர்ஜுனன். அதே சமயம், இதன் தீய விளைவுகளைக் காணக்கூடிய அர்ஜுனனால் இச்சவாலை ஏற்க முடியவில்லை. விளைவு நன்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கடமை ஒருவனைக் கட்டுப்படுத்த முடியும். விளைவு தீயதாக இருந்தால் கடமை எவரையும் கட்டிப்போட முடியாது. இதுபோன்ற நன்மை தீமைகள் எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த அர்ஜுனன், போர் புரிவதில்லை என்று முடிவு செய்தான்.

1.39

பாடல்:-

உரை

குல-க்ஷயே ப்ரணஷ்யந்தி

குல-தர்மா: ஸநாதனா:

தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னம்

அதர்மோ– (அபி)பிபவத் யுத

மொழிபெயர்ப்பு:-

குலம் அழிவடைவதால் நித்தியமான குல தர்மம் கெடுகின்றது. இதனால் வம்சத்தில் மீந்திருப்பவர்கள் அதர்மங்களில் ஈடுபடுவார்கள்.

கருத்து:-

     வர்ணாஷ்ரம வழிமுறையில், குடும்ப அங்கத்தினர்கள் முறையாக வளர்ந்து, ஆன்மீகத் தகுதிகளைப் பெறுவதற்காக பல்வேறு அறப்பழக்கங்கள் உண்டு.  பிறப்பு முதல் இறப்பு வரை செய்யப்படக்கூடிய இதுபோன்ற தூய்மைப்படுத்தும் சடங்குகளுக்குப் பெரியோரே பொறுப்பு. ஆனால் மூத்தோர் மரணமடைந்தால் இதுபோன்ற தூய்மைப்படுத்தும் குலப் பண்பாடுகள் நின்று விடலாம், எஞ்சியிருக்கும் இளைய தலைமுறை அதர்மச் செயல்களில் ஈடுபட்டு ஆன்மீக விடுதலைக்கான தங்கள் வாய்ப்பை இழக்கலாம். எனவே, எந்த நோக்கத்திற்காகவும் குலத்தின் முதியோர்களை அழித்தல் கூடாது.

1.40

பாடல்:-

உரை

அதர்மாபிபவாத் க்ருஷ்ண

ப்ரது ஷ்யந்தி குல-ஸ்த்ரிய:

ஸ்த்ரஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய

ஜாயதே வர்ண-ஸங்கர:

மொழிபெயர்ப்பு:-

கிருஷ்ணரே, குலத்தில் அதர்மம் தலையெடுக்கும்போது, குடும்பப் பெண்கள் களங்கமடைகின்றனர்; பெண்மையின் சீரழிவால், விருஷ்ணி குலத்தவரே, தேவையற்ற சந்ததி உண்டாகிறது.

கருத்து:-

     வாழ்வில், அமைதி, வளம், ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றிற்கான ஆதாரம், மனித சமுதாயத்தில் நன்மக்கள் இருப்பதாகும். நன்மக்கள் தழைத்தோங்குவதன் மூலம், நாட்டிலும் சமூகத்திலும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். அதற்குத் தகுந்தாற் போல, வர்ணாஷ்ரம தர்மத்தின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இத்தகு சமுதாயம், அதன் பெண்குலத்தின் கற்பையும் நம்பகத் தன்மையையும் பொறுத்திருக்கிறது. குழந்தைகளைத் தவறாக வழிநடத்துதல் எளிது, அதுபோலவே பெண்களும் எளிதில் வீழ்ச்சியடையும் சுபாவம் உடையவர்கள். எனவே, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் பாதுகாப்புத் தேவை.  பல்வேறு அறச்செயல்களில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், பெண்கள் கற்புக்குப் புறம்பானத் தவறான உறவுகளை வளர்த்துக் கொள்ள (சோரம் போக) மாட்டார்கள். சாணக்கிய பண்டிதரின் கூற்றுப்படி பெண்கள் அறிவாளிகள் அல்ல, அதனால் நம்பகமானவர்களுமல்ல. எனவே, அவர்களை எப்போதும் பலவிதமான அறம் சார்ந்த குலப் பண்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களது கற்பும் பக்தியும் வர்ணாஷ்ரம முறையில் பங்கேற்கத்தக்க நல்ல சமுதாயத்தைத் தோற்றுவிக்கும்.  இத்தகு வர்ணாஷ்ரம தர்மம் சீர்குலையும்போது, இயற்கையாகவே பெண்கள் ஆண்களுடன் கலந்து செயல்படுவதற்கான சுதந்திரத்தைப் பெறுகின்றனர். இதனால் பெண்களின் கற்புநிலை இழக்கப்பட்டு தவறான உறவுகள் தோன்றி, தேவையற்ற சந்ததிகள் என்னும் அபாயத்தை உண்டு பண்ணுகின்றன. பொறுப்பற்ற ஆண்களும் சமுதாயத்தில் சோரத்தைப் (கள்ளத் தொடர்புகளைப்) பெருக்குகின்றனர். இதனால் மனித சமுதாயத்தில் தேவையற்ற குழந்தைகள் தோன்றி, போர் மற்றும் தொற்றுவியாதிகள் போன்ற அபாயத்தை உண்டு பண்ணுகின்றனர்.

1.41

பாடல்:-

உரை

ஸங்கரோ நரகாயைவ

குல-க்நானாம் குலஸ்ய ச

பதந்தி பிதரோ ஹ்யேஷாம்

லுப்த-பிண்டோதக-க்ரியா:

மொழிபெயர்ப்பு:-

தேவையற்ற ஜனத்தொகைப் பெருக்கம், குடும்பத்திற்கும் குடும்பப் பண்பாட்டை அழிப்போருக்கும் நிச்சயமாக நரக நிலையை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற சீர்குலைந்த குலங்களின் முன்னோர்கள் வீழ்ச்சியடைகின்றனர்; ஏனெனில், அவர்களுக்கு பிண்டமும் நீரும் அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.

கருத்து:-

     பலன்நோக்குச் செயல்களின் சட்டதிட்டங்களின்படி, குடும்பத்தின் முன்னோருக்கு உணவும் நீரும் அளிக்கும் கருமத்தைச் செய்ய வேண்டும்.  இந்த சடங்கு விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நடத்தப்படுவதாகும். ஏனெனில், விஷ்ணுவின் பிரசாதத்தை உண்பது ஒருவனை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடியது. சில வேளைகளில் முன்னோர்கள் பல பாவச் செயல்களின் விளைவுகளால் துயரப்பட்டுக் கொண்டிருக்கலாம், சிலர் ஸ்தூல உடலை அடைய முடியாமல், தங்களது சூட்சும உடலிலே பேய்களாக அலைந்து கொண்டிருக்கலாம்.  வாரிசுகளின் மூலம் முன்னோர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படும்போது, அவர்கள் பல்வேறு விதமான துன்ப வாழ்விலிருந்தும் பேய் போன்ற நிலைகளிலிருந்தும் விடுபடுகின்றனர். இவ்வாறு முன்னோருக்கு உதவுதல், குலப் பண்பாடாகும். பக்தித் தொண்டில் ஈடுபடாதவர்கள், இது போன்ற சடங்குகளைச் செய்தாக வேண்டும். பக்தித் தொண்டைப் பின்பற்றி வாழ்பவர்கள் இத்தகு செயல்களைச் செய்ய வேண்டியதில்லை. பக்தித் தொண்டை எளிமையாக நிறைவேற்றுவதன் மூலமே, பல்லாயிரக்கணக்கான முன்னோரை எல்லாத் துன்பங்களிலிருந்தும் ஒருவனால் விடுவிக்க முடியும். பாகவதத்தில் (11.5.41) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாதகமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன்படுவதில்லை.” புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம், இதுபோன்ற கடமைகள் அனைத்தும் தாமாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன.

1.42

பாடல்:-

உரை

தோஷைர் ஏதை: குல-க்நானாம்

வர்ண-ஸங்கர–காரகை:

உதஸாத்யந்தே ஜாதி-தர்மா:

குல–தர்மாஷ் ச ஷாஷ்வதா:

மொழிபெயர்ப்பு:-

குடும்பப் பண்பாட்டை அழித்து, தேவையற்ற குழந்தைகளைத் தோற்றுவிக்கும் தீயவர்களின் செயல்களால், அனைத்து வித ஜாதி தர்மங்களும் அழிவுறுகின்றன.

கருத்து:-

     வர்ணாஷ்ரம தர்மம் அல்லது ஸநாதன தர்மத்தின்படி, மனித சமுதாயத்தின் நான்கு பிரிவுகளுக்கும், ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் வகுக்கப்பட்டுள்ளன, இவை மனிதனின் இறுதி விடுதலைக்காக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, ஸநாதன தர்மப் பண்பாட்டினை உடைத்தெறியும் பொறுப்பற்ற சமூகத் தலைவர்கள், அச்சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்க, மக்கள் வாழ்வின் இலட்சியமான விஷ்ணுவை மறந்துவிடுகின்றனர். இத்தகு தலைவர்கள் குருடர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களைப் பின்பற்றும் மக்கள் நிச்சயமாகக் குழப்பத்தையே அடைவார்கள்.

1.43

பாடல்:-

உரை

உத்ஸன்ன–குல–தர்மாணாம்

மனுஷ்யாணாம் ஜனார்தன

நரகே நியதம் வாஸோ

பவதீத்-யனுஷுஷ்ரும

மொழிபெயர்ப்பு:-

மக்களைக் காக்கும் கிருஷ்ணரே, குல தர்மத்தைக் கெடுப்பவர் எப்போதும் நரகத்தில் வாழ்வதாக நான் சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.

கருத்து:-

     அர்ஜுனன் அதிகாரப்பூர்வமானவர்களிடம் கேட்டதை அடிப்படையாக வைத்து வாதிடுகிறான். தனது சுய அனுபவத்தை வைத்தல்ல. இதுவே உண்மை அறிவைப் பெறும் வழி. அறிவில் ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் ஒருவரை அணுகாமல், உண்மையான அறிவை அடைய முடியாது. வர்ணாஷ்ரம சமுதாயத்தின்படி, மரணத்திற்கு முன் ஒருவன் தான் செய்த பாவ காரியங்களுக்கு பிராயசித்தம் செய்தாக வேண்டும். எப்போதும் பாவ செயல்களில் ஈடுபட்டிருப்பவன், பிராயசித்தம் என்று கூறப்படும் சடங்கினை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யாவிடில், பாவச் செயல்களில் விளைவுகளை அனுபவிப்பதற்காக அவன் நரகத்திற்கு செல்வது நிச்சயம்.

1.44

பாடல்:-

உரை

அஹோ பத மஹத் பாபம்

கர்தும் வ்யவஸிதா வயம்

யத் ராஜ்ய-ஸுக-லோபேன

ஹந்தும் ஸ்வ-ஜனம் உத்யதா:

மொழிபெயர்ப்பு:-

ஐயகோ! மாபெரும் பாவங்களைச் செய்ய நாம் துணிந்துள்ளோமே, ராஜ்ய சுகத்தை அனுபவிக்கும் ஆசையால் உந்தப்பட்டு, சொந்த உறவினர்களையும் கொல்ல முனைந்து விட்டோம்.

கருத்து:-

     சுயநல நோக்கத்தால் தூண்டப்பட்டவன், தனது சொந்த தாய் தந்தையரையோ, உடன் பிறந்தவரையோ கொல்வது போன்ற பாவச் செயல்களை செய்யத் துணியலாம். உலகச் சரித்திரத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் உள்ளன. ஆனால் அர்ஜுனன், சாதுவின் குணங்கள் நிரம்பிய பகவானின் பக்தன் என்பதால், நீதிக் கோட்பாடுகளை எப்போதும் கருத்தில் கொள்கிறான்; எனவே, இவ்வாறான செயல்களைத் தவிர்க்க முனைப்புடன் உள்ளான்.

1.45

பாடல்:-

உரை

யதி மாம் அப்ரதீகாரம் 

அஷஸ்த்ரம் ஷஸ்த்ர-பாணய:

தார்தராஷ்ட்ரா ரணே ஹன்யுஸ்

தன் மே க்ஷேமதரம் பவேத்

மொழிபெயர்ப்பு:-

ஆயுதமின்றியும் எதிர்த்துப் போரிடாமலும் இருக்கின்ற என்னை, ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் கொன்றால், அது எனக்கு அதிக நன்மையைக் கொடுக்கும்.

கருத்து:-

     சத்திரியப் போர் நெறிகளின்படி, ஆயுதமற்ற, போரை விரும்பாத எதிரியை தாக்கக் கூடாது. அத்தகு கடினமான முறையில் தனது எதிரி தன்னை தாக்கினாலும், போர் புரிவதில்லை என அர்ஜுனன் தீர்மானித்தான். அவனது எதிர்த்தரப்பினரோ போருக்காக எந்த அளவு ஆயத்தமாக இருந்தனர் என்பதை அவன் கருதவில்லை. இவையாவும், மென்மையான மனதுடன் கூடிய (பகவானின்) மிகச்சிறந்த பக்தனாக இருப்பவனின் அறிகுறிகளாகும்.

1.46

பாடல்:-

உரை

ஸஞ்ஜய உவாச

ஏவம் உக்த்வார்ஜுன: ஸங்க்யே

ரதோபஸ்த உபாவிஷத்

விஸ்ருஜ்ய ஸ-ஷரம் சாபம்

ஷோக-ஸம்விக்ன-மானஸ:

மொழிபெயர்ப்பு:-

சஞ்ஜயன் கூறினான்: போர்க்களத்தில் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தனது வில்லையும் அம்புகளையும் ஒருபுறம் எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்துவிட்டான். அவனது மனம் சோகத்தால் மூழ்கியுள்ளது.

கருத்து:-

தனது எதிரியின் சூழ்நிலையைப் பார்வையிடும்போது, அர்ஜுனன் தேரில் நின்று கொண்டிருந்தான். ஆனால் சோகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதனால், வில்லையும் அம்புகளையும் ஒருபுறமாக எறிந்துவிட்டு மீண்டும் அமர்ந்துவிட்டான். பகவானின் பக்தித் தொண்டில், இத்தகைய மென்மையான அன்புள்ளம் கொண்டவர், ஆத்ம ஞானம் பெறத் தகுதியுடையவராவார்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் “குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகளைக் கவனித்தல்” என்னும் முதலாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இத்துடன் நிறைவடைகின்றன.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question