Thursday, April 25

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 12

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பக்தி யோகம்

Bg 12.1 — அர்ஜுனன் வினவினான்: மிகவும் பக்குவமானவர்களாகக் கருதப்படுவர்கள் யார்? எப்போதும் உமது பக்தித் தொண்டில் முறையாக ஈடுபட்டிருப்பவர்களா? அல்லது தோன்றாத அருவ பிரம்மனை வழிபடுபவர்களா?

Bg 12.2 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: தனது தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் எப்போதும் எனது வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் பக்குவமானவர்களாக என்னால் கருதப்படுகிறார்கள்.

Bg 12.3-4 — ஆனால், தோற்றமளிக்காததும், புலனுணர்விற்கு அப்பாற்பட்டு இருப்பதும், எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாற்றமில்லாததும், நிலையானதும், அசைவற்றதுமான பூரண உண்மையின் அருவத் தன்மையை முழுமையாக வழிபடுபவர்கள், பல்வேறு புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் பழகி, அனைவருக்கும் நன்மை தரும் செயல்களில் ஈடுபட்டு, இறுதியில் என்னை அடைகின்றனர்.

Bg 12.5 — எவரது மனம், பரமனின் தோன்றாத அருவத்தன்மையிடம் பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது உடலை உடையவர்களுக்கு எப்போதும் சிரமமானதாகும்.

Bg 12.6-7 — ஆனால், தங்களது எல்லா செயல்களையும் எனக்காக துறந்து பிறழாமல் என் மீது பக்தி செலுத்தி, எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, எப்போதும் என்மீது தியானம் செய்து, தங்களது மனங்களை என்னில் நிறுத்தி, எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.

Bg 12.8 — முழுமுதற் கடவுளான என்மீது உனது மனதை நிறுத்தி, உன்னுடைய முழு அறிவையும் என்னில் ஈடுபடுத்துவாயாக. இவ்வாறு நீ எப்போதும் என்னிலேயே வாழ்வாய் என்பதில் ஐயமில்லை.

Bg 12.9 — செல்வத்தை வெல்பவனான எனதன்பு அர்ஜுனா, உனது மனதை என்மீது பிறழாது நிலைநிறுத்த முடியாவிடில், பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவாயாக. என்னை அடைவதற்கான விருப்பத்தினை இதன் மூலம் விருத்தி செய்வாயாக.

Bg 12.10 — பக்தி யோகத்தின் விதிகளை உன்னால் பயிற்சி செய்ய முடியாவிடில், எனக்காக மட்டும் செயலாற்ற முயல்வாயாக. ஏனெனில், எனக்காக செயல்படுவதன் மூலம் நீ பக்குவ நிலைக்கு வந்தடைவாய்.

Bg 12.11 — ஆனால், என்னைப் பற்றிய இத்தகு உணர்விலும் உன்னால் செயலாற்ற முடியாவிடில், உனது செயலின் எல்லா விளைவுகளையும் தியாகம் செய்து, ஆத்மாவில் நிலைபெற முயற்சி செய்.

Bg 12.12 — இப்பயிற்சியினை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிடில், ஞானத்தை விருத்தி செய்வதில் உன்னை ஈடுபடுத்திக் கொள். இருப்பினும், ஞானத்தைவிட தியானம் சிறந்தது, மேலும், தியானத்தைவிட செயல்களின் பலன்களைத் தியாகம் செய்தல் சிறந்தது. ஏனெனில், இத்தகு தியாகத்தினால் மன அமைதியை அடைய முடியும்.

Bg 12.13-14 — எவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக, தன்னை உரிமையாளராகக் கருதாதவனாக, அஹங்காரத்திலிருந்து விடுபட்டவனாக, இன்ப துன்பங்களில் சம நிலையுடையவனாக, சகிப்புத் தன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயக்கட்டுப்பாடு உடையவனாக, தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்தி உறுதியுடன் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, என்னுடைய அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

Bg 12.15 — யாருக்கும் தொல்லை கொடுக்காமல், யாராலும் தொந்திரவு செய்யப்படாமல், இன்பம், துன்பம், பயம் மற்றும் ஏக்கத்தில் சமநிலையுடன் எவனொருவன் இருக்கின்றானோ அவன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

Bg 12.16 — எவனொருவன், சாதாரண செயல்களைச் சார்ந்து வாழாமல், துய்மையாக, நிபுணனாக, கவலைகளின்றி, எல்லாவித வலிகளிலிருந்தும் விடுபட்டவனாக, ஏதேனும் பலனுக்காக முயற்சி செய்யாதவனாக உள்ளானோ, எனது அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

Bg 12.17 — எவனொருவன் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, துன்பப்படுவதில்லையோ, புலம்புவதில்லையோ, ஆசைப்படுவதில்லையோ, மேலும் எவனொருவன் மங்களமானவை, அமங்களமானவை ஆகிய இரண்டையும் துறக்கின்றானோ—அத்தகு பக்திமான் எனக்கு மிகவும் பிரியமானவன்.

Bg 12.18-19 — எவனொருவன், நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவித்து, மான அவமானம், இன்ப துன்பம், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி, ஆகியவற்றில் நடுநிலை வகித்து, களங்கம் தரும் தொடர்புகளிலிருந்து எப்போதும் விடுபட்டு, மௌனமாக, எதனைக் கொண்டும் திருப்தியுற்று, தங்குமிடத்திற்காகக் கவலைப்படாமல், அறிவில் நிலைபெற்று பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ—அத்தகு மனிதன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

Bg 12.20 — பக்தித் தொண்டு என்னும் இந்த அழிவற்ற பாதையைப் பின்பற்றி, என்னை பரம இலக்காக வைத்து நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்துபவர்கள், எனக்கு மிகமிகப் பிரியமானவர்கள்.

+12
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question