Thursday, November 21

மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மஹாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன், மன்னன் துரியோதனன், தன்னுடைய பாசறையில் கர்ணன், துச்சாதனன், சகுனி மற்றும் சகுனியின் மகனான சுவாலா ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினான். பின் சகுனியின் மற்றொரு மகனான உலுக்காவை அழைத்து, பாண்டவரிடம் தூது செல்லக் கூறினான். மேலும் தான் கூறும் பின்வரும் வார்த்தைகளை மாறாமல் அப்படியே யுதிஷ்டிரரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டான்.

“ஓ பரத குலத் தோன்றலே, யுதிஷ்டிரா! எவ்வாறு உன்னுடைய இதயத்தை, அதர்மத்தில் நிலை நாட்டி உள்ளாய். நீ எல்லா ஜீவன்களின் துன்பத்தையும் நீக்குவதற்கு பதிலாக, பிரபஞ்சத்தின் அழிவை நீ எவ்வாறு விரும்பலாம்?” என்று கூறுமாறு துரியோதனன் உலுக்காவை கேட்டுக் கொண்டான்.

மேலும், “தேவர்களால் அவருடைய ராஜ்யம் கைப்பற்றப்பட்ட போது, பிரகலாத மகாராஜா பாடிய பாடல் ஒன்று நான் கேட்டுள்ளேன்” என்று மேலும் பின்வரும் வரலாறை கூறினான்.

பிரகலாத மகாராஜா தேவர்களிடம், “தேவர்களே! யாருடைய வெளிப்படையான தர்மம் தெளிவாகவும், ஆனால் யாருடைய பாவங்கள் மறைக்கப்பட்டும் இருக்கின்றதோ அவர்கள், பின்வரும் பூனையின் நடத்தையை பின்பற்றுகின்றனர்” என்று கூறி பின்வரும் பூனையின் கதையைக் கூறினார்.

“அக்கதையை நான் உனக்கு திருப்பி சொல்கிறேன். இக்கதை நாரதரால் என்னுடைய தந்தைக்கு கூறப்பட்டது” என்று துரியோதனன் உலுகாவிடம் கூறி பொல்லாத அந்த பூனையின் வரலாற்றைக் கூறினான்.

கொடுமைவாய்ந்த கொடிய பூனை ஒன்று, கங்கைக் கரையில்தன்னுடைய தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தது. அது தன்னுடைய எல்லா செயல்களையும் கைவிட்டு, கரங்களை உயர்த்திய நிலையில், ஒரு பக்தனைப் போல் தவம் செய்ய ஆரம்பித்தது.

தன்னுடைய இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாக காட்டிக் கொண்ட அப்பூனை, நதிக் கரையில் இருந்த மற்ற ஜீவன்களிடம் நம்பிக்கை உண்டாக்குவதற்காக, “நான் இப்பொழுது நல்லொழுக்கத்தைப் பின்பற்றி வரு கிறேன்” என்று கூறியது.

நீண்டகாலத்திற்குப் பின், அனைத்து பறவைகளும் அப்பூனையிடம் நம்பிக்கை வைத்தன. அவை அனைத்தும் அப்பூனையை மெச்சின.

இவ்வாறாக அனைத்துப் பறவைகளாலும், வழிபடப்பட்ட, பறவைகளைத் தின்று அழிக்கும் பரம்பரையில்வந்த அப்பூனை, தன்னுடைய குறிக்கோள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதாக சந்தோஷம் கொண்டது.

சிலகாலம் கழித்து, எலிகள் அவ்விடம் சென்றன. அவைகளும் அப்பூனை மிகவுயர்ந்த விரதத்தை கடைப் பிடிப்பதாகவும், அப்பூனையை புனிதமானதாகவும் வழிபட்டன. பூனையோ தான் பெரிய தவம் செய்வதாக எலிகளை நம்ப வைத்தது. இவ்வாறாக, பூனையிடம் மாறாத நம்பிக்கை கொண்ட எலிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, “பல எதிரிகள் எங்களுக்கு உள்ளன. ஆகையால் இப்பூனை, எங்களுடைய தாய்மாமனாக இருந்து, வயதான, இளமையான எங்கள் இன எலிகளை காப்பாற்றட்டும்” என்று முடிவு செய்தன.

அதன்பின் எல்லா எலிகளும் ஒன்று சேர்ந்து, பூனையிடம் சென்று, “உங்கள் கருணையால் நாங்கள் பயமின்றி எல்லா இடங்களும் சுற்றித் திரிய விரும்புகிறோம். நீங்களே எங்களுடைய கருணைமிகு பாதுகாவலர். நீங்களே எங்களுடைய மிக உயர்ந்த நண்பர். ஆகையால் நாங்கள் அனைவரையும், எங்களை உங்கள் பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். நீங்கள் நல்லொழுக்கத்தை நாடிநிற்கின்றீர்கள். மேலும் நற்குணத்தை பெறுவதே குறிக்கோளாக இருக்கின்றீர்கள். நல்ல ஞானமுள்ளவராகவும் நீங்கள் இருக்கின்றீர்கள். இந்திரன் தேவர்களை காப்பது போல், நீங்களும் எங்களைக் காப்பீர்களாக!” என்று வேண்டிக் கொண்டன.

இதைக்கேட்ட பூனை, “என்னுடையதுறவுநிலையும், நீங்கள் கேட்கும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. ஆனாலும் நீங்கள் வேண்டிக் கொண்டபடி, உங்களுக்கு நல்லது செய்வதை என்னால் தவிர்க்க இயலாது. ஆனால் அதே சமயம், நீங்கள் அனைவரும் என்னு டைய வார்த்தைகளுக்கு பணிந்து நடக்க வேண்டும். நான் கடுமையானதவத்தை பின்பற்றி வாழ்வதால், என்னுடைய தவப் பயிற்சிகளால் மிகவும் பலவீனம் அடைந்துள்ளேன். ஆகையால் என்னால், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழியில்லாமல் உள்ளேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, என்னை கங்கைக் கரைக்கு சுமந்து செல்ல வேண்டும்” என்று எலிகளிடம் கூறியது.

பதிலாக எலிகளும், “அவ்வாறே இருக்கட்டும்” என்று பூனையிடம் கூறி, தங்களுடைய முதுமையான, இளமையான எலிகள் அனைத்தையும் அப்பூனையின் பாதுகாப்பில் விட்டன.

ஆனால் அக்கொடிய பூனையோ, எலிகளைத் தின்று படிப்படியாக தடிக்கவும், பலமான அங்கங்களைப் பெறவும் செய்தது.

இவ்வாறு ஒருபுறம், எலிகளின் எண்ணிக்கை குறைய, பூனையோபலத்திலும், வீரியத்திலும் பெருக ஆரம்பித்தது.

மறுபடியும் எல்லா எலிகளும் ஒன்று சேர்ந்து, தங்களுக்குள் வாதிக்க ஆரம்பித்தன. “நம்முடைய தாய்மாமனோ, நாள்தோறும் பலம்பெற்று வருகிறார். நாமோ, எண்ணிக்கையில் குறைந்து வருகிறோம்” என்று கூறின. அப்போது, திண்டிகா என்ற பெயர் கொண்ட, ஞானமுள்ள எலி ஒன்று, அங்கு கூடியிருந்த எலிகளிடம், “நீங்கள் அனைவரும் நதிக்கரையோரம் சென்று என்ன நடக்கிறது என்று பாருங்கள். நான் தாய்மாமனான, இப்பூனையுடன் உங்களைப் பின் தொடர்கிறேன்” என்று கூற மற்ற எலிகளும் “நல்லது” “நல்லது” என்று கூறி திண்டிகாவை புகழ்ந்தன.

எல்லா எலிகளும், திண்டிகா கூறியபடியே செய்தன. ஆனால் எலிகளுக்குள் நடந்த வாதங்களை அறியாத பூனையோ அதன் கூட வந்த திண்டிகாவை அன்று தின்று விட்டது.

மறுபடியும் எல்லா எலிகளும் ஒன்று கூடி, கலந்தாய்வு செய்தன. அப்போது கிலிகா என்ற பெயர் கொண்ட வயதான எலி ஒன்று தன்னுடைய இனத்தாரிடம், “நம் முடைய மாமனோ உண்மையில் நற்குணத்தை நாட வில்லை. கபடமாக அவர் நம்மிடம் நண்பனாக வேடம் போட்டாலும், உண்மையில் எதிரியாகவே உள்ளார். பழங்களையும் கிழங்குகளையும் உண்டு வாழும் உயிரினங்களின் மலத்தில் மென்மையான முடி காணப்படு வதில்லை. மறுபடியும் பூனையின் அங்கங்கள் பலப்படும் போது, நம்முடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. திண்டிகாவையும் எட்டு நாட்களாக காண இயலவில்லை” என்று கூறியது.

இதைக்கேட்ட அனைத்து எலிகளும், பூனையின் உண்மை சுபாவத்தை உணர்ந்து, பல திசைகளிலும் ஓடி ஒளிந்தன. அந்த கொடிய பூனையும் தன் இடத்திற்கு திரும்பியது.

இக்கதையை கூறிய வஞ்சகனான துரியோதனன், நல்லவரான யுதிஷ்டிரரை இப்பூனைக்கு ஒப்பிட்டு கபடமாகக் கூறினான்.

உண்மையில் துரியோதனனே வஞ்சகம் நிரம்பியவன். பொய்யும், புரட்டும், கபடமும் நிரம்பியவன். ஆனால் தன்னுடைய திறமையான வாக்குத் திறத்தால் யுதிஷ்டிரரை வஞ்சகராக காட்டினான்.

இக்கதையில் வரும் பூனை போன்று, வெளியில் ஒன்றும், உள்ஒன்றுமாக நடப்பவர்களை பகவத் கீதை பொய்யர்கள் என்று குறிப்பிடுகிறது.

“வெளியே துறவி போல் செயல்களைக் கட்டுப்படுத்தி ஆனால் அதே சமயம் மனதை புலனின்ப பொருட்களில் அலைபாய விடுபவன் பொய்யன் என்று அழைக்கப்படுகிறான்” என்று பகவத்கீதை 3.6ல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.

பூனை துறவி போல் வேடம் போட்டாலும், எவ்வாறு அதனுடைய மனதானது எலிகளை கபடமாக எப்படி உண்பது என்பதிலேயே இருந்தது.

இது போல், பல சமயங்களில் அப்பாவிமக்கள், வெளிவேடத்தையே நம்புகின்றனர். ஆனால் மனதை அறிவதில்லை.

வெளிவேடம் போடுபவர்கள் சமயத்தில் சாதுக்களின் உடைகளை அணியலாம், பக்தருக்குரியஅடையாளங்களை தரித்திருக்கலாம் அல்லது மிக அழகாக தத்வ விசாரங்கள் பண்ணலாம் அல்லது ஞானியாகக் காட்டலாம். ஆனால் அவர்களுடைய மனதோ, புலனின்பத்தில் மூழ்கிஇருக்கலாம். இந்த வேடங்கள் அனைத்தையும் பயன் படுத்தி எவ்வாறு புலனின்பத்தை மேலும் மேலும் அனுப விக்கலாம் என்பதே இவர்களுடைய குறிக்கோள்.

கழுகு உயர பறந்தாலும், அதனுடைய பார்வை செத்த பிணத்தின் மீதே இருக்கும். அது போல் இவர்கள் வெளிப்படையாக சொல்லாலும், செயலாலும் ஏகப்பட்ட வேடம் போட்டாலும், உள்மனதில் நாற்றமிகு புலனின்பத்தையே நாடி நிற்கின்றனர்.

இத்தகையோரை கீதை கண்டிக்கிறது. ஆனால் இத்தகையோருக்கும் கீதை 3.7ல் மாற்று வழி கூறுகிறது. “புலன்களை மனதால் கட்டுப்படுத்தி, அதே சமயத்தில் பற்றின்றி, கர்ம யோகத்தில் செயல்படும் மனிதன் நேர்மை யானவன்; உயர்ந்தவன்” என்று குறிப்பிடுகிறது.

அதாவது போலியாக நடக்காமல், தன்னுடைய இயல்பிற்கேற்ற செயல்களை கிருஷ்ண உணர்வோடு செய்பவன்,ஆன்மீக வாழ்வு வாழ்வதாக வேடம் காட்டிக் கொண்டு அறியாத மக்களை ஏமாற்றும் போலிகளை விட பன்மடங்கு சிறப்பான நிலையில் இருக்கின்றான்.

வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, யோகம் செய்யக் கூடிய போலி யோகியை விட, வீதியை துப்பரவு செய்யும் நேர்மையான சுத்திகரிப்பு தொழிலாளி பன்மடங்கு மேலா னவர்.

ஆகையால், சொல் செயலால் வேடம் இல்லாது தனது இயல்பிற்கேற்ற செயல்களை, கிருஷ்ண உணர்வோடு செய்வது உண்மையான ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question