ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர்
ஸ்ரீ பலதேவ வித்யபூஷணர் (ஸ்ரீ கோவிந்த தாசர்) 1600-களில் ஒரிசாவில் உள்ள ரெமுனா அருகே தோன்றினார். அவர் தனது இளமைப் பருவத்தில், சமஸ்கிருத இலக்கணம், கவிதை மற்றும் தர்க்கம் ஆகியவற்றில் புலமை பெற்றார். சங்கரர் மற்றும் மத்வர் ஆகியோரின் விளக்க உரைகளை கவனமாகப் படித்த பிறகு, ஸ்ரீபாத மத்வாச்சாரியாரின் தத்துவ-வாதி சீடப் பரம்பரையில் தீட்சை பெற்றார். பலதேவ வித்யபூஷணர் ஒரு திக் விஜய பண்டிதராக (அனைத்து எதிரிகளையும் வெல்பவர்) மாறி, புனித தலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் சென்ற இடமெல்லாம் உள்ளூர் முனிவர்கள், அறிஞர்கள் மற்றும் சந்நியாசிகளை விவாதத்தில் தோற்கடித்தார்.
ஜெகநாத புரியில், ஸ்ரீ ராதா-தாமோதர கோஸ்வாமியிடமிருந்து ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் மிகச்சிறந்த தத்துவத்தைக் கற்றுக் கொண்டார், மேலும் கௌடிய வைஷ்ணவத்திற்கு மாறிய பிறகு அவரிடம் தீட்சை பெற்றார். பிருந்தாவனத்தில், ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூரின் கீழ் ஸ்ரீமத் பாகவதத்தைப் பயின்றார் மற்றும் ராதா-சியாமசுந்தரரை வழிபட்டார்.
கி.பி. 1706-ல், மகாபிரபுவின் இயக்கத்தின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் அவரை குல்டாவுக்கு (ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அருகில்) அனுப்பினார். வங்காள வைஷ்ணவர்களுக்கு வேதாந்த-சூத்திரத்திற்கு என்று சொந்தமாக விளக்க உரை இல்லாததால், கோவிந்தஜியை வழிபட அவர்களுக்கு உரிமை இல்லை என்று உள்ளூர் ராமானந்திகள் (ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு) உரிமை கொண்டாடினர்.
கோவிந்தஜி பகவானே நேரடியாக ‘கோவிந்த-பாஷ்யத்தை’ (வேதாந்தத்தின் மீதான ஒரு வைஷ்ணவ விளக்க உரை) பலதேவ வித்யபூஷணருக்கு வெளிப்படுத்தினார். இதைப் பயன்படுத்தி, பலதேவர் கௌடிய வைஷ்ணவத்தை ஒரு சுதந்திரமான தத்துவமாக உறுதியாக நிறுவினார். மேலும் அவர் ஜெய்ப்பூரில் கோவிந்தஜியின் சேவையில் வங்காள வைஷ்ணவர்களை மீண்டும் பணியமர்த்தினார். கோவிந்த-பாஷ்யமே வேதாந்த-சூத்திரத்தின் மீதான ஒரே பக்தி விளக்க உரையாகும்.
ஸ்ரீ பலதேவ வித்யபூஷணர் ஒரு நிஷ்கிஞ்சன-பரம பாகவதர், அதாவது முழுமையாக துறவறம் பூண்ட கிருஷ்ண பகவானின் தலைசிறந்த பக்தர் ஆவார். அவரது இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் விளக்க உரைகள், ஆயிரக்கணக்கான வைஷ்ணவர்களுக்கு கிருஷ்ண உணர்வின் உன்னத தத்துவத்தையும், ஆறு கோஸ்வாமிகளின் ஆழ்ந்த எழுத்துக்களையும் புரிந்து கொள்ள உதவியுள்ளன. அவரிடம் போலி கௌரவம் இல்லாததால், அவர் தனது பிறப்பு, பெற்றோர், வம்சம் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒருபோதும் எழுதவில்லை. நவத்வீப-தாம மகாத்மியத்தில் ஸ்ரீ பக்திவினோத தாகூர் கூறியபடி, சைதன்ய லீலையில் பலதேவ வித்யபூஷணரே ஸ்ரீ சர்வபௌம பட்டாச்சாரியாரின் மைத்துனரான ஸ்ரீ கோபிநாத ஆச்சாரியார் ஆவார். விரஜத்தில் அவர் ஸ்ரீ ராதையின் நித்திய பணிப்பெண்ணான ரத்னாவளி தேவியாக சேவை செய்கிறார்.
மேலும் சில….
ஸ்ரீ பலதேவ வித்யபூஷணரின் துல்லியமான பிறப்பு நேரமும் இடமும் யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை வருங்காலத்தில் வரலாற்றாசிரியர்களால் இந்த உண்மைகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவ முடியும். அவரது வாழ்க்கையைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள சிறிதளவு தகவல்களிலிருந்து, அவர் நவீன சகாப்தத்தின் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க முடியும். அவர் பிறந்த கிராமத்தின் சரியான பெயர் நமக்குத் தெரியவில்லை என்றாலும், அது ஒரிசாவின் பாலேஸ்வர் (பாலேஸ்வரா) மாவட்டத்தில், ரெமுனாவிற்கு அருகாமையில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ரூப கோஸ்வாமியின் ‘ஸ்தவமாலா’விற்கு அவர் எழுதியுள்ள விளக்கவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலிருந்து, 1757-ல் நடைபெற்ற பிளாசி போருக்குப் பிறகும் பலதேவர் வாழ்ந்து வந்தார் என்பது தெளிவாகிறது.
தென் ஒரிசாவில் உள்ள சில்கா ஏரிப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பலதேவர் கல்வி கற்றார் என்பது நமக்குத் தெரியும். அங்கு அவர் இலக்கணம், கவிதை மற்றும் தர்க்கம் ஆகியவற்றைக் கற்று, இந்த அனைத்து பாடங்களிலும் நிபுணத்துவம் பெற்றார். அவர் அங்கு தனது வேதாந்தப் படிப்பைத் தொடங்கினார், ஆனால் விளக்கவுரைகளை இன்னும் ஆழமாகப் படிப்பதற்காக, அவர் மைசூருக்குச் சென்றார். அங்கு வேதாந்த சூத்திரங்கள் மீதான மத்வரின் சுத்த-த்வைத விளக்கவுரையின் தர்க்கரீதியான நிலைத்தன்மையால் அவர் குறிப்பாக ஈர்க்கப்பட்டார், மேலும் அந்தப் பள்ளியின் சீடராகி ஒரு தத்துவ-வாதி மடத்தில் வாழத் தொடங்கினார். சந்நியாசம் பெற்ற பிறகு, அவர் புருஷோத்தம சேத்திரத்திற்குச் சென்றார், அங்கு அவர் பல உள்ளூர் அறிஞர்களை விவாதங்களில் ஈடுபடுத்தி, தனது புலமையின் ஆழத்தை வெளிப்படுத்தினார். விரைவில் அவரது புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது.
இருப்பினும் பின்னர், கன்யாகுப்ஜத்தைச் சேர்ந்த அறிஞரான ராதா தாமோதர கோஸ்வாமியை அவர் சந்தித்தார், அவரது வழிகாட்டுதலின் கீழ் ஜீவ கோஸ்வாமியின் ‘நட்-சந்தர்பத்தை’ மிக விரிவாகப் படித்தார். கௌடிய வைஷ்ணவ தத்துவத்தின் மேலாண்மையை அவர் முழுமையாக நம்பியபோது, அவர் ராதா தாமோதர கோஸ்வாமியிடமிருந்து தீட்சை பெற்றார். இவ்வாறு அவர் நித்யானந்த பிரபுவின் பரம்பரையில் தீட்சை பெற்றார். அவருடைய சீடப் பரம்பரை பின்வருமாறு: (1) கௌரி தாஸ் பண்டிதர், (2) ஹிருதய சைதன்ய பிரபு, (3) சியாமனந்த பிரபு, (4) ரசிகானந்த தேவ கோஸ்வாமி, (5) நயனானந்த கோஸ்வாமி, (6) ராதா தாமோதர கோஸ்வாமி, (7) பலதேவ வித்யபூஷணர்.
பலதேவர் பின்னர் பீதாம்பர தாசரின் கீழ் கௌடிய இலக்கியங்களைத் தொடர்ந்து பயின்றார், அதன்பிறகு விஸ்வநாத சக்கரவர்த்தியின் கீழ் பாகவத புராணத்தைப் படித்தார். அவர் வைஷ்ணவ வைராக்கியின் உடையையும் ஏற்றுக்கொண்டார், அச்சமயத்தில் அவருக்கு ‘ஏகாந்தி கோவிந்த தாஸ்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
வேதாந்த-சூத்திரத்திற்கு ஒரு விளக்கவுரை எழுத அனுமதி வேண்டி, ரூப கோஸ்வாமியின் கோவிந்தஜி விக்ரகத்திடம் பிரார்த்தனை செய்வதற்காக விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூரால் அவர் ஜெய்ப்பூருக்குச் செல்லும்படி கட்டளையிடப்பட்டார். பின்னர் அவர் ‘கோவிந்த-பாஷ்யத்தை’ இயற்றி அதை குல்டாவுக்கு எடுத்துச் சென்றார், அங்கு விவாதத்தில் மற்ற சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களை தோற்கடித்து, கௌடியப் பள்ளியின் நற்பெயரைக் காப்பாற்றினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, அவருக்கு ‘வித்யபூஷணர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இப்புத்தகத்தில் விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் பற்றிய அத்தியாயத்தில் இந்தக் கதை இன்னும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ பலதேவ வித்யபூஷணர் எழுதிய படைப்புகளின் பட்டியல் பின்வருமாறு:
(1) பிரம்ம சூத்திரங்களுக்கான விளக்கவுரை, கோவிந்த-பாஷ்யம்;
(2) சித்தாந்த-ரத்னம்,
(3) வேதாந்த-ஸ்யமந்தகம்,
(4) பிரமேய-ரத்னாவளி,
(5) சித்தாந்த-தர்ப்பணம்,
(6) சாஹித்ய-கௌமுதி,
(7) காவ்ய-கௌஸ்துபம்,
(8) வியாகரண-கௌமுதி (இது தொலைந்துவிட்டதாகத் தெரிகிறது);
(9) பத-கௌஸ்துபம்,
(10) பத்தாம் காண்டத்தின் விளக்கவுரையான வைஷ்ணவ-நந்தினி,
(11) கோபால-தாபனி உபநிஷத்தின் மீதான விளக்கவுரை;
(12) ஈஷா மற்றும் பிற ஒன்பது உபநிஷத்துகளின் மீதான விளக்கவுரைகள்;
(13) பகவத்-கீதையின் விளக்கவுரையான கீதாபூஷண-பாஷ்யம்;
(14) விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் விளக்கவுரையான நாமார்த்தசுதா;
(15) லகுபாகவதாம்ருதத்தின் விளக்கவுரையான சாரங்க-ரங்கதா;
(16) ஸ்தவமாலாவின் விளக்கவுரையான ஸ்தவமாலா-விபூஷணம்;
(17) ரூப கோஸ்வாமியின் நாடிகா-சந்திரிகாவின் விளக்கவுரை;
(18) சந்தஹ்-கௌஸ்துப-பாஷ்யம்;
(20) ரசிகானந்தரின் சியாமனந்த-சதகத்தின் மீதான விளக்கவுரை;
(21) சந்திராலோகத்தின் மீதான விளக்கவுரை (இது தொலைந்துவிட்டதாகத் தெரிகிறது);
(22) சாஹித்ய-கௌமுதியின் விளக்கவுரையான கிருஷ்ணானந்தினி;
(23) அவரது சொந்த கோவிந்த-பாஷ்யத்தின் விளக்கவுரையான கோவிந்தபாஷ்ய-டீகா;
(24) அவரது சொந்த சித்தாந்த-ரத்னத்தின் கூடுதல் தெளிவுபடுத்தலான சூக்ஷ்மா;
இவை தவிர, பலதேவர் விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் எழுதியதிலிருந்து வேறுபட்ட ஒரு ‘ஐஸ்வர்ய-காதம்பினி’யையும் எழுதியதாகக் கூறப்படுகிறது. விஸ்வநாதர் எழுதிய ஐஸ்வர்ய-காதம்பினியில், த்வைத மற்றும் அத்வைத கோட்பாடுகளின் விவாதம் உள்ளது, இது பலதேவரின் அதே பெயரிலான படைப்பில் காணப்படவில்லை.
குல்டாவில் விஜய கோபால் விக்ரகத்தின் வழிபாட்டை பலதேவர் நிறுவியதாகக் கூறப்படுகிறது. உத்தவ தாஸ் மற்றும் ஸ்ரீ நந்த மிஸ்ரா ஆகியோர் அவரது மிக முக்கியமான இரு சீடர்கள் ஆவர்.
மத்வ-கௌடிய-சரஸ்வத-வைஷ்ணவ சம்பிரதாயத்தை உருவாக்கும் உண்மையான குருக்களின் பரம்பரையில், பலதேவ வித்யபூஷணர் தொடர்ந்து நினைவுகூரப்பட வேண்டியவர் ஆவார். ஆன்மீக குருக்களை உருவாக்கும் குடும்பப் பரம்பரையுடன் தீட்சை மூலம் ஒரு தொடர்பை வெளிப்படுத்துவது மட்டுமே ஒருவரை உண்மையான குருவாக மாற்றிவிடாது. பரம சத்தியத்தின் மீதான முழுமையான அர்ப்பணிப்பை, அதாவது ‘பிரம்ம-நிஷ்டையை’ ஒருவர் வெளிப்படுத்த வேண்டும். ஒரு தூய பக்தரை மட்டுமே உண்மையான குரு என்று அழைக்க முடியும்.
[ஸ்ரீல பக்தி பல்லப் தீர்த்த மகாராஜின் “Sri Chaitanya: His Life & Associates” (ஸ்ரீ சைதன்யா: அவரது வாழ்க்கையும் சகாக்களும்) புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது].
மேலும் சில….
ஸ்ரீல பலதேவ வித்யா பூஷணர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் பிறந்தார். மிகவும் சிறிய வயதிலேயே அவர் இலக்கணம் கவிதைகள் தர்க்கம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பிறகு தீர்த்த யாத்திரை செல்லும் வழியில், ஸ்ரீ ராதா தாமோதர தேவரை சந்தித்தார். அவர் ஸ்ரீ ரசிகானந்ததேவரின் பரம சிஷ்யர் ஆவார். அவருடன் தத்துவம் பற்றி விளக்கமாக கேட்டறிந்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார் . ஸ்ரீ ராதா தாமோதரா தேவர். பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைஷ்ணவக் கொள்கைகளையும், அவரின் எல்லையற்ற கருணையையும் விரிவாக எடுத்துரைத்தார்.மிக குறுகிய காலத்திலேயே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தை, அவரிடம் கற்று, அதில் கைதேர்ந்தவர் ஆனார்.
கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான விஸ்வநாத சக்கரவர்த்தி தாக்கூரிடம், பகவானின் சக்தியானது, ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும், வேறாகவும் உள்ளது என்ற ( “அசிந்தியபேதா பேத தத்துவம்”) கௌடிய வைஷ்ணவத் தத்துவ உபதேசத்தை பெற்றார்.
ஒரு நாள் ஜெய்ப்பூர் அரசவையில் ஸ்ரீ ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த சிலர், கௌடிய சம்பிரதாயத்தை பற்றி விவாதம் நடத்த ஆரம்பித்தனர். அவர்கள் அரசரிடம் கௌடிய வைஷ்ணவ சமூகத்தினரிடம், நமது வைதீக தர்மத்தின் மிக முக்கியமான வேதாந்த சூத்ரத்திற்கு விளக்கவுரையும் இல்லை (பாஷ்யம்), சித்தாந்தங்களும் இல்லை என்று தெரிவித்தனர். எனவே இவர்கள் ஸ்ரீ கோவிந்தர் மற்றும் கோபிநாதர் விக்கிரங்களை வழிபாடு செய்வதை நிறுத்திவிட்டு, அந்த உரிமையை உண்மையான சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஜெய்ப்பூர் அரசர் கௌடிய சம்பிரதாயத்தை சேர்ந்தவராக இருந்ததனால், அவர் விருந்தாவனத்தில் இருக்கும் ஸ்ரீ விஸ்வநாத சக்கரவர்த்தித் தாகூரருக்கு உடனே இச் செய்தியை அனுப்பி , கௌடிய சம்பிரதாயத்திடம் வேதத்தாந்த சூத்ரத்திற்கு(பாஷ்யம் )விளக்கவுரை இல்லையா ? என்றும், அப்படி இருந்தால் உடனே அதை ஜெய்ப்பூருக்கு அனுப்பி, ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்களுக்கு விடை தந்தருளுமாறு வேண்டினார்.
அந்த சமயத்தில் ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் முதுமையின் காரணமாக உடல் பலவீனமானவராக இருந்ததினால், அவரால் ஜெய்ப்பூர் வரையிலான பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில், தனது மாணவனும் சிஷ்யனும் ஆகிய பலதேவரை தனக்கு பதிலாக அனுப்பி வைத்தார்.
பலதேவர் வேத சாஸ்திரங்களில் நிபுணராக இருந்ததால் ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்களின் கேள்விகளுக்கு பதில்கள் தர ஆயத்தமானார். மிக நீண்ட கடினமான விவாதம் நடைபெற்றது என்றாலும், அந்த பண்டிதர்களால், பலதேவரின் தீர்மானமான, முடிவான, துளைக்கும் ,வாதத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்கள்.
பலதேவரின் வாதம் என்னவென்றால், கௌடிய சம்பிரதாயத்தின் ஸ்தாபகரான, ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவர்கள் ஸ்ரீமத் பாகவதமே, வேதாந்தத்தின் மிக உயர்ந்த விளக்க உரை என்றும், ஸ்ரீமத் பாகவதத்திலும் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்றும், இதற்கு ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி எழுதிய சத் சந்தர்பம் என்ற நூலிலும் ஆதாரம் உள்ளது என்றார். ஆகவே கௌடிய சம்பிரதாயம் ஸ்ரீமத் பாகவதத்தையே, வேதாந்தத்தின் இயற்கையான விளக்க உரையாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு தனியான விளக்க உரை தேவையில்லை என்றும் விளக்கினார்.
ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்கள் இந்த சமயத்தில் உரக்க குரல் எழுப்பி, அவரே விளக்க உரை இல்லை என்று ஒத்துக் கொள்கிறார், அவர்களிடம் விளக்கவுரை இல்லை என்று கோஷம் எழுப்பினார்கள்.
பலதேவரும் கௌடிய சம்பிரதாயத்தின் விளக்க உரையை சில நாட்களில் சபையில் சமர்பிப்பதாக உறுதியளித்தார். அவரது பதிலால் பண்டிதர்கள் அப்போதைக்கு அமைதியானார்கள். மனதில் மிகுந்த யோசனையுடன் பலதேவர், ஶ்ரீல ரூப கோஸ்வாமி வழிபட்ட விக்ரகமான ஸ்ரீகோவிந்தரின் ஆலயத்திற்கு சென்று சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, பின் நடந்த எல்லாவற்றையும் கோவிந்தரிடம் சொல்லி பிரார்த்தனை செய்தார்.
அன்று இரவு பலதேவரின் கனவில் வந்த பகவான் ஸ்ரீ கோவிந்தர் ” நீ கண்டிப்பாக விளக்கவுரை எழுத வேண்டும் .அந்த விளக்க உரை என்னாலேயே உனக்கு அருளப்படும். அது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் குறையற்ற பாஷ்யமாக இருக்கும் ” என்றும் கூறினார். கண்விழித்த பலதேவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மனதில் புதிய பலம் ஏற்பட்டவராக, தனது புதிய கடமையை செய்யத் தயாரானார் .பிறகு பகவான் கோவிந்தரின் தாமரைப் பாதங்களை மனதில் தியானித்து, எழுதத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவரது பணி நிறைவு பெற்றது. பகவான் கோவிந்தரால் விளக்கப்பட்ட இந்த உரைக்கு , ” கோவிந்த பாஷ்யம்” என்று பெயர் சூட்டினார்.
பலதேவர் கோவிந்த பாஷ்யத்தை எடுத்துக்கொண்டு அரசவையில் நுழைந்தபோது எல்லா பண்டிதர்களும், அவருக்காக காத்துக் கொண்டிருந்தனர். விளக்கவுரையை பார்த்ததும் அவர்கள் பேச்சற்றவர்கள் ஆனார்கள். கூடியிருந்த அனைவரும் கோவிந்த பாஷ்யத்தை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டனர். அரசர் பலதேவரின் கோவிந்த பாஷ்யத்திற்கும் கௌடிய சம்பிரதாயத்திற்கும் மாபெரும் வெற்றி என்று அறிவித்தார். ஸ்ரீ கோவிந்தர் மற்றும் கோபிநாதர் விக்கிரங்களை கௌடிய சம்பிரதாயத்தினர் வழிபாடு செய்ய தடையேதும் இல்லை என்று அரசர் ஆணை பிறப்பித்தார். அப்போது பலதேவரின் மிகச் சிறந்த அறிவாற்றல் காரணமாக அந்த பண்டிதர்கள் பலதேவருக்கு பலதேவ “வித்யா பூஷணர்” என்ற பட்டம் வழங்கினார்கள். அதாவது சிறந்த அறிவே ஒருவரின் ஆபரணம் என்று அதற்கு பொருள். அன்றிலிருந்து அனைவராலும் “பலதேவ வித்யா பூஷணர்” என்று அழைத்து சிறப்பிக்கப்பட்டார்.
ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்கள் ஶ்ரீல பலதேவ வித்யாபூஷணரின் அறிவால் ஈர்க்கப்பட்டு அவரயே குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய சீடர்களாக விரும்பினார்கள். ஶ்ரீல பலதேவ வித்யாபூஷணர் மிகவும் பணிவுடன் அதை மறுத்தார். நான்கு வகையான சம்பிரதாயங்களில் ஶ்ரீ சம்பிரதாயமும் ஒன்றாகும். பகவானுக்கு சேவை செய்வதையே உண்மையான மதம் மற்றும் தர்மம் என்று வேத சாஸ்திரம் போதிக்கிறது அதுவே ஶ்ரீ சம்பிரதாயத்தின் கொள்கையாகவும் இருப்பதால், கௌடிய சம்பிரதாயத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் நான் ஸ்ரீ சம்பிரதாயத்திற்கு அவமரியாதை செய்ய முடியாது என்றும் ,அப்படி செய்வது மிகப்பெரிய குற்றம் என்று கூறினார்.
ஶ்ரீ பலதேவ வித்யா பூஷணர் தன் வெற்றி செய்தியை எடுத்துக்கொண்டு பிருந்தாவனம் சென்றார். ஶ்ரீீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூரின் தாமரை பாதங்களை நமஸ்கரித்து, வெற்றி செய்தியை தெரிவித்தார். விருந்தாவன வாசிகளும் மற்ற வைணவர்களும் மிகவும் ஆனந்தம் அடைந்தனர். ஶ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் ஶ்ரீபல தேவ வித்யா பூஷணரை மனமகிழ்ந்து ஆசிர்வாதம் செய்தார்.
