சித்திரை (சைத்ர) மாதம் – சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குரிய தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்,” ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் விஸ்தாரமாக வர்ணித்துக் கூற வேண்டுகிறேன்.” என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு,” ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை (உரையாடல்) உனக்கு அப்படியே சொல்கிறேன். கேள்.” என்றார். ராஜா திலீபன் குரு வசிஷ்டரிடம்,” குருதேவா, சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன? அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், பூஜை விதிகள் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் அனைத்தையும் தாங்கள் கிருபை கூர்ந்து விவரமாக கூற வேண்டும்.” என்றான்.
அதற்கு பதிலளிக்கையில் மஹரிஷி வசிஷ்டர்,” ராஜன்! சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி, காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகல விதமான பாவங்களையும் நீக்கி மோட்சப்பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ, அதே போல் காமதா ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம், சகல வித பாபங்களையும் நீக்குவதோடு, புத்ர பிராப்தியையும் அளிக்கிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கர்மவினையின் காரணமாக இழி நிலை பிறவி எடுத்தவர் அதிலிருந்து விடுதலை பெறுவதுடன், இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். இப்போது உனக்கு, இவ் ஏகாதசியின் மஹாத்மிய கதையை கூறுகிறேன். கவனத்துடன் கேள்.” என்றார்.
பழங்காலத்தில் போகீபுர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது. அந்நகரில் அநேக அப்சரஸ், கந்தர்வர், கின்னரர் வசித்து வந்தனர். அதில் சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற லலித் மற்றும் லலிதா என்னும் கந்தர்வ தம்பதியினர் அழகான மாளிகையில் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையில் கற்பனையில் கூட பிரிவு என்பதை ஏற்க இயலாத அளவு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் ப்ரேமையும், காதலும் கொண்டிருந்தனர்.
ஒரு முறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தர்வர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அங்கு மற்ற கந்தர்வர்களுடன் சேர்ந்து கந்தர்வனான லலித்தும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அவனுடைய காதல் மனைவியான லலிதா அங்கு இருக்கவில்லை. பாடிக் கொண்டிருந்த லலித்துக்கு திடீரென்று அவளது நினைவு எழ, அதன் காரணமாக சுருதி விலகி பாடலை தவறாக பாட நேர்ந்தது. அதைக் கண்ட நாகராஜனான கார்கோடகன் அரசன் புண்டரீகனிடம் அவனைப் பற்றி புகார் செய்தான். அதை விசாரித்த அரசன் புண்டரீகன், லலித் மீது மிகுந்த கோபம் கொண்டு,” துஷ்டனே ! துர்மதி பெற்றவனே ! என் முன்னிலையில் பாடல் பாடும் பொழுது கூட உன் மனைவியை நினைத்துக் (ஸ்மரணம்) கொண்டிருந்து சங்கீதத்திற்கு அவமரியாதை செய்துள்ளாய். ஆதலால் உன்னுடைய இந்த பாபவினையின் தண்டனையாக, நீ நரமாமிசம் தின்னும் ராட்சஸான ஆக மாறுவாய் ” என்று சாபம் இட்டான்.
அரசனின் சாபம் பெற்ற கந்தர்வன் லலித் அக்கணமே கோர வடிவுடைய ராட்சஸனாக மாறினான். அவனுடைய முகம் காண்பவர்களுக்கு அச்சத்தையும், பயத்தையும் அளிக்கக் கூடிய பயங்கர ரூபத்தை பெற்றது. கண்கள் இரண்டும் சூரிய, சந்திரனைப் போன்று கனன்று ஒளியை உமிழ்ந்து கொண்டு இருந்தன. வாயிலிருந்து அக்னி பிழம்புகள் வெளி வந்து கொண்டிருந்தது. அவனது மூக்கு மலையின் கீழ் உள்ள குகையைப் போன்றும், கழுத்து மலையைப் போன்றும் விளங்கியது. ராட்சஸனாக மாறி கந்தர்வன் லலித் மிகுந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது.
ப்ரியத்துக்கு உரிய தன் நேசனுக்கு நேர்ந்ததைக் கேட்ட லலிதா மிகுந்த துக்கமும், மனவேதனையும் கொண்டு, தன் கணவரை இந்நிலையிலிருந்து விடுவிக்க எங்கு செல்வது, என்ன செய்வது என்று அறியாது திகைத்தாள். எப்படி தன் கணவரை இந்த நரகத்திலிருந்து மீட்பது என்று யோசித்தாள்.
ராட்சஸனாக மாறிய கந்தர்வன் லலித் காட்டில் இருந்துக் கொண்டு அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய மனைவி லலிதை அவன் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து அவனுடைய நிலையை எண்ணி வருந்தினாள். இப்படியாக தன் கணவனை பின் தொடர்ந்து இறுதியில் விந்தியாசல் பர்வதத்தை அடைந்தாள். அங்கு அவள் சிருங்கி முனிவருடைய ஆசிரமத்தைக் கண்டாள். ஆசிரமத்தைக் கண்டதும் உடனடியாக அதனுள் சென்று முனிவரை நமஸ்கரித்து பின் வினயத்துடன் அவரிடம்,”முனிவரே !, நான் வீர்தன்வா என்னும் கந்தர்வனின் மகள். என் பெயர் லலிதா. என் கணவர் அரசன் புண்டரீகனின் சாபத்தால் கோர ராட்சஸனாக மாறிவிட்டார். அவருக்கு நேர்ந்த இந்த துர்பாக்கிய நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் நித்தமும் அவர் படும் பாட்டைக் கண்டு நான் சொல்லவொண்ணா வேதனையை தவித்துக் கொண்டு இருக்கிறேன். முனி சிரேஷ்டரே !, தாங்கள் தான் கருணையுடன் என் கணவர் இந்நிலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது சிறந்த உபாயத்தை கூற வேண்டும்.” என்று பிரார்த்தித்தாள்.
லலிதையின் கதையைக் கேட்ட சிருங்கி முனிவர்,” கந்தர்வ கன்னிகையே !, சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை காமதா ஏகாதசி என்று அழைப்பர். அன்று ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வத்துடன் உபவாசம் இருந்து அனுஷ்டித்தால் மனிதர்களின் அனைத்து காரியங்களும் சீக்கிரமே சித்தி அடையப் பெறும். அன்று நீ விரதம் அனுஷ்டித்து அவ்விரத புண்ணிய பலனை உன் கணவருக்கு அளித்தால், அரசனின் சாபத்தால் ராட்சஸ ரூபத்தை அடைந்த உன் கணவன் அதிலிருந்து விமோசனம் பெறுவான்.” என்று ஆசீர்வதித்தார்.
முனிவரின் வார்த்தைகளின் படி லலிதா ஆனந்தத்துடன் காமதா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டித்தாள். மறு நாள் துவாதசியன்று பிராம்மணர் முன்னிலையில் தான் பெற்ற விரத புண்ணிய பலனை கணவருக்கு அர்ப்பணித்தாள் பகவான் மஹாவிஷ்ணுவை வணங்கி,”ஹே பிரபோ வாசுதேவா, ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நான் பெற்ற புண்ணிய பலன் அவரை சேர்ந்து, அதன் பிரபாவத்தால் அவர் சாபத்திலிருந்து விடுதலை அடைய தங்களை பிரார்த்திக்கிறேன்.” என்று வேண்டிக் கொண்டாள்.
ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலனால் அவள் கணவன் லலித் ராட்சஸ ரூபத்திலிருந்து விடுதலை பெற்று தன் பழைய கந்தர்வ சொரூபத்தை அடைந்தான். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் தன் மனைவி லலிதாவுடன் மீண்டும் ஆனந்தமாக வாழத் தொடங்கினான். காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் முன்பை விட மிகவும் செழிப்புடன் இருவரும் வாழ்ந்தனர். இறுதியில் இருவரும் புஷ்பக விமானத்தில் அமர்ந்து ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர்.
ஹே பார்த்தா ! விதிப்பூர்வத்துடன் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் அனைத்து பாபங்களும் நீங்குகிறது. இவ் விரதத்தின் புண்ணிய பலனானது பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களிலிருந்தும், மனித சொரூப இல்லா இதர யோனி பிறவிகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. உலகத்தில் இவ்விரதத்திற்கு நிகரான விரதம் வேறெதுவும் இல்லை. காமதா ஏகாதசி விரத கதை (அ) மஹாத்மியம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அத்யந்த பலனை அளிக்கக் கூடியது.
கதாசாரம்மனிதர்கள் எப்பொழுதும் தன் சுகத்தைப் பற்றிய சிந்தனையில் உழல்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை எனினும் சதா சர்வகாலமும் அது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று இருந்தால், அது நம் கடமைகளை மறக்கச் செய்து, அதனால் விளையும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. கந்தர்வன் லலித்தும் கடமையை மறந்ததால், கோர ராட்சஸனாக மாறி வெறுக்கத்தக்க காரியங்களை செய்ததுடன், கஷ்டத்தையும் அனுபவிக்க நேர்ந்தது. பகவான் மஹாவிஷ்ணு தன் பக்தர்களின் மீது அளவில்லா க்ருபா கடாக்ஷத்தை அருள்பவர். பக்தர்கள் மனம் விரும்பிய வரத்தை அருள்பவர். தான் பெற்ற புண்ணிய பலனை மற்றவரின் நலம் கருதி அர்ப்பணிப்பதால், அந்நற்கர்மாவானது பன்மடங்கு பெருகி மிகுந்த சக்தி வாய்ந்ததாகிறது. அத்தகைய மேன்மையான தானத்தை செய்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவராகிறார்.