Saturday, July 13

பகவான் ஜெகன்நாதருக்கு விஷ்ணுபிரியா எழுதிய கடிதம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பூரியில் வசிக்கும் பாண்டாக்கள் ( பூஜாரிகள்) இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து, பகவான் ஶ்ரீ ஜெகன்னாதர், ரத யாத்திரையில், ரத வீதியில் பவனி வரும்போது, அவரை தரிசிக்க இயலாத மக்களுக்கும் பகவான் ஜெகன்நாதருக்கும் இடையில் ஒரு தொடர்பை உண்டாக்குகிறார்கள். பகவான் ஶ்ரீ ஜெகநாதரின் பிரசாதத்தை அவர்களுக்கு கொடுத்தும், அவர்களால் நேரடியாக சமர்ப்பிக்க முடியாத ( நன்கொடை , பரிசு பொருட்கள், நைவேத்திய பொருட்கள் போன்றவை )பொருட்களை இந்த சேவாதாரிகள் பெற்று வருவது வழக்கம். அவர்கள் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் பிரியமான பக்தர்கள் அவருக்கு சமர்ப்பித்த நன்கொடையை பூரிக்கு கொண்டு வந்து பிரபு ஜெகந்நாதரின் திருபாதங்களில் சமர்ப்பிப்பார்கள். இன்றும் ஒரிசாவில் இது பழக்கத்தில் உள்ளது.

சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா, ராஜ்புதனாவிற்கு (இன்று ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அந்த பாண்டாவை அரண்மனையில் சிறிது காலம் தங்கி செல்லுமாறு விண்ணப்பித்தார். மன்னரின் விருப்பத்தை ஏற்று அங்கேயே சிறுது காலம் தங்கினார்.

மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள் அவளது பெயர் விஷ்ணுபிரியா பெயருக்கு ஏற்றார் போல் அவள் பகவான் விஷ்ணுவையே எப்போதும் பூஜித்து வந்தார். ஶ்ரீ சேஷத்ரதிலிருந்து விஷ்ணுவின் பிரதிநிதியாக ஒரு பாண்டா அரண்மனைக்கு வந்திருப்பதால் அவள் அவரது தேவைகளை அதிக அக்கறையோடு கவனித்து கொண்டாள். மேலும் பாண்டா தன் மனதினுள் விஷ்ணுபிரியா பகவான் ஜெகநாதருக்கு சமர்ப்பிக்க ஏதாவது கொஞ்சம் வெகுமதிகளை அவரது பிரதிநிதி என்ற முறையில் தன்னிடம் நிச்சயம் வழங்குவார் என்று நினைத்தார்.

இறுதியாக அந்த நாளும் வந்தது. பாண்டா பூரிக்கு திரும்ப ஆயத்தமானார். விஷ்ணுப்பிரியா பாண்டா தனது பயணத்திற்கு போதுமான பிரசாதத்துடன் கிளம்புவதை உறுதி செய்தாள். மரியாதையின் நிமித்தம் அவள் அவருக்கு 10 தங்க நாணயங்கள் கொடுத்தாள்.பாண்டா அவள் பகவான் ஜெகந்நாதருக்கு என்ன தரப் போகிறார் என்பதை அறிவதில் அதிக ஆவலாக இருந்தார்.

விஷ்ணுப்பிரியா பிரபு ஜெகந்நாதருக்கு பூஜா இலையில் (அதாவது தென்னிந்தியாவில் எழுதுவதற்கு பனை ஓலை பயன்படுத்தப்பட்டதைப் போல் ஒரிசாவில் பூஜா இலையை அதே நோக்கத்திற்காக பயன்படுத்தினார்கள்) ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தைப் ஒரு தங்க பேழையில் வைத்து பாண்டாவிடம் கொடுத்து பகவான் ஶ்ரீ ஜெகநாதரிடம் அதை கவனமாக சேர்க்கும்படி கூறினாள். குறைந்தபட்சமாக தங்க நாணயங்களை அல்லது தங்க நகைகள் அல்லது விலை உயர்ந்த ஆடைகளை கூட இல்லாமல் ஒரு இலையில் எழுதிய கடிதத்தை மட்டும் கொடுத்ததால் ஏமாற்றத்துடன். ஆச்சரியமடைந்தார்.

தனது கிராமத்தை அடைந்ததும் முதல் வேலையாக அக்கடிதத்தை தன் வீட்டின் பின்புறமுள்ள கோபோரோ குண்டாவில் (குப்பைத்தொட்டியில்) வீசி விட தீர்மானித்தார். அவர் தீர்மானித்தபடி கிராமத்தை அடைந்ததும் கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.

பாண்டா இரவு பிரசாதம் உண்டு உறங்கினார். நள்ளிரவில் பாண்டாவின் கனவில் பகவான் ஶ்ரீ ஜெகநாதர் தோன்றினார். தனது பிரியமான பக்தை தனக்களித்த கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீச உனக்கு யார் அதிகாரம் அளித்தது என்று கடிந்து கொண்டார். உனக்கு முக்கியமில்லாத எனது பக்தையின் கடிதத்தை நான் எனது இதயத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்றார். கண்விழித்ததும் பாண்டா பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரை தரிசிக்க கோவிலுக்கு ஓடினார். அங்கே கண்ணீர் மல்க தனது தவறுக்காக பிரபு ஜெகந்நாதரிடம் மன்னிப்பு வேண்டினார்.

அப்போது அவர் குப்பை தொட்டியில் வீசிய விஷ்ணு பிரியாவின் கடிதம் பிரபு ஜெகந்நாதரின் மார்பில் ஒட்டியிருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஜெகந்நாதரின் மார்பில் இருந்த மிகவும் முக்கியம் வாய்ந்த அந்த கடிதத்தை எடுத்து படித்தார் அதில்

ரத்னாகர ஸ்தப கிரிஹம் கிரிஹ்னிச பத்மா
தேவம் கிம் அபி பவதே புருஷோத்தமாய
அதிர பாம. நயனா ஹ்ரித மானசாய
தத்தம் மனோ யதுபதே ததிதம் க்ரிஹான்ன்ன

(எனது அன்பு பகவானே தங்க ஆபரணங்கள் இருக்கும் இடமே உங்கள் இருப்பிடம். மாதா லட்சுமி உங்கள் மனைவி. உங்களிடம் இல்லாத ஏதாவது ஒன்று என்னிடம் உள்ளதா என்று தயவு செய்துகூறுங்கள். அப்படி இருந்தது என்றால் கண்டிப்பாக அதை உங்களுக்கு சமர்ப்பிப்பேன். கோபியர்களின் மனதை திருடியவர் தாங்கள். ஓ யதுக்ளின் இறைவனே!!! என்னிடம் உங்களுக்காக உள்ளது என் மனம் ஒன்றே….அதை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்…. தயவுசெய்து அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.) என்று அதில் எழுதி இருந்தது.

இந்த உலகில் மிகவும் கடினமானது என்னவென்றால் மனதை இறைவனிடம் லயிக்க வைப்பது. அப்படி ஒருவர் இறைவனுக்காக தனது மனதை தருவதை விட மிகவும் விலை உயர்ந்த பொக்கிஷம் இவ்வுலகில் வேறேதுவும் இல்லை. அதனால் தான் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் விஷ்ணுப்பிரியா தேவியின் தூய பக்தியின் இந்த பரிசின் உயர்வை பாண்டாவுக்கு பிரபு ஜெகந்நாதர் தெளிவாக புரிய வைத்தார். இந்த நிகழ்வை எண்ணி பாண்டா மிகவும் பூரித்து போனார்.

இந்த விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதத்தை தங்க தகட்டில் பொரித்து பூரி ஜெகந்நாதர் கோவிலில் இன்றும் பாதுகக்கபட்டுவருகிறது.


மன்-மனா பவ மத்-பக்தோ
மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம்
ஆத்மானம் மத்-பராயண:

உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.

( ஶ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 9 பதம் 34 )

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question