Translation:
உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதை விட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது.
Purport:
பெருங்குடியில் பிறந்ததாகச் சொல்லிக் கொண்டு போலி தியானத்தில் காலம் கழிப்பவர்களும், ஆன்மீக முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டதாக பொய் வேடம் போடும் பிழைப்பாளர்களும் பலருண்டு. அர்ஜுனன் ஒரு போலியாவதை பகவான் கிருஷ்ணர் விரும்பவில்லை. சத்திரியர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை அர்ஜுனன் செய்ய வேண்டுமென்று பகவான் விரும்புகிறார். அர்ஜுனன் போர்த் தலைவனாகவும் இல்லறத்தானாகவும் திகழ்ந்ததால் தன்னுடைய நிலையிலேயே இருந்து, ஒரு கிரஹஸ்த சத்திரியனுக்குரிய தர்மங்களை நிறைவேற்றுவதே அவனுக்கு மிகச் சிறந்ததாகும். அத்தகைய செயல்கள் லௌகீக மனிதனின் இதயத்தை படிப்படியாகத் தூய்மையாக்கி, ஜடக் களங்கங்களிலிருந்து அவனை விடுவிக்கின்றன. வயிற்றுப் பிழைப்பிற்காக துறவினை ஏற்பது, பகவானாலோ வேறு எந்த மத நூல்களாலோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேல், உடலையும் ஆத்மாவையும் சேர்த்து வைத்துக் கொள்வதற்காவது செயலாற்றுதல் இன்றியமையாததாகும். ஜட இயல்புகளைத் தூய்மைப்படுத்தாத வரை தான் தோன்றித்தனமாக தொழிலைத் துறப்பது பயனற்றது. ஜடவுலகிலுள்ள அனைவரிடமும் பௌதிக இயற்கையை அடக்கியாள வேண்டுமென்ற அசுத்தமான சுபாவம் (புலனுகர்ச்சிக்கான சுபாவம்) உண்டு. இத்தகைய அசுத்தமான சுபாவங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறாக, விதிக்கப்பட்ட கடமைகளின் மூலம் தூய்மையடையாமல், செயல்களைத் துறந்து மற்றவர்களின் செலவில் வாழும் பெயரளவிலான ஆன்மீகவாதியாவதற்கு எவரும் ஒரு போதும் முயற்சி செய்யக் கூடாது.
Great