Wednesday, October 16

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 7 I Gita mahatmiya Chapter-7

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஏழாம் அத்தியாயத்தின் மஹிமை

சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தின் மஹிமையை பற்றி கூறப்போகிறேன். இதை கேட்பவர்கள், காதில் அமிர்தம் பாய்வது போல் உணர்வார்கள்”. 

    பாடலிபுத்ரா என்னும் பெரும் நகரத்தில், சங்குகர்ணா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வணிகம் செய்து பெரும் செல்வதை ஈட்டிவைத்திருந்தார். ஆனால் பகவானுக்கு எந்தவித பக்தி தொண்டும் செய்ததில்லை; அதேபோல் மூதாதையர்களுக்கு எந்த தர்பணமும் செய்ததில்லை. ஆனால் பல மன்னர்களை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து உபசரிக்கும் அளவிற்கு மிகுந்த செல்வம் அவரிடம் இருந்தது.

    ஒரு முறை அந்த பிராமணர், தன் குழந்தைகளுடனும் மற்ற உறவினர்களுடனும், தனக்கு நான்காவது திருமணம் ஏற்பாடு செய்வதற்காக புறப்பட்டனர். இருட்டியதும் ஒரு இடத்தில் ஓய்வெடுக்க முடிவு செய்தனர். அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கையில் ஒரு பாம்பு வந்து அந்த பிராமணரை கடித்து விட்டு சென்றுவிட்டது. வழியால் துடித்த அவரை கண்ட அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வைதியர்களையும், மந்திரவாதிகளை அழைத்தனர். ஆனால் ஒருவராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்திலேயே தன் உயிரை விட்டார் அந்த பிராமணர். இறந்த பின்னர் அவரது ஆத்மா ஒரு பிரேத சர்பமாக (பாம்பின் வடிவிலான ஆவியாக) அலைந்தது.

    ஏனென்றால் அவர் தன் வீட்டின் அருகில் தன் செல்வம் அனைத்தையும், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக புதைத்து வைத்திருந்தார். அதையே நினைத்துக்கொண்டிருந்தார். பிரேத சர்பமாக இருந்தாலும் அந்த இடத்திற்கு சென்று புதையலுக்கு காவலாக அங்கேயே இருந்தார். ஆவியின் வடிவில் மிகவும் துன்புற்ற அவர், அதிலிருந்து விடுபட எண்ணினார். ஆகையால் ஒரு நாள் இரவு தன் மகன்களின் கனவில் தோன்றி, தான் இந்த இல்லத்தின் அருகில் புதைத்து வைத்துள்ள செல்வத்திற்கு காவலாக பாம்பின் வடிவில் ஆவியாக இருப்பதாகவும், தன்னை விடுவிக்குமாறும் வேண்டினார். பேராசை கொண்ட இவரது சோம்பேறி மகன்கள், காலையில் எழுந்ததும் தாங்கள் கண்ட கனவு பற்றி ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டார்கள்.

    ஆனால் ஒரு மகன் மட்டும் கடப்பாரையை எடுத்து கொண்டு தன் தந்தை கூரிய இடத்திற்கு வந்தான். தந்தை கூறிய இடத்தை மிக சரியாக கண்டுபிடிக்க தெறியாத அவன் பேராசையின் காரணமாக அனைத்து இடங்களையும் தோண்ட ஆரம்பித்தான். அப்போது ஒரு பாம்புப்புத்தை பார்த்தான். அதை இடிக்க ஆரம்பித்தான். அப்போது ஒரு பாம்பு சீரியபடி வெளியே வந்து அவனிடம், “ஏ முட்டாளே! யார் நீ? எதற்காக இங்கு வந்துள்ளாய்? உன்னை அனுப்பியது யார்? எதற்காக இந்த இடத்தை தோண்டுகின்றாய்? உடனடியாக நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறு” என்று சீறியது. அதற்கு அவன், “நான் தான் உங்கள் மகன். என் பெயர் சிவா. இந்த இடத்தில் புதையல் இருப்பது போல் நேற்று இரவு கனவு கண்டேன். ஆகையால் அதை எடுக்கவே இங்கு வந்தேன்” என்று பதிலளித்தான்.

    இதை கேட்ட பாம்பு சிரிக்க ஆரம்பித்தது. பின்பு அவனிடம், “நீ என் மகனானால் ஏன் என்னை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் மிகவும் பேராசைப்பட்டதால் தான், இறப்பிற்கு பிறகு இந்த நிலைமையை அடைந்தேன். இப்போது நீயும் என்னை போலவே இருக்கிறாய்” என்று கூறியது. உடனே தன் தவறை உணர்ந்த மகன், தந்தையிடம், “நான் எவ்வாறு தங்களை விடுவிப்பது?” என்று கேட்டான். அதற்கு பாம்பு, “எந்த விதமான தான தர்மத்தினாலோ, தவத்தினாலோ, யாகத்தினாலோ என்னை விடுவிக்க முடியாது. ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தை படிப்பதன் மூலமாக மட்டுமே நான் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவேன். தயை கூர்ந்து என்னுடைய திதி அன்று ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தை தினமும் வாசிக்கும் பழக்கமுடைய ஒரு பிராமணரை அழைத்து அவருக்கு அன்னதானம் அளித்து பின்னர் அவரை வாசிக்க சொல்வாயாக” என்று கூறியது.

    தன் தந்தை கூறியபடியே சிவாவும் அவன் தம்பியும் ஒரு உன்னத பிராமணரை அழைத்து அவருக்கு அன்னதானம் அளித்தார்கள். பின்னர் அந்த பிராமணர், ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போதே சங்குகர்ணா பிரேதத்தின் உடலை துறந்து நான்கு கரங்கள் உடைய விஷ்ணுவின் ரூபத்தை அடைந்தார். தன் மகன்களுக்கு ஆசி வழங்கிய அவர், புதையல் இருக்கும் இடத்தையும் அவர்களுக்கு தெரிவித்துவிட்டு வைகுந்தத்திற்கு புறப்பட்டார்.

    நடந்த நிகழ்வுகளால் மிகவும் தூய்மையடைந்து கிருஷ்ணா பக்தியில் நிலைபெற்ற அவரது மகன்கள், புதையலை எடுத்து அனைத்து செல்வங்களையும் கோவில்கள் கட்டுவதிலும், அன்னதானம் செய்வதிலும் கிணறுகள் வெட்டுவதிலும் செலவிட்டனர். அதோடு அல்லாமல் அவர்களும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தை படித்து வந்தனர். வெகு விரைவில் கிருஷ்ணரின் பாத கமலங்களில் சரணடைந்தனர்.

    சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தின் இந்த சிறப்பினை யார் கேட்கிறார்களோ, அவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question