Friday, September 20

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 17 I Gita mahatmiya Chapter-17

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினேழாம் அத்தியாயத்தின் மஹிமை

    சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தின் எல்லையற்ற மகிமைகளை நீ கேட்டறிந்தாய். இப்போது பதினேழாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி கூறப்போகிறேன்”. 

    அரசர் காடபஹூவின் மகனான இளவரசரிடம் துஷ்சன் என்ற முட்டாள் சேவகன் இருந்தான். அவன் ஒரு முறை இளவரசரிடம் தான் அந்த மத யானை மீது ஏறி சவாரி செய்வதாக சவால் விட்டான். அதன் படியே அவன் யானை மீது ஏறி அமர்ந்தான். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும், அந்த யானை மிகவும் ஆபத்தானது என்றும் ஆகையால் அவனை கிழே இறங்குமாறும் அவனிடம் வேண்டினர். அனால் துஷ்சன் அதை பொருட்படுத்தாமல் மிகுந்த உரத்த குரலில் கத்தியும் அங்குசத்தால் பலமாக குத்தியும் யானையை முன்னேறி செல்லுமாறு ஆணையிட்டான். பொறுமை இழந்த யானை, மதம் பிடித்து வேகமாக ஓட ஆரம்பித்தது. நிலை தடுமாறிய துஷ்சன், யானையின் மீதிருந்து தரையில் வீழ்ந்தான். கிழே விழுந்த அவனை, யானை தன் காலால் மிதித்து கொன்றது. அதன் பிறகு துஷ்சன் ஒரு யானையாக சிம்மலதீபின் அரண்மனையில் பிறந்தான். அந்த அரசர், வேறொரு அரசருக்கு அந்த யானையை பரிசாக கொடுத்தார். அதை அவர் ஒரு புலவருக்கு பரிசாக வழங்கினார். அந்த புலவர் மால்வாவின் அரசரிடம் அந்த யானையை நூறு பொற்காசுகளுக்கு விற்றார்.

    ஆனால் சிறிது காலத்திலேயே அந்த யானை ஒரு குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டது. ஆகையால் உணவருந்தவும், தண்ணீர் குடிக்கவும் கூட மறுத்தது. யானை பாகன்கள் இந்த செய்தியை உடனே அரசரிடம் தெரிவித்தனர். அரசர் உடனடியாக யானை கொட்டகைக்கு, சிறந்த கால்நடை மருத்துவருடன் சென்றார். அப்போது அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், யானை பேச துவங்கியது. “அரசே! நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர். அனைத்து வேதங்களையும் அறிந்தவர். பகவான் விஷ்ணுவை எப்போதும் தியானித்து கொண்டிருப்பவர். ஆகையால் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு ஆத்மாவிற்கு மருத்துவரோ, மருந்துகளோ, தானமோ , தர்மமோ எதுவும் பலனளிக்கப்போவதில்லை என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் உண்மையிலேயே எனக்கு உதவ வேண்டும் என்று எண்ணினால் , தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாத்தை படிப்பவரை என் முன் கொண்டு வாருங்கள்” என்றது.

    யானையின் வேண்டுகோள் படி, தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தை படிக்கும் ஒரு பெரும் பக்தரை கொண்டு வந்தார். அந்த பக்தர் யானையின் முன்பு நின்று பதினேழாம் அத்தியாயத்தின் ஸ்லோகங்களை உச்சரித்தபடியே, யானையின் மீது தண்ணீர் தெளித்தார். யானை அந்த நொடியே தன் உயிரை விட்டு, பகவான் விஷ்ணுவின் நான்கு கரம் ரூபத்தை அடைந்தது. புஷ்பக விமானம் மூலம் வைகுந்தம் செல்ல தயாராக இருந்த யானையிடம், மால்வாவின் அரசர், அதன் முற்பிறவி பற்றி வினவினார். தான் முற்பிறவியில் துஷ்சன் ஆக பிறந்து இறந்த கதையை கூறி முடித்த யானை, வைகுந்தம் நோக்கி புறப்பட்டது. சிறந்த மனிதனான மால்வாவின் அரசரும், அன்றிலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தை தினமும் படித்து வந்தார். வெகு விரைவில் அவரும் பகவானின் திருப்பாதங்களை அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question