Friday, September 20

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 16 I Gita mahatmiya Chapter-16

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினாறாம் அத்தியாயத்தின் மஹிமை

 சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்”. 

    குஜராத்தில் சவுராஷ்டிரா என்ற நகரம் உள்ளது. அதை ஆட்சி செய்த மன்னர், காடபஹூ, இன்னொரு தேவேந்திரரை போல வாழ்ந்து வந்தார். அவர் அரிமாந்தனா என்ற பெயருடைய ஒரு ஆண் யானையை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த பற்று கொண்டார். ஆனால் அந்த யானைக்கு தலைகனம் மிகவும் அதிகம். ஒரு நாள் மதம் பிடித்த அந்த யானை, சங்கிலியை அறுத்தெறிந்து தன் கொட்டகையை நாசப்படுத்தியது. அதோடல்லாமல் அங்கும் இங்கும் ஓடி மக்களை துரத்தியது. மக்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து ஓடிஒளிந்தனர். யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலாத யானை பாகன்கள் இந்த செய்தியை அரசரிடம் தெரிவித்தனர். மத யானைகளை கையாளும் வித்தை தெரிந்திருந்த அரசர் உடனடியாக இளவரசருடன் யானை இருக்கும் இடத்திற்கு விரைந்தார். அதற்குள் அந்த யானை பலரை தன் காலால் மிதித்திருந்தது. மேலும் பலரை தாக்க ஓடிக்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் உயிர் பயத்தால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரே ஒரு பிராமணர் மட்டும் தன் ஸ்நானத்தை முடித்து விட்டு அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் “அபயம் (பயம் அற்ற)” என்று தொடங்கும் பதினாறாம் அத்தியாயத்தின் முதல் மூன்று ஸ்லோகங்களை உச்சரித்து கொண்டே நடந்து வந்தார். ஸ்லோகம் உச்சரிப்பதில் கவனம் செலுத்திய பிராமணர், யானையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மக்கள் அவரை தடுக்க நினைத்தனர். ஆனால் பிராமணர் அவர்களை கவனிக்கவில்லை. தன்னை நோக்கி ஒரு பிராமணர் நடந்து வருவதை பார்த்த யானை, தன் அனைத்து கோபத்தையும் ஒரு நொடியில் விட்டு விட்டு, அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தது. யானையின் அருகில் சென்ற பிராமணர், அதனை சிறிது நேரம் தடவி கொடுத்து விட்டு அங்கிருந்து தன் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நடந்த அற்புதத்தை பார்த்த அரசரும் மக்களும் திகைத்தனர். அரசர் உடனடியாக அந்த பிராமணரின் காலில் விழுந்து வணங்கி, “பிராமணரே! இவ்வளவு மன அமைதியும் சக்தியும் தாம் என்ன தவம் செய்து பெற்றீர்கள்?” என்று வினவினார். பிராமணர், “தினமும் நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்திலிருந்து சில ஸ்லோகங்களை வாசிப்பேன்” என்று கூறினார். 

    சிவபெருமான் கூறினார், “அரசர், பிராமணரை அரண்மனைக்கு அழைத்து, அவரை நன்று உபசரித்து அவருக்கு நூறு பொற்காசுகள் தக்ஷணையாக வழங்கி, அவரிடம், தனக்கும் ஸ்ரீமத் பகவத் கீதையின் அந்த ஸ்லோகங்களை கற்றுத்தருமாறு வேண்டினார்.

    சிறிது காலத்திற்கு ஸ்லோகங்களை தினந்தோறும் வாசித்த பிறகு, ஒரு நாள் அரசர், தன் காவலர்களுடன் அந்த மத யானை அடைத்து வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு சென்றார். அங்கிருந்த யானை பாகன்களிடம் யானையை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அதை கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். யானை மீண்டும் மதம் பிடித்து ஓடி அனைத்தையும் நாசப்படுத்த போகிறது என்று அனைவரும் பயந்தனர். ஆனால் அரசர் அந்த யானையின் முன்பு சென்றவுடன், அது மண்டியிட்டு அரசரை வணங்கியது. இதை கண்டு மகிழ்ந்த அரசர், அரண்மனைக்கு திரும்பி தன் மகனை அடுத்த அரசராக அறிவித்து விட்டு, சிறிதும் தாமதிக்காமல் நாட்டை துறந்து காட்டிற்கு சென்றார். அங்கு ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தை தினமும் வாசித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார். இதன் மூலம் வெகு விரைவாக பகவானின் பாத கமலங்களை அடைந்தார்.

    எவரொருவர், ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தை தினமும் வாசிக்கிறார்களோ, அவர் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், பகவானின் திருப்பாதங்களை சென்றடைவது உறுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question