பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பத்தாம் அத்தியாயத்தின் மஹிமை
சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். இது ஆன்மீக உலகத்திற்குள் செல்ல உதவும் ஏணி ஆகும் “.
காசீபுரி என்னும் ஊரில் தீரதீ என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். நந்திதேவன் எவ்வாறு எனக்கு மிகவும் பிரியமானவனோ அதேபோல் அவரும் எனக்கு மிகவும் பிரியமானவர். அவர் மிகவும் அமைதியானவர். அவருடைய புலன்கள் அனைத்தும் பகவான் கிருஷ்ணரின் சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக நான் கூடவே செல்வேன். இதை கவனித்த எனது சேவகனான பிரிகிரிதி, என்னிடம், “சிவபெருமானே, தாங்களே வந்து அன்போடு பாதுகாக்குமளவிற்கு அந்த பிராமணர் என்ன புண்ணிய காரியங்களையும் பாவங்களையும் செய்தார்?” என்று கேட்டான். அதற்கு நான், “ஒருமுறை கைலாய பர்வதத்தில், உத்தியான என்ற நந்தவனத்தில் நான் நிலவொளியில் அமர்ந்திருந்தேன். அப்போது திடீரென்று வீசிய காற்று, அங்கிருந்த மரங்களையெல்லாம் ஆடச்செய்து பெரும் சப்தத்தை ஏற்படுத்தியது. அப்போது தான் நான் கவனித்தேன், கார்மேக வண்ணத்தில் ஒரு பெரிய பறவை கயிலாயத்தை சுற்றி சுற்றி பறந்து கொண்டிருந்தது. அதன் இறகுகளிலிருந்து புறப்பட்ட காற்றின் காரணமாகத்தான் மரங்கள் ஆட்டம் கண்டன. கிழே வந்த பறவை, சிவபெருமானை வணங்கி விட்டு, “மஹாதேவரே! அணைத்து புகழும் உங்களுக்கே உரித்தாகுக! தாங்களே அனைவருக்கும் அடைக்கலம் ஆவீர்! உங்களுடைய புகழுக்கு எல்லையே இல்லை. புலன்களை கட்டுப்படுத்திய அணைத்து பக்தர்களுக்கும் தாங்கள் பாதுகாப்பாளர் ஆவீர். தாங்களே தலைசிறந்த வைஷ்ணவர். பிரஹஸ்பதி போன்ற சாதுக்கள் தங்களை புகழ்ந்த வண்ணம் உள்ளார். ஆயிரம் தலைகளை கொண்ட அனந்த சேஷனாலேயே தங்களது புகழை கூறமுடியாத போது, சாதாரன பறவை நான். நான் எவ்வாறு தங்களை புகழ முடியும்” என்று கூறியது.
அந்த பறவை இவ்வாறு கூறியதும் நான், “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? நீ பார்ப்பதற்கு அன்னப்பறவை போல் இருக்கிறாய். ஆனால் உன் நிறம் காகத்தை போல் உள்ளதே?” என்று வினவினேன். அதற்கு அந்த பறவை, “நான் பிரம்மாவின் வாகனமாவேன். என்னுடைய இந்த நிறம் எப்படி வந்தது என்று நான் உங்களுக்கு விளக்குகிறேன். நான் எடுத்துக்கொண்டு வந்திருக்கும் இந்த தாமரை, சவுராஷ்டிரா என்னும் ஊருக்கு அருகில் இருக்கும் குளத்தில் உள்ளது. அந்த குளத்தில் சிறுது நேரம் நான் விளையாடினேன். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட எண்ணி பறக்க ஆரம்பித்தேன். ஆனால் திடீரென்று கீழே விழுந்து விட்டேன். தரையில் விழுந்ததும் வெண்மை நிறத்தில் இருந்த நான் காகத்தின் நிறத்தை பெற்றேன். அப்போது நான் எவ்வாறு கிழே விழுந்தேன் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், குளத்தில் உள்ள தாமரை பேச துவங்கியது. அது, ” அன்னப்பறவையே, எழுந்திரு, நீ ஏன் இந்த நிறத்தை பெற்றாய் என்று நான் உனக்கு கூறுகிறேன்” என்று கூறியது. நானும் எழுந்து குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றேன்.
அங்கு ஐந்து அழகான தாமரை மலர்கள் இருந்தன. அவற்றிலிருந்து ஒரு அழகான பெண் வெளியே வந்தாள். நான் அவளை வணங்கிவிட்டு, என்னுடைய நிறத்திற்கான காரணத்தை கேட்டேன். அதற்கு அவள், “நீ பறக்க முற்பட்ட போது என் மீது பறந்தாய். அந்த அபராதத்தின் காரணமாகவே, நீ இந்த நிறம் பெற்றாய். நீ கிழே விழுந்ததை பார்த்த நான் மனமுருகி உன்னை இங்கு அழைத்தேன். நான் என் வாயை திறந்தால் அதிலிருந்து வரும் நறுமணம், ஏழாயிரம் தேனீக்களை ஒரே சமயத்தில் விடுவித்து சொர்கத்திற்கு அனுப்பும் வல்லமை பெற்றவள். பறவைகளின் அரசனே, நான் இந்த அற்புத சக்தியை எவ்வாறு பெற்றேன் என்று உனக்கு விளக்குகிறேன்.
மூன்று ஜென்மங்களுக்கு முன்னால், நான் ஒரு பிராமண குடும்பத்தில் சரோஜவதனா என்ற பெயருடன் பிறந்தேன். என் தந்தை எனக்கு எவ்வாறு கற்புடனும் தூய்மையுடனும் இருக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். நானும் திருமணத்திற்கு பிறகு, என் கணவருக்கு தூய்மையுடன் பணிவிடை செய்து வந்தேன். ஆனால் ஒரு நாள் ஒரு மைனாவை பார்த்த நான், என் வேலையில் கவனம் செலுத்த மறந்து விட்டேன். இதை கவனித்த என் கணவர், அடுத்த பிறவியில் நான் மைனாவாக பிறக்க வேண்டும் என்று எனக்கு சாபமிட்டார்.
நானும் அடுத்த பிறவியில் மைனாவானேன். அனால் எனது தூய்மையும் கணவருக்கு செய்த பணிவிடையும் பலனளிக்கும் விதமாக, நான் ஒரு ஆசிரமத்தில் சாதுகளால் வளர்க்கப்பட்டேன். அங்கு ஒரு சாதுவின் மகள் என்னை கவனித்துக்கொள்வார். ஆசிரமத்தில் தினமும் காலையும் மாலையும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தை அனைவரும் வாசிக்கும்போது நானும் கவனத்துடன் கேட்பேன். இதன் பலனாக, அடுத்த பிறவியில் பத்மாவதி என்ற பெயருடன் ஒரு அப்சரஸாக சொர்க்கத்தில் பிறந்தேன். ஒரு முறை பூலோகத்திற்கு புஷ்பக விமானம் மூலமாக வந்த நான், இந்த குளத்தின் அழகையும் இங்குள்ள தாமரை மலர்களின் அழகையும் பார்த்து மயங்கி குளத்தில் என்னை மறந்து விளையாட ஆரம்பித்தேன்.
அப்போது அங்கு வந்த துருவாச முனிவர் என்னை நிர்வாணமாக பார்த்துவிட்டார். அவருடைய சாபத்திற்கு பயந்து நான் தாமரை வடிவம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய கரங்கள் இரண்டு தாமரைகளாகவும், என்னுடைய கால்கள் இரண்டு தாமரைகளாகவும் என்னுடைய உடம்பு ஒரு தாமரையாகவும் – ஆகமொத்தம் ஐந்து தாமரை மலர்களாக நான் மாறினேன். இருப்பினும் மிகவும் கோபமுற்ற துருவாச முனிவர், “மிகவும் பாவமிக்க பெண்ணே, நீ இந்த தாமரை வடிவிலேயே நூறு வருடங்கள் இருப்பாய்” என்று சாபமளித்து சென்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. இன்று நீ என் மீது பறந்ததால் நான் சாப விமோச்சனம் பெற்றேன். ஆனால் நீ கிழே விழுந்து கருப்பாகி விட்டாய். நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தை கூறப்போகிறேன். என் வாயால் நீ அதை கேட்டாயானால் நீயும் இந்த நிலையிலிருந்து விடுபடுவாய்” என்று கூறினாள். அதன் பிறகு பத்மாவதி ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தை அன்னப்பறவைக்கு வாசித்து முடித்த பிறகு, ஒரு புஷ்பக விமானத்தில் ஏறி சென்று விட்டாள். நான் உங்களை காண கைலாயத்திற்கு வந்துவிட்டேன்” என்று அன்னப்பறவை தன் கதையை கூறி முடித்தது.
சிவபெருமான் கூறினார், “என்னிடம் தன் கதையை கூறி முடித்த அன்னப்பறவை, தன் உடலை விட்டு அடுத்த பிறவியில் திரபௌதி என்னும் பிராமணராக பிறந்தார். அந்த பிராமணர் தன் சிறுவயதிலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தை தொடர்ந்து படித்து வருகிறார். அவரின் வாயிலிருந்து யாரேனும் அவர் பத்தாம் அத்தியாயத்தை படிக்கும்போது கேட்டால், கேட்பவர் ஸ்ரீ விஷ்ணுவின் தரிசனத்தை நிச்சயம் பெறுவார். கேட்பவர் பிராமணரை கொன்ற பாவியாக இருந்தாலும், பகவான் விஷ்ணு சங்கு சக்கரத்தோடு அவருக்கு காட்சியளிப்பார். இந்த காரணத்திற்காகத்தான் நான் திரபௌதிக்கு பாதுகாப்பாக இருக்கிறேன்” என்று சிவபெருமான் கூறினார்.
எனதன்பு பார்வதியே, ஒருவர் ஆணோ பெண்ணோ, சாந்நியாசியோ கிரஹஸ்தரோ, எந்த நிலையிலிருந்தாலும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தை படித்து வந்தால் பகவான் விஷ்ணுவின் தரிசனம் நிச்சயம் கிட்டும்.