Friday, March 29

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 11 I Gita mahatmiya Chapter-11

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினோராம் அத்தியாயத்தின் மஹிமை

சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். இதன் அனைத்து மகிமைகளையும் கூற இயலாது. ஏனெனில் ஆயிரக்கணக்கான கதைகள் இதற்கு உதாரணம். ஆகையால் நான் ஒரே ஒரு கதையை மட்டும் கூறுகிறேன். 

    ப்ரணிதா நதிக்கரையிலுள்ள மேகங்காரா என்னும் ஊரில் ஜெகதீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள ஜெகதீஸ்வரர் கரத்தில் வில்லேந்தியபடி காட்சியளிப்பார். அந்த ஊரில் சுனந்தர் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். மிகவும் தூய்மையான அவர், தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவராவார்.

    சுனந்தர் தினமும் ஜெகதீஸ்வரர் முன்னால் அமர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை படித்துக்கொண்டே பகவானின் விஸ்வரூபத்தை தியானிப்பார். இதன் மூலம் தன் புலன்களை கட்டுப்படுத்தி எப்பொழுதும் ஜெகதீஸ்வரரை தியானிக்கும் பக்குவத்தை பெற்றார். 

    ஒருமுறை சுனந்தர், கோதாவரி நதிக்கரையிலுள்ள அனைத்து புண்ணிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். வ்ரஜ தீர்த்தம் என்னும் இடத்தில ஆரம்பித்து ஒவ்வொரு இடத்திற்கும் சென்று, அங்கு புனித நீராடிவிட்டு, அங்குள்ள பிரசித்தி பெற்ற விக்கிரஹங்களை வழிபாடு செய்தார். அந்த பயணத்தின் ஒரு பகுதியாக விவான் மண்டேலா என்ற இடத்திற்கு வந்தார். அவரும் அவருடன் வந்தவர்களும் தங்குவதற்கு இடம் தேடுகையில், நகரத்தின் நடுவில் ஒரு தர்மஸ்தலா இருப்பதை அறிந்து அங்கு இரவு ஓய்வெடுத்தார்.

    அடுத்த நாள் காலை சுனந்தர் எழுந்ததும், தன்னோடு வந்தவர்கள் யாரையும் அங்கு காணவில்லை என்பதை உணர்ந்து அவர்களை தேட ஆரம்பித்தார். அப்போது அங்கு வந்த அந்த ஊர்த்தலைவர், சுனந்தரின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்று, பின்னர், “ஓ சாதுவே, உங்களுடன் வந்தவர்கள் எங்கு சென்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்கு தெரியும். உங்களை போல் தூய்மையான பக்தர் யாருமில்லை. தயவுசெய்து எங்கள் ஊரிலேயே தங்கிவிடுங்கள்” என்று கூறினார்.

    ஊர்தலைவரின் வேண்டுதலை ஏற்ற சுனந்தர் சிறிது காலம் அங்கேயே தங்க முடிவு செய்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்த ஊர்த்தலைவர், சுனந்தர் தங்குவதற்கும் பக்தித்தொண்டினை செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அதோடு அவருடன் இரவு பகலாக இருந்து சேவையும் செய்தார். எட்டு நாட்கள் கழிந்த பிறகு, திடீரென்று ஒருவர் அழுதுகொண்டே வந்து, “ஓ பிராமணரே, நேற்று இரவு ஒரு ராட்சஸன் வந்து என் மகனை தின்றுவிட்டான்” என்று கூறினார். சுனந்தர், “அந்த ராட்சஸன் எங்கே இருக்கிறான்? அவன் எப்படி உங்கள் மகனை தின்றான்?” என்று கேட்டார்.

    அதற்கு அவர், “இந்த ஊரில் மிகவும் பயங்கரமான ராட்சஸன் ஒருவன் உள்ளான். அவன் தான் நினைத்த போதெல்லாம் ஊர் மக்களை தின்று வந்தான். ஒரு நாள் நாங்கள் அனைவரும் அந்த ராட்சசனிடம் சென்று, எங்களை காப்பாற்றும்படியும் அதற்கு பதிலாக நாங்கள் அவனுக்கு தினமும் உணவு தருவதாகவும் வேண்டினோம். இதற்கு ராட்சசனும் சம்மதித்தான். அதன் காரணமாகவே நாங்கள் ஊரின் நடுவில் தர்மஸ்தலம் ஒன்றை கட்டினோம். இந்த ஊருக்கு யார் புதிதாக வருகிறார்களோ அவர்களை அங்கு தங்க வைப்போம். அவர்கள் தூங்கிய பின்னர் ராட்சஸன் அங்கு சென்று அவர்களை தின்றுவிடுவான். இவ்வாறாக நாங்கள் எங்களை ராட்சசனிடமிருந்து காத்துக்கொண்டோம். ஆனால் நீங்கள் தங்கிய இரவன்று ராட்சஸன் உங்களையும் உங்களுடன் வந்தவர்களையும் உண்ணவில்லை. இப்போது என் மகன் எப்படி ராட்சசனுக்கு இறையானான் என்று கூறுகிறேன்.

    நேற்று இரவு என் மகனுடைய நண்பன் இந்த ஊருக்கு வந்திருந்தான். அவனை வரவேற்க சென்ற என் மகன், அவன் நண்பனுடனேயே தர்மஸ்தலாவில் தங்கிவிட்டான். இதையறிந்த நான் மிகவும் பதற்றத்துடன் என் மகனை தேடினேன். ஆனால் நான் செல்வதற்குள், ராட்சஸன் என் மகனையும் அவன் நண்பனுடன் சேர்த்து தின்றுவிட்டான். இன்று காலை நான் ராட்சசனை சந்தித்து, “நீ ஏன் மற்றவர்களுடன் ஏன் மகனையும் தின்றாய்? எங்களை காப்பதாக வாக்களித்தாயல்லவா. ஆகையால் ஏன் மகனை திரும்ப கொடு” என்றேன். அதற்கு அந்த ராட்சஸன், “உன் மகன் மற்றவர்களோடு தர்மஸ்தலாவில் இருப்பான் என்று எனக்கு தெரியவில்லை. ஆகையால் தான் அவனையும் சேர்த்து தின்றுவிட்டேன். உன் மகன் உனக்கு உயிரோடு வேண்டுமென்றால், நான் இந்த ராட்சசனின் உடலிலிருந்து விடுதலை பெற வேண்டும். அது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை தினமும் படிக்கும் ஒருவரின் கருணையால் மட்டுமே முடியும்” என்று பதிலளித்தது.

    அதோடல்லாமல், அந்த ராட்சசன், “இந்த ஊரில் அவ்வாறு ஒரு பிராமணர் இருக்கிறார். அவர் ஒருமுறை இந்த தர்மஸ்தலத்திற்கு வந்திருக்கிறார். அவர் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை படிப்பதால் என்னால் அவரை உண்ண முடியவில்லை. அவர் தினமும் ஏழு முறை ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை படித்துவிட்டு என் மீது தீர்த்தம் தெளித்தாரானால் நான் இந்த ராட்சசன் உடலிலிருந்து விடுபட முடியும்” என்றும் கூறியது. ஆகவே தான் நான் உங்களை தேடி வந்தேன் என்று அவர் கூறினார்.

    இதை கேட்ட சுனந்தர், “ராட்சசனுடைய உடலை பெருமளவிற்கு அவன் என்ன பாவம் செய்தான்?”என்று வினவினார். அதற்கு வந்தவர், “சில காலம் முன்பு இந்த ஊரில் ஒரு விவசாயி இருந்தார். ஒரு நாள் அவர் தன் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, ரோட்டில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவரை ஒரு கழுகு தாக்குவதை பார்த்தார். ஆனால் அவரை காப்பாற்ற முற்படவில்லை. அதே நேரம் சற்று தூரத்தில் ஒரு யோகி வந்துகொண்டிருந்தார். அவர் இக்காட்சியை கண்டதும் வேகமாக ஓடிவந்தார். இருப்பினும் தான் வருவதற்குள் அந்த மனிதனை கழுகு வெகுவாக தாக்கிவிட்டு சென்றுவிட்டது. இதை பார்த்த யோகி மிகவும் கோபத்துடன், விவசாயிடம் பேச துவங்கினார், “ஒருவன் திருடனாலோ, விஷ பூச்சிகளாலோ, நெருப்பாலோ, ஆயுதங்களால் தாக்கப்படும்போது, எவன் ஒருவன் தனக்கு அதை தடுக்கும் வலிமையையும் காப்பாற்றும் திறனும் இருந்தும் கூட கண்டும் காணாதது போல இருக்கிறானோ, அவன் நிச்சயமாக யமராஜாவால் தண்டிக்கப்படுவான். நரகத்தில் பல வருடங்கள் சித்திரவதை அனுபவித்த பின்னர் ஓநாயாக பிறக்கிறான். அதேபோல் உற்ற சமயத்தில் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களை பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக, தாழ்ந்த குளத்தில் பிறந்த ஒருவனோ கொடூர அரசனோ, ஒரு பசுவை வதைக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தால், அவர் நிச்சயம் பகவான் விஷ்ணுவை சென்றடைவார். கல் நெஞ்சம் கொண்ட விவசாயே, கழுகு அந்த மனிதனை தாக்குவதை நீ பார்த்தும் உதவி செய்ய நீ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகையால் நீ ராக்ஷசனாக பிறக்க வேண்டும் என்று நான் உனக்கு சாபமிடுகிறேன்” என்று கூறி முடித்தார் யோகி.

    பயந்துபோன விவசாயி, “யோகியே, இரவு முழுவதும் கண் விழித்து வயலை பாதுகாத்ததால்தான் நான் மிகவும் சோர்வாக இருந்தேன். ஆகையால்தான் எனக்கு அவரை காப்பாற்ற சக்தியில்லாமல் போனது. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த சாபத்திலிருந்து நான் எவ்வாறு முக்தி பெறுவது?” என்று வினவினார். யோகி, “ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை தினமும் படிக்கும் ஒருவர் உன் மீது தண்ணீரை தெளித்தாரானால் நீ இந்த சாபத்திலிருந்து விடுபடுவாய்” என்றார்.

    தன் மகனை காப்பாற்ற வேண்டி வந்தவர், “சுனந்தரே, நீங்கள் வந்து அந்த ராட்சசன் மீது தண்ணீர் தெளித்தீர்கள் என்றால் தான் அவன் விடுபட்டு என் மகனையும் திருப்பி கொடுப்பான். ஆகையால் தயை கூர்ந்து என்னோடு வாருங்கள்” என்று கூறினார். ராட்சசனுடைய கதையை கேட்ட சுனந்தர், அங்கு வந்தவரோடு ராட்சசனிருக்கும் இடத்திற்கு விரைந்தார். அங்கு ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை படித்தவாறே ராட்சசன் மீது தண்ணீர் தெளித்தார். உடனடியாக ராட்சசன், நான்கு கரங்கள் கொண்ட பகவான் விஷ்ணுவின் ரூபத்திற்கு மாறினான். அவன் மட்டுமல்லாது இதனை நாட்கள் அவன் தின்ற ஆயிரக்கணக்கான மனிதர்களும் பகவான் விஷ்ணுவை போன்று நான்கு கரங்கள் கொண்ட ரூபத்தை அடைந்தார்கள். அப்போது அங்கு வந்த புஷ்பக விமானத்தில் அவர்கள் அனைவரும் ஏறி வைகுந்தத்திற்கு புறப்பட தயாரானார்கள்.

    நடப்பவை அனைத்தையும் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதர், தன் மகன் எங்கே என்று ராட்சசனிடம் வினவினார். ராட்சசன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். அதோடு புஷ்பக விமானத்தில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரை காண்பித்து இது தான் உன் மகன் என்று கூறினான். உடனே அந்த மனிதர், “அன்பு மகனே, என்னோடு வா. நம் வீட்டிற்கு செல்லலாம்” என்றார். அதற்கு அந்த மகன், “ஐயா, நீங்கள் எனக்கு இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல. பல ஜென்மங்களில் தந்தையாக இருந்துளீர்கள். நானும் உங்களுக்கு தந்தையாக இருந்துள்ளேன். ஆனால் சுனந்தரின் கருணையால் நான் இப்போது பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு என்னுடைய நித்தியமான இல்லத்திற்கு சொல்லப்போகிறேன். ஆகையால் நான் உங்களுடன் வர இயலாது. நீங்களும் சுனந்தரின் பாதங்களில் சரணடைந்து அவரிடமிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை கேளுங்கள். அப்போது நிச்சயமாக நீங்களும் வைகுந்ததை வந்தடையலாம். இதில் சந்தேகமேயில்லை. ஸ்ரீமத் பகவத் கீதை, குருக்ஷேத்திரத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு வழங்கப்பட்ட திவ்யமான அறிவுரையாகும். இதை கேட்பதும் வாசிப்பதும் மட்டுமே நம் அனைவரையும் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிக்கும் ஒரே வழி” என்று கூறினான்.

    சிவபெருமான் கூறினார், “மகன் இவ்வாறு கூறியதும் அந்த புஷ்பக விமானம் வைகுந்தம் நோக்கி சென்றுவிட்டது. அவனுடைய தந்தை, தன் மகனின் அறிவுரைப்படி, சுனந்தரிடமிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை கேட்டறிந்து தினமும் படித்து வந்தார். சிறிது காலத்தில் அவர்களும் வைகுந்ததை சென்றடைந்தார்கள். எனதன்பு பார்வதியே, என்னிடமிருந்து நீ கேட்டறிந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயம் அனைத்து பாவங்களையும் போக்க கூடியதாகும்.

+4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question