Friday, April 19

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 1 (சுஷர்மா வின் கதை) Gita mahatmiya Chapter-1 (Story of Shusarma)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 1 பற்றிய வர்ணனை

பார்வதி தேவி கூறினார், “என் பிரியமான கணவரே, நீர் அணைத்து ஆன்மீக உண்மைகளையும் அறிந்தவர். உம்முடைய கருணையால் நான், முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய சிறப்புகள் அனைத்தையும் கேட்டறிந்தேன். இப்பொழுது ஸ்ரீமத் பகவத் கீதையை பற்றிய சிறப்புகளை பற்றி கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உரைக்கப்பட்ட பகவத் கீதையையும் அதன் சிறப்புகளையும் கேட்பதால் ஒருவருக்கு பகவான் கிருஷ்ணரின் மீதுள்ள பக்தி அதிகரித்துக்கொண்டேயிருக்கும்”. 

    சிவபெருமான் கூறினார், “யாருடைய உடல் கார்மேக வண்ணத்தில் உள்ளதோ, யாருடைய வாகனம் பறவைகளின் தலைவனோ, யார் ஆயிரம் தலைகள் கொண்ட அனந்த சேஷன் மீது துயில் கொண்டுள்ளாரோ, யாருடைய வர்ணனை எல்லைக்கு அப்பாற்பட்டதோ, அந்த பகவான் விஷ்ணுவை நான் வழிபடுகிறேன். என் பிரியமான பார்வதி, ஒரு முறை பகவான் விஷ்ணு, முரா என்னும் அரக்கனை வதம் செய்து விட்டு அனந்த சேஷன் மீது ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது, அதிர்ஷ்ட தேவதையான மஹாலக்ஷ்மி, அவரிடம் பின்வருமாறு வினவினார், “பகவானே, தாங்கள் இந்த அண்ட சராசரங்களையும் காக்கவும் கட்டுப்படுத்தவும் வல்லவர். ஆனால் தாம் இந்த பாற்கடலில் மகிழ்ச்சி இல்லாமல் படுத்துக்கொண்டிருக்கிறீர்களே. இதற்கு என்ன காரணம்?”.

    பகவான் விஷ்ணு கூறினார், “என் பிரியமான லட்சுமி, நான் உறங்கவில்லை, ஆனால் என்னுடைய சக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த அற்புதமான சக்தியால் தான் அனைத்தையும் கட்டுப்படுத்தியும் அதே சமயம் தனித்தும் இருக்கிறேன். என்னுடைய இந்த தெய்வீகமான செயல்களை தியானித்துக்கொண்டே, பக்தர்களும் யோகிகளும் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு , களங்கமற்ற நிரந்தரமான ஆன்மீக தளத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்”.

லட்சுமி தேவி கூறினார், ” அனைத்தையும் கட்டுப்படுத்துபவரே ! அணைத்து யோகிகளது தியானத்தின் இறுதி இலக்கு நீராவீர். தாங்கள் இன்றி ஒரு அணுவும் அசையாது. இருப்பினும் தாங்கள் தனித்து இருக்கின்றீர். அணைத்து உலகங்களின் படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் காரணமானவர் தாங்கள். தயை கூர்ந்து தங்களுடைய இந்த அற்புத சக்தி, தாங்கள் இங்கே உறங்கிக்கொண்டிருக்கும் போதும் எவ்வாறு செயல்படுகிறது என்று எனக்கு விளக்குங்கள்”.

பகவான் விஷ்ணு கூறினார், ” எனதன்பு லட்சுமியே, என்னுடைய சக்தியின் விரிவாக்கங்கள், அவற்றினுடைய செயல்பாடுகள், ஒருவன் பிறப்பு இறப்பு பிடியிலிருந்து விடுபட்டு எவ்வாறு என்னுடைய பரந்தாமத்தை வந்தடைதல், இவைஅனைத்தும் எனக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட அறிவில் சிறந்தவனாலேயே புரிந்து கொள்ள முடியும். இதை பற்றிய அற்புதமான ஞானத்தை நான் ஸ்ரீமத் பகவத் கீதையில் முழுமையாக விளக்கியுள்ளேன்”.

லட்சுமி தேவி வினவினார், “அன்புடையவரே, உங்களின் இந்த சக்திகளின் எல்லையில்லா செயல்பாடுகளை கண்டு தாங்களே அதிசயிக்கும்போது, எவ்வாறு ஸ்ரீமத் பகவத் கீதை இந்த சக்திகளின் செயல்பாடுகளையும், எவ்வாறு ஒருவன் இவற்றை கடந்து தங்கள் பரந்தாமத்திற்குள் வரமுடியும் என்பதை விவரிக்கும்?”

பகவான் விஷ்ணு கூறினார், “நானே பகவத் கீதையாக அவதரித்துள்ளேன். பகவத் கீதையின் முதல் ஐந்து அத்தியாயங்கள், என்னுடைய ஐந்து தலைகள்; அடுத்து வரும் பத்து அத்தியாயங்கள், என்னுடைய கரங்கள்; பதினாறாம் அத்தியாயம் என்னுடைய வயிறு; இறுதி இரண்டு அத்தியாயங்கள் என்னுடைய தாமரை பாதங்கள் . இவ்வாறாக, பகவத் கீதையிலுள்ள ஆன்மீக விக்ரஹ வடிவை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பகவத் கீதை அனைத்து பாவங்களையும் அழிக்க வல்லது. அறிவிற்சிறந்த எவன் ஒருவன் தினமும் ஒரு அத்தியாயமோ அல்லது ஒரு ஸ்லோகமோ அல்லது பாதி ஸ்லோகமோ அல்லது ஒரு வரி படித்தால் கூட சுஷர்மா அடைந்த நர்கதியை அடைந்து விடுவான்”.

லட்சுமி தேவி வினவினார், “யார் அந்த சுஷர்மா? அவன் எந்த வகுப்பை சேர்ந்தவன்? அவனுக்கு என்ன நர்கதி கிட்டியது?”

பகவான் விஷ்ணு கூறினார், “எனதன்பு லட்சுமியே, சுஷர்மா பல பாவ காரியங்களை செய்யும் கொடிய கயவனாவான். அவன் ப்ராஹ்மண குலத்தில் பிறந்தபோதும், அவன் குடும்பத்தாருக்கு வேத சாஸ்திரத்தை பற்றிய ஞானம் இல்லை. ஆகையால் அவன் அடுத்தவர்களை துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்ள துவங்கினான். மது மற்றும் மாமிசத்தை மிகவும் விரும்பினான். அவன் எனது புனித நாமத்தை கூறுவதிலோ, தான தர்மங்கள் செய்வதிலோ அல்லது விருந்தினர்களை உபசரிப்பதிலோ ஆர்வம் காட்டவில்லை. ஒரு புண்ணிய காரியம் கூட செய்ததில்லை. தன் வாழ்வாதாரத்திற்காக, சில இலைகளை சேகரித்து சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வந்தான்.

ஒருமுறை அந்த முட்டாள் சுஷர்மா, ஒரு முனிவரின் தோட்டத்திற்குள் இலைகளை சேகரிப்பதற்காக சென்றான். அப்போது பாம்பு தீண்டியதால் அவன் உயிர் பிரிந்தது. பின்னர் அவனது ஆத்மா பல்வேறு நரகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலம் மிகவும் துன்புறுத்தப்பட்டது. அதன் பிறகு, அடுத்த ஜென்மத்தில் அவன் ஒரு காளையாக பிறந்தான்.

அந்த காளையை ஒரு முடவன் தனக்கு சொந்தமாக்கி அதனிடம் வேலை வாங்கி வந்தான். கிட்டத்தட்ட எட்டு வருடத்திற்கும் மேல் அந்த காளை சுமைகளை தாங்கி வேலை செய்தது. ஒரு நாள் முடவன் காளையின் முதுகில் மிகவும் அதிக எடையுடைய சுமையை ஏற்றி விட்டது மட்டுமல்லாமல், அதனை வேகமாக செல்லும் படி விரட்டினான். காளை கிழே விழுந்து சுய நினைவை இழந்தது. இதனை பாவமாக பார்த்தபடி பலர் அங்கு கூடினர். அப்போது ஒருவன் தான் செய்த புண்ணிய காரியங்கள் சிலவற்றின் பலன்களை காளைக்கு தானமாக வழங்கினான். இதை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினர் அனைவரும், அவரவர்களுடைய புண்ணிய காரியங்களை நினைவு கூர்ந்து அதன் பலன்களை காளைக்கு தானமாக வழங்கினர். அந்த கூட்டத்தில் ஒரு விலை மாதுவும் இருந்தாள். அவளுக்கு தான் இதுவரை ஏதேனும் புண்ணிய காரியம் செய்திருக்கிறோமா என்று கூட தெரியவில்லை. இருப்பினும் கூட்டத்தினர் அனைவரும் அவரவர் புண்ணிய காரியங்களின் பலன்களை தானம் செய்வதால், அவளும் தான் ஏதேனும் புண்ணிய காரியம் செய்திருந்தால் அதன் பலன்கள் இந்த காளையை சேரட்டும் என்று எண்ணி கொண்டு தானம் செய்தாள். அதன் பிறகு அந்த காளை இறந்தது. இறந்ததும் அக்காளையின் ஆத்மா, இறப்பின் கடவுளான யமதர்ம ராஜாவிடம் அழைத்து செல்லப்பட்டது.

அங்கு எமதர்மராஜா அவனிடம், “முற்பிறவியில் நீ செய்த அணைத்து பாவங்களும், ஒரு விலைமாது உனக்கு கொடுத்த புண்ணிய செயல்களின் பலன்களால் நீங்கிவிட்டது” என்று கூறினார். அதன் பிறகு அடுத்த பிறவியில் சுஷர்மா ஒரு உயரிய பிராமண குடும்பத்தில் பிறப்பெடுத்தார். அவரால் தனது முந்தைய பிறவிகளை நினைவு கூற முடிந்தது. எனவே தன்னை கொடுமையான நரகத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய பலன்களை வழங்கிய விலைமாதுவை தேடி சென்றார். ஒருவழியாக விலைமாதுவை கண்டுபிடித்த அவர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அதோடு நடந்தவை அனைத்தையும் கூறினார். பின்னர் விலைமாதுவிடம், “என்னை நரகத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் அளவிற்கு நீங்கள் செய்த புண்ணிய காரியம் என்ன?” என்று வினவினார்.

அதற்கு விலைமாது அவரிடம், “ஐயா, இந்த கூண்டில் இருக்கும் கிளி ஒன்று தினமும் ஏதோ ஒன்றை சொல்லி கொண்டே இருக்கும். அதை நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன். இதனால் என் மனம் மிகவும் தூய்மை அடைந்து விட்டது. நான் கிளியிடம் கேட்டதின் பலன்களை தான் உங்களுக்கு அளித்தேன்” என்று கூறினாள். எனவே இவர்கள் இருவரும் கிளியிடம் அது என்ன சொன்னது என்று விசாரிக்க சென்றனர்.தனது முற்பிறவியை நினைவு கூர்ந்த கிளி, “முற்பிறவியில் நான் உயரிய பிராமண குடும்பத்தில் பிறந்தேன். ஆனால் என் ஆணவத்தாலும் பொறாமையாலும் பிறரை ஏளனம் செய்து வந்தேன். என் இறப்பிற்கு பின் பல நரகங்களில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். அதன் பிறகு இந்த கிளியின் உடலை அடைந்தேன். என்னுடைய பாவத்தின் பலனாக நான் பிறந்ததும் என் தாய் தந்தையர் இறந்து விட்டனர். பாதுகாப்பின்றி வளர்ந்த என்னை ஒருமுறை சில ரிஷிகள் பார்த்து, அவர்கள் ஆசிரமத்திற்கு என்னை எடுத்து வந்து விட்டனர். கூண்டில் அடைக்கப்பட்ட நான், அங்கிருக்கும் ரிஷிகளின் குழந்தைகள் ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்கள் வாசிப்பதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு கேட்டு நானும் அவர்கள் பின் கூற ஆரம்பித்து விட்டேன்.

அதன் பிறகு ஒரு நாள் ஒரு திருடன் என்னை ஆசிரமத்தில் இருந்து திருடி இந்த பெண்ணிடம் என்னை விற்று விட்டான்” என்று கூறி முடித்தது.

பகவான் விஷ்ணு கூறினார், ” பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தை படித்ததால் அந்த கிளி முழுமையாக தூய்மை அடைந்தது. கிளி கூறக்கேட்ட அந்த விலைமாதுவும் முழுமையாக தூய்மை அடைந்தாள். இதன் பலன்களை தானமாக பெற்ற காளையின் வடிவிலிருந்த சுஷர்மாவும் தூய்மை அடைந்தான். பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தின் சிறப்புகளை பற்றி பேசிக்கொண்டிருந்த மூவரும் சிறிது நேரம் கழித்து அவரவர் வீட்டிற்கு சென்று, தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தை வாசிக்க துவங்கினர். வெகு விரைவில் அவர்கள் மனித வாழ்வின் இறுதி இலக்காண வைகுந்தத்தை அடைந்தனர்”.

எவரொருவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தை படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ, அவர்கள் பௌதிக வாழ்வின் துன்பங்களை வெகு விரைவாக கடந்து பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களின் சேவையை அடைய முடியும்.

 

 
+11

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question