Saturday, July 27

அத்தியாயம் ஒன்று-முனிவர்களின் கேள்விகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பதம் 1

ॐ नमो भगवते वासुदेवाय

जन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञ: स्वराट्
तेने ब्रह्म हृदा य आदिकवये मुह्यन्ति यत्सूरय: ।
तेजोवारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गोऽमृषा
धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि ॥ १ ॥

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஜன்மாதி அஸ்ய யதோ ’ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ:ஸ்வராத்
தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய:
தேஜோ-வாரி-ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ’ம்ருஷா
தாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த-குஹகம் ஸத்யம் பரம் தீமஹி

ஓம்—ஓ எனது பகவானே; நம—எனது வணக்கங்களை அளிக்கிறேன்; பகவதே—பரம புருஷரான பகவானுக்கு; வாசுதேவாய—வாசுதேவருக்கு (வாசுதேவரின் புதல்வருக்கு) அல்லது ஆதி முதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; ஜன்ம-ஆதி—படைத்தல், காத்தல், அழித்தல்; அஸ்ய—உருப்பெற்றுள்ள பிரபஞ்சங்களின்; யத—எவரிடமிருந்து; அன்வயாத்—நேரடியாக; இதரத—மறைமுகமாக; சா—மேலும்; அர்தேஷு—காரணங்கள்; அபிஜ்ஞ—முழுவதும் அறிந்திருக்கிற; ஸ்வராத்—முழுவதும் சுதந்திரமான; தேனே—தெரிவிக்கிற; பிரஹ்ம—வேதங்களின் அறிவு; ஹ்ருதா—உள்ளத்தில் உணர்த்திய; ய-ஆதி-கவயே—படைக்கப்பட்ட முதல் ஜீவராசிக்கு; முஹ்யந்தி—மாயத் தோற்றங்களே; யத்—அவரைப் பற்றி; ஸூரய—பெரும் முனிவர்களும், தேவர்களும்; தேஜ:—நெருப்பு; வாரி—நீர்; ம்ருதாம்—நிலம்; யத்ஹா—அவ்வளவிற்கு; வினிமய—செயலும் அதன் எதிர் விளைவும்; யத்ர—அதன்மேல்; த்ரி-ஸர்க:—மூன்று மாதிரியான படைக்கும் நியதிகள், உண்டாக்கும் வினைத் திறமைகள்; அம்ருஷா—அனேகமாக உண்மையான; தாம்னா—எல்லா தெய்வீக உபகரணங்களுடன்; ஸ்வேன—தன் நிறைவுடன்; ஸதா—எப்பொழுதும்; நிரஸ்த—இன்மையால் மறுத்தல்; குஹகம்—மாயை; ஸத்யம்—உண்மை; பரம்—வரம்பில்லாத; தீமஹி—நான் தியானிக்கிறேன்.

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, ஸ்ரீ கிருஷ்ணா, வசுதேவரின் புதல்வரே, எங்கும் வியாபித்திருக்கும் முழுமுதற் கடவுளே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன். தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரபஞ்சங்களின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய காரணங்களுக்கு மூல காரணமாகவும், பூரண உண்மையாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால் அவரை நான் தியானிக்கிறேன். எல்லா தோற்றங்களையும் அவர் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்துள்ளார். மேலும் அவருக்கப்பால் வேறெந்த காரணமும் இல்லாததால் அவர் சுதந்திரமானவராவார். முதல் ஜீவனான பிரம்மாவின் இதயத்தில் ஆதியில் வேத அறிவைப் புகட்டியவர் அவரேயாவார். நெருப்பினுள் காணப்படும் நீராகவும், நீர் மேல் காணப்படும் நிலமாகவும் தோற்றமளிக்கும் மாயாஜாலத்தினால் ஒருவன் குழப்பமடைவதைப் போல், ஸ்ரீ கிருஷ்ணரால் பெரும் முனிவர்களும், தேவர்களும் கூட மாயையில் புகுத்தப்படுகின்றனர். இயற்கையின் முக்குண பிரதிபலன்களால் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஜடப் பிரபஞ்சங்கள் பொய்யானவை ஆயினும், அவை உண்மையானவையாக காட்சியளிப்பதற்கு உரிய ஒரே காரணப் பொருளும் அவரேயாவார். எனவே, ஜடவுலக மாயைகளிலிருந்து நிரந்தரமாக விடுபட்டுள்ள பரலோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நித்திய வாசம் புரிகின்றார். அவரே பூரண உண்மையாகையால் நான் அவரைத் தியானிக்கின்றேன்.

பொருளுரை

முழுமுதற் கடவுளாகிய வாசுதேவருக்கு வணக்கங்கள் எனும் வாக்கியம், தேவகி, வசுதேவர் ஆகியோரின் தெய்வீகப் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே குறிக்கின்றது. இந்நூலின் மூல வாக்கியங்களில் இவ்வுண்மை இன்னும் தெளிவாக விளக்கப்படும். ஸ்ரீ கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள் என்று ஸ்ரீல வியாசதேவர் இங்கு வலியுறுத்துகிறார். மற்றனைவருமே நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அவரது விரிவங்கங்களோ அல்லது அங்கத்தின் அங்கங்களோதான். ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி தமது ‘கிருஷ்ண-ஸந்தர்ப்பத்தில்’ இவ்விவகாரத்தை இன்னும் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் தமது ‘பிரம்ம-சம்ஹிதை’ எனும் நூலில், முதல் ஜீவராசியாகிய பிரம்மா ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விவகாரத்தை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணர், தேவகியின் தெய்வீகப் புதல்வர் தான் என்று சாம-வேத உபநிஷத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரார்த்தனையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள் என்பதை இந்த முதல் கூற்று ஏற்கின்றது. மேலும் பூரண முழுமுதற் கடவுளுக்குச் சொந்தமானதாக அறியப்பட வேண்டிய உன்னத நாமம் இருக்குமாயின் அது, மிகக்கவர்ச்சிகரமானவர் என்று பொருள்படும், கிருஷ்ணா என்ற நாமமாகத்தான் இருக்க வேண்டும். பகவத் கீதையின் பல்வேறு இடங்களில், தாமே மூல முழுமுதற் கடவுள் என்று பகவான் வலியுறுத்துகிறார். இது, அர்ஜுனன் மற்றும் பெரும் முனிவர்களான நாரதர், வியாசர் போன்ற மற்றும் பலராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பகவானுடைய எண்ணிலடங்காத நாமங்களில் கிருஷ்ணா என்ற நாமமே தலைமையானது என்று பத்ம புராணம் குறிப்பிடுகின்றது. வாசுதேவன் என்பது முழுமுதற் கடவுளின் விரிவங்கத்தைக் குறிக்கிறது. மேலும் பகவானின் மற்றெல்லா உருவங்களும் வாசுதேவருடன் ஒத்தவையாக இருப்பதால், அவைகளும் இப்பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. வாசுதேவர் என்னும் நாமம் குறிப்பாக தேவகி, வசுதேவரின் தெய்வீகப் புதல்வர் என்பதைக் குறிக்கின்றது. துறவிகளுள் பக்குவ நிலையை அடைந்தவர்களாக இருப்பவர்கள் பரமஹம்ஸர்களாவர். இத்தகைய பரமஹம்ஸர்களின் தியானத்திற்கு உரியவராக ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் இருக்கின்றார்.

வாசுதேவர் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் மூல காரணமாவார். இருப்பவை அனைத்தும் பகவானிடமிருந்து தோன்றியவையே. இது எப்படி என்பது இக்காவியத்தின் பிற்பகுதி அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்காவியம் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத சரிதத்தைக் கொண்டுள்ளதால், ஒப்பற்ற புராணம் என்று மஹாபிரபு ஸ்ரீ சைதன்யரால் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தின் சரித்திரமும் பெரும் புகழுக்கு உரியதாகும். உன்னத அறிவில் ஸ்ரீல வியாசதேவர் பக்குவ நிலை எய்திய பிறகு இது தொகுக்கப்பட்டதாகும். தமது ஆன்மீக குருவான ஸ்ரீ நாரதரின் உபதேசத்தின் கீழ் இதை அவர் எழுதினார். நான்கு பிரிவுகளைக் கொண்ட வேதங்கள், வேதாந்த சூத்திரங்கள் (அல்லது பிரம்ம சூத்திரங்கள்), புராணங்கள் மற்றும் மகாபாரதம் போன்றவைகளையெல்லாம் உள்ளடக்கியதான அனைத்து வேத இலக்கியங்களையும் வியாசதேவர் தொகுத்தார். இருப்பினும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. அவரது அதிருப்தியைக் கண்ட அவருடைய ஆன்மீக குருவாகிய நாரதர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகளை வர்ணித்து எழுதுமாறு அவருக்கு ஆலோசனை கூறினார். இவ்வுன்னத லீலைகள் குறிப்பாக இக்காவியத்தின் பத்தாவது காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால், வெவ்வேறு பிரிவுகளின் அறிவை விருத்தி செய்து, அதன் வாயிலாக படிப்படியாக முன்னேறி, அதன் பிறகே கருப்பொருளை ஒருவன் அணுகவேண்டும்.

தத்துவ நோக்குடைய ஒரு மனம் படைப்பின் மூலத்தைப் பற்றி அறிய விரும்புவது இயற்கையே. இரவு வானத்தில் அவன் நட்சத்திரங்களைக் கண்டு, இயற்கையாகவே அவற்றில் வசிப்பவர்களைப் பற்றிய கற்பனையில் மூழ்கி விடுகின்றான். மனிதன், விலங்குகளை விட உயர்ந்ததும், விருத்தியடைந்ததுமான உணர்வைப் பெற்றிருப்பதால் இத்தகைய ஆராய்ச்சிகள் அவனிடம் காணப்படுவது இயற்கைதான். ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர், இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற நேரடியான விடைகளை வழங்குகின்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா படைப்புக்கும் மூலம் என்று அவர் கூறுகிறார். அவர் பிரபஞ்சங்களைப் படைப்பவர் மட்டுமல்லாமல், அழிப்பவருமாவார். பிரபஞ்ச இயற்கை ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறைவனின் ஆணையால் வெளிப்படுத்தப்படுகின்றது. சில காலத்திற்கு அது பாதுகாக்கப்பட்டு, பிறகு அவரது விருப்பம் போல் அது அழிக்கப்படுகிறது. எனவே, பரமனின் விருப்பமே எல்லா பிரபஞ்ச இயக்கங்களுக்கும் பின்னணியாக உள்ளது. சிருஷ்டிக்கும் கர்த்தாவாக ஒருவர் உள்ளார் என்பதில் நம்பிக்கை கொள்ளாதவர்களான பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நாத்திகர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அறிவு பற்றாக்குறையே அதற்குக் காரணமாகும். உதாரணமாக, செயற்கையான வான்கோள்களை நவீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதுடன், ஏதோ சில ஏற்பாடுகளினால் இக்கோள்கள் வானவெளிக்குள் செலுத்தப்பட்டு, தொலைவிலுள்ள விஞ்ஞானியின் கட்டுப்பாட்டின் கீழ் சில காலத்துக்கு அவை பறக்கின்றன. அதைப் போலவே, எண்ணற்ற நட்சத்திரங்களையும், கிரகங்களையும் கொண்டவைகளான பிரபஞ்சங்கள் அனைத்தும் முழுமுதற் கடவுளின் அறிவாற்றலால் ஆளப்படுகின்றன.

பூரண உண்மையாகிய முழுமுதற் கடவுளே அனைத்து உயிர்வாழிகளுக்கும் தலைமையானவர் என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. முதன் முதலில் படைக்கப்பட்ட ஜீவனான பிரம்மா முதற்கொண்டு, மிகச்சிறிய எறும்பு வரை உள்ள அனைத்தும் தனித்தன்மை பெற்ற ஜீவன்களே ஆகும். பிரம்மாவைவிட மேல் நிலையிலுள்ள, தனித்தனி ஆற்றல்களைக் கொண்டுள்ள பிற உயிர்வாழிகளும் உள்ளனர். இதைப் போலவே முழுமுதற் கடவுளும் ஓர் உயிர்வாழியாவார். மற்ற உயிர்வாழிகளைப் போல இவரும் ஒரு தனிநபராக உள்ளார். ஆனால் பரம புருஷர் அல்லது உன்னத உயிர்வாழி, மிகவுயர்ந்த அறிவாற்றல் உடையவராவார். கற்பனைக்கெட்டாத, பல்வேறு வகைப்பட்ட உன்னத சக்திகளை தன்னகத்தே அவர் கொண்டுள்ளார். மனித மூளையொன்று வான்கோளத்தை உண்டாக்க முடியுமானால், அதைவிட மிகச்சிறந்த அற்புதப் பொருட்களை, மனிதனுடையதைவிட உயர்ந்த மூளையால் எவ்வாறு உண்டாக்க முடியும் என்பதை ஒருவன் மிகச்சுலபமாக கற்பனை செய்து பார்க்க முடியும். இவ்விவாதத்தை நியாயமான மனிதரொருவர் எளிதாக ஏற்றுக்கொள்வார். ஆனால் நாத்திகர்கள் இதை ஏற்கவே மாட்டார்கள். ஆயினும், அந்த உன்னத அறிவாற்றலை பரமேஸ்வரனாக ஸ்ரீல வியாசதேவர் ஏற்கின்றார். பரம், பரமேஸ்வரன் அல்லது பரம புருஷ பகவான் என்றழைக்கப்படும் அந்த உன்னத அறிவாற்றலுக்கு தமது மதிப்பிற்குரிய வணக்கங்களை அவர் சமர்ப்பிக்கிறார். ஸ்ரீல வியாசதேவரால் அருளப்பட்ட பகவத் கீதையிலும், பிற சாஸ்திரங்களிலும், குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்திலும் ஏற்கப்பட்டுள்ளவாறு, அந்த பரமேஸ்வரன் ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். பகவத் கீதையில், தம்மையன்றி வேறெந்த பர-தத்துவமும் கிடையாது என்று பகவான் கூறுகின்றார். எனவே, யாருடைய உன்னத லீலைகள் எல்லாம் பத்தாம் காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளனவோ, அதே பர-தத்துவமாகிய ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்ரீல வியாசதேவர் உடனே போற்றி துதிக்கின்றார்.

யோக்கியமற்றவர்கள் உடனே பத்தாம் காண்டத்துக்குச் செல்வதோடு, குறிப்பாக பகவானின் ராஸ நடனத்தை வர்ணிக்கும் ஐந்தாவது அத்தியாயங்களுக்குச் சென்று விடுகின்றனர். ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள இப்பகுதிதான் இச்சீரிய இலக்கியத்தின் மிக இரகசியமான பகுதியாகும். பகவானின் உன்னத அறிவை ஒருவன் பூரணமாக கைவரப் பெற்றிருந்தால் அல்லாது ஸ்ரீ கிருஷ்ணரின் ராஸ நடனம் என்றழைக்கப்படும் வழிபடத்தக்க உன்னத லீலைகளையும், கோபியர்களுடனான அவரது காதல் விவகாரங்களையும் அவன் தப்பாகவே புரிந்துகொள்வான் என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரம் உன்னதமான ஆன்மீகப் படியில் இருப்பதால், படிப்படியாக உயர்ந்து, பரமஹம்ஸ நிலையை கைவரப் பெற்றவர்களான முக்தர்கள் மட்டுமே, இந்த ராஸ நடனத்தின் தெய்வீக அனுபவத்தைச் சுவைக்க முடியும். ஆகவே, சாராம்சமான பகவத் லீலைகளை உண்மையாக அனுபவிப்பதற்கு முன், ஆன்மீகத் தன்னுணர்வை படிப்படியாக விருத்தி செய்து கொள்வதற்குரிய வாய்ப்பை ஸ்ரீல வியாசதேவர் இதைப் பயிலும் மாணவனுக்கு அளிக்கின்றார். எனவே, அவர் வேண்டுமென்றே, “தீமஹி” என்னுமொரு காயத்ரி மந்திரத்தை உதவிக்கு அழைக்கிறார். இந்த காயத்ரி மந்திரம் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ளவர்களுக்கு உரியதாகும். இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதில் ஒருவர் வெற்றி பெற்றால், ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத நிலைக்குள் அவர் புக முடியும். ஆகவே ஒருவர் பிராமணர்களுக்குரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது பக்குவமான ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும். அதன் பிறகுதான் பகவானையும், அவரது நாமம், புகழ் மற்றும் நற்பண்புகள் போன்றவைகளையும் உணரக்கூடிய உன்னத நிலைக்கு, காயத்ரி மந்திரத்தை வெற்றிகரமாக ஜெபித்த பிறகு அவரால் உயர முடியும்.

ஸ்ரீமத் பாகவதம் என்பது ஸ்ரீ கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியால் தோற்றுவிக்கப்பட்டதான பகவானின் சொரூபத்தைப் பற்றிய வர்ணனைகளைக் கொண்டதாகும். இந்த சக்தி, நமது அனுபவத்துக்கு உட்பட்டுள்ள பிரபஞ்சத்தில் தோன்றியிருக்கும் பகிரங்க சக்தியிலிருந்து வேறானதாகும். ஸ்ரீல வியாசதேவர், இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை மிகத் தெளிவாக இப்பதத்தில் காட்டியுள்ளார். படைக்கப்பட்டுள்ள அந்தரங்க சக்தி உண்மையானது என்றும், ஆனால் ஜடத் தோற்றத்திலுள்ள பகிரங்க சக்தியோ தற்காலிகமானதும், பாலைவனத்து கானல் நீரைப் போல் மாயையானதுமாகும் என்று ஸ்ரீல வியாசதேவர் இங்கு கூறுகின்றார். பாலைவனத்துக் கானலில் உண்மையான நீர் இல்லை. ஆனால் நீர் உள்ளதைப் போன்ற தோற்றம் மட்டுமே காணப்படுகின்றது. உண்மையான நீர் வேறெங்கோ இருக்கிறது. வெளிப்பட்டுள்ள பிரபஞ்சப் படைப்பு உண்மையானதுபோல் தோன்றுகிறது. ஆனால் நிஜ ரூபம் ஆன்மீக உலகில் இருக்கிறது. இது அதன் நிழல் மாத்திரமே ஆகும். பரிபூரண மெய்ப்பொருள் ஆன்மீக வெளியில் இருக்கிறது, ஜட வெளியிலல்ல. ஜட வெளியிலுள்ள அனைத்துமே சம்பந்த உண்மையாகும். அதாவது ஓர் உண்மை மற்றொன்றைச் சார்ந்திருக்கிறது. இந்த பிரபஞ்சப் படைப்பு இயற்கையின் முக்குண சேர்க்கையால் உண்டாகியுள்ளது. உயர்ந்த தேவர்களாகிய பிரம்மா, இந்திரன், சந்திரன் போன்றவர்களின் குழம்பிய மனதில், உண்மையின் போலித் தோற்றத்தை அளிப்பதற்காகவே நிரந்தரமற்ற படைப்புக்கள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன. உண்மையில் இப்படைக்கப்பட்ட உலகில் உண்மை இல்லை. முழுமுதற் கடவுள் தமது உன்னதமான உபகரணங்களுடன் வாழும் ஆன்மீக உலகில் உண்மை உள்ளதால், இங்கு உண்மை உள்ளதாகத் தோன்றுகிறது.

நுணுக்கமுள்ள ஒரு கட்டிடத்தின் தலைமை அதிகாரி ஒருவர், கட்டுமானப் பணியில் நேராக பங்கு ஏற்பதில்லை. ஆனால் அனைத்தும் அவரது ஆணையின் கீழ் இயங்குவதால், அதன் மூலை முடுக்குகள் எல்லாம் அவருக்குத் தெரியும். நேராகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டிடத்தைப் பற்றிய அனைத்தையும் அவர் அறிவார். அதைப் போலவே, செயல்கள் தேவர்களால் நிறைவேற்றப்பட்டாலும், இப்பிரபஞ்சப் படைப்பின் பரம அதிகாரியான ஸ்ரீ கிருஷ்ணருக்கு இதன் மூலை முடுக்குகள் அனைத்தும் தெரியும். இந்த ஜட படைப்பில் பிரம்மா முதற்கொண்டு அற்பமான எறும்பு வரை யாருமே சுதந்திரமானவர் அல்லர். பகவானின் கரம் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. அவரிடமிருந்தே எல்லா ஜடப் பொருட்களும், ஆன்மப் பொறிகளும் தோன்றுகின்றன. மெய்ப்பொருளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்தே ஜட, ஆன்மீக சக்திகள் தோன்றுகின்றன. மேலும் இந்த ஜட உலகில் படைக்கப்பட்டுள்ளவை எல்லாம் இவ்விரு சக்திகளின் சேர்க்கையே ஆகும். ஜலவாயு மற்றும் பிராணவாயு ஆகிய இரண்டையும் ஆய்வுக்கூடத்தில் ஒன்றாகக் கலப்பதால் ஒரு விஞ்ஞானியால் நீரை உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனால் உண்மையில், ஜீவராசி பரம புருஷரின் ஆணைக்குக் கிழ்ப்படிந்தே ஆய்வுக்கூடத்தில் செயலாற்றுகிறான். இதற்காக அவன் உபயோகிக்கும் பொருட்களும் இறைவனாலேயே வழங்கப்படுபவை ஆகும். நுணுக்கமான விவரங்கள் அனைத்தும் உட்பட, நேராகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லாவற்றையும் பகவான் அறிவதுடன், அவர் பூரண சுதந்திரம் உள்ளவரும் ஆவார். அவரை தங்கச் சுரங்கத்துக்கு ஒப்பிடலாம். வெவ்வேறு தோற்றங்களிலுள்ள பிரபஞ்சப் படைப்புக்களை, தங்கத்திலிருந்து உருவாக்கப்படும் மோதிரம், ஆரம் போன்றவைகளுடன் ஒப்பிடலாம். தங்கத்தாலான மோதிரமும், ஆரமும், சுரங்கத்திலுள்ள தங்கத்துடன் தன்மையில் ஒன்றானவையும், ஆனால் அளவில் வேறானவையுமாகும். எனவே, பரிபூரண மெய்ப்பொருள் ஏககாலத்தில் ஒன்றாகவும், வேறாகவும் இருக்கின்றது. அந்த மெய்ப்பொருளோடு எதுவும் சமமானதுமல்ல, சுதந்திரமானதுமல்ல.

பிரபஞ்சம் முழுவதுக்கும் அதிகாரியாகிய பிரம்மதேவர் முதற்கொண்டு, அற்ப எறும்பு வரையுள்ள எல்லா பந்தப்பட்ட ஆத்மாக்களும் உற்பத்தியைச் செய்கின்றன. ஆனால் இவர்களில் எவருமே பரம புருஷரிலிருந்து சுதந்திரமானவர் அல்லர். உலகாயதவாதி, தன்னைத் தவிர வேறெந்த சிருஷ்டிகர்த்தாவும் இல்லை என்று தவறாக எண்ணுகின்றான். இது மாயை என்று அழைக்கப்படுகிறது. அறிவு பற்றாக்குறையின் காரணமாக, உலகாயதவாதி ஒருவனால் குறையுடைய அவனது புலன்களின் வரம்புக்கு அப்பால் காண முடியாதிருப்பதால், உயர்ந்ததோர் புத்திநுட்பத்தின் உதவி இல்லாமல் தானாகவே ஜடம் அதன் வடிவத்தை ஏற்கின்றது என்று நினைக்கிறான். இது தவறு என்பதை இப்பதத்தில் ஸ்ரீல வியாசதேவர் நிரூபிக்கின்றார்: “பரிபூரண முழுமை அல்லது அளவற்ற மெய்ப்பொருளே அனைத்திற்கும் மூலம் ஆகையால், அப்பரம் பொருளின் உடலிலிருந்து எதுவுமே சுதந்திரமானதாக இருக்க முடியாது.” உடலுக்கு என்ன நேர்ந்தாலும் விரைவில் அது உடலின் உரிமையாளருக்குத் தெரிய வருகின்றது. அதைப் போலவே, படைக்கப்பட்டவை எல்லாம் பரிபூரண முழுமையின் உடலாகும். எனவே, படைப்பில் நிகழும் அனைத்தையும் நேராகவும், மறைமுகமாகவும் பகவான் அறிகின்றார்.

பரிபூரண முழுமை அல்லது பிரம்மமே அனைத்திற்கும் முடிவான மூலம் என்று சுருதி மந்திரங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் அவரிடமிருந்தே தோன்றி, அவராலேயே காக்கப்படுகின்றன. இறுதியில் அவருக்குள்ளேயே அனைத்தும் ஒடுங்கிவிடுகின்றன. அதுவே இயற்கையின் நியதி ஆகும். ஸ்மிருதி மந்திரத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரம்மாவின் கல்பத் துவக்கத்தில் வெளிதோன்றும் அனைத்திற்கும் பிறப்பிடமாக உள்ள ஆதிமூலத்துக்கும், முடிவில் அனைத்தும் ஒடுங்கிவிடும் இடமான அந்தத்துக்கும் மூலமாக இருப்பது பரிபூரண உண்மை அல்லது பிரம்மம் என்று கூறப்படுகின்றது. கிரகங்களுக்கு எல்லாம் பிறப்பிடமாக இருப்பது சூரியனே என்று ஜட விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால் சூரியனின் பிறப்பிடத்தை விளக்குவது அவர்களுக்குச் சாத்தியமானதாக இல்லை. ஆதிமூலம் இங்கே விளக்கப்பட்டுள்ளது. வேத இலக்கியங்களின்படி, சூரியனோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடியவரான பிரம்மதேவர் முடிவான சிருஷ்டிகர்த்தா அல்ல. பிரம்மாவிற்கு முழுமுதற் கடவுளால் வேத அறிவு கற்பிக்கப்பட்டது என்று இந்த பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த ஜீவனும் இல்லாத அந்த சமயத்தில் பிரம்மாவே முதல் ஜீவராசியாக இருந்ததனால் அவருக்கு வேறொருவரும் ஊக்கம் அளித்திருக்க முடியாது என்று ஒருவர் வாதிடக்கூடும். இரண்டாந்தர சிருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மா அவருடைய சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு ஊக்கமூட்டினார் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எல்லா படைப்புக்களுக்கும் பின்னணியாக உள்ள பேரறிவாளர், பரம்பொருளாகிய ஸ்ரீ கிருஷ்ணரேயாவார். ஜடத்தின் மொத்தமாகிய ‘ப்ரக்ருதி’ அல்லது படைப்புச் சக்தியை தாமே அடக்கி ஆள்வதாக பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். ஆகவே, ஸ்ரீல வியாசதேவர் பிரம்மனை வழிபடுவதற்குப் பதிலாக அவரது படைப்புத் தொழிலுக்கு வழிகாட்டியவரான பகவானை வழிபடுகின்றார். இப்பதத்தில், குறிப்பாக ‘அபிக்ஞ’ மற்றும் ‘ஸ்வராத்’ என்னும் சொற்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவ்விரு சொற்களும் பரம புருஷரிலிருந்து பிற எல்லா ஜீவராசிகளையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. வேறெந்த ஜீவராசியும் ‘அபிக்ஞ’ அல்லது ‘ஸ்வராத்’ நிலையில் இல்லை. அதாவது ஒருவரும் பேரறிவு படைத்தவராகவோ, பூரண சுதந்திரம் உள்ளவராகவோ இல்லை. பிரம்மதேவரே படைப்புத் தொழிலை ஆற்றுவதற்காக பகவானை தியானிக்க வேண்டியுள்ளது. ஐன்ஸ்டீனைப் போன்ற பெரும் விஞ்ஞானிகளைப் பற்றி கூற என்ன இருக்கிறது! இத்தகைய விஞ்ஞானியைப் போன்றவர்களின் மூளை, நிச்சயமாக மனிதனால் உற்பத்தி செய்யப்படக் கூடியவையல்ல. இத்தகைய மூளையை விஞ்ஞானிகள் உற்பத்தி செய்ய முடியாது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அதிகாரத்தை மறுக்கும் மூடர்களான நாத்திகர்களை பற்றிக் கூற என்ன இருக்கிறது! இறைவனோடு இரண்டறக் கலந்து விடுவோம் என்று தங்களைத் தாங்களே புகழ்பாடும் அருவவாதிகளான, மாயாவாதிகளும் கூட, ‘அபிக்ஞ’ அல்லது ‘ஸ்வராத்’ என்னும் நிலையில் இல்லை. அத்தகைய அருவவாதிகள், இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுவதற்குரிய அறிவைப் பெறுவதற்காக கடுந்தவங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இறுதியில், மடாலயம், ஆலயம் போன்றவைகளை கட்டுவதற்கு பணம் வழங்கும் சில பணக்கார சீடர்களின் கையை அவர்கள் நம்பி இருப்பவர்களாக ஆகிவிடுகின்றனர். பகவானின் அதிகாரத்தை அலட்சியப்படுவதற்கு முன், ராவணன் அல்லது ஹிரண்யகசிபுவைப் போன்ற நாத்திகர்கள் கடுந்தவங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர் கொடூரமான காலனாக அவர்கள் முன் தோன்றிய போது, அவர்களால் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. பகவானின் அதிகாரத்தை அலட்சியப்படுத்தும் துணிவு உள்ளவர்களான நவீன காலத்து நாத்திகர்களின் நிலையும் இதுதான். சரித்திரம் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பதால், தற்போதைய நாத்திகர்களின் கதியும் இவ்வாறுதான் இருக்கும். இறைவனின் அதிகாரத்தை மனிதன் அலட்சியப்படுத்தும் போதெல்லாம், அவனைத் தண்டிக்க இயற்கையும் அதன் சட்டங்களும் தயாராக உள்ளன. ‘யதா யதா ஹி தர்மஸ்ய கிலானி:’ “எப்போதெல்லாம் தர்மத்தில் குறைவு ஏற்பட்டு, அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, ஓ அர்ஜுனா, அப்போதெல்லாம் யான் தோன்றுகின்றேன்” (பகவத் கீதை 4.7) என்னும் கீதையின் பிரபலமான பதத்தில் இது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரிபூரணமானவர் என்பது எல்லா சுருதி மந்திரங்களிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பரிபூரணமாகிய இறைவன் ஜட வஸ்துவின் மீது கண்ணோட்டம் இட்டதன் மூலமாக அனைத்து ஜீவராசிகளையும் படைத்திருப்பதாக சுருதி-மந்திரங்கள் கூறுகின்றன. ஜீவராசிகளெல்லாம் பகவானின் பின்னப்பகுதிகள் ஆகும். வித்து எனப்படும் ஆன்மப் பொறிகளால் பரந்ததான ஜடப் படைப்பு முழுவதையும் அவர் நிரப்புகின்றார். இவ்வாறாக, பல்வேறு அற்புத படைப்புக்களை தோற்றுவிப்பதற்காக படைப்புச் சக்திகள் இயக்கப்படுகின்றன. கைக்கடிகாரம் செய்பவனை விட இறைவன் திறமைமிக்கவரல்ல என்று நாத்திகனொருவன் வாதிடக்கூடும். ஆனால் ஆண், பெண் உருவங்களாலான இரட்டை உருவங்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உருவாக்க முடியும் என்பதால் அவர் சந்தேகமின்றி உயர்ந்தவர்தான். பல்வேறு வகையான இனங்களிலுள்ள ஆண், பெண் உருவங்கள், இறைவனின் தொடர்ந்த கவனத்திற்கு அவசியம் இல்லாமலேயே, இதே போன்ற எண்ணற்ற இயந்திரங்களை உற்பத்தி செய்து கொண்டு போகின்றன. இதைப் போல் உள்ள ஒரு ஜோடி இயந்திரங்களை ஒருவன் உற்பத்தி செய்து, இவ்வியந்திரங்கள் அவனுடைய உதவியில்லாமலே மற்ற இயந்திரங்களை உருவாக்க முடியுமானால், அதன் பிறகு இறைவனுடைய புத்தி சாதுர்யத்தை அவனால் அணுகவியலும். ஆனால் அது சாத்தியம் ஆகக்கூடியது அல்ல, ஏனெனில் ஒவ்வொரு இயந்திரமும் தனித்தனியாக இயக்கப்பட வேண்டியிருக்கும். ஆகவே, இறைவனைப் போல் சிறப்பாகப் படைப்பது எவராலும் இயலாது. இறைவனுக்கு ‘அஸமௌர்த்வ’ என்ற பெயருண்டு. அவருக்குச் சமமானவரோ, அவரைவிட உயர்ந்தவரோ எவரும் இல்லை என்பது இதன் பொருளாகும். ‘பரம ஸத்யம்’ எனப்படுபவர் தமக்குச் சமமானவரோ அல்லது தம்மை விட உயர்ந்தவரோ இல்லாதவராவார். சுருதி மந்திரங்களில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜடப் பிரபஞ்சத்தின் படைப்புக்கு முன், அனைவருக்கும் எஜமானராகிய பகவான் மட்டுமே இருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த பகவானே பிரம்மதேவருக்கு வேத அறிவை உபதேசித்தவராவார். எல்லா வழிகளிலும் அந்த பகவானுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஜடப் பிணைப்பிலிருந்து விடுபட விரும்புபவர் யாராக இருந்தாலும் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். இது பகவத் கீதையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மலர்ப்பாதத்தில் சரணடையாத ஒருவன் தடுமாற்றத்துக்கு உள்ளாவான் என்பது நிச்சயம். பகவத் கீதையில் உறுதிபடுத்தப்பட்டு இருப்பதைப் போல, புத்திசாலி ஒருவன், எல்லா காரணங்களுக்கும் மூல காரணம் ஸ்ரீ கிருஷ்ணரே என்பதை நன்கு உணர்ந்து, அவரது மலர்ப்பாதங்களில் சரணாகதி அடையும் போது அத்தகைய புத்திமான் ஒரு மகாத்மா ஆகிறான். ஆனால் இத்தகைய மகாத்மாக்களைக் காண்பது மிகவும் அரிதாகும். எல்லா சிருஷ்டிகளுக்கும் மூல காரணமாக இருப்பவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே என்பதை மகாத்மாக்களால் மட்டுமே அறியமுடியும். மற்றெல்லா உண்மைகளும் ஸ்ரீ கிருஷ்ணரையே சார்ந்துள்ளதால் அவர் ‘பரமம்’ அல்லது முடிவான மெய்ப்பொருளாவார். அவர் அனைத்தையும் அறிந்தவராவார். அவருக்கு, மாயை என்பதே கிடையாது.

ஸ்ரீமத் பாகவதத்தைத் தொகுத்தவர் ஸ்ரீல வியாசதேவர் அல்ல என்று சில மாயாவாதிகள் வாதிக்கின்றனர். இந்நூல், வோபதேவர் என்ற பெயர் கொண்ட ஒருவரால் எழுதப்பட்ட நவீன படைப்பு என்று அவர்களில் சிலர் எண்ணுகின்றனர். இத்தகைய அர்த்தமற்ற விவாதங்களை அப்புறப்படுத்துவதற்காக, பல பழமை வாய்ந்த புராணங்களில் பாகவதத்தைப் பற்றிய குறிப்புகள் இருப்பதை ஸ்ரீல ஸ்ரீதர சுவாமி சுட்டிக்காட்டுகின்றார். பாகவதத்தின் இந்த முதல் பதம் காயத்ரி மந்திரத்துடன் ஆரம்பமாகின்றது. இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழைய புராணமாகிய, மச்ச புராணத்தில் காணப்படுகிறது. அப்புராணம், பாகவதத்திலுள்ள காயத்ரி மந்திரத்தை தொட்டுப் பேசுகையில், காயத்ரரி மந்திரத்துடன் துவங்கும் ஆன்மீக உபதேசங்களைப் பற்றிய பல வர்ணனைகள் உள்ளன என்று குறிப்பிடப்படுகின்றது. விருத்தாசுரனைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. இச்சிறந்த காவியத்தை பௌர்ணமி தினத்தன்று யாரொருவர் அன்பளிப்பு செய்கின்றாரோ அவர் முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வதன் வழியாக வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைவார். மற்ற புராணங்களிலும் கூட பாகவதத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அங்கு, இக்காவியம் பதினெட்டாயிரம் பதங்களை உள்ளடக்கி இருப்பதாகவும், இது பன்னிரண்டு காண்டங்களில் முடிவுறுகின்றது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பத்ம புராணத்திலும் கூட கௌதமருக்கும், அம்பரீஷ மகாராஜனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலில் பாகவதத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஜடப் பிணைப்பிலிருந்து விடுபட அரசன் விரும்பினால், பாகவதத்தை அவர் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்று அங்கு அறிவுறுத்தப்படுகிறார். இத்தகைய சந்தர்ப்பங்களின் கீழ், பாகவதத்தினுடைய பிராமணத்தில் சந்தேகமில்லை என்பது தெளிவாகிறது. கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கு உள்ளாக, ஜீவ கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி, விஸ்வநாத சக்ரவர்த்தி போன்ற பல புலமை பெற்ற பண்டிதர்களும், ஆச்சாரியர்களும், பகவான் ஸ்ரீ சைதன்யரின் காலத்துக்குப் பிறகும் கூட, பாகவதத்தின் மீது விரிவான வியாக்கியானங்களைச் செய்துள்ளனர். உன்னதமான இச்செய்திகளை நன்கு அனுபவிப்பதற்காக, ஆர்வமுள்ள மாணாக்கன் ஒருவன் இவற்றை நன்றாகக் கற்றுணர முயற்சிப்பான்.

ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர், ஆதியானதும், தூயதுமாகிய பாலுறவு எவ்வித ஜடக் களங்கமும் இல்லாதது என்று விளக்கம் கொடுத்துள்ளார். ‘ஜடப் படைப்பு முழுவதுமே ஆண், பெண் உறவின் அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. ’ தற்போதைய நவீன நாகரிகத்தில், எல்லாச் செயல்களுக்கும் மையமாகத் திகழ்வது உடலுறவு வாழ்வுதான். ஒருவன் தன் முகத்தை எங்கு திருப்பினாலும், உடலுறவு வாழ்வு மேலோங்கி இருப்பதைக் காண்கிறான். ஆகவே, உடலுறவு வாழ்வு பொய் அல்ல. அதன் உண்மை நிலை ஆன்மீக உலகில் அனுபவிக்கப்படுகின்றது. ஜடப் பாலுறவு, மூல உண்மையின் ஒரு பிரதிபலிப்பே அன்றி வேறில்லை. மூல உண்மை பரிபூரண மெய்ப்பொருளில் இருக்கிறது. இதனால் பரிபூரணமாகிய மெய்ப்பொருள் அருவமானதாக இருக்க முடியாது. அருவமாக இருக்கும் அதே சமயம் தூய பாலுறவையும் கொண்டிருப்பது சாத்தியம் அல்ல. அருவவாத தத்துவவாதிகள் பரம சத்தியத்தின் அருவ நிலைக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். இதன் விளைவாக, வெறுக்கத்தக்கதான இகலோக உடலுறவு வாழ்வுக்கு மறைமுகமான ஊக்கத்தை அவர்கள் அளிக்கின்றனர். தெய்வீக உருவிலுள்ள உண்மையான பாலுறவைப் பற்றிய தகவல் இல்லாததன் காரணத்தால், நெறிதவறியதான ஜடப் பாலுறவு வாழ்வே எல்லாம் என்று மனிதன் ஏற்றுக் கொண்டுள்ளான். ஆன்மீகமான உடலுறவு வாழ்வுக்கும், நோயுற்ற ஜடச் சூழ்நிலையிலுள்ள உடலுறவு வாழ்வுக்கும் ஒரு வேறுபாடு இருக்கின்றது.

இந்த ஸ்ரீமத் பாகவதம், தப்பான அபிப்பிராயம் கொள்ளாத மாணவனை படிப்படியாக உன்னதத்தின் மிகவுயர்ந்த பக்குவ நிலைக்கு உயர்த்துகிறது. மேலும் ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு உட்பட்டவையான பலன் கருதும் செயல், கற்பனைத் தத்துவம் மற்றும் தேவ வழிபாடு ஆகியவற்றைக் கடந்து மேலே செல்வதற்கும் இது அவனுக்கு உதவி செய்கிறது.

பதம் 2

धर्म: प्रोज्झितकैतवोऽत्र परमो निर्मत्सराणां सतां
वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम् ।
श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वर:
सद्यो हृद्यवरुध्यतेऽत्र कृतिभि: शुश्रूषुभिस्तत्क्षणात् ॥ २ ॥

தர்ம: ப்ரோஜ்ஹித-கைதவோ அத்ர பரமோ நிர்மத்ஸராணாம் ஸதாம்
வேத்யம் வாஸ்தவம் அத்ர வஸ்து ஸிவதம் தாப-த்ரயோன்-மூலனம்
ஸ்ரீமத்-பாகவதே மஹா-முனி-க்ருதே கிம் வா பரைர் ஈஸ்வர:
ஸத்யோ ஹிருதி அவருத்யதே அத்ர க்ருதிபி: சுஸ்ரூஷுபிஸ் தத்-க்ஷணாத்

தர்ம—சமய உணர்வுடைமை; ப்ரோஜ்ஹித—முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட; கைதவ:—பலன் கருதும் எண்ணத்தால் மூடப் பெற்ற; அத்ர—இந்த; பரம:—மிகவுயர்ந்த; நிர்மத்ஸராணாம்—நூற்றுக்கு நூறு தூய்மையான மனதில்; ஸதாம்—பக்தர்கள்; வேத்யம்—புரிந்து கொள்ளக்கூடிய; வாஸ்தவம்—உண்மையான; அத்ர—இந்த; வஸ்து—பொருள்; ஸிவதம்—நன்மைக்காக; தாப-த்ரய—மூவகையான துன்பங்கள்; அன்மூலனம்—வேரோடு களையக் காரணமான; ஸ்ரீமத்—அழகிய; பாகவதே—பாகவத புராணம்; மஹாமுனி—மிகச்சிறந்த முனிவர் (வியாசதேவர்); க்ருதே—தொகுத்தளித்த; கிம்—என்ன உள்ளது; வா—தேவை; பரை—மற்றவர்கள்; ஈஸ்வர:—மேலான பகவான்; சத்ய—உடனடியாக; ஹ்ருதி—உள்ளத்தின் உள்ளே; அவருத்யதே—நிலை நிறுத்தப்பட்டு விடுகிறார்; அத்ர—இந்த; க்ருதிபி:—இறையுணர்வுள்ள (பக்தியுள்ள) மனிதர்களால்; ஸுஸ்ரூஷுப்ஹி—வளர்த்துக் கொள்வதால்; தத்-க்ஷணாத்—தாமதமின்றி.

மொழிபெயர்ப்பு

பௌதிக நோக்கங்களைக் கொண்ட எல்லா மதச் சடங்குகளையும் முற்றிலும் விலக்கி, பூரண இதயத் தூய்மை உடையவர்களான அந்த பக்தர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மிகவுயர்ந்த உண்மையை இந்த பாகவத புராணம் விவரிக்கின்றது. எல்லோருடைய நன்மைக்காகவும் மாயையிலிருந்து பிரித்தறியப்படும் நிஜமான நிலையே பரம உண்மையாகும். அத்தகைய உண்மை மூவகைத் துன்பங்களை களைந்தெறியச் செய்கின்றது. மஹா முனிவரான வியாசதேவரால் (அவரது முதிர்ந்த நிலையில்) தொகுக்கப்பட்டதான இந்த அழகிய பாகவதம் ஒன்றே இறையுணர்வை உண்டாக்கப் போதுமானதாகும். வேறெந்த சாஸ்திரத்திற்கும் என்ன அவசியம் உள்ளது? பாகவதத்தின் செய்தியை ஒருவர் கவனத்துடனும், பணிவுடனும் கேட்டவுடனேயே, அறிவைப் பண்படுத்தும் இம்முறையினால் அவருடைய இதயத்திற்குள் பரம புருஷர் நிலைநிறுத்தப்படுகின்றார்.

பொருளுரை

மதம் என்பது நான்கு மிக முக்கியமான விஷயங்களாகிய: புண்ணியச் செயல்கள், பொருளாதார முன்னேற்றம், புலன்களின் திருப்தி மற்றும் இறுதியாக ஜடப் பிணைப்பிலிருந்து விடுதலை ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். மதப்பற்றற்ற வாழ்வு ஓர் அநாகரிகமான நிலையாகும். உண்மையில், எப்போது மதம் துவங்குகிறதோ அப்போதுதான் மனித வாழ்வும் துவங்குகின்றது. உண்ணுதல், உறங்குதல், பயப்படுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவை மிருக வாழ்வின் நான்கு அடிப்படைக் கொள்கைகளாகும். இவையெல்லாம் மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானவையாகும். ஆனால் மதம் மனிதனுக்கென உள்ள தனிப்பட்ட கடமையாகும். மதமற்ற மனித வாழ்வு மிருக வாழ்வைவிட மேலானதல்ல. ஆகவே, தன்னுணர்வை நோக்கமாகக் கொண்டவையும், பகவானுடனான மனிதனின் நித்திய உறவை உணர்த்தக்கூடியவையுமான ஒரு சில மதங்கள் மனித சமூகங்களிடையே உள்ளன.

தாழ்ந்த நிலைகளிலுள்ள மனித நாகரிகங்களில், ஜட இயற்கையை அடக்கியாளும் போட்டி எப்போதுமே இருந்து வருகிறது. அதாவது, புலன்களைத் திருப்தி செய்வதற்காக தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது. இத்தகைய உணர்வால் உந்தப்படும் மனிதன் மதத்தை நோக்கித் திரும்புகிறான். இவ்வாறாக அவன், பௌதிக இலாபத்தைப் பெறுவதற்காக புண்ணியச் செயல் அல்லது சமய கடமையைச் செய்கிறான். ஆனால், இத்தகைய பௌதிக இலாபங்கள் வேறு வழிகளில் அடையப்படக் கூடுமானால் இம்மாதிரியான மதம் உதாசீனப்படுத்தப்படுகின்றது. இதுதான் நவீன நாகரிகத்திலுள்ள சூழ்நிலையாகும். மனிதன் பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறான், எனவே தற்போது அவன் மதத்தில் அதிக ஆர்வமுள்ளவனாய் இல்லை. தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், ஆலயங்களும் இப்போதெல்லாம் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. மனிதர்கள், தங்கள் முன்னோர்களால் எழுப்பப்பட்ட சமய இடங்களில் கருத்தைச் செலுத்துவதைவிட, தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் திரைப்படங்கள் போன்றவைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மதம் பொருளாதார இலாபத்துக்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்பதை இது உண்மையாக நிரூபிக்கிறது. புலன் திருப்திக்கு பணம் தேவைப்படுகிறது. ஒருவன் புலனின்ப வேட்கையில் அடிக்கடி தோல்வியுறும்போது, அவன் முக்தியடையும் வழியைப் பின்பற்றி, பரம புருஷரோடு ஒன்றாவதற்கு முயல்கிறான். இதனால் இந்நிலைகளெல்லாம் வெவ்வேறு வகையான புலனின்பங்களேயாகும்.

வேதங்களில், மேலே குறிப்பிட்ட நான்கு செயல்களும் ஒழுங்கான முறையில் நியமிக்கப்பட்டுள்ளதால், மிதமிஞ்சிய புலனின்பப் போட்டி ஏற்படாது. ஆனால் ஸ்ரீமத்-பாகவதம், இவ்வெல்லா புலனின்பச் செயல்களுக்கும் அப்பாற்பட்டதாகும். இது போட்டிக்குரிய புலனின்பத்திற்கு அப்பாற்பட்ட பகவானின் தூய பக்தர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதான, தூய்மையுள்ள உன்னத இலக்கியமாகும். பௌதிக உலகில், மிருகத்துக்கிடையிலும், மனிதனுக்கிடையிலும், சமுதாயத்துக்கிடையிலும், தேசத்துக்கிடையிலும் தீவிரமான போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பகவானின் பக்தர்கள் அத்தகைய போட்டிகளைக் கடந்து மேலே சென்றுவிடுகின்றனர். நித்தியமும், ஆனந்தமும் கொண்ட வாழ்வு இருக்கும் இடமான பரம புருஷரிடம் திரும்பிச் செல்லும் பாதையில் அவர்கள் இருப்பதால், பௌதிகவாதிகளுடன் அவர்கள் போட்டியிடுவதில்லை. இத்தகைய ஆன்மீகிகள் தற்பெருமை இல்லாதவர்களும், இதயத் தூய்மை உள்ளவர்களுமாவார். ஜடவுலகில், ஒவ்வொருவனும் மற்றவரிடம் பொறாமை கொண்டவனாக இருக்கிறான். இதனால் போட்டி ஏற்படுகின்றது. ஆனால், பகவானின் ஆன்மீக பக்தர்கள் ஜடப் பொறாமையிலிருந்து விடுபட்டவர்கள் மட்டுமல்லாமல் பிறர் நலத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் உள்ளனர். மேலும், பகவானை மையமாகக் கொண்ட, போட்டி பொறாமையற்ற சமூகத்தை ஏற்படுத்த அவர்கள் பாடுபடுகின்றனர். ஆனால், தற்போதைய பொதுவுடைமை வாதிகளின், போட்டியற்ற சமூகத்தைப் பற்றிய எண்ணம், செயற்கை ஆனதாகும். ஏனெனில், பொதுவுடைமைவாத தேசத்தில், சர்வாதிகாரி பதவிக்குப் போட்டி இருக்கின்றது. வேதக் கண்ணோட்டத்திலோ அல்லது பொதுவான மனிதச் செயல்களின் கண்ணோட்டத்திலோ பார்த்தால், ஜட வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது புலன் இன்பமே என்பது தெளிவாகும். வேதங்களில் மூன்று வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று, பலன்நோக்குச் செயல்களால் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுவது. அடுத்தது, சிறு தெய்வ வழிபாட்டால் தேவலோகங்களுக்கு ஏற்றம் பெறுவது. மற்றது, பர பிரம்மத்தையும், அவரது அருவ நிலையையும் உணர்ந்து அவருடன் இரண்டறக் கலப்பது.

பரபிரம்மத்தின் அருவநிலை உயர்ந்ததல்ல. அருவ நிலைக்கு மேல் பரமாத்மா நிலையுள்ளது. அதற்கும் மேலாக பரபிரம்மம் அல்லது பகவானின் குறிப்பிடத்தக்க தோற்றம் இருக்கிறது. அவரது, குறிப்பிடத்தக்க தோற்றத்திலுள்ள பரபிரம்மத்தைப் பற்றிய தகவல்களை ஸ்ரீமத் பாகவதம் வழங்குகிறது. இது அருவவாத இலக்கியங்களையும், வேதங்களின் ஞான-காண்ட பிரிவையும் விட மேலானதாகும். இது கர்ம-காண்ட பிரிவையும், உபாஸனா-காண்ட பிரிவையும்விட இன்னும் மேலானதாகும். ஏனெனில், பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாட்டை இது சிபாரிசு செய்கின்றது. கர்ம-காண்டத்திலும், அதிக புலனின்பம் தரும் ஸ்வர்க லோகங்களை அடைவதற்கான போட்டி உள்ளது. மேலும் இத்தகைய போட்டி ஞான-காண்டத்திலும், உபாஸனா-காண்டத்திலும் கூட உள்ளது. எல்லா பிரிவுகளுக்கும் வேராக அல்லது கருப்பொருளாக உள்ளவரான பரம உண்மையை ஸ்ரீமத் பாகவதம் இலக்காகக் கொண்டிருப்பதால், இது மற்றனைத்தையும்விட உயர்ந்ததாகும். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து, ஒருவர் கருப்பொருளை மட்டுமல்லாமல், அதன் பிரிவினைகளையும் கூட தெரிந்துகொள்ளலாம். கருப்பொருளாக இருப்பவர் பரபிரம்மமான பரம புருஷராவார். மற்றெல்லா தோற்றங்களும் அவருக்குச் சம்பந்தமுள்ள சக்தியின் வடிவங்களேயாகும்.

எதுவும் கருப்பொருளிலிருந்து வேறானது அல்ல. ஆனால் அதே சமயம் சக்திகள் கருப்பொருளிலிருந்து வேறுபட்டும் உள்ளன. இக்கருத்து முரணானதல்ல. “ஜன்மாதி அஸ்ய” என்ற சொல்லுடன் துவங்கும் வேதாந்த-சூத்திரத்தின் இந்த, ஒரே சமயத்தில் ஒன்றாகவும் வேறாகவும் உள்ள தத்துவத்தை ஸ்ரீமத் பாகவதம் ஒளிவுமறைவு இல்லாமல் வெளியிடுகிறது.

மனக் கற்பனை செய்பவர்கள் சக்திதான் உயர்ந்தது என்பதை நிலைநாட்ட முயல்கின்றனர். ஆனால் பகவானின் சக்தியானது, ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும், வேறாகவும் உள்ளது என்ற இந்த அறிவு அவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு விடையாகும். இந்த அறிவை உண்மையாக புரிந்துகொண்டால், அத்வைத கொள்கையும், துவைத கொள்கையும் குறையுடையவை என்பதை ஒருவரால் காணமுடியும். ஒரே சமயத்தில்-ஒன்றானதும்-வேறானதும் என்ற இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள உன்னத உணர்வை வளர்ப்பதால், அது ஒருவரை மூவகைத் துன்பங்களிலிருந்து விடுபட்ட நிலைக்கு உடனே அழைத்துச் செல்கின்றது. மூவகைத் துன்பங்களாவன: 1. மனதாலும், உடலாலும் விளையும் துன்பம், 2. பிற ஜீவராசிகளால் சுமத்தப்படும் துன்பங்கள், 3. ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத, இயற்கையின் கோர சம்பவங்களினால் விளையும் துன்பங்கள். பரம புருஷரிடம் பக்தன் சரணாகதி அடைவதிலிருந்து ஸ்ரீமத்-பாகவதம் துவங்குகின்றது. பக்தனொருவன், தான் பகவானுடன் ஒன்றானவனென்பதையும், அதே சமயம் அவரது நித்தியத் தொண்டன் என்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறான். காண்பதற்கெல்லாம் தானே எஜமானன் என்று ஒருவன் தவறாக எண்ணுவதால், வாழ்வின் மூவகைத் துன்பங்களின் கஷ்டத்துக்கு எப்போதும் அவன் ஆளாகிறான். ஆனால், பகவானின் தொண்டனெனும் தனது உண்மை நிலையை ஒருவன், அறிந்தவுடனேயே, எல்லா துன்பங்களிலிருந்தும் அவன் விடுபடுகிறான். ஜீவராசி பௌதிக இயற்கையின் எஜமானனாக இருக்க முயலும் வரை, பரமனின் தொண்டனாக அவன் ஆவதற்கு வாய்ப்பே இல்லை, பகவானுக்குச் செய்யும் தொண்டை, தான் ஆன்மீகமானவன் என்ற தூய உணர்வுடன் செய்ய வேண்டும்; தொண்டின் மூலமாக ஒருவன் பௌதிகக் கடன்களிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.

இதற்கும் மேலாக, இந்த ஸ்ரீமத் பாகவதமானது, வேதாந்த சூத்திரத்தின் மீதான ஸ்ரீல வியாசதேவரின் சொந்த விளக்கமாகும். இது, நாரதரின் கருணையினால், தமது ஆன்மீக வாழ்வின் முதிர்ந்த பருவத்தில் ஸ்ரீல வியாசரால் எழுதப்பட்டதாகும். ஸ்ரீல வியாசதேவர், பரம புருஷரான நாராயணனின் அவதாரமாவார். எனவே, அவருடைய அதிகாரத்தைப் பற்றிய கேள்விக்கு இடமில்லை. அவரே மற்றெல்லா வேத இலக்கியங்களின் ஆசிரியராகவும் இருக்கின்றார். ஆயினும், மற்ற நூல்களைக் கைவிட்டு ஸ்ரீமத்-பாகவதத்தை ஒருவர் கற்றுணர வேண்டும் என்று அவர் சிபாரிசு செய்கிறார். மற்ற புராணங்களில், ஒருவர் சிறுதெய்வ வழிபாட்டைச் செய்யக்கூடிய பல்வேறு முறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாகவதத்தில், பரம புருஷர் மட்டுமே குறிப்பிடப்படுகிறார். பரம புருஷர் மொத்த உடலாகவும், தேவர்கள் அவரது உடலின் வெவ்வேறு பகுதிகளாகவும் உள்ளனர். இதன் காரணமாக, ஒருவர் பரம புருஷரை வழிபடுவதால், தேவர்களை அவர் வழிபட வேண்டிய அவசியமில்லை. பக்தனின் இதயத்தில் பரம புருஷர் உடனே உறுதியாக குடிகொண்டு விடுகின்றார். ஸ்ரீமத் பாகவதம் குறையற்ற புராணம் என்றும், மற்றெல்லா புராணங்களிலிருந்தும் இது வித்தியாசமானது என்றும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியிருக்கிறார்.

உன்னதமான இச்செய்தியைப் பெறுவதற்கான தகுந்த முறை, அடக்கத்துடன் இதைக் கேட்பதுவேயாகும். சவால்விடும் மனோபாவம் இந்த உன்னத செய்தியை உணர்வதற்கு உதவாது. ‘சுஸ்ரூஷு’ என்ற சொல் இங்கு சரியான வழிகாட்டியாக உள்ளது. இந்த உன்னத செய்தியை கேட்பதற்கு ஒருவர் மிகவும் ஆவலுள்ளவராக இருக்க வேண்டும். சிரத்தையுடன் கேட்க வேண்டும் என்ற விருப்பமே முதல் தகுதியாகும்.

அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பதற்கு சிறிதும் ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இந்த முறை மிகவும் சுலபமானதுதான். ஆனால் இதைப் பிரயோகிப்பதுதான் சிரமம். அதிர்ஷ்டமற்றவர்களுக்கு பயனற்ற சமூக மற்றும் அரசியல் சம்பந்தமான உரையாடல்களைக் கேட்பதற்குப் போதுமான நேரம் உண்டு. ஆனால் ஸ்ரீமத்-பாகவதத்தைக் கேட்பதற்காக ஒரு ஸத்சங்கத்திற்கு அழைப்பு விடுத்தால் உடனே அவர்கள் தயங்குகிறார்கள். சில சமயங்களில் வருவாய்க்காக பாகவதம் சொல்பவர்கள், காம இலக்கியமோ என்று பொருள்படும் வகையில் அதற்கு அர்த்தம் கற்பிக்கின்றனர். ஸ்ரீமத் பாகவதம் ஆரம்பத்திலிருந்து கேட்கப்பட வேண்டியதாகும். இவ்விலக்கியத்தை கிரகிக்கக்கூடிய திறமை பெற்றவர்களைப் பற்றி இச்சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: “ஒருவர், பல புண்ணிய கருமங்களுக்குப் பிறகு ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதற்குத் தகுதியுள்ளவர் ஆகின்றார்”. ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பதனால், ஒருவர் உடனே பரம புருஷரை உணரமுடியும் என்று மகாமுனிவரான வியாசதேவர் உறுதிமொழி கூறுகின்றார். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள, தன்னுணர்வின் வெவ்வேறு படிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பதாலேயே, ஒருவர் உடனே பரமஹம்ஸரின் நிலைக்கு உயர்த்தப்பட்டுவிடுவார்.

பதம் 3

निगमकल्पतरोर्गलितं फलं
शुकमुखादमृतद्रवसंयुतम् ।
पिबत भागवतं रसमालयं
मुहुरहो रसिका भुवि भावुका: ॥ ३ ॥

நிகம-கல்ப-தரோர் கலிதம் ஃபலம்
சுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸம் ஆலயம்
முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:

நிகம—வேத இலக்கியங்கள்; கல்ப-தரோ—கல்ப விருட்சம்; கலிதம்—பூரணமாக கனிந்துள்ள; ஃபலம்—பழம்; சுக—ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி; முகாத்—உதடுகளிலிருந்து; அம்ருத—அமிர்தம்; த்ரவ—விழுங்குவதற்குச் சுலபமான இளகிய தன்மையும், மென்மையும் கொண்ட; ஸம்யுதம்—எல்லா விஷயத்திலும் பூரணமான; பிபத—அதைச் சுவைப்பர்; பாகவதம்—பகவானுடனான நித்திய உறவைப் பற்றிய விஞ்ஞானத்தை விவரிக்கும் நூல்; ரஸம்—சாறு (சுவைத்து அனுபவிக்கக்கூடியது); ஆலயம்—முக்தியடையும்வரை அல்லது முக்திபெற்ற நிலையிலும்; முஹு—எப்போதும்; அஹோ—ஓ; ரஸிகா—ராஸானுபாவங்களில் பூரண அறிவுடையோர்; புவி—பூமி மீது; பாவுகா—திறமையும், சிந்தனையும் கொண்ட.

மொழிபெயர்ப்பு

திறமையும், சிந்தனையும் மிக்கவர்களே, கல்ப விருட்சமாகிய வேத இலக்கியங்களின், கனிந்த பழமாகிய ஸ்ரீமத்-பாகவதத்தை அனுபவியுங்கள். அமிர்தம் போன்ற அதன் ரசம் முக்திபெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் ஏற்கனவே அனுபவிக்கக்கூடியதாக இருந்தாலும், ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியின் உதடுகளிலிருந்து அது வெளிவந்திருப்பதால், இந்த பழம் அதைவிட அதிக சுவையுடையதாக ஆகியிருக்கிறது.

பொருளுரை

முந்தைய இரு சுலோகங்களில், ஸ்ரீமத் பாகவதம், அதன் உன்னதமான விசேஷத் தன்மையினால் மற்றெல்லா சாஸ்திரங்களையும் மிஞ்சிவிட்ட பரிசுத்தமான இலக்கியமாகும் என்பது நிச்சயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்லாவிதமான பௌதிகச் செயல்களுக்கும், அறிவுக்கும் அது மேலானதாகும். இந்த சுலோகத்தில், ஸ்ரீமத் பாகவதம் உயர்ந்த இலக்கியம் மட்டுமல்லாமல் அனைத்து வேத இலக்கியங்களிலும் இது கனிந்த பழமும் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, எல்லா வேத அறிவுக்கும் இது சாரமாகும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பொறுமையுடனும், பணிவுடனும் கேட்பது அவசியமாகும். ஒருவர் ஸ்ரீமத் பாகவதத்தால் அளிக்கப்படும் செய்தியையும், பாடங்களையும் மிகவும் மரியாதையுடனும், பணிவுடனும் கேட்க வேண்டியது நிச்சயமாக அவசியமாகும்.

மனிதனால் அறியப்படக்கூடிய எல்லாவற்றையும் வேதங்கள் கொண்டுள்ளதால், அவை கல்ப-விருட்சங்களுடன் ஒப்பிடப்படுகின்றன. இகவுலக தேவைகளைப் பற்றியும், ஆன்மீகத் தன்னுணர்வைப் பற்றியும் அவை பேசுகின்றன. சமூகம், அரசியல், மதம், பொருளாதாரம், மருத்துவம், ரசாயனம், சரீரம் மற்றும் அதைச் சார்ந்துள்ளவைகள், மற்றும் உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்குத் தேவையானவை ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்களை வேதங்கள் கொண்டுள்ளன. இவைகளுக்கெல்லாம் அப்பால் ஆன்மீகத் தன்னுணர்வுக்கான திடமான வழிமுறைகள் உள்ளன. கட்டுப்பாடான அறிவு ஜீவராசிகளை ஆன்மீக வாழ்வில் படிப்படியாக முன்னேறச் செய்கிறது. மேலும் எல்லா ஆன்மீக சுவைகளுக்கும், அல்லது ரஸங்களுக்கும் இருப்பிடமாக இருப்பவர் பரம புருஷராவார் என்னும் அறிவே மிகவுயர்ந்த ஆன்மீக உணர்வாகும். பௌதிக உலகில் முதல் ஜீவராசியான பிரம்மா முதற்கொண்டு, அற்பமான எறும்பு வரையிலான எல்லா ஜீவராசிகளும் புலன்களின் உணர்வுகளிலிருந்து பெறப்படும் ஒருவகையான சுவையை அனுபவிப்பதற்கு விரும்புகின்றன. இப்புலன் இன்பங்களெல்லாம் “ரஸங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய ரஸங்கள் பலதரப்பட்டவையாகும். வேத சாஸ்திரங்களில் அளிக்கப்பட்டுள்ளன: 1. ரௌத்ரம் (கோபம்), 2. அத்புதம் (அற்புதம்), 3. ஸ்ருங்காரம் (இல்லற அன்பு), 4. ஹாஸ்யம் (நகைச்சுவை), 5. வீர (வீரம்), 6. தயா (தயை), 7. தாஸ்யம் (சேவை செய்யும் மனப்பான்மை), 8. ஸக்யம் (நட்பு), 9. பயானகம் (அச்சம்), 10. பிபத்ஸம் (அதிர்ச்சி), 11. சாந்தம் (நடுநிலை), 12. வாத்ஸல்யம் (பெற்றோர் பாசம்).

இவ்வெல்லா ரஸங்களின் மொத்தம், பாசம் அல்லது அன்பு என்றழைக்கப்படும். முக்கியமாக, அன்பிற்குரிய இத்தகைய அறிகுறிகள், புகழ்தல், தொண்டு, சினேகம், தாய்ப்பாசம், மற்றும் இல்லற அன்பு ஆகியவற்றில் வெளிப்படுகின்றன. மேலும், இவ்வைந்தும் இல்லாதிருக்கும்போது, கோபம், அற்புதம், நகைச்சுவை, வீரம், பயம், அதிர்ச்சி போன்றவைகளில் மறைமுகமான முறையில் அன்பு இருக்கின்றது. உதாரணமாக, ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருந்தால், அந்த ரஸம் இல்லற அன்பு என்றழைக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய காதல் விவகாரங்களில் தடை உண்டாகுமாயின், வியப்பு, கோபம், அதிர்ச்சி அச்சமும் கூட விளையக்கூடும். சில சமயங்களில் இரு நபர்களுக்கு இடையிலான காதல் விவகாரம் பயங்கரமான கொலைக் காட்சிகளில் முடிவதும் உண்டு. இத்தகைய ரஸங்கள் மனிதனுக்கிடையிலும், விலங்குகளுக்கிடையிலும் காட்டப்படுகின்றன. ஒரு மனிதனுக்கும், மிருகத்துக்கும் இடையிலோ, அல்லது ஒரு மனிதனுக்கும், ஜட உலகிலுள்ள பிற இனங்களைச் சேர்ந்த ஜீவன்களுக்கும் இடையிலோ ரஸப் பரிமாற்றம் ஏற்படுவதற்குச் சாத்தியமில்லை. ரஸங்கள், ஒரே இனத்தைச் சேர்ந்த அங்கத்தினருக்கிடையில் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. ஆனால், அணு ஆத்மாக்களைப் பொறுத்தவரையில், அவை பரம புருஷருடன் தன்மையில் ஒன்றானவையாகும். எனவே, ஆதியில் ஆன்மீகமான ஜீவராசிக்கும், பரம புருஷ பகவானுக்கும் இடையில் இந்த ரஸங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஜீவராசிகளுக்கும், பரம புருஷருக்கும் இடையிலான ஆன்மீகப் பரிமாற்றம் அல்லது ரஸம், ஆன்மீக வாழ்வில் பூரணமாக வெளிப்படுத்தப்படுகிறது.

எனவே, சுருதி-மந்திரங்களில் அல்லது வேத மந்திரங்களில் பரம புருஷ பகவான் “எல்லா ரஸங்களுக்கும் மூலம்” என்று விளக்கப்பட்டுள்ளார். பரம புருஷரோடு ஒருவர் தொடர்புகொண்டு, அவருடனான தனது உறவை பரிமாறிக் கொள்ளும்போது, ஜீவராசி உண்மையிலேயே சந்தோஷம் அடைகிறான்.

பரம புருஷருடன் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட விதமான ரஸத்தைப் பெற்றுள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் ஆதாரப்பூர்வமான நிலை இருக்கிறது என்று இச்சுருதி-மந்திரங்கள் குறிப்பிடுகின்றன. முக்திபெற்ற நிலையில் மட்டுமே முக்கியமான இந்த ரஸம் பூரணமாக அனுபவிக்கப்படுகிறது. பௌதிக வாழ்வில் இந்த ரஸம், தவறான முறையில் அனுபவிக்கப்படுகிறது. மேலும் இது தற்காலிகமானதாகும். இதன் விளைவாக, பௌதிக உலகின் ரஸங்கள், ரௌத்ரம் (கோபம்) முதலான வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்த ரஸங்கள் செயல்களின் அடிப்படைக் கொள்கைகளாக விளங்குகின்றன. ஆகவே, இந்த ரஸங்களைப் பற்றிய முழு அறிவைப் பெறுபவரால், இந்த ஜடவுலகில் காணப்படும், மூல ரஸங்களின் போலித் தோற்றங்களை அறிய முடியும். கற்றறிந்த பண்டிதர் ஒருவர் ஆன்மீக உருவிலுள்ள உண்மையான ரஸத்தை மட்டுமே அனுபவிக்க முயல்வார். துவக்கத்தில் அவர் பகவானுடன் இரண்டறக் கலக்க விரும்புகிறார். இவ்வாறாக, வெவ்வேறு ரஸங்களைப் பற்றி அறியாத காரணத்தால், பூரணத்துடன் இரண்டறக் கலக்கும் இந்த எண்ணத்திற்கு அப்பால் செல்லும் வாய்ப்பு, குறைந்த அறிவு படைத்த ஆன்மீகிகளுக்கு இல்லை.

இச்சுலோகத்தில், முக்திபெற்ற நிலையிலும் அனுபவிக்கக்கூடிய ஆன்மீக ரஸம், அனைத்து வேத அறிவுகளிலும் கனிந்த பழமாகிய ஸ்ரீமத்-பாகவதம் எனும் இலக்கியத்தில் அனுபவிக்கக்கூடியதாகும் என்று உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிவுடன் இவ்வுன்னத இலக்கியத்தைக் கேட்பதால், ஒருவர் தன் இதயபூர்வமான முழு ஆனந்தத்தை அடைய முடியும். ஆனால், விஷயத்தை சரியான நபரிடமிருந்து கேட்பதில் ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதம் சரியான மூலத்திலிருந்து அப்படியே பெறப்பட்டதாகும். அது, நாரத முனிவரால் ஆன்மீக உலகிலிருந்து கொண்டுவரப்பட்டு, அவரது சீடரான ஸ்ரீல வியாசதேவருக்கு வழங்கப்பட்டது. வியாசர் அச்செய்தியை தமது மகனான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமிக்கு வழங்கினார். மேலும் ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அச்செய்தியை ஏழு நாட்களில் இறக்கவிருந்த அரசனான பரீட்சித்து மகாராஜனுக்கு வழங்கினார். ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பிறவியிலிருந்தே முக்திபெற்ற ஆத்மாவாக இருந்தார். தமது தாயின் கருவில் இருக்கும்போதே அவர் முக்திபெற்ற நிலையிலிருந்தார். மேலும் அவரது பிறப்புக்குப்பின் எவ்விதமான ஆன்மீகப் பயிற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை. பிறக்கும்போது எவருமே தகுதியுள்ளவராக இருப்பதில்லை, அது பௌதிக விஷயத்திலானாலும் சரி, ஆன்மீக விஷயத்திலானாலும் சரி. ஆனால் ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி, ஒரு பூரணமான முக்திபெற்ற ஆத்மாவாக இருந்ததால், ஆன்மீக உணர்வைப் பெறுவதற்கான பரிணாம முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. அவர் ஜடத்தின் முக்குணங்களுக்கு மேலான தெய்வீக நிலையில் நிலைபெற்று முற்றிலும் முக்திபெற்றவராக இருந்தாலும், வேத மந்திரங்களைப் பாடும் முக்தி பெற்ற ஆத்மாக்களால் பூஜிக்கப்படுபவரான பரம புருஷ பகவானின் உன்னதமான இந்த ரஸத்தினால் அவர் வசீகரிக்கப்பட்டார். பரம புருஷரின் திருவிளையாடல்கள், இகலோக மக்களைவிட, முக்திபெற்ற ஆத்மாக்களை மிகவும் கவரக்கூடியவை ஆகும். அவசியத்தின் காரணமாகவே அவர் அருவமானவராக இல்லை. ஏனெனில், ஒரு நபருடன் மட்டுமே உன்னதமான ரஸத்தை பரிமாறிக் கொள்வது சாத்தியமாகும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பகவானின் உன்னத லீலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விவரணைகள் ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியால் முறையாக விளக்கப்பட்டுள்ளன. இதனால், முக்தியை விரும்புபவர்களும், பரம புருஷருடன் இரண்டறக் கலக்க விரும்புபவர்களும் உட்பட எல்லா பிரிவினர்களுக்கும் இந்த விஷயம் பொருந்துவதாகும்.

சமஸ்கிருத பாஷையில் கிளியும் ‘சுக’ என்றே அறியப்படுகிறது. பழுத்த பழமொன்று இத்தகைய பறவைகளின் சிவந்த அலகால் கடிக்கப்படும்போது, அதன் தித்திப்பான சுவை அதிகரிக்கின்றது. முதிர்ச்சியும், கனிவும் கொண்டதான வேதமெனும் பழம், ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியின் உதடுகளிலிருந்து பேசப்பட்டதாகும். அவர் கிளியுடன் ஒப்பிடப்படுகிறார். பண்டிதரான அவரது தந்தையிடமிருந்து கேட்ட பாகவதத்தை அப்படியே கூறியதற்காக அவர் இங்கு கிளியோடு ஒப்பிடப்படவில்லை. எல்லா பிரிவினருக்கும் ஏற்புடைய வகையில் பாகவதத்தைப் பேசும் திறமையைப் பெற்றிருந்ததாலேயே அவர் கிளியுடன் ஒப்பிடப்படுகிறார்.

இந்த விஷயம் ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியின் உதடுகளின் மூலமாக தகுந்த முறையில் பேசப்பட்டதாகும். இதனால் பௌதிக உலகத்தின் பொய்யான சுவைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ள உன்னத சுவைகளை, அடக்கத்துடன் கேட்கும் நேர்மையுள்ள உன்னத சுவைகளை, ஒருவரால் உடனேயே அனுபவிக்க முடியும். இந்த பழுத்த பழம், மிகவுயர்ந்த உலகமான கிருஷ்ணலோகத்திலிருந்து திடீரென்று கீழே எறியப்பட்டதல்ல. மாறாக, எவ்வித மாற்றமும், இடைஞ்சலும் இல்லாமல் சீடப்பரம்பரையில் சங்கிலித் தொடர் மூலமாக, கவனமாக கிழே வந்துள்ளதாகும். உன்னதமான சீடப்பரம்பரையில் இடம் பெறாத மூடர்கள், ஆன்மீக உணர்வின் முன்னேற்றத்திற்கேற்ப படிப்படியாக மிகவும் கவனத்துடன் இப்பழத்தை வழங்கும் சுகதேவ கோஸ்வாமியின் அடிச்சுவட்டைப் பின்பற்றாமல், ராஸ நடனம் எனப்படும் மிகவுயர்ந்ததான தெய்வீக ரஸத்தைப் புரிந்துகொள்ள முயல்வதன் மூலம், மிகப்பெரிய குற்றங்களைச் செய்து விடுகின்றனர். விஷயத்தை மிக்க கவனத்துடன் கையாள்பவரான, சுகதேவ கோஸ்வசாமியைப் போன்றவர்களை கருத்திற் கொள்வதன்மூலம், ஸ்ரீமத் பாகவதத்தின் நிலையை அறிவதற்கு ஒருவர் போதிய புத்தியுள்ளவராக இருக்க வேண்டும். எதிர்காலத்திலும் கூட ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியின் ஓர் உண்மையான பிரதிநிதியிடமிருந்து அறிய வேண்டும் என்பதையே சீடப்பரம்பரை எனும் இம்முறை சுட்டிக்காட்டுகிறது. சட்டத்திற்கு விரோதமாக பாகவதம் கூறுவதை உத்தியோகமாகக் கொண்ட ஒருவன், நிச்சயமாக சுகதேவ கோஸ்வாமியின் பிரதிநிதியல்ல. அத்தகைய மனிதன் தனது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே இந்த வியாபாரத்தைச் செய்கிறான். ஆகவே, இத்தகைய வியாபார நோக்கமுள்ளவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். இத்தகையவர்கள், மிகவும் முக்கியமான இவ்விஷயத்தை படிப்படியாக அறியும் முறையைப் பின்பற்றாமல், உடனே இந்நூலின் மிக இரகசியமான பகுதிக்குச் சென்று விடுகின்றனர். இவர்கள், புத்தியற்றவர்களால் தப்பான முறையில் புரிந்துகொள்ளப்படும், ராஸ நடனத்தைப் பற்றிய விஷயத்தில் மூழ்கி விடுகின்றனர். அவர்களில் சிலர் இதை ஒழுக்கங்கெட்ட நூல் என்று நினைக்கின்றனர். மற்றும் சிலர் தங்களின் சொந்த முட்டாள்தனமான விளக்கங்களால் அதை மூடி மறைத்துவிடப் பார்க்கின்றனர். ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்ற எவ்விதமான விருப்பமும் அவர்களுக்கில்லை.

எனவே, ரஸத்தை அறிய விரும்பும் உண்மையான மாணவன், சுகதேவ கோஸ்வாமியின் சீடப் பரம்பரையில் வருபவரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தை முறையாகக் கேட்டறிய வேண்டும். அத்தகையவர் பாகவதத்தை அதன் முதல் துவக்கத்திலிருந்து விளக்குகிறார். ஆன்மீக ஞானத்தில் மிகக் குறைந்த அறிவைப் பெற்றுள்ள கருமிகளை மகிழ்விப்பதற்காக மனம்போனவாறு அவர் விளக்குவதில்லை. ஸ்ரீமத் பாகவதம் மிகவும் கவனத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சுகதேவ கோஸ்வாமி அல்லது அவருடைய உண்மையான பிரதிநிதியின் வாய் வழியாக அமிர்தம் போன்ற ரசத்தைப் பருகுவதன் மூலம், உண்மையும், மனவுறுதியும் உள்ள ஒருவர் வேத அறிவின் கனிந்த பழத்தை உடனே அனுபவிக்க முடியும்.

பதம் 4

नैमिषेऽनिमिषक्षेत्रे ऋषय: शौनकादय: ।

सत्रं स्वर्गायलोकाय सहस्रसममासत ॥ ४ ॥

நைமிஷே ’நிமிஷ-க்ஷேத்ரே
ருஷய: சௌனகாதய:
ஸத்ரம் ஸ்வர்காய லோகாய
சஹஸ்ர-ஸமம் ஆஸத

நைமிஷே—நைமிஷாரண்யம் எனும் வனத்தில்; அனிமிஷ-க்ஷேத்ரே—குறிப்பாக (தமது கண்ணிமைகளை மூடாதவரான) விஷ்ணுவுக்குப் பிரியமான ஓரிடம்; ருஷய—முனிவர்கள்; சௌனக-ஆதய:—சௌனக ரிஷியை தலைமையாகக் கொண்டு; ஸத்ரம்—வேள்வி; ஸ்வர்காய—ஸ்வர்கத்தில் போற்றப்படும் பகவான்; லோகாய—மேலும் பகவானுடன் எப்போதும் தொடர்புகொண்டுள்ள பக்தர்களுக்கு; ஸஹஸ்ர—ஓர் ஆயிரம்; ஸமம்—ஆண்டுகள்; ஆஸத—நிறைவேற்ற.

மொழிபெயர்ப்பு

ஒருமுறை நைமிஷாரண்ய வனத்திலுள்ள புனிதமான ஓரிடத்தில், சௌனக ரிஷியைத் தலைமையாகக் கொண்ட மகரிஷிகள், பகவானையும் அவரது பக்தர்களையும் திருப்திப்படுத்துவதற்காக, ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் மிகப்பெரிய யாகத்தை நடத்துவதற்காகக் கூடினர்.

பொருளுரை

முந்தைய மூன்று சுலோகங்களில் ஸ்ரீமத் பாகவதத்தின் முன்னுரை பேசப்பட்டது. இச்சிறந்த நூலின் முக்கியமான விஷயம் இப்போது வழங்கப்படுகிறது. ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியால் முதலில் பேசப்பட்ட ஸ்ரீமத் பாகவதம், இரண்டாவது தடவையாக நைமிஷாரண்யத்தில் மறுபடியும் பேசப்பட்டது.

குறிப்பாக, இந்த பிரபஞ்சத்தின் பொறி இயலாளரான பிரம்மா, பிரபஞ்சத்தையே உள்ளடக்கக்கூடிய ஒரு மாபெரும் சக்கரத்தைப் பற்றி மனத்திற்குள் நினைத்தார் என்று ‘வாயவீய தந்திரத்தில்’ கூறப்பட்டுள்ளது. மிகப்பெரியதான இச்சக்கரத்தின் அச்சு நைமிஷாரண்யம் எனப்படும் இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அதைப் போலவே, நைமிஷாரண்ய வனத்தைப் பற்றிய மற்றுமொரு குறிப்பு வராஹ புராணத்தில் காணப்படுகிறது. அதில், இந்த இடத்தில் செய்யப்பட்ட வேள்வியினால், அசுர எண்ணம் கொண்டவர்களின் பலம் குறைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறாக, அத்தகைய வேள்விகளைச் செய்வதற்கு நைமிஷாரண்யம் சிறந்த இடமென்று பிராமணர்கள் எண்ணுகின்றனர்.

பகவான் விஷ்ணுவின் பக்தர்கள் எல்லாவிதமான யாகங்களையும் அவரது சந்தோஷத்துக்காக செய்கின்றனர். பக்தர்கள், பகவானின் தொண்டில் எப்பொழுதும் பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் வீழ்ந்த ஆத்மாக்களோ பௌதிக வாழ்வின் இன்பத்தில் பற்றுள்ளவர்களாக இருக்கின்றனர். பகவான் விஷ்ணுவின் மகிழ்ச்சியைத் தவிர வேறெந்த காரணத்துக்காகவும் பௌதிக உலகில் செயலாற்றப்படும் எதுவும், செயலாற்றுபவரை மேலும் அதிகமான பந்தத்துக்கு ஆளாக்கிவிடும் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. எனவே, பகவானையும் அவரது பக்தர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே எல்லாச் செயல்களையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் அமைதியையும், முன்னேற்றத்தையும் தரும்.

பெரும் ரிஷிகளெல்லாம் எப்போதும் பொதுமக்களுக்கு நல்லதைச் செய்ய விரும்புகின்றனர். இவ்வாறாக, மிகப்பெரியதும், சங்கிலித் தொடர் போல தொடர்ந்ததுவுமான வேள்விச் சடங்குகளை நிறைவேற்றும் திட்டத்துடன், சௌனகரை தலைமையாகக் கொண்ட ரிஷிகள் மற்றவர்களுடன் நைமிஷாரண்யம் என்னும் இப்புண்ணிய இடத்தில் கூடியுள்ளனர். மறதியுள்ள மனிதர்கள் அமைதிக்கும், செழுமைக்கும் உரிய சரியான வழியை அறியவில்லை. இருந்தாலும், ரிஷிகள் இதை நன்கு அறிந்துள்ளனர். ஆகவே எல்லோருடைய நம்மைக்காகவும், உலகில் அமைதியை ஏற்படுத்தும் செயல்களைச் செய்வதற்கு அவர்கள் எப்பொழுதும் ஆவலோடு காத்திருக்கின்றனர். எல்லா ஜீவராசிகளுக்கும் அவர்கள் உண்மையான நண்பர்களாக இருந்து, அனைத்து மக்களின் நன்மைக்காகவும் பகவானின் தொண்டில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். பகவான் விஷ்ணு பெரியதொரு மரத்தைப் போன்றவர். தேவர்கள், மனிதர்கள், சித்தர்கள், சாரணர்கள், வித்யாதரர்கள் மற்றும் பிற ஜீவராசிகள் உட்பட அனைவரும், அந்த மரத்தின் கிளைகள், சுள்ளிகள் மற்றும் இலைகள் ஆகியவற்றைப் போன்றவர்களாவர். மரத்தின் வேருக்கு நீருற்றுவதால், மரத்தின் எல்லா பகுதிகளும் தானாகவே நீரைக் கிரகிக்கின்றன. ஆனால் துண்டிக்கப்பட்ட கிளைகளும், இலைகளும் ஊட்டத்தைப் பெறுவதில்லை. துண்டிக்கப்பட்ட கிளைகளுக்கும், இலைகளுக்கும் நீருற்றும் முயற்சியை மேற்கொண்டாலும் படிப்படியாக அவை காய்ந்துவிடும். துண்டிக்கப்பட்ட கிளைகளுக்கும், இலைகளுக்கும் நீருற்றுவதால் ஒருவரது சக்தியும், நீரும்தான் வீணாகின்றன. அதைப் போலவே, மனித சமூகம் பரம புருஷ பகவானிடமிருந்து பிரிக்கப்படும்போது அவர்கள் சக்தியும், மூலகங்களும் தான் வீணாகின்றன.

தற்போதைய மக்கள் சமூகம் பரம புருஷருடன் தங்களுக்குள்ள உறவிலிருந்து பிரிந்த நிலையில் உள்ளது. மேலும் நாஸ்திகத் தலைவர்களால் உருவாக்கப்படும் எல்லா திட்டங்களும் ஒவ்வொரு அடியிலும் உடைத்தெறியப்படுகின்றன. இருப்பினும் இதில் அவர்கள் எச்சரிக்கையாய் இருப்பதில்லை.

இந்த யுகத்தில், பகவானின் புனித நாமங்களை கூட்டமாக சேர்ந்து பாடுவதே விழிப்புணர்ச்சியைப் பெறும் முறையாகும். இதற்கான வழிகளும், உபாயங்களும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் மிகவும் விஞ்ஞானபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் உண்மையான அமைதியையும், செழுமையையும் ஏற்படுத்துவதற்காக அவரது போதனைகளை புத்திநுட்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதே நோக்கத்துக்காகத்தான் ஸ்ரீமத் பாகவதமும் வழங்கப்பட்டுள்ளது. பிந்தைய சுலோகங்களில் இது மிகவும் தெளிவாக விளக்கப்படும்.

பதம் 5

त एकदा तु मुनय: प्रातर्हुतहुताग्नय: ।
सत्कृतं सूतमासीनं पप्रच्छुरिदमादरात् ॥ ५ ॥

த ஏகதா து முனய:
ப்ராதர் ஹுத-ஹுதாக்னய:
சத்-க்ருதம் ஸூதம் ஆஸீனம்
பப்ரச்சுர் இதம் ஆதராத்

தே—ரிஷிகள்; ஏகதா—ஒருநாள்; து—ஆனால்; முனய—ரிஷிகள்; ப்ராத—காலை; ஹுத—எரியச் செய்து; ஹுத-அக்னய:—வேள்வித் தீ; சத்-க்ருதம்—தகுந்த மரியாதைகளுடன்; ஸூதம்—ஸ்ரீ சூத கோஸ்வாமியை; ஆஸீனம்—அமரச் செய்து; பப்ரச்சு—விசாரணை செய்தனர்; இதம்—இவற்றின் மீது (பின்வருமாறு); ஆதராத்—தகுந்த மரியாதைகளுடன்.

மொழிபெயர்ப்பு

ஒரு நாள், ஹோமம் செய்து தங்களது ஆராதனையை முடித்துக்கொண்டபின், சூதரை மதிப்பிற்குரிய ஓராசனத்தில் அமரச் செய்ததும், அவர்கள் பின்வரும் கேள்விகளை அவரிடம் கேட்டனர்.

பொருளுரை

ஆன்மீகத் தொண்டுகளை மேற்கொள்வதற்கு காலை நேரம் சிறந்ததாகும். ‘வியாஸாஸனம்’, அல்லது ஸ்ரீல வியாசதேவருக்குரிய ஆசனம் என்றழைக்கப்படும் ஓர் உயர்ந்த மதிப்பிற்குரிய ஆசனத்தை சிறந்த முனிவர்கள் பாகவதம் பேசுபவருக்கு வழங்கி கௌரவித்தனர். ஸ்ரீல வியாசதேவரே மக்களெல்லோருக்கும் மூல ஆன்மீக ஆசான் ஆவார். மற்றெல்லா ஆசான்களும் அவருடைய பிரதிநிதிகளாக கருதப்படுகின்றனர். யாரொருவர் ஸ்ரீல வியாசதேவரின் கருத்தை மாற்றாமல் அப்படியே வழங்குகின்றாரோ, அவர்தான் வியாசரின் பிரதிநிதியாவார். ஸ்ரீல வியாசதேவர் பாகவதத்தை ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமிக்கு உபதேசித்தார். அதன் பிறகு, ஸ்ரீ சூத கோஸ்வாமி அதை சுகதேவரிடமிருந்து கேட்டறிந்தார். சங்கிலித் தொடரான சீடப்பரம்பரை மூலமாக வரும் ஸ்ரீல வியாசதேவரின் உண்மையான பிரதிநிதிகள் எல்லோரும் கோஸ்வாமிகள் என்று அறியப்படுகின்றனர். இந்த கோஸ்வாமிகள் தங்களுடைய புலன்களையெல்லாம் கட்டுப்படுத்துவதுடன் முந்தைய ஆச்சாரியர்களால் வகுக்கப்பட்ட வழியைப் பின்பற்றுகின்றனர். கோஸ்வாமிகள் மனம்போன போக்கில் பாகவதத்தின் மீது சொற்பொழிவு ஆற்றுவதில்லை. அதற்கு மாறாக, ஆன்மீக செய்தியை சிதைத்து விடாமல் தங்களுக்கு வழங்கியவர்களான தங்களின் முந்தைய ஆச்சாரியர்களைப் பின்பற்றி, தங்களின் சேவைகளை அவர்கள் மிகவும் கவனத்துடன் செயற்படுத்துகின்றனர்.

பாகவதத்தைக் கேட்பவர்கள், தெளிவான அர்த்தத்தை அறிவதற்காக பிரசங்கம் செய்பவரிடம் கேள்விகள் கேட்கக்கூடும், ஆனால் சவால்விடும் நோக்கத்தில் இதைச் செய்யக்கூடாது. பிரசங்கம் செய்தவருக்கும், விஷயத்துக்கும் பெரும் மரியாதையளித்து, அடக்கத்துடன் கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த முறைதான் பகவத் கீதையிலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. சரியான அதிகாரிகளிடமிருந்து பணிவுடன் ஒருவர் தெய்வீக விஷயத்தைக் கேட்டறிய வேண்டும். ஆகவே, பிரசங்கியான சூத கோஸ்வாமியிடம் மிகுந்த மரியாதையுடன் இந்த முனிவர்கள் பேசினர்.

பதம் 6

ऋषय ऊचुः

त्वया खलु पुराणानि सेतिहासानि चानघ ।
आख्यातान्यप्यधीतानि धर्मशास्त्राणि यान्युत ॥ ६ ॥

ரிஷய ஊச்சு:

த்வயா கலு புராணானி
சேதிஹாஸானி சானகா
ஆக்யாதானி அபி அதீதானி
தர்ம-சாஸ்த்ராணி யானி உத

ரிஷய—ரிஷிகள்; ஊச்சு—கூறினர்; த்வயா—உங்களால்; கலு—சந்தேகமில்லாமல்; புராணானி—விளக்கமான விவரணைகள் கொண்ட புராணங்கள்; ஸ-இதிஹாஸானி—வரலாறுகளுடனும்; ச—மேலும்; அநக—எல்லா களங்கத்திலிருந்தும் விடுபட்ட; ஆக்யாதானி—விளக்கியிருக்கிறீர்கள்; அபி—ஆயினும்; அதீதானி—கற்றறிந்து; தர்ம-சாஸ்த்ராணி—முன்னேற்றமான வாழ்வுக்காக சரியான வழிகளைக் கொடுக்கும் சாஸ்திரங்கள்; யானி—இவையெல்லாம்; உத—கூறிய.

மொழிபெயர்ப்பு

ரிஷிகள் கூறினர்: மதிப்பிற்குரிய சூத கோஸ்வாமியே, எல்லா களங்கத்திலிருந்தும் தாங்கள் முற்றிலும் விடுபட்டிருக்கிறீர்கள். சமய வாழ்வுக்குத் தேவையான புகழ்பெற்ற எல்லா சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மற்றும் சரித்திரங்களிலும் கூட தாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். அவற்றை முறையான வழிகாட்டலின் கீழ் தாங்கள் கற்றதுடன், அவற்றை நீங்கள் விளக்கியும் இருக்கிறீர்கள்.

பொருளுரை

கோஸ்வாமி, அல்லது ஸ்ரீல வியாசதேவரின் உண்மையான பிரதிநிதியொருவர் எல்லாவிதமான களங்கத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். கலி யுகத்தில் நான்கு பெரிய களங்கங்களாக இருப்பவை, 1. பெண்களுடனான தீய உறவு, 2. மிருகவதை, 3. போதைப் பொருள் உட்கொள்ளல், 4. சூதாட்டம், வியாசாஸனத்தில் தைரியமாக அமர்வதற்கு முன், இவ்வெல்லாக் களங்கங்களிலிருந்தும் கோஸ்வாமி ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும். தூய ஒழுக்கமற்றவர்களும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள களங்கங்களிலிருந்தும் விடுபடாதவர்களும் வியாசாஸனத்தில் அமர அனுமதிக்கப்படக் கூடாது. அவர், இவ்வெல்லாக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டிருப்பதோடு, வேதங்களையும், பிற சாஸ்திரங்களையும் நன்றாக கற்றுணர்ந்தவராகவும் இருக்க வேண்டும். புராணங்களும் வேதங்களின் பகுதிகளேயாகும். மகாபாரதம் அல்லது ராமாயணம் போன்ற சரித்திரங்களும் கூட வேதங்களின் பகுதிகளேயாகும். ஆச்சாரியர் அல்லது கோஸ்வாமி இவ்வெல்லா சாஸ்திரங்களிலும் பரிச்சயம் உள்ளவராக இருக்க வேண்டும். அவற்றைப் படிப்பதைவிட, அவைகளைக் கேட்பதும், விளக்குவதும் அதிக முக்கியமுள்ளவையாகும். கேட்பதாலும், விளக்குவதாலும் மட்டுமே சாஸ்திரங்களின் அறிவை ஒருவரால் கிரகித்துக்கொள்ள முடியும். கேட்பது, ‘ஸ்ரவணம்’ என்றும், விளக்குவது ‘கீர்த்தனம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. ஸ்ரவணம், கீர்த்தனம் என்னும் இவ்விரு முறைகளும் ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமானவையாகும். சரியான அதிகாரியிடமிருந்து அடக்கமாகக் கேட்டு, அதனால் உன்னத அறிவை சரியாக அடையப் பெற்ற ஒருவரால் மட்டுமே விஷயத்தை சரியாக விளக்க முடியும்.

பதம் 7

यानि वेदविदां श्रेष्ठो भगवान् बादरायण: ।
अन्ये च मुनय: सूत परावरविदो विदु: ॥ ७ ॥

யானி வேத-விதாம் ஸ்ரேஷ்டோ
பகவான் பாதராயண:
அன்யே ச முனய: சூத
பராவர-விதோ விது:

யானி—அவையனைத்தும்; வேத-விதாம்—வேத விற்பன்னர்கள்; ஸ்ரேஷ்ட:—அனைவரிலும் வயது முதிர்ந்த; பகவான்—பரம புருஷரின் அவதாரம்; பாதராயண:—வியாசதேவர்; அன்யே—பிறர்; ச—மேலும்; முனய:—முனிவர்கள்; சூத—ஓ சூத கோஸ்வாமி; பராவர-வித—கற்றறிந்த பண்டிதர்களுக்கிடையில், சரீர மற்றும் அதைச் சார்ந்துள்ளவற்றின் அறிவில் ஆழ்ந்த அனுபவமுள்ள ஒருவர்; விது:—அறிந்துள்ள ஒருவர்.

மொழிபெயர்ப்பு

ஓ சூத கோஸ்வாமியே, கற்றறிந்த வேதாந்திகளில் மூத்தவரான தாங்கள், பரம புருஷரின் அவதாரமாகிய வியாசதேவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறீர்கள். எல்லா வகையான பௌதிக மற்றும் ஆன்மீக அறிவுகளில் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களான மற்ற முனிவர்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்.

பொருளுரை

ஸ்ரீமத் பாகவதம் என்பது, பிரம்ம-சூத்திரம், அல்லது பாதராயணி வேதாந்த சூத்திரத்தின் மீதான இயற்கையான வியாக்கியானமாகும். இது இயற்கையானது என்றழைக்கப்படுகிறது. ஏனெனில், ஸ்ரீமத் பாகவதம் மற்றும் வேதாந்த சூத்திரம் ஆகிய இரண்டுக்கும் வியாசதேவரே ஆசிரியராவார். வியாசதேவரைத் தவிர, ஆறு வகையான தத்துவ முறைகளின் ஆசிரியர்களான கௌதமர், கணாடர், கபிலர், பதஞ்சலி, ஜைமினி மற்றும் அஷ்டாவக்ரர் போன்ற மற்ற முனிவர்களும் உள்ளனர். வேதாந்த சூத்திரத்தில் ஆஸ்திகம் பூரணமாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கற்பனையான தத்துவ முறைகளில், அநேகமாக சர்வ காரணங்களுக்கும் மூல காரணத்தைப் பற்றிய குறிப்பே கொடுக்கப்படவில்லை. ஒருவர் எல்லா தத்துவ முறைகளிலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதனால் மற்றெல்லா தத்துவ முறைகளுக்கும் எதிராக பாகவதத்தின் பக்தித் கொள்கையை அவரால் பூரணமாக வழங்க முடியும். இதன்பிறகுதான் வியாசாசனத்தில் ஒருவர் அமரலாம். ஸ்ரீல சூத கோஸ்வாமி தகுதியுள்ள ஆசிரியராக இருந்ததால், நைமிஷாரண்ய முனிவர்கள் அவரை வியாசாசனத்தில் அமரக்கூடிய தகுதிக்கு உயர்த்தினர். ஸ்ரீல வியாசதேவர் அதிகாரப்பூர்வமான சக்தி ஆவேச அவதாரமாகையால், அவர் இங்கு பரம புருஷ பகவான் என்று அழைக்கப்படுகிறார்.

பதம் 8

वेत्थ त्वं सौम्य तत्सर्वं तत्त्वतस्तदनुग्रहात् ।
ब्रूयु: स्‍निग्धस्य शिष्यस्य गुरवो गुह्यमप्युत ॥ ८ ॥

வேத்த த்வம் சௌம்ய தத் ஸர்வம்
தத்வதஸ் தத்-அனுக்ரஹாத்
ப்ரூயு: ஸ்நிக்தஸ்ய சிஷ்யஸ்ய
குரவோ குஹ்யம் அபி உத

வேத்த—நீங்கள் ஆழ்ந்த அனுபவமுள்ளவர்; த்வம்—மேன்மை தாங்கிய; சௌம்ய—தூய்மையும், எளிமையும் உள்ள ஒருவர்; தத்—அந்த; ஸர்வம்—எல்லா; தத்வத—உண்மையில்; தத்—அவர்களின்; அனுக்ரஹாத்—தயவினால்; ப்ரூயு:—கூறுவர்; ஸ்நிக்தஸ்ய—அடக்கமுள்ள ஒருவரின்; சிஷ்யஸ்ய—சீடரின்; குரவ:—ஆன்மீக குருமார்கள்; குஹ்யம்—இரகசியம்; அபி உத—அளித்துள்ளனர்.

மொழிபெயர்ப்பு

நீங்கள் பணிவு உள்ளவராகையால், உங்களுடைய ஆன்மீக குருமார்கள், ஒரு நற்பண்புள்ள சீடருக்கு அளிக்கப்பட வேண்டிய எல்லா கல்விகளையும் உங்களுக்கு அளித்துள்ளனர். எனவே, அவர்களிடமிருந்து தாங்கள் கற்றறிந்ததையெல்லாம் எங்களுக்குக் கூறுவீராக.

பொருளுரை

ஆன்மீக வாழ்விலுள்ள வெற்றியின் இரகசியம், ஆன்மீக குருவைத் திருப்திப்படுத்தி அவருடைய உண்மையான ஆசீர்வாதத்தைப் பெறுவதில்தான் உள்ளது. ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாக்குரர், ஆன்மீக குருவின் மீதான தமது புகழ்பெற்ற எட்டு செய்யுள்களில் பின்வருமாறு பாடியுள்ளார்: “எனது ஆன்மீக குருவின் மலர்ப்பாதத்தில் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன். அவரது திருப்தியால் மட்டுமே ஒருவர் பரம புருஷரை திருப்திப்படுத்த முடியும். மேலும் அவர் அதிருப்தியடைந்தால், ஆன்மீக தன்ணுர்வுப் பாதையில் பெருஞ்சேதம்தான் விளையும்”. எனவே, சீடர் ஒருவர் உண்மையான ஆன்மீக குருவிடம் அதிகமாக கீழ்ப்படியும் குணமும், பணிவும் உள்ளவராக இருக்க வேண்டுமென்பது மிகவும் அவசியமாகும். ஒரு சீடர் என்ற முறையில், ஸ்ரீல சூத கோஸ்வாமி இத்தகுதி முறைகளையெல்லாம் பெற்றிருந்தார். ஆகவே ஸ்ரீல வியாசதேவரைப் போன்ற அவரது கற்றறிந்த, தன்னிலையறிந்த ஆன்மீக குருமார்களின் எல்லா ஆதரவுகளையும் அவர் அடையப் பெற்றவரானார். ஸ்ரீல சூத கோஸ்வாமி நம்பகமானவர் என்று நைமிஷாரண்ய முனிவர்கள் நம்பிக்கை கொண்டிருந்ததால், அவரிடமிருந்து கேட்டறிய அவர்கள் ஆவலுள்ளவர்களாக இருந்தனர்.

பதம் 9

तत्र तत्राञ्जसायुष्मन् भवता यद्विनिश्चितम् ।
पुंसामेकान्तत: श्रेयस्तन्न: शंसितुमर्हसि ॥ ९ ॥

தத்ர தத்ராஞ்ஜஸாயுஷ்மன்
பவதா யத் வினிஸ்சிதம்
பும்ஸாம் ஏகான் தத: ஸ்ரேயஸ்
தன் ந: சம்ஸிதும் அர்ஹசி

தத்ர—அதனுடைய; தத்ர—அதனுடைய; அஞ்ஜஸா—சுலபமாக்கி; ஆயுஷ்மன்—நீண்ட ஆயுளுடன் வாழ ஆசீர்வதிக்கப்பட்டு; பவதா—உங்களால்; யத்—எதுவாகிலும்; வினிஸ்சிதம்—ஆராய்ந்து கண்டுபிடித்திருப்பதை; பும்ஸாம்—பொதுமக்களுக்காக; ஏகான்தத:—பூரணமான; ஸ்ரேய—முடிவான நன்மையை; தத்—அது; ந:—எங்களிடம்; சம்ஸிதும்—விளக்குவதற்கு; அர்ஹஸி—தகுதி.

மொழிபெயர்ப்பு

நீண்ட ஆயுள் படைத்தவரே, எது பொதுமக்களுக்கு, பூரணமானதாகவும், முடிவான நன்மையுடையதாகவும் இருக்கும் என்பதை சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தயவுசெய்து எங்களுக்கு விளக்கிக் கூறும்படி வேண்டுகிறோம்.

பொருளுரை

பகவத் கீதையில் ஆச்சாரிய வழிபாடு சிபாரிசு செய்யப்பட்டள்ளது. ஆச்சாரியர்களும், கோஸ்வாமிகளும் பொதுமக்களின் நல்வாழ்வைப் பற்றிய எண்ணத்திலேயே எப்பொழுதும் ஆழ்ந்துள்ளனர். ஆன்மீக நலனை பௌதிக நலம் தானாகவே பின்தொடர்கிறது. எனவே, ஆச்சாரியர்கள் பொதுமக்களின் ஆன்மீக நலனுக்கான வழிகளைக் காட்டியுள்ளனர். இக்கலி யுகத்திலுள்ள அல்லது தொல்லைகள் நிறைந்த இரும்பு யுகத்திலுள்ள மக்களின் தகுதியற்ற நிலையையும், நிந்தனைக்குரிய நிலையையும் முனிவர்கள் கண்டனர். இதனால் வேத சாஸ்திரங்களின் ஓர் சுருக்கத்தைத் தந்தருளுமாறு முனிவர்கள் சூத கோஸ்வாமியிடம் விண்ணப்பித்துக் கொண்டனர். எனவே முனிவர்கள், மக்களுக்கு முடிவான நன்மை பயக்கக்கூடியதான பரிபூரண நன்மையைப்பற்றி விசாரணை செய்தனர். கலி யுக மக்களின் கண்டிக்கத்தக்க செயல்களின் நிலை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

பதம் 10

प्रायेणाल्पायुष: सभ्य कलावस्मिन् युगे जना: ।
मन्दा: सुमन्दमतयो मन्दभाग्या ह्युपद्रुता: ॥ १० ॥

ப்ராயேணால்பாயுஷ: ஸப்ய
கலாவ் அஸ்மின் யுகே ஜனா:
மந்தா: ஸுமந்த-மதயோ
மந்த-பாக்யா ஹி உபத்ருதா:

ப்ராயேண—கிட்டத்தட்ட எப்பொழுதும்; அல்ப—அற்ப; ஆயுஷ:—ஆயுள்; ஸப்ய—கற்றவர்களில் ஒருவர்; கலௌ—இக்கலி யுகத்தில்; அஸ்மின்—இங்கே; யுகே—யுகம்; ஜனா:—பொதுமக்கள்; மந்தா:—மந்தம்; ஸுமந்த-மதய:—தவறான பாதையில் செலுத்தப்பட்ட; மந்த-பாக்ய—பாக்கியமற்ற; ஹி—அதோடு அனைத்திற்கும் மேலாக; உபத்ருதா—குழப்பமான.

மொழிபெயர்ப்பு

ஓ கற்றறிந்தவரே, இரும்பு யுகமான இக்கலி யுகத்தில் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷடமற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர்.

பொருளுரை

பகவானின் பக்தர்கள் பொதுமக்களின் ஆன்மீக முன்னேற்றத்தைக் காண எப்பொழுதும் ஆவலுள்ளவர்களாக இருக்கின்றனர். இக்கலி யுகத்திலுள்ள மக்களுடைய நிலையை ஆராய்ந்தறிந்த நைமிக்ஷாரண்ய முனிவர்கள், மனிதன் குறுகிய காலம் மட்டுமே வாழ்வான் என்பதை அறிந்தனர். கலி யுகத்தில் ஆயுள் குறைக்கப்படுவதற்கு, உணவு பற்றாக்குறை என்ற காரணத்தைவிட ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களே முக்கிய காரணமாகும். முறையான பழக்கவழக்கங்களை அமைத்துக் கொள்வதாலும், எளிய உணவை உண்பதாலும் எந்த மனிதனும் தனது ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதிகமாக உண்பது, அதிகமான புலனின்பம், அதிகமாக பிறர் தயவை நம்பியிருத்தல், மற்றும் செயற்கையான வாழ்வு முறைகள் ஆகியவை மனிதனின் சக்தியை உறிஞ்சிவிடுகின்றன. ஆகவே ஆயுட்காலம் குறைந்துவிடுகிறது.

இந்த யுகத்தைச் சேர்ந்த மக்கள், பௌதிக விஷயத்தில் மட்டுமல்லாமல், ஆன்மீகத் தன்னுணர்வைப் பொறுத்த விஷயத்திலும் மந்தமானவர்களாக இருக்கின்றனர். மனித வாழ்வு குறிப்பாக தன்னுணர்வுக்கென்றே உள்ளதாகும். அதாவது மனிதன் தான் யாரென்பதையும், இவ்வுலகம் என்னவென்பதையும், பரம சத்தியம் என்னவென்பதையும் அறிய முயலவேண்டும். மனித வாழ்வு என்பது, பௌதிக வாழ்விலுள்ள கடினமான போராட்டங்களின் எல்லா துன்பங்களையும் ஜீவராசி முடித்துக் கொள்வதற்கும், அவனுடைய நித்திய வசிப்பிடமாகிய பரம புருஷரிடம் திரும்பிச் செல்வதற்கும் உரிய ஒரு சாதனமாகும். ஆனால், தீமை பயக்கும் கல்வி முறையினால், தன்னுணர்வுக்கான ஆசையே மனிதனுக்கு ஏற்படுவதில்லை. இதைப் பற்றி அவர்கள் அறிய நோர்ந்தாலும், துரதிர்ஷ்டவசமாக தவறான வழிகாட்டிகளால் ஏமாற்றப்படுகின்றனர்.

இந்த யுகத்தில், மனிதன் பல்வேறு அரசியல் கொள்கைகளாலும், பிரிவுகளாலும் வஞ்சிக்கப்படுகிறான். மேலும் பல வகையான புலனின்பப் பொழுதுபோக்குகளான திரைப்படம், விளையாட்டு, சூதாட்டம், ‘கிளப்’, பௌதிக நூல்நிலையம், தீய உறவு, புகைபிடித்தல், மதுவருந்துதல், பொய்யுரைத்தல், சிறு திருட்டு மற்றும் பிதற்றல்கள் போன்றவைகளுக்கும் இரையாகியுள்ளான். அவர்களுடைய மனங்கள் எப்பொழுதும் சஞ்சலங்களுக்கு ஆளாகியிருப்பதுடன், பல்வேறு செயல்களின் காரணத்தால் கவலையால் நிரப்பப்பட்டதாகவும் உள்ளன. இந்த யுகத்தில், பல யோக்கியமற்ற மனிதர்கள், எந்த சாஸ்திரத்தையும் ஆதாரமாகக் கொள்ளாத தங்களுடைய சொந்த மத நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும் பல சந்தர்ப்பங்களில், புலன் இன்பத்திற்கு அடிமையானவர்கள் அத்தகைய இயக்கங்களால் கவரப்படுகின்றனர். இதன் விளைவாக, மதத்தின் பெயரால் பல பாவங்கள் செய்யப்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு மன அமைதியோ அல்லது உடல் ஆரோக்கியமோ இல்லாமல் போய்விட்டது. மாணவ (பிரம்மச்சாரி) சமூகம் தற்போது பராமரிக்கப்படுவதில்லை. குடும்பஸ்தர்களும் கிருஹஸ்த-ஆஷ்ரமத்திற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இதனால் இத்தகைய கிருஹஸ்த-ஆஷ்ரமங்களிலிருந்து உருவாகும் பெயரளவேயான வானப்ரஸ்தர்களும், சந்நியாசிகளும் உறுதியான பாதையிலிருந்து சுலபமாக வழி தவறிவிடுகின்றனர். கலி யுகத்தில் முழு சூழ்நிலையும் மத நம்பிக்கையற்ற நிலையினால் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஆன்மீக முக்கியத்துவத்தில் மனிதனுக்கு இருந்த ஆர்வம் குன்றிவிட்டது. பௌதிகமான புலனின்பமே தற்போதைய நாகரிகமாக உள்ளது. இந்த ஜட நாகரிகங்களை வளர்ப்பதற்காக, மனிதன் உயர்வு, தாழ்வு கொண்ட நாடுகளையும், சமுதாயங்களையும் உருவாக்கியுள்ளான். இதனால், வேறுபட்ட இப்பிரிவிகளுக்கிடையே போர் எனும் முடிவற்ற சுமை உருவாகியுள்ளது. எனவே, தற்போதைய மனித சமூகத்தின் மதிப்பு நிலைகுலைந்திருப்பதால் ஆன்மீக தரத்தை உயர்த்துவது மிகச் சிரமமானதாகியிருக்கிறது. நைமிஷாரண்ய முனிவர்கள் எல்லா வீழ்ந்த ஆத்மாக்களையும் விடுவிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் இங்கு இதற்கான பரிகாரத்தை ஸ்ரீல சூத கோஸ்வாமியிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பதம் 11

भूरीणि भूरिकर्माणि श्रोतव्यानि विभागश: ।
अत: साधोऽत्र यत्सारं समुद्‍धृत्य मनीषया ।
ब्रूहि भद्रायभूतानां येनात्मा सुप्रसीदति ॥ ११ ॥

பூரீணி பூரி-கர்மாணி
ஸ்ரோதவ்யானி விபாகச:
அத: ஸாதோ ’த்ர யத் ஸாரம்
ஸமுத்த்ருத்ய மனீஷயா
ப்ரூஹி பத்ராய பூதானாம்
யேனா த்மாஸுப்ரஸீததி

பூரீணி—பல வகைப்பட்ட; பூரி—பல; கர்மாணி—கடமைகள்; ஸ்ரோதவ்யானி—கற்கப்பட வேண்டிய; விபாகச:—விஷயங்களின் பிரிவுகளால்; அத:—எனவே; ஸாதோ—ஓ முனிவரே; அத்ர—இங்கு; யத்—எதுவாகிலும்; ஸாரம்—சாராம்சம்; ஸமுத்த்ருத்ய—தேர்வு செய்து; மனீஷயா—உங்களுடைய அறிவுக்கு எட்டியவாறு; ப்ரூஹி—தயவுகூர்ந்து எங்களுக்குக் கூறுவீராக; பத்ராய—நன்மைக்காக; பூதானாம்—ஜீவராசிகள்; யேன—எதனால்; ஆத்மா—ஆத்மா; ஸுப்ரஸீததி—பூரண திருப்தியடைகிறார்.

மொழிபெயர்ப்பு

பல வகையான சாஸ்திரங்களில் பல வகையான கடமைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் பல்வேறு பிரிவுகளையும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கற்றறிய முடியும். எனவே, ஓ முனிவரே, தயவுசெய்து இவ்வெல்லா சாஸ்திரங்களிலிருந்தும் சாராம்சத்தைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும் தயவுகூர்ந்து அதை விளக்குங்கள். இத்தகைய உபதேசங்களால் அவர்களுடைய இதயங்கள் பூரணமாக திருப்தியடையக்கூடும்.

பொருளுரை

ஜடம் மற்றும் பௌதிக மூலப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து ஆத்மா வேறுபட்டுள்ளது. அது தன்மையில் ஆன்மீகமானதாக இருப்பதால், அது எந்த அளவு பௌதிக ஏற்பாட்டாலும் திருப்தி அடையாததாகும். எல்லா சாஸ்திரங்களும், ஆன்மீக உபதேசங்களும் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்காகவே உள்ளன. வெவ்வேறு காலங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் உள்ள வெவ்வேறு வகையான ஜீவராசிகளுக்கு ஏற்றவாறு, பலதரப்பட்ட செயல்முறைகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இதனால் தான் சாஸ்திரங்களின் எண்ணிக்கையும் எண்ணிலடங்காதவையாக உள்ளன. பலதரப்பட்ட இந்த சாஸ்திரங்களில், பல்வேறு முறைகளும், விதிக்கப்பட்ட கடமைகளும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. கலி யுக மக்கள் வீழ்ந்த நிலையிலிருப்பதால், பல்வேறு சாஸ்திரங்களைக் கற்றறிந்து அவற்றைப் பின்பற்றுவது அவர்களுக்குச் சாத்தியமல்ல. எனவே இவ்வெல்லா சாஸ்திரங்களின் சாராம்சத்தை மட்டும் விவரிக்கும்படி, நைமிஷாரண்ய முனிவர்கள் ஸ்ரீ சூத கோஸ்வாமியை கேட்டுக் கொண்டனர்.

மனிதர்களை ஆன்மீக படிக்கு உயர்த்துவதற்கு, வர்ண மற்றும் ஆஸ்ரம சமூகமே சிறந்த ஸ்தாபனமாக கருதப்பட்டது. ஆனால் கலி யுகத்தின் காரணத்தால், இந்த ஸ்தாபனங்களின் சட்டதிட்டங்களை நிறைவேற்றுவது சாத்தியமல்ல. அதோடு வர்ணாஸ்ரம ஸ்தாபனம் கட்டளையிடுவதைப் போல், பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் தங்களுக்கு உள்ள உறவுகளை முற்றிலுமாக துண்டித்துக் கொள்வது சாத்தியமானதல்ல. சூழ்நிலை முழுவதுமே எதிர்ப்புகள் நிறைந்ததாக உள்ளது. இதைக் கருத்திற்கொண்டு பார்த்தால், இந்த யுகத்திலுள்ள சாதாரண மனிதனுக்கு ஆன்மீக விடுதலை மிகவும் சிரமமானது என்பதை ஒருவர் அறியமுடியும். முனிவர்கள் இவ்விஷயத்தை ஸ்ரீ சூத கோஸ்வாமியிடம் கேட்டதற்குரிய காரணம் பின்வரும் சுலோகங்களில் விளக்கப்பட்டுள்ளது.

பதம் 12

सूत जानासि भद्रं ते भगवान् सात्वतां पति: ।
देवक्यां वसुदेवस्य जातो यस्य चिकीर्षया ॥ १२ ॥

ஸூத ஜானாஸி பத்ரம் தே
பகவான் ஸாத்வதாம் பதி:
தேவக்யாம் வஸுதேவஸ்ய
ஜாதோ யஸ்ய சிகீர்ஷயா

ஸூத—சூத கோஸ்வாமியே; ஜானாஸி—உங்களுக்குத் தெரியும்; பத்ரம் தே—உமக்கு எல்லா ஆசீர்வாதங்களும் உண்டாகட்டும்; பகவான்—பரம புருஷர்; ஸாத்வதாம்—தூய பக்தர்களிடமிருந்து; பதி:—காவலர்; தேவக்யாம்—தேவகியின்; வஸுதேவஸ்ய—வசுதேவரால்; ஜாத:—அவருக்குப் பிறந்த; யஸ்ய—காரணத்துக்காக; சிகீர்ஷயா—நிறைவேற்றுதல்.

மொழிபெயர்ப்பு

ஓ சூத கோஸ்வாமியே, உமக்கு மங்களம் உண்டாகட்டும். எக்காரணத்துக்காக, வசுதேவரின் மகனான பரம புருஷர் தேவகியின் கருவில் தோன்றினார் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

பொருளுரை

‘பகவான்’ என்பது செல்வம், பலம், புகழ், அழகு, அறிவு, மற்றும் துறவு ஆகிய அனைத்திற்கும் ஆளுநராகிய சர்வவல்லமை பொருந்தியவரான இறைவனை குறிப்பதாகும். அவரே தமது தூய பக்தர்களைக் காப்பவராவார். பகவான் அனைவரிடமும் சமநோக்கு கொண்டவராக இருந்தாலும், குறிப்பாக தமது பக்தர்களிடம் அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். ‘ஸத்’ என்பது பரபிரம்மத்தைக் குறிக்கின்றது. மேலும், பரபிரம்மத்தின் தொண்டர்களாக இருப்பவர்கள் ‘சாத்வதர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். அத்தகைய தூய பக்தர்களின் காவலரான பரம புருஷர், ‘சாத்வதர்களின்’ காவலர் என்று அறியப்படுகிறார். ‘பத்ரம் தே’ அல்லது “உமக்கு ஆசிர்வாதங்கள்” என்பது, பேச்சாளரிடம் இருந்து பரபிரம்மத்தை அறிய வேண்டும் என்னும், முனிவர்களின் மனக் கவலையைக் குறிக்கிறது. பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர், வசுதேவரின் மனைவியான தேவகியின் முன் தோன்றினார். வசுதேவர், தெய்வீகமான நிலைக்கு அடையாளமாக விளங்குகிறார். அத்தகைய ஒருவரிடம்தான் பரம புருஷர் மகனாகத் தோன்றுகிறார்.

பதம் 13

तन्न: शुश्रूषमाणानामर्हस्यङ्गानुवर्णितुम् ।
यस्यावतारो भूतानां क्षेमाय च भवाय च ॥ १३ ॥

தன் ந: சுஸ்ரூக்ஷமாணானாம்
அர்ஹசி அங்கானுவர்ணி தும்
யஸ்யாவதாரோ பூதானாம்
க்ஷேமாய ச பவாய ச

தத்—அந்த; ந—எங்களிடம்; சுஸ்ரூக்ஷமாணானாம்—அதற்காக முயற்சி செய்பவர்கள்; அர்ஹஸி—அதைச் செய்ய வேண்டும்; அங்க—ஓ! சூத கோஸ்வாமி; அனுவர்ணிதும்—முந்தைய ஆச்சாரியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் முறையில் விளக்கம் அளிக்க; யஸ்ய—எவருடைய; அவதார:—அவதாரம்; பூதானாம்—ஜீவராசிகளிடம் இருந்து; க்ஷேமாய—நன்மைக்காக; ச—மேலும்; பவாய—முன்னேற்றம்; ச—மேலும்.

மொழிபெயர்ப்பு

ஓ சூத கோஸ்வாமி, பரம புருஷரையும் அவரது அவதாரங்களையும் பற்றி அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம். முந்தைய ஆச்சாரியர்களால் அளிக்கப்பட்ட உபதேசங்களை தயவுசெய்து எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள். ஏனெனில், அவைகளைப் பற்றி பேசுவதாலும் கேட்பதாலும், ஒருவர் உயர்வடைகிறார்.

பொருளுரை

பரபிரம்மத்தின் உன்னதமான செய்தியைக் கேட்பதற்குரிய நிபந்தனைகள் இங்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதல் நிபந்தனை, சபையோர் மிகவும் உண்மையானவர்களாகவும், கேட்க ஆவலுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். மேலும், பேச்சாளர் அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியரிடமிருந்து கீழிறங்கி வரும் சீடப்பரம்பரையின் சங்கிலித் தொடரில் இடம் பெற்றவராக இருக்க வேண்டும். பரபிரம்மத்தின் உன்னதமான செய்தி, பௌதிக விஷயங்களில் ஆழ்ந்துள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியாததாகும். உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் தூய்மையடைகிறார். எனவே, ஒருவர் சீடப் பரம்பரையின் சங்கிலித் தொடரில் இடம் பெற்றவராய் இருந்து, அடக்கத்துடன் கேட்கும் ஆன்மீகக் கலையை அவர் கற்றறிய வேண்டும். சூத கோஸ்வாமி மற்றும் நைமிஷாரண்ய முனிவர்கள் ஆகிய இவர்களுக்கு இவ்வெல்லாத் தகுதிகளும் இருந்தன. ஏனெனில் ஸ்ரீல சூத கோஸ்வாமி ஸ்ரீல வியாசதேவரின் பரம்பரைத் தொடரில் இடம் பெற்றவராயும், நைமிஷாரண்ய முனிவர்கள் அனைவரும் உண்மையை அறிய ஆவல் கொண்ட நேர்மையுள்ள ஆத்மாக்களாகவும் இருந்தனர். இவ்வாறாக எல்லா தகுதிகளும் இருந்ததால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அசாதாரணமான தெய்வீகச் செயல்கள், அவரது அவதாரம், அவரது பிறப்பு, அவரது தோற்றம் அல்லது மறைவு, அவரது உருவங்கள் மற்றும் அவரது நாமங்கள் போன்றவைகளெல்லாம் சுலபமாக புரிந்துகொள்ளப்படக் கூடியவை ஆகின்றன. இத்தகைய சம்பாஷணைகள், ஆன்மீகத் தன்னுணர்வுப் பாதையிலுள்ள அனைவருக்கும் உதவுகின்றன.

பதம் 14

आपन्न: संसृतिं घोरां यन्नाम विवशो गृणन् ।
तत: सद्यो विमुच्येत यद्ब‍िभेति स्वयं भयम् ॥ १४ ॥

ஆபன்ன: ஸ்ம்ஸ்ருதிம் கோராம்
யன்-நாம விவசோ க்ருணன்
தத: ஸத்யோ விமுச்யேத
யத் பிபேதி ஸ்வயம் பயம்

ஆபன்ன:—சிக்கிக் கொண்டு இருப்பதால்; ஸம்ஸ்ருதிம்—பிறப்பு, இறப்பெனும் சிக்கலில்; கோராம்—மிகவும் சிக்கலான; யத்—எது; நாம—புனித நாமம்; விவச:—அறியாமல்; க்ருணன்—பாடுதல்; தத:—அதிலிருந்து; ஸத்ய:—உடனே; விமுச்யேத—விடுதலை பெறுவார்; யத்—அது; பிபேதி—அஞ்சுகிறது; ஸ்வயம்—தானாகவே; பயம்—பயம் கூட.

மொழிபெயர்ப்பு

பயமே சொரூபமானதும் கூட கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன.

பொருளுரை

பரம புருஷ பகவானாகிய வாசுதேவன் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் பரம ஆளுநராவார். பகவானின் கடுங்கோபத்திற்கு அஞ்சாதவர் ஒருவரும் படைப்பில் இல்லை. மாபெரும் அசுரர்களான இராவணன், ஹிரண்யகசிபு மற்றும் கம்ஸனைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஜீவராசிகள் அனைவரும் பரம புருஷனால் கொல்லப்பட்டனர். மேலும் சர்வ வல்லமை பொருந்தியவரான வாசுதேவன், தமது சுய சொரூபத்தின் சக்திகளையெல்லாம் அவரது நாமத்தில் பொருத்தியுள்ளார். அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருக்குள்ளேய அடங்கியுள்ளன. கிருஷ்ணரின் நாமத்தைக் கேட்டதும் பயமே உருவாக உள்ளதும், அஞ்சுகிறது என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கிருஷ்ணா என்ற நாமத்திற்கும், கிருஷ்ணருக்கும் வேறுபாடில்லை என்பதையே குறிக்கிறது. எனவே, கிருஷ்ணரின் நாமம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமமான சக்தியைக் கொண்டதாகும். அதில் சிறிதும் வித்தியாசமில்லை. எனவே, மிகப்பெரிய ஆபத்துகளுக்கு இடையிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமங்களை உதவிக்கு அழைக்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தை, அறியாமலோ அல்லது சூழ்நிலைகளின் கட்டாயத்தாலோ உச்சரித்தாலும் பிறப்பு, இறப்பெனும் சிக்கலிலிருந்து விடுபட அது ஒருவருக்கு உதவுகின்றது.

பதம் 15

यत्पादसंश्रया: सूत मुनय: प्रशमायना: ।
सद्य: पुनन्त्युपस्पृष्टा: स्वर्धुन्यापोऽनुसेवया ॥ १५ ॥

யத்-பாத-ஸம்ஸ்ரயா: சூத
முனய: ப்ரசமாயனா:
ஸத்ய: புனந்தி உபஸ்ப்ருஷ்டா:
ஸ்வர் துனி-ஆபோ ’நுசேவயா

யத்—எவருடைய; பாத—தாமரைப் பாதங்களில்; ஸம்ஸ்ரயா:—புகலிடம் கொண்டுள்ளவர்கள்; ஸூத—ஓ! சூத கோஸ்வாமி; முனய:—மகா முனிவர்கள்; ப்ரசமாயனா:—பகவத் பக்தியில் ஆழ்ந்துள்ள; ஸத்ய:—உடனே; புனந்தி—புனிதப்படுத்த; உபஸ்ப்ருஷ்டா:—சகவாசத்தினாலேயே; ஸ்வர்துனீ—புனிதமான கங்கையின்; ஆப:—நீர்; அனுஸேவயா—உபயோகத்திற்கு கொண்டுவர.

மொழிபெயர்ப்பு

ஓ சூதரே, பகவானின் தாமரைப் பாதங்களில் பூரணமாக புகலிடம் கொண்டவர்களான அச்சிறந்த முனிவர்களால், தங்களுடன் தொடர்பு கொள்பவர்களை உடனே புனிதப்படுத்திவிட முடியும். ஆனால் கங்கை நீரோ தொடர்ந்த உபயோகத்திற்குப் பின்தான் புனிதமடையச் செய்கிறது.

பொருளுரை

புனித நதியான கங்கையின் நீரைவிட பகவானின் தூய பக்தர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். கங்கை நீரை தொடர்ந்து உபயோகித்தபின், ஒருவரால் ஆன்மீக நன்மையைப் பெற முடியும். ஆனால் பகவானுடைய தூய பக்தரின் கருணையினால் ஒருவர் உடனே புனிதமடைய முடியும். ஒருவர், சூத்திரராக, பெண்ணாக அல்லது வியாபாரியாக இருந்தாலும் கவலையில்லை. எவருமே பகவானின் மலர்ப் பாதங்களில் புகலிடம் கொண்டு பரம புருஷரிடம் திரும்பிச் செல்லலாம் என்று பகவத் கீதை கூறுகிறது. பகவானின் மலர்ப் பாதங்களில் புகலிடம் கொள்வது என்றால், தூய பக்தர்களிடம் புகலிடம் கொள்வதாகும். பகவத் தொண்டு செய்வதை மட்டுமே ஒரே தொழிலாகக் கொண்ட தூய பக்தர்கள், பிரபுபாதா மற்றும் விஷ்ணுபாதா போன்ற நாமங்களால் கௌரவிக்கப்படுகின்றனர். இத்தகைய பக்தர்கள் பகவானுடைய தாமரைப் பாதங்களின் பிரதிநிதிகள் என்பதையே இது குறிக்கிறது. எனவே, ஒரு தூய பக்தனின் மலர்ப் பாதங்களில் புகலிடம் கொண்டு அவரைத் தமது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொள்பவர் யாராக இருந்தாலும், அவரால் உடனே தூய்மையடைய முடியும். வீழ்ந்த ஆத்மாக்கள் மீண்டும் தம்மிடம் திரும்பி வரவேண்டும் என்று பகவான் விரும்புகிறார். ஆகவே, அவரது பக்தர்கள் இவ்வீழ்ந்த ஆத்மாக்களை ஜடவுலகிலிருந்து காப்பாற்றுவதன் மூலம், பகவானிடம் மிகவும் அந்தரங்கமான தொண்டில் ஈடுபட்டிருப்பதால், அவர்கள் பகவானுக்குச் சமமாக கௌரவிக்கப்படுகின்றனர். இத்தகைய தூய பக்தர்கள், சாஸ்திரங்களுக்கேற்ப பகவானின் உதவியாளர்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். தூய பக்தரின் உண்மையான சீடரொருவர் ஆன்மீக குருவை பகவானுக்கு நிகராக கருதுவார். ஆனால் தன்னை அவர் பகவானின் தொண்டருக்கும் தொண்டராகவே எப்பொழுதும் கருதுகிறார். இதுவே தூய பக்திமார்க்கமாகும்.

பதம் 16

को वा भगवतस्तस्य पुण्यश्लोकेड्यकर्मण: ।
शुद्धिकामो न श‍ृणुयाद्यश: कलिमलापहम् ॥ १६ ॥

கோ வா பகவதஸ் தஸ்ய
புண்ய-ஸ்லோகேத்ய-கர்மண:
சுத்தி-காமோ ந ஸ்ருணுயாத்
யச: கலி-மலாபஹம்

க:—யார்; வா—மாறாக; பகவத:—பகவானின்; தஸ்ய—அவரது (பகவானின்); புண்ய—மாசற்ற; ஸ்லோக-ஈத்ய—பிரார்த்தனைகளால் வழிபடத்தக்கவர்; கர்மண:—கர்மங்கள்; சுத்தி-காம:—எல்லா பாவங்களிலிருந்தும் விடுபெற விரும்பும்; ந—இல்லை; ஸ்ருணுயாத்—கேட்பவர்; யச:—மகிமைகளை; கலி—சண்டை சச்சரவுகள் கொண்ட யுகத்தின்; மல-அபஹம்—தூய்மை அடைவதற்குரிய வழி.

மொழிபெயர்ப்பு

கலி யுகத்திலுள்ள களங்கங்களிலிருந்து விடுபட விரும்பும் அதே சமயம், பகவானின் மாசற்ற மகிமைகளைக் கேட்க விரும்பாதவராகவும் இருப்பவர் யாராவது உண்டா?

பொருளுரை

கலி யுகம் சண்டை சச்சரவுகள் நிறைந்ததால் அது நிந்தனைக்குரிய ஒரு யுகம், கலி யுகம் தீய பழக்கவழக்கங்களால் மிகவும் ஊறிப்போய்விட்டதால், மிகச் சிறியதொரு தப்பபிப்பிராயம் ஏற்பட்டாலும் அங்கு மிகப்பெரிய ஒரு சண்டை உருவாகிவிடுகின்றது. பகவானின் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள், தங்களின் சுய-முன்னேற்றத்தில் பற்றற்வர்களாக இருக்கின்றனர். மேலும் பலன்நோக்குக் கருமங்களின் விளைவுகளிலிருந்தும், மனோ தத்துவ கற்பனைகளிலிருந்தும் விடுபட்டவர்களுமான அவர்கள், குழப்பமான இந்த யுகத்தின் தீமைகளிலிருந்து வெளியேறுவதற்குத் தகுதி பெற்றவர்களாவர். அமைதியுடனும், சினேகத்துடனும் வாழ மக்கள் தலைவர்கள் மிகவும் ஆவலுள்ளவர்களாக உள்ளனர். ஆனால் பகவானின் புகழைப் பாடுவதெனும் இந்த எளிய முறை அவர்களுக்குத் தெரியவில்லை. அதாவது மூடர்களான தலைவர்கள் பகவானின் இருப்பையே முற்றிலும் மறுக்க விரும்புகின்றனர். மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், இத்தகைய தலைவர்கள் வருடந்தோறும் பல்வேறு திட்டங்களை உருவாக்குகின்றனர். ஆனால், இவையனைத்தும் பகவானின் இயற்கையால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடைய அமைதி மற்றும் சினேகத்துக்குரிய முயற்சிகளெல்லாம் தோல்விகண்டு வருகின்றன என்பதைக் காண அவர்களுக்குக் கண்களில்லை. ஆனால் அந்த தடையை கடப்பதற்குரிய வழி இதோ இருக்கிறது. உண்மையான அமைதியை நாம் எதிர்பார்ப்போமாயின், பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அறிவதற்குரிய பாதையை நாம் திறந்து, ஸ்ரீமத் பாகவதத்தின் ஏடுகளில் விவரிக்கப்படுவதைப் போல் பகவானின் புகழ்மிக்க செயல்களை நாம் போற்றிப் புகழ வேண்டும்.

பதம் 17

तस्य कर्माण्युदाराणि परिगीतानि सूरिभि: ।
ब्रूहि न: श्रद्दधानानां लीलया दधत: कला: ॥ १७ ॥

தஸ்ய கர்மாணி உதாராணி
பரிகீதானி சூரிபி:
ப்ரூஹி ந: ச்ரத்ததானானாம்
லீலயா ததத:கலா:

தஸ்ய—அவருடைய (பகவான்); கர்மாணி—உன்னதச் செயல்கள்; உதாராணி—அற்புதமான; பரிகீதானி—ஒலிபரப்பு; சூரிபி:—மகாத்மாக்களால்; ப்ருஹி—தயவுகூர்ந்து கூறுவீராக; ந:—எங்களிடம்; ச்ரத்ததானானாம்—மரியாதையுடன் வரவேற்கத் தயாராக; லீலயா—லீலைகள்; ததத:—அவதரித்து; கலா—அவதாரங்கள்.

மொழிபெயர்ப்பு

அவரது உன்னதச் செயல்கள் அற்புதமும், கவர்ச்சியும் கொண்டவையாகும். நாரதரைப் போன்ற கற்றறிந்த மகா முனிவர்கள் அவற்றைப் புகழ்ந்து பாடுகின்றனர். ஆகவே, பல்வேறு அவதாரங்களில் அவர் இயற்றும் சாகச செயல்களைப் பற்றி கேட்க ஆவலாக உள்ள எங்களிடம் அவற்றைக் கூறுவீராக.

பொருளுரை

புத்தியில் தாழ்ந்தவர்கள் கூறுவதைப் போல் பரம புருஷர் செயலற்றிருப்பதே கிடையாது. அவரது செயல்கள் அற்புதமும், வசீகரமும் கொண்டவையாகும். பௌதிகம், ஆன்மீகம் ஆகிய அவரது இரு படைப்புக்களும் எல்லா அதிசயங்களையும் கொண்டிருப்பதுடன், பல்வேறு வகைப்பட்டவையுமாகும். முக்திபெற்ற ஆத்மாக்களான ஸ்ரீல நாரதர், வியாசர், வால்மீகி, தேவலர், அஸிதர், மத்வர், ஸ்ரீ சைதன்யர், ராமானுஜர், விஷ்ணுஸ்வாமி, நிம்பர்கர், விஸ்வநாதர், பலதேவர், பக்திவிநோதர், சித்தாந்த சரஸ்வதி போன்ற மற்றும் பல்வேறு கற்றறிந்த, தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் அவை நன்றாக விளக்கப்பட்டுள்ளன. இந்த பௌதிக, ஆன்மீக சிருஷ்டிகளிரண்டும், பூரணமான செல்வம், அழகு மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆனால் ஆன்மீக பிரதேசமோ பூரணமான அறிவு, ஆனந்தம் மற்றும் நித்தியத் தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், அது மிகவும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது. ஆன்மீக இராஜ்ஜியத்தின் பிரதிபலிப்பாக ஜட படைப்புக்கள் சில காலத்துக்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றை திரைப்படங்களுக்கு ஒப்பிடலாம். போலியான பொருட்களால் கவரப்படும் புத்தியில் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்த மக்களை அவை ஈர்க்கின்றன. இத்தகைய மூடர்களிடம் உண்மை நிலையைப் பற்றிய தகவல் இல்லை. மேலும் போலியான ஜடத் தோற்றமே அனைத்தும் என்று அவர்கள் முடிவு செய்து விடுகின்றனர். ஆனால், வியாசர் மற்றும் நாரதர் போன்ற முனிவர்களால் வழிநடத்தப்படும் அதிக புத்தியுள்ளவர்கள், நித்தியமானதான பகவானின் இராஜ்ஜியம் அதிக இன்பம் ஊட்டக்கூடியதும், மிகப்பெரியதும், நித்தியமான பூரண ஆனந்தமும், அறிவும் உடையது என்பதை அறிவார்கள். பகவானுடைய செயல்களிலும், அவரது தெய்வீகமான உலகத்தைப் பற்றிய அறிவிலும் அனுபவமற்றவர்கள், சில சமயங்களில் பகவானின் அவதார லீலைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு அவரது தயவைப் பெறுகின்றனர். அங்கு, பரலோகத்தில், தமது சகவாசத்தின் நித்திய ஆனந்தத்தை பகவான் வெளிப்படுத்துகின்றார். இத்தகைய செயல்களால், பௌதிக உலகின் பந்தப்பட்ட ஆத்மாக்களை அவர் ஈர்க்கின்றார். இக்கட்டுண்ட ஆத்மாக்களில் சிலர், பொய்யான பௌதிகப் புலன் இன்பத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் ஆன்மீக உலகிலுள்ள தங்களது உண்மையான வாழ்வை மறுப்பதில் ஈடுபட்டுள்ளனர். புத்தியில் தாழ்ந்தவர்களான இவர்கள் ‘கருமிகள்’ அல்லது பலனை எதிர்பார்க்கும் தொழிலாளிகள் என்றும், ‘ஞானிகள்’ அல்லது வறட்டு மனக் கற்பனையாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவ்விரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மேலே உள்ளவர்கள், ‘ஸாத்வதர்கள்’ அல்லது பக்தர்கள் என்று அழைக்கப்படும் ஆன்மீகவாதிகளாவர். இவர்கள், தீவிரமான ஜடச் செயல்களிலும் ஜடக் கற்பனைகளிலும் ஆழ்ந்து விடாமல் நிலையான பகவத் தொண்டில் ஈடுபட்டு, இதனால் ‘கருமிகளும்’, ‘ஞானிகளும்’ அறிந்திராத மிகவுயர்ந்த ஆன்மீக நன்மையைப் பெறுகின்றனர்.

பௌதிகம் மற்றும் ஆன்மீகம் எனப்படும் இவ்விரு உலகங்களுக்கும் பரம ஆளுநராகிய பகவானுக்கு பல வகைப்பட்ட எண்ணற்ற அவதாரங்கள் உள்ளன. பிரம்மா, ருத்ரன், மனு, பிருது மற்றும் வியாசர் ஆகியோர் பகவானின் பௌதிக குணத்தைப் பிரதிநிதிக்கும் அவதாரங்களாவர். ஆனால் ராமர், நரசிம்ஹர், வராஹர் மற்றும் வாமனர் ஆகியோர் அவரது தெய்வீக அவதாரங்களாவர். எல்லா அவதாரங்களுக்கும் பிறப்பிடமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார். எனவே அவரே எல்லா காரணங்களுக்கும் மூல காரணமாவார்.

பதம் 18

अथाख्याहिहरेर्धीमन्नवतारकथा: शुभा: ।
लीला विदधत: स्वैरमीश्वरस्यात्ममायया ॥ १८ ॥

அதாக்யாஹி ஹரேர் தீமன்
அவதார-கதா: சுபா:
லீலா விததத: ஸ்வைரம்
ஈஸ்வரஸ்யாத்ம-மாயயா

அத—எனவே; ஆக்யாஹி—விளக்கிக் கூறுங்கள்; ஹரே—பகவானின்; தீமன்—ஓ விவேகமுள்ளவரே; அவதார—அவதாரங்கள்; கதா:—வரலாறுகள்; சுபா:—மங்களகரமான; லீலா—சாகசங்கள்; விததத:—இயற்றப்பட்ட; ஸ்வைரம்—லீலைகள்; ஈஸ்வரஸ்ய—பரம ஆளுநருடைய; ஆத்ம—சுய; மாயயா—சக்திகள்.

மொழிபெயர்ப்பு

விவேகியான சூதரே, பரம புருஷரின் பல வகையான அவதாரக் கதைகளை தயவுகூர்ந்து எங்களுக்கு விவரிப்பீராக. பரம ஆளுநரான, பகவானின் இத்தகைய மங்களகரமான சாகசங்களும், திருவிளையாடல்களும் அவரது அந்தரங்க சக்திகளால் நிறைவேற்றப்படுகின்றன.

பொருளுரை

பௌதிக உலகங்களை படைத்து, காத்து அழிப்பதற்காக பரம புருஷ பகவான் தாமே பல்லாயிரக்கணக்கான உருவங்களில் அவதரிக்கிறார். மேலும் உன்னதமான அவ்வுருவங்களால் வெளிப்படுத்தப்படும் சாகசங்கள் சர்வ மங்களம் கொண்டவையாகும். அச்செயல்களின் போது அவருடன் இருப்பவர்கள் மற்றும் அத்தகைய செயல்களின் தெய்வீகமான வர்ணனைகளைக் கேட்பவர்கள் ஆகிய இரு பிரிவினருமே நன்மையடைகின்றனர்.

பதம் 19

वयं तु न वितृप्याम उत्तमश्लोकविक्रमे ।
यच्छृण्वतां रसज्ञानां स्वादु स्वादु पदे पदे ॥ १९ ॥

வயம் து ந வித்ருப்யாம
உத்தம-ச்லோக-விக்ரமே
யச்-ஸ்ருண்வதாம் ரஸ-ஞானாம்
ஸ்வாது ஸ்வாது பதே பதே

வயம்—நாங்கள்; து—ஆனால்; ந—இல்லை; வித்ருப்யாம—ஓய்ந்திருக்க; உத்தம-ச்லோக—உன்னதமான சுலோகங்களால் போற்றப்படுபவரான பரம புருஷர்; விக்ரமே—சாகசங்கள்; யச்—எது; ஸ்ருண்வதாம்—தொடர்ந்து கேட்பதால்; ரஸ—மனநிலை; ஞானாம்—அனுபவமுள்ளவர்கள்; ஸ்வாது—அனுபவிக்கும்; ஸ்வாது—சுவையான; பதே பதே—ஒவ்வொரு அடியிலும்.

மொழிபெயர்ப்பு

மந்திரங்களாலும், பிரார்த்தனைகளாலும் புகழப்படுபவரான பரம புருஷரின் தெய்வீகமான திருவிளையாடல்களைக் கேட்பதில் நாங்கள் களைப்படைவதே இல்லை. பகவானுடனான உன்னதமான உறவுமுறைகளில் ஒரு சுவையை விருத்தி செய்து கொண்டவர்கள் ஒவ்வொரு கணமும் அவரது திருவிளையாடல்களைக் கேட்டு இன்பம் அடைகின்றனர்.

பொருளுரை

பௌதிகமான கதைகள், கட்டுக்கதைகள் அல்லது சரித்திரம் ஆகியவற்றிற்கும் பகவானின் உன்னத லீலைகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சரித்திரங்களில் பகவானுடைய அவதார லீலைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இராமாயணம், மகாபாரதம், மற்றும் புராணங்கள் ஆகியவை, கடந்த யுகங்களில் பகவானுடைய அவதார லீலைகளின் தொடர்பாக குறித்து வைக்கப்பட்ட சரித்திரங்களாகும். இதனால் அவற்றை திரும்பத் திரும்ப படித்த பின்பும் அவை பசுமையாகவே உள்ளன. உதாரணமாக, பகவத் கீதையையோ அல்லது ஸ்ரீமத் பாகவதத்தையோ தன் வாழ்நாள் முழுவதும் ஒருவர் திரும்பத்திரும்ப படித்தாலும் அவற்றில் புதுப்புது செய்திகள் தோன்றுவதை அவரால் காணமுடியும். ஆன்மீகம் (சேதனம்) உயிரோட்டம் உள்ளதாகும். ஜடம் உயிரற்றதாகும். அதைப் போலவே, ஆன்மீகச் செய்திகள் சுறுசுறுப்பு மிக்கவையாகவும், பௌதிகச் செய்திகள் செயலற்றவையாகவும் உள்ளன. தெய்வீகமான விஷயங்களை அறிவதற்குத் தேவையான ஒரு சுவையை விருத்தி செய்து கொண்டவர்கள் அத்தகைய வர்ணணைகளைக் கேட்பதில் களைப்படைவதே இல்லை. ஒருவருக்கு பௌதிக செயல்கள் விரைவில் திகட்டிவிடுகின்றன. ஆனால் உன்னத அல்லது பக்தித் தொண்டால் ஒருவர் திகட்டப்படுவதே இல்லை. ‘உத்தம-ஸ்லோக’ என்பது அறியாமைக்கு இடமில்லாத இலக்கியம் என்பதைக் குறிக்கின்றது. பௌதிக நூல்கள் தமோ குணத்தில் அல்லது அறியாமையில் உள்ளவையாகும். ஆனால் ஆன்மீக இலக்கியமோ இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. ஆன்மீக இலக்கியம் தமோ குணத்திற்கு மேலானதாகும். மேலும், தெய்வீகமான விஷயங்களைப் பற்றி தொடர்ந்து படிப்பதற்கும், அவற்றை உணர்ந்தறிவதற்கும் ஏற்ப, அந்த தெய்வீகமான இலக்கியத்தின் ஒளியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும். முக்தி பெற்றவர்கள், என்று தப்பாக அழைக்கப்படுபவர்கள் ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ எனும் சொற்களை திரும்பத் திரும்ப உச்சரிப்பதால் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. அவ்வாறு செயற்கையான முறையில் ஏற்படும் பிரம்ம உணர்வு மதிப்பற்றதாக ஆகிவிடுகிறது. எனவே உண்மையான சுகத்தை அனுபவிப்பதற்காக அவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் வர்ணணைகளை நோக்கித் திரும்புகின்றனர். அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், பொது நலத் தொண்டிலும் மனிதர்களிடம் இரக்கம் கொள்வதிலும் ஈடுபடுகின்றனர். இது, மாயாவாத தத்துவம் பௌதிகமானது என்பதையும், ஆனால் பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்தின் தத்துவம் தெய்வீகமானது என்பதையுமே குறிக்கிறது.

பதம் 20

कृतवान् किल कर्माणि सह रामेण केशव: ।
अतिमर्त्यानि भगवान् गूढ: कपटमानुष: ॥ २० ॥

க்ருதவான் கில கர்மாணி
ஸஹ ராமேண கேசவ:
அதிமர்த்யானி பகவான்
கூத: கபட-மானுஷ:

க்ருதவான்—செய்யப்பட்டது; கில—என்ன; கர்மாணி—செயல்கள்; ஸஹ—உடன்; ராமேண—பலராமர்; கேசவ:—ஸ்ரீ கிருஷ்ணர்; அதிமர்த்யானி—அமானுஷ்யமான; பகவான்—பரம புருஷர்; கூத:—மாறுவேடம் பூண்டு; கபட—வெளிப்படையாக; மானுஷ—மனிதன்.

மொழிபெயர்ப்பு

தன் சொரூபத்தை மறைத்துக் கொண்டு மனிதரைப் போல் நடித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பலராமருடன் கூடி மனித சக்தியை மீறிய பல அற்புதங்களைச் செய்துள்ளார்.

பொருளுரை

முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மனித அல்லது மிருக உருவங்களை சில சமயங்களில் ஏற்கிறார். ஆனால் அவர்களின் இயல்புகளை அவர் ஒருபோதும் ஏற்பதேயில்லை. தவத்தினாலும், துறவினாலும் மனிதன் கடவுளாகலாம் என்ற தத்துவம் குறிப்பாக இந்தியாவில் இன்று அதிகரித்துள்ளது. பகவான் ஸ்ரீ ராமர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆகியோர் பகவான்களே என்று வேத நூல்களில் கூறப்பட்டுள்ளதை முனிவர்களும், ரிஷிகளும் அறிந்துள்ளனர். இதனால் யோக்கியமற்ற பல மனிதர்களும் தங்களது சொந்த அவதாரங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு கடவுளின் ஓர் அவதாரத்தை உண்டுபண்ணும் இம்முறை, குறிப்பாக வங்காளத்தில் சாதாரண தொழிலாகியிருக்கிறது. பிரபலமான எந்தவொரு மனிதரும், யோக சக்திகளால் சில மாயாஜால வித்தைகளை செய்து காட்டும் போது, மக்கள் அவரை பரம புருஷரின் ஓர் அவதாரமாக எண்ணுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வகையைச் சேர்ந்த ஓர் அவதாரமல்ல. அவர் உண்மையான பரம புருஷராக இருந்தார். அவர் தமது தாயார் முன் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவாகத் தோன்றினார். பின்னர், தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு மனிதக் குழந்தையாக மாறினார். அதன் பிறகு அவர் உடனே தமது தாயை துறந்து, கோகுலத்திலுள்ள மற்றொரு பக்தரை தேடிச் சென்றார். அங்கு நந்த மகாராஜரும், யசோதா மாதாவும் அவரை மகனாக ஏற்றுக்கொண்டனர். அதைப் போலவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமமானவரான ஸ்ரீ பலதேவரும், ஸ்ரீ வசுதேவரின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த ஒரு மனிதக் குழந்தையாகவே கருதப்பட்டார். தமது பிறவி மற்றும் செயல்கள் ஆகியவையெல்லாம் தெய்வீகமானவை என்றும், அவற்றின் தெய்வீகத் தன்மையை அறியும் பேரதிர்ஷ்டம் உள்ளவர் உடனே முக்தி பெற்று பகவானின் இராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல தகுதியுடையவர் ஆகின்றார் என்றும் பகவத் கீதையில் பகவான் கூறியுள்ளார். எனவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகத் தன்மை கொண்ட பிறவி மற்றும் செயல்கள் ஆகியவற்றின் அறிவு ஒன்று மட்டுமே முக்தி அடையப் போதுமானதாகும். பாகவதத்தின் முதல் ஒன்பது காண்டங்களில் பகவானின் தெய்வீகத் தன்மை விளக்கப்பட்டுள்ளது. பத்தாவது காண்டத்தில் அவரது அந்தரங்க லீலைகள் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலை ஒருவர் தொடர்ந்து படிக்கும்போது இவையெல்லாம் தானாக புலப்படும். பகவான் தமது தாயாரின் மடியிலிருந்தே தமது தெய்வீகத்தன்மையை காட்டியிருக்கிறார் என்பதை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகும். அவரது செயல்களெல்லாம் அமானுஷ்யமானவை ஆகும் (ஏழு வயதில் அவர் கோவர்தன மலையைத் தூக்கினார்). அவர் பரம புருஷ பகவான்தான் என்பதை இச்செயல்களெல்லாம் நிரூபிக்கின்றன. இருப்பினும், அவரது மாயத் திரையின் காரணமாக, அவரை ஒரு சாதாரண மனிதக் குழந்தையாகவே அவரது தாயும், தந்தையும், மற்ற உறவினர்களும் எப்பொழுதும் எண்ணினர். சில அற்புதமான செயல்களை அவர் செய்து காட்டும்பொழுதெல்லாம், தாயும், தந்தையும், மற்ற உறவினர்களும் எப்பொழுதும் எண்ணினர். சில அற்புதமான செயல்களை அவர் செய்து காட்டும்பொழுதெல்லாம், தாயும், தந்தையும் அவற்றை வேறொரு முறையில் புரிந்துகொண்டனர். மேலும், தங்களது மகனிடமிருந்த உறுதியான பெற்றோர் பாசத்தில் அவர்கள் திருப்தி கொண்டவர்களாக இருந்தனர். இவ்வாறாக, அவர் ஒரு மனிதரைப் போல் காணப்பட்டபோதிலும், உண்மையில் அவர்தான் சர்வ சக்தி படைத்த பரம புருஷ பகவான் என்று நைமிஷாரண்ய முனிவர்கள் விவரிக்கின்றனர்.

பதம் 21

कलिमागतमाज्ञाय क्षेत्रेऽस्मिन् वैष्णवे वयम् ।
आसीना दीर्घसत्रेण कथायां सक्षणा हरे: ॥ २१ ॥

கலிம் ஆகதம் ஆக்ஞாய
க்ஷேத்ரே ’ஸ்மின் வைஷ்ணவே வயம்
ஆஸீனா தீர்க-ஸத்ரேண
கதாயாம் ஸக்ஷணா ஹரே:

கலிம்—கலி யுகம் (பூசல்கள் மலிந்துள்ள இரும்பு யுகம்); ஆகதம்—வந்தடைந்து; ஆக்ஞாய—இதையறிந்து; க்ஷேத்ரே—இந்த நிலப் பகுதியில்; அஸ்மின்—இதில்; வைஷ்ணவே—குறிப்பாக பகவானின் பக்தர்களுக்கு என்று உள்ள; வயம்—நாங்கள்; ஆஸீனா—அமர்ந்திருக்கிறோம்; தீர்க—நீடித்த; ஸத்ரேண—யாகங்களைச் செய்வதற்காக; கதாயாம்—சொற்களில்; ஸ-க்ஷணா—எங்களுடைய நேரத்தின் வசதிக்கேற்ப; ஹரே—பரம புருஷரின்.

மொழிபெயர்ப்பு

கலி யுகம் துவங்கிவிட்டதை நன்குணர்ந்து, பரம புருஷரின் உன்னதமான செய்தியை நீண்ட காலம் தொடர்ந்து செவியுறுவதன் வழியாக, யாகம் இயற்றுவதற்காக, புனிதமான இவ்விடத்தில் நாங்கள் கூடியுள்ளோம்.

பொருளுரை

பொன் யுகமான சத்ய யுகத்திலும், வெள்ளி அல்லது செம்பு யுகங்களான, த்ரேதா அல்லது துவாபர யுகங்களிலும் இருந்ததுபோல், இக்கலி யுகம் தன்னுணர்வு பெறுவதற்கு சற்றும் பொருத்தமில்லாததாக இருக்கின்றது. ஒரு லட்சம் ஆண்டுகளை ஆயுட்காலமாகக் கொண்ட சத்ய-யுகத்து மக்களால் தன்னுணர்வுக்காக நீண்ட கால தியானத்தைச் செய்ய முடிந்தது. பத்தாயிரம் ஆண்டுகளை ஆயுட்காலமாகக் கொண்ட த்ரேதா-யுகத்தில், மிகப்பெரிய யாகங்களைச் செய்வதன் மூலமாக தன்னுணர்வு அடையப்பட்டது. மேலும் ஆயிரம் ஆண்டுகளை ஆயுட்காலமாகக் கொண்ட துவாபர-யுகத்தில், பகவானை வழிபடும் முறையால் தன்னுணர்வு பெறப்பட்டது. ஆனால், நூறு ஆண்டுகளை மட்டுமே அதிகபட்ச ஆயுட்காலமாக கொண்டதும் அதனுடன் பல்வேறு கஷ்டங்களைக் கொண்டதுமான இக்கலி யுகத்தில், பகவானின் புனிதமான நாமம், புகழ் மற்றும் திருவிளையாடல்கள் ஆகியவற்றைக் கேட்பதும், பாடுவதுமே தன்னுணர்வு பெறுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள முறையாகும். நைமிஷாரண்ய முனிவர்கள், குறிப்பாக பகவானின் பக்தர்களுக்காகவென்றே இருந்த இடத்தில் இந்த யாகத்தை துவங்கினர். தொடர்ந்து ஓராயிரம் ஆண்டுகளாக பகவானின் திருவிளையாடல்களைக் கேட்பதற்கு தங்களை அவர்கள் தயார் செய்து கொண்டனர். இம்முனிவர்களின் உதாரணத்தின் மூலமாக, பாகவதத்தைத் தொடர்ந்து கேட்பதும், பாடுவதுமே தன்னுணர்வு பெறுவதற்குரிய ஒரே வழி என்பதை ஒருவர் உணரவேண்டும். மற்ற முயற்சிகளெல்லாம் எவ்விதமான நற்பலன்களையும் அளிப்பவையல்ல என்பதால் அவை நேரத்தை வீணடிப்பவையாக மட்டுமே உள்ளன. பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் பாகவத-தர்மத்தின் இம்முறையைத்தான் பிரச்சாரம் செய்தார். இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை, முக்கியமாக பகவத் கீதையின் செய்தியை பரவலாகப் பிரசாரம் செய்யும் கடமையை ஏற்கவேண்டும் என்று அவர் சிபாரிசு செய்துள்ளார். பகவத் கீதையின் போதனைகளில் ஒருவர் உறுதியாக நிலைபெற்றதும், ஆன்மீகத் தன்னுணர்வில் மேலும் தொடர்ந்து முன்னேற்றத்தைப் பெற ஸ்ரீமத்-பாகவதத்தைக் கற்கும் பணியை அவர் மேற்கொள்ளலாம்.

பதம் 22

त्वं न: सन्दर्शितो धात्रा दुस्तरं निस्तितीर्षताम् ।
कलिं सत्त्वहरं पुंसां कर्णधार इवार्णवम् ॥ २२ ॥

த்வம் ந: ஸந்தர்சிதோ தாத்ரா
துஸ்தரம் நிஸ்தி தீர்ஷதாம்
கலிம் ஸத்வ-ஹரம் பும்ஸாம்
கர்ண-தார இவார்ணவம்

த்வம்—மேன்மை தங்கியவரான தாங்கள்; ந:—எங்களுக்கு; ஸந்தர்சித:—சந்திக்கும்; தாத்ரா—இறையருளால்; துஸ்தரம்—கடக்க முடியாத; நிஸ்திதீர்ஷதாம்—கடக்க விரும்புவோருக்கு; கலிம்—கலி யுகத்தை; ஸத்வ-ஹரம்—நற்குணங்களை சீரழிப்பது; பும்ஸாம்—ஒரு மனிதனின்; கர்ணதார—தலைவர்; இவ—இவ்வாறு; அர்ணவம்—சமுத்திரத்தை.

மொழிபெயர்ப்பு

இறையருளால்தான் மேன்மை தங்கியவரான தங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இதனால் ஒரு மனிதனின் எல்லா நற்குணங்களையும் சீரழிப்பதான கலி யுகமெனும் துன்பக் கடலைக் கடக்க உதவும் கப்பல் தலைவராக தங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளுரை

கலி யுகம் மனிதனுக்கு பெரும் அபாயத்தை விளைவிப்பதாகும். ஆன்மீக தன்னுணர்வைப் பெறுவதற்காகவே மனித வாழ்வு உள்ளது. ஆனால் இந்த யுகத்திலுள்ள அபாயத்தின் காரணத்தினால், வாழ்வின் நோக்கத்தை மனிதன் முற்றிலும் மறந்துவிட்டான். இந்த யுகத்தில், ஆயுட்காலம் படிப்படியாக குறைந்துவிடும். மக்கள் அவர்களுடைய ஞாபகசக்தி, மென்மையான உணர்வுகள், பலம் மற்றும் நற்குணங்கள் ஆகியவற்றை படிப்படியாக இழந்து விடுவார்கள். இந்த யுகத்தில் விளையும் ஒழுக்கக்கேடுகளின் ஒரு பட்டியல், இந்நூலின் பன்னிரண்டாம் காண்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இவ்வாழ்வை தன்னுணர்வு பெறுவதற்காகப் பயன்படுத்த விரும்புவோருக்கு இந்த யுகம் மிகவும் கடினமானதாக இருக்கும். புலனின்ப விவகாரத்தில் மக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், தன்னுணர்வு பெறுவதை அவர்கள் ஒரேயடியாக மறந்துவிடுகின்றனர். இக்குறுகிய வாழ்வு, தன்னுணர்வு பெறுவதை நோக்கமாகக் கொண்ட நமது நீண்ட பயணத்தில் ஒரு நொடிப்பொழுதேயாகும் என்பதை அவர்கள் உணராததாலும், பித்துப்பிடித்த நிலையின் காரணத்தினாலும், உண்மையாகவே ஆன்மீகத் தன்னுணர்வு தேவையில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். கல்வி முறை முழுவதும் புலன் இன்பத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கற்றறிந்த ஒருவர் சற்று சிந்தித்துப் பார்ப்பாரானால், கலி யுகத்தில் குழந்தைகள் பொய்யான கல்வி முறையைக் கொண்ட கசாப்புக் கூடங்களுக்கு வேண்டுமென்றே அனுப்பப்படுகின்றனர் என்பதைக் காண்பார். எனவே, கற்றவர்கள் இந்த யுகத்தைப் பற்றிய விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் கலி யுகமெனும் ஆபத்தான சமுத்திரத்தைக் கடக்க வேண்டுமென்ற விருப்பம் சிறிதேனும் அவர்களுக்கு இருந்தால், நைமிஷாரண்ய முனிவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, ஸ்ரீ சூத கோஸ்வாமியையோ அல்லது அவரது உண்மையான பிரதிநிதியையோ கப்பலின் தலைவராக அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த கப்பல், பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்தின் உருவிலுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்தியாகும்.

பதம் 23

ब्रूहि योगेश्वरे कृष्णे ब्रह्मण्ये धर्मवर्मणि ।
स्वां काष्ठामधुनोपेते धर्म: कं शरणं गत: ॥ २३ ॥

ப்ரூஹி யோகேஸ்வரே க்ருஷ்ணே
ப்ரஹ்மண்யே தர்ம-வர்மணி
ஸ்வாம் காஷ்டாம் அ துனோபேதே
தர்ம: கம் சரணம் கத:

ப்ரூஹி—தயவுகூர்ந்து கூறுவீராக; யோக-ஈஸ்வரே—எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானரான; க்ருஷ்ணே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ப்ரஹ்மண்யே—பரம சத்தியம்; தர்ம—தர்மம்; வர்மணி—காப்பவர்; ஸ்வாம்—சொந்த; காஷ்டாம்—வசிப்பிடம்; அதுனா—இக்காலத்தில்; உபேதே—திரும்பிச் சென்றுவிட்டதால்; தர்ம:—தர்மம்; கம்—யாரிடம்; சரணம்—புகலிடம்; கத:—சென்றுள்ளது.

மொழிபெயர்ப்பு

எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானரும், பரம சத்தியமுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது சொந்த வசிப்பிடத்துக்கு திரும்பிச் சென்று விட்டதால், சமயக் கொள்கைகள் இப்போது யாரிடம் சென்று அடைக்கலம் புகுந்துள்ளன என்பதை தயவுகூர்ந்து எங்களுக்குக் கூறுவீராக.

பொருளுரை

முக்கியமாக சமயம் என்பது பரம புருஷரால் தாமாகவே வகுக்கப்பட்ட, சட்டங்களின் தொகுப்பாகும். எப்போதெல்லாம் சமயக் கொள்கைகள் துஷ்பிரயோகம் அல்லது அலட்சியம் செய்யப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் பரம புருஷர் தாமாகத் தோன்றி சமயக் கொள்கைகளை சரிநிலைப்படுத்துகின்றார். இது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நைமிஷாரண்ய முனிவர்கள் இங்கு இக்கொள்கைகளைப்பற்றி விசாரணை செய்கின்றனர். இக்கேள்விக்குரிய பதில் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம், பரம புருஷரின் தெய்வீகமான ஒலி சொரூபமாகும். ஆகையால இது உன்னத அறிவு மற்றும் சமயக் கொள்கைகளின் முழுமையான பிரதிநியாக உள்ளது.

ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “முனிவர்களின் கேள்விகள்” எனும் தலைப்பைக் கொண்ட முதல் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

•••

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question