ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நாரத முனிவரிடம் பிரம்மா கூறினார். ஓ! முனிவர்களில் சிறந்தோனே! ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து புண்ணியத்தை அதிகரித்து முத்தியை அளிக்கக்கூடிய உத்தான ஏகாதசியை பற்றி கூறுகிறேன், கேள். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! கார்த்திகை மாத (அக்டோபர் / நவம்பர்) வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி இந்த உலகில் தோன்றாத வரை கங்கையின் மேன்மை மாறாமல் நிலையாக இருந்தது. மேலும் உத்தான ஏகாதசி தோன்றாதவரை கடல் மற்றும் குளங்களின் புண்ணியத்தின் செல்வாக்கு ஈடு இணையற்று இருந்தது. இதன் பொருள் என்ன வெனில் இந்த உத்தான ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதாலும், நூறு ராஜசூய யாகங்கள் செய்வதாலும் அடையக் கூடிய பலனை ஒருவர் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம். பிரம்மாவின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நாரத முனிவர் கூறினார். ஓ! தந்தையே! ஒரு நாளில் ஒரு முறை மட்டும் உண்பவர். இரவு உணவு மட்டும் உண்பவர் மற்றும் முழு உண்ணாவிரதம் இருப்பவர் ஆகியோர் அடையும் பலனைப் பற்றி தயவுசெய்து எனக்கு விளக்குங்கள்.
பகவான் பிரம்மா பதிலளித்தார், ஒருவர் ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டால் அவருடைய ஒரு ஜன்மத்தின் பாவ விளைவுகள் அனைத்தும் அழிக்கப்படும் இரவு மட்டும் உணவு உட்கொண்டால் ஒருவரின் இரு ஜன்ம பாவ விளைவுகள் அழிக்கப்படும். முழு உண்ணாவிரதம் இருப்பதால் ஒருவரின் ஏழு ஜன்ம பாவ விளைவுகள் அழிக்கப்படும். ஓ அன்பான மகளே இந்த உத்தான ஏகாதசி ஒருவருக்கு, காணாதவை, விரும்பாதவை மற்றும் மூவுலகங்களிலும் அரிதானவை போன்ற அனைத்தையும் அளிக்கிறது. இந்த ஏகாதசி மந்தார மலை அளவிற்கு உள்ள கடுமையான பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. இந்த ஏகாதசியன்று புண்ணியத்தை சேர்ப்பவர் சுமேரு மலைக்கு ஈடான அளவு பலன்களை அடைவார். பகவானை வழிபடாதவர். விரதங்களை அனுஷ்டிக்க தவறியவர்கள். நாத்திகர்கள், வேதங்களை நிந்திப்பவர். மாற்றான் மனைவியை அனுபவிப்பவர். மூடர் போன்றவர்களிடத்தில் மதக் கொள்கைகள் நிலைப்பதில்லை. ஒருவர் பாவ செயல்களில் ஈடுபடக்கூடாது. மாறாக பக்தி தொண்டில் ஈடுபடவேண்டும். ஒருவர் பக்தி தொண்டில் ஈடுபட்டிருக்கையில் அவருடைய மதக் கொள்கைகள் அழியாது. உத்தான ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் அனுஷ்டிப்பவரின் நூறு பிறவிகளின் பாவ விளைவுகள் அனைத்தும் மறைந்துவிடும். ஒருவர் உத்தான ஏகாதசியின் இரவு முழுவதும் விழித்திருந்தால் தன் முற்கால, நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறைகள் அனைவரும் விஷ்ணுவின் பரமத்தை அடைவர். ஓ! நாரதா! ஒருவர் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை அனுஷ்டிக்காமலும், பகவான் விஷ்ணுவை வழிபடாமலும் இருப்பாரெனில் தான் சேமித்து வைத்த புண்ணியம் அனைத்தும் அழிந்து விடும். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! ஒருவர் கார்த்திகை மாதத்தில் பகவான் விஷ்ணுவை வழிபட வேண்டும். கார்த்திகை மாதத்தில் ஒருவர் தானே சமைத்து உண்பதால் சந்திரயான விரதத்தின் பலனை அடைவார். கார்த்திகை மாதத்தில் பகவான் விஷ்ணுவைப் பற்றி கேட்பதிலும், ஜெபிப்பதிலும், ஈடுபடுவர் நூறு பக்தர்களை தானமளிப்பதன் பலனை அடைவார். நாள் தோறும் வேத இலக்கியங்களை படிப்பவர், ஆயிரம் வேள்விகளை செய்வதன் பலனை அடைவார். பகவானின் தலைப்புகளைப் பற்றி கேட்டு, பிறகு உரையாற்றியவருக்கு தன்னால் இயன்ற தட்சிணையை கொடுப்பவர் பகவானின் பரமத்தை அடைவார். நாரத முனிவர் கூறினார். ஓ! பகவானே! தயவு செய்து இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறையை எனக்கு விளக்குங்கள். பிரம்மா பதிலளித்தார், அந்தணர்களில் சிறந்தோனே! ஒருவர் விடியற் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, வாயை கழுவி, குளித்து, பகவான் கேசவனை வழிபட வேண்டும். பிறகு கீழ்க்கண்டவாறு கூறி சபதம் ஏற்க வேண்டும். நான் ஏகாதசியன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு, பிறகு துவாதசியன்று உணவு உட்கொள்கிறேன். ஓ! புண்டரிகாக்ஷா! ஓ! அச்யுதா! நான் உம்மிடம் சரணடைகிறேன். என்னை காப்பாற்றுங்கள். இவ்வாறு சபதம் ஏற்று ஒருவர் மகிழ்ச்சியுடன் பக்தியுடனும் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். இந்த ஏகாதசியின் இரவு, ஒருவர் விழித்திருந்து பகவான் விஷ்ணுவின் அருகாமையில் இருக்க வேண்டும். இரவு விழித்திருக்கையில் ஒருவர் பகவானின் உன்னதமான குணங்களைப் பற்றி கேட்டுக் கொண்டும், ஜெபித்துக், கொண்டும், பாடிக்கொண்டும் இருக்க வேண்டும். ஒருவர் ஏகாதசியன்று தற்பெருமைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை கடைபிடிப்பவர் உன்னத இலக்கை அடைவார். பிரம்மா தொடர்ந்தார். ஒருவர் கதம்ப மலர்களைக் கொண்டு ஜனார்தனரை வழிபட்டால் அவர் யமராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்லமாட்டார். கார்த்திகை மாதத்தில் ரோஜா மலர்களால் பகவான் கருடத்வஜா (அ) விஷ்ணு வழிபடுபவர் நிச்சியமாக முக்தி அடைவார். பகுலா மற்றும் அசோக மலர்களால் வழிபடுபவர். சூர்ய சந்திரர் விண்ணில் இருக்கும் வரை தன் கவலைகளில் இருந்து விடுபடுவார். சாமி இலைகளைக் கொண்டு பகவானை வழிபடுபவர் யமராஜாவின் தண்டனையில் இருந்து தப்புவார். தேவர்களின் காப்பாளரான பகவான் விஷ்ணுவை மழைக் காலத்தில் சம்பகா மலர்களால் வழிபடுபவர். மீண்டும் இந்த ஜட உலகில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. மஞ்சள் நிற கேதகி மலர்களை பகவான் விஷ்ணுவிற்கு சமர்ப்பிப்பவரின் லட்சக்கணக்கான பிறவிகளில் சேர்க்கப்பட்ட அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். நறுமணத்துடன் நூறு இதழ்களைக் கொண்ட செந்நிற தாமரை மலர்களை பகவான் ஜனார்தனருக்கு சமர்ப்பிப்பவர். ஸ்வேதத்வீபம் எனக்கூடிய பகவான் இருப்பிடத்திற்குத் திரும்புவார். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! ஒருவர் ஏகாதசியன்று இரவு விழித்திருக்க வேண்டும். துவாதசியன்று பகவான் விஷ்ணுவை வழிபட்டு அந்தணர்களுக்கு உணவளித்து, பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் தன்னால் இயன்றளவு தட்சனை கொடுத்து ஆன்மீக குருவை வழிபட்டால் முழுமுதற்கடவுள் மிகவும் திருப்தி அடைவார்