Thursday, November 21

Kolavecha Sridhar (Tamil) / கோலாவேசா ஸ்ரீதர்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கோலாவேசா ஸ்ரீதர்
__________________________________

ஸ்ரீதரர் மிகவும் ஏழ்மையான பிராமணர், தொன்னைகளைச் செய்வதற்கான வாழை மரப்பட்டைகளை விற்று வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருக்கு ஒரு வாழைத் தோட்டம் இருந்திருக்கலாம்; அதிலிருந்து இலைகள், பட்டைகள் மற்றும் பழங்களைச் சேகரித்து தினமும் சந்தையில் விற்று வந்தார். தமது வருமானத்தில் பாதியினை அவர் கங்கையை வழிபடுவதில் செலவிட்டார், மீதியினை வாழ்வாதாரத்திற்காக உபயோகித்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காஜியினை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ஸ்ரீதரர் குதூகலத்தினால் ஆடினார். அவருடைய கமண்டலத்திலிருந்து மஹாபிரபு நீர் அருந்துவது வழக்கம். சைதன்யர் சந்நியாசம் ஏற்பதற்கு முன்பாக ஸ்ரீதரர் ஸச்சி தேவியிடம் பகவானுக்குச் சமைப்பதற்காக கீரை வழங்கினார். ஆண்டுதோறும் அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காண்பதற்காக ஜகந்நாத புரிக்குச் சென்றார். கவி-கர்ணபூரரின் கருத்து படி ஸ்ரீதரர் விருந்தாவனத்தில் வாழ்ந்த ஓர் இடையர்குலச் சிறுவனாவார், அவரதுபெயர் குஸுமாஸவர். கௌர-கணோத்,தேஷ தீபிகா (133) கூறுகிறது:

கோலா-வேசாதயா க்யாத: பண்டித: ஸ்ரீத ரோ த்,விஜ:
ஆஸீத், வ்ரஜே ஹாஸ்ய-கரோ யோ நாம்னா குஸுமாஸவ:

“கிருஷ்ண லீலையில் குஸுமாஸவர் என்று அறியப்பட்ட இடையர்குலச் சிறுவன் சைதன்ய மஹாபிரபுவின் நவத்வீப லீலையில் கோலாவேசா ஸ்ரீதரராக மாறினார்.”

(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 10.67 / பொருளுரை )

ஸ்ரீதரருடைய வளம்
______________________

ஒருவருடைய பெளதிக செல்வச் செழிப்பு அவருக்கு கடவுளின் கருணையை பெற்றுத்தருவதற்கான உண்மையான அறிகுறிகள் அல்ல. பொதுவாக தேவ தேவிகளை வணங்குபவர்கள் பெளதிக செல்வச் செழிப்புள்ளவர்களாக காணப்படுவர், ஆனால் பகவானின் பக்தி செல்வத்தில் வளம் பெற்றிருப்பவர்களே பகவானுடைய கருணையை பெற்றுள்ளவர்களாவர். மஹாபிரபு இத்தகைய உபதேசத்தை தனது சகாக்களுக்கு, பெளதிக செல்வச் செழிப்புகள் மற்றும் புலனின்பங்களில் பற்றுதல் அற்றவரும் விஷ்ணு பக்தருமான ஸ்ரீதர பண்டிதருடைய உதாரணத்தின் மூலமாக விளக்குகின்றார்.

ஒருநாள் பகவான் ஸ்ரீதரருடைய இருப்பிடத்திற்கு சென்று, “தாங்கள் ஏன் ஏழையாகவே இருக்கின்றீர்? அதிர்ஷ்ட தேவியான லக்ஷ்மியின் கணவரையே பூஜித்து வந்தபோதிலும், உணவு மற்றும் உடைக்கான போதிய செல்வமின்றி இருக்கின்றீர், உம்முடைய வீடும் பாழடைந்துள்ளது. அதேசமயத்தில் இரத்தவெறி கொண்ட காளியை பூஜிப்பவர்களோ சகலவிதமான பெளதிக வளங்களுடன் காணப்படுகின்றனரே?” என்று வினவினார். அதற்கு ஸ்ரீதரர், மரத்தில் கூடு கட்டியிருக்கும் பறவை உணவைத் தேடி அங்குமிங்கும் அலைந்து திரிந்து நாளைக் கடத்துகின்றது, அதேசமயத்தில் அரண்மனை சுகவாசியான அரசரும் புலனின்பத்தில் மூழ்கி நாளைக் கடத்துகின்றார். இருவராலும் அனுபவிக்கப்பட்ட இன்பத்தில் சற்றும் வேறுபாடில்லையே என்று பதிலளித்தார். உடனே பகவான் வெளிப்புறத்திற்கு தாங்கள் பரம ஏழையாக காணப்பட்ட போதிலும் உண்மையில் தாங்களே உண்மையான செல்வந்தர். பக்தர்களே மாபெரும் செல்வத்தை அடைவதற்கு தகுதியானவர்கள், உண்மையில் அவர்களே அனைத்திற்கும் உரிமையாளர்கள் என்பதை இந்த முட்டாள் உலகிற்கு நான் விரைந்து எடுத்துரைப்பேன் என்றார்.

பொதுவாக செல்வம், பதவி மற்றும் வீட்டை இழந்தவர்களை நாம் ஏழை அல்லது துரதிர்ஷ்டசாலி என்றே அழைப்போம். இத்தகைய உடைமைகளை கொண்டிருப்பவரை செல்வந்தர் அல்லது அதிர்ஷ்டசாலி என்றழைப்போம். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான் செல்வத்தை திரட்டுகின்றர், துன்பப்படுவதற்காக அல்ல. இத்தகைய மகிழ்ச்சியே உண்மையான செல்வம், வெளிப்புறமான கெளரவங்கள் உண்மையான மகிழ்ச்சி அல்ல. ஸ்ரீ கிருஷ்ணர் மகிழ்ச்சியின் இருப்பிடமாவார். செல்வம் மற்றும் ஏழ்மையின் உண்மையான வேறுபாடு இதுவேயாகும் : கிருஷ்ணரை நேசிப்பவர் செல்வந்தர், அவரை நேசிக்காதவர் ஏழ்மையானவர். இதற்கு உதாரணம், கிருஷ்ண லீலையில் விதுரர் ஏழையாக இருந்தார், ஆனால் அவர் கிருஷ்ணரை நேசிப்பதில் செல்வந்தராக இருந்தார். அதற்கு நேர்மாறாக துரியோதனன் எல்லையற்ற செல்வ வளங்களை பெற்றிருந்தான், ஆனால் அவனிடம் கிருஷ்ணரின்மீது துளியும் அன்பில்லை. இதனால் உண்மை ஏழை துரியோதனனே. பரம புருஷ பகவான், கோலோபேச்ச ஸ்ரீதரரே உண்மையான செல்வந்தரும் பாக்கியசாலியுமாவார் என்பதை இவ்வுலகிற்கு அடிக்கடி வெளிப்படுத்துவார். பகவான் அன்பினால் மட்டுமே வெற்றிகொள்ளப்படுகின்றாரேயன்றி, மற்ற எதனாலும் அல்ல.

மஹாபிரபு ஸ்ரீதரருடைய குடுவையிலிருந்து நீர் அருந்துதல்

_______________________

மஹாபிரபு ஸங்கீர்த்தன குழுவிற்கு தலைமை தாங்கி சந்த்காசியை விடுவித்தபிறகு, அவர் சங்கு வியாபாரிகள் மற்றும் நெசவாளிகளின் இல்லம் வழியாக ஸ்ரீதர பண்டிதரின் இல்லத்தை வந்தடைந்தார். ஸ்ரீதரருடைய பழைய உடைந்துபோன இரும்புக் குடுவையில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தார். இதனைக்கண்ட ஸ்ரீதரர் தர்மசங்கடத்தினால் மூர்ச்சையுற்று விழுந்தார்.

மஹாபிரபுவினுடைய செயலுக்கான காரணம், பக்தர்களால் அருந்தப்பட்ட நீரை குடிப்பதின் மூலமாக நமக்கும் பக்தி ஏற்படும் என்பதை நமக்கு கற்றுக்கொடுப்பதற்காகவேயாகும். பக்தர்களுடைய குடுவை பழையதாகி, துருப்பிடித்திருந்தாலும்கூட அதிலுள்ள தண்ணீர் பரம புருஷருக்கு அமிர்தத்தைப் போன்றதாகும் என்பதை எடுத்துக்காட்ட விரும்பினார். இதற்கு மாறாக கர்வம் கொண்ட அபக்தர்களின் தண்ணீரை, அது தங்கத்தால் செய்யப்பட்ட குடுவையில் இருந்தாலும் அதனை நிராகரித்தார்.

பகவான், ஸ்ரீதரருடைய பாழடைந்த இல்லத்தை தூரத்திலிருந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் பேரின்பம் கொண்டவராக புன்னகைத்தார். பக்தர்கள் குழுவினருடன் ஸ்ரீதரருடைய குடிசையை அடைந்த பகவான், அங்கேயிருந்த ஓட்டைவிழுந்த இரும்புக்குடுவையை கண்டார். அதில் தண்ணீர் சிறிதளவுதான் இருந்தது என்றாலும்கூட, தாகத்திற்கு அதனை எடுத்து பருகினார். பகவான் பக்த வத்ஸலனாக, தனது பக்தர்களை எப்போதுமே நேசிப்பவராக இருப்பதால், அவருடைய இத்தகைய செயல் அவரை பிரேமையில் மூழ்கடித்தது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் கங்கையைப்போன்று பிரவாகம் எடுத்தது. அதனையடுத்து நித்யானந்தர் மற்றும் அத்வைதரால் தலைமை தாங்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் ஸ்ரீதரருடைய முற்றத்தில் அதியற்புதமான கீர்த்தனைகளை கண்ணீர்மழையை பொழிந்தவண்ணம் மேற்கொண்டனர். ஸ்ரீதரருடைய இல்லத்தில் அனைவராலும் அனுபவிக்கப்பட்ட பேரின்பத்தை நினைக்கும்போதே, எனது இதயம் உருகுகின்றது. (பக்தி ரத்னாகர் 12.3136-41)

பகவான் ஸ்ரீதரருடைய இரும்புக் குடுவையிலிருந்து நீர் பருகி தனது ஒவ்வொரு பக்தனுடைய விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றார். (சைதன்ய சரிதாம்ருதம் 1.17.70)

சந்நியாசம் ஏற்பதற்கு முந்தைய நாளன்று ஸ்ரீதரர் அன்பாக கொடுத்த கீரை மற்றும் சுரைக்காயை பகவான் மகிழ்ச்சியுடன் ஏற்றார். சச்சி மாதா அதனை பாலுடன் சேர்த்து பகவானுக்கு பிரியமான பதார்த்தங்களுள் ஒன்றை தயாரித்தார்.

சாதுவான ஸ்ரீதரர் பகவானைக்காண சுரைக்காயுடன்(லாவ்) வந்தார். பரிசினைப் பார்த்த கெளரசுந்தரர் சிரித்தவாறு, “இதனை எங்கிருந்து கொண்டுவந்தீர்?” என்றார். இருப்பினும் தான் நாளை கிளம்ப இருப்பதால் அதன்பிறகு இதனை சாப்பிடமுடியாது என்று எண்ணினார். ஸ்ரீதரருடைய வெகுமதி வீணாகிவிடக் கூடாது என்று எண்ணியதால், உடனடியாக அதனை சமைக்கச் செய்தார்.

(சைதன்ய பாகவதம் 2.28.33-6)

சந்நியாசம் ஏற்றபிறகு, மஹாபிரபு ஜெகந்நாத பூரியில் தங்கி கிருஷ்ண பிரேமையில் லயித்திருந்தார் வருடந்தோறும் பூரியில் நடைபெறும் ரத யாத்திரையின் போது பகவானை தரிசிப்பதற்காக ஶ்ரீதர்ர் புரிக்கு வந்து பகவான் ஶ்ரீ சைதன்யரின் ரதயாத்திரை லீலைகளில் ஆனந்தமாய் பங்குகொள்வார்.

ஹரே கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question