தலைமுடியை வெட்டி தாடியைச் சீர்படுத்த ஒருவன் முடிதிருத்தகத்திற்குச் சென்றான். சவரத் தொழிலாளி தனது பணியை செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினர். பல்வேறு விஷயங்களைப் பேசி வந்த அவர்கள் கடவுளைப் பற்றியும் பேசத் தொடங்கினர். “எனக்குக் கடவுளின் மீது நம்பிக்கைக் கிடையாது, என்று சவரத் தொழிலாளி கூறினான்.
‘ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?” என வாடிக்கையாளர் வினவ, “நீங்கள் தெருவில் நடந்து சென்றால் போதும், கடவுள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். கடவுள் இருப்பதாக இருந்தால், ஏன் இத்தனை மக்கள் வியாதியுடன் வாழ்ந்து வருகின்றனர்? ஏன் அனாதைக் குழந்தைகள் இருக்கின்றனர்? கடவுள் இருக்கின்றார் என்றால், வலியோ துன்பமோ இருக்கக் கூடாது. அன்புமிக்க கடவுள் இதையெல்லாம் அனுமதிக்கின்றார் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை, என்று பதில் கிடைத்தது.
ஒரு நிமிடம் யோசித்த வாடிக்கை யாளர், வீண் வாதம் செய்ய வேண்டாம் என்று நினைத்து அமைதி காத்தார். சவரத் தொழிலாளி தனது பணியினை நிறைவேற்ற, வாடிக்கையாளரும் கடையைவிட்டுஅகன்றார். அவர்கடைக்கு வெளியில் வந்த மாத்திரத்தில், நீண்ட அழுக்கான முடியுடனும் தாடியுடனும் ஒரு மனிதனைக் கண்டார். மீண்டும் கடையினுள் நுழைந்த வாடிக்கையாளர், சவரத் தொழிலாளியிடம், “உங்களுக்கு ஒன்று தெரியுமா? சவரத் தொழிலாளிகள் கிடையவே கிடையாது,” என்றார்.
ஆச்சரியமுற்ற சவரத் தொழிலாளி, ‘எப்படி உங்களால் அவ்வாறு சொல்ல முடியும்? நான் ஒரு சவரத் தொழிலாளி, நான் இங்குதான் உள்ளேன். தற்போதுதான் தங்களுக்குச் சவரம் செய்தேன்.” “இல்லை, சவரத் தொழிலாளிகள் உலகில் இல்லை. அவ்வாறு இருப்பார்களேயானால், வெளியில் உள்ள இந்த மனிதனைப் போன்று நீண்ட அழுக்கான முடியுடனும் தாடியுடனும் யாரும் இருக்க மாட்டார்கள்,’ என்று வாடிக்கையாளர் பதிலளித்தார்.
“ஓ, சவரத் தொழிலாளிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்; பிரச்சனை என்ன வெனில், இத்தகு மக்கள் அவர்களை அணுகுவதில்லை.’ அவரது கூற்றினை ஆமோதித்த வாடிக்கையாளர், “ஆம். இதுவே கருத்து. கடவுள் இருப்பதும் உண்மையே. பிரச்சனை என்னவெனில், மக்கள் அவரைக் கண்டு கொள்வதில்லை. அதனால் மட்டுமே இவ்வுலகில் வலியும் துன்பமும் அனுபவிக்கப்படுகின்றன,” என்று பதிலளித்தார்.
(இணையத்தின் மூலம் பெறப்பட்ட சிந்திக்கத் தூண்டும் கதை)
குறிப்பு: இந்த உலகத்தின் இயற்கை துன்பமயமானது என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கின்றார். துன்பங்கள் நிறைந்த இவ்வுலகினை விடுத்து, ஆனந்தமயமான தன்னுடைய லோகத்திற்கு வருமாறு அவர் நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். அதனை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் முழுமையாக சரணடைவது நம்முடைய பணியாகும்.