“ஜகந்நாதர் கோயிலிலிருந்து குண்டிசாவிற்குச் செல்லும் வீதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பல்வேறு லீலைகளை நிகழ்த்தினார். கிருஷ்ணதாஸர் எனும் பிராமணர் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரவிற்கு அபிஷேக நிகழ்ச்சியினை நடத்தினார்.”
“குண்டிசா கோயிலில் நடனமாடிய பின்னர், மஹாபிரபு தமது பக்தர்களுடன் நீரில் விளையாடினார், ஹேரா-பஞ்சமி தினத்தன்று அவர்கள் அனைவரும் செல்வத் திருமகளான லக்ஷ்மி தேவியின் செயல்களைக் கண்டனர்.”
– ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.144-145
ஹேரா – பஞ்சமி உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் வருகிறது. பகவான் ஜகந்நாதர் தமது மனைவி லக்ஷ்மியினைக் கைவிட்டு குண்டிசா கோயிலான விருந்தாவனத்திற்குச் சென்று விட்டார். பகவானின் பிரிவினால், லக்ஷ்மி தேவி அவரைக் காண்பதற்காக குண்டிசாவிற்கு வர முடிவு செய்கிறாள். லக்ஷ்மி தேவி குண்டிசாவிற்கு வருவது ஹேரா – பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது. சில நேரங்களில் இது ஹரா – பஞ்சமி என்று அதிவாடீ , மக்களுக்கு மத்தியில் தவறாக உச்சரிக்கப்படுகிறது. ஹேரா என்னும் சொல் “பார்ப்பதற்கு” என்று பொருள்படுகிறது, இது பகவான் ஜகந்நாதரைப் பார்ப்பதற்காக லக்ஷ்மி தேவி சென்றதைக் குறிப்பிடுகிறது. பஞ்சமீ என்னும் சொல் நிலாவின் ஐந்தாவது நாளைக் குறிப்பிடுகிறது.
பகவான் ஜகந்நாதர் தமது தேர் திருவிழாவினை தொடங்குவதற்கு முன்பாக, மறுநாளே திரும்பி வந்துவிடுவேன் என்று லக்ஷ்மி தேவியிடம் உறுதியளிக்கிறார். அவர் திரும்பி வராதபோது, இரண்டு – மூன்று நாள்கள் காத்திருந்த பின்னர், தனது கணவன் தன்னை அலட்சியப்படுத்துவதாக அவள் உணரத் தொடங்குகிறாள். அதனால் இயற்கையாகவே அவள் கடும் கோபம் கொள்கிறாள். தன்னை பிரம்மாண்டமாக அலங்கரித்துக் கொண்டு தனது தோழியர்களுடன் அவள் கோயிலை விட்டு வெளியே வந்து கோயிலின் முக்கிய வாசலின் முன்பாக நிற்கின்றாள். பகவான் ஜகந்நாதரின் முக்கிய சேவகர்கள் அனைவரும் அப்போது அவளது பணிப்பெண்களால் கைது செய்யப்பட்டு, அவளுக்கு முன்பாக அழைத்து வரப்பட்டு, அவளது தாமரைத் திருவடிகளில் விழும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.
– ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்