Friday, April 19

Disappearance of Bhishma Dev (Tamil) / பீஷ்மதேவரின் மரணம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


ஸ்ரீ மத் பாகவதம் அத்தியாயம் ஒன்பது
பீஷ்மதேவரின் மரணம்

பதம் 1

सूत उवाच
इति भीत: प्रजाद्रोहात्सर्वधर्मविवित्सया ।
ततो विनशनं प्रागाद् यत्र देवव्रतोऽपतत् ॥ १ ॥
ஸூத உவாச

இதி பீத: ப்ரஜா-த்ரோஹாத் ஸர்வ-தர்ம-விவித்ஸயா
ததோ வினசனம் ப்ராகாத் யத்ர தேவ-வ்ரதோ ’பதத்

ஸூத உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; பீத:—அதனால் அச்சமடைந்து; ப்ரஜா-த்ரோஹாத்—பிரஜைகளைக் கொன்றதால்; ஸர்வ—எல்லா; தர்ம—மத அனுஷ்டானங்கள்; விவித்ஸயா—புரிந்துகொள்ள; தத:—அதன் பிறகு; வினசனம்—போர் நிகழ்ந்த இடத்திற்கு; ப்ராகாத்—அவர் சென்றார்; யத்ர—எங்கு; தேவ-வ்ரத:—பீஷ்மதேவர்; அபதத்—உயிரை விடுவதற்காக படுத்திருந்த.

மொழிபெயர்ப்பு

சூத கோஸ்வாமி கூறினார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அநேக பிரஜைகளைக் கொன்றுவிட்டதை எண்ணி அச்சமடைந்த யுதிஷ்டிர மகாராஜன் படுகொலை நிகழ்ந்த இடத்திற்குச் சென்றார். அங்கு, பீஷ்மதேவர் ஓர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு உயிரைவிடும் நிலையில் இருந்தார்.

பொருளுரை

ஒன்பதாம் அத்தியாயத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பப்படி, பீஷ்மதேவர், உத்தியோகக் கடமைகளைப் பற்றி யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேசிப்பார். அத்துடன் பீஷ்மதேவர், உயிரைவிடும் தறுவாயில் அவரது இறுதியான பிரார்த்தனைகளை பகவானுக்கு அர்ப்பணம் செய்து, தொடர்ந்த பௌதிக ஈடுபாடுகளின் பந்தத்திலிருந்து விடுபடுவார். ஜடவுடலை தமது விருப்பம் போல் உகுத்துவிடும் சக்தியை பீஷ்மதேவர் பெற்றிருந்தார். மேலும் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதும் அவரது சொந்த விருப்பமாகும். மாவீரரின் இம்மரணம் எல்லா பெரிய மனிதர்களின் கவனத்தையும் கவர்ந்தது. மேலும் மகாத்மாவான அவருக்குத் தங்களது அன்பையும், பாசத்தையும் மற்றும் மரியாதையையும் காட்டுவற்காக அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் கூடினார்கள்.

பதம் 2

तदा ते भ्रातर: सर्वे सदश्वै: स्वर्णभूषितै: ।
अन्वगच्छन् रथैर्विप्रा व्यासधौम्यादयस्तथा ॥ २ ॥
ததா தே ப்ராதர: ஸர்வே ஸதஸ்வை: ஸ்வர்ண-பூஷிதை:
அன்வகச்சன் ரதைர் விப்ரா வ்யாஸ-தௌம்யாதயஸ் ததா

ததா—அச்சமயம்; தே—அவர்கள் அனைவரும்; ப்ராதர:—சகோதரர்கள்; ஸர்வே—அனைவரும் ஒன்றாக; ஸத்-அஸ்வை:—முதல்தரமான குதிரைகளால் இழுக்கப்பட்ட; ஸ்வர்ண—தங்கத்தால்; பூஷித:—அலங்கரிக்கப்பட்ட; அன்வகச்சன்—ஒவ்வொருவராக பின்தொடர்ந்தனர்; ரதை:—இரதங்களில்; விப்ரா—ஓ பிராமணர்களே; வ்யாஸ—வியாச முனிவர்; தௌம்ய—தவும்யர்; ஆதய—மற்றும் பிறர்; ததா—மேலும்.

மொழிபெயர்ப்பு

அச்சமயத்தில் அவரது சகோதரர்கள் அனைவரும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, முதல்தரமான குதிரைகளால் இழுக்கப்பட்ட அழகிய இரதங்களில் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். (பாண்டவர்களின் புரோகிதரான) தவும்யரைப் போன்ற ரிஷிகளும், வியாசரும், மற்றவர்களும் அவர்களுடன் இருந்தனர்.

பதம் 3

भगवानपि विप्रर्षे रथेन सधनञ्जय: ।
स तैर्व्यरोचत नृप: कुवेर इव गुह्यकै: ॥ ३ ॥
பகவான் அபி விப்ரர்ஷே ரதேன ஸ-தனஞ்சய:
ஸ தைர் வ்யரோசத ந்ருப: குவேர இவ குஹ்யகை:

பகவான்—பரம புருஷ பகவான் (ஸ்ரீ கிருஷ்ணர்); அபி—மேலும்; விப்ர-ருஷே—பிராமணர்களுக்கு இடையிலான ரிஷியே; ரதேன—இரதத்தில்; ஸ-தனஞ்சய—தனஞ்சயருடன் (அர்ஜுனன்); ஸ—அவர்; தை:—அவர்களால்; வ்யரோசத—கம்பீரமான கோலாகலத்துடன் காணப்பட்டார்; ந்ருப:—மகாராஜன் (யுதிஷ்டிரர்); குவேர—தேவர்களின் பொருளாளரான குபேரன்; இவ—போல்; குஹ்யகை—குஹ்யர்கள் எனப்படும் நண்பர்கள்.

மொழிபெயர்ப்பு

பிரம்ம ரிஷியே, பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரும் கூட அர்ஜுனனுடன் இரதத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தார். இவ்வாறாக நண்பர்களால் (குஹ்யர்களால்) சூழப்பட்ட குபேரனைப் போல், யுதிஷ்டிர மகாராஜனும் கம்பீரமான கோலத்துடன் காணப்பட்டார்.

பொருளுரை

பாண்டவர்கள் மிகவும் கம்பீரமான கோலத்துடன் பிஷ்மதேவரின் முன் காட்சியளிக்க வேண்டும் என்றும், அவர்களைக் கண்டு மரணத்தின் போது அவர் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரும்பினார். எல்லா தேவர்களையும் விட குபேரன் பெரிய செல்வந்தராவார். மேலும் இங்கு யுதிஷ்டிர மகாராஜன் குபேரனைப் போலவே காட்சியளித்தார். ஏனெனில், ஸ்ரீ கிருஷ்ணருடன் ஊர்வலமாகச் சென்றது யுதிஷ்டிர மகாராஜனின் ராஜ பதவிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

பதம் 4

द‍ृष्ट्वा निपतितं भूमौ दिवश्‍च्युतमिवामरम् ।
प्रणेमु: पाण्डवा भीष्मं सानुगा: सह चक्रिणा ॥ ४ ॥
த்ருஷ்ட்வா நிபதிதம் பூமௌ திவஸ் ச்யுதம் இவாமரம்
ப்ரணேமு: பாண்டவா பீஷ்மம் ஸானுகா: ஸஹ சக்ரிணா

த்ருஷ்ட்வா—இவ்வாறு கண்டு; நிபதிதம்—படுத்திருப்பதை; பூமௌ—தரையில்; திவ:—ஆகாயத்திலிருந்து; ச்யுதம்—விழுந்துவிட்ட; இவ—போல்; அமரம்—தேவரை; ப்ரணேமு:—தலை வணங்கினார்; பாண்டவா—பாண்டு புத்திரர்கள்; பீஷ்மம்—பீஷ்மருக்கு; ஸ-அனுகா:—இளைய சகோதரர்களுடன்; ஸஹ—அவருடனும்; சக்ரிணா—(சக்கரத்தை ஏந்தியுள்ள) பகவான்.

மொழிபெயர்ப்பு

ஆகாயத்திலிருந்து விழுந்துவிட்ட ஒரு தேவரைப் போல் தரையில் படுத்துக்கிடந்த அவரைக் (பீஷ்மரை) கண்டு, பாண்டவ ராஜனான யுதிஷ்டிரர் அவரது இளைய சகோதரர்களுடனும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடனும் அவர் முன் தலை வணங்கினார்.

பொருளுரை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட யுதிஷ்டிர மகாராஜனுக்கு இளைய மாமனாகவும், அர்ஜுனனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். ஆனால் பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கிருஷ்ணர்தான் பரம புருஷ பகவான் என்பதை அறிந்திருந்தனர். பகவான் தமது உன்னத நிலையை உணர்ந்திருந்தபோதிலும், எப்பொழுதும் மனித வழக்கப்படியே நடந்து கொண்டார். எனவேதான் யுதிஷ்டிர மகாராஜனின் இளைய சகோதரர்களில் ஒருவரைப் போல் அவரும் பீஷ்மதேவரின் முன் தலை வணங்கினார்.

பதம் 5

तत्र ब्रह्मर्षय: सर्वे देवर्षयश्च सत्तम ।
राजर्षयश्च तत्रासन् द्रष्टुं भरतपुङ्गवम् ॥ ५ ॥
தத்ர ப்ரஹ்மர்ஷய: ஸர்வே தேவர்ஷயஸ் ச ஸத்தம
ராஜர்ஷயஸ் ச தத்ராஸன் த்ரஷ்டும் பரத-புங்கவம்

தத்ர—அங்கு; ப்ரஹ்ம-ருஷய—பிராமணர்களுக்கு இடையிலான ரிஷிகள்; ஸர்வே—எல்லா; தேவ-ருஷய—தேவர்களுக்கு இடையிலான ரிஷிகள்; ச—மேலும்; ஸத்தம—நற்குணத்திலுள்ள; ராஜ-ருஷய—அரசர்களுக்கு இடையிலான ரிஷிகள்; ச—மேலும்; தத்ர—அந்த இடத்தில்; ஆஸன்—இருந்தனர்; த்ரஷ்டும்—காண; பரத—பரத மகாராஜனின் வம்சத்தினரை; புங்கவம்—தலைவரான.

மொழிபெயர்ப்பு

பரத மகாராஜனுடைய வம்சத்தினரில் தலைமையானவரை (பீஷ்மர்) காண்பதற்காகவே, நற்குணத்தில் நிலைபெற்றவர்களும், பிரபஞ்சத்திலுள்ள மகாத்மாக்களுமாகிய எல்லா தேவரிஷிகளும், பிரம்ம ரிஷிகளும் மற்றும் ராஜ ரிஷிகளும் அங்கு கூடியிருந்தனர்.

பொருளுரை

ஆன்மீக வாழ்வில் பூரணத்துவம் அடைந்தவர்கள் ரிஷிகள் எனப்படுகின்றனர். ஒருவர் அரசராகவோ அல்லது ஆண்டியாகவோ இருந்தாலும், அனைவராலும் அத்தகைய ஆன்மீக பூரணத்துவத்தை அடையமுடியும். பீஷ்மதேவரும் கூட பிரம்ம ரிஷிகளில் ஒருவராகவும், பரத வம்சத்தின் தலைமையானவராகவும் இருந்தார். எல்லா ரிஷிகளும் நற்குணத்தில் நிலைபெற்றுள்ளனர். மகாவீரருக்கு சம்பவிக்கப் போகும் மரணச் செய்தியை கேள்விப்பட்ட அவர்கள் அனைவரும் அங்கு கூடினர்.

பதங்கள் 6-7

पर्वतो नारदो धौम्यो भगवान् बादरायण: ।
बृहदश्वो भरद्वाज: सशिष्यो रेणुकासुत: ॥ ६ ॥
वसिष्ठ इन्द्रप्रमदस्त्रितो गृत्समदोऽसित: ।
कक्षीवान् गौतमोऽत्रिश्च कौशिकोऽथ सुदर्शन: ॥ ७ ॥
பர்வதோ நாரதோ தௌம்யோ பகவான் பாதராயண:
ப்ருஹதஸ்வோ பர்தவாஜ: ஸசிஷ்யோ ரேணுகா ஸுத:
வஸிஷ்ட இந்ரப்ரமதஸ் த்ரிதோ க்ருத்ஸ்மதோ ’ஸித:
கஷீவான் கௌதமோ ’த்ரிஸ்ச கௌசிகோ ’த ஸுதர்சன:

பர்வத:—பர்வத முனி; நாரத:—நாரத முனி; தௌம்ய:—தவும்யர்; பகவான்—பகவானின் அவதாரமான; பாதராயண:—வியாசதேவர்; ப்ருஹதஸ்வ:—பிருகதஸ்வர்; பரத்வாஜ:—பரத்வாஜர்; ஸசிஷ்ய:—சீடர்களுடன்; ரேணுகா-ஸுத:—பரசுராமர்; வஸிஷ்ட—வஸிஷ்டர்; இந்ரப்ரமத:—இந்ரப்ரமதர்; த்ரித:—திரிதர்; க்ருத்-ஸமத:—கிருத்ஸ்மதர்; அஸித:—அஸிதர்; கக்ஷீவான்—கக்ஷீவான்; கௌதம:—கௌதமர்; அத்ரி—அத்ரி; ச—மேலும்; கௌசிக:—கௌசிகர்; அத—தவிரவும்; ஸுதர்சன:—ஸுதர்சனர்.

மொழிபெயர்ப்பு

பர்வத முனி, நாரதர், தவும்யர், பகவானின் அவதாரமான வியாசர், பிருகதஸ்வர், பரத்வாஜர் மற்றும் பரசுராமர் அவரது சீடர்கள், வஸிஷ்டர், இந்ரப்ரமதர், திரிதர், கிருத்ஸமதர், அஸிதர், கக்ஷிவான், கௌதமர், அத்ரி, கௌசிகர் மற்றும் ஸுதர்சனர் போன்ற எல்லா முனிவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

பொருளுரை

பர்வத முனி: வயது முதிர்ந்த முனிவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் எப்பொழுதுமே நாரத முனிவருடனேயே இருப்பவராவார். அவர்கள் எந்த வாகனத்தின் உதவியும் இல்லாமல் காற்றில் பிரயாணம் செய்யும் தகுதியுடைய விண்வெளி யாத்திரீகர்களாவர். நாரதரைப் போலவே பர்வத முனியும் கூட ஒரு தேவரிஷி, அல்லது தேவர்களுக்கு இடையிலான சிறந்த ரிஷியாவார். பரீட்சித்து மகாராஜனின் புதல்வரான ஜனமேஜய மகாராஜனின் யாகச் சடங்கில் அவரும் நாரதருடன் இருந்தார். இந்த யாகத்தில் உலகிலுள்ள எல்லா பாம்புகளும் கொல்லப்படுவதாக இருந்தது. பர்வத முனிவராலும், நாரத முனிவராலும் பகவானின் பெருமைகளைப் பாடிக் கொண்டு காற்றில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் அவர்கள் கந்தவர்கள் என்றுகூட அழைக்கப்பட்டனர். அவர்களால் காற்றில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால், ஆகாயத்தில் இருந்துகொண்டே திரௌபதியின் சுயம்வர சடங்கை அவர்கள் கவனித்தனர். நாரத முனிவரைப் போலவே பர்வத முனிவரும் கூட ஸ்வர்கத்திலுள்ள தேவேந்திரனின் ராஜசபைக்குச் சென்று வருவது வழக்கம். கந்தர்வரான அவர் சில சமயங்களில், முக்கிய தேவர்களுள் ஒருவரான குபேரனின் ராஜசபைக்கும் சென்று வந்தார். நாரதரும், பர்வதரும் ஒருமுறை சிருஞ்சய மகாராஜனின் மகளுடன் பிரச்சினையில் அகப்பட்டுக் கொண்டனர். சிருஞ்சய மகாராஜன் பர்வத முனியிடமிருந்து ஒரு மகனை வரமாகப் பெற்றார்.

நாரத முனிவர்: புராண வரலாறுகளுடன் தவிர்க்க இயலாதபடி சம்பந்தப்பட்டுள்ளார். பாகவதத்தில் அவர் விவரிக்கப்படுகிறார். முற்பிறப்பில் அவர் ஒரு வேலைக்காரியின் மகனாக இருந்தார். ஆனால் தூய பக்தர்களுடன் கொண்ட நல்லுறவினால் பக்தித் தொண்டைப் பற்றிய அறிவை அவர் பெற்றார். மேலும் அவரது அடுத்த பிறப்பில் நிகரற்ற ஒரு பூரண மனிதராக அவர் மாறினார். அவர் தேவரிஷிகளில் தலைமையானவராவார். மகாபாரதத்தில் அவரது பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர் பிரம்மதேவரின் மகனும், சீடருமாவார். அவர் மூலமாக பிரம்மாவின் சீடப்பரம்பரை பரப்பப்பட்டு உள்ளது. பிரகலாத மகாராஜனுக்கும், துருவ மகாராஜனுக்கும், பகவானின் மற்றும் பல புகழ்பெற்ற பக்தர்களுக்கும் அவர் தீட்சை வழங்கினார். வேத இலக்கியங்களின் ஆசிரியரான வியாசதேவருக்கும் கூட அவர் தீட்சை வழங்கினார். வியாசரிடமிருந்து மத்வாச்சாரியர் தீட்சைப் பெற்றார். இவ்வாறாக கௌடீய சம்பிரதாயத்தையும் உள்ளடக்கியதான மத்வ சம்பிரதாயம் பிரபஞ்சம் முழுவதிலும் பரவியுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராவார்; ஆகவே, பிரம்ம தேவர், நாரதர் மற்றும் வியாசரிலிருந்து மத்வர், சைதன்யர், கோஸ்வாமிகள் வரையுள்ள அனைவரும் ஒரே சீடப் பரம்பரையைச் சேர்ந்தவர்களாவர். நாரதர் கற்பனைக்கெட்டாத காலத்திலிருந்து பல அரசர்களுக்கு உபதேசித்து வந்துள்ளார். பிரகலாத மகாராஜன் அவரது தாயின் கருவில் இருக்கும்பொழுது நாரதர் அவருக்கு உபதேசித்ததை பாகவதத்தில் நம்மால் காண முடியும். மேலும் அவர் கிருஷ்ணரின் தந்தையான வசுதேவருக்கும், யுதிஷ்டிர மகாராஜனுக்கும் கூட உபதேசம் வழங்கினார்.

தவும்யர்: உத்கோசக தீர்த்தத்தில் கடும் தவமியற்றிய மாமுனிவராவார். அவர் பாண்டவ மன்னர்களின் ராஜ புரோகிதராக நியமிக்கப்பட்டார். பாண்டவர்களின் பல சமயச் சடங்குகளில் (ஸம்ஸ்கார) அவர் புரோகிதராக செயலாற்றினார். மேலும் திரௌபதியின் நிச்சயதார்த்தத்தின்பொழுது ஒவ்வொரு பாண்டவருடனும் அவர் இருந்தார். பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்டபொழுதும் கூட அவர் அங்கிருந்தார். மேலும் பாண்டவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தபோதெல்லாம் அவர்களுக்கு அவர் அறிவுரை கூறுவது வழக்கம். ஓராண்டு காலம் தலைமறைவாக வாழ்வதெப்படி என்று அவர்களுக்கு அவர் உபதேசித்தார். மேலும் அச்சமயத்தில் அவரது உபதேசங்களை பாண்டவர்கள் உறுதியாகப் பின்பற்றினர். குருட்சேத்திர யுத்தத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்ட பொதுவான ஈமச்சடங்குகளின் போது அவரது பெயரும் குறிப்பிடப்பட்டது. மகாபாரதத்தின் அனுஷாஸன-பர்வத்தில் (127.15-16), அவர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு மிகவும் விரிவான சமய உபதேசங்களை அருளினார். அவர் உண்மையில் ஓர் இல்லறவாசிக்கேற்ற சரியான புரோகிதராவார். ஏனெனில், அவரால் பாண்டவர்களுக்கு மதத்திற்குரிய சரியான வழியைக் காட்ட முடிந்தது. இல்லறவாசியை அவருக்குரிய சரியான ஆஷ்ரம தர்மப்படி முன்னேற வழிகாட்டுவது ஒரு புரோகிதரின் கடமையாகும். உண்மையில், குடும்ப புரோகிதருக்கும், ஆன்மீக குருவிற்கும் வேறுபாடில்லை, முனிவர்களும், ஞானிகளும், பிராமணர்களும் அத்தகைய கடமைகளைச் செய்வதற்காகவே முக்கியமாக உள்ளனர்.

பாதராயணர் (வியாசதேவர்): அவர் கிருஷ்ண, கிருஷ்ண-துவைபாயனர், துவைபாயனர், சத்தியவதி-ஸூதர், பாராசர்யர், பராசராத்மஜர், பாதராயணர், வேதவியாசர் போன்ற பெயர்களால் அறியப்படுகிறார். இவர், சந்தனு சத்தியவதிக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்பே, அவளுக்கும் பராசர மகாமுனிவருக்கும் பிறந்தவராவர். சந்தனு மகாராஜன் மிகச்சிறந்த தளபதியும், பாட்டானாருமான பீஷ்மதேவரின் தந்தையாவார். வியாசதேவர் நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாவார். அவர் வேத ஞானத்தை உலகில் பரப்புகிறார். இதனால் வேத நூல்களைப் படிக்கும் முன்பாக, முக்கியமாக புராணங்களைப் படிக்கும் முன்பாக முதலில் வியாசதேவர் வணங்கப்படுகிறார். சுகதேவ கோஸ்வாமி அவரது மகனாவார். மேலும் வைசம்பாயனரைப் போன்ற ரிஷிகள், வேதங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்குரிய அவரது சீடர்களாவர். மிகச்சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்திற்கும், மிகச்சிறந்த தெய்வீக இலக்கியமாகிய பாகவதத்திற்கும் அவரே ஆசிரியராவார். பிரம்ம சூத்திரங்கள் (வேதாந்த சூத்திரங்கள், அல்லது பாதராயண சூத்திரங்கள்) அவரால் தொகுக்கப்பட்டவையே ஆகும். அவரது கடுந்தவத்தின் வலிமையினால், அவர் முனிவர்களிலேயே மிகவும் மரியாதைக்குரிய ஆசிரியராக மதிக்கப்படுகிறார். கலி யுக மக்களின் நன்மைக்காக மிகச்சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்தை அவர் பதிவு செய்ய விரும்பினார். அப்பொழுது அவர் சொல்வதை எழுதுவதற்குச் சக்தி வாய்ந்த எழுத்தாளர் ஒருவர் தேவைப்படுவதை அவர் உணர்ந்தார். பிரம்மதேவரின் உத்தரவுப்படி ஸ்ரீ கணேசர் அப்பணியைச் செய்யும் பொறுப்பை ஏற்றார். ஆனால் சொல்வதை வியாசதேவர் ஒரு வினாடி நேரமும் நிறுத்தக்கூடாது என்பது நிபந்தனையாகும். இவ்வாறாக வியாசர் மற்றும் கணேசரின் இணைந்த முயற்சியினால் மகாபாரதம் தொகுக்கப்பட்டது.

அவரது தாயான சத்தியவதி பிறகு சந்தனு மகாராஜனை திருமணம் செய்து கொண்டாள். சத்தியவதியின் கணவரான சந்தனு மகாராஜனின் முதல் மனைவி கங்கையாவாள். அவளது மூத்த மகன் பீஷ்மதேவராவார். இவ்வாறாக அவரது தாயான சத்தியவதியின் கட்டளைப்படியும், பீஷ்மதேவரின் வேண்டுகோளின்படியும், அவர் திருதராஷ்டிரர், பாண்டு மற்றும் விதுரர் ஆகிய மிகச்சிறந்த மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார். மகாபாரதமானது குருட்சேத்திர யுத்தத்திற்குப் பிறகும், மகாபாரதத்தின் எல்லா கதாநாயகர்களும் இறந்த பிறகும், வியாசதேவரால் தொகுக்கப்பட்டதாகும். பரீட்சித்து மகாராஜனின் மகனான ஜனமேஜய மகாராஜனின் ராஜசபையில் மகாபாரதம் முதன்முதலாக பேசப்பட்டது.

பிருகதஸ்வர்: இவர் யுதிஷ்டிர மகாராஜனை அவ்வப்போது சந்தித்து வந்த ஒரு பண்டைக் காலத்து முனிவராவார். யுதிஷ்டிர மகாராஜனை அவர் முதன்முதலாக காம்யவனத்தில் சந்தித்தார். நள மகாராஜனின் சரித்திரத்தை அவர் விவரித்தார். மற்றொரு பிருகதஸ்வரும் இருக்கிறார். அவர் இக்ஷ்வாகு வம்சத்தின் மகனாவார் (மகாபாரதம், வனபர்வம் 209.4-5)

பரத்வாஜர்: சப்த ரிஷிகளில் ஒருவராவார். அர்ஜுனனின் பிறப்புச் சடங்கின்பொழுது அவர் அங்கிருந்தார். சக்தி வாய்ந்தவரான இந்த ரிஷி சில சமயங்களில் கங்கை நதிக் கரையில் கடுந்தவங்களை மேற்கொண்டார். அவரது ஆஷ்ரமம் பிரயாகதாமம் என்று இன்னமும் புகழப்பட்டு வருகிறது. ஒருநாள் இந்த ரிஷி கங்கையில் நீராடிக்கொண்டு இருக்கும்பொழுது, கிருதசீ எனப்படும் அழகிய ஸ்வர்க லோக பெண்ணொருத்தியை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாக வெளிப்பட்ட அவரது விந்து ஒரு மண் பாத்திரத்தில் வைத்து காப்பாற்றப்பட்டு, அதிலிருந்து துரோணர் பிறந்தார். எனவே துரோணாச்சாரியர் பரத்வாஜ முனிவரின் மகனாவார். துரோணரின் தந்தையான பரத்வாஜர், மகரிஷி பரத்வாஜரிலிருந்து வேறுபட்டவர் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். ஒருமுறை துரோணாச்சாரியரை அணுகி யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

பரசுராமர் அல்லது ரேணுகாஸுதர்: அவர் ஜமதாக்னி மகரிஷி மற்றும் ஸ்ரீமதி ரேணுகா ஆகியோரின் மகனாவார். இவ்வாறாக ரேணுகாஸுதர் என்றும் அவர் அழைக்கப்படுகிறார். பகவானின் சக்தி வாய்ந்த அவதாரங்களில் அவரும் ஒருவராவார். அவர் முழு க்ஷத்திரிய வம்சத்தையும் இருபத்தொரு முறைகள் கொன்றார். க்ஷத்திரியர்களின் இரத்தத்தைக் கொண்டு அவரது முன்னோர்களின் ஆத்மாக்களை அவர் திருப்திப்படுத்தினார். பின்னர் மகேந்திர பர்வத்தில் கடுந்தவங்களை அவர் மேற்கொண்டார். பூமி முழுவதையுமே க்ஷத்திரியர்களிடம் இருந்து பறித்துக் கொண்டபின் அதை கஸ்யப முனிவருக்கு அவர் தானாக அளித்தார். துரோணாச்சாரியர் பிராமணனாக இருக்க நேர்ந்ததால், பரசுராமர் அவருக்கு “தனுர்வேதம்”, அல்லது யுத்தக் கலையை உபதேசித்தார். யுதிஷ்டிர மகாராஜனின் முடிசூட்டு விழாவின் போது அங்கிருந்த அவர் அந்நிகழ்ச்சியை மற்ற சிறந்த ரிஷிகளுடன் கொண்டாடினார்.

பரசுராமர் இராமச்சந்திரரையும், கிருஷ்ணரையும் வெவ்வேறு காலங்களில் சந்தித்தவர் என்பதால் அவர் மிகவும் வயது முதிர்ந்தவராவார். ஸ்ரீ ராமருடன் அவர் போரிட்டார். ஆனால் கிருஷ்ணரை அவர் முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்டார். கிருஷ்ணருடன் அர்ஜுனன் இருப்பதைக் கண்ட அவர் அர்ஜுனனை வாழ்த்தினார். அம்பா பீஷ்மரின் மனைவியாக விரும்பினாள். ஆனால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். பரசுராமர் பீஷ்மருடைய குருமார்களில் ஒருவர் என்றபோதிலும் அவரது உத்தரவை ஏற்க பீஷ்மர் மறுத்துவிட்டார். பிறகு அவரது எச்சரிக்கையையும் பீஷ்மர் அலட்சியம் செய்ததால் பரசுராமர் அவருடன் போர் தொடுத்தார். அவ்விருவரும் மிகவும் கடுமையாக போரிட்டனர். இறுதியாக பீஷ்மரிடம் திருப்தியடைந்த பரசுராமர், உலகிலேயே மிகச்சிறந்த போர்வீரர் என்ற வரத்தை அவருக்கு அருளினார்.

வஸிஷ்டர்: பிராமணர்களுக்கு இடையில் மிகவும் புகழ்பெற்ற முனிவரான இவர், பிரம்மரிஷி வஸிஷ்டதேவர் என்று பிரசித்தமானவராவார். இவர் இராமாயணமும் மகாபாரதமும் நிகழ்ந்த காலங்களில் பிரசித்தி பெற்றவராவார். பரம புருஷராகிய ஸ்ரீ ராமரின் முடிசூட்டு விழவை அவர் நடத்தி வைத்தார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அவரும்கூட இருந்தார். அவரால் மேல் லோகங்களுக்கும், கீழ் லோகங்களுக்கும் செல்ல முடிந்தது. மேலும் அவரது பெயர் ஹிரண்யகசிபுவின் சரித்திரத்துடனும் சம்பந்தப்பட்டுள்ளது. அவருக்கும் விஸ்வாமித்திரருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆசைகளை நிறைவேற்றக்கூடியதான வஸிஷ்டரின் காமதேனு எனும் பசுவை விஸ்வாமித்திரர் அடைய விரும்பினார். தமது காமதேனுவைக் கொடுக்க மறுத்ததால், வஸிஷ்ட முனிவரின் நூறு மகன்களையும் விஸ்வாமித்திரர் கொன்றார். பக்குவமடைந்த பிராமணரான அவர் விஸ்வாமித்திரரின் கோபமூட்டும் சொற்களையெல்லாம் பொறுத்துக்கொண்டார். விஸ்வாமித்திரரின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள இயலாத அவர் ஒருமுறை தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஒரு மலையிலிருந்து அவர் கிழே குதித்தார். ஆனால் அவர் விழுந்த இடத்திலுள்ள பாறைகள் பஞ்சுக் குவியலாக மாறி அவர் காப்பாற்றப்பட்டார். கடலில் குதித்த அவரை அலைகள் கரையில் கொண்டுவந்து சோத்துவிட்டன. அவர் நதியில் குதித்தபொழுது, அதுவும் அவரை கரையில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இவ்வாறாக அவரது தற்கொலை முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. மேலும் அவர் சப்த ரிஷிகளில் ஒருவரும், புகழ்பெற்ற நட்சத்திரமாகிய அருந்ததியின் கணவருமாவார்.

இந்ரப்ரமதர்: இவர் மற்றொரு புகழ்பெற்ற ரிஷியாவார்.

திரித: இவர் பிரஜாபதியான கௌதமரின் மூன்று மகன்களில் ஒருவராவார். அவரது மற்ற இரு சகோதரர்கள் ஏகத், துவிய என்று அழைக்கப்பட்டனர். அம்மூவருமே சிறந்த முனிவர்களும், மதக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றியவர்களுமாவர். அவர்களது கடுந்தவங்களின் பலனாய், அவர்கள் பிரம்மதேவர் வாழும் உலகமான பிரம்மலோகத்திற்கு உயர்த்தப்பட்டனர். ஒருமுறை திரித முனி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவர் பல யாகங்களை ஏற்பாடு செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். மாமுனிவர்களுள் ஒருவர் என்ற முறையில், மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மதேவருக்கு மரியாதை செலுத்த அவரும் வந்திருந்தார். வருணலோகத்திலுள்ள ஏழு ரிஷிகளில் அவரும் ஒருவராவார். அவர் உலகின் மேற்கு நாடுகளிலிருந்து வந்தவராவார். எனவே அவர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவராக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அச்சமயத்தில் உலகம் முழுவதுமே ஒரே வேதப் பண்பாட்டின் கீழ் இருந்தது.

கிருத்ஸமதர்: இவர் ஸ்வர்க லோகங்களைச் சேர்ந்த முனிவர்களுள் ஒருவராவார். அவர் ஸ்வர்க ராஜனான இந்திரனின் நெருங்கிய நண்பரும், பிருஹஸ்பதிக்கு ஈடான சிறப்புடையவருமாவார். அவர் யுதிஷ்டிர மகாராஜனின் ராஜசபைக்குச் செல்வது வழக்கம். மேலும் பீஷ்மதேவர் உயிரைவிட்ட இடத்திற்கும் அவர் சென்று வந்தார். சில சமயங்களில் அவர் சிவபெருமானின் பெருமைகளை யுதிஷ்டிர மகாராஜனுக்கு விளக்கினார். விதஹவ்யரின் மகனான அவர் இந்திரனையொத்த தேக அம்சங்களைக் கொண்டிருந்தார். சில சமயங்களில் இந்திரனின் எதிரிகள் அவரை இந்திரனென்று எண்ணி கைது செய்தனர். அவர் ரிக் வேதத்தில் மிகுந்த புலமை பெற்றவராவார். இதனால் பிராமண சமூகத்தால் அவர் மிகவும் மதிக்கப்பட்டார். பிரம்மச்சாரிய வாழ்வை மேற்கொண்ட அவர் எல்லா விதத்திலும் சக்தி வாய்ந்தவராக இருந்தார்.

அஸிதர்: இதே பெயரைக் கொண்ட ஓர் அரசரும் இருந்தார். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் அஸிதர், அக்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த முனிவரான அஸித தேவலோக ரிஷியாவார், மகாபாரதத்திலிருந்து 15,00,000 சுலோகங்களை அவர் தமது தந்தைக்கு விளக்கிக் கூறினார். ஜனமேஜய மகாராஜனின் பாம்பு யாகத்தில் பங்கேற்றவர்களுள் அவரும் ஒருவராவார். யுதிஷ்டிர மகாராஜனின் முடிசூட்டு விழாவின் போது மற்ற சிறந்த ரிஷிகளுடன் அவரும் அங்கிருந்தார். அஞ்சன மலையில் இருந்த யுதிஷ்டிர மகாராஜனுக்கு அவர் உபதேசங்களை வழங்கினார். மேலும் அவர் சிவபெருமானின் பக்தர்களுள் ஒருவராகவும் இருந்தார்.

கக்ஷவான்: கௌதம முனிவரின் மகன்களுள் ஒருவரான இவர் மகாமுனிவரான சந்தகௌஸிகரின் தந்தையாவார். இவர் யுதிஷ்டிர மகாராஜனின் சட்டசபை உறுப்பினர்களுள் ஒருவராவார்.

அத்ரி: மிகச்சிறந்த பிராமண முனிவரான இவர், பிரம்மதேவரின் மானச புத்திரர்களுள் ஒருவராவார். ஒரு மகன் வேண்டுமென்று மனதில் நினைப்பதாலேயே அதைப் பெற்றுவிடக்கூடிய அவ்வளவு சக்தியை பிரம்மதேவர் பெற்றிருந்தார். இவர்கள் மானச புத்திரர்கள் என்று அறியப்படுகின்றனர். அத்ரி முனிவர், பிரம்மதேவரின் ஏழு மானச புத்திரர்களில் ஒருவரும், மிகச்சிறந்த பிராமண முனிவர்களுள் ஒருவருமாவார். புகழ்பெற்ற பிரசேதர்களும் கூட அவரது குடும்பத்தில் பிறந்தவர்களேயாவர். அத்ரி முனிவருக்கு இரு க்ஷத்திரிய புத்திரர்கள் இருந்தனர். அவ்விருவருமே அரசர்களானார்கள். அர்தம மகாராஜன் அவர்களுள் ஒருவராவார். அவர் இருபத்தொரு பிரஜாபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார். அனஸூயா என்பது அவரது மனைவியின் பெயராகும். மேலும் பரீட்சித்து மகாராஜனின் மிகப்பெரிய யாகங்களில் அவருக்கு அவர் உதவியாக இருந்தார்.

கௌசிகர்: இவர் யுதிஷ்டிர மகாராஜனின் ராஜசபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருந்த உறுப்பினர்களுள் ஒருவராவார். சில சமயங்களில் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் சந்தித்திருக்கிறார். இதே பெயரைக் கொண்ட வேறு சில முனிவர்களும் உள்ளனர்.

சுதர்சனர்: பரம புருஷ பகவானால் (விஷ்ணு அல்லது கிருஷ்ணர்) தமது சொந்த ஆயுதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆயுதம், பிரம்மாஸ்திரம் அல்லது அதற்கொப்பான பிற ஆயுதங்களையோ விட அதிக சக்தி வாய்ந்ததாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அக்னிதேவன் இந்த ஆயுதத்தை அளித்தார் என்று வேத இலக்கியங்கள் சிலவற்றில் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பகவான் இந்த ஆயுதத்தை நித்தியமாக தமது கையில் ஏந்தியிருக்கிறார். ருக்ம மகாராஜன் ருக்மினியை பகவானுக்கு அளித்த அதே முறையில்தான் அக்னிதேவனும் இந்த ஆயுதத்தை கிருஷ்ணருக்கு அளித்தார். இத்தகைய அன்பளிப்புக்களை பகவான் தமது பக்தர்களிடமிருந்து ஏற்றுக்கொள்கிறார். அந்த அன்பளிப்புகள் நித்தியமாக அவருக்குச் சொந்தமானவை என்றாலும் அவற்றை அவர் அவ்வாறு ஏற்றுக் கொள்கிறார். மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் இந்த ஆயுதத்தைப் பற்றிய விரிவான விளக்கம் ஒன்றுள்ளது. தன்னுடன் போட்டியிட்ட சிசுபாலனைக் கொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஆயுதத்தை உபயோகித்தார். இந்த ஆயுதத்தினால் சால்வனையும் கூட அவர் கொன்றார். மேலும் சில சமயங்களில், நண்பனான அர்ஜுனனுடைய எதிரிகளை அர்ஜுனன் கொல்வதற்கு அதை உபயோகிக்க வேண்டுமென்று பகவான் விரும்பினார். (மகாபாரதம், விராம பர்வம் 56.3)

பதம் 8

अन्ये च मुनयो ब्रह्मन् ब्रह्मरातादयोऽमला: ।
शिष्यैरुपेता आजग्मु: कश्यपाङ्गिरसादय: ॥ ८ ॥
அன்யே ச முனயோ ப்ரஹ்மன் ப்ரஹ்மராதாதயோ ’மலா:
சிஷ்யைர் உபேதா ஆஜக்மு: கஸ்ய பாங்கிரஸாதய:

அன்யே—மற்றும் பலர்; ச—கூட; முனய:—முனிவர்கள்; பிரஹ்மன்—பிராமணர்களே; ப்ரஹ்மராத—சுகதேவ கோஸ்வாமி; ஆதய:—மேலும் அவர்களைப் போன்ற பிறரும்; அமலா—முற்றிலும் தூய்மையடைந்த; சிஷ்யை:—சீடர்களால்; உபேதா—சூழப்பட்டு; ஆஜக்மு:—வந்தடைந்தனர்; கஸ்யப—கஸ்யபர்; ஆங்கிரஸ—ஆங்கிரஸர்; ஆதய:—மற்றவர்கள்.

மொழிபெயர்ப்பு

மேலும் சுகதேவ கோஸ்வாமியும், தூய்மையடைந்த மற்ற ஆத்மாக்களும், கஸ்யபரும், ஆங்கிரஸரும், இவர்களைப் போன்ற மற்றும் பலரும் முறையே அவரவர் சீடர்களால் சூழப்பட்டவாறு அங்கு வந்து சேர்ந்தனர்.

பொருளுரை

சுகதேவ கோஸ்வாமி (ப்ரஹ்மராத): இவர் ஸ்ரீல வியாச தேவரின் புகழ்பெற்ற மகனும், சீடருமாவார். வியாசர் அவருக்கு முதலில் மகாபாரதத்தையும், அதன் பிறகு ஸ்ரீமத் பாகவதத்தையும் போதித்தார். கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் இராட்சஸர்களின் ஆலோசனை சபையில் மகாபாரதத்தின் 14,00,000 சுலோகங்களையும் சுகதேவ கோஸ்வாமி பாடினார். மேலும் ஸ்ரீமத் பாகவதத்தை அவர் முதன்முறையாக பரீட்சித்து மகாராஜனின் முன்னிலையில் பாடினார். புகழ்பெற்ற அவரது தந்தையிடமிருந்து அவர் எல்லா வேத இலக்கியங்களையும் நன்கு கற்றறிந்தார். இவ்வாறாக, மதக்கொள்கைகளில் அவருக்கிருந்த பரந்த ஞானத்தின் பலனாய், அவர் முற்றிலும் தூய்மையடைந்த ஆத்மாவாக விளங்கினார். யுதிஷ்டிர மகாராஜனின் ராஜசபையிலும், பரீட்சித்து மகாராஜன் உண்ணாவிரதம் மேற்கொண்ட இடத்திலும் கூட அவர் இருந்தார் என்பது, மகாபாரதம் சபா பர்வத்திலிருந்து (4.11) அறியப்படுகிறது. ஸ்ரீல வியாசதேவரின் தகுதியுள்ள சீடரான அவர், மதக்கொள்கைகளையும், ஆன்மீக விஷயங்களையும் பற்றி வியாசரிடமிருந்து மிகவும் விரிவாக விசாரணை செய்தார். மாமுனிவரான அவரது தந்தையும், ஆன்மீக உலகை அடைய உதவும் யோக முறை, பலன் கருதும் செயலுக்கும் சாஸ்திரப் பயிற்சி இல்லாத அறிவிற்கும் உள்ள வேறுபாடு, ஆன்மீக தன்னுணர்வைப் பெறுவதற்கான வழிமுறைகள், நான்கு ஆஷ்ரமங்கள் (மாணவ வாழ்வு, இல்லற வாழ்வு, குடும்பத்திலிருந்து ஓய்வு பெற்ற வாழ்வு மற்றும் துறவு வாழ்வு), பரம புருஷ பகவானின் உன்னதமான நிலை, பகவானை நேருக்கு நேராக காணும் முறை, அறிவைப் பெறுவதற்குரிய தகுதியுள்ள மாணவன், ஐந்து மூலப் பொருட்களைப் பற்றிய கருத்து, புத்தியின் விந்தையான நிலை, ஜட இயற்கை மற்றும் ஜீவராசி ஆகியவற்றின் உணர்வு, தன்னுணர்வு பெற்ற ஆத்மாவுக்கான அறிகுறிகள், ஜடவுலகின் இயக்கம், ஆதிக்கம் செலுத்தும் ஜட இயற்கைக் குணங்களுக்கான அறிகுறிகள், மரம் போல் கிளைவிட்டு படரும் ஓயாத ஆசைகள் மற்றும் மனதின் செயல்கள் ஆகிய விஷயங்களைப் பற்றி சுகதேவருக்கு போதித்து அவரை திருப்திப்படுத்தினார். சில சமயங்களில் அவரது தந்தை மற்றும் நாரதரின் அனுமதியுடன் அவர் சூரிய கிரகத்திற்குச் சென்று வந்தார். அவரது விண்வெளிப் பயணத்தைப் பற்றிய வர்ணனை மகாபாரதத்தின் சாந்த பர்வத்தில் (332) கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் அவர் ஆன்மீக உலகை அடைந்தார். அவர் அரணேயர், அருணிஸுதர், வையாஸகி மற்றும் வியாசாத்மஜர் போன்ற பெயர்களால் அறியப்படுகிறார்.

கஸ்யபர்: பிரஜாபதிகளில் ஒருவரான இவர், மரீசியின் மகனும், பிரஜாபதி தட்சனின் மருமகன்களில் ஒருவருமாவார். யானைகளும், ஆமைகளும் உணவுப்பண்டங்களாக அளிக்கப்பட்ட மிகப்பெரிய பறவையான கருடனுக்கு அவர் தந்தையாவார். பிரஜாபதி தட்சனின் புதல்விகளான அதிதி, திதி, தனு காஷ்டா, அரிஷ்டா, ஸுரஸா, இலா, முனி, குரோதவசா, காம்ரா, ஸுரபி, ஸரமா மற்றும் திமி ஆகிய பதின்மூன்று பேர்களை அவர் மணந்தார். அந்த மனைவிகளின் மூலமாக அவர் பல தேவர்களையும், அசுரர்களையும் பெற்றெடுத்தார். அவரது முதல் மனைவியான அதிதியிலிருந்து பன்னிரண்டு ஆதித்தியர்களும் பிறந்தனர்; அவர்களில் ஒருவர் பகவானின் அவதாரமாகிய வாமனதேவராவார். அருணா பிறந்த சமயத்தில் மாமுனிவரான கஸ்யபரும் கூட இருந்தார். பரசுராமரிடமிருந்து அவர் முழு உலகையும் பரிசாகப் பெற்றார். பிற்காலத்தில் பரசுராமரை அவர் உலகை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அரிஷ்டனேமி என்பது அவருடைய மற்றொரு பெயராகும். அவர் பிரபஞ்சத்தின் வடக்குப் புறத்தில் வசிக்கிறார்.

அங்கிரஸர்: அங்கிரா மகரிஷியின் புதல்வராகிய இவர் பிருஹஸ்பதி எனப்படுகிறார். தேவர்களுக்கு இவர் புரோகிதராவார். துரோணாச்சாரியர் அவருடைய அவதாரம் என்று கூறப்படுகிறது. அசுரர்களின் ஆன்மீக குருவாகிய சுக்ராச்சாரியரை பிருஹஸ்பதி எதிர்த்தார். அவரது மகன் கச எனப்படுவார். அவர் அக்னி ஆயுதத்தை முதலில் பரத்வாஜ முனிவருக்குக் கொடுத்தார். அவர் (அக்னிதேவனைப் போல்) புகழ்பெற்ற நட்சத்திரங்களில் ஒருத்தியாக விளங்கும் அவரது மனைவி சந்ரமாசியின் மூலமாக ஆறு மகன்களைப் பெற்றார். அவரால் விண்வெளியில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் அவரால் பிரம்மலோகத்திற்கும், இந்திரலோகத்திற்கும், செல்ல முடிந்தது. அசுரர்களை வெற்றி கொள்வதைப் பற்றி ஸ்வர்க ராஜனான இந்திரனுக்கு அவர் ஆலோசனை கூறினார். அவர் ஒருமுறை இந்திரனை சபித்து விட்டார். இதனால் பூமியில் ஒரு பன்றியாகப் பிறந்த அவன் ஸ்வர்கத்திற்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. மாயா சக்தியின் கவர்ச்சி அவ்வளவு சக்தியுள்ளதாகும். ஒரு பன்றிகூட அதன் பௌதிக உடைமைகளை விட்டுப் பிரிந்து அதற்கு பதிலாக ஸ்வர்க லோக இராஜ்ஜியத்தைப் பெற விரும்பவில்லை. அவர் வெவ்வேறு கிரகவாசிகளின் மதகுருவாக இருந்தார்.

பதம் 9

तान् समेतान् महाभागानुपलभ्य वसूत्तम: ।
पूजयामास धर्मज्ञो देशकालविभागवित् ॥ ९ ॥
தான் ஸமேதான் மஹா பாகான் உபலப்ய வஸுத்தம:
பூஜயாம் ஆஸ தர்ம-க்ஞோ தேச-கால-விபாகவித்

தான்—அவர்கள் அனைவரும்; ஸமேதான்—ஒன்றாகக் கூடிய; மஹா-பாகான்—பெரும் சக்தி படைத்த அனைவரும்; உபலப்ய—உபசரித்து; வஸு-உத்தம:—வஸுக்களில் மிகச்சிறந்தவர் (பீஷ்மதேவர்); பூஜயாம் ஆஸ—வரவேற்றார்; தர்ம-க்ஞ:—தர்மத்தை அறிந்தவர்; தேச—இடம்; கால—காலம்; விபாகவித்—காலத்தையும், இடத்தையும் அனுசரித்து நடந்து கொள்வதை அறிந்தவர்.

மொழிபெயர்ப்பு

எட்டு வஸுக்களிலும் மிகச்சிறந்தவரான பீஷ்மதேவர், காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப எல்லா மதக்கொள்கைகளையும் நன்கு அறிந்திருந்தார் என்பதால், அங்கு கூடியிருந்த புகழ்பெற்றவர்களும், சக்தி வாய்ந்தவர்களுமான ரிஷிகள் அனைவரையும் உபசரித்து வரவேற்றார்.

பொருளுரை

மதக்கொள்கைகளை காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப சரிப்படுத்திக் கொள்ளும் கலையை திறமை வாய்ந்த சமயவாதிகள் நன்கறிவர். உலகிலுள்ள சிறந்த ஆச்சாரியர்கள் அல்லது மதப் பிரசாரகர்கள் அல்லது குருமார்கள் ஆகிய அனைவரும் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப மதக் கொள்கைகளை சரிப்படுத்திக் கொள்வதன் வாயிலாக தங்களது நோக்கங்களை நிறைவேற்றினர். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட சூழ்நிலைகளும், சீதோஷ்ண நிலைகளும் உள்ளன. பகவானின் செய்தியை பிரசாரம் செய்வதெனும் தனது கடமையை ஒருவர் நிறைவேற்ற வேண்டியிருக்குமானால், காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப விஷயங்களை சரிப்படுத்திக் கொள்வதில் ஒருவர் திறமைசாலியாக இருக்க வேண்டும். இந்த பக்தித் தொண்டைப் பிரசாரம் செய்வதற்குரிய பன்னிரண்டு உயர்ந்த அதிகாரிகளில் பீஷ்மதேவரும் ஒருவராவார். எனவே பிரபஞ்சம் முழுவதிலும் இருந்து வந்த, அவரது மரணப்படுக்கையின் அருகே கூடியுள்ள சக்தி வாய்ந்த முனிவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரிக்க அவரால் முடிந்தது. அவ்வேளையில் அவர் தமது வீட்டிலோ அல்லது சுகாதாரமான நிலையிலோ இல்லாததால், முன் வந்து அவர்களை வரவேற்று உபசரிக்க அவரால் முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரது மனம் நல்ல நிலையில் இருந்ததால், அதன் வாயிலாக அவரது இதயபூர்வமான இனிய வார்த்தைகளை அவரால் கூற முடிந்தது. இவ்வாறாக அவர்கள் அனைவரும் நன்கு வரவேற்கப்பட்டனர். ஒருவரால் தனது கடமையை உடல் உழைப்பினாலோ, மனதாலோ அல்லது வார்த்தைகளாலோ நிறைவேற்ற முடியும். மேலும் அவற்றை உபயோகிக்கும் கலையை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் உடலளவில் தகுதியற்றவராய் இருந்தபோதிலும், அவர்களை வரவேற்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை.

பதம் 10

कृष्णं च तत्प्रभावज्ञ आसीनं जगदीश्वरम् ।
हृदिस्थं पूजयामास माययोपात्तविग्रहम् ॥ १० ॥

க்ருஷ்ணம் ச தத்-ப்ரபாவ-க்ஞ ஆஸீனம் ஜகத்-ஈஸ்வரம்
ஹ்ருதி-ஸ்தம் பூஜயாம் ஆஸ மாயயோபாத்த-விக்ரஹம்

க்ருஷ்ணம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; ச—மேலும்; தத்—அவரது; ப்ரபாவ-க்ஞ—பெருமைகளை அறிந்தவர் (பீஷ்மர்); ஆஸீனம்—அமர்ந்திருந்தார்; ஜகத்-ஈஸ்வரம்—பிரபஞ்சத்தின் இறைவன்; ஹ்ருதி-ஸ்தம்—இதயத்திலுள்ள; பூஜயாம் ஆஸ—வழிபட்டார்; மாயயா—அந்தரங்க சக்தியினால்; உபாத்த—தோற்றுவித்தார்; விக்ரஹம்—ஓருருவத்தை.

மொழிபெயர்ப்பு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார் என்ற போதிலும், அவரது அந்தரங்க சக்தியினால் அவருடைய தெய்வீக உருவத்தை அவர் தோற்றுவிக்கிறார். இதே பகவான் பீஷ்மதேவரின் முன் அமர்ந்திருந்தார். அவரது பெருமைகளை பீஷ்மதேவர் அறிந்திருந்தார் என்பதால், பகவானை அவர் தகுந்தபடி வழிபட்டார்.

பொருளுரை

ஒரே சமயத்தில் பகவான் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதானது அவரது சர்வ வல்லமையை வெளிப்படுத்துகின்றது. அவரது நித்திய உலகமான கோலோக விருந்தாவனத்தில் அவர் எப்பொழுதும் இருக்கிறார். ஆயினும் எல்லோருடைய இதயத்திலும், கண்ணுக்குப் புலப்படாத ஒவ்வொரு அணுக்குள்ளேயும் கூட அவர் இருக்கிறார். அவரது நித்தியமான தெய்வீக உருவத்தை இந்த ஜடவுலகில் அவர் தமது அந்தரங்க சக்தியின் வாயிலாக தோற்றுவிக்கிறார். பகிரங்க அல்லது பௌதிக சக்திக்கும் அவரது நித்தியமான உருவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பகவானை ஏற்றவாறு வழிபட்ட ஸ்ரீ பீஷ்மதேவருக்கு இவ்வெல்லா உண்மைகளும் தெரிந்திருந்தன.

பதம் 11

पाण्डुपुत्रानुपासीनान् प्रश्रयप्रेमसङ्गतान् ।
अभ्याचष्टानुरागाश्रैरन्धीभूतेन चक्षुषा ॥ ११ ॥
பாண்டு-புத்ரான் உபாஸீனான் ப்ரஸ்ரய ப்ரேம ஸங்கதான்
அப்யாசஷ்டானுராகா ஸ்ரைர் அந்தீபூதேன சக்ஷுஷா

பாண்டு—யுதிஷ்டிர மகாராஜன் மற்றும் அவரது சகோதரர்களின் காலஞ் சென்ற தந்தை; புத்ரான்—மகன்கள்; உபாஸீனான்—மௌனமாக அருகில் அமர்ந்திருந்த; ப்ரஸ்ரய—பீடிக்கப்பட்டு; ப்ரேம—அன்பான உணர்ச்சிகளால்; ஸங்கதான்—ஒன்றுகூடி; அப்யாசஷ்ட—பாராட்டினார்; அனுராக—உருக்கத்துடன்; அஸ்ரை:—ஆனந்தக் கண்ணீரால்; அந்தீபூதேன—பூரிப்படைந்தார்; சக்ஷுஷா—அவரது கண்களில்.

மொழிபெயர்ப்பு

பாண்டு மகாராஜனின் மகன்கள், உயிரைவிடும் நிலையிலுள்ள அவர்களது பாட்டனாரின் மீதுள்ள பாசத்தினால் பீடிக்கப்பட்டு அவருக்கருகில் மௌனமாக அமர்ந்திருந்தனர். இதைக் கண்ட பீஷ்மதேவர் உணர்ச்சி ததும்ப அவர்களைப் பாராட்டினார். அன்பாலும் பாசத்தாலும் பூரிப்படைந்த அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்பியது.

பொருளுரை

பாண்டு மகாராஜன் இறந்தபொழுது, அவரது புத்திரர்கள் சிறு குழந்தைகளாக இருந்தனர். எனவே இயல்பாகவே, அரச குடும்பத்தின் வயது முதிர்ந்த அங்கத்தினர்களால், முக்கியமாக பீஷ்மதேவரால் அவர்கள் பாசத்துடன் வளர்க்கப்பட்டனர். பிற்காலத்தில், பாண்டவர்கள் பருவமடைந்தபொழுது, அவர்கள் வஞ்சகர்களான துரியோதனனாலும், அவனது குழுவினராலும் ஏமாற்றப்பட்டனர். குற்றமற்றவர்களான பாண்டவர்கள் தேவையில்லாமல் தொல்லையில் புகுத்தப்பட்டனர் என்பதை பீஷ்மதேவர் அறிந்திருந்தார் என்றபோதிலும், அரசியல் காரணங்களினால் அவரால் பாண்டவர்களின் பக்கம் சேர்ந்து கொள்ள இயலவில்லை. வாழ்வின் இறுதி கட்டத்திலிருந்த பீஷ்மதேவர், யுதிஷ்டிர மகாராஜனை தலைமையாகக் கொண்ட பெரும் புகழுக்குரிய அவரது பேரன்கள் அமைதியாக அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டதும், மாவீரரான அவரால் அவரது அன்புக் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. அவரது கண்களிலிருந்து கண்ணீர் தானாகவே பெருக்கெடுத்தோடியது. சிறந்த பக்தர்களான அவரது பேரன்கள் அனுபவித்த பெருந்துன்பங்களை அவர் ஞாபகப்படுத்திக் கொண்டார். துரியோதனனுக்கு பதிலாக அரியாசனத்தில் யுதிஷ்டிரர் அமர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் திருப்தியடைந்தவர் பீஷ்மர்தான். இதனால் அவர்களை அவர் பாராட்டத் துவங்கினார்.

பதம் 12

अहो कष्टमहोऽन्याय्यं यद्यूयं धर्मनन्दना: ।
जीवितुं नार्हथ क्लिष्टं विप्रधर्माच्युताश्रया: ॥ १२ ॥
அஹோ கஷ்டம் அஹோ ’ன்யாய்யம் யத் யூயம் தர்ம-நந்தனா:
ஜீவிதும் நார்ஹத க்லிஷ்டம் விப்ர-தர்மாச்யுதாஸ்ரயா:

அஹோ—ஓ; கஷ்டம்—எவ்வளவு பயங்கரமான துன்பங்கள்; அஹோ—ஓ; அன்யாய்யம்—எவ்வளவு பயங்கரமான அநியாயம்; யத்—என்ற காரணத்தினால்; யூயம்—நல்லாத்மாக்களான நீங்கள்; தர்ம-நந்தன:—தர்மமே சொரூபமானவரின் மகன்கள்; ஜீவிதும்—உயிர்வாழ; ந—ஒருபோதும் இல்லை; அர்ஹத—சாத்தியம்; க்லிஷ்டம்—துன்பம்; விப்ர—பிராமணர்கள்; தர்ம—தர்மம்; அச்யுத—பகவான்; ஆஸ்ரயா:—பாதுகாக்கப்பட்டு.

மொழிபெயர்ப்பு

பீஷ்மதேவர் கூறினார்: ஓ, எவ்வளவு பயங்கரமான துன்பம் எவ்வளவு பயங்கரமான அநீதி. தர்மமே சொரூபமானவரின் மகன்களாக இருந்ததால், நல்லாத்மாக்களான நீங்கள் இவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அப்பெருந்துன்பங்களுக்கிடையில் நீங்கள் உயிரோடிருந்தது சாத்தியமாகக் கூடியதல்ல இருப்பினும் பிராமணர்களாலும், பகவானாலும், தர்மத்தினாலும் நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்.

பொருளுரை

குருட்சேத்திர போரில் நிகழ்ந்த படுகொலையினால் யுதிஷ்டிர மகாராஜன் அமைதியை இழந்திருந்தார். பீஷ்மதேவரால் இதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவேதான் யுதிஷ்டிர மகாராஜன் அனுபவித்த பயங்கரமான துன்பங்களைப் பற்றி முதன்முதலில் பேசினார். அவருடைய துன்பங்களுக்கு அநீதி மட்டுமே காரணமாகும். இந்த அநீதியை போக்கிக் கொள்வதற்காகவே குருட்சேத்திரப் போர் நிகழ்ந்தது. எனவே படுகொலையைக் குறித்து அவர் வருந்தத் தேவையில்லை. அவர்கள் எப்பொழுதுமே பிராமணர்களாலும், பகவானாலும், தர்மத்தினாலும் காப்பாற்றப்பட்டனர் என்பதை முக்கியமாக அவர் சுட்டிக்காட்ட விரும்பினார். முக்கியமான இம்மூன்று விஷயங்களால் அவர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்வரை, ஏமாற்றத்திற்குக் காரணமில்லை. இவ்வாறாக யுதிஷ்டிர மகாராஜன் தமது மனச் சோர்வை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று பீஷ்மதேவர் அவரை உற்சாகப்படுத்தினார். தகுதியுள்ள பிராமணர்களாலும், வைஷ்ணவர்களாலும் வழிகாட்டப்பட்டு, பகவானின் விருப்பத்திற்கேற்ப ஒருவர் நடந்து கொள்வாரானால், அவரது மனச்சோர்வுக்குக் காரணமில்லை. சீடப்பரம்பரையிலுள்ள அதிகாரிகளில் ஒருவர் என்ற முறையில் பீஷ்மதேவர் இக்கருத்தை பாண்டவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

பதம் 13

संस्थितेऽतिरथे पाण्डौ पृथा बालप्रजा वधू: ।
युष्मत्कृते बहून् क्लेशान् प्राप्ता तोकवती मुहु: ॥ १३ ॥
ஸம்ஸ்திதே ’திரேதே பாண்டௌ ப்ருதா பால-ப்ரஜா வதூ:
யுஷ்மத்-க்ருதே பஹூன் க்லேசான் ப்ராப்தா தோகவதீ முஹு:

ஸம்ஸ்திதே—மரணத்திற்குப் பின்; அதிரதே—பெருந்தளபதியின்; பாண்டௌ—பாண்டு; ப்ருதா—குந்தி; பால-ப்ரஜா—இளம் குழந்தைகளைக் கொண்ட; வதூ:—என் மருமகள்; யுஷ்மத்-க்ருதே—உங்களால்; பஹூன்—பல வகையான; க்லேசான்—துன்பங்களை; ப்ராப்தா—அனுபவித்தனர்; தோகவதீ—பருவமடைந்தவர்களைப் பெற்றிருந்தபோதிலும்; முஹு:—இடைவிடாமல்.

மொழிபெயர்ப்பு

எனது மருமகளான குந்தியைப் பொறுத்தவரை, பெரும் தளபதியான பாண்டுவின் மரணத்திற்குப் பின், அவள் பல குழந்தைகளைக் கொண்ட ஒரு விதவையானாள். இதனால் அவள் மிகவும் துன்பப்பட்டாள். நீங்கள் பருவமடைந்தபொழுது, உங்களுடைய செயல்களாலும் அவளுக்கு பெருந்துன்பம் விளைந்தது.

பொருளுரை

குந்திதேவியின் துன்பங்கள் இருமடங்கு அதிகமாகும். இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டதாலும், அவளது இளம் குழந்தைகளை வளர்த்து வருவதற்காகவும் அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். பருவமடைந்த அவளது மகன்களின் செயல்களினால் அவள் தொடர்ந்து துன்பங்களுக்கு ஆளானாள். கடவுளால் அவள் துன்பப்பட வேண்டியவளாவாள் என்பதையே இது குறிக்கிறது. மேலும் தொல்லை ஏற்படாதவாறு இதை ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

பதம் 14

सर्वं कालकृतं मन्ये भवतां च यदप्रियम् ।
सपालो यद्वशे लोको वायोरिव घनावलि: ॥ १४ ॥
ஸர்வம் கால-க்ருதம் மன்யே பவதாம் ச யத்-அப்பிரியம்
ஸபாலோ யத் வசே லோகோ வாயோர் இவ கனாவலி:

ஸர்வம்—இவை அனைத்தும்; கால-க்ருதம்—தவிர்க்க முடியாத காலத்தின் விளைவாகும்; மன்யே—நான் நினைக்கிறேன்; பவதாம் ச—உங்களுக்கும் கூட; யத்—எந்த; அப்ரியம்—வெறுக்கத்தக்க; ஸ-பால:—ஆளுநர்களுடன்; யத்வசே—அக்காலத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழ்; லோக:—எல்லா கிரகங்களிலும் உள்ள அனைவரும்; வயோ:—காற்று எடுத்துச் செல்கிறது; இவ—போல்; கன-ஆவலி—மேகக் கூட்டம்.

மொழிபெயர்ப்பு

இவையனைத்தும் தவிர்க்க முடியாத காலத்தினால் விளைந்தவையே என்பது என் அபிப்பிராயமாகும். மேகங்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படுவதைப் போலவே, எல்லா கிரகங்களிலும் உள்ள அனைவரும் காலத்தினால் ஆளப்படுகின்றனர்.

பொருளுரை

எல்லா கிரகங்களும் காலத்தினால் ஆளப்படுகின்றன. அதைப் போலவே பிரபஞ்ச வெளி முழுவதிலும் காலத்தின் ஆட்சி உள்ளது. காற்றின் வலிமையினால் மேகங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் போல், சூரியன் உட்பட எல்லா பெரிய கிரகங்களும் காற்றின் வலிமையினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. அதைப் போலவே, தவிர்க்க முடியாத காலமானது, காற்று உட்பட மற்ற மூலப் பொருட்களின் செயலையும் கூட கட்டுப்படுத்துகிறது. ஆகவே, ஜடவுலகில் பகவானுடைய ஒரு சக்தி வாய்ந்த பிரதிநிதியாக உள்ள காலத்தினால் அனைத்தும் ஆளப்படுகின்றன. எனவே காலத்தின் கற்பனைக்கெட்டாத செயலுக்காக யுதிஷ்டிரர் வருந்தத் தேவையில்லை. ஜடவுலக நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கும் வரை ஒவ்வொருவரும் காலத்தின் செயல், விளைவுகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முற்பிறப்பில் செய்த பாவங்களால்தான் இப்பொழுது அவர் துன்பப்படுகிறார் என்று யுதிஷ்டிரர் நினைக்கக்கூடாது. மிகச்சிறந்த புண்ணியவானும் கூட ஜட இயற்கையின் சூழ்நிலைகளை அனுபவிக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் புண்ணியவான் ஒருவர், மதக் கொள்கைகளைப் பின்பற்றும் தகுதியுள்ள பிராமணர்களாலும், வைஷ்ணவர்களாலும் வழிநடத்தப்படுவதால், அவர் பகவானிடம் விசுவாசமுள்ளவராக இருக்கிறார். வழிகாட்டியாக உள்ள இம்மூன்று கொள்கைகளே வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நித்தியமான காலத்தின் ஜால வித்தைகளினால் ஒருவர் கலங்கிவிடக்கூடாது. பிரபஞ்சத்தை ஆளும் பிரம்மதேவரும் கூட காலத்திற்குக் கட்டுப்பட்டவராகவே இருக்கிறார்; எனவே, மதக் கொள்கைகளை சரிவர பின்பற்றுபவராக இருந்தும், காலத்தினால் இவ்வாறு ஆளப்படுவதைக் குறித்து ஒருவர் அதிருப்தி அடையக் கூடாது.

பதம் 15

यत्र धर्मसुतो राजा गदापाणिर्वृकोदर: ।
कृष्णोऽस्त्री गाण्डिवं चापं सुहृत्कृष्णस्ततो विपत् ॥ १५ ॥
யத்ர தர்ம ஸுதோ ராஜா கதா-பாணிர் வ்ருகோதர:
க்ருஷ்ணோ ’ஸ்த்ரீ காண்டிவம் சாபம் ஸுஹ்ருத் க்ருஷ்ணஸ் ததோ விபத்

யத்ர—இருக்கும் இடத்தில்; தர்மஸுத:—தர்மராஜனின் மகன்; ராஜா—அரசர்; கதா-பாணி:—சக்தி வாய்ந்த கதாயுதத்தைக் கொண்ட; வ்ருகோதர:—பீமன்; க்ருஷ்ண:—அர்ஜுனன்; அஸ்த்ர—அஸ்திரத்தைக் கொண்டவர்; காண்டீவம்—காண்டீபம்; சாபம்—வில்; ஸுஹ்ருத்—நலத்தை விரும்புபவர்; க்ருஷ்ண:—பரம புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; தத:—அதன்; விபத்—கஷ்டங்கள்.

மொழிபெயர்ப்பு

தவிர்க்க முடியாத காலத்தின் ஆதிக்கம் எவ்வளவு அற்புதமாக உள்ளது. அது மாற்றப்பட முடியாததாகும். இல்லையெனில், தர்ம தேவரின் மகனான யுதிஷ்டிர மகாராஜன்; கதாயுத வீரரான பீமன்; சக்தி வாய்ந்த காண்டீபத்தை கொண்ட, சிறந்த வில்லாளியான அர்ஜுனன்; மேலும் அனைத்திற்கும் மேலாக, பாண்டவர்களின் நலத்தில் நேரடியாக அக்கறை கொண்டுள்ள பகவான் ஆகியோரின் முன் எப்படி கஷ்டங்கள் ஏற்படக்கூடும்?

பொருளுரை

பௌதிக மற்றும் ஆன்மீக தேவைகளைப் பொறுத்தவரை, அவை பாண்டவர்களுக்கு போதுமான அளவு கிடைத்திருந்தன. பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இரு பெரும் வீரர்கள் இருந்ததால், பௌதிக வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆன்மீக வாழ்வைப் பொறுத்தவரை யுதிஷ்டிரரே தர்மத்தின் சொரூபமாக விளங்கினார். அவற்றிற்கும் மேலாக, பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரே அவர்களது நன்மைக்காக அவர்களுடைய விவகாரங்களில் நேரடியாக அக்கறை கொண்டிருந்தார். எனினும் பாண்டவர்களுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டன. புண்ணியச் செயல்கள், ஆள் பலம், நிர்வாகத் திறமை மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான கண்காணிப்பிலுள்ள ஆயுதபலம் ஆகிய சக்திகளெல்லாம் இருந்தபோதிலும், பாண்டவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்தனர். தவிர்க்க முடியாத காலத்தின் ஆதிக்கம் ஒன்றுதான் இதற்குரிய ஒரே காரணமாக இருக்க முடியும். காலம் எல்லா விதத்திலும் பகவானையே ஒத்திருக்கிறது. எனவே காலத்தின் ஆதிக்கமானது, காரணம் சொல்ல முடியாத பகவானின் விருப்பத்தையே சுட்டிக் காட்டுகிறது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

பதம் 16

न ह्यस्य कर्हिचिद्राजन् पुमान् वेद विधित्सितम् ।
यद्विजिज्ञासया युक्ता मुह्यन्ति कवयोऽपि हि ॥ १६ ॥
ந ஹி அஸ்ய கர்ஹிசித் ராஜன் புமான் வேத விதித்ஸிதம்
யத் விஜிக்ஞாஸயா யுக்தா முஹ்யந்தி கவயோ ’பி ஹி

ந—ஒருபோதும் இயலாது; ஹி—நிச்சயமாக; அஸ்ய—அவரது; கர்ஹிசித்—எதுவாகிலும்; ராஜன்—ராஜனே; புமான்—எவரும்; வேத—அறிவார்; விதித்ஸிதம்—திட்டத்தை; யத்—எது; விஜிக்ஞாஸயா—முழுமையான விசாரணைகளில்; யுக்தா—ஈடுபட்டு; முஹ்யந்தி—குழம்புகின்றார்; கவய:—சிறந்த தத்துவவாதிகள்; அபி—என்றாலும்; ஹி—நிச்சயமாக.

மொழிபெயர்ப்பு

ராஜனே, பகவானின் (ஸ்ரீ கிருஷ்ணர்) திட்டத்தை ஒருவராலும் அறியமுடியாது. பெரும் தத்துவவாதிகள் முழுமையாக விசாரணைகளைச் செய்தபோதிலும், அவர்களும் குழப்பமடைகின்றனர்.

பொருளுரை

யுதிஷ்டிர மகாராஜன் தமது கடந்த கால பாவச் செயல்களையும், அவற்றினால் விளைந்த துன்பங்கள் முதலானவைகளால் கலக்கமடைந்தார். பெரும் அதிகாரியான பீஷ்மரால் (அங்கீரிக்கப்பட்ட பன்னிருவரில் ஒருவர்) அது முற்றிலும் மறுக்கப்படுகிறது. நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து, சிவன் மற்றும் பிரம்மா போன்ற தேவர்கள் உட்பட ஒருவராலும் பகவானின் உண்மையான திட்டத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அதைப்பற்றி நம்மால் புரிந்துகொள்ளக் கூடியது என்ன இருக்கிறது? அதைப் பற்றி விசாரணை செய்வது கூட பயனற்றதாகும். முனிவர்களின் இடைவிடாத தத்துவ விசாரணைகளாலும் கூட பகவானின் திட்டத்தை கண்டுபிடிக்க முடியாது. எதிர்வாதம் செய்யாமல் பகவானின் கட்டளைப்படி நடப்பதுதான் மிகச்சிறந்த கொள்கையாகும். பாண்டவர்களின் கஷ்டங்கள் அவர்களது கடந்தகால செயல்களினால் விளைந்தவை அல்ல. பகவான் நேர்மையான அரசாட்சியை நிலைநாட்ட விரும்பினார். அதனால்தான் அவரது சொந்த பக்தர்கள், நேர்மையை நிலைநாட்டுவதற்காக தற்காலிகமான துன்பங்களுக்கு உட்பட்டனர். நேர்மையின் மாபெரும் வெற்றியைக் கண்ட பிஷ்மதேவர் மிகவும் திருப்தியடைந்தார். மேலும் யுதிஷ்டிர மகாராஜன் அரியாசனத்தில் இருப்பதைக் காண அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. துன்மார்க்கத்தை நிறைவேற்ற முயல்பவர் யாராக இருந்தாலும், அவரால் நேர்மையை வெல்ல முடியாது என்பதை பகவான் காட்ட விரும்பினார். இதனால்தான் மாவீரரான பீஷ்மதேவராலும் கூட வெற்றியடைய முடியவில்லை. பீஷ்மதேவர் பகவானின் மிகச்சிறந்த பக்தராவார். ஆனால் பீஷ்மரைப் போன்ற மாவீரராலும் அதர்மத்தின் பக்கத்தில் இருந்துகொண்டு வெற்றி பெற முடியாது என்பதை பகவான் காட்ட விரும்பினார் என்பதால், பகவானின் விருப்பப்படியே பிஷ்மரும் பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டார்.

பதம் 17

तस्मादिदं दैवतन्त्रं व्यवस्य भरतर्षभ ।
तस्यानुविहितोऽनाथा नाथ पाहि प्रजा: प्रभो ॥ १७ ॥
தஸ்மாத் இதம் தைவ-தந்த்ரம் வ்யவஸ்ய பரதர்ஷப
தஸ்யானுவிஹிதோ ’நாதா நாத பாஹி ப்ரஜா ப்ரபோ

தஸ்மாத்—ஆகவே; இதம்—இந்த; தைவ-தந்த்ரம்—பகவானின் திட்டத்தினால்தான்; வ்யவஸ்ய—கண்டுபிடித்து; பரத-ருஷப—பரத வம்சத்தில் சிறந்தவனே; தஸ்ய—அவரால்; அனுவிஹித:—விரும்பியபடி; அனாகா—அநாதைகளாக; நாத:—தலைவரே; பாஹி—கவனித்துக் கொள்; ப்ரஜா—பிரஜைகளை; ப்ரபோ—ஓ பிரபு.

மொழிபெயர்ப்பு

ஆகவே, பரத வம்சத்தில் சிறந்தவனே (யுதிஷ்டிரர்), இவையனைத்தும் பகவானின் திட்டப்படியே நடந்துள்ளன என்று நான் நினைக்கிறேன். நினைத்தற்கரிய பகவானின் திட்டத்தை ஏற்று அதை நீ பின்பற்ற வேண்டும். அரசே, இப்பொழுது நிர்வாகத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீ, அநாதைகளாக கைவிடப்பட்ட பிரஜைகளை கவனித்துக் கொள்ளவேண்டும்.

பொருளுரை

ஒரு பெண், தன் மகளுக்கு போதிப்பதன் வாயிலாக மருமகளுக்கும் போதிக்கிறாள் என்பது பிரபலமான பழமொழியாகும். அதைப் போலவே, பக்தருக்கு போதிப்பதன் வாயிலாக பகவான் உலகிற்கு போதிக்கிறார். பக்தருக்கு பகவானிடமிருந்து கற்றறிய வேண்டியது ஒன்றுமில்லை. ஏனெனில் உண்மையுள்ள பக்தனுக்கு பகவான் உள்ளிருந்தே போதிக்கிறார். ஆகவே, பகவத் கீதையை போதித்ததைப் போல், எப்பொழுதெல்லாம் ஒரு பக்தருக்கு போதிக்கப்படுவதாக காட்டப்பட்டாலும், அது குறைந்த அறிவுள்ளவர்களுக்கு போதிப்பதற்காகவேயாகும். எனவே, பகவானால் அளிக்கப்படும் துன்பங்களை ஒரு வரமாகவே வருத்தமில்லாமல் ஏற்றுக்கொள்வது ஒரு பக்தரின் கடமையாகும். நிர்வாகக் கடமைகளை பாண்டவர்கள் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பீஷ்மதேவர் அவர்களுக்கு அறிவுரை கூறினார். குருட்சேத்திரப் போரினால் பாதுகாப்பின்றி தவித்துக் கொண்டிருந்த பிரஜைகள், யுதிஷ்டிர மகாராஜன் ஆட்சியை ஏற்பதற்காகக் காத்திருந்தனர். பெருந்துன்பங்களை தூய பக்தரொருவர் பகவானின் கருணையாகவே ஏற்றுக் கொள்கிறார். பகவான் பூரணமானவர் என்பதால் இரண்டுக்கும் இடையில் பௌதிக வேறுபாடில்லை.

பதம் 18

एष वै भगवान्साक्षादाद्यो नारायण: पुमान् ।
मोहयन्मायया लोकं गूढश्चरति वृष्णिषु ॥ १८ ॥
ஏஷ வை பகவான் ஸாக்ஷாத் ஆத்யோ நாராயண: புமான்
மோஹயன் மாயயா லோகம் கூடஸ் சரதி வ்ருஷ்ணிஷு

ஏஷ—இந்த; வை—உண்மையாகவே; பகவான்—பரம புருஷர்; ஸாக்ஷாத்—மூல; ஆத்ய:—முதல்வரான; நாராயண:—பரம புருஷர் (நீர்மேல் சயனித்திருப்பவர்); புமா:—பரம அனுபவிப்பாளர்; மோஹயன்—தடுமாறச் செய்கிறார்; மாயயா—அவரது சுய சக்தியினால்; லோகம்—லோகங்கள்; கூட:—கற்பனைக்கு எட்டாதவர்; சரதி—நடமாடுகிறார்; வ்ருஷ்ணிஷு—விருஷ்ணி குடுமபத்திற்கிடையில்.

மொழிபெயர்ப்பு

இந்த ஸ்ரீ கிருஷ்ணர், கற்பனைக்கு எட்டாத மூல முழுமுதற் கடவுளைத் தவிர வேறொருவரும் இல்லை. அவர் பரம அனுபவிப்பாளரான முதல் நாராயணனாவார். ஆனால் அவர் விருஷ்ணி மகாராஜனின் வம்சத்தில் நம்மில் ஒருவரைப் போலவே நடமாடிக் கொண்டு இருக்கிறார். மேலும் அவரது சுய சக்தியினால் நம்மை அவர் தடுமாறச் செய்து கொண்டும் இருக்கிறார்.

பொருளுரை

வேதங்களிலிருந்து அறிவைப் பெறுவதே முடிவான முறையாகும். வேத அறிவானது, அதிகாரிகளிடமிருந்த சீடப் பரம்பரையின் மூலமாக பூரணமாக பெறப்படுகிறது. குறைமதியாளர்கள் நினைப்பதைப் போல், அத்தகைய அறிவு ஒருபோதும் வறட்டுப் பிடிவாதம் கொண்டதல்ல. தந்தை யாரென்பதை நிரூபிப்பதற்கு தாய்தான் சிறந்த அதிகாரியாவார். ஆகவே, அதிகாரியை ஏற்பது பிடிவாதமாகாது. பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில் (4.2) இவ்வுண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகாரியிடமிருந்து அதைப் பெறுவதே அறிவைப் பெறுவதற்குரிய பக்குவமான முறையாகும். உலகம் முழுவதிலும் இதே முறைதான் உண்மையென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் பொய் வாதம் புரிபவன் மட்டுமே அதற்கு எதிராகப் பேசுவான். உதாரணமாக, நவீன விமானம் ஆகாயத்தில் பறக்கிறது. சந்திரனுக்கு அப்பால் தாங்கள் பிரயாணம் செய்வதாக விஞ்ஞானிகள் கூறும்பொழுது, இக்கதைகளை மக்கள் குருட்டுத்தனமாக நம்பிவிடுகின்றனர். நவீன விஞ்ஞானிகளை அவர்கள் அதிகாரிகளாக ஏற்றுக் கொண்டு இருப்பதே இதற்குக் காரணம். அதிகாரிகள் பேசுகின்றனர். பொதுமக்களும் அதை நம்பிவிடுகின்றனர். ஆனால் வேத உண்மைகளைப் பொறுத்தவரையில் வெறும் நம்பிக்கை மட்டும் போதாது என்று போதிக்கப்படுகிறது. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டபோதிலும், அதற்கு அவர்கள் தப்பான அர்த்தத்தைக் கொடுக்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் வேத அறிவை நேரடியாக அறிந்து கொள்ள விரும்பினாலும், முட்டாள்தனமாக அதை அவன் மறுத்து விடுகிறான். தவறாக வழி நடத்தப்படும் மனிதன் ஒரே ஒரு அதிகாரியை அதாவது விஞ்ஞானியை நம்புகிறான். ஆனால் வேதங்களின் அதிகாரத்தை அவன் மறுத்துவிடுகிறான் என்பதையே இது குறிக்கிறது. இதன் விளைவாக மக்கள் இழிவடைந்துள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணர்தான் மூல முழுமுதற் கடவுளும், முதல் நாராயணருமாவார் என்று பேசும் ஓர் அதிகாரியை இங்கு நாம் காண்கிறோம். பெரும் அருவவாதியான சங்கராச்சாரியரும் கூட அவரது பகவத் கீதை உரையின் துவக்கத்தில், பரம புருஷரான நாராயணர் ஜட சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவர் என்று பின்வறுமாறு கூறியுள்ளார்:

நாராயண: பரோ ’வ்யக்தாத் அண்டம் அவ்யக்த ஸம்பவம்
அண்டஸ்யாந்தஸ் து இமே லோகா: ஸப்த த்வீபா ச மேதினீ

(ப.கீதை சங்கர பாஷ்யம்)

பிரபஞ்சமானது ஜட சிருஷ்டிகளில் ஒன்றாகும். ஆனால் நாராயணரோ அத்தகைய ஜடப் பொருளுக்கும் அப்பாற்பட்டவராவார்.

பீஷ்மதேவர் உன்னத அறிவைப் பற்றிய கொள்கைகளை அறிந்த பன்னிரண்டு மகாஜனங்களில் ஒருவராவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்தான் மூல முழுமுதற் கடவுள் என்ற அவரது தீர்மானம், அருவவாதியான சங்கரராலும் உறுதி செய்துள்ளனர். இவ்வாறாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மூல முழுமுதற் கடவுளாக ஏற்காமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. முதல் நாராயணரும் அவரே என்ற பீஷ்மரின் கூற்று, பிரம்மதேவராலும் பாகவதத்தில் (10.14.14) உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆன்மீக உலகில் (வைகுண்டம்) எண்ணிலடங்காத நாராயணர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அதே முழுமுதற் கடவுளே என்றும் இவர்கள் ஆதி புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்கள் என்றும் கருதப்படுகின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முதல் அம்சம் பலதேவராவார். மேலும் பலதேவரோ, சங்கர்ஷணர், பிரதியும்னர், அநிருத்தர், வாசுதேவர், நாராயணர், புருஷர், ராமர் மற்றும் நரசிம்மரைப் போன்ற அநேக ரூபங்களாக விரிவடைகிறார். இவ்வெல்லா அம்சங்களும் ஒரே விஷ்ணு தத்துவத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர்தான் எல்லா அம்சங்களுக்கும் மூல பிறப்பிடமாவார். எனவே அவர்தான் நேரடியான பரம புருஷ பகவானாவார். ஜடவுலகை சிருஷ்டித்தவரும், வைகுண்ட லோகங்களிலுள்ள நாராயணரும் அவரேயாவார். ஆகவே, மனிதர்களுக்கு இடையிலான அவரது நடமாட்டம் மற்றொரு குழப்பத்திற்குக் காரணமாகிறது. எனவே, பகவானுடைய நடமாட்டங்களின் மகத்துவத்தை அறியாத மூடர்கள் அவரை மனிதரில் ஒருவராகக் கருதுகின்றனர் என்று கீதையில் பகவான் கூறுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மூன்று சக்திகள் உள்ளன. அவற்றில் அந்தரங்கம் மற்றும் பகிரங்கம் ஆகிய இரு சக்திகளும், ஜீவ சக்தி அல்லது நடுத்தர சக்தியின் மீது செயற்படுவதால் தான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய குழப்பம் விளைகிறது. ஜீவராசிகள் நடுத்தர சக்தியின் அம்சங்கள் என்பதால், சில சமயங்களில் அவை அந்தரங்க சக்தியாலும் மற்றும் சில சமயங்களில் பகிரங்க சக்தியாலும் குழப்பத்தில் ஆழ்த்தப்படுகின்றன. குழப்பமான அந்தரங்க சக்தியின் வாயிலாக ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற நாராயணர்களாக விரிவடைந்து, ஆன்மீக உலகிலுள்ள ஜீவராசிகளின் உன்னத அன்புத் தொண்டை ஏற்று அவர்களுடன் அன்புப் பரிமாற்றம் கொள்கிறார். மேலும் அவரது பகிரங்க அவதாரங்களின் வாயிலாக அவர் ஜடவுலகிலுள்ள மனிதர்கள், மிருகங்கள் அல்லது தேவர்களுக்கிடையில் அவதரித்து, ஜீவராசிகளுக்கு தன்னிடமுள்ள மறந்துபோன உறவை புதுப்பிக்கிறார். ஆனால் பீஷ்மரைப் போன்ற பெரும் அதிகாரிகள் பகவானின் கருணையால் அவரது மாயையின் குழப்பத்திலிருந்து தப்புகின்றனர்.

பதம் 19

अस्यानुभावं भगवान् वेद गुह्यतमं शिव: ।
देवर्षिर्नारद: साक्षाद्भगवान् कपिलो नृप ॥ १९ ॥
அஸ்யானுபாவம் பகவான் வேத குஹ்யதமம் சிவ:
தேவர்ஷிர் நாரத: ஸாக்ஷாத் பகவான் கபிலோ ந்ருப

அஸ்ய—அவரது; அனுபாவம்—பெருமைகளை; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; வேத—அறிகிறார்; குஹ்ய-தமம்—மிகவும் இரகசியமாக; சிவ:—சிவபெருமான்; தேவ-ருஷி—தேவர்களுக்கிடையிலான மிகச்சிறந்த ரிஷி; நாரத:—நாரதர்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—பரம புருஷ பகவான்; கபில:—கபிலர்; ந்ருப—ராஜனே.

மொழிபெயர்ப்பு

ராஜனே, சிவபெருமான், தேவரிஷியான நாரதர் மற்றும் பகவானின் அவதாரமான கபிலர் ஆகியோர் பகவானுடன் கொண்ட நேரடியான தொடர்பின் வாயிலாக, மிகவும் இரகசியமான அவரது பெருமைகளைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.

பொருளுரை

பகவானின் தூய பக்தர்கள் அனைவரும் “பாவர்கள்”, அதாவது பகவானின் பெருமைகளை வெவ்வேறு விதமாக அறிந்திருப்பவர்களாவர். பகவானின் அவதாரங்கள் எண்ணிலடங்காதவையாகும். அதைப் போலவே அவரது தூய பக்தர்களும் எண்ணற்றவர்களாக உள்ளனர். இவர்கள் வெவ்வேறு உறவு முறைகளில் தொண்டை பரிமாறிக் கொள்வதில் ஈடுபட்டுள்ளனர். சாதாரணமாக பகவானின் மிகச்சிறந்த பக்தர்கள் பன்னிருவராவர். அவர்கள் பிரம்மா, நாரதர், சிவன், குமாரர், கபிலர், மனு, பிரகலாதர், பீஷ்மர், ஜனகர், சுகதேவ கோஸ்வாமி, பலி மகாராஜன் மற்றும் யமராஜர், பீஷ்மதேவர் அவர்களில் ஒருவர் என்றபோதிலும், பகவானின் பெருமைகளை அறிந்த பன்னிருவரில் முக்கியமான மூவரின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். தற்காலத்து பெரும் ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகுரர் பின்வருமாறு விளக்குகிறார்; “அநுபாவ”, அல்லது பகவானின் பெருமையானது, பரவச நிலையிலுள்ள பக்தனால் முதலில் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த பரவச நிலைக்கான அறிகுறிகள், வியர்த்துப் போதல், நடுக்கம், கதறல், உடல் வெடிப்புகள் முதலியவையாகும். இவை பகவானின் பெருமைகளை நன்கு புரிந்துகொள்வதால் மேலும் அதிகரிக்கின்றன. இத்தகைய “பாவ” நிலை யசோதைக்கும், பகவானுக்கும் இடையிலும் (பகவானை கயிற்றால் கட்டுதல்), அர்ஜுனனுக்கும், பகவானுக்கும் இடையிலும் (பகவான் அர்ஜுனனின் சாரதியாக இருத்தல்) பரிமாறிக் கொள்ளப்பட்டன. அவரது பக்தர்களின் முன் கீழ்ப்படிந்த நிலையில் இருக்கும்பொழுது, பகவானின் இப்பெருமைகள் வெளிப்படுகின்றன. மேலும் அது பகவானுடைய பெருமைகளின் மற்றொரு அம்சமாகும். சுகதேவ கோஸ்வாமியும், குமாரர்களும் உன்னத நிலையில் இருந்த போதிலும், அவர்கள் “பாவத்தின்” மற்றொரு அம்சத்தினால் பகவானின் தூய பக்தர்களாக மாற்றப்பட்டனர். பக்தர்கள் மீது பகவானால் சுமத்தப்படும், பெருந்துன்பமானது பகவானுக்கும், பக்தர்களுக்கும் இடையிலுள்ள “பாவ” பரிமாற்றத்தின் மற்றொரு வகையாகும். பகவான் கூறுகிறார், “என் பக்தனை நான் துன்பத்தில் புகுத்துவதால், பக்தன் தூய்மையடைந்து, உன்னதமான “பாவத்தை” என்னுடன் பரிமாறிக் கொள்வதில் அதிகமான தகுதியைப் பெறுகிறான்.” பக்தனை பௌதிக உறவுகளெனும் மாயையிலிருந்து விடுவிப்பதற்கு, அவனை பௌதிக துன்பங்களில் புகுத்த வேண்டியது அவசியமாகிறது. பௌதிக உறவுகள் ஜட இன்பத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஜட இன்பமோ முக்கியமாக பௌதிக வசதிகளை நம்பியிருக்கிறது. ஆகவே, பௌதிக வசதிகளை பகவான் பறித்துக் கொள்ளும்பொழுது, பகவானின் உன்னத அன்புத் தொண்டால் பக்தன் முழுமையாக கவரப்படுகிறான். இவ்வாறாக பௌதிக வாழ்வெனும் சேற்றிலிருந்து பகவான் வீழ்ந்த ஆத்மாவை பறித்துக்கொள்கிறார். பக்தர்களுக்கு பகவான் அளிக்கும் துன்பமானது, தீய செயலால் விளையும் துன்பத்திலிருந்து வேறுபட்டதாகும். மேலே குறிப்பிட்டதுபோல், மகாஜனங்களான பிரம்மா, சிவன், நாரதர், கபிலர், குமாரர் மற்றும் பீஷ்மரைப் போன்றவர்களுக்கு பகவானின் இப்பெருமைகள் அனைத்தும் நன்கு தெரிந்திருந்தன. மேலும் இவர்களின் கருணையால் அதை ஒருவரால் புரிந்துகொள்ள இயலும்.

பதம் 20

यं मन्यसे मातुलेयं प्रियं मित्रं सुहृत्तमम् ।
अकरो: सचिवं दूतं सौहृदादथ सारथिम् ॥ २० ॥
யம் மன்யஸே மாதுலேயம் ப்ரியம் மித்ரம் ஸுஹ்ருத்தமம்
அகரோ: ஸசிவம் தூதம் ஸௌஹ்ரு தாத் அத ஸாரதிம்

யம்—நபர்; மன்யஸே—நீ நினைக்கிறாய்; மாதுலேயம்—மாமன்; ப்ரியம்—மிகவும் பிரியமான; மித்ரம்—நண்பர்; ஸுஹ்ருத்-தமம்—நலத்தை விரும்புபவர்; அகரோ:—நிறைவேற்றிய; ஸசிவம்—ஆலோசனை; தூதம்—தூதர்; ஸௌஹ்ருதாத்—ஆதரவால்; அத—அதனால்; ஸாரதிம்—சாரதி.

மொழிபெயர்ப்பு

ராஜனே, அறியாமையால் உனது மாமனென்றும், மிகப்பிரியமான நண்பரென்றும், உன் நலம் விரும்புபவர் என்றும், ஆலோசகரென்றும், தூதரென்றும் மற்றும் ஆதரவாளர் என்றும் நீ நினைத்திருந்த அந்நபர் அதே பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரேயாவார்.

பொருளுரை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுடன் மாமன், சகோதரர், நண்பர், நலம் விரும்புபவர், ஆலோசகர், தூதர், ஆதரவாளர் முதலான உறவுகளைக் கொண்டிருந்த போதிலும், எப்பொழுதும் பரம புருஷ பகவானாகவே இருந்தார். காரணமற்ற கருணையினாலும், அன்பினாலும் அவரது தூய பக்தர்களுக்கு அவர் எல்லா வகையான சேவைகளையும் செய்தார். அதனால் பரம புருஷரெனும் அவரது நிலையை அவர் மாற்றிக் கொண்டார் என்பது அர்த்தமல்ல. அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பது மிகப்பெரிய அறியாமையாகும்.

பதம் 21

सर्वात्मन: समद‍ृशो ह्यद्वयस्यानहङ्‍कृते: ।
तत्कृतं मतिवैषम्यं निरवद्यस्य न क्‍वचित् ॥ २१ ॥
ஸர்வாத்மன: ஸம-த்ருசோ ஹி அத்வயஸ்யானஹங்க்ருதே:
தத்-க்ருதம் மதி-வைஷம்யம் நிரவத்யஸ்ய ந க்வசித்

ஸர்வ ஆத்மன:—எல்லோருடைய இதயத்திலும் இருப்பவரின்; ஸம-த்ருச:—அனைவரிடமும் சம அன்பு கொண்டவர்கள்; ஹி—நிச்சயமாக; அத்வயஸ்ய—பரம புருஷரின்; அனஹங்க்ருதே—பௌதிக உறவுகள் எனும் பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவர்; தத்-க்ருதம்—அவரால் செய்யப்படும் அனைத்தும்; மதி—உணர்வு; வைஷம்யம்—வேறுபாடு; நிரவத்யஸ்ய—எல்லா பற்றிலிருந்தும் விடுபட்டவர்; ந—ஒருபோதும் இல்லை; க்வசித்—எந்த கட்டத்திலும்.

மொழிபெயர்ப்பு

பரம புருஷ பகவான் என்பதால் அவர் அனைவருடைய இதயத்திலும் இருக்கிறார். அனைவரிடமும் சம அன்பு கொண்டவரான அவர் வேற்றுமை எனும் பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவராவார். எனவே சமநிலை கொண்டவரான அவரது செயல்களும் பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டவையாகும்.

பொருளுரை

அவர் பூரணமானவர் என்பதால் அவரிலிருந்து வேறுபட்டிருப்பது எதுவுமே இல்லை. அவர் “கைவல்யம்” எனப்படுகிறார். அதாவது சிருஷ்டியில் அவரைத் தவிர வேறொன்றுமில்லை. அனைத்தும், அனைவரும் அவரது சக்தியின் தோற்றங்களே. இவ்வாறாக அவரது சக்தியிலிருந்து வேறுபடாதவரான அவர் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார். சூரியன் எப்படி சூரிய கதிர்களால் எங்கும் பரவியிருக்கிறதோ, அவ்வாறே பகவானும் அவரது சக்தியினால் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறார். அவர் எல்லோருடைய இதயத்திலும் பரம வழிகாட்டியான பரமாத்மாவாக இருக்கிறார். இவ்வாறு அவர் ஏற்கனவே அனைத்து ஜீவராசிகளுக்கும் சாரதியாகவும், ஆலோசகராகவும் இருக்கிறார். எனவே அவர் அர்ஜுனனின் சாரதியாக இருந்தபொழுது உன்னதமான அவரது நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உண்மையில் பக்தித் தொண்டின் பலம்தான் அவரைத் தேரோட்டியாகவோ அல்லது தூதராகவோ தோன்றச் செய்கிறது. பௌதிக வாழ்வுடன் அவர் செய்ய வேண்டியிருப்பது ஒன்றுமில்லை என்பதால் அவர் பூரண ஆன்ம சொரூபியாக விளங்குகிறார். இதனால் அவருக்கு உயர்ந்த செயலுமில்லை, தாழ்ந்த செயலுமில்லை. அவர் பரம புருஷ பகவானாக இருப்பதால் அவரிடம் பொய் அகங்காரம் இல்லை. இதனால் அவருக்கு வேறான எந்த பொருளுடனும் அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை ஜட அகங்காரமானது அவருக்குள் சமநிலைப்படுத்தப்பட்டு விடுகிறது. ஆகவே, அவரது தூய பக்தர்களின் தேரோட்டியாவதனால், அவர்களைவிட தாழ்ந்தவர் ஆவதாக அவர் உணர்வதில்லை. தூய பக்தர்களால் மட்டுமே பாசமுள்ள பகவானிடமிருந்து சேவையைப் பெற முடியும். அதுவே அவர்களின் பெருமையாகும்.

பதம் 22

तथाप्येकान्तभक्तेषु पश्य भूपानुकम्पितम् ।
यन्मेऽसूंस्त्यजत: साक्षात्कृष्णो दर्शनमागत: ॥ २२ ॥
ததாபி ஏகாந்த-பக்தேஷு பஸ்ய பூபானுகம்பிதம்
யன் மே ’ஸூம்ஸ் த்யஜத: ஸாக்ஷாத் க்ருஷ்ணோ தர்சனம் ஆகத:

ததாபி—ஆயினும்; ஏகாந்த—உறுதியான; பக்தேஷு—பக்தர்களுக்கு; பஸ்ய—இங்கு கவனி; பூ-ப—ராஜனே; அனுகம்பிதம்—எவ்வளவு அனுதாபமுள்ளவர்; யத்—எதற்காக; மே—எனது; அஸூன்—வாழ்வின்; த்யஜத:—முடிவில்; ஸாக்ஷாத்—நேரடியாக; க்ருஷ்ண:—பரம புருஷர்; தர்சனம்—எனக்கு தரிசனம் அளிக்க; ஆகத:—அன்புடன் வந்துள்ளார்.

மொழிபெயர்ப்பு

அவர் அனைவரிடமும் சம அன்பு கொண்டவர் என்றபோதிலும் நான் அவரது, உறுதியான தொண்டன் என்பதால், வாழ்வை நான் முடித்துக் கொள்ளும் வேளையில், அவர் அன்புடன் என் முன் வந்துள்ளார்.

பொருளுரை

பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் சமமானவர் என்றபோதிலும், அவரிடம் பூரண சரணாகதி அடைந்தவர்களும், தங்களின் காவலராகவும், தலைவராகவும் வேறொருவரையும் அறிந்திராதவர்களுமான அவரது தூய பக்தர்களிடம் அவர் அதிக அன்பு கொண்டுள்ளார். பகவானையே காவலராகவும், நண்பராகவும் எஜமானராகவும் எண்ணி அவரிடம் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பது நித்திய வாழ்வின் இயற்கையான நிலையாகும். ஜீவராசியொருவன் பகவானையே பூரணமாக நம்பிய நிலையில் தன்னை வைத்துக் கொள்ளும்பொழுது அவன் பெருமகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது பகவானின் விருப்பாகும்.

இதற்கு எதிரான இயல்பு வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. ஜீவராசி தன்னை முழு சுதந்திரமுள்ளவன் என்றெண்ணி, ஜடவுலகை அடக்கியாள விரும்புவதால், இழிவடையக்கூடிய இத்தன்மை அவனிடம் காணப்படுகிறது. எல்லா தொல்லைகளுக்கும் பொய் அகங்காரமே மூல காரணமாகும். எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒருவன் பகவானால் கவரப்பட்டவனாக இருக்க வேண்டும்.

பிஷ்மதேவரின் மரணப்படுக்கைக்கு அருகில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றியதற்கு பீஷ்மரின் உறுதியான பக்தியே காரணமாகும். கிருஷ்ணர் அர்ஜுனனின் மைத்துனராக இருக்க நேர்ந்ததால், அர்ஜுனனுக்கு கிருஷ்ணருடன் உடலளவிலான உறவு இருந்தது. ஆனால் பீஷ்மருக்கு அத்தகைய உடலளவிலான உறவு இருக்கவில்லை. எனவே பகவானை அவர் கவர்ந்திழுத்ததற்கு, பகவானுடனான அவரது நெருங்கிய ஆத்ம உறவே காரணமாகும். இருப்பினும் உடலளவிலான உறவு மிகவும் திருப்தியளிப்பதும், இயற்கையானதுமாகும். இதனால்தான் பகவானை நந்த மகாராஜனின் மகன் என்றும், யசோதையின் மகன் என்றும், ராதா ராணியின் காதலர் என்றும் அழைக்கும்பொழுது அவர் அதிக மகிழ்ச்சியடைகிறார். பகவானுடன் கொண்டுள்ள உடலளவிலான இந்த உறவானது அவருடன் அன்புப் பரிமாற்றம் கொள்வதற்கு ஏற்ற மற்றொரு அம்சமாகும். இத்தகைய உன்னதமான உறவு முறைகளின் இனிமையை பீஷ்மர் உணர்ந்திருந்தார். எனவேதான் அவர் நந்த-நந்தன அல்லது யசோதா-நந்தன போன்ற நாமங்களைப் போலவே, பகவானை விஜய-ஸகே, பார்த்த-ஸகே போன்ற நாமங்களால் அழைக்க விரும்புகிறார். பகவானுடனான நமது தெய்வீக இனிமை கொண்ட உறவை நிலைநாட்டுவதற்கு மிகச்சிறந்த வழி, பகவானின் அங்கீகரிக்கப்பட்ட பக்தர்களின் வாயிலாக அவரை அணுகுவதாகும். நேரடியாக உறவை நிலைநாட்டிக் கொள்ள ஒருவன் முயலக் கூடாது. நம்மை சரியான வழியில் அழைத்துச் செல்லும் தகுதியுடைய ஒருவர் பகவானுக்கும், நமக்கும் இடையில் இருக்க வேண்டும்.

பதம் 23

भक्त्यावेश्य मनो यस्मिन् वाचा यन्नाम कीर्तयन् ।
त्यजन् कलेवरं योगी मुच्यते कामकर्मभि: ॥ २३ ॥
பக்த்யா வேஸ்ய மனோ யஸ்மின் வாசா யன்-நாம கீர்தயன்
த்யஜன் கலேவரம் யோகீ முச்யதே காம-கர்மபி:

பக்த்யா—பக்தி நிறைந்த கவனத்துடன்; ஆவேஸ்ய—தியானித்து; மன:—மனம்; யஸ்மின்—யாருடையதில்; வாசா—வார்த்தைகளால்; யத்—கிருஷ்ணா; நாம—புனித நாமத்தை; கீர்தயன்—பாடுவதால்; த்யஜன்—கைவிட்டு; கலேவரம்—இந்த ஜடவுடலை; யோகீ—பக்தன்; முச்யதே—விடுதலை அடைகிறான்; காம-கர்மபி:—பலன் கருதும் செயல்களிலிருந்து.

மொழிபெயர்ப்பு

பக்தி நிறைந்த கவனத்தினாலும், தியானத்தாலும் மற்றும் புனித நாம ஜெபத்தினாலும் பக்தரின் மனதில் தோன்றும் பரம புருஷ பகவான், பக்தன் ஜடவுடலைக் கைவிடும் வேளையில் அவனை கர்ம பந்தங்களிலிருந்து விடுவிக்கிறார்.

பொருளுரை

மனதை எல்லா பௌதிக விஷயங்களில் இருந்தும் பிரித்து அதை ஒருமுனைப்படுத்துவதே “யோகம்” எனப்படுகிறது. அத்தகைய மன ஒருமை உண்மையில் “சமாதியாகும்”. அதாவது பகவானின் தொண்டில் முழு ஈடுபாடு கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும். இம்முறையில் மனதை ஒருமுகப்படுத்துபவர் “யோகி” என அழைக்கப்படுகிறார். இத்தகைய ஒரு யோகியாக உள்ள பகவானின் பக்தர் இருபத்து நான்கு மணி நேரமும் பகவானின் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இதனால் அவரது முழு கவனமும் ஒன்பது பக்தித் தொண்டு முறைகளான பகவானைப் பற்றி கேட்டல், அவரது நாமத்தைப் பாடுதல், அவரை நினைவிற் கொள்ளுதல், வழிபடுதல், அவரிடம் பிரார்த்தனை செய்தல், தன்னிச்சையாக அவரது தொண்டனாதல், அவரது கட்டளைகளை நிறைவேற்றுதல், அவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுதல், அல்லது பகவானின் சேவைக்காக எல்லா உடைமைகளையும் அர்ப்பணித்து விடுதல் ஆகியவற்றில் மூழ்கி விடுகிறது. இத்தகைய யோகப் பயிற்சியினால், அல்லது பகவானின் தொண்டுடன் தொடர்பு கொள்ளும் முறையினால், ஒருவர் பகவானால் நேரடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார். இம்முறை சமாதியின் மிகவுயர்ந்த பூரணத்துவ நிலையென்று பகவத் கீதையில் விவரிக்கப்படுகிறது. அத்தகைய அரிதான ஒரு பக்தரை யோகிகளிலேயே மிகச்சிறந்தவரென்று பகவான் அழைக்கிறார். பகவானின் திவ்யமான கருணையினால், அத்தகைய ஒரு யோகியால் தன் மனதை பக்குவமடைந்த உணர்வுடன் பகவான் மீது ஒருமுனைப்படுத்த முடிகிறது. இவ்வாறாக யோகியானவர், தமது உடலை உகுப்பதற்கு முன் பகவானின் புனித நாமத்தை பாடுவதன் வழியாக, ஆன்மீக உலகிற்கு உடனடியாக மாற்றப்பட்டு விடுகிறார். பௌதிக வாழ்வும் அதன் விளைவுகளும் சிறிதும் இல்லாததான அந்த ஆன்மீக உலகிற்கு பக்தன் மாற்றப்படுவது பகவானின் அந்தரங்க (அக) சக்தியினால் சாத்தியமாகிறது. ஜடவுலகிலுள்ள ஜீவராசி அவனது கருமங்களுக்கேற்ப மூவகையான துன்பங்களை ஒவ்வொரு பிறவியிலும் அனுபவிக்க வேண்டியுள்ளது. அத்தகைய பௌதிக வாழ்வு பௌதிக ஆசைகளினால் விளைந்ததாகும். பகவானின் பக்தித் தொண்டானது ஜீவராசியின் இயற்கையான ஆசைகளைக் குலைத்து விடுவதில்லை. ஆனால் அந்த ஆசைகள் பகவானின் பக்தித் தொண்டில் சரியாக பிரயோகிக்கப்படுகின்றன. இது ஆன்மீக உலகிற்கு மாற்றப்படுவதற்கு ஆசையை தகுதியுள்ளதாக மாற்றுகிறது. பக்தி யோகம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான யோக முறையை பீஷ்மதேவர் இங்கு குறிப்பிடுகிறார். மேலும் அவர் தமது ஜடவுடலை விடுவதற்கு முன்பாக பகவானின் நேரடியான தரிசனத்தைப் பெற்றது அவருடைய பேரதிர்ஷ்டமாகும். எனவே பகவான் தன் கண் முன்னேயே இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இது பின்வரும் சுலோகங்களில் விளக்கப்படுகிறது.

பதம் 24

स देवदेवो भगवान् प्रतीक्षतां
कलेवरं यावदिदं हिनोम्यहम् ।
प्रसन्नहासारुणलोचनोल्लस-
न्मुखाम्बुजो ध्यानपथश्चतुर्भुज: ॥ २४ ॥
ஸ தேவ-தேவோ பகவான் ப்ரதீக்ஷதாம்
கலேவரம் யாவத் இதம் ஹினோமி அஹம்
ப்ரஸன்ன-ஹாஸாருண-லோசனோல்லஸன்
முகாம்புஜோ த்யான-பதஸ் ச துர்-புஜ:

ஸ—அவர்; தேவ-தேவ:—தேவ தேவனான; பகவான்—பரம புருஷ பகவான்; ப்ரதீக்ஷதாம்—அன்புடன் காத்திருக்க வேண்டுகிறேன்; கலேவரம்—உடலை; யாவத்—அதுவரை; இதம்—இதை (ஜடவுடலை); ஹினோமி—கைவிட; அஹம்—நான்; ப்ரஸன்ன—உல்லாசமான; ஹாஸ—புன்னகையுடன்; அருண-லோசன—உதயசூரியனைப் போல் சிவந்த கண்கள்; உல்லஸத்—அழகாக அலங்கரிக்கப்பட்ட; முக-அம்புஜ:—தாமரையைப் போன்ற அவரது முகம்; த்யான-பத:—என் தியான வழியில்; சதுர்-புஜ:—நான்கு கரங்களைக் கொண்ட நாராயணன் (பீஷ்மதேவரின் உபாசனா மூர்த்தி)

மொழிபெயர்ப்பு

உதயசூரியனைப் போல் சிவந்த கண்களுடனும், அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள தாமரை முகத்துடனும் புன்னகை பூத்தவாறு நின்றிருக்கும் நான்கு கரங்களையுடைய என் பெருமான், இந்த ஜடவுடலை நான் விடும்வரை தயவுகூர்ந்து இங்கேயே இருக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.

பொருளுரை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்தான் மூல நாராயணர் என்பதை பீஷ்மதேவர் அறிந்திருந்தார். நான்கு கரங்களைக் கொண்ட நாராயணர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓர் அம்சம் என்பதையும் அவர் அறிவார். பகவான் அவரது நான்கு கரங்களைக் கொண்ட நாராயண ரூபத்தில் காட்சி தரவேண்டுமென்று மறைமுகமாக அவர் விரும்பினார். ஒரு வைஷ்ணவர் எப்பொழுதும் அடக்கமான நடத்தை உள்ளவராக இருப்பார். ஜடவுடலை விட்டவுடனேயே பீஷ்மதேவர் வைகுண்டத்திற்குச் செல்வது மிகவும் நிச்சயம் என்றபோதிலும், ஜடவுடலை விட்டபின் பகவானை இனிமேல் காண முடியுமோ, முடியாதோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அடக்கமுள்ள வைஷ்ணவர் என்ற முறையில் பகவானின் அழகிய முகத்தை அவர் காண விரும்பினார். பகவானின் தூய பக்தர் ஆன்மீக உலகிற்குச் செல்வது உறுதி என்றாலும் அதனால் வைஷ்ணவர் ஒருவர் தற்பெருமை கொள்வதில்லை. “இவ்வுடலை நான் கைவிடாத வரை” என்று பீஷ்மதேவர் இங்கு கூறுகிறார். அதாவது பீஷ்மதேவர் அவரது சொந்த விருப்பப்படியே அவரது உடலை விடப்போகிறார் என்பதையே இது குறிக்கிறது; இயற்கைச் சட்டங்களினால் அவர் வற்புறுத்தப்படவில்லை. அவர் விரும்பிய காலம் வரை அவரது உடலிலேயே இருக்கக்கூடிய அளவு சக்தியை பெற்றிருந்தார். அவருடைய தந்தையிடமிருந்து இவ்வரத்தை அவர் பெற்றார். பகவான் நான்கு கரங்களைக் கொண்ட நாராயணராக தன்முன் காட்சி தரவேண்டுமென்றும், அந்த ரூபத்தில் தமது மனதை ஒருமுகப்படுத்தி சமாதியில் ஆழ்ந்துவிட வேண்டுமென்றும் அவர் விரும்பினார். இவ்வாறாக பகவானின் சிந்தனையால் மனதை புனிதப்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார். அதன் பிறகு அவர் எங்கு செல்வதாக இருந்தாலும் பாதகமில்லை. தூய பக்தரொருவர் ஆன்மீக உலகிற்குச் செல்லும் பேராவல் கொண்டவராக ஒருபோதும் இருப்பதில்லை. அவர் பகவானின் ஆதரவையே முற்றிலும் நம்பியிருக்கிறார். அவர் நரகத்திற்குச் செல்ல வேண்டுமென்று பகவான் விரும்பினாலும் அதிலும் அவர் சமமான திருப்தியடைகிறார். பகவானின் மலர் பாதங்களை சிந்திப்பதில் எப்பொழுதும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டுமே தூய பக்தருக்குள்ள ஒரே ஆசையாகும். மனம் பகவானின் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது உயிரை விடவேண்டும் என்பதையே பீஷ்மதேவரும் விரும்பினார். அதுவே தூய பக்தர்களின் மிகவுயர்ந்த நோக்கமாகும்.

பதம் 25

सूत उवाच
युधिष्ठिरस्तदाकर्ण्य शयानं शरपञ्जरे ।
अपृच्छद्विविधान्धर्मानृषीणां चानुश‍ृण्वताम् ॥ २५ ॥
ஸூத உவாச

யுதிஷ்டிரஸ் தத் ஆகர்ண்ய சயானம் சர-பஞ்சரே
அப்ருச்சத் விவிதான் தர்மான் ருஷீணாம் சானுஸ்ருண்வதாம்

ஸூத உவாச—சூத கோஸ்வாமி கூறினார்; யுதிஷ்டிர:—யுதிஷ்டிர மகாராஜன்; தத்—அந்த; ஆகர்ண்ய—கேட்டு; சயானம்—படுத்திருக்கும்; சர-பஞ்சரே—அம்புப் படுக்கையின் மேல்; அப்ருச்சத்—கேட்டார்; விவிதான்—பல வகையான; தர்மான்—கடமைகளை; ருஷீணாம்—ரிஷிகளின்; ச—மேலும்; அனுஸ்ருண்வதாம்—கேட்டபின்.

மொழிபெயர்ப்பு

சூத கோஸ்வாமி கூறினார்: மனதை உருக்கும் குரலில் பீஷ்மதேவர் பேசியதைக் கேட்ட யுதிஷ்டிர மகாராஜன், எல்லா சிறந்த ரிஷிகளின் முன்னிலையிலும், பல்வேறு மதக் கடமைகளின் முக்கிய கொள்கைகளைப் பற்றியெல்லாம் அவரிடம் வினவினார்.

பொருளுரை

உருக்கமான குரலில் பீஷ்மதேவர் பேசியதைக் கேட்ட யுதிஷ்டிர மகாராஜன், அவர் சீக்கிரமாக உயிரை விடப்போகிறார் என்பதைப் புரிந்துகொண்டார். மேலும் மதக் கொள்கைகளைப் பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி பகவான் ஸ்ரீ கிருண்ர் யுதிஷ்டிர மகாராஜனை ஊக்கப்படுத்தினார். பீஷ்மதேவரைப் போன்ற பகவத் பக்தர்கள் ஒருவர் இகலோக மனிதனைப் போல் வாழ்வதாக காணப்பட்டாலும், அவர்கள் பல பெரும் முனிவர்களையும், வியாசதேவரைவிடவும் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டவே, பல பெரும் முனிவர்களின் முன்னிலையில் பீஷ்மதேவரிடம் கேள்வி கேட்கும்படி கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜனை ஊக்குவித்தார். மற்றொரு கருத்து என்னவெனில், பீஷ்மதேவர் அச்சமயத்தில் அம்புகளாலான மரணப்படுக்கையில் படுத்திருந்ததோடு அல்லாமல், அந்நிலையினால் பெரும் துன்பத்திற்கும் ஆளாகியிருந்தார். அச்சமயத்தில் யாரும் அவரிடம் கேள்விகள் கேட்டிருக்கக் கூடாது. ஆனால் தூய பக்தர்கள் அவர்களுடைய ஆன்ம ஞானத்தின் பலத்தினால், உடலாலும், மனதாலும் எப்பொழுதும் நல்ல நிலையிலேயே இருக்கின்றனர் என்பதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நிரூபிக்க விரும்பினார். எனவே பகவானின் பக்தரொருவர் எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியான வாழ்வு முறையைப் பற்றி பேசும் தகுதியுடையவராகவே இருக்கிறார். அங்கு கூடியிருந்தவர்கள் பீஷ்மதேவரை விட சிறந்த பண்டிதர்களாகக் காணப்பட்டபோதிலும், அவர்களிடம் கேட்பதை விட பீஷ்மதேவரிடமே தனது பிரச்சினைக்குரிய கேள்விகளைக் கேட்டுவிட வேண்டும் என்று யுதிஷ்டிரர் விரும்பினார். பக்தர்களின் பெருமைகளை நிலைநாட்டுபவரும், சிறந்த சக்கராயுதத்தை கரத்தில் ஏந்தியிருப்பவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இவையனைத்திற்கும் காரணமாவார். மகன் தன்னைவிட அதிக புகழ்பெற்றவன் ஆகவேண்டும் என்பதைக் காண தந்தை விரும்புகிறார். பகவானை நேரடியாக வழிபடுவதை விட அவரது பக்தர்களை வழிபடுவது அதிக நன்மையை அளிக்கக்கூடியதாகும் என்று பகவான் மிகவும் அழுத்தமாகக் கூறுகிறார்.

பதம் 26

पुरुषस्वभावविहितान् यथावर्णं यथाश्रमम् ।
वैराग्यरागोपाधिभ्यामाम्नातोभयलक्षणान् ॥ २६ ॥
புருஷ-ஸ்வ-பாவ விஹிதான் யதா-வர்ணம் யதாஸ்ரமம்
வைராக்ய-ராகோபாதிப்யாம் ஆம்னாதோபய-க்ஷணான்

புருஷ—மனிதன்; ஸ்வ-பாவ—அவனது சொந்த சுபாவத்தினால்; விஹிதான்—நியமிக்கப்பட்ட; யதா—ஏற்ப; வர்ணம்—சமூக பிரிவுகளுக்கும்; யதா—ஏற்ப; ஆஸ்ரமம்—ஆன்மீக பிரிவுகளுக்கும்; வைராக்ய—துறவு; ராக—பற்று; உபாதிப்யாம்—அத்தகைய அந்தஸ்துகளில்; ஆம்னாத:—ஒழுங்காக; உபய—இரு; லக்ஷணான்—அறிகுறிகள்.

மொழிபெயர்ப்பு

யுதிஷ்டிர மகாராஜனின் கேள்விக்கு பீஷ்மதேவர் முதலில், தனி மனிதனின் தகுதிகளுக்கேற்ப, சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளின் தரங்களை விளக்கினார். பிறகு அவர் துறவினால் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதையும், பற்றினால் பௌதிக பந்தத்தில் சிக்கிக் கொள்வதையும் பற்றி தெளிவாக விளக்கினார்.

பொருளுரை

நான்கு சமூகப் பிரிவுகள் மற்றும் நான்கு ஆன்மீக பிரிவுகளைப் பற்றிய கருத்து, தனி மனிதனின் தெய்வீக குணங்களை அதிகரிப்பதற்காக பகவானாலேயே ஏற்படுத்தப்பட்டதாகும். (பகவத் கீதை 4.13). இதனால் மனிதன் அவனது ஆன்மீக சொரூபத்தை படிப்படியாக உணர்ந்து கொள்வதுடன், அதற்கேற்றவாறு செயற்பட்டு, பௌதிக பந்தத்திலிருந்தும் அவனால் விடுபட முடியும். ஏறக்குறைய எல்லா புராணங்களுமே இவ்விஷயத்தை இப்படித்தான் விளக்கியிருக்கின்றன. அதைப் போலவே மகாபாரதத்திலுள்ள சாந்திபர்வத்தின், பதினாறாம் அத்தியாயத்திலிருந்து இவ்விஷயம் பீஷ்மதேவரால் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. நாகரிகமடைந்த மனிதன், மனித வாழ்வை வெற்றிகரமாக முடித்துக் கொள்வதற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காகவே வர்ணாஸ்ரம தர்மம் நியமிக்கப்பட்டு உள்ளது. உண்ணுதல், உறங்குதல், தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் இனவிருத்தி செய்தல் ஆகிய காரியங்களில் மட்டும் ஈடுபட்டுள்ள தாழ்ந்த மிருகங்களின் வாழ்விலிருந்து, தன்னுணர்வைப் பெறும் வாழ்வு வேறுபட்டதாகும். மனிதனுக்கு ஒன்பது தகுதிகள் தேவை என்று பீஷ்மதேவர் அறிவுறுத்துகிறார். அவை

(1) கோபப்படாதிருத்தல், (2) பொய் சொல்லாமை, (3) செல்வத்தை சமமாக விநியோகித்தல், (4) மன்னித்தல், (5) சட்டபூர்வமான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல், (6) மனத் தூய்மையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல், (7) யாருடனும் விரோதம் கொள்ளாத்திருத்தல், (8) எளிமையாக இருத்தல், மற்றும் (9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்திருப்பவர்களை ஆதரித்தல் என்பவையாகும். மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெறாதவனை நாகரிகம் அடைந்தவனென்று அழைக்க முடியாது. மேலும் பிராமணர்கள் (புத்திசாலிகள்), ஆளும் பிரிவினர், வணிகர் பிரிவினர் மற்றும் தொழிலாளர் பிரிவினர் ஆகியோர் வேத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவரவர் கடமைகளுக்கேற்ற சிறந்த தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பிராமணர்களுக்கு புலனடக்கம் இன்றியமையாத தகுதியாகும். அதுவே நல்லொழுக்க வாழ்விற்கு அடிப்படையாகும். சட்டபூர்வமான மனைவியுடன் உடலுறவு கொள்வது கூட கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதனால் குடும்பக் கட்டுப்பாடு தானாகவே பின்தொடரும். அறிவுள்ள மனிதன் வேத முறையிலான வாழ்வைப் பின்பற்றவில்லை என்றால், அவனது சிறந்த தகுதிகளை அவன் தகாத வழியில் உபயோகித்தவனாவான்.

அதாவது வேத இலக்கியங்களை, குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்தையும், பகவத் கீதையையும் ஒருவன் நன்கு கற்றுணர வேண்டும். வேத ஞானத்தைப் பயில்வதற்கு, பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டுள்ள பக்தரை ஒருவர் அணுகவேண்டும். சாஸ்திர விரோதமான செயல்களை அவர் கைவிடவேண்டும். ஒருவன் மது அருந்துபவனாகவோ அல்லது புகைபிடிப்பவனாகவோ இருந்தால், அவன் ஓர் ஆசிரியனாக இருக்க முடியாது. நவீன கல்வி முறையில், ஆசிரியரின் நல்லொழுக்க வாழ்வை மதிப்பிடாமல், அவரது கல்லூரி படிப்பின் தகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, உயர்ந்த அறிவை பல வழிகளில் துஷ்பிரயோகம் செய்வதே கல்வியின் பலனாக அமைந்துவிடுகிறது.

க்ஷத்திரியர்கள், அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தானம் செய்யவேண்டும் என்றும், ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் தானம் பெறக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர். நவீன நிர்வாகிகள் சில அரசியல் நிகழ்ச்சிகளுக்காக நன்கொடைகளை வசூலிக்கின்றனர். ஆனால் அரசாங்க நிகழ்ச்சிகளின் போது பிரஜைகளுக்கு அவர்கள் தானம் கொடுப்பதே இல்லை. இது சாஸ்திரத்திற்கு நேர் எதிரானதாகும். ஆளும் பிரிவினர் சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆசிரியர்களின் தொழிலை ஏற்கக் கூடாது. அரசாளும் பிரிவினர் பலாத்காரத்தைப் பிரயோகம் செய்யாததைப் போல் ஒருபோதும் பாசாங்கு செய்யக் கூடாது. இதனால் அவர்கள் நரகத்திற்குத்தான் செல்வார்கள். குருட்சேத்திரப் போர்க்களத்தில் பலாத்காரம் வேண்டாம் என்று பின்வாங்கிய அர்ஜுனனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கடுமையாக கண்டித்தார். அப்பொழுது அகிம்சை கொள்கையைப் பின்பற்ற விரும்பிய அர்ஜுனனை பகவான் நாகரிகமடையாத மனிதனின் அந்தஸ்திற்குத் தாழ்த்தினார். அரசாளும் பிரிவினர் போர்க் கலையில் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்திற்கொண்டு கோழைகளை ஜனாதிபதியின் பதவிக்கு உயர்த்திவிடக் கூடாது. அரசர்கள் அனைவரும் வீரபராக்கிரமசாலிகளாக இருந்தனர். எனவே அரசர்களுக்கு அவர்களுக்குரிய உத்தியோகக் கடமைகளில் நன்கு பயிற்சி அளித்து, அரசாட்சியைப் பராமரிக்க வேண்டும். போரில், அரசனோ, அல்லது ஜனாதிபதியோ எதிரியால் தாக்கப்படாமல் வீடு திரும்பக் கூடாது. பெயரளவேயான இக்காலத்தில் அரசன் போர்க்களத்தை எட்டிகூடப் பார்ப்பதில்லை. அவன் செயற்கையான முறையில் போரை ஊக்குவித்து, நாட்டிற்கு பொய்யான கௌரவத்தை தேடித் தருவதில் கை தேர்ந்தவனாக இருக்கிறான். ஆட்சிக்குழு பிரிவினர் வணிகர்களாகவும், தொழிலாளர் கூட்டமாகவும் மாறியவுடனேயே, அரசாங்க இயக்கம் முழுவதுமே பழுதடைந்து விடுகிறது.

வைசியர்கள், அல்லது வணிக பிரிவினர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டுமென்று முக்கியமாக அறிவுறுத்தப்படுகின்றனர். பசு பாதுகாப்பு என்பது, பாலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தயிரையும், வெண்ணையையும் அதிகரிப்பதாகும். விவசாயம் மற்றும் உணவு விநியோகம் ஆகியவையே இவர்களின் முக்கிய கடமையாகும். இவற்றிற்கு ஆதாரமாக வேதக் கல்வியை போதிப்பதுடன், தான தருமங்கள் செய்வதாலும் அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். பிரஜைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு க்ஷத்திரியர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைப் போலவே, மிருகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வைசியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மிருகங்கள் கொல்லப்படுவதற்காக இருப்பவை அல்ல. மிருகவதை காட்டுமிராண்டி சமூகத்திற்குரிய ஓர் அறிகுறியாகும். ஒரு மனிதனுக்கு விவசாய உற்பத்தி, பழங்கள் மற்றும் பால் ஆகியவை போதுமான, தகுதியுள்ள உணவு வகைகளாகும். மனித சமூகம் மிருகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இயந்திர தொழிற்சாலையில் பணிபுரிவதால் தொழிலாளியின் உற்பத்தி செய்யும் சக்தி வீணாக செலவழிக்கப்படுகிறது. பல வகைப்பட்ட இயந்திரத் தொழில்களால் மனிதனின் முக்கிய தேவைகளான அரிசி, கோதுமை, தானியங்கள், பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய முடியாது. இயந்திர உற்பத்தி செயற்கையான வாழ்வு முறையை அதிகரிப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்களைப் பட்டினி கிடக்கவும், கொந்தளிப்பு அடையவும் செய்கிறது. நாகரிகத்தின் தரம் இப்படிப்பட்டதாக இருக்கக் கூடாது.

சூத்திர பிரிவினர் குறைந்த அறிவுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கக் கூடாது. சமூகத்தின் மூன்று உயர் பிரிவுகளுக்கு அவர்கள் உண்மையான சேவை செய்ய வேண்டியவர்களாவர். இத்தகைய சேவையினால் வாழ்வின் எல்லா வசதிகளையும் அவர்களால் அடைய முடியும். சூத்திரன் ஒருபோதும் வங்கியில் பணம் சேமிக்கக் கூடாது என்று முக்கியமாக உத்தரவிடப்பட்டு உள்ளது. பணத்தை சேகரித்த உடனேயே சூத்திரர்கள் மது, மங்கையர், சூதாட்டம் முதலான பாவச் செயல்களில் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள். மக்கள்தொகை சூத்திரனை விட இழிவடைந்த நிலையில் இருப்பதை மது, மங்கை மற்றும் சூதாட்டம் ஆகியவை சுட்டிக்காட்டுகின்றன. உயர் பிரிவினர் சூத்திரர்களின் பராமரிப்பை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். சூத்திரர்களுக்கு அவர்கள் உபயோகித்த, பழைய ஆடைகளை அளிக்க வேண்டும். வயதான, நோயாளியாக உள்ள எஜமானரை சூத்திரன் தனிமையில் விட்டுச் செல்லக் கூடாது. எஜமானரும் அவனை எல்லா விதத்திலும் திருப்தியடைந்தவனாக வைத்திருக்க வேண்டும். எந்த யாகத்தை நடத்துவதானாலும், முதலில் சூத்திரனுக்குப் போதுமான உணவையும், உடையையும் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். கலி யுகத்தில் லட்சக்கணக்காக பணம் செலவழிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஏழைத் தொழிலாளர்களுக்கு போதுமான உணவோ, உடையோ, தானமோ அளிக்கப்படுவதில்லை. இதனால் தொழிலாளிகள் அதிருப்தி அடைந்து, கலகத்தை உண்டுபண்ணுகின்றனர்.

“வர்ணங்கள்” என்பது, வெவ்வேறு உத்தியோகப் பிரிவுகளாகும். மேலும் “ஆஸ்ரம-தர்மம்” என்பது தன்னுணர்வுப் பாதையிலுள்ள படிப்படியான முன்னேற்றமாகும். இவ்விரண்டுமே ஒன்றையொன்று சார்ந்துள்ளன. “ஆஸ்ரம-தர்மத்தின்” முக்கிய நோக்கம் அறிவையும், துறவையும் விழிப்புறச் செய்வதாகும். பிரம்மச்சாரி ஆஸ்ரமம் என்பது வருங்கால மாணவர்களுக்குரிய பயிற்சிக் கூடமாகும். இந்த ஜடவுலகமானது ஜீவராசிகளுடைய உண்மையான வீடல்ல என்பது இந்த ஆஸ்ரமத்தில் உபதேசிக்கப்படுகிறது. பௌதிக பந்தத்திலுள்ள ஆத்மாக்கள் ஜடத்தின் கைதிகளாக உள்ளனர். எனவே தன்னுணர்வைப் பெறுவதே வாழ்வின் உயர்ந்த நோக்கமாகும், “ஆஸ்ரம தர்மம்” எனும் இம்முறை முழுவதும் துறவை ஏற்படுத்துவதற்காகவே உள்ளதாகும். இத்தகைய துறவு வாழ்வில் ஒன்றிப் போக இயலாதவர்கள், இதே நோக்கத்திற்காக இல்லற வாழ்வில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே, துறவை அடையப் பெற்றவர்கள் உடனே துறவறம் எனும் நான்காவது பிரிவை ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறாக, தன்னுணர்வை அடையும் நோக்கத்துடன் உடலையும், ஆத்மாவையும் ஒன்றாக வைத்திருப்பதற்காக அவர்கள் தான தருமங்களைக் கொண்டே வாழ்க்கையை நடத்த வேண்டும், செல்வத்தை சேகரிக்கக் கூடாது . இல்லற வாழ்வு பற்றுள்ளவனுக்காக ஏற்பட்டதாகும். மேலும் வானபிரஸ்தம் மற்றும் சந்நியாச வாழ்வு பற்றற்றவர்களுக்கு உரியதாகும். பிரம்மச்சாரி ஆஸ்ரமமானது முக்கியமாக பற்றுள்ளவர்கள், மற்றும் பற்றற்றவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் பயிற்சி அளிப்பதற்கென உள்ளதாகும்.

பதம் 27

दानधर्मान् राजधर्मान् मोक्षधर्मान् विभागश: ।
स्त्रीधर्मान् भगवद्धर्मान् समासव्यासयोगत: ॥ २७ ॥
தான-தர்மான் ராஜ-தர்மான் மோக்ஷ-தர்மான் விபாகச:
ஸ்த்ரீ-தர்மான் பகவத்-தர்மான் ஸமாஸ-வ்யாஸ யோக த:

தான-தர்மான்—தான தருமங்கள்; ராஜ-தர்மான்—அரசர்களின் நீதி வழுவாத செயல்கள்; மோக்ஷ-தர்மான்—மோட்சம் அளிக்கக்கூடிய செயல்கள்; விபாகச:—பிரிவுகளாக; ஸ்த்ரீ-தர்மான்—பெண்களின் கடமைகள்; பகவத்-தர்மான்—பக்தர்களின் செயல்கள்; ஸமாஸ—பொதுவாகவும்; வ்யாஸ—தெளிவாகவும்; யோகத:—மூலமாக.

மொழிபெயர்ப்பு

பிறகு அவர் தான தருமங்கள், அரசர்களின் நீதி வழுவாத செயல்கள் மற்றும் மோட்சத்தை அளிக்கும் செயல்கள் ஆகியவற்றை தனித்தனியாக விளக்கினார். பிறகு பெண்கள் மற்றும் பக்தர்களின் கடமைகளை சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கினார்.

பொருளுரை

தானம் கொடுப்பது இல்லறவாசியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தில் குறைந்தது ஐம்பது சதவீதத்தையாவது தானம் செய்துவிட அவன் தயாராக இருக்க வேண்டும். ஒரு பிரம்மச்சாரி அல்லது மாணவன், யாகமியற்ற வேண்டும். குடும்பஸ்தன் தானம் அளிக்க வேண்டும். சந்நியாசி அல்லது துறவி தவங்களையும், விரதங்களையும் பயில வேண்டும். இவையே தன்னுணர்வுப் பாதையிலுள்ள எல்லா ஆஸ்ரமங்களுக்கும் பொதுவான கடமைகளாகும். பிரம்மச்சாரி வாழ்வில் போதுமான அளவிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் உலகம் பரம புருஷருக்குச் சொந்தமானது என்பதை ஒருவரால் புரிந்துகொள்ள இயலும். ஆகவே, யாருமே உலகிலுள்ள எப்பொருளையும் தங்களுக்குச் சொந்தமென்று உரிமை கொண்டாட முடியாது. எனவே, உடலுறவு சுகத்திற்கு ஒரு வகையான அனுமதியைப் போலுள்ள குடும்ப வாழ்விலுள்ள ஒருவன் பகவானின் சேவைக்காக தானம் கொடுக்க வேண்டும். எல்லோருடைய சக்தியும் பலன்களை, பகவானிடமிருந்தே பெறப்படுகிறது என்பதால், அத்தகைய சக்தியின் பலன்களை, பகவானுக்குச் செய்யும் உன்னத அன்புத் தொண்டின் வடிவில் அவருக்கு அர்ப்பணம் செய்துவிட வேண்டும். மேகங்களின் மூலமாக கடல்நீரைப் பெறும் நதிகள் மீண்டும் கடலை நோக்கி ஓடுவதைப் போலவே, நம்முடைய சக்தியும் மூல பிறப்பிடமான பகவானின் சக்தியிலிருந்துதான் கடன் வாங்கப்படுகிறது. பகவானுக்கு அதை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அதுவே நமது சக்தியின் பூரணத்துவமாகும். எனவேதான் பகவான் பகவத் கீதையில் (9.27) எதையெல்லாம் நாம் செய்கின்றோமோ, எந்த தவங்களையெல்லாம் நாம் இயற்றுகிறோமோ, எதையெல்லாம் நாம் கொடுக்கிறோமோ, எதையெல்லாம் நாம் உணர்கிறோமோ, அல்லது எதையெல்லாம் நாம் தியாகம் செய்கிறோமோ, அதையெல்லாம் அவருக்கே (பகவான்) அர்ப்பணம் செய்துவிட வேண்டும் என்று கூறுகிறார். இதுவே நாம் கடன் வாங்கிய சக்தியை உபயோகிக்கும் முறையாகும். இப்படிச் செய்வதால், நம்முடைய சக்தி பௌதிக தொடர்பின் களங்கத்திலிருந்து தூய்மை அடைகிறது. இவ்வாறாக நமது வாழ்வின் இயற்கையான நோக்கமாகிய பகவத் சேவையில் ஈடுபடும் தகுதியை நாம் பெறுவோம்.

“ராஜ-தர்மம்” என்பது பெரிய விஞ்ஞானமாகும். அது இக்காலத்து அரசியலைப் போன்றதல்ல. அரசர்கள் கொடை வள்ளல்களாக இருக்கும்படி நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தனர், வெறும் வரி வசூலிப்பவர்களாக மட்டுமே அவர்கள் இருக்கவில்லை. மக்களின் செழுமைக்காக மட்டுமே வெவ்வேறு யாகங்களைச் செய்வதற்கு அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தனர். பிரஜைகளை முக்திக்கான வழியில் அழைத்துச் செல்ல வேண்டியது அரசர்களின் உயர்ந்த கடமையாகும். தந்தை, ஆன்மீக குரு மற்றும் அரசர் ஆகியோர், தங்களை நம்பியிருப்பவர்களை, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகியவற்றிலிருந்து விடுவித்து முக்திக்கான வழியில் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்க வேண்டும். இம்முக்கிய கடமைகள் ஒழுங்காக நிறைவேற்றப்படுமானால், மக்களாட்சி தேவையில்லை. இக்காலத்து மக்கள் வாக்கின் பலத்தினால் ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றனர். ஆனால் அரசரின் முக்கிய கடமைகளில் அவர்கள் பயிற்சி பெறுவதேயில்லை. மேலும் அது அனைவருக்கும் சாத்தியமாகக் கூடியதும் அல்ல. இச்சூழ்நிலைகளின் கீழ் மக்களை எல்லா விதத்திலும் மகிழ்ச்சிப்படுத்தும் முயற்சியில், பயிற்சி பெறாத நிர்வாகிகள் அனைத்தையும் நாசமாக்கி விடுகின்றனர். மாறாக, பயிற்சி பெறாத நிர்வாகிகள் சிறிது சிறிதாக மோசக்காரர்களாகவும், திருடர்களாகவும் மாறிவிடுவதுடன், எந்த நோக்கத்திற்கும் உபயோகமற்றதாகவும் கடன்பட்டதாகவும் உள்ள நிர்வாகத்தை சரிகட்டுவதற்காக வரி வசூலிப்பதை அதிகரிக்கின்றனர். உண்மையில் தகுதியுள்ள பிராமணர்கள், பராசர முனிவர்கள் தர்ம சாஸ்திரம் மற்றும் மனு சம்ஹிதை போன்ற சாஸ்திரங்களுக்கு ஏற்ப, சரியான அரசாட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர்களாவர். சிறந்த அரசரைப் பெறுவதே பொதுமக்களின் குறிக்கோளாகும். மேலும் அவ்வரசர் பக்தியுள்ளவராகவும், புண்ணியவானாகவும், வீர பராக்கிரமசாலியாகவும் மற்றும் கொடை வள்ளலாகவும் இருப்பாரானால், பொதுவாக அவரையே மக்கள் பின்பற்றுவார்கள். அத்தகைய அரசரொருவர் பிரஜைகள் உழைப்பில் வாழ்க்கையை நடத்தும் ஒரு சோம்பேறியல்ல. மாறாக கொள்ளைக்காரர்களையும், திருடர்களையும் கொல்வதற்கு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறார். பக்தியுள்ளம் படைத்த அரசர்கள் கொலைகாரர்களிடமும், கொள்ளைக்காரர்களிடமும், அகிம்சை எனும் பெயரில் கருணை காட்டியவர்களக இருக்கவில்லை. இந்த கொலை, கொள்ளைக்காரர்கள் ஓர் எடுத்துக்காட்டான முறையில் தண்டிக்கப்பட்டனர். இதனால் எதிர்காலத்தில் திட்டம் போட்டு இத்தகைய தீங்குகளைச் செய்ய யாரும் துணியமாட்டார்கள். இப்போதுள்ளதைப் போல் இத்தகைய திருடர்களும், கூட்டுக் கொள்ளைக்காரர்களும் நிர்வாகத்தை நடத்துவதற்கு ஒருபோதும் ஏற்றவர்களல்ல.

முன்பு சாதாரண வரிச்சட்டம்தான் இருந்தது. கட்டாயமோ, ஆக்கிரமிப்போ இருக்கவில்லை. பிரஜைகளின் உற்பத்தியில் கால்பாகத்தை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசருக்கு இருந்தது. ஒருவருக்கென பகிர்ந்தளிக்கப்பட்ட செல்வத்தில் கால் பகுதியை கேட்டுப் பெறும் உரிமை அரசருக்கு இருந்தது. அப்பகுதியைக் கொடுக்கும் பொழுது ஒருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படாது. ஏனெனில், பக்தியுள்ள அரசராலும், மத ஒற்றுமையாலும் அவர்களுக்கும் போதுமான தானியங்கள், பழங்கள், பூக்கள், பட்டு, பருத்தி, பால், ஆபரணங்கள், சுரங்கப் பொருட்கள் முதலான இயற்கைச் செல்வங்கள் கிடைத்தன. எனவே பௌதிக தேவைகளில் அனைவரும் திருப்தியுடன் இருந்தனர். பிரஜைகள் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் சிறப்புடன் விளங்கினர். இதனால் தானியங்கள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றை அவர்கள் போதுமான அளவிற்குப் பெற்றிருந்தனர். எனவே செயற்கைத் தேவையான துணி வெளுக்கும் கட்டி, கழிவறை வசதி, திரைப்படம் மற்றும் சாராயக் கடை ஆகியவை அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

மனித சக்தி சரியாக உபயோகிக்கப்படுகிறதா என்பதை கவனித்துக் கொள்ளும் கடமை அரசருக்கு இருந்தது. மனித சக்தி மிருக இயல்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இருப்பதல்ல, மாறாக தன்னை அறிவதற்காக இருப்பதாகும். இக்குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ற முறையிலேயே அரசாங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சட்டசபைக்கான மந்திரிகளை அரசர் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் வாக்குகளின் எண்ணிக்கை பலத்தினால் அல்ல. மந்திரிகள், போர்த் தளபதிகள் மற்றும் சாதாரண வீரர்களும் கூட அவரவர் தகுதிகளுக்கேற்பவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவரவர் பதவிகளை அவர்கள் ஏற்கும் முன்னர் அரசர் அவர்களை நன்கு கண்காணிக்க வேண்டியிருந்தது. தபஸ்விகள், அல்லது ஆன்மீக அறிவைப் பரப்புவதற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் ஒருபோதும் புறக்கணிப்படாதபடி கவனித்துக் கொள்வதில் அரசர் மிகவும் கவனமாக இருந்தார். தூய பக்தர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை பகவான் ஒரு போதும் பொறுத்துக்கொள்ளமாட்டார் என்பதை அரசர் நன்கறிவார். அத்தகைய தபஸ்விகள் கொள்ளைக் கூட்டத்தினருக்கும், திருடர்களுக்கும் கூட நம்பிக்கைக்குரிய தலைவர்களாவர். தபஸ்விகளின் உத்தரவுகளை அவர்கள் ஒருபோதும் மீறி நடக்கமாட்டார்கள். எழுத்தறிவில்லாதவர்கள், அனாதைகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அரசர் விசேஷ பாதுகாப்பு வழங்குவார். எதிரிகளின் தாக்குதலுக்கு முன்பாக பாதுகாப்பு வழங்குவார். எதிரிகளின் தாக்குதலுக்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வரி வசூலிக்கும் முறையும் சுலபமானதாக இருந்தது. அது வீண் செலவு செய்வதற்கு உரியதல்ல, ஆனால் சேமிப்பு நிதியை பலப்படுத்துவதற்கு உரியதாகும். புதுச் சிப்பாய்கள் உலகம் முழுவதிலும் இருந்து திரட்டப்பட்டு, தனிப்பட்ட கடமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டனர்.

முக்தியடைவதைப் பொறுத்தவரை, ஒருவன் காமம், கோபம், சட்டவிரோதமான ஆசைகள், பேராசை மற்றும் குழப்பம் ஆகியவற்றை வென்றாக வேண்டும். மன்னிக்கும் இயல்பைக் கற்றுக்கொண்டால் கோபத்திலிருந்து விடுபட முடியும். சட்டவிரோதமான ஆசைகளில் இருந்து விடுபட, திட்டங்கள் போடுவதை ஒருவன் நிறுத்த வேண்டும். ஆன்மீக பண்பாட்டினால் உறக்கத்தை வெல்லமுடியும். பொறுமையால் மட்டுமே ஆசைகளையும், பேராசையையும் வெல்லமுடியும். கட்டுப்பாடான உணவினால் பல்வேறு நோய்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். தன்னடக்கத்தில் பொய்யான நம்பிக்கையில் இருந்து தப்பலாம். தீய சகவாசத்தை தவிர்ப்பதால் பணத்தை மிச்சப்படுத்தலாம். யோகப் பயிற்சியினால் பசியைக் கட்டுப்படுத்த இயலும். நிலையின்மையைப் பற்றிய அறிவைப் பெருக்குவதால் பௌதிக வாழ்வைத் தவிர்க்க முடியும். மேலும் உண்மையான விசாரணையினால் பொய்யான விவாதங்களை வெல்ல முடியும். தேவைக்கதிகமான பேச்சை கடுமையாலும், மௌனத்தாலும் தவிர்க்க வேண்டும். மேலும் வீரத்தினால் பயத்தைப் போக்க வேண்டும். பக்குவமான அறிவை சுய பண்பாட்டினால் அடையலாம். உண்மையாகவே முக்திக்கான வழியை அடைய விரும்பும் ஒருவன் காமம், பேராசை கோபம், கனவு போன்றவைகளில் இருந்து விடுபட வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆண்களை ஊக்குவிக்கும் சக்தியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். எனவே பெண்கள் ஆண்களைவிட சக்திமிக்கவர்களாவர். சக்தி வாய்ந்த ஜூலியஸ் சீசர் கிளியோபாத்ராவினால் ஆளப்பட்டார். அத்தகைய சக்தி வாய்ந்த பெண்கள் வெட்கத்தினால் ஆளப்படுகின்றனர். ஆகவே, வெட்கம் பெண்களுக்கு இன்றியமையாததாகும். இக்கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்பட்ட உடனேயே, அவர்களது ஒழுக்கக்கேட்டினால் சமூகத்தில் பெருந்தீங்கு ஏற்பட அவர்கள் காரணமாகின்றனர். ஒழுக்கக்கேடு என்றால் தேவையற்ற குழந்தைகளை உற்பத்தி செய்வதாகும். “வர்ண ஸங்கரம்” எனப்படும் இவர்கள் உலக அமைதியையே குலைத்து விடுவார்கள்.

பீஷ்மதேவர் இறுதியாக, பகவானை திருப்திப்படுத்தும் முறையை போதித்தார். நாம் அனைவரும் பகவானின் நித்தியத் தொண்டர்களாவோம். மனித இயல்பின் இந்த முக்கிய பாகத்தை நாம் மறக்கும்பொழுது, பௌதிக சூழ்நிலைகளில் நாம் புகுத்தப்பட்டு விடுகிறோம். வீட்டில் விக்கிரக ஆராதனை செய்வது பகவானைத் திருப்திப்படுத்துவதற்கான எளிய முறையாகும். முக்கியமாக இல்லறவாசிகளுக்கு இது சிறந்ததாகும். விக்கிரகத்தின் மீது மனதை ஒருமைப்படுத்துவதன் மூலம் அன்றாட செயலில் ஒருவர் முன்னேற்றம் அடையலாம். வீட்டில் விக்கிரக வழிபாடு, பக்தர்களுக்கு சேவை செய்தல், ஸ்ரீமத் பாகவதம் கேட்டல், புனிதமான இடத்தில் வசித்தல் மற்றும் பகவானின் புனித நாமத்தை ஜபித்தல் ஆகிய அனைத்தும் குறைந்த செலவில் பகவானை திருப்திப்படுத்தும் வழிகளாகும். இவ்வாறாக இவ்விஷயம் பீஷ்மதேவரால் பாண்டவர்களுக்கு விவரிக்கப்பட்டது.

பதம் 28

धर्मार्थकाममोक्षांश्च सहोपायान् यथा मुने ।
नानाख्यानेतिहासेषु वर्णयामास तत्त्ववित् ॥ २८ ॥
தர்மார்த காம மோக்ஷாம்ஸ் ச ஸஹோபாயான் யதா முனே
நானாக்யானே திஹாஸேஷு வர்ணயாம் ஆஸ தத்வவித்

தர்ம—தர்மம், அல்லது கடமை; அர்த—பொருளாதார முன்னேற்றம்; காம—ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளல்; மோக்ஷான்—முக்தி; ச—மேலும்; ஸஹ—அதனுடன்; உபாயான்—உபாயங்கள்; யதா—உள்ளபடி; முனே—ஓ முனிவரே; நானா—பல; ஆக்யான—சரித்திரக் கதைகளை வர்ணிப்பதன் வாயிலாக; இதிஹாஸேஷு—இதிகாசங்களில்; வர்ணயாம் ஆஸ—விளக்கினார்; தத்வவித்—உண்மையை அறிந்தவர்.

மொழிபெயர்ப்பு

பிறகு, உண்மையை நன்கு அறிந்திருந்த அவர், இதிகாசத்திலிருந்து உதாரணங்களை எடுத்துக் கூறி, வெவ்வேறு சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளின் கடமைகளை விளக்கினார்.

பொருளுரை

புராணங்கள் மகாபாரதம் மற்றும் இராமாயணத்தைப் போன்ற வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த சரித்திர உண்மையாகும். அத்தகைய சரித்திர உண்மைகள் சாதாரண மனிதனுக்கு அறிவூட்டுபவையாக இருந்ததால், அவை காலக் கிரமப்படி பிரிக்கப்படவில்லை. மேலும் அவை வெவ்வேறு கிரகங்களிலும், பிரபஞ்சங்களிலும் நிகழ்ந்தவையாகும். ஆகவே நம்முடைய எல்லைக்குட்பட்ட அறிவுப்படி அவை காலக் கிரமப்படி இல்லாததாகத் தோன்றினாலும், அத்தகைய சம்பவங்களின் நல்லுபதேசங்களில் மட்டுமே நாம் அக்கறை கொண்டுள்ளோம். யுதிஷ்டிர மகாராஜனின் வெவ்வேறு கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில், பிஷ்மதேவர் அத்தகைய கதைகளை யுதிஷ்டிரருக்கு விளக்கினார்.

பதம் 29

धर्मं प्रवदतस्तस्य स काल: प्रत्युपस्थित: ।
यो योगिनश्छन्दमृत्योर्वाञ्छितस्तूत्तरायण: ॥ २९ ॥
தர்மம் ப்ரவததஸ் தஸ்ய ஸ கால: ப்ரத்யுபஸ்தித:
யோ யோகினஸ் சந்த-ம்ருத்யோர் வான்சிதஸ் தூத்தராயண:

தர்மம்—கடமைகள்; ப்ரவதத:—விளக்கும்பொழுது; தஸ்ய—அவரது; ஸ—அந்த; கால:—காலம்; ப்ரத்யுபஸ்தித:—அதேபோன்று காணப்பட்டது; யநு—அதாவது; யோகினநு—யோகிகளுக்கு; சந்தம்ருத்யோநு—தான் விரும்பிய நேரத்தில் உயிரை விடுபவரின்; வான்சிதநு—விரும்பப்படுகிறது; து—ஆனால்; உத்தராயணநு—வட திசையின் அடிவானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்.

மொழிபெயர்ப்பு

பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது. இது, தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும்.

பொருளுரை

பக்குவமடைந்த யோகிகள் தங்கள் விருப்பப்படி, பொருத்தமான ஒரு நேரத்தில் ஜடவுடலை விட்டு, அவர்கள் விரும்பிய ஒரு கிரகத்திற்குச் செல்கின்றனர். பகவத் கீதையில் (8.24) பின்வருமாறு கூறப்படுகிறது: தங்களது விருப்பத்தை பரம புருஷரின் விருப்பத்துடன் இணைத்துக் கொண்ட தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால், அக்னி தேவன் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், சூரியன் வடக்குத் திசையின் அடிவானத்தில் சஞ்சரிக்கும்பொழுது, அவர்களுடைய ஜடவுடல்களை உகுத்து, ஆன்மீக வானத்தை அடைகின்றனர். இந்த நேரம் உயிரை விடுவதற்கு ஏற்ற நேரம் என்று வேதங்களில் கூறப்படுகிறது. பக்குவமடைந்த யோகிகள் இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். விரும்பிய நேரத்தில் உடலைவிடும் மனப்பக்குவத்தை அடைவதே யோகத்தின் பூரணத்துவமாகும். யோகிகளால், வாகனங்களின் உதவியில்லாமலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள் எந்த கிரகத்திற்கும் சென்றுவிட முடியும். மிக உயர்ந்த கிரக அமைப்பிற்குக் கூட யோகிகளால் மிகக் குறுகிய நேரத்தில் சென்று விடமுடியும். பௌதிகவாதிகளுக்கு இது சாத்தியமல்ல. மிகவுயர்ந்த கிரகத்திற்குச் செல்ல ஒருவேளை அவர்கள் முயன்றால், மணிக்கு லட்சக்கணக்கான மைல்கள் வேகத்தில் சென்றாலும், அது அவர்களுக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும். இது வேறுபட்ட ஒரு விஞ்ஞானமாகும். இதை பயன்படுத்திக் கொள்ளும் கலையை பீஷ்மதேவர் நன்கு அறிந்திருந்தார். ஜடவுடலை உகுப்பதற்குப் பொருத்தமான நேரத்திற்காக அவர் காத்திருந்தார். அவரது பேரன்களான பாண்டவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்த வேளையில் பொன்னான அந்த நேரமும் வந்தது. இவ்வாறாக பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர், புண்ணிய புருஷர்களாகிய பாண்டவர்கள் மற்றும் பகவான் வியாசரை தலைமையாகக் கொண்ட மாமுனிவர்கள் முதலான எல்லா மகாத்மாக்களின் முன்னிலையிலும் உயிரை விட அவர் தயாரானார்.

பதம் 30

तदोपसंहृत्य गिर: सहस्रणी-
र्विमुक्तसङ्गं मन आदिपूरुषे ।
कृष्णे लसत्पीतपटे चतुर्भुजे
पुर:स्थितेऽमीलितद‍ृग्व्यधारयत् ॥ ३० ॥

ததோ பஸம்ஹ்ருத்ய கிர: ஸஹஸ்ரணீர்
விமுக்த-ஸங்கம் மன ஆதி-பூருஷே
க்ருஷ்ணே லஸத்-பீத-படே சதுர்-புஜே
புர: ஸ்திதே ’மீலித-த்ருக் வ்யதாரயத்

ததா:—அச்சமயத்தில்; உபஸம்ஹ்ருத்தய—பின்வாங்கி; கிர:—பேச்சை ஸஹஸ்ரணீ:—(ஆயிரக்கணக்கான விஞ்ஞானங்களிலும், கலைகளிலும் வல்லவரான) பீஷ்மதேவர்; விமுக்த-ஸங்கம்—மற்ற அனைத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டு; மன—மனதை; ஆதி-பூருஷே—ஆதி புருஷரிடம்; க்ருஷ்ணே—கிருஷ்ணரிடம்; லஸத்-பீத-படே—மஞ்சள் நிற ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த; சதுர்-புஜே—நான்கு கரங்களைக் கொண்ட மூல நாராயணர் மீது; புர:—எதிரிலேயே; ஸ்திதே—நிற்கும்; அமீலித—அகலமாக விரிந்த; த்ருக்—காட்சி; வ்யதாரயத்—பதித்தார்.

மொழிபெயர்ப்பு

அதன் பிறகு, ஆயிரக்கணக்கான அர்த்தங்களைக் கொண்ட வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசியவரும், ஆயிரக்கணக்கான யுத்தங்களைக் கண்டவரும், ஆயிரக்கணக்கான மனிதர்களைக் காப்பாற்றியவருமான அந்த மனிதர் பேச்சை நிறுத்தினார். மேலும் எல்லா பந்தத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டிருந்ததால், மற்ற அனைத்திலிருந்தும் மனதை உள்ளுக்கிழுத்துக் கொண்ட அவர், நான்கு கரங்களுடனும், மின்னும் மஞ்சள் நிற ஆடைகளுடனும் தனக்கெதிரே நின்றிருந்த ஆதி புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் மீது, அகலத் திறந்த தமது கண்களைப் பதித்தார்.

பொருளுரை

தமது ஜடவுடலை விட்டுப் பிரியும் மிக முக்கியமான நேரத்தில், மனித வாழ்வின் முக்கிய கடமையைப் பற்றிய பெருமைக்குரிய உதாரணத்தை பீஷ்மதேவர் நிலைநாட்டினார். இறக்கும் மனிதனைக் கவர்ந்திழுக்கும் விஷயமே அவனது அடுத்த வாழ்வின் துவக்கமாக அமைகிறது. ஆகவே, பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையில் ஒருவர் ஆழ்ந்திருப்பாரானால், அவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஸ்ரீ கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்வது உறுதி. பகவத் கீதையில் (8.5-15) இது உறுதி செய்யப்படுகிறது:

8.5. மேலும், இறப்பின்போது, என்னை மட்டுமே நினைத்துக் கொண்டு உடலை விடுபவன் யாராயினும், அவன் உடனேயே என்னை வந்தடைகிறான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

8.6. உடலைவிடும்பொழுது எந்த மனநிலையில் ஒருவன் இருக்கின்றானோ, அந்த நிலையையே அவன் ஐயமின்றி அடைகிறான்.

8.7. எனவே, அர்ஜுனா, என்னை இந்த கிருஷ்ண உருவில் நினைத்துக் கொண்டே உனது போரிடும் கடமையையும் செய்வாயாக. உனது செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உனது மனம் மற்றும் அறிவு ஆகியவற்றை என்மீது பதிப்பாயானால், நீ என்னை அடைவாய் ன்பதில் சந்தேகமில்லை.

8.8. அர்ஜுனா, பரம புருஷராகிய என்மீது மனதை நிறுத்தி, இவ்வழியிலிருந்து சற்றும் பிறழாமல் என்னையே தியானிப்பவன் என்னை அடைவது நிச்சயம்.

8.9. பரம புருஷரை அனைத்தும் அறிந்தவராகவும், அனைவருக்கும் மூத்தவராகவும், பரம அதிகாரியாகவும், சிறியதற்கும் சிறியவராகவும், அனைத்தையும் காப்பவராகவும், பௌதிக ஆராய்ச்சிகளுக்குக்கெல்லாம் அப்பாற்பட்டவராகவும், அறியப்பட முடியாதவராகவும், எப்பொழுதுமே ஒரு நபராகவும் எண்ணி அவரை ஒருவர் தியானிக்க வேண்டும். அவர் திவ்யமானவர் என்பதால், பௌதிக இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும், சூரியனைப் போல் பிரகாசிப்பவராகவும் இருக்கிறார்.

8.10. இறக்கும் தறுவாயில், உயிர் மூச்சை புருவ மத்தியில் நிறுத்தி, முழு பக்தியுடன் பரம புருஷரை நினைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் நிச்சயமாக பரம புருஷ பகவானை அடைவான்.

8.11. வேதங்களைக் கற்றவரும், ஓம்காரத்தை உச்சரிப்பவரும், துறவறத்தில் சிறந்த முனிவரும் பிரம்மத்தில் நுழைகின்றனர். இத்தகைய பக்குவத்தை அடைய விரும்பி, ஒருவர் பிரம்மச்சாரியத்தைப் பயில்கிறார். விடுதலை அளிக்கக்கூடியதான இம்முறையை இப்பொழுது உனக்கு நான் விளக்குகிறேன்.

8.12. எல்லா புலன் ஈடுபாடுகளிலிருந்தும் விலகியிருப்பதே யோக நிலையாகும். புலன்களுக்குரிய கதவுகளையெல்லாம் அடைத்து, மனதை இதயத்திலும், உயிர் மூச்சை தலை உச்சியிலும் நிறுத்தி,ஒருவன் யோகத்தில் நிலை பெறுகிறான்.

8.13. இந்த யோகப் பயிற்சியில் நிலைபெற்றபின், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தவாறு, பரம புருஷரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே உடலை விடுபவன் நிச்சயமாக ஆன்மீக உலகை அடைவான்.

8.14. பிருதாவின் புதல்வனே, எப்பொழுதும் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பதால், வழிபிறழாமல் என்னையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு என்னை அடைவது மிகவும் சுலபமாகும்.

8.15. பக்தி யோகிகளான சிறந்த ஆத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, துன்பம் நிறைந்த தற்காலிகமான இவ்வுலகிற்குத் திரும்பி வருவதே இல்லை. ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்து விடுகின்றனர்.

ஸ்ரீ பீஷ்மதேவர் அவரது விருப்பம் போல் உடலைவிடும் பக்குவத்தைப் பெற்றார். மேலும் மரணத்தின் போது, அவரது கவனத்திற்குரிய பொருளான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அவருக்கருகில் நிற்கும் பெரும் பாக்கியத்தையும் அவர் பெற்றார். எனவே தமது திறந்த கண்களை அவர் பகவான் மீது பதித்தார். ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவருக்கிருந்த இயற்கையான அன்பினால், அவரை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டே இருக்க அவர் விரும்பினார். அவர் ஒரு தூய பக்தராக இருந்ததால், யோகத்தைப் பற்றிய கொள்கைகளில் ஆழமாக ஈடுபட அவரால் இயலவில்லை. சாதாரண பக்தி யோகமே பூரணத்துவத்தை அளிக்கப் போதுமானதாகும். ஆகவே, மிகவும் நேசிக்கத்தக்க பொருளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நேரடியாகக் காண்பதே பீஷ்மதேவரின் தீவிர விருப்பமாகும். மேலும் பகவானின் கருணையால், உயிரை விடும் வேளையில் ஸ்ரீ பீஷ்மதேவருக்கு இச்சந்தர்ப்பம் கிட்டியது.

பதம் 31

विशुद्धया धारणया हताशुभ-
स्तदीक्षयैवाशु गतायुधश्रम: ।
निवृत्तसर्वेन्द्रियवृत्तिविभ्रम-
स्तुष्टाव जन्यं विसृजञ्जनार्दनम् ॥ ३१ ॥

விசுத்தயா தாரணயா ஹதாசுபஸ்
தத் ஈக்ஷயைவாஸுகதா யுத ஸ்ரம:
நிவ்ருத்த ஸர்வேந்ரிய-வ்ருத்தி-விப்ரமஸ்
துஷ்டாவ ஜன்யம் விஸ்ருஜன் ஜனார்தனம்

விசுத்தயா—தூய்மையடைந்த; தாரணயா—தியானத்தால்; ஹத-அசுப:—பௌதிக வாழ்வின் அமங்களமான தன்மைகளை குறைத்துக்கொண்ட ஒருவர்; தத்—அவரை; ஈக்ஷயா ஏவ—பார்ப்பதாலேயே; ஆசு—உடனடியாக; கதா—மறைந்துவிட்டதால்; யுத—அம்புகளிலிருந்து; ஸ்ரம:—வலி; நிவ்ருத்த—நிறுத்தப்பட்டு; ஸர்வ—எல்லா; இந்ரிய—புலன்கள்; வ்ருத்தி—செயல்கள்; விப்ரம:—பரவலாக ஈடுபடுத்தப்பட்டதால்; துஷ்டாவ—அவர் வேண்டினார்; ஜன்யம்—ஆத்மாவின் தற்காலிக வசிப்பிடமான ஜடவுடலை; விஸ்ருஜன்—விட்டுச் செல்லும்பொழுது; ஜனார்தனம்—ஜீவராசிகளை ஆள்பவரிடம்.

மொழிபெயர்ப்பு

தூய தியான நிலையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிக் கொண்டிருந்த அவர், எல்லா பௌதிக அபசகுணங்களில் இருந்தும், அம்புக் காயங்களினால் விளைந்த எல்லா உடல் வேதனையிலிருந்தும் உடனே விடுதலை அடைந்தார். இவ்வாறாக அவரது புலன்களின் புறச்செயல்கள் அனைத்தும் உடனே நின்றுவிட்டன. மேலும் அவரது ஜடவுடலைவிடும்பொழுது, எல்லா ஜீவராசிகளையும் ஆள்பவரிடம் அவர் திவ்யமான பிரார்த்தனைகளைச் செய்தார்.

பொருளுரை

பௌதிக உடலானது, மாயை என்று அழைக்கப்படும் ஜட சக்தியால் அளிக்கப்பட்ட ஒரு பரிசாகும். பகவானுடனான நமது நித்திய உறவை மறந்ததுவே தேகாபிமானத்திற்குக் காரணமாகும். பீஷ்மதேவரைப் போன்ற பகவானின் தூய பக்தர் ஒருவருக்கு, பகவான் வந்த உடனேயே இந்த மாயை அகன்றது. கிருஷ்ணர் சூரியனைப் போன்றவர், புறச் சக்தியான மாயை இருளைப் போன்றது. சூரியனின் முன் இருளால் நிற்க முடியாது. எனவே, கிருஷ்ணர் வந்த உடனேயே எல்லா பௌதிக களங்கங்களும் முழுமையாக அகற்றப்பட்டன. ஆத்மா மட்டுமின்றி புலன்களும் கூட ஆதியில் தூய்மையாகத்தான் இருந்தன. பௌதிக தொடர்பினால் புலன்கள் குறைபாடுகளையும், அசுத்தங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளன. பரம தூய்மையுடைய ஸ்ரீ கிருஷ்ணருடனான தொடர்பை விழிப்படையச் செய்வதால், புலன்கள் திரும்பவும் பௌதிக களங்கத்திலிருந்து தூய்மையடைகின்றன. எல்லா ஜீவராசிகளையும் ஆள்பவரும், ஆதரிப்பவரும் பகவானேயாவார். அதுவே வேதங்களின் முடிவாகும். நித்தியமான எல்லா ஜீவராசிகளுக்கிடையிலும் அவரே பரம நித்தியமாகவும், பரம ஜீவராசியாகவும் இருக்கிறார்:

நித்யோ நித்யானாம் சேதனாஸ் சேதனானாம்
ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்

(கடோபநிஷதம்)

மேலும் அவரே எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் எல்லா தேவைகளையும் அளிப்பவராவார். இவ்வாறாக அவரது சிறந்த பக்தரான பிஷ்மதேவரின் உன்னத ஆசைகளை நிறைவேற்றுவதற்கான எல்லா வசதிகளையும் பகவான் அவருக்கு அளித்தார். பின்வருமாறு பீஷ்மதேவர் பிரார்த்தனை செய்தார்.

பதம் 32

श्रीभीष्म उवाच
इति मतिरुपकल्पिता वितृष्णा
भगवति सात्वतपुङ्गवे विभूम्नि ।
स्वसुखमुपगते क्‍वचिद्विहर्तुं
प्रकृतिमुपेयुषि यद्भ‍वप्रवाह: ॥ ३२ ॥

ஸ்ரீ பீஷ்ம உவாச

இதி மதிர் உபகல்பிதா வித்ருஷ்ணா
பகவதி ஸாத்வத-புங்கவே விபூம்னி
ஸ்வ ஸுகம் உபகதே க்வசித் விஹர் தும்
ப்ரக்ருதிம் உபேயுஷி யத்-பவ-ப்ரவாஹ:

ஸ்ரீ பீஷ்ம உவாச—ஸ்ரீ பீஷ்மதேவர் கூறினார்; இதி—இவ்வாறு; மதி:—எண்ணம், உணர்வு மற்றும் விருப்பம்; உபகல்பிதா—ஈடுபடுத்தப்பட்ட; வித்ருஷ்ணா—எல்லா புலன் ஆசைகளிலிருந்தும் விடுபட்ட; பகவதி—பரம புருஷர் மீது; ஸாத்வத-புங்கவே—பக்தர்களின் தலைவருக்கு; விபூம்னி—மிகச்சிறந்தவருக்கு; ஸ்வ-ஸுகம்—சுயதிருப்தி; உபகதே—அதை அடைந்துள்ள அவருக்கு; க்வசித்—சில சமயங்களில்; விஹர்தும்—உன்னத இன்பத்தினால்; ப்ரக்ருதிம்—ஜடவுலகில்; உபேயுஷி—ஏற்றுக் கொள்கிறார்; யத்-பவ—யாரிடமிருந்து சிருஷ்டி; ப்ரவாஹ:—படைக்கப்பட்டு அழிக்கப்படுகிறதோ.

மொழிபெயர்ப்பு

பீஷ்மதேவர் கூறினார்: இதுவரை வெவ்வேறு விஷயங்களிலும், கடமைகளிலும் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றை இப்பொழுது நான் சர்வசக்தி படைத்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் ஈடுபடுத்துவேனாக. அவர் எப்பொழுதும் சுய திருப்தியுடையவராவார். ஆனால் அவரிடமிருந்து தான் ஜடவுலகம் படைக்கப்படுகிறது என்றாலும், அவர் பக்தர்களின் தலைவராக இருப்பதால், ஜடவுலகில் அவதரித்து தெய்வீக இன்பத்தை அவர் அனுபவிக்கிறார்.

பொருளுரை

பீஷ்மதேவர் ஒரு இராஜ தந்திரியாகவும், குரு வம்சத்தின் தலைவராகவும், சிறந்த தளபதியாகவும் க்ஷத்திரியர்களின் ஒரு தலைவராகவும் இருந்ததால், அவரது மனம் பல விஷயங்களில் லயித்திருந்தது. அவரது சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவை வெவ்வேறு விஷயங்களில் ஈடுபட்டிருந்தது. இப்பொழுது தூய பக்தித் தொண்டை அடைவதற்கு அவர் சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் ஆகிய எல்லா சக்திகளையும் பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் மீது பதிக்க விரும்பினார். பகவான் இங்கு பக்தர்களின் தலைவர் என்றும், சர்வ சக்தி படைத்தவரென்றும விவரிக்கப்படுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்தான் மூல முழுமுதற் கடவுள் என்றபோதிலும், அவர் தமது தூய பக்தர்களுக்கு பக்தித் தொண்டெனும் வரத்தை அளிப்பதற்காக பூமியில் அவதரிக்கிறார். அவர் சில சமயங்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக, அவரது சுய உருவிலும் சில சமயங்களில் பகவான் சைதன்யராகவும் தோன்றுகிறார். இவ்விருவரும் தூய பக்தர்களின் தலைவர்களேயாவர். தூய பக்தர்களுக்கு பகவானின் தொண்டைத் தவிர வேறு ஆசை கிடையாது. எனவேதான் அவர்கள் “ஸாத்வத” என்று அழைக்கப்படுகின்றனர். அத்தகைய “ஸாத்வதர்”களில் பகவான் தலைமையானவராவார். எனவே பீஷ்மதேவருக்கு வேறெந்த ஆசைகளும் இருக்கவில்லை. ஒருவர் எல்லா வகையான ஆசைகளில் இருந்தும் தூய்மை அடையவில்லை என்றால், அவருக்கு பகவான் தலைவராக இருக்கமாட்டார். ஆசைகளை அழிக்க முடியாது, ஆனால் அவற்றை தூய்மைப்படுத்த வேண்டும். பகவான், பக்தித் தொண்டில் இடையறாமல் ஈடுபட்டுள்ள தூய பக்தரின் இதயத்தில் இருந்து கொண்டு அவனுக்கு உபதேசங்களை அளிக்கிறார் என்று பகவத் கீதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய உபதேசங்கள் ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்வதற்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. எந்த பௌதிக நோக்கங்களுக்காவும் அல்ல. (ப.கீ. 10.10). ஜடவுலகை அடக்கியாள விரும்பும் சாதாரண மனிதனுக்கு பகவான் அனுமதி அளிப்பவராக மட்டுமே இருப்பதுடன் அச்செயல்களுக்கு சாட்சியாகவும் இருக்கிறார். ஆனால் பக்தனற்ற ஒருவனுக்கு பகவான் ஆன்மீக உலகிற்குச் செல்வதற்குரிய உபதேசங்களை அளிப்பதேயில்லை. இதுவே பக்தரிடமும், பக்தரற்றவரிடமும் பகவான் நடந்து கொள்ளும் வேறுபட்ட விதங்களாகும். கைதிகள், சுதந்திரமான பிரஜைகள் ஆகிய இருவரையும் அரசர் ஆள்வதைப் போலவே, எல்லா ஜீவராசிகளுக்கும் பகவான் தலைவராவார். ஆனால் பக்தர்களையும், பக்தரல்லாதவர்ளையும் பொறுத்து அவரது செயல்கள் மாறுபடுகின்றன. பக்தரல்லாதவர்கள் பகவானின் உபதேசங்களை ஏற்பதில் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. எனவே பகவான் அவர்களது எல்லா செயல்களுக்கும் சாட்சியாக இருந்து, அச்செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நல்ல அல்லது தீய பலன்களை அளிக்கிறார் என்றாலும், அவர்களின் விஷயத்தில் அவர்களுக்கு உபதேசிக்காமல் பகவான் மௌனமாகவே இருந்து விடுகிறார். பக்தர்கள் இந்த பௌதிக நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் மேற்பட்டவர்களாவர். அவர்கள் ஆன்மீக வழியில் முன்றேறிச் செல்கின்றனர். இதனால் எந்த ஜடப் பொருளிலும் அவர்களுக்கு ஆசையில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், எல்லா பௌதிக படைப்புக்கும் ஆதிமூல காரணமான காரணோதகசாயி விஷ்ணுவாகத் தோன்றுகிறார். எனவே ஸ்ரீ கிருஷ்ணரை பக்தர் மூல நாராயணராகவும் அறிந்திருக்கிறான். தூய பக்தர்களின் சகவாசத்தை பகவான் விரும்புகிறார். பகவான் அவர்களுக்காகவே இவ்வுலகில் அவதரித்து அவர்களுக்கு உற்சாகமூட்டுகிறார். தமது சொந்த விருப்பப்படியே பகவான் தோன்றுகிறார். பௌதிக இயற்கையின் சூழ்நிலைகளால் அவர் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. எனவே இங்கு அவர் “விபு” அல்லது சர்வசக்தி படைத்தவர் என்று விவரிக்கப்படுகிறார். ஏனெனில் அவர் ஒருபோதும் ஜட இயற்கைச் சட்டங்களினால் பந்தப்படுத்தப்படுபவர் அல்லர்.

பதம் 33

त्रिभुवनकमनं तमालवर्णं
रविकरगौरवराम्बरं दधाने ।
वपुरलककुलावृताननाब्जं
विजयसखे रतिरस्तु मेऽनवद्या ॥ ३३

த்ரி-புவன-கமனம் தமால-வர்ணம்
ரவி-கர-கௌர-வர-அம்பரம் ததானே
வபுர் அலக குலாவ்ருதானனாப்ஜம்
விஜய-ஸகே ரதிர் அஸ்து மே ’னவத்யா

த்ரி-புவன—மூன்று கிரக அமைப்புக்கள்; கமனம்—மிகவும் விரும்பத்தக்க; தமால-வர்ணம்—தமால மரத்தைப் போன்ற நீலநிறம் கொண்ட; ரவி-கர—சூரிய கதிர்கள்; கௌர—பொன்னிறம்; வராம்பரம்—ஜொலிக்கும் உடை; ததானே—அணிபவர்; வபு:—உடல்; அலககுல-ஆவ்ருத—சந்தனக் குழம்பினால் சித்திரம் வரையப்பட்ட; அன்ன-அப்ஜம்—தாமரைப் போன்ற முகம்; விஜய-ஸகே—அர்ஜுனனின் நண்பருக்கு; ரதி: அஸ்து—கவர்ச்சி அவர் மீது பதிக்கப்படுமாக; மே—எனது; அனவத்யா—கருமங்களில் பற்றில்லாமல்.

மொழிபெயர்ப்பு

ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் நெருங்கிய நண்பராவார். அவர் தமால மரத்தின் நீல நிறத்தையொத்த திவ்யமான உடலுடன் இவ்வுலகில் தோன்றியுள்ளார். மூன்று கிரக அமைப்புக்களில் (மேல், மத்திய, கீழ்) உள்ள அனைவரையும் அவரது உடல் கவர்ந்திழுக்கிறது. பளபளக்கும் அவரது மஞ்சள் நிற ஆடையும், சந்தனக் குழம்பினால் வரையப்பட்ட சித்திரங்களைக் கொண்ட, அவரது தாமரை முகமும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருட்களாக அமைய வேண்டும். மேலும் கர்ம பலன்களில் நான் பற்றில்லாமல் இருப்பேனாக.

பொருளுரை

ஸ்ரீ கிருஷ்ணர் அவரது சொந்த அந்தரங்கமான ஆனந்தத்தினாலும், அந்தரங்க சக்தியினாலுமே பூமியில் தோன்றுகிறார். மேல், மத்திய மற்றும் கீழ் எனப்படும் மூன்று லோகங்களில் உள்ளவர்களும் கிருஷ்ணரது திவ்ய ரூபத்தின் கவர்ச்சியான அம்சங்களால் கவரப்படுகின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடையதைப் போன்ற இத்தகைய அழகிய உடலம்சங்கள் பிரபஞ்சத்தில் வேறெங்குமே இல்லை. எனவே அவரது திவ்யமான உடலுக்கு எந்த ஜடப் பொருளுடனும் எந்த சம்பந்தமும் இல்லை. அர்ஜுனன் வெற்றி கொள்பவர் என்றும், கிருஷ்ணர் அவரது நெருங்கிய நண்பர் என்றும் வர்ணிக்கப்படுகின்றனர். குருட்சேத்திர யுத்தத்திற்குப் பிறகு அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மதேவர், அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தபொழுது ஸ்ரீ கிருஷ்ணர் அணிந்திருந்த அக்குறிப்பிட்ட உடையை நினைவு கூறுகிறார். அர்ஜுனனுக்கும், பீஷ்மருக்கும் போர் நிகழ்ந்து கொண்டு இருக்கும் வேளையில், கிருஷ்ணரின் பளபளக்கும் உடையால் பீஷ்மர் கவரப்பட்டார். மேலும் மறைமுகமாக பகவானையே தனது நண்பராகக் கொண்ட அர்ஜுனனிடம் அவர் வியப்பு கொண்டார். திவ்யமான உறவுமுறைகளுடன் பகவானுடன் உறவு கொண்டுள்ள அவரது பக்தர்களுடன் இணைத்து அழைக்கப்படும்போது கிருஷ்ணர் மிகவும் திருப்தியடைகிறார். எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பிஷ்மதேவர் அவரை “விஜயஸகே” (அர்ஜுனனின் நண்பர்) என்று அழைக்கிறார். கிருஷ்ணர் அர்ஜுனனின் சாரதியாக இருந்தபொழுது, சூரிய கிரகணங்கள் பகவானின் உடைமீது பட்டு பளபளத்தன. அக்கிரணங்களின் பிரதிபலிப்பினால் உண்டான அழகிய வர்ணத்தை பீஷ்மதேவரால் மறக்கவே முடியவில்லை. மிகச்சிறந்த போர்வீரர் என்ற முறையில், கிருஷ்ணருக்கும் அவருக்கும் இருந்த வீர பராக்கிரமான உறவுமுறையை பீஷ்மர் சுவைத்து அனுபவித்தார். வெவ்வேறு ரசானுபாவங்களில் ஒன்றினால் பகவானுடன் தெய்வீகமான முறையில் உறவுகொள்ளும் ஒரு குறிப்பிட்ட பக்தர் அதை மிகவுயர்ந்த பரவச நிலையில் சுவைத்து அனுபவிக்கிறார். குறைமதியாளர்களான பௌதிகவாதிகள், தங்களுக்கும் பகவானுக்கும் தெய்வீகமான உறவு இருப்பதைப் போல் காட்டிக் கொள்வதற்காக, விருந்தாவனத்து கோபியர்களைப் போல் பாவனை செய்து, செயற்கையான முறையில் உடனே மாதுர்ய அன்பிலுள்ள உறவு நிலைக்கு தாண்டப் பார்க்கின்றனர். பகவானுடன் கொள்ளும் உபயோகமற்ற அத்தகைய உறவு பௌதிக மனிதனின் மட்டமான மனநிலையை வெளிப்படுத்துகின்றது. ஏனெனில் பகவானுடனான மாதுர்ய பர்வத்தை அனுபவித்தவரால், பௌதிக ஒழுக்க விதிகளாலும் வெறுத்து ஒதுக்கப்படும் இகலோக காதல் விவகாரத்தில் பற்றுக்கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆத்மாவிற்கு பகவானுடன் உள்ள நித்திய உறவு வெளிப்படுத்தப்படுகிறது. அத்தகைய உறவு ஐந்து முக்கிய ரஸங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். உண்மையான பக்தரொருவர் அத்தகைய ரஸங்களுக்கிடையில் வேறுபாட்டைக் காண்பதில்லை. இதற்கு பீஷ்மதேவரே மிகச்சிறந்த உதாரணமாவார். பீஷ்மதேவர் எப்படி உன்னதமான முறையில் பகவானுடன் உறவு கொண்டிருந்தார் என்பதை நன்கு கவனிக்க வேண்டும்.

பதம் 34

युधि तुरगरजोविधूम्रविष्वक्-
कचलुलितश्रमवार्यलङ्‍कृतास्ये ।
मम निशितशरैर्विभिद्यमान-
त्वचि विलसत्कवचेऽस्तु कृष्ण आत्मा ॥ ३४ ॥

யுதி துரக-ரஜோ-விதூம்ர-விஷ்வக்
கச-லூலித-ஸ்ரமவாரி-அலங்க்ருதாஸ்யே
மம நிசித-சரைர் விபித்யமான-
த்வசி விலஸத் கவசே ’ஸ்து க்ருஷ்ண ஆத்மா

யுதி—போர்க்களத்தில்; துரக—குதிரைகள்; ரஜ:—தூசு; விதூம்ர—சாம்பல் நிறமாக மாறியது; விஷ்வக்—அசைந்தாடும்; கச—கேசம்; லூலித—சிதறிய; ஸ்ரமவாரி—வியர்வை; அலங்க்ருத—அலங்கரிக்கப்பட்ட; ஆஸ்யே—முகத்தில்; மம—எனது; நிசித—கூர்மையான; சரை:—அம்புகளால்; விபித்யமான—தைக்கப்பட்ட; த்வசி—உடம்பில்; விலஸத்—இன்பம் அனுபவிக்கும்; கவேச—கவசம்; அஸ்து—உண்டாகட்டும்; க்ருஷ்ணே—ஸ்ரீ கிருஷ்ணரிடம்; ஆத்மா—மனம்.

மொழிபெயர்ப்பு

(சிநேகத்தினால் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஏவல் புரிந்த இடமான) போர்க்களத்தில், குதிரைகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட தூசுகளினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அலைபாயும் கேசம் சாம்பல் நிறமாக மாறியது. மேலும் அவரது பணியினால் விளைந்த வியர்வை முத்துக்கள் அவரது முகத்தை நனைத்தன. எனது கூரிய அம்புகள் தைத்த காயங்களால் அதிகரிக்கப்பட்ட இவ்வெல்லா அலங்காரங்களையும் அவர் அனுபவித்தார். என் மனம் ஸ்ரீ கிருஷ்ணரிடமே ஆழ்ந்து விடட்டும்.

பொருளுரை

பகவான், நித்தியத்தன்மை, ஆனந்தம் மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்ட திவ்ய சொரூபியாவார். இதனால் ஐந்து முக்கிய உறவு முறைகளில் செய்யப்படும் உன்னத அன்புத் தொண்டை உண்மையான அன்புடனும், பாசத்துடனும் செய்யும் பொழுது அதை பகவான் பாசத்துடன் ஏற்றுக்கொள்கிறார். “சாந்த, தாஸ்ய, ஸக்ய, வாத்ஸல்ய மற்றும் மாதுர்ய” ஆகியவை முறையே, மிதநிலை பக்தி, தொண்டு செய்யும் பக்தி, சிநேக பக்தி, பெற்றோர் பக்தி மற்றும் பிரேமை பக்தி என்பனவாகும். ஸ்ரீ பீஷ்மதேவர், தொண்டு செய்யும் பக்தராக பகவானுடன் உறவு கொண்டுள்ள மிகச்சிறந்த பக்தராவார். இவ்வாறாக பகவானின் திவ்யமான உடலை நோக்கி கூர்மையான அம்புகளைப் பாய்ச்சிய அவரது செயல், மென்மையான ரோஜாப் பூக்களை பகவான் மீது வீசும் மற்றொரு பக்தரின் வழிபாட்டுக்குச் சமமானதாகும்.

பகவானை எதிர்த்து செயற்பட்டதைக் குறித்து பீஷ்மதேவர் வருந்துவதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் பகவானின் உடலில் எந்த வலியும் ஏற்படவில்லை. ஏனெனில் அவர் தெய்வீகமான உடலைக் கொண்டவராவார். அவரது உடல் ஜடமல்ல. பகவானும் அவரது உடலும் ஒரே ஆன்மீக தன்மையைக் கொண்டவர்களாவர். ஆன்மீகத்தைத் துளைக்கவோ, எரிக்கவோ, உலர்த்தவோ அல்லது நனைக்கவோ முடியாது. இது கீதையில் தெளிவாக விளக்கப்படுகிறது. ஸ்கந்த புராணத்திலும் கூட இது குறிப்பிடப்படுகிறது. ஆன்மீகத்தை ஒருபோதும் களங்கப்படுத்தவோ, அழிக்கவோ முடியாது என்றும், அதற்குத் துன்பத்தை விளைவிக்கவோ, அதை உலர்த்தவோ முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பகவான் விஷ்ணு அவதாரமேற்று நம்முன் தோன்றும்பொழுது, அவர் பந்தப்பட்ட ஆத்மாக்களில் ஒருவரைப் போலவே காணப்படுகிறார். பகவானுடைய தோற்றத்தின் ஆரம்பத்திலிருந்தே அவரை கொன்றுவிடத் தயாராக இருக்கும் அசுரர்களை, அல்லது நம்பிக்கையற்றவர்களை குழப்புவதற்காகவே அவர் அவ்வாறு காணப்படுகிறார். கம்சன் ஸ்ரீ கிருஷ்ணரையும், இராவணன் ஸ்ரீ இராமரையும் கொல்ல விரும்பினர். ஆன்மீகத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதால், பகவானை நிச்சயமாகக் கொல்ல முடியாது என்ற உண்மையை முட்டாள்களான அவர்கள் அறிந்திருக்கவில்லை.

எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உடலை பீஷ்மதேவர் துளைத்தது, பக்தரற்ற நாஸ்திகர்களுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்துவதாகும். ஆனால் பக்தர்கள் அல்லது முக்தியடைந்த ஆத்மாக்கள் அவ்வாறு குழம்புவதில்லை.

பகவான், பீஷ்மரின் கூரிய அம்புகளால் தொந்தரவு செய்யப்பட்ட போதிலும், அவர் அர்ஜுனனை தனியாக விட்டுச் சென்று விடவில்லை. பீஷ்மரால் போர்க்களத்தில் அவர் கொடுமையாக நடத்தப்பட்டபோதிலும், மரணப் படுக்கையில் இருந்த பீஷ்மதேவரின் முன் வருவதற்கு பகவான் தயங்கவில்லை. இக்காரணங்களினால் பகவானின் பரம கருணையை பீஷ்மதேவரால் நன்கு உணர முடிந்தது. பீஷ்மரின் வருத்தம், பகவானின் கருணை ஆகிய இரண்டுமே இக்காட்சியில் ஒப்பற்ற தன்மையைக் கொண்டுள்ளன.

பகவானுடன் மாதுர்ய பாவத்தில் உறவுகொண்டிருந்த சிறந்த ஆச்சாரியரும், பக்தருமான ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர் இது சம்பந்தமாக மிகவும் மெதுவாக கருத்துரைக்கிறார். அதிகமான உடலுறவு ஆசையால் பகவானின் உடலை ஒரு காதலி கடிப்பதால் பகவானுக்கு எவ்வளவு திருப்தி கிடைக்குமோ, அவ்வளவு திருப்தி பீஷ்மதேவரின் கூரிய அம்புகளால் ஏற்படுத்தப்பட்ட காயத்திலிருந்து அவருக்குக் கிடைத்தது என்று அவர் கூறுகிறார். இவ்வாறு கடிப்பதால் உடலில் காயம் ஏற்படும் என்றாலும், அது பொறாமையின் அறிகுறி என்று ஒருபோதும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆகவே, பகவானுக்கும், அவரது தூய பக்தரான பிஷ்மதேவருக்கும் இடையில் ஓர் உன்னதமான அன்புப் பரிமாற்றமாக நிகழ்ந்த போர் ஒருபோதும் பௌதிகமானதல்ல. மேலும், பகவானும் அவரது உடலும் ஒன்றே என்பதால், அவரது திவ்யமான உடலில் காயங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை. கூரிய அம்புகளால் காயம் விளைவிக்கப்பட்டதுபோல் காணப்படுவது சாதாரண மனிதனுக்கு குழப்பத்தை விளைவிப்பதாகும். ஆனால் சிறிது ஆன்மீக அறிவைப் பெற்றிருப்பவரால், பராக்கிரமமான உறவுமுறையில் உள்ள திவ்யமான அன்புப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்ள இயலும். பீஷ்மருடைய அம்புகளால் ஏற்பட்ட காயங்களால் பகவான் பூரண மகிழ்ச்சி அடைந்தார். “விபித்யமான” எனும் சொல் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில், பகவானின் உடலுக்கும், பகவானுக்கும் வேறுபாடில்லை. நம்முடைய உடலுக்கும், ஆத்மாவிற்கும் வேறுபாடு உண்டென்பதால் நம் விஷயத்தில் “விபித்யமான”, அல்லது நசுக்குக் காயமும், வெட்டும் என்ற சொல் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். உன்னத ஆனந்தம் பல வகைப்பட்டதாகும். மேலும் ஜடவுலகிலுள்ள பல வகைப்பட்ட சொல்கள் அனைத்தும் உன்னத ஆனந்தத்தின் நெறிகெட்ட பிரதிபலிப்பாகும். ஜடவுலகிலுள்ள அனைத்தும் பௌதிகமானவை என்பதால் அவை களங்கங்கள் நிறைந்தவையாக உள்ளன. ஆனால் ஆன்மீக பிடியில் அனைத்தும் அதே ஆன்மீக தன்மையைக் கொண்டிருப்பதால், அதில் களங்கமற்ற பல்வேறு இன்பங்கள் உள்ளன. பகவான் மிகச்சிறந்த பக்தரான பீஷ்மதேவரால் ஏற்படுத்தப்பட்ட காயங்களினால் பகவான் பேரின்பமடைந்தார். மேலும் பீஷ்மதேவர் பராக்கிரமமான உறவு முறையிலுள்ள ஒரு பக்தர் என்பதால், அவரது காயமடைந்த அந்நிலையிலும் அவரது மனதை அவர் கிருஷ்ணரின் மீது பதித்தார்.

பதம் 35

सपदि सखिवचो निशम्य मध्ये
निजपरयोर्बलयो रथं निवेश्य ।
स्थितवति परसैनिकायुरक्ष्णा
हृतवति पार्थसखे रतिर्ममास्तु ॥ ३५ ॥

ஸபதி ஸகி-வசோ நிசம்ய மத்யே
நிஜ-பரயோர் பலயோ ரதம் நிவேஸ்ய
ஸ்திதவதி பர-ஸைனிகாயுர் அக்ஷணா
ஹ்ருதவதி பார்த-ஸகே ரதி மமாஸ்து

ஸபதி—போர்க்களத்தில்; ஸகி-வச:—நண்பனின் உத்தரவை; நிசம்ய—கேட்டபின்; மத்யே—நடுவில்; நிஜ—அவரது சொந்த; பரயோ:—மற்றும் எதிரி குழு; பலயோ—பலம்; ரதம்—இரதம்; நிவேஸ்ய—நுழைந்து; ஸ்திதவதி—அங்கு இருந்தபொழுது; பர-ஸைனிக—எதிர் பிரிவிலுள்ள வீரர்களின்; ஆயு:—ஆயுட்காலம்; அக்ஷ்ணா—பார்வையால்; ஹ்ருதவதி—குறைத்துவிடும் செயல்; பார்த—பிருதாவின் (குந்தி) மகனான அர்ஜுனனின்; ஸகே—நண்பனுடன்; ரதி—நெருங்கிய உறவு; மம—எனது; அஸ்து—உண்டாகட்டும்.

மொழிபெயர்ப்பு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது நண்பனின் உத்தரவை ஏற்று, அர்ஜுனனுடைய சேனைக்கும், துரியோதனனின் சேனைக்கும் மத்தியில் தேரை ஓட்டினார். அங்கிருந்த சமயத்தில், தமது கருணைமிகுந்த பார்வையால் எதிரிலுள்ள படைப்பிரிவினரின் ஆயுளைக் குறைத்துவிட்டார். எதிரியின் மீது பார்வையைச் செலுத்தியே இதை அவர் சாதித்துவிட்டார். அந்த கிருஷ்ணரின் மீது என் மனம் நிலைக்கட்டும்.

பொருளுரை

பகவத் கீதையில் (1.21-25) அர்ஜுனன், குறையற்றவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இரு படைகளுக்கும் நடுவில் தேரை நிறுத்தும்படி உத்தரவிட்டார். போரில் தான் சந்திக்க வேண்டிய எதிரிகளைப் பார்வையிட்டு முடிக்கும் வரை அங்கேயே நிற்கும்படி அர்ஜுனன் அவரை கேட்டுக்கொண்டார். பகவான் அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட உடனேயே, ஒரு சேவகரைப் போல் அதை அவர் செய்து முடித்தார். மேலும் எதிரிகளின் பக்கமுள்ள முக்கியமானவர்களை சுட்டிக்காட்டி, “இதோ பீஷ்மர், இதோ துரோணர்” என்றெல்லாம் கூறினார். பகவான் பரம புருஷர் என்பதால் அவர் ஒருவருக்கும் சேவகரல்ல. ஆனால் அவரது தூய பக்தர்களிடமுள்ள அசாதாரணமான கருணையாலும், பாசத்தாலும், சில சமயங்களில் அவர்களது உத்தரவுகளை ஒரு சேவகனைப் போல் நிறைவேற்றுகிறார். தந்தை தன் சிறு குழந்தையின் உத்தரவை நிறைவேற்றி மகிழ்வதைப் போலவே, பக்தரின் உத்தரவை நிறைவேற்றுவதில் பகவான் மகிழ்ச்சி அடைகிறார். பகவானுக்கும், பக்தர்களுக்கும் இடையிலுள்ள உன்னதமான தூய அன்பினால் மட்டுமே இது சாத்தியமாகும். பிஷ்மதேவர் இவ்வுண்மையை நன்கு அறிந்திருந்தார். எனவேதான் பகவானை அவர் அர்ஜுனனின் நண்பர் என்றழைத்தார்.

பகவான் அவரது கருணை மிகுந்த பார்வையால் எதிரி பிரிவினரின் ஆயுளைக் குறைத்து விட்டார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் கூடியிருந்த எல்லா வீரர்களும், மரணத்தின் போது பகவானை நேரடியாகக் கண்டதால் முக்தி அடைந்தனர் என்று கூறப்டுகிறது. ஆகவே, அர்ஜுனனுடைய எதிரிகளின் ஆயுளை அவர் குறைத்து, அர்ஜுனனின் நன்மைக்காக அவர் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்றாகாது. எதிரி பிரிவினரிடம் அவர் உண்மையாகவே கருணை கொண்டிருந்தார். ஏனெனில், சாதாரண குடும்ப வாழ்வில் அவர்கள் இறந்து போயிருந்தால் அவர்களுக்கு முக்தி கிடைத்திருக்காது. மரண வேளையில் பகவானை தரிசித்து, ஜட வாழ்விலிருந்து விடுதலை அடைவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். எனவே, பகவான் மிகவும் நல்லவராவார். எல்லோருடைய நன்மைக்காகவுமே அவர் அனைத்தையும் செய்கிறார். வெளிப்பார்வைக்கு, அவரது நெருங்கிய நண்பன் அர்ஜுனனின் வெற்றிக்காகவே அவர் அப்படிச் செய்தார் என்பதுபோல் காணப்பட்டாலும், உண்மையில் அது அர்ஜுனனுடைய எதிரிகளின் நன்மைக்காகவேயாகும். பகவானின் திவ்யமான செயல்கள் இத்தகையவை ஆகும். மேலும் இதைப் புரிந்துகொள்பவர்களும் கூட இந்த ஜடவுடலைவிட்டபின் முக்தியடைவார்கள். பகவான் பரம பூரணமானவராகவும், எப்பொழுதும் மிகமிக நல்லவராகவும் இருப்பதால், எச்சூழ்நிலையிலும் பகவான் எந்த தவறையும் செய்வதில்லை.

பதம் 36

व्यवहितपृतनामुखं निरीक्ष्य
स्वजनवधाद्विमुखस्य दोषबुद्ध्या ।
कुमतिमहरदात्मविद्यया य-
श्चरणरति: परमस्य तस्य मेऽस्तु ॥ ३६ ॥

வ்யவஹித-ப்ருதனா-முகம் நிரீக்ஷ்ய
ஸ்வ-ஜன-வதாத் விமுகஸ்ய தோஷ-புத்யா
குமதிம் அஹரத் ஆத்ம-வித்யயா யஸ்
சரண-ரதி: பரமஸ்ய தஸ்ய மே ’ஸ்து

வ்யவஹித—தூரத்தில் நிற்கும்; ப்ருதனா—வீரர்களின்; முகம்—முகங்களை; நிரீக்ஷ்ய—பார்த்ததன் மூலம்; ஸ்வ-ஜன—உறவினர்கள்; வதாத்—கொல்வதிலிருந்து; விமுகஸ்ய—இஷ்டமில்லாதவர்; தோஷ-புத்யா—களங்கமடைந்த புத்தியால்; குமதிம்—அறிவு பற்றாக்குறை; அஹரத்—வேரறுத்தார்; ஆத்ம-வித்யயா—உன்னத அறிவினால்; ய:—யாரொருவர்; சரண—பாதங்களில்; ரதி:—கவர்ச்சி; பரமஸ்ய—பரமனின்; தஸ்ய—அவருக்காக; மே—எனது; அஸ்து—உண்டாகட்டும்.

மொழிபெயர்ப்பு

போர்க்களத்தில் தனக்கு முன் இருந்த வீரர்களையும், சேனாதிபதிகளையும் பார்வையிட்ட அர்ஜுனன், அறியாமையினால் கலக்கமடைந்ததாக காணப்பட்ட பொழுது, பகவான் அவருக்கு ஆன்மீக அறிவைப் புகட்டி அவரது அறியாமையைக் களைந்தார். அவரது தாமரைப் பாதங்கள் எப்பொழுதும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருளாக அமையட்டும்.

பொருளுரை

அரசர்களும், சேனாதிபதிகளும் போர் வீரர்களுக்கு முன்பாக நிற்க வேண்டும். அதுவே உண்மையான போர் முறையாகும். அன்றைய அரசர்களும், சேனைத் தலைவர்களும், பெயரளவில் மட்டுமே உள்ள இக்காலத்தில் உள்ள தலைவர்களையோ அல்லது தற்காப்பு அமைச்சர்களையோ போன்றவர்கள் அல்ல. போர் வீரர்கள் நேருக்கு நேராக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது, அவர்கள் வீட்டில் இருக்கமாட்டார்கள். இது இன்றைய குடியரசின் சட்டமாக இருக்கலாம். ஆனால் உண்மையான அரசாட்சி ஓங்கியிருந்தபொழுது, அரசர்கள், தகுதியை கருத்திற் கொள்ளாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கோழைகளாக இருக்கவில்லை. குருட்சேத்திரப் போர்க்களத்திலிருந்து தெளிவாக காணப்பட்டதைப் போல், துரோணர், பீஷ்மர், அர்ஜுனன் மற்றும் துரியோதனனைப் போன்ற இரு பிரிவுகளிலும் உள்ள தலைமை அதிகாரிகள் அனைவரும் உறங்கிக் கொண்டு இருக்கவில்லை; அவர்கள் அனைவரும் போரில் உண்மையாக பங்கேற்றவர்களாவர். யுத்தகளம், பொதுமக்களின் வசிப்பிடத்திலிருந்து தூரமான ஓரிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. அதாவது இரு பிரிவினருக்கும் இடையில் நிகழ்ந்த யுத்தத்தின் எல்லா விளைவுகளில் இருந்தும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருந்தனர். போரில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணும் வேலை பிரஜைகளுக்கு இல்லை, ஆட்சி புரிபவர் அர்ஜுனனாகவோ அல்லது துரியோதனனாகவோ இருந்தாலும், வருவாயில் கால் பாகத்தைச் செலுத்த வேண்டியது அவர்களுடைய கடமையாகும். இரு பிரிவுகளைச் சேர்ந்த சேனாதிபதிகள் அனைவரும் குருட்சேத்திரப் போர்க்களத்தில் எதிரெதிரே நின்றிருந்தனர். இரக்கம் மேலிட அவர்களைக் கண்ட அர்ஜுனன், சாம்ராஜ்ஜியத்திற்காக இந்த உறவினர்களை போரில் கொல்லப் போகிறோமே என்று வருந்தினார். துரியோதனனால் அணிவகுக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சேனையைக் கண்டு அவர் சிறிதும் அஞ்சவில்லை. ஆனால் கருணையுள்ளம் கொண்ட ஒரு பக்தர் என்ற முறையில், இயற்கையாகவே அவர் உலகப் பொருட்களில் பற்றுக் கொள்ளாதவராக இருந்தார். இவ்வாறாக பௌதிக உடைமைகளுக்காக போரிட வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார். ஆனால் அறியாமையே இதற்குக் காரணம். எனவே அவரது புத்தி களங்கமடைந்தது என்று இங்கு கூறப்படுகிறது. அவர் ஒரு பக்தராகவும், பகவானின் இணைபிரியாத நண்பராகவும் இருந்ததால், எந்த சூழ்நிலையிலும் அவரது புத்திகெட்டுப் போவதற்கு வாய்ப்பில்லை.

இது கீதையின் நான்காம் அத்தியாயத்திலிருந்து தெளிவாகிறது. அர்ஜுனனின் புத்தி கெட்டுவிட்டதாக காணப்பட்டது. இல்லையெனில், பௌதிக பந்தத்தில் ஆழ்ந்துள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களின் நன்மைக்காக, பகவத் கீதையின் போதனைகளை அளிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. உலகிலுள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களை தேகாபிமானத்தில் இருந்து விடுவித்து, பரம புருஷருடனான அவர்களது நித்திய உறவை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவே பகவத் கீதை வழங்கப்பட்டது. “ஆத்ம-வித்யா”, அல்லது பகவானைப் பற்றிய உன்னத அறிவு, பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள எல்லோருடைய நன்மையையும் கருத்திற் கொண்டே பகவானால் வழங்கப்பட்டதாகும்.

பதம் 37

स्वनिगममपहाय मत्प्रतिज्ञा-
मृतमधिकर्तुमवप्लुतो रथस्थ: ।
धृतरथचरणोऽभ्ययाच्चलद्गु-
र्हरिरिव हन्तुमिभं गतोत्तरीय: ॥ ३७ ॥

ஸ்வ-நிகமம் அபஹாய மத்-ப்தரிக்ஞாம்
ருதம் அதிகர் தும் அவப்லுதோ ரதஸ்த:
த்ருத-ரத-சரணோ ’ப்யயாச் சலத்குர்
ஹரிர் இவ ஹந்தும் இபம் கதோத்தரீய:

ஸ்வ-நிகமம்—சொந்த உண்மை; அபஹாய—செல்லாததாக்க; மத்-ப்ரதிக்ஞாம்—எனது சொந்த வாக்குறுதி; ருதம்—உண்மையான; அதி—அதிக; கர்தும்—அதைச் செய்ய; அவப்லுத:—கீழே இறங்கி; ரத-ஸ்த:—இரதத்திலிருந்து; த்ருத—கையிலெடுத்து; ரத—இரதத்தின்; சரண—சக்கரத்தை; அப்யயாத்—விரைவாகச் சென்றார்; சலத்ரு—பூமியைக் காலால் மிதிக்கும் ஓசையுடன்; ஹரி:—சிங்கம்; இவ—போல்; ஹந்தும்—கொல்ல; இபம்—யானையை; கத—ஒருபுறம் விட்டுவிட்டு; உத்தரீய—மேலாடையை.

மொழிபெயர்ப்பு

அவரது சொந்த வாக்குறுதியை மீறி என் ஆசையை நிறைவேற்றும் வகையில், தேரிலிருந்து கீழே குதித்த அவர், அதன் சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு, சிங்கம் யானையைக் கொன்றுவிட செய்வதைப் போல், என்னை நோக்கி விரைவாக ஓடிவந்தார். வழியில் அவரது மேலாடையும் கூட சரிந்து கீழே விழுந்தது.

பொருளுரை

குருட்சேத்திரப் போர் யுத்த விதிமுறைகளுக்கு ஏற்பவும், அதே சமயம் ஒரு நண்பன் மற்றொரு நண்பனுடன் போரிடுவதைப் போல் கேளிக்கையான முறையிலும் நிகழ்ந்தது. அர்ஜுனன் மீதுள்ள பாசத்தினால் அவரை பீஷ்மதேவர் கொல்லத் தயங்குகிறார் என்று துரியோதனன் குற்றம் சாட்டினான். ஒரு க்ஷத்திரியரால் அவமரியாதைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆகவே மறுநாள் பாண்டவர்களைக் கொல்வதற்காகவே செய்யப்பட்ட விசேஷ ஆயுதங்களால் அவர்கள் ஐவரையும் கொன்றுவிடப் போவதாக பீஷ்மர் வாக்களித்தார். இதனால் திருப்தியடைந்த துரியோதனன், அடுத்த நாள் சண்டையின் போது அம்புகளைக் கொடுப்பதற்காக அவற்றைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டான். அந்த அம்புகளை அர்ஜுனன் தந்திரமாக துரியோதனனிடமிருந்து எடுத்துக் கொண்டார். இது கிருஷ்ணரின் தந்திரம்தான் என்பதை பீஷ்மதேவரால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே மறுநாள் கிருஷ்ணர் ஆயுதத்தை கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும், இல்லையெனில் அவரது நண்பனான அர்ஜுனன் இறந்து விடுவார் என்று பீஷ்மர் சபதம் செய்தார். மறுநாள் யுத்தத்தில் பீஷ்மதேவர் மிகவும் உக்கிரமாக போரிட்டதால் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவருமே சங்கடத்திற்கு உள்ளாயினர். அர்ஜுனன் தோல்வியடையும் நிலைக்கு வந்துவிட்டார்; அடுத்த வினாடியிலேயே அர்ஜுனன் பீஷ்மதேவரால் கொல்லப்படும் அளவிற்கு நிலைமை அவ்வளவு தீவிரமடைந்துவிட்டது. அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது வாக்குறுதியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததான பீஷ்மதேவரின் சபதத்தைக் காப்பாற்றி அவரை மகிழ்விக்க விரும்பினார். வெளித்தோற்றத்தில் தமது சொந்த வாக்குறுதியை அவர் மீறியதாக காணப்பட்டது. குருட்சேத்திர யுத்தத்தில் ஆயுதத்தை எடுக்கவோ, எந்த பிரிவினருக்காகவும் தமது பலத்தை பிரயோகிக்கவோ போவதில்லை என்று யுத்ததிற்கு முன் அவர் வாக்களித்திருந்தார். ஆனால் அர்ஜூனனைக் காப்பதற்காக அவர் இரதத்திலிருந்து கிழே குதித்து, அதன் சக்கரத்தை கையில் எடுத்துக் கொண்டு, சிங்கம் ஒரு யானையைக் கொல்வதற்காக அதை விரட்டிச் செல்வதைப் போல், அவர் கோபத்துடன் பீஷ்மரை நோக்கி விரைந்தார். அவர் கோபாவேஷத்துடன் ஓடியதால் வழியில் அவரது மேலாடை கீழே விழுந்துவிட்டதைக் கூட அவர் கவனிக்கவில்லை. பீஷ்மதேவர் உடனே ஆயதங்களைக் கைவிட்டு, அவரது அன்பிற்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்படுவதற்குத் தயாரானார். இவ்வாறாக, அதே சமயத்தில் அன்றைய தினத்தின் போரும் ஒரு முடிவுக்கு வந்ததால் அர்ஜுனன் காப்பாற்றப்பட்டார். பகவானே அர்ஜுனனின் தேரில் இக்ருந்ததால், அர்ஜுனனுக்கு மரணம் ஏற்படுவது சாத்தியமில்லை. ஆனால் கிருஷ்ணர், அவரது நண்பனைக் காப்பாற்றுவதற்காக ஆயுதத்தைக் கையிலெடுப்பதை பீஷ்மதேவர் காண விரும்பியதால், பகவான் இச்சூழ்நிலையை உருவாக்கி, அர்ஜுனனின் மரணம் சமீபித்து விட்டதைப் போல் காட்டினார். பீஷ்மதேவரின் முன் நின்ற பகவான், தான் ஆயுதத்தைக் கையிலெடுத்ததையும், பீஷ்மரின் சபதம் நிறைவேறியது என்பதையும் பீஷ்மருக்குக் காட்டினார்.

பதம் 38

शितविशिखहतो विशीर्णदंश:
क्षतजपरिप्लुत आततायिनो मे ।
प्रसभमभिससार मद्वधार्थं
स भवतु मे भगवान् गतिर्मुकुन्द: ॥ ३८ ॥

சித-விசிக-ஹதோ விசீர்ண-தம்ச:
க்ஷதஜ-பரிப்லுத ஆததாயினோ மே
ப்ரஸபம் அபிஸஸார மத்-வதார்தம்
ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த:

சித—கூரிய; விசிக—அம்புகள்; ஹத:—காயப்படுத்தப்பட்ட; விசீர்ண-தம்ச:—சிதறிய கேடயம்; க்ஷதஜ—காயங்களால்; மே—எனது; ப்ரஸபம்—கோபாவேஷத்துடன்; அபிஸஸார—செல்ல ஆரம்பித்தார்; மத்-வத-அர்தம்—என்னைக் கொல்லும் நோக்கத்திற்காக; ஸ—அவர்; பவது—ஆகக்கூடும்; மே—எனது; பகவான்—பரம புருஷ பகவான்; கதி:—இலக்கு; முகுந்த—முக்தியளிப்பவர்.

மொழிபெயர்ப்பு

முக்தி அளிப்பவரான, அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக, எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல், போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார். அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது. மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது.

பொருளுரை

கிருஷ்ணரும், பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை கவனத்தைக் கவர்வதாக இருந்தது. ஏனெனில், கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும், பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன. ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும். பகவான் பரிபூரணமானவர் என்பதால், ஓர் எதிரியின் வேடத்திலுள்ள அவரது தூய பக்தரின் சேவையையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியும். பரம புருஷருக்கு எந்த எதிரியும் இருக்க முடியாது. மேலும் பெயரளவேயான ஒரு எதிரியால் அவருக்குத் தீங்கிழைக்கவும் முடியாது. ஏனெனில் அவர் “அஜித”, அல்லது வெல்லப்பட முடியாதவராவார். ஒருவரும் பகவானைவிட உயர்ந்தவராக இருக்க முடியாது என்றபோதிலும், தூய பக்தரொருவர் ஓரெதிரியைப் போல் அவரைத் தாக்கும்பொழுது அல்லது உயர்ந்ததொரு நிலையில் இருந்து கொண்டு அவரைக் கடிந்து கொள்ளும்பொழுது, அதில் பகவான் ஆனந்தமடைகிறார். இவை பகவானுடன் பக்தர்கள் கொள்ளும் உன்னதமான அன்புப் பரிமாற்றங்களில் சிலவாகும். மேலும் தூய பக்தித் தொண்டைப் பற்றி அறியாதவர்களால் இத்தகைய விவகாரங்களில் உள்ள மர்மத்தைப் புரிந்துகொள்ள இயலாது.

சாதாரண கண்களுக்கு பகவான் காயமடைந்ததைப் போல் காணப்பட வேண்டும் என்பதற்காகவே ஒரு துணிவுமிக்க வீரரின் பாகத்தை ஏற்றிருந்த பீஷ்மதேவர், வேண்டுமென்றே பகவானின் உடலை அம்புகளால் துளைத்தார். ஆனால் உண்மையில் பக்தரல்லாதவர்களை குழப்புவதற்காகவே அப்படி செய்யப்பட்டது. ஆன்மீகமயமான உடலை காயப்படுத்த முடியாது, பக்தரொருவர் பகவானின் எதிரியாகவும் முடியாது. அது முடியுமானால், பீஷ்மதேவர் அவரது வாழ்வின் இறுதி இலக்காக அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தேர்ந்து எடுத்திருக்கமாட்டார். பீஷ்மர் பகவானின் எதிரியாக இருந்திருப்பாரானால், சிறிதும் அசையாமலேயே அவரை பகவானால் கொன்றிருக்க முடியும். இரத்தத்துடனும், காயங்களுடனும் பீஷ்மதேவரின் முன் வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் தன்னால் உண்டாக்கப்பட்ட காயங்களால் அலங்கரிக்கப்பட்ட பகவானின் திவ்யமான உடல் அழகை பீஷ்மர் காண விரும்பியதாலேயே பகவான் அப்படிச் செய்தார். இதுவே பகவானுக்கும், பக்தருக்கும் இடையிலான தெய்வீகமான உறவைப் பரிமாறிக் கொள்ளும் முறையாகும். இத்தகைய விவகாரங்களினால் பகவான் மற்றும் பக்தர் ஆகிய இருவருமே பெருமையடைகின்றனர். பகவான் மிகவும் கோபாவேஷத்துடன் இருந்ததால், அவர் பீஷ்மதேவரை நோக்கிச் செல்லும்பொழுது, அர்ஜுனன் அவரைத் தடுக்க முயன்றபோதிலும், தடைகளைப் பொருட்படுத்தாமல் காதலியை நோக்கி காதலன் விரைந்து செல்வதைப் போலவே, கிருஷ்ணரும் பிஷ்மதேவரை நோக்கிச் சென்றார். வெளிப்பார்வைக்கு அவர் பிஷ்மதேவரை கொல்ல முடிவு செய்திருந்ததாக காணப்பட்டது. ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மரை மகிழ்விப்பதே அவரது நோக்கமாகும். பகவான் எல்லா ஜீவராசிகளையும் விடுவிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. அருவவாதிகள் அவரிடமிருந்து முக்தியைப் பெற விரும்புகின்றனர். அவர்களது விருப்பப்படியே அதை அவர்களுக்கு பகவான் அளிக்கிறார். ஆனால் இங்கு, பகவானை அவரது உருவ அம்சத்தில் காண பீஷ்மதேவர் விரும்புகிறார். தூய பக்தர்கள் அனைவரும் இதைத்தான் விரும்புவார்கள்.

பதம் 39

विजयरथकुटुम्ब आत्ततोत्रे
धृतहयरश्मिनि तच्छ्रियेक्षणीये ।
भगवति रतिरस्तु मे मुमूर्षो-
र्यमिह निरीक्ष्य हता गता: स्वरूपम् ॥ ३९ ॥

விஜய-ரத-குடும்ப ஆத்த-தோத்ரே
த்ருத-ஹய-ரஸ்மினி தச்-ச்ரியேக்ஷணீயே
பகவதி ரதிர் அஸ்து மே முமூர்ஷோர்
யம் இஹ நிரீக்ஷ்ய ஹதா கதா: ஸ்வ-ரூபம்

விஜய—அர்ஜுனன்; ரத—இரதம்; குடும்ப—துணிந்து பாதுகாப்பு அளிப்பவர்; ஆத்த-தோத்ரே—வலது கரத்தில் ஒரு சாட்டையுடன்; த்ருத-ஹய—குதிரைகளை கட்டுப்படுத்தியவாறு; ரஸ்மினி—கயிறுகள்; தத்-ஸ்ரியா—அழகுடன் நிற்கும்; ஈக்ஷணீயே—காண்பதற்கு; பகவதி—பரம புருஷ பகவானுக்கு; ரதி:-அஸ்து—எனது கவர்ச்சி; முமூர்ஷோ:—இறக்கும் தறுவாயிலுள்ள ஒருவன்; யம்—யார் மீது; இஹ—இவ்வுலகில்; நிரீக்ஷ்ய—காண்பதன் மூலம்; ஹதா—இறந்தவர்கள்; கதா:—அடைந்தனர்; ஸ்வ-ரூபம்—சுயரூபத்தை.

மொழிபெயர்ப்பு

இறக்கும் சமயத்தில் எனது இறுதி கவர்ச்சி பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் மீது நிலைபெறட்டும். வலது கரத்தில் ஒரு சாட்டையையும், இடது கரத்தில் கடிவாளத்தையும் பிடித்திருந்தவரும், எல்லா வகையிலும் அர்ஜுனனின் இரதத்திற்குப் பாதுகாப்பளிப்பதில் மிகவும் கவனமாக இருந்தவருமான அர்ஜுனனுடைய சாரதியின் மீது என் மனதை நான் ஒருமுனைப்படுத்துகிறேன். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அவரைக் கண்டவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களது சுய உருவங்களைப் பெற்றனர்.

பொருளுரை

பகவானின் தூய பக்தரொருவர் அன்புத் தொண்டின் வாயிலாக பகவானுடன் திவ்யமான உறவு கொண்டிருப்பதால், தனக்குள் எப்பொழுதும் பகவான் இருப்பதைக் காண்கிறார். அத்தகைய ஒரு தூய பக்தரால் கொஞ்ச நேரம் கூட பகவானை மறந்திருக்க முடியாது. இதுவே சமாதி என்று அழைக்கப்படுகிறது. யோகி ஒருவர் புலன்களை மற்றெல்லா ஈடுபாடுகளில் இருந்தும் தடுத்து பரமாத்மாவை தியானிக்க முயல்கிறார். இதன் விளைவாக இறுதியில் அவர் சமாதி நிலையை அடைகிறார். பக்தரொருவர், பகவானின் உருவ அம்சத்துடன், அவரது புனித நாமம், புகழ், லீலைகள் முதலியவற்றை இடையறாது எண்ணுவதன் மூலம் இன்னும் சுலபமாக சமாதி நிலையை அடைகிறார். ஆகவே, யோகியின் தியானமும், பக்தரின் தியானமும் ஒரே நிலையில் உள்ளவை அல்ல. யோகியின் தியானம் செயற்கையானது. ஆனால் பக்தனின் தியானமோ, தூய அன்பும், தன்னிச்சையான பாசமும் கொண்ட இயற்கையான தியானமாகும். பீஷ்மதேவர் ஒரு தூய பக்தராவர். மேலும் படைத் தளபதி என்ற முறையில் அவர், போர்க்களத்தில் அர்ஜுனனின் சாரதியாக இருந்த பகவானை, அவரது பார்த்தசாரதி அம்சத்தில் இடைவிடாது அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். எனவே, பார்த்தசாரதியாக பகவான் நிகழ்த்திய திருவிளையாடலும் நித்தியமானதாகும். கடிகார முள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றது. அதைப் போலவே, கம்சனின் சிறைக் கூடத்தில் பகவான் பிறந்தது முதல், அவரது இறுதியான மௌசல-லீலை வரையுள்ள திருவிளையாடல்கள் அனைத்தும், எல்லா பிரபஞ்சங்களிலும் ஒவ்வொன்றாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அத்தகைய திருவிளையாடல்களில் பகவானின் தூய பக்தர்களான பாண்டவர்கள் மற்றும் பீஷ்மரைப் போன்றவர்கள் அவரது நித்திய சகாக்களாக உள்ளனர். ஆகவே, அர்ஜுனனால் கூட காண முடியாமற்போன பகவானுடைய அழகுமிக்க பார்த்தசாரதி ரூபத்தை பீஷ்மதேவர் மறக்கவேயில்லை.

பீஷ்மதேவர் அழகிய பார்த்தசாரதிக்கு நேரெதிரே இருந்தார். அர்ஜுனனோ அவருக்குப் பின்புறத்தில் இருந்தார். பகவானின் யுத்தத் தோற்றத்தைப் பொறுத்தவரை, அர்ஜுனனை விட பீஷ்மதேவர் இந்த ரூபத்தை அதிகமாக விரும்பி அனுபவித்தார்.

குருட்சேத்திரப் போர்க்களத்தில் இருந்த எல்லா வீரர்களாலும், நபர்களாலும், பகவானின் கருணையால் அவரை நேருக்கு நேராகக் காண முடிந்தது. எனவே மரணத்திற்குப் பிறகு அவர்களனைவரும் பகவானுடையதைப் போன்ற அவர்களது சுயமான ஆன்மீக உருவங்களைப் பெற்றனர். நீர்வாழ் பிராணிகளில் இருந்து பிரம்மா வரையுள்ள பந்தப்பட்ட ஆத்மாக்கள் அனைவரும் பரிணாம சக்கரத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் “மாயா” ரூபத்தில் உள்ளனர். அவை ஒருவரது கருமங்களால் சம்பாதிக்கப்பட்டு, ஜட இயற்கையால் அளிக்கப்படுபவையாகும். பந்தப்பட்ட ஆத்மாக்களுக்குக் கிடைத்துள்ள பௌதிக உருவங்கள் அனைத்தும் அந்நியமான உடைகளாகும். பந்தப்பட்ட ஆத்மா ஜட சக்தியிலிருந்து விடுபடும்பொழுது அவனுடைய சுய உருவத்தை அவன் பெறுகிறான். அருவவாதி பகவானின் அருவமான பிரம்மஜோதியை அடைய விரும்புகிறான். ஆனால் பகவானின் பின்னப்பகுதிகளாக உள்ள ஜீவராசிகளுக்கு அது சிறிதும் உகந்ததல்ல. ஆகவே, அருவவாதிகள் மீண்டும் இழிவடைந்து, நிலையற்ற ஜட உடல்களை பெறுகின்றனர். பகவானின் பக்தர்கள், அவர்களுடைய ஆத்மாவின் மூல இயற்கையைப் பொறுத்து, வைகுண்டத்திலோ அல்லது கோலோகத்திலோ, பகவானுடையதைப் போன்ற இரு கரங்களையோ அல்லது நான்கு கரங்களையோ கொண்ட ஓர் ஆன்மீக உருவத்தைப் பெறுகின்றனர். முற்றிலும் ஆன்மீகமான இவ்வுருவம் ஜீவனின் உண்மையான சொரூபமாகும். மேலும் பீஷ்மதேவரால் உறுதி செய்யப்படுவதைப் போல், குருட்சேத்திரப் போர்க்களத்தில் பங்கு பெற்ற இரு பிரிவுகளிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும் அவர்களுடைய சொரூபத்தை அடைந்தனர். அனைவரும் ஒரே பலனையே அடைந்தனர். ஆகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களிடம் மட்டுமல்லாமல் மற்ற பிரிவினரிடமும் கூட கருணை கொண்டிருந்தார். பீஷ்மதேவர் பகவானின் இணைபிரியாத சகா என்பது எல்லாச் சூழ்நிலைகளிலும் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் பிற வீரர்கள் அடைந்த நிலையை தாமும் அடைய வேண்டுமென்று விரும்பினார். முடிவு என்னவெனில், உள்ளேயோ அல்லது வெளியிலோ உள்ள பகவானை தரிசித்துக் கொண்டு உயிரை விடுபவர்கள் அனைவரும் அவர்களுடைய சொரூபத்தை அடைவார்கள். அதுவே வாழ்வின் மிகவுயர்ந்த பூரணத்துவ நிலையாகும்.

பதம் 40

ललितगतिविलासवल्गुहास-
प्रणयनिरीक्षणकल्पितोरुमाना: ।
कृतमनुकृतवत्य उन्मदान्धा:
प्रकृतिमगन् किल यस्य गोपवध्व: ॥ ४० ॥

லலித-கதி-விலாஸ-வல்குஹாஸ-
ப்ரணய-நிரீக்ஷண-கல்பிதோருமானா:
க்ருத-மனு-க்ருத-வத்ய உன்மதாந்தா:
ப்ரக்ருதிம் அகன் கில யஸ்ய கோப-வத்வ:

லலித—கவர்ச்சியான; கதி—அசைவுகள்; விலாஸ—கவர்ச்சியான செயல்கள்; வல்கு-ஹாஸ—இனிமையாக புன்னகை புரியும்; ப்ரணய—அன்பான; நிரீக்ஷண—பார்க்கும்; கல்பித—மனோபாவம்; உருமானா:—உயர்வாக புகழப்படும்; க்ருத-மனு-க்ருத-வத்ய—அச்செயல்களை அப்படியே செய்து காட்டுவதில்; உன்மத-அந்தா:—பரவசத்தில் ஆழ்ந்த; ப்ரக்ருதிம்—சிறப்பியல்புகள்; அகன்—செய்தனர்; கில—நிச்சயமாக; யஸ்ய—யாருடைய; கோபவத்வ:—இடையர் குலப் பெண்கள்.

மொழிபெயர்ப்பு

அன்பான புன்னகையாலும், அசைவுகளாலும் விருந்தாவனத்தின் இளநங்கைகளைக் (கோபியர்கள்) கவர்ந்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மகன் நிலை பெறட்டும். (ராச நடனத்திலிருந்து பகவான் மறைந்த பிறகு) இளநங்கைகள் பகவானின் அங்க அசைவுகளை அப்படியே நடித்துக் காட்டினர்.

பொருளுரை

விருந்தாவனத்து கோபியர்கள் தங்களது ஆழ்ந்த அன்பின் பரவசத்தினால், இல்லற அன்புடன் அவரைத் தழுவியும், கேலியாக அவரைப் பார்த்து பரிகாசம் செய்தும், காதலுடன் அவர் மீது பார்வையைச் செலுத்தியும், அவருக்குச் சமமாக நடனமாடினர். இவ்வாறாக பகவானுடனான குண ஒற்றுமையை அவர்கள் பெற்றனர். அர்ஜுனனுடன் பகவான் கொண்டிருந்த உறவு, பீஷ்மதேவரைப் போன்ற பக்தர்களால் நிச்சயமாக போற்றத் தகுந்ததாகும். ஆனால் பகவானுடன் கோபியர்கள் கொண்டிருந்த உறவு இன்னும் அதிகமான புகழ்ச்சிக்குரியதாகும். ஏனெனில் அவர்களுடைய அன்பான தொண்டு இன்னும் அதிக தூய்மையுடையதாக இருந்தது. பகவானின் கருணையால், அவரது சகோதரத்துவ சேவையை, அல்லது சாரதியாக இருந்த சேவையைப் பெறும் பேரதிர்ஷ்டசாலியாக அர்ஜுனன் இருந்தார். ஆனால் அர்ஜுனனுக்கு பகவான் சம பலத்தை அளிக்கவில்லை. ஆனால் பகவானுக்குச் சமமான ஸ்தானத்தை அடைந்ததன் மூலமாக, கோபியர்கள் பகவானுடன் ஒன்றுபட்டவர்களாகவே மாறிவிட்டனர். வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கோபியர்களை நினைவுபடுத்திக்கொள்ள பீஷ்மர் விரும்பியது, அவர்களுடைய கருணையையும் பெறுவதற்காகவேயாகும். தூய பக்தர்களைப் புகழும்பொழுது பகவான் திருப்தியடைகிறார். எனவேதான் பீஷ்மதேவர் அவரது கவர்ச்சிக்குரிய பொருளாக இருந்த அர்ஜுனனை புகழ்ந்ததோடல்லாமல், பகவானுக்கு அன்புத் தொண்டாற்றுவதன் மூலமாக, நிகரற்ற நல்ல வாய்ப்புகளைப் பெற்றிருந்த கோபியர்களையும் கூட அவர் நினைவுகூர்ந்தார். பகவானுடனான கோபியர்களின் சமத்துவமானது, அருவவாதிகளின் சாயுஜ்ய முக்தியைப் போன்றது என்று ஒருபோதும் தப்பாக புரிந்துகொள்ளக் கூடாது. இந்த சமத்துவம் பரிபூரணமான ஒருவித பரவச நிலையாகும். இந்நிலையில் அன்பரும், அன்பிற்குரியவரும் எல்லா வகையிலும் ஒத்த உரிமை கொண்டவர்களாக மாறி விடுவதால், அவர்களுடைய கருத்து வேறுபாடுகள் முற்றிலும் அழிந்துவிடுகின்றன.

பதம் 41

मुनिगणनृपवर्यसङ्कुलेऽन्त:
सदसि युधिष्ठिरराजसूय एषाम् ।
अर्हणमुपपेद ईक्षणीयो
मम द‍ृशिगोचर एष आविरात्मा ॥ ४१ ॥

முனி-கண-ந்ருப-வர்ய-ஸங்குலே ’ந்த:
ஸதஸி யுதிஷ்டிர-ராஜஸூய ஏஷாம்
அர்ஹணம் உபபேத ஈக்ஷணீயோ
மம த்ருசி-கோசர ஏஷ ஆவிர் ஆத்மா

முனி-கண—மிகவும் கற்றறிந்த முனிவர்கள்; ந்ருப-வர்ய—சிறந்த ஆட்சிபுரியும் அரசர்கள்; ஸங்குலே அந்த ஸதஸி—மிகச்சிறந்த ஆலோசனைக் கூட்டத்தில்; யுதிஷ்டிர—யுதிஷ்டிர மகாராஜனின்; ராஜஸூயே—ராஜரீகமான ஒரு யாகம்; ஏஷாம்—மிகச்சிறந்த பிரமுகர்கள் அனைவரின்; அர்ஹணம்—மரியாதைக்குரிய வழிபாடு; உபபேத—பெற்றார்; ஈக்ஷணீய:—கவர்ச்சிக்குரிய பொருள்; மம—எனது; த்ருசி—காட்சி; கோசர—காட்சிக்குள்; ஏஷ ஆவி:—நேரடியாக இருந்தேன்; ஆத்மா—ஆத்மா.

மொழிபெயர்ப்பு

யுதிஷ்டிர மகாராஜனால் இயற்றப்பட்ட ராஜஸூய யாகத்தின் போது, அரச குடும்பத்தினர் மற்றும் பண்டிதர்கள் ஆகிய மிகச்சிறந்த உலகப் பிரமுகர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். அச்சிறந்த கூட்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவராலும் இணையற்ற பரம புருஷராக வழிபடப்பட்டார். இச்சம்பவம் நான் இருக்கும்பொழுது நடந்ததாகும். மேலும் பகவானிடம் என் மனதை பதிப்பதற்காகவே இச்சம்பவத்தை நான் நினைவுகூர்ந்தேன்.

பொருளுரை

உலகப் பேரரசரான யுதிஷ்டிர மகாராஜன் குருட்சேத்திர யுத்தத்திற்கு முன், ராஜஸூய யாகத்தைச் செய்தார். அக்காலங்களில், ஆட்சிக்கு வந்த பேரரசர் தனது உயர்ந்த அதிகாரத்தை அறிவிப்பதற்காக, உலகம் முழுவதிலும் ஒரு சவால் (யாகக்) குதிரையை அனுப்புவது வழக்கம். மேலும் அக்குறிப்பிட்ட பேரரசரின் சவாலை ஏற்று, அவரது உயர்ந்த அதிகாரத்தை ஏற்கவோ அல்லது மறுக்கவோ, ஆட்சியிலுள்ள எந்த அரசருக்கும் சுதந்திரம் இருந்தது. பேரரசரின் சவாலுக்கு அடிபணிய மறுப்பவர் அவருடன் போர் செய்து, வெற்றியின் மூலமாக தனது உயர்வை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. போட்டியில் தோல்வி கண்டவர் தன் வாழ்வை தியாகம் செய்து மற்றொரு அரசர் ஆட்சிபுரிவதற்காக இடத்தை காலி செய்ய வேண்டும். எனவே யுதிஷ்டிர மகாராஜனும் கூட அத்தகைய சவால் குதிரைகளை உலகம் முழுவதிலும் அனுப்பி வைத்தார். உலகிலிருந்த எல்லா அரசர்களும் உலகப் பேரரசராக யுதிஷ்டிர மகாராஜனை ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜனின் ஆட்சிக்குக் கீழ்ப்படிந்திருந்த உலகிலுள்ள எல்லா அரசர்களும் ராஜஸூய யாகத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். அத்தகைய யாகங்களுக்கு லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வெள்ளிகள் தேவைப்பட்டன. ஒரு சிற்றரசரால் அதை நிறைவேற்றுவது சுலபமல்ல. மிகப்பெரியதும், மிகவும் கஷ்டமானதுமான அத்தகைய ஒரு யாகத்தை இப்பொழுது இக்கலி யுகத்தில் செய்வது சாத்தியமல்ல. மேலும் இந்த யாகச் சடங்கிற்குத் தலைமையேற்று நடத்தக்கூடிய திறமையுள்ள புரோகிதரையும் யாராலும் பெறவும் முடியாது.

எனவே, அவ்வாறு அழைக்கப்பட்டபின் உலகிலுள்ள எல்லா அரசர்களும், கற்றறிந்த மாமுனிவர்களும் யுதிஷ்டிர மகாராஜனின் தலைநகரில் கூடினர், பெரும் தத்துவவாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பெரும் முனிவர்கள் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். அதாவது, பிராமணர்களும், க்ஷத்திரியர்களும்தான் சமூகத்தில் மிகவுயர்ந்த தலைவர்கள் என்பதால், அவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். சமூகத்தில் முக்கியமற்றவர்களான வைசியர்களும், சூத்திரர்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை. இக்காலத்து சமூக செயல்முறைகளின் மாற்றத்தினால், உத்தியோக அந்தஸ்துக்கு ஏற்ப, மனிதப் பிரிவுகளின் முக்கியத்துவமும் மாறிவிட்டது.

எனவே அப்பெருங்கூட்டத்தில், எல்லோருடைய மனங்களையும் கவர்பவராக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்தார். அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைக் காண விரும்பியதுடன் அவருக்கு பணிவான வணக்கங்களைச் செலுத்தவும் விரும்பினர். இவையனைத்தையும் நினைவுக்கூர்ந்த பீஷ்மதேவர், அவரது வழிபாட்டுக்குரியவரான பரம புருஷ பகவான் அவரது சுயரூபத்துடன் தன் முன் நிற்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். எனவே பரம புருஷரின் செயல்கள், உருவம், திருவிளையாடல்கள், நாமம் மற்றும் புகழ் ஆகியவற்றை தியானிப்பதே அவரை உண்மையாக தியானிக்கும் முறையாகும். பகவானின் அருவ அம்சத்தின் மீது தியானம் செய்வதாக நினைப்பதைவிட அது சுலபமானதாகும். பகவானின் அருவ அம்சத்தை தியானிப்பது கடினம் என்று பகவத் கீதையில் (12.5) தெளிவாக கூறப்படுகிறது. அம்முறையால் விரும்பிய பலன் பெரும்பாலும் அடையப்படுவதே இல்லை என்பதால், அது உண்மையில் தியானமே அல்ல அல்லது நேரத்தை வீணாக்குவது மட்டுமேயாகும். ஆனால் பக்தர்கள் பகவானின் உண்மையான உருவத்தையும், லீலைகளையும் தியானிப்பதால், பகவான் சுலபமாக அடையப்படக்கூடியவராக இருக்கிறார். இதுவும் பகவத் கீதையில் (12.9) கூறப்பட்டு உள்ளது. பகவான் அவரது திவ்யமான செயல்களிலிருந்து வேறுபட்டவரல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனித சமூகத்தின் முன், முக்கியமாக குருட்சேத்திர யுத்தத்தில் உண்மையாகவே இருந்தபொழுது, அவர் பரம புருஷ பகவானாக ஒருவேளை அங்கீகரிக்கப்பட்டு இருக்கமாட்டார் என்றபோதிலும், அவர் அக்காலத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த புருஷர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தார். புகழ்பெற்ற மனிதன் இறந்தபிறகு அவனை கடவுளாக வழிபடலாம் என்ற விளம்பரம் தவறானதாகும். ஏனெனில், ஒரு மனிதன் இறந்த பிறகு அவனைக் கடவுளாக மாற்றுவது சாத்தியமல்ல. பரம புருஷர் நேரடியாக தோன்றியிருந்தபோதிலும், அவரால் ஒரு மனிதனாக இருக்க முடியாது. இவை இரண்டுமே தப்பான கருத்துக்களாகும். பகவான் மனித உருவில் உள்ளவரென்ற கருத்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விஷயத்தில் பொருந்தாததாகும்.

பதம் 42

तमिममहमजं शरीरभाजां
हृदि हृदि धिष्ठितमात्मकल्पितानाम् ।
प्रतिद‍ृशमिव नैकधार्कमेकं
समधिगतोऽस्मि विधूतभेदमोह: ॥ ४२ ॥

தம் இமம் அஹம் அஜம் சரீர-பாஜாம்
ஹ்ருதி ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதானாம்
ப்ரதித்ருசம் இவ நைகதார்கம் ஏகம்
ஸமதி-கதோ ’ஸ்மி விதூத-பேத-மோஹ:

தம்—அந்த பரம புருஷ பகவான்; இமம்—இப்பொழுது என் முன் இருக்கும்; அஹம்—நான்; அஜம்—பிறப்பற்றவர்; சரீரபாஜாம்—பந்தப்பட்ட ஆத்மாக்களின்; ஹ்ருதி—இதயத்தில்; ஹ்ருதி—இதயத்தில்; திஷ்டிதம்—உள்ள; ஆத்ம—பரமாத்மா; கல்பிதானாம்—மனக் கற்பனையாளர்களின்; ப்ரதித்ருசம்—ஒவ்வொரு திசையிலும்; இவ—போல்; ந ஏகதா—ஒன்றல்ல; அர்கம்—சூரியன்; ஏகம்—ஒன்றேயாகும்; ஸமதி-கத: அஸ்மி—தியானத்தில் சமாதி நிலையை நான் அனுபவித்தேன்; விதூத—விடுபட்டு இருந்ததால்; பேத-மோஹ:—இருமை எனும் தப்பெண்ணம்.

மொழிபெயர்ப்பு

பகவான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார், மனக் கற்பனையாளர்களின் இதயத்திலும் இருக்கிறார் என்பதற்கு எதிரான எண்ணத்திலிருந்து இப்பொழுது நான் விடுபட்டுவிட்டேன் என்பதால், இப்பொழுது என் முன் நிற்கும் அந்த ஒரே பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரை முழு மன ஒருமையுடன் என்னால் தியானிக்க முடிகிறது.

பொருளுரை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டற்ற ஒரே பரம புருஷராவார். ஆனால் கற்பனைக்கெட்டாத அவரது சக்தியால் அவர் பல்வேறு அவதாரங்களாக விரிவடைந்துள்ளார். கற்பனைக்கெட்டாத பகவானின் சக்தியை அறியாதிருப்பதே இருமைக் கருத்துக்குக் காரணமாகும். ஒரு முட்டாள் மட்டுமே தன்னை ஒரு மனிதனாக கருதுவான் என்று பகவத் கீதையில் (9.11) பகவான் கூறுகிறார். அத்தகைய மூடர்கள் பகவானின் நினைத்தற்கரிய சக்திகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. சூரியன் உலகிலுள்ள எல்லோர் முன்னிலையிலும் இருப்பதைப் போலவே, அவரது நினைத்தற்கரிய சக்தியால் பகவான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார். பகவானின் பரமாத்மா அம்சமானது, அவருடைய அம்சங்களின் ஓர் அம்சமாகும். அனைவருடைய இதயத்திலும் உள்ள பரமாத்மாவாக விரிவடையும் அவர், தமது சுய ஒளியினால், பிரம்மஜோதியின் பிரகாசமாகவும் தம்மை விரிவடையச் செய்கிறார். பகவானின் உடலிலிருந்து வெளிப்படும் ஒளியே பிரம்மஜோதியாகும் என்று பிரம்ம சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே அவருக்கும், அவரது சுயப்பிரகாசமான பிரம்மஜோதிக்கும் மற்றும் அவரது விரிவங்கமான பரமாத்மாவுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இவ்வுண்மையை அறியாத குறைமதியாளர்கள், பிரம்மஜோதியும், பரமாத்மாவும் ஸ்ரீ கிருஷ்ணரிலிருந்து வேறானவை என்று கருதுகின்றனர். இந்த இருமைக் கருத்து பீஷ்மதேவரின் மனதிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டது. எல்லா பொருட்களிலும் அனைத்துமாக இருப்பவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமேயாவார் என்பதை அறிந்த பீஷ்மர் இப்பொழுது திருப்தியடைந்தார். திவ்யமான இந்த ஞானம் சிறந்த மகாத்மாக்களினால் அல்லது பக்தர்களால் அடையப்படுகிறது. அனைத்திலும் கருப்பொருளாக உள்ளவர் வாசுதேவனே என்றும், வாசுதேவன் இல்லாமல் எதுவுமே இருக்காது என்றும் பகவத் கீதையில் (7.19) கூறப்படுகிறது. இப்பொழுது ஒரு “மகாஜன” பக்தரால் உறுதி செய்யப்படுவதைப் போல், வாசுதேவன் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுளாவார். எனவே ஆரம்ப பக்தர்கள் மற்றும் தூய பக்தர்கள் ஆகிய இருவருமே அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயல வேண்டும். அதுவே பக்திமார்க்கமாகும்.

பீஷ்மதேவரின் வழிபாட்டுக்குரிய மூர்த்தி, பார்த்தசாரதியாக உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரேயாவார். கோபியர்களின் வழிபாட்டுக்குரியவர், விருந்தாவனத்திலுள்ள அதே கிருஷ்ணர்தான். ஆனால் அவர் மிகக் கவர்ச்சி வாய்ந்தவராக சியாம சுந்தரராக அங்கு காட்சியளிக்கிறார். ஆனால் விருந்தாவனத்து கிருஷ்ணரும், குருட்சேத்திரப் போர்க்களத்தில் இருந்த கிருஷ்ணரும் வேறுபட்டவர்கள் என்று குறைந்த அறிவுள்ள பண்டிதர்கள் சில சமயங்களில் தப்பாக எண்ணுகின்றனர். ஆனால் இந்த தப்பெண்ணம் பீஷ்மதேவரிடம் இருந்து முற்றிலும் அகன்றுவிட்டது. அருவவாதிகளின் இலக்கும் அருவ ஜோதியான கிருஷ்ணரேயாவார். யோகியின் இலக்கான பரமாத்மாவும் அதே கிருஷ்ணர்தான். கிருஷ்ணர், பிரம்மஜோதி மற்றும் இதயவாசியான பரமாத்மா ஆகிய இரண்டாகவும் இருக்கிறார். ஆனால் பிரம்மஜோதி அல்லது பரமாத்மா நிலைகளில் கிருஷ்ணரோ அல்லது கிருஷ்ணருடனான இனிய உறவுகளோ இல்லை. கிருஷ்ணர் அவரது உருவ அம்சத்தில் பார்த்தசாரதியாகவும், விருந்தாவனத்து சியாம சுந்தரராகவும் இருக்கிறார். ஆனால் பிரம்மஜோதி மற்றும் பரமாத்ம அம்சங்களில் அவரது உருவ அம்சம் இல்லை. பீஷ்மதேவரைப் போன்ற மிகச்சிறந்த மகாத்மாக்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இவ்வெல்லா அம்சங்களையும் உணர்ந்துள்ளனர். ஆகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா அம்சங்களுக்கும் மூலம் என்பதை அறிந்து, அவரையே அவர்கள் வழிபடுகின்றனர்.

பதம் 43

सूत उवाच
कृष्ण एवं भगवति मनोवाग्द‍ृष्टिवृत्तिभि: ।
आत्मन्यात्मानमावेश्य सोऽन्त:श्वास उपारमत् ॥ ४३ ॥

ஸூத உவாச

க்ருஷ்ண ஏவம் பகவதி மனோ வாக் த்ருஷ்டி வ்ருத்திபி:
ஆத்மனி ஆத்மானம் ஆவேஸ்ய ஸோ ’ன்தஹ்ஸ்வாஸ உபாரமத்

ஸூத உவாச—சூத கோஸ்வாமி கூறினார்; க்ருஷ்ணே—பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர்; ஏவம்—மட்டுமே; பகவதி—அவருக்குள்; மன:—மனதுடன்; வாக்—பேச்சு; த்ருஷ்டி—பார்வை; வ்ருத்திபி:—செயல்கள்; ஆத்மனி—பரமாத்மாவுடன்; ஆத்மானம்—ஜீவராதி; ஆவேஸ்ய—ஐக்கியமாகி விட்டதால்; ஸ:—அவர்; அந்த: ஸ்வாஸ—சுவாஸம்; உபாரமத்—மௌனமானார்.

மொழிபெயர்ப்பு

சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பீஷ்மதேவர் அவரது மனம், பேச்சு, பார்வை மற்றும் செயல்கள் ஆகியவற்றுடன் பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு மௌனமானார். அவரது மூச்சும் நின்றது.

பொருளுரை

ஜடவுடலைவிடும் வேளையில் பீஷ்மதேவர் அடைந்த நிலைக்கு “நிர்விகல்ப ஸமாதி” என்று பெயர். ஏனெனில், அவர் பகவானையும், அவரது செயல்களையும் பற்றிய சிந்தனையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். பகவானின் பெருமைகளை அவர் பாடினார். பார்வையால் தன் முன் இருந்த பகவானை காணத் துவங்கினார். இவ்வாறாக அவரது செயல்களனைத்தும் வழி பிறழாமல் பகவான் மீது ஒருமுனைப்படுத்தப்பட்டிருந்தன. இதுவே மிகவுயர்ந்த பூரணத்துவ நிலையாகும். பக்தித் தொண்டைப் பயில்வதால் அனைவராலும் இந்நிலையை அடைய இயலும். பகவானின் பக்தித் தொண்டு ஒன்பது வகையான சேவைகளைக் கொண்டதாகும். அவை: (1) செவியுறுதல், (2) பாடுதல், (3) சிந்தனை செய்தல், (4) தாமரைப் பாதங்களை சேவித்தல், (5) வழிபடுதல், (6) பிரார்த்தனை செய்தல், (7) உத்தரவுகளை நிறைவேற்றுதல், (8) நட்பு கொள்ளுதல், (9) பூரண சரணாகதி அடைதல். அவை அனைத்துமோ அல்லது அவற்றில் ஒன்றோ விரும்பிய பலனை அளிக்க வல்லதாகும். ஆனால் பகவானுடைய கைதேர்ந்த பக்தரின் வழிகாட்டலின்கீழ் அவற்றை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக செவியுறுதலே அனைத்திலும் மிக முக்கியமானதாகும். எனவே இறுதியில் பீஷ்மதேவரின் நிலையை அடைய விரும்பும் உறுதியுள்ள மாணவன், பகவத் கீதையையும், பிறகு ஸ்ரீமத் பாகவதத்தையும் கேட்பது அவசியமாகும். கிருஷ்ணர் நேரடியாகத் தோன்றாவிட்டாலும், பீஷ்மதேவரின் மரணத் தறுவாயில் இருந்த ஒப்பற்ற சூழ்நிலையை அடைய இயலும். பகவத் கீதையிலுள்ள பகவானின் வார்த்தைகளும், ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள வார்த்தைகளும் எல்லா வகையிலும் பகவானுடன் ஒத்திருப்பவையாகும். அந்நூல்கள் பகவானின் ஒலி அவதாரங்களாகும். மேலும் எட்டு வஸுக்களில் ஒருவரான ஸ்ரீ பீஷ்மதேவரின் நிலையை அடையும் தகுதியைப் பெற ஒருவர் அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளும் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இறந்துதான் ஆகவேண்டும். ஆனால் பீஷ்மதேவரைப் போல் இறப்பவர் பூரணத்துவம் அடைவார். மேலும் இயற்கையின் விதிகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இறப்பவன் ஒரு மிருகத்தைப் போல் இறக்கிறான். அதுவே ஒரு மனிதனுக்கும், ஒரு மிருகத்திற்கும் உள்ள வேறுபாடாகும். மனித வாழ்வானது முக்கியமாக பீஷ்மதேவரைப் போல் இறப்பதற்கென உள்ளதாகும்.

பதம் 44

सम्पद्यमानमाज्ञाय भीष्मं ब्रह्मणि निष्कले ।
सर्वे बभूवुस्ते तूष्णीं वयांसीव दिनात्यये ॥ ४४ ॥
ஸம்பத்யமானம் ஆக்ஞாய பீஷ்மம் ப்ரஹ்மணி நிஷ்கலே
ஸர்வே பபூவுஸ் தே தூஷ்ணீம் வயாம்ஸீவ தினாத்யயே

ஸம்பத்யமானம்—அதற்குள் ஐக்கியமாகி விட்டதை; ஆக்ஞாய—இதை அறிந்தபின்; பீஷ்மம்—பீஷ்மதேவரைப் பற்றி; ப்ரஹ்மணி—பரம புருஷருக்குள்; நிஷ்கலே—வரம்பற்ற; ஸர்வே—கூடியிருந்த அனைவரும்; பபூவு:தே—அவர்களனைவரும் ஆனார்கள்; தூஷ்ணீம்—மௌனம்; வயாம்ஸி இவ—பறவைகளைப் போல்; தின அத்யயே—பகல் நேரத்தின் முடிவில்.

மொழிபெயர்ப்பு

பீஷ்மதேவர் பரம புருஷரின் வரம்பற்ற நித்தியத் தன்மைக்குள் ஐக்கியமாகி விட்டார் என்பதை அறிந்த அங்கு கூடியிருந்த அனைவரும், பகல் நேரத்தின் முடிவில் பறவைகள் நிசப்தமாவதைப் போல் மௌனமாயினர்.

பொருளுரை

பரம புருஷரின் எல்லையற்ற நித்தியத் தன்மைக்குள் நுழைதல் அல்லது ஐக்கியமாதல் என்பது, ஜீவராசி அதன் ஆதியான சொந்த வீட்டிற்குள் பிரவேசித்தல் என்பதாகும். ஜீவராசிகள் அனைவரும் பரம புருஷரின் அங்கங்களாவர். எனவே அவர்கள் பகவானுடன் தொண்டர்களாக உறவு கொண்டுள்ளனர். முழு இயந்திரம் ஒன்று அதன் பாகங்களால் சேவை செய்யப்படுவதைப் போல், பகவான், அவரது அங்கங்களான பின்னப்பகுதிகளால் சேவிக்கப்படுகிறார். இயந்திரத்திலிருந்து பிரிக்ப்பட்ட ஒரு பகுதி முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. அதைப் போலவே, பகவானின் சேவையிலிருந்து பிரிக்கப்பட்ட எந்த பகுதியும் பயனற்றதாகும். இந்த ஜடவுலகிலுள்ள ஜீவராசிகள், பரம புருஷரிலிருந்து பிரிக்கப்பட்ட அங்கங்களாவர். இவர்கள் ஆதியில் முக்கியத்துவம் பெற்றிருந்ததைப் போல் இப்பொழுதில்லை. ஆயினும், நித்திய முக்திபெற்ற, பகவானுடன் இணைந்துள்ள பின்னப்பகுதிகள் அதிகமாக உள்ளனர். துர்கா-சக்தி, அல்லது சிறைச்சாலையின் மேலதிகாரி என்று அழைக்கப்படும் பகவானின் ஜட சக்தியானது, பிரிக்கப்பட்ட பின்னப்பகுதிகளை அடக்கியாள்கிறது. இதனால் ஜட இயற்கைச் சட்டங்களின் கீழ் அவர்கள் பந்தப்பட்ட வாழ்வை மேற்கொள்கின்றனர். இவ்வுண்மையை உணரும் ஜீவராசி, ஆன்மீக உலகிற்கு, பகவானிடம் திரும்பிச் செல்ல முயல்கிறான். இவ்வாறாக ஜீவராசியின் ஆன்மீக சிந்தனை ஆரம்பமாகிறது. இந்த ஆன்மீக சிந்தனை, அல்லது உற்சாகம், “ப்ரஹ்ம-ஜிக்ஞாஸா” (பிரம்மத்தைப் பற்றிய ஆய்வு) என்று அழைக்கப்படுகிறது. பிரம்மத்தைப் பற்றிய இந்த ஆய்வை, அறிவு, துறவு மற்றும் பகவானின் பக்தித் தொண்டு ஆகியவற்றினால் வெற்றியுடையதாக்கிக் கொள்ளலாம். ஞானம் என்பது பிரம்மத்தை அல்லது பகவானைப் பற்றிய பூரண அறிவாகும்; துறவு என்பது பௌதிக பற்றிலிருந்து விடுபடுவதாகும். மேலும் ஜீவராசியின் சுயநிலையைப் பயில்வதால் பக்தித் தொண்டு உயிர்ப்படைகிறது. பகவானின் ஆன்மீக வானிற்குள் பிரவேசிக்கும் தகுதியைப் பெற்ற ஜீவராசிகள் ஞானிகள், யோகிகள் மற்றும் பக்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஞானிகளும், யோகிகளும் பகவானின் அருவமான ஒளிக்கதிர்களுள் பிரவேசிக்கின்றனர். ஆனால் பக்தர்கள், வைகுண்டங்கள் எனப்படும் ஆன்மீக உலகங்களுக்குள் நுழைகின்றனர். இந்த ஆன்மீக உலகங்களில் பரம புருஷர் நாராயணராக ஆட்சி செலுத்துகிறார். மேலும் அங்குள்ள முக்திபெற்ற ஜீவராசிகள் பகவானுக்கு ஒரு சேவகனாகவோ, நண்பனாகவோ, பெற்றோராகவோ அல்லது காதலியாகவோ தொண்டு புரிகின்றனர். அங்கு அவர்கள் பகவானோடு சுதந்திரமாக வாழ்வை அனுபவிக்கின்றனர். ஆனால் அருவவாதிகளான ஞானிகளும், யோகிகளும் வைகுண்ட லோகங்களிலிருந்து வெளிப்படும் அருவமான பிரகாசத்தினுள் நுழைகின்றனர். வைகுண்ட லோகங்கள் அனைத்தும் சூரியனைப் போல் சுய ஒளி கொண்டவையாகும். மேலும் அந்த வைகுண்ட லோகங்களின் கதிர்கள் பிரம்மஜோதி என்று அழைக்கப்படுகின்றன. பிரம்மஜோதி எல்லையற்ற பரப்பளவைக் கொண்டதாகும். மேலும் அந்த பிரம்மஜோதியை மறைத்துள்ள ஓர் அற்பமான பகுதியாக இருப்பது ஜடவுலகமாகும். இந்த மறைப்பு தற்காலிகமானதாகும். எனவே, இது ஒரு வகையான மாயையாகும்.

பீஷ்மதேவர் பகவானின் ஒரு தூய பக்தர் என்பதால், பகவான் நித்தியமாக பார்த்தசாரதி உருவில் ஆட்சி செலுத்தும் ஒரு வைகுண்ட லோகத்தை அவர் அடைந்தார். அங்குள்ள முக்தியடைந்த ஜீவராசிகள் எப்பொழுதும் பகவத் தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர். பகவானையும், பக்தரையும் பிணைக்கும் அன்பும், பாசமும் பீஷ்மதேவரின் விஷயத்தில் வெளிப்பட்டன. உன்னதமான பார்த்தசாரதி அம்சத்திலிருந்த பகவானை பீஷ்மதேவர் ஒருபோதும் மறக்கவில்லை. பீஷ்மர் ஜடவுடலை விட்டு ஆன்மீக உலகிற்குச் செல்லும்பொழுது பகவான் நேரடியாக அந்த இடத்தில் இருந்தார். அதுவே வாழ்வின் மிகவுயர்ந்த பூரணத்துவமாகும்.

பதம் 45

तत्र दुन्दुभयो नेदुर्देवमानववादिता: ।
शशंसु: साधवो राज्ञां खात्पेतु: पुष्पवृष्टय: ॥ ४५ ॥
தத்ர துந்துபயோ நேதுர் தேவ-மானவ-வாதிதா:
சசம்ஸு:ஸாதவோ ராஜ்னாம் காத் பே து:புஷ்ப-வருஷ்டய:

தத்ர—அதன் பிறகு; துந்துபய—பேரிகைகள்; நேது:—ஒலிக்கப்பட்டன; தேவ—மற்ற கிரகங்களிலிருந்து வந்த தேவர்கள்; மானவ—எல்லா நாடுகளிலிருந்தும் வந்துள்ள மக்கள்; வாதிதா:—அடிக்கப்பட்டது; சசம்ஸு:—புகழ்ந்தனர்; ஸாதவ:—நேர்மையான; ராக்ஞாம்—அரச வம்சத்தினரால்; காத்—ஆகாயத்திலிருந்து; பேது:—கொட்டத் துவங்கியது; புஷ்ப-வருஷ்டய:—மலர்பொழிவு.

மொழிபெயர்ப்பு

அதன் பிறகு, மனிதர்களும், தேவர்களும் மரியாதைக்காக பேரிகைகளைக் கொட்டினர். நேர்மையுள்ள அரச வம்சத்தினர் மரியாதைக்கும், வணக்கத்திற்கும் சின்னமாக இராணுவ அணிவகுப்புக்களை ஆரம்பித்தனர். வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது.

பொருளுரை

மனிதர்களாலும், தேவர்களாலும் பீஷ்மதேவர் வணங்கப்பட்டார். மனிதர்கள் பூமியிலும், இதையொத்த பூர் மற்றும் புவர் மண்டலங்களிலுள்ள மற்ற கிரகங்களிலும் வாழ்கின்றனர். ஆனால் தேவர்கள் ஸ்வர் அல்லது ஸ்வர்க லோகங்களில் வாழ்கின்றனர். பீஷ்மதேவர் மிகச்சிறந்த வீரரும், பகவானின் பக்தருமாவார் என்பதை அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். பீஷ்மதேவர் ஒரு மனிதராக இருந்தவர் என்றபோதிலும், “மகாஜனம்” (உயர் அதிகாரி) என்ற முறையில் அவர் பிரம்மா, நாரதர் மற்றும் சிவன் ஆகியோருக்குச் சமமான நிலையிலிருந்தார். ஆன்மீக பூரணத்துவத்தை அடைவதால் மட்டுமே மிகச்சிறந்த தேவர்களுக்குச் சமமான தகுதியைப் பெற இயலும். இவ்வாறாக பீஷ்மதேவர் பிரபஞ்சம் முழுவதிலும் அறியப்பட்டவராக இருந்தார். மேலும் அவரது காலத்தில், விண்வெளிக் கப்பல்களை உபயோகிக்கும் பயனற்ற முயற்சிகளுக்குப் பதிலாக, அதிநுட்பமான முறைகளால் வெவ்வேறு கிரகங்களுக்கு இடையிலான பிரயாணம் மேற்கொள்ளப்பட்டது. பீஷ்மதேவரின் மரணத்தைப் பற்றி தொலைவிலுள்ள கிரகங்களுக்கு அறிவிக்கப்பட்டதும், பூமியில் வாழ்பவர்கள் மற்றும் உயர் கிரக வாசிகள் ஆகிய அனைவரும், மறைந்துவிட்ட மகா புருஷருக்கு தகுந்த மரியாதை செலுத்துவதற்காக பூமாரி பொழிந்தனர். ஸ்வர்கத்திலிருந்து பொழியப்பட்ட இந்த மலர்மாரியானது, மிகச்சிறந்த தேவர்களாலும் பீஷ்மதேவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பதற்கான ஓர் அறிகுறியாகும். இதை இறந்து போன ஓருடலுக்குச் செய்யும் அலங்காரத்துடன் நிச்சயமாக ஒப்பிடக்கூடாது. பீஷ்மதேவரின் உடல் ஆன்மீகத் தன்னுணர்வினால் தெய்வீகமாக மாறியிருந்தது. இவ்வாறாக நெருப்பில் வைக்கப்படும் இரும்பு பழுக்கக் காய்ச்சப்படுவதைப் போல், உடலில் பௌதிகத் தன்மைகள் மறைந்து, அது பரிசுத்தமாக்கப்பட்டது. ஆகவே, அவரது பூரண தன்னுணர்வு பெற்றவரின் உடல் பௌதிகமானதாக கருதப்படுவதில்லை. அத்தகைய ஆன்மீக உடல்களுக்காக விசேஷ சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. பீஷ்மதேவரின் அங்கீகாரத்தையும், மரியாதைக்குரிய நிலையையும் செயற்கையான வழிகளில் பின்பற்ற முயலக் கூடாது. எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் பெயரளவேயான ஜயந்தி சடங்கைச் செய்வது இக்காலத்தில் ஒரு நாகரிகமாகிவிட்டது. பௌதிக வாழ்வில் ஒருவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்திருப்பினும், அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களுக்கு ஏற்ப, அத்தகைய ஒரு சாதாரண மனிதனுக்கு ஜயந்தி சடங்கைச் செய்வது, பகவானிடம் செய்யப்படும் ஒரு குற்றமாகும். ஏனெனில் பூமியில் பகவான் தோன்றும் அந்த நாளுக்காக ஜயந்தி ஒதுக்கிவைக்கப்பட்டு உள்ளது. பீஷ்மதேவர் அவரது செயல்களில் இணையற்றவராக இருந்தார். உடலை விட்ட பிறகு ஆன்மீக உலகிற்கு அவர் மாற்றப்பட்டதும் இணையற்றதாகும்.

பதம் 46

तस्य निर्हरणादीनि सम्परेतस्य भार्गव ।
युधिष्ठिर: कारयित्वा मुहूर्तं दु:खितोऽभवत् ॥ ४६ ॥
தஸ்ய நிர்ஹரணா தீனி ஸம்பரேதஸ்ய பார்கவ
யுதிஷ்டிர: காரயித்வா முஹூர்தம் துஹ்கிதோ’பவத்

தஸ்ய—அவரது; நிர்ஹரண:-ஆதீனி—ஈமச் சடங்கு; ஸம்பரேதஸ்ய—இறந்த உடலின்; பார்கவ—பிருகு வம்சத்தவரே; யுதிஷ்டிர:—யுதிஷ்டிர மகாராஜன்; காரயித்வா—அதை நிறைவேற்றியதும்; முஹூர்தம்—நொடி நேரம்; துஹ்கித: அபவத்—துக்கமடைந்தார்.

மொழிபெயர்ப்பு

ஓ பிருகு வம்சத்தவரே (சௌனகர்) பீஷ்மதேவரின் உடலுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தபின், யுதிஷ்டிர மகாராஜன் நொடிநேர துக்கத்திற்கு ஆளானார்.

பொருளுரை

பீஷ்மதேவர் யுதிஷ்டிர மகாராஜனின் மிகச்சிறந்ததொரு குடும்பத்தலைவராகவும் சிறந்த தத்துவவாதியாகவும் இருந்ததுடன், யுதிஷ்டிரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் மற்றும் அவரது தாயாருக்கும் மிகச்சிறந்த நண்பராகவும் இருந்தார். யுதிஷ்டிர மகாராஜனை தலைமையாகக் கொண்ட ஐந்து சகோதரர்களின் தந்தையான பாண்டு மகாராஜன் இறந்துவிட்டதால், பீஷ்மதேவர் பாண்டவர்களிடம் மிகவும் பாசம் கொண்ட பாட்டனாராகவும் மருமகளும், விதவைப் பெண்ணுமான குந்திதேவியின் பாதுகாவலராகவும் இருந்தார். அவர்களை கவனித்துக் கொள்ள யுதிஷ்டிர மகாராஜனின் பெரியப்பனான திருதராஷ்டிர மகாராஜன் இருந்தபோதிலும், அவர் துரியோதனன் முதலான நூறு மகன்களின் மீதுதான் அதிக பாசம் கொண்டிருந்தார். இறுதியாக, தந்தையற்ற ஐந்து சகோதரர்களுக்கு ஹஸ்தினாபுர ராஜ்ஜியத்திலுள்ள நியாயமான உரிமையைப் பறிப்பதற்காக ஒரு மிகப்பெரிய கும்பல் தந்திரமாக உருவாக்கப்பட்டது. பேரரசுகளில் பொதுவாக காணப்படும் மிகப்பெரிய சதித்திட்டம், தீட்டப்பட்டு ஐந்து சகோதரர்களும் வனவாசம் அனுப்பப்பட்டனர். ஆனால் பீஷ்மதேவர் எப்பொழுதும், அவரது இறுதி மூச்சுவரை யுதிஷ்டிர மகாராஜனின் நலனில் அக்கரை கொண்டவராகவும், இரக்கமுள்ள பாட்டனாராகவும், நண்பராகவுமே இருந்தார். யுதிஷ்டிர மகாராஜனை அரியாசனத்தில் கண்ட அவர் மகிழ்ச்சியுடன் உடலைவிட்டார். இல்லையெனில் பாண்டவர்களுடைய தகாத துன்பங்களைக் கண்டு பொறுக்க முடியாத வேதனைகளை அனுபவிப்பதற்கு பதிலாக அவர் எப்பொழுதோ உயிரை விட்டிருப்பார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாண்டு புத்திரர்களின் பாதுகாவலராக இருந்தார். எனவே குருட்சேத்திரப் போர்க்களத்தில் அவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதால் அந்த ஏற்ற சமயத்திற்காக பீஷ்மர் காத்திருந்தார். அவர் ஒரு பகவானின் பக்தர் என்ற முறையில், பகவத் பக்தருக்கு எந்த நேரத்திலும் தோல்வியில்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். பீஷ்மரின் இந்த நல்லாசைகள் அனைத்தையும் யுதிஷ்டிரர் நன்கு அறிந்திருந்தார். எனவே அவர் மிகப்பெரிய பிரிவுத்துயரை அனுபவித்துக் கொண்டு இருக்கவேண்டும். பீஷ்மதேவர் கைவிட்ட அவரது ஜடவுடலுக்காக யுதிஷ்டிரர் வருத்தப்படவில்லை, மாறாக ஒரு மகாத்மாவின் பிரிவுக்காக அவர் வருந்தினார். பீஷ்மதேவர் ஒரு முக்திபெற்ற ஆத்மா என்றபோதிலும், ஈமச்சடங்கு தேவையான ஒரு கடமையாக இருந்தது, பீஷ்மதேவருக்கு சந்ததி இல்லை என்பதால், மூத்த பேரனான யுதிஷ்டிர மகாராஜன்தான் இச்சடங்கை நிறைவேற்றும் உரிமையுள்ளவராவார். பீஷ்மதேவருக்கு நிகரானவரான யுதிஷ்டிர மகாராஜனால் ஈமச்சடங்குகள் நிறைவேற்றப்படுவது பீஷ்மருக்குக் கிடைத்த மிகச்சிறந்த வரமாகும்.

பதம் 47

तुष्टुवुर्मुनयो हृष्टा: कृष्णं तद्गुह्यनामभि: ।
ततस्ते कृष्णहृदया: स्वाश्रमान् प्रययु: पुन: ॥ ४७ ॥
துஷ்டுவுர் முனயோ ஹ்ருஷ்டா: க்ருஷ்ணம் தத்-குஹ்ய-நாமபி:
ததஸ் தே க்ருஷ்ண-ஹ்ருதயா: ஸ்வாஸ்ரமான் ப்ரயயு: புன:

துஷ்டுவு:—திருப்தியடைந்து; முனய:—வியாசரை தலைமையாகக் கொண்ட மாமுனிவர்கள்; ஹ்ருஷ்டா:—அனைவரும் மகிழ்ச்சியோடு; க்ருஷ்ணம்—பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணருக்கு; தத்—அவரது; குஹ்ய—இரகசியமான; நாமபி:—அவரது புனித நாமம் முதலியவைகளால்; தத:—அதன் பிறகு; தே—அவர்கள்; க்ருஷ்ண-ஹ்ருதயா:—தங்களுடைய இதயங்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எப்பொழுதும் தாங்கிக்கொண்டு இருப்பவர்கள்; ஸ்வாஸ்ரமான்—அவரவர் ஆஷ்ரமங்களுக்கு; ப்ரயயு:—திரும்பினர்; புன:—மீண்டும்.

மொழிபெயர்ப்பு

பிறகு மாமுனிவர்கள் அனைவரும் அங்கிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திவ்ய வேத மந்திரங்களால் போற்றிப் புகழ்ந்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தங்களது இதயத்தில் தாங்கியவாறு அவரவர் ஆஷ்ரமங்களுக்குத் திரும்பினர்.

பொருளுரை

பகவானின் இதயத்தில் அவரது பக்தர்கள் எப்பொழுதும் உள்ளனர். அதைப் போலவே பக்தர்களின் இதயத்திலும் பகவான் எப்பொழுதும் இருக்கிறார். அதுவே பகவானுக்கும், அவரது பக்தர்களுக்கும் உள்ள இனிய உறவாகும். பகவானிடமுள்ள தூய அன்பினாலும், பக்தியாலும் தங்களுக்குள் எப்பொழுதும் பகவான் இருப்பதை பக்தர்கள் காண்கின்றனர். பகவானுக்கும், செய்ய வேண்டியதோ அல்லது அடைய வேண்டியதோ ஒன்றுமில்லை என்றபோதிலும், அவரது பக்தர்களின் நலன்களை கவனிப்பதில் அவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். சாதாரண ஜீவராசிகளின் எல்லா செயல்களும், விளைவுகளும் இயற்கை விதிகளால் ஆளப்படுகின்றன. ஆனால் பக்தர்களை சரியான வழியில் செலுத்துவதில் பகவான் எப்பொழுதும் அக்கரை கொண்டவராக இருக்கிறார். எனவே பக்தர்கள் பகவானின் நேரடியான பாதுகாப்பில் இருக்கின்றனர். மேலும் பகவானும் கூட தம்மை அவரது பக்தர்களின் பாதுகாப்பில் மட்டுமே வைத்துக்கொள்கிறார். எனவே, வியாசதேவரை தலைமையாகக் கொண்ட எல்லா முனிவர்களும் பகவானின் பக்தர்கள் என்பதால், ஈமச்சடங்குகளுக்குப் பின், அவர்கள் முன்பிரத்தியட்சமான நின்றிருந்த பகவானை திருப்திப்படுத்துவதற்காக வேத மந்திரங்களை ஓதினர். எல்லா வேத மந்திரங்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதற்காகவே ஓதப்படுகின்றன. இது கீதையில் (15-16) உறுதி செய்யப்பட்டு உள்ளது. எல்லா வேதங்கள், உபநிஷதங்கள், வேதாந்தம் முதலானவை அவரை மட்டுமே தேடிச் செல்கின்றன. எல்லா மந்திரங்களும் அவரைப் புகழ்வதற்காகவே உள்ளன. எனவே, முனிவர்கள் மிகவும் பொருத்தமான காரியத்தைச் செய்தபின் மகிழ்ச்சியுடன் அவரவர் ஆஷ்ரமங்களுக்குத் திரும்பினர்.

பதம் 48

ततो युधिष्ठिरो गत्वा सहकृष्णो गजाह्वयम् ।
पितरं सान्‍त्वयामास गान्धारीं च तपस्विनीम् ॥ ४८ ॥
ததோ யுதிஷ்டிரோ கத்வா ஸஹ-கிருஷ்ணோ கஜாஹ்வயம்
பிதரம் ஸாந்த்வயாம் ஆஸ காந்தாரீம் ச தபஸ்வினீம்

தத:—அதன் பிறகு; யுதிஷ்டிர:—யுதிஷ்டிர மகாராஜன்; கத்வா—அங்கு சென்று; ஸஹ—உடன்; க்ருஷ்ண:—கிருஷ்ணர்; கஜாஹ்வயம்—கஜாஹ்வய ஹஸ்தினாபுரம் எனும் பெயர்கொண்ட தலைநகரில்; பிதரம்—அவரது பெரியப்பனுக்கு (திருதராஷ்டிரர்); ஸாந்த்வயாம் ஆஸ—ஆறுதல் கூறினார்; காந்தாரீம்—திருதராஷ்டிரரின் மனைவிக்கு; ச—மேலும்; தபஸ்வினீம்—தபஸ்வினி.

மொழிபெயர்ப்பு

அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் தொடரப்பட்டவராய், தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றார். அங்கு அவரது பெரியப்பாவுக்கும், தபஸ்வினியாக இருந்த பெரியம்மா காந்தாரிக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

பொருளுரை

துரியோதனனுக்கும் அவனது சகோதரர்களுக்கும் தாய், தந்தையரான, திருதராஷ்டிரரும், காந்தாரியும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு பெரியப்பன், பெரியம்மாவாக இருந்தனர். குருட்சேத்திர யுத்தத்தில் எல்லா மகன்களையும், பேரன்களையும் இழந்துவிட்ட அவ்விருவரும் யுதிஷ்டிர மகாராஜனின் பாதுகாப்பில் இருந்தனர். உயிருக்கு ஏற்பட்ட பெருஞ்சேதத்தை எண்ணி, மரண வேதனையுடன் அவர்கள் நாட்களைக் கழித்தனர். கிட்டத்தட்ட அவர்கள் தபஸ்விகளைப் போலவே வாழ்ந்தனர்.

திருதராஷ்டிரரின் பெரியப்பனான பீஷ்மதேவரின் மரணச் செய்தி அவ்விருவருக்கும் மற்றொரு பேரதிர்ச்சியாக இருந்தது. எனவே யுதிஷ்டிர மகாராஜனின் ஆறுதல் அவர்களுக்கு தேவைப்பட்டது. தமது கடமையை உணர்ந்திருந்த யுதிஷ்டிர மகாராஜன் உடனே ஸ்ரீ கிருஷ்ணருடன் அங்கு விரைந்து சென்று, உறவினர்களைப் பறிகொடுத்த திருதராஷ்டிரரிடம் அன்பான வார்த்தைகளைக் கூறி அவரைத் திருப்திப்படுத்தினார், கிருஷ்ணரும் அவருக்கு ஆறுதுல் கூறினார்.

காந்தாரி விசுவாசமுள்ள மனைவியாகவும், அன்புள்ள தாயாகவும் வாழ்ந்தபோதிலும், அவள் சக்தியுள்ள ஒரு தபஸ்வினியாகவே இருந்தாள். அவளுடைய கணவன் ஒரு குருடராக இருந்ததால், அவள் தன்னிச்சையாகவே தன் கண்களையும் கட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. கணவனை முழுமையாகப் பின்பற்றுவதுதான் மனைவியின் கடமையாகும். காந்தாரி தன் கணவரிடம் மிகவும் உண்மையானவளாக இருந்ததால், அவரது நிலையான குருட்டுத்தன்மையை தானும் பின்பற்றினாள். எனவே செயலில் அவள் சிறந்த தபஸ்வினியாக இருந்தாள். மேலும் அவளது நூறு மகன்களும், அவளது பேரன்களும் கூட மொத்தமாக கொல்லப்பட்டதால், பெண்ணொருத்திக்கு அது நிச்சயமாக பேரிழப்புதான். ஆனால் ஒரு தபஸ்வினியைப் போலவே இவ்வனைத்தையும் அவள் அனுபவித்தாள். காந்தாரி ஒரு பெண் என்றபோதிலும், ஒழுக்கத்தில் அவள் பீஷ்மதேவரை விட சற்றும் குறைந்தவளல்ல. மகாபாரத்தில் அவ்விருவருமே பிரசித்தமானவர்களாவர்.

பதம் 49

पित्रा चानुमतो राजा वासुदेवानुमोदित: ।
चकार राज्यं धर्मेण पितृपैतामहं विभु: ॥ ४९ ॥
பித்ரா சானுமதோ ராஜா வாஸுதேவானுமோதித:
சகார ராஜ்யம் தர்மேண பித்ரு-பைதாமஹம் விபு:

பித்ரா—அவரது பெரியப்பனான திருதராஷ்டிரரால்; ச—மேலும்; அனுமத:—அவரது அனுமதியுடன்; ராஜ—யுதிஷ்டிர மகாராஜன்; வாஸுதேவ-அனுமோதித:—பகவான் ஸ்ரீ கிருஷணரால் உறுதி செய்யப்பட்ட; சகார—நிறைவேற்றினார்; ராஜ்யம்—இராஜ்ஜியத்தை; தர்மேண—அரச நீதியின் சட்டங்களுக்கேற்ப; பித்ரு—தந்தை; பிதாமஹம்—முன்னோர்; விபு—அவ்வளவு சிறப்புள்ள.

மொழிபெயர்ப்பு

இதன்பிறகு, ராஜரிஷியான யுதிஷ்டிர மகாராஜன், அவரது பெரியப்பனின் அனுமதியுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கும், அரச நீதிக்கும் ஏற்ப, உறுதியாக அரசாட்சியை நடத்தி வந்தார்.

பொருளுரை

யுதிஷ்டிர மகாராஜன் வெறும் வரி வசூலிப்பவரக மட்டும் இருக்கவில்லை. அரசனென்ற முறையில் தனது கடமைகளில் அவர் கண்டிப்பாக இருந்தார். இந்த அரச பதவி ஒரு தந்தைக்கு அல்லது ஆன்மீக குருவிற்கு ஈடானதாகும். பிரஜைகளின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள வேண்டியது அரசரின் கடமையாகும். பௌதிக வாழ்வில் பந்தப்பட்டுள்ள ஆத்மாவை விடுவிப்பதற்காகவே மனித வாழ்வு உள்ளது என்பதையும், மக்கள் இவ்வுயர்ந்த பூரணத்துவ நிலையை அடைவதற்கு உதவப்படுகிறார்களா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டியது தன் கடமை என்பதை அரசர் அறிந்திருக்க வேண்டும்.

யுதிஷ்டிர மகாராஜன் இக்கொள்கைளை உறுதியாகப் பின்பற்றினார். அது மட்டுமல்லாமல், அரசியல் விவகாரங்களில் அனுபவம் உள்ளவரான அவரது வயது முதிர்ந்த பெரியப்பனிடமிருந்து இதற்கான அனுமதியையும் பெற்றிருந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அதை உறுதி செய்தார்.

யுதிஷ்டிர மகாராஜன் மிகச்சிறந்த அரசராக இருந்தார். இவரைப் போன்ற ஒரு பயிற்சி பெற்ற அரசரின் கீழுள்ள அரசாட்சி, இக்காலத்து குடியரங்வைிட மிகமிகச் சிறந்ததாகும். குறிப்பாக இக்கலி யுக மக்கள் அனைவருமே சூத்திரர்களாகவே பிறக்கின்றனர். இவர்கள் இழிவான பிறப்புடையவர்களாகவும், கெட்ட பயிற்சி அளிக்கப்பட்டவர்களாகவும், துரதிர்ஷ்டசாலிகளாகவும், தீய சகவாசம் கொண்டவர்களாகவும் உள்ளனர். வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே, இத்தகைய மக்களால் அளிக்கப்படும் வாக்குகளில் எந்த நன்மதிப்பும் இல்லை. இவ்வாறாக இத்தகைய பொறுப்பற்ற வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களால் யுதிஷ்டிர மகாராஜனைப் போல் பொறுப்புள்ள பிரதிநிதிகளாக இருக்க முடியாது.

ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “பீஷ்மதேவரின் மரணம்” எனும் தலைப்பைக் கொண்ட, ஒன்பதாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

• • •

+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question