மாதவன் அவதரித்த மதுரா
பிறப்பற்ற இறைவன் இவ்வுலகிற்கு இறங்கி வரும்போது, அவதாரம் என்று அறியப்படுகிறார். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (மாதவன்) தனது பக்தர்களைக் காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் தற்போதைய டில்லி நகரத்திலிருந்து 150 கிமீ தெற்கிலுள்ள மதுரா நகரில் தோன்றினார். இதனால் மதுரா நகரம் மிகவுயர்ந்த புண்ணிய பூமியாகும்.
கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாத தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார், அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.
3 வருடம், 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில் கழித்த பின், 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத்திற்கு இடம் பெயர்ந்தார்.
10 வருடம் 7 மாத வயதில் சைத்ர மாத தேய்பிறையின் பதினோராவது நாளில் கம்சனின் அழைப்பின் பேரில் மதுரா சென்றார். (கிருஷ்ணரின் திவ்யமான உடல் பத்து வயதைத் தாண்டி மாறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
அன்றிலிருந்து பதினான்காவது நாளில் கம்சனைக் கொன்றார்.
18 வருடங்கள் 4 மாதங்கள் மதுராவில் வசித்த கிருஷ்ணர், 28 வயதில் துவாரகை கோட்டையை நிறுவி அங்கு வசிக்கத் தொடங்கினார்.
கி.மு. 3138, 90 வயதில் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.
96 வருடங்கள் 8 மாதங்கள் துவாரகையில் வசித்த பின்,
கி.மு. 3102, பிப்ரவரி 18ம் நாள், 125 வயதில், பல்குன மாதத்தின் அமாவாசை அன்று இவ்வுலகிலிருந்து புறப்பட்டு, மீண்டும் ஆன்மீக உலகத்திற்குச் சென்றார்.
(ஆதாரம்: ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் அருளிய பாகவத உரை
கிருஷ்ண ஜென்மஸ்தானம்
கிருஷ்ணர் அவதரித்த இடம், கிருஷ்ண ஜென்மஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு முறை கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபன் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் இங்கு கோவில் கட்டினார். அதன் பின்னர் கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த விக்ரமாதித்யரால் மாபெரும் கோவில் எழுப்பப்பட்டது, அதன் அழகை வார்த்தைகளோ ஓவியங்களோ விளக்க இயலாது என்று கூறப்படுகிறது. பின்னர் அது கஜினி முகமதுவினால் இடிக்கப்பட்டது.
கி.பி. 1150ல் மற்றுமொரு கோவில் அங்கு கட்டப்பட்டது. சிகண்தர் லோடியின் காலத்தில் அதுவும் இடிக்கப்பட்டது.
பின்னர் ஜகாங் கீரின் ஆட்சிக் காலத்தில், மன்னர் வீர சிங்க தேவரால் 250 அடி உயரத்தில் மாபெரும் கோவில் கட்டப்பட்டது. ஆனால், 1669ல் ஔரங்கசீப் அதனை இடித்துவிட்டு அங்கு ஒரு மசூதியைக் கட்டினான்.
தற்போதைய கோவிலின் கட்டுமானப் பணி 1951ல் தொடங்கி, 1958ல் ராதா கிருஷ்ண விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்து திறக்கப்பட்டது.
கோவிலுக்கு அருகில் சிறைச் சாலையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் அறையில்தான் கிருஷ்ணர் அவதரித்ததாக சிலரும், பின்புறம் இருக்கும் வேறொரு இடத்தில்தான் அவர் அவதரித்தாக வேறு சிலரும் கூறுகின்றனர்.
இதர இடங்கள்
யமுனைக் கரையிலுள்ள விஸ்ரம காட் என்னும் படித்துறையில்தான் கம்சனைக் கொன்ற பின் கிருஷ்ணர் ஓய்வெடுத்தார். ஹிரண்யாக்சனைக் கொன்ற வராஹரும் இங்குதான் ஒய்வெடுத்தார். கம்ச-திலா எனப்படும் குன்றில்தான் கிருஷ்ணர் கம்சனைக் கொன்றார், அதற்குப் பின்புறம் இருக்கும் இடத்தில்தான் உக்ரசேனரை மதுராவின் மன்னராக நியமித்தார். மல்யுத்த வீரர்களுடன் சண்டையிட்ட இடமும், கம்சன் வழிபட்ட சிவலிங்கமும் அதனருகில் உள்ளன.
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா