ஒருமுறை மருத்துவப் பணிக்காக வெளியூர் செல்ல நேர்ந்தபோது, முகுந்த தாசர் தனது சிறு வயது மகன் ரகுநந்தனனிடம், தங்கள் வீட்டு விக்ரஹமான கோபிநாதருக்கு ‘ராஜபோக’ நைவேத்தியம் செய்யுமாறு கூறினார். ரகுநந்தனன் அனைத்தையும் சரியான நேரத்தில், கவனத்துடனும் மிகுந்த பக்தியுடனும் தயார் செய்தான். நைவேத்தியம் செய்யும்போது, “பகவான் சாப்பிடுவதை உறுதி செய்” என்ற தன் தந்தையின் கட்டளையை அவன் நினைவுகூர்ந்தான். மணியடித்துக்கொண்டே, அந்த கபடமற்ற சிறுவன் கோபிநாதரிடம், “சாப்பிடு, சாப்பிடு!” என்று கூறினான். தட்டில் வைக்கப்பட்ட உணவு அப்படியே இருப்பதைப் பார்த்து ரகுநந்தனன் அழத் தொடங்கினான். “பகவானை சாப்பிட வைக்க” முடியாததால், தன் தந்தையின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்று அவன் பயந்தான். சிறுவனின் தீவிர பக்தியை கோபிநாதரால் மறுக்க முடியவில்லை. எனவே பகவான் தட்டிலிருந்த அனைத்தையும் சாப்பிட்டுவிட்டார்; எதுவும் மிச்சம் வைக்கவில்லை.
திரும்பி வந்ததும், முகுந்தர் கோபிநாதரின் மகா பிரசாதத்தைக் கேட்டார். பகவான் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டதாக ரகுநந்தன் கூறினான். ஆச்சரியமடைந்த முகுந்தர், தன் மகனிடம் மீண்டும் நைவேத்தியம் செய்யுமாறு கூறினார். மறைவான இடத்திலிருந்து முகுந்தர் மிகுந்த வியப்புடன், ரகுநந்தனன் கோபிநாதருக்கு லட்டு கொடுப்பதைப் பார்த்தார். ஆனால் பகவான் ஒரு லட்டுவில் பாதியை மட்டுமே சாப்பிட்டார். மதிய உணவை சாப்பிட்டதால் வயிறு நிறைந்திருந்த காரணத்தினால், பகவான் பாதியை மட்டுமே எடுத்துக்கொண்டார் என்பதை முகுந்தர் புரிந்து கொண்டார். தனது தூய பக்தனான மகனைப் பாராட்டி, தெய்வீக உணர்ச்சி பொங்க, முகுந்தர் ரகுநந்தனனை அணைத்துக் கொண்டார்.
பின்னர் ஜெகன்நாத புரியில், ஸ்ரீ கௌராங்கப் பெருமான் முகுந்த தாசரிடம் அன்புடன், “யார் தந்தை, யார் மகன்?” என்று கேட்டார்.
அதற்கு முகுந்தர், “ரகுநந்தனன் தான் நிச்சயமாக என் தந்தை. ஏனென்றால் அவரே எனக்கு கிருஷ்ண பக்தியை அளித்து, தூய கிருஷ்ண உணர்வை எனக்குக் காட்டியுள்ளார்,” என்று பதிலளித்தார். கிருஷ்ண லீலையில், ரகுநந்தனன் ‘கந்தர்ப்ப மஞ்சரி’ அல்லது ‘பிரத்யும்னன்’ (சதுர் வியூகத்தில் உள்ளவர்) ஆவார். இவரது சமாதி ’64 சமாதிகள்’ பகுதியில் அமைந்துள்ளது.
