Friday, January 3

திருநாமத்தின் மகிமை

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கோலோகத்திலிருந்து வரக்கூடிய ஹரி நாமம்

வழங்கியவர்: தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி

இந்த வாரம். திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால். விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ் நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர். அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள். விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ண மந்த்ர ஹைதே ஹபே ஸம்ஸார மோசன
கிருஷ்ண-நாம ஹைதே பாபே கிருஷ்ணேர சரண

“கிருஷ்ண நாமத்தை உச்சரிப்பதால் பௌதிக வாழ்விலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். உண்மையில், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதால் பகவானின் தாமரைத் திருவடிகளை எளிதாகக் காண இயலும். (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.73)

பகவான் சைதன்யர் வெறுமனே பேரானந்தத்தை அளிக்கக்கூடிய இந்த முறையை நமக்கு வழங்கியுள்ளார். கேவல ஆனந்த கண்ட. மந்திரத்தை உச்சரித்து, பாடி. ஆடும் இந்த வழிமுறையை நமக்கு மஹாபிரபு அளித்துள்ளார். ஹரே கிருஷ்ண மந்திரத்தை எவ்வாறு உச்சரிப்பது. எவ்வாறு நடனமாடுவது. எவ்வாறு உபன்யாசங்களைக் கேட்பது. எவ்வாறு பிரசாதத்தை ஏற்பது முதலிய வழிமுறைகளை வழங்குவதற்காக ஸ்ரீல பிரபுபாதர் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றார்.

பாவங்களை விரட்டும் ஹரி நாமம்

ஸ்கந்த புராணத்தில் ஒரு மேற்கோள் உள்ளது. அதன்படி, நாம் “ஹரி” என்னும் இரண்டெழுத்தை உச்சரிக்கும்போது, நம்முடைய அனைத்து துன்பங்களையும். அனைத்து குப்பைகளையும், கெட்ட கர்மாக்கள் அனைத்தையும். பகவான் ஹரி நம்மிடமிருந்து களவாடிச் சென்று விடுவார். ஹரி, ஹரி, கௌர ஹரி. கௌர ஹரி. இந்தத் திருநாமங்களை உச்சரிப்பதால், நாம் கிருஷ்ண பிரேமையைப் பெறுகின்றோம். இவ்வாறு திருநாமங்களை உச்சரிக்கும் முறை எல்லா புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பகவான் சைதன்ய மஹாபிரபு மற்றும் நித்யானந்த பிரபுவினால் பிரச்சாரம் செய்யப்பட்டது. எனவே, அவர்கள் மிகமிக கருணை வாய்ந்தவர்கள். பரம கருண பஹு துஇ ஜனா நிதாய் கௌரசந்த்ர. அவர்கள் அதிக கருணை வாய்ந்தவர்கள். அவர்கள் சாக்ஷாத் பகவான்! கிருஷ்ணர் மற்றும் பலராமரின் அவதாரங்கள்! அவர்கள் தங்களது கருணையை வாரி வழங்குகிறார்கள்.

நாம் தீய செயல்களான. சூதாட்டம், மாமிச உணவு, போதைப் பழக்கம். தகாத பாலுறவு ஆகியவற்றைக் கைவிட்டு திருநாமத்தைக் கூற வேண்டும். நாம் தகாத உடலுறவை எதிர்க்கின்றோம். ஆனால் குடும்ப வாழ்க்கையை ஊக்கப்படுத்துகின்றோம். ஸ்ரீல பிரபுபாதர் அருந்ததி மாதாஜிக்கு எழுதிய ஒரு கடிதத்தில். “இந்த குழந்தைகள் கிருஷ்ணரால் அனுப்பப்பட்டவர்கள். இவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவதில் நாம் அதிர்ஷ்டம் உடையவர்களாகின்றோம். இவர்கள் உண்மையில் வைகுண்ட குழந்தைகள்,’ என்று கூறியுள்ளார். பிரம்மசாரிகளும் சந்நியாசிகளுமாகிய நாங்கள் குழந்தைகளுக்கு உதவ முடியாது. எனவே, பிரபுபாதர் குழந்தைகளால் குழப்பமடைய வேண்டாம் என்றும். குழந்தைகளை கவனித்தல் ஒரு முக்கிய சேவை என்றும் கூறியுள்ளார். உங்கள் குழந்தையை கவனித்துக்கொள்ள நேரம் இல்லாவிடில், நீங்கள் உங்களுடைய பூஜாரி சேவையை விட்டு விடுங்கள் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் எழுதியுள்ளார். பெண்கள் தங்களது குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இது பக்தர்களை உண்டாக்குவதற்கான ஓர் அருமையான வழி. ஒரு விதத்தில் பார்க்கும்போது, இஃது அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இஃது ஒன்றும் சுலபமான சேவை அல்ல. அவர்கள் கிருஷ்ணருக்கு சாதகமாக அவர்களை மாற்ற வேண்டும்.

அனைவரையும் மாற்றும் ஹரி நாமம்

நாம் கிருஷ்ண பக்தியின் ரஸத்தில் மூழ்க வேண்டும். அதற்காக இந்த யுக தர்மமான திருநாமங்களை உச்சாடனம் செய்கின்றோம். நாம் கிருஷ்ண உணர்வில் மூழ்கி. ஹரே கிருஷ்ண என்று ஜபம் செய்கின்றோம். நிதாய், கௌரசந்திரர் ஆகிய இருவரைப் போன்ற கருணையுள்ள அன்பான நபர்களை இந்த மூவுலகிலும் நீங்கள் காண முடியாது. கருணையினால். மிருகங்களும் ஜபிக்கின்றன. கற்களும் உருகுகின்றன. இவை உண்மையாக நடைபெற்றவை. மஹாபிரபு காடுகளின் வழியாகச் சென்றபோது, விலங்குகளையும் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடுத்தினார்: அலர்நாத் கோயிலில் அவர் கல்லையும் உருக வைத்தார். “பகவான் சைதன்யர் மிருகங்களை கீர்த்தனம் செய்ய வைத்தார். நீங்கள் குறைந்தது மனிதர்களையாவது கீர்த்தனம் செய்ய வையுங்கள்.” என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்.

களங்கங்களுக்கு அப்பாற்பட்ட ஹரி நாமம்

இது “திருநாம் வாரம்.” ஒவ்வொருவரும் பகவானின் நாமத்தைப் பாடி ஆடி ஆனந்த வெள்ளத் தில் மூழ்க வேண்டும். இந்த கலி யுகம் கடலளவு தோஷங்கள் நிறைந்தது என்று சுகதேவ கோஸ்வாமி கூறுகின்றார். இது நம்மூர் இட்லி, தோசை அல்ல. தோஷம் என்றால் களங்கம் என்று பொருள். கலி யுகம் கடலளவு களங்கங்கள் கொண்ட யுகம்.

கலேர் தோஷ நிதே ராஜன் அஸ்தி ஹ்யேகோ மஹான் குண:
கீர்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய முக்த ஸங்க பரம் வ்ரஜேத்

கடலளவு களங்கங்கள் இருந்தாலும். கலி யுகத்தில் ஒரு நல்ல தன்மை உள்ளது, அஃது என்ன? ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண. கிருஷ்ண கிருஷ்ண. ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம், ஹரே ஹரே. ஒரே ஒரு நல்ல விஷயம், ஒரு நல்ல குணம். நீங்கள் ஜபம் செய்யாவிடில் அதனால் என்ன பயன்? அது நல்லதல்ல. ஒவ்வொருவரும் இந்த திருநாம கீர்த்தனத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த ஜபம், கீர்த்தனம் செய்யும் முறையானது நம்மை மாயையிலிருந்து விடுவிப்பது மட்டுமின்றி, மிகவுயர்ந்த இலக்கிற்கு அழைத்துச் செல்கிறது. எனவே, தயவுசெய்து அனைவரும் தினசரி

ஜபம் செய்யுங்கள். திருநாமத்தை உச்சரிப்பதன் வாயிலாக உங்களது வாழ்வு பூரணத்துவமடையும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.

மிகவும் சக்தி வாய்ந்த ஹரி நாமம்

நீங்கள் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் எந்த நாமத்தையும் ஜபிக்கலாம். நம்முடைய வேதங்களில் ஒரே ஒரு கடவுள்தான் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த பரபிரம்மனுக்கு அளவற்ற நாமங்கள் உள்ளன. எனவே, தயவுசெய்து ஒவ்வொருவரையும் ஜபம் செய்ய வையுங்கள். தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள் இந்துக்களாக உள்ளனர். எனவே, இந்த திருநாம வாரத்தின்போது. ஒவ்வொருவரும் மற்ற அனைவரையும் ஹரே கிருஷ்ண ஜபம் செய்யும்படி கூற வேண்டும். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையின்போது, விஷ்ணு கோயில்கள் மட்டுமின்றி, முருகன். பிள்ளையார், அம்மன், சிவபெருமான் முதலியோரின் கோயில்களுக்கும் சென்று, அங்கும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனத்தில் ஈடுபட்டார். எல்லா கோயில்களிலும் அவர் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்யவே விரும்பினார். நாம் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபட்டால். அந்த தேவர்களும் மகிழ்ச்சியடைவர்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை உச்சரிப்பது தெய்வீகமானது என்று சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஒருமுறை இராமரின் நாமத்தை உச்சரிப்பது ஆயிரம் முறை விஷ்ணுவின் நாமத்தை உச்சரிப்பதற்கு சமம் என்று சிவபெருமான் கூறியுள்ளார். ஒருமுறை கிருஷ்ண நாமத்தை உச்சரித்தால், அது 3,000 விஷ்ணு நாமங்களுக்குச் சமமாகும். பகவான் சைதன்யர் ப்ருஹன் நாரதீய புராணத்திலிருந்து (3.8.126) மேற்கோள் காட்டுவார்:

ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
நாஸ்த்யேவ கதிர் அன்யதா

“சண்டையும் கபடத்தனமும் நிறைந்த இந்த யுகத்தில் விடுதலைக்கான ஒரே வழி பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பதேயாகும். வேறு வழி யில்லை. வேறு வழியில்லை. வேறு வழியில்லை.

மஹாபிரபுவின் கருணையைப் பெறுவோம்

எனவே, ஒவ்வொருவரையும் ஜபம் செய்ய வைத்தல் மிகவும் சக்தியுடையதாகும். அஃது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நம்மால் கணக்கிட முடியாது. மக்கள் ஒருமுறை ஜபித்தாலும் அஃது அவர்களை கிருஷ்ணரின் பாதைக்குக் கொண்டு வருகிறது. ஒருமுறை ஜபித்தவர்களும் மீண்டும் பக்தர்களின் சங்கத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது. நாம் மேன்மேலும் ஜபிக்கும்போது. பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் கருணையைப் பெறுவோம்.

பகவானின் நாமத்தில் சுவையைப் பெறுவதற்கு பஞ்ச தத்துவ மந்திரத்தினை முதலில் உச்சரிக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கௌர பக்த வ்ருந்த.

மஹாபிரபுவும் அவரது சகாக்களும் தங்களைப் பின் பற்றுபவர்களுக்கு கருணையை வழங்குகின்றனர். ஜகாய், மாதாய் முதலிய தீய மனிதர்களும்கூட, நிதாய்-கௌரரின் கருணையைப் பெற முடிந்தது.

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
ஹரேராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.

என்னே கருணை! என்னே கருணை! தயவுசெய்து நிதாய்-கௌரரின் தாமரைத் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.


இக்கட்டுரை தவத்திரு. ஜெயபதாக ஸ்வாமி அவர்களால் செப்டம்பர் 12, 2011 அன்று சென்னையில் வழங்கப்பட்ட உபன்யாசமாகும்.

தவத்திரு. ஜெயபதாக ஸ்வாமி அவர்கள், ஸ்ரீல பிரபுபாதரின் மூத்த சந்நியாசி சீடராவார். இவர் இஸ்கான் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் நீண்ட காலமாக சேவை புரிந்த வண்ணம், உலகெங்கிலும் மிகவும் பரவலாக பயணம் செய்து கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question