ஒரு விஷயத்தை சிந்திப்பதால் அதில் பற்று உண்டாகிறது. அப்பற்றினால் அதை அனுபவிக்கும் ஆசை உண்டாகிறது. அவ்வாசை நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது. கோபத்தால், மதிமயக்கம் ஏற்படுகிறது. மதிமயக்கத்தால் நினைவு நிலை இழப்பும் உருவாகிறது. இதனால் புத்தி நாசமாக, புத்திநாசத்தால் ஒருவன் முற்றிலும் வீழ்ச்சி அடைகிறான்.
– பகவத்கீதை (2.62-63)
த்யாயதோ விஷயான் பும்ஸ:
ஸங்கஸ் தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத்
க்ரோதோ (அ) பிஜாயதே ரோதாத் பவதி
ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம:
ஸ்ம்ருதி – ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ
புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதி
ஆதாரம்: மஹாபாரதம்
ஒருநாள் பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது காம்யக வனத்தில் ஆஸ்ர மத்தில் திரௌபதியை தனியாக விட்டு விட்டு உணவு தேடி காட்டிற்குள் சென்றனர். அந்த சமயம், சிந்து தேச மன்னனின் மகனான ஜெயத்ரதன், சால்வ மன்னனின் மகளை மணமுடிப்பதற்காக, நன்கு உடை உடுத்தி அந்த காம்யக வனத்தின் வழியாக கடந்து சென்றான்.
அப்போது பாண்டவர்களின் ஆஸ்ரமத்தைக் கண்ட அவன், வழியில் நின்றிருந்த திரௌபதியைக் கண்டு, ரதத்தை நிறுத்தி அருகில் சென்றான். திரௌபதியைக் கண்டு, அவளது அழகில் மனம் பறிகொடுத்த ஜெயத்ரதன், மனதில் காமம் அதிகரித்தது. தவறான சிந்தனைகள் அவனது மனதில் நுழைந்தன.
காமத்தால் மதிமயங்கிய ஜெயத்ரதன், அவனுடைய நண்பன் கோட்டிகனை அழைத்து, “இந்த அழகிய பெண்ணை நான் பெற்றால், எனக்கு வேறு எந்த மணமும் தேவையில்லை. இப்பெண்ணை நான் என்னுடைய நாட்டிற்கு உடனே கொண்டு செல்ல விரும்புகிறேன். அவளிடம் சென்று அவள் யார் என்றும், அவளுடைய கணவன் யார் என்றும் அறிந்து வா” என்று தூது அனுப்பினான்.
ரதத்தில் இருந்து இறங்கிய கோட்டிகன், திரௌபதியை அணுகி தன்னை அறிமுகம் இருந்து செய்து கொண்டு, பின் ஜெயத்ரதனையும், தங்களுடன் வந்திருந்த மற்ற மன்னர்களையும் அடையாளம் காட்டினான்.
ஆனால் திரௌபதியோ பணிவுடன்”கணவனைத் தவிர மற்ற ஆண்களுடன் ஒரு பெண் நேரியாக பேசுவது தவறாகக்கருதப்படுகிறது. ஆனால் நான் தனியாக இருப்பதால் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறேன்” என்று கூறி தான் துருபத மகாராஜாவின் மகள் என்றும், தன்னுடைய கணவர்கள் பஞ்ச பாண்டவர்கள் என்றும், பதில் அளித்து தன்னுடைய கணவன்மார்கள் வரும் வரை காத்திருக்கக் கூறி விட்டு ஆஸ்ரமத்திற்குள் சென்று விட்டாள்.
ஏற்கனவே திரௌபதியின் சுயம்வரத்தில் திரௌபதியை அடைய, முயற்சி செய்து தோல்வியடைந்த மன்னர்களில் ஒருவனான ஜெயத்ரதன், அதன் பின் நடந்த போரில் தோல்வியடைந்தாலும், திரௌபதி மீது கொண்ட ஆசையை விடவில்லை.
எனவே ஒரு முறை திரௌபதியை அடைவதில் தோல்வியுற்று, ஆனால் காமம் மறையாத ஜெயத்ரதன், மதிமயக்கத் திற்கு முற்றிலும் உள்ளாகி தன்னிலை இழந்து நினைவு குழம்பி, “திரௌபதியின் அழகினால் நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். மற்ற பெண்கள் அனைவரும், குரங்குகளை விட பெரிதாக ஒன்றும் தெரியவில்லை” என்று புலம்பினான்.
தன்னுடைய நண்பன் ஜெயத்ரதனின் தடுமாறிய நிலை கண்ட, குரூரபுத்தி உடைய கோட்டிகனும், “பலவந்தமாக திரௌபதியை உன்னுடைய தலைநகருக்கு கொண்டு செல். உன்னை தடுத்து நிறுத்த இங்கே யாரும் இல்லை” என்று தவறான வழியில் செல்ல மேலும் தூண்டினான்.
காமத்தாலும், நண்பனின் துர்போதனையாலும் முற்றிலும் புத்தி நாசமான ஜெயத்ரதன், பாண்டவர்களின் ஆஸ்ரமத்திற்குள் திரௌபதியை அணுகினான்.
ஜெயத்ரதனின் நிலை அறியாத திரௌபதி, அவனுயை கேள்விகளுக்கு பதில் அளித்தவாறு மரியாதையுடன் பாதம் கழுவ நீரும் அளித்தாள். ஆனால் புத்திநாசமான ஜெயத்ரதனோ, திரௌபதியை புகழ்ந்து தன்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டான். “உன்னுடைய கணவர்கள் இந்த பரிதாபமான நிலையில் உன்னை இந்தக்காட்டில் வைத்துள்ளனர். உன்னுடைய புத்தியை பயன்படுத்தி என்னுடன் வா. வளமான வாழ்க்கை வாழலாம்” என்று பிதற்றலானான்.
இதைக்கேட்ட திரௌபதியின் முகம் கோபத்தால் சிவந்தது. ஜெயத்ரதனிடம் இருந்து பின்வாங்கிய திரௌபதி, இவ்வாறு பேச அவனுக்கு வெட்கமாக இல்லையா? என்று வினவினாள். மேலும், “உனக்கே நீ தோண்டியுள்ள புதை குழியிலிருந்து, யாரும் உன்னை கைகொடுத்து தூக்கி விட இயலாது. உன்னுடைய கரங்கள் என்மீது பட்டால், நீ முற்றிலும் அழிவாய்” என்று எச்சரித்தாள்.
ஆனால் புத்திநாசமான ஜெயத்ரதனோ, மறுபடி மறுபடி திரௌபதியை தன்னுடன் வருமாறு, வற்புறுத்தினான். ஜெயத்ரதன் தன்னை எடுத்துச் செல்லப் போகிறான் என்பதை அறிந்த திரௌபதி, “களங்கமடைந்த கரங்களால் என்னைத் தொடாதே” என்று கூறி, தனக்கு உதவியாக ஆஸ்ரமத்தில் இருந்த தௌம்யரை உதவிக்கு அழைத்தாள்.
ஆனால் ஜெயத்ரதனோ அவளுடைய மேலாடையை பற்றிஇழுக்க, திரௌபதியோ அவனை பின்தள்ள, அதனால் கோபம் அடைந்த ஜெயத்ரதனோ, பலவந்தமாக திரௌ பதியை பிடித்து இழுத்து ரதத்திற்கு இழுத்துச் சென்றான்.
அப்போது அங்கு வந்த தௌம்யர், ஜெயத்ரதனிடம், “மன்னா! போரில் பாண்டவர்களை வென்ற பின், இப் பெண்ணை கொண்டு செல்லும் க்ஷத்ரிய தர்மத்தை ஏன் நீ பின்பற்றக் கூடாது? நிச்சயம் இதன் பின் விளைவுகளை நீ சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.
ஆனால் முற்றிலும் நாசப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜெயத்ரதனோ இதைப் பற்றி எதுவும் கவலைப்படாது, திரௌபதியை தேரில் ஏற்றி அங்கிருந்து நீங்கினான். தௌம்யரோ, அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
இந்நிலையில் உணவு தேடிச் சென்ற பாண்டவர்கள், மீண்டும் ஒன்று கூடி ஆஸ்ரமத்திற்கு திரும்பலாயினர். பறவைகளும் விலங்குகளும் அங்கும் இங்கும் சிதறி ஓடுவதைக் கண்ட யுதிஷ்டிரர், “யாரோ அந்நியர் கள், இக்காட்டினுள் நுழைந்துள்ளனர். விரைவாக ஆஸ்ரமம் திரும்ப வேண்டும்” என்று கூறி விரைவாகத் திரும்பினர்.
பாண்டவர்கள் தங்களுடைய குடிலை அடைந்த போது, அவர்களுடைய பணிப்பெண் தாத்ரேயிக்கா அழுது கொண்டு நிற்பதைக் கண்டனர். அவளை சாந்தப்படுத்திக்கேட்ட போது, ஜெயத்ரதனால் திரௌபதி எடுத்துச் செல்லப்படுவதைக் கூறினாள். அவன் வெகு தூரம் சென்றிருக்க முடியாது. ஆயுதங்களை எடுத்துக் கொண்டு உடனே அவனை தொடர்வீர்களாக என்று அவள் கூறினாள்.
அதைக் கேட்ட யுதிஷ்டிரர், பணிப்பெண்ணை அவளுடைய இடத்திற்குச்செல்லும்படி கூறிவிட்டு, அவள் காட்டிய பாதையில், வில்லை நாதம் செய்து கொண்டு அனைத்துப் பாண்டவர்களுடன் ஜெயத்ரதனை பின்பற்றி னார். விரைவில் ஜெயத்ரதன் படையை நெருங்கினர்.
ஜெயத்ரதனின் தேரில் திரெளபதியை கண்ட அவர்கள் கோபம் பெருக, “ஓ வெறுக்கத்தக்க மன்னனே! நின்று போர் செய்வாயாக” என்று ஜெயத்ரதனுக்கு சவால் விட்ட னர்.
அடுத்து தொடர்ந்த போரில், ஜெயத்ரதனின் நண்பன் கோட்டிகன் கொல்லப்பட்டான், மற்றும் நூற்றுக்கணக் கான வீரர்களும் கொல்லப்பட்டனர். திரௌபதியை கண்ட யுதிஷ்டிரர், அவளை மீட்டு, தௌம்யருடன் சகாதேவரின் ரதத்தில், அமர வைத்தார். பீமனால் அவனுடைய வீரர்கள் அனைவரும் கொல்லப்படுவதை கண்ட ஜெயத்ரதன் வேகமாக போர்க்களத்திலிருந்து பயந்து ஓட ஆரம்பித்தான்.
பீமனோ மற்றவர்கள் அனைவரையும் ஆஸ்ரமத்திற்கு திரும்பக் கூறி, தான் மட்டும் ஜெயத்ரனை வென்று இழுத்து வருவதாகக் கூறிச் சென்றான்.
இதைக்கேட்ட கருணைஉள்ளம் கொண்ட யுதிஷ்டிரரோ, ஜெயத்ரதன் துரியோதனனின் சகோதரியான துச்சலையின் கணவன் என்பதால், அவனைக் கொன்றால், காந்தாரிக்கு கடுந்துன்பம் ஏற்படும் என்று கூறி ஜெயத்ரதனை கொன்று விடாமல், இழுத்து வருமாறு கூறினார். திரௌபதியோ, அடுத்தவன் மனைவியை பலவந்தமாகக் கடத்தியவன், கருணை வேண்டி நின்றாலும், மன்னிக்கப் படக் கூடாது , ஆனால் கொல்லப்படவே வேண்டும் என்று பீமனிடமும், அர்ஜூனனிடமும் கூறினாள்.
பின், பீமனும், அர்ஜூனனும் ஜெயத்ரதன் தப்பி ஓடிய பாதையில் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். ஜெயத்ரதன் பார்வையில் பட்டவுடன் தொலைவில் இருந்தே, அர்ஜூனன் அவனுடைய தேர் குதிரைகளைக் கொன்றான். தேர் செயல் இழந்த நிலையில், பயத்தால் நடுங்கிய ஜெயத்ரதன், வெறுங்காலுடன் ஓடபீமனும் அர்ஜூனனும், அவன் பின்னே ஓடினர். அர்ஜூனன் அவனை நின்று போரிடுமாறு கூறியும், பயத்தால் ஜெயத்ரதன் பெரும் வேகத்துடன் தொடர்ந்து ஓட ஆரம்பித்தான்.
இறுதியில் பீமன், ஜெயத்ரதனை பிடித்தான். அவன் முடியைப் பற்றி இழுத்து, அவனுடைய தலையை தரையில் மோதினான் பீமன். ஜெயத்ரதன் நினைவிழக்கும் வரையிலும் பீமன் அவனை தண்டித்தான். மீண்டும் நினைவு பெற்ற ஜெயத்ரதன் எழுந்து நிற்க முயல, பீமன் மறுபடியும் அவன் தலையில் உதைத்தான். அவனுடைய மார்பில் முட்டியை வைத்து அழுத்தி, தன்னுடைய முஷ்டி யால் அவனை மறுபடி குத்தி நினைவிழக்கச் செய்தான்.
அர்ஜூனன், பீமனுக்கு யுதிஷ்டிரர் இட்ட கட்டளையை நினைவுபடுத்தி ஜெயத்ரதனை மேலும் துன்புறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினான்.
விரக்தியுடன் பீமன், “யுதிஷ்டிரரின் பெருக்கெடுத்தோடு கருணையையும், உன்னுடைய குழந்தைத் தனமான தர்மத்தையும் நான் நிறைவேற்ற வேண்டி உள்ளதே என்று கூறினான்.
அதன்பின் பீமன், தன்னுடைய அம்பை எடுத்து ஜெயத்ரதனின் தலைமுடி அனைத்தையும் மழித்து, பார்க்கச் சகிக்காத வகையில் ஐந்தாறு இடங்களில் சிறுசிறு குடுமிகளை விட்டான். இவ்வாறு முற்றிலும் சீரழிந்த நிலையில் இருந்த ஜெயத்ரதனிடம், “நீ உயிருடன் இருக்க வேண்டுமானால், இப்போதே யுதிஷ்டிரரிடம் சென்று, உன்னை அவருடைய அடிமையாக பிரகடனப்படுத்து” என்று கூறினான்.
அதற்கு ஒப்புக் கொண்ட ஜெயத்ரதனை, சங்கிலியால் கட்டி, ரதத்தில் ஏற்றி தாங்கள் தங்கியிருந்த குடிலுக்கு கொண்டு வந்து யுதிஷ்டிரரிடம் ஒப்படைத்தனர். யுதிஷ்டிரரோ, “சகோதரனே! இப்போது நீ ஜெயத்ரதனைவிடுவித்து விடு” என்று ஆணையிட்டார்.
அங்கு வந்த திரௌபதியும் ஜெயத்ரதனை விட்டு விட பீமனை வற்புறுத்தினாள். யுதிஷ்டிரரையும், மற்ற முனிவர்களையும் வணங்கிய ஜெயத்ரதனிடம் யுதிஷ்டிரர், இம்மாதிரி செயல்களில் மறுபடியும் ஈடுபடாதே என்று எச்சரித்தார். கர்வமும், தன்நிலையும் அழிந்த ஜெயத்ரதன், வெட்கத்தால் தலை குனிந்தவாறு அங்கிருந்து நீங்கினான்.
இவ்வரலாறு, ‘ஒரு விஷயத்தை ஒருவன் பார்ப்பதால் சிந்தனை உருவாகிறது. அதை மறுபடி, மறுபடி சிந்திப்ப தால் அதில் பற்று உண்டாகிறது. அப்பற்றினால் அதை அனுபவிக்கும் ஆசை உண்டாகிறது. அவ்வாசை நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது. கோபத்தால், மதி மயக்கம் ஏற்படுகிறது. மதி மயக்கத்தால் நினைவு நிலை இழப்பும் உருவாகிறது. இதனால் புத்தி நாசமாக, புத்தி நாசத்தால் ஒருவன் முற்றிலும் வீழ்ச்சி அடைகிறான்” என்று பகவத்கீதை 2.62-63ம் பதங்கள் கூறுவதை உறுதிப் படுத்துகிறது.
முதலில் திரௌபதியைக் கண்ட ஜெயத்ரதன், அவள் மீது பற்று உண்டாக, அப்பற்றினால் அவளை அடையும் ஆசையும் அடைந்தான். அவ்வாசைக்கு ஒத்துக் கொள்ளாத திரௌபதி மீது கோபம் கொண்ட ஜெயத்ரதன், பலவந்தமாக அவளை அடைய விரும்பினான். பெரும் காமத்தால், மனம் மயக்கம் அடைய அம்மயக்கத்தினால் தான் செய்யும் செயல்களின் நினைவு தடுமாற, க்ஷத்ரிய தர்மத்தை மீறி, தனியாக இருக்கும் மற்றொருவரின் மனைவியை திருடன் போன்று கவர்ந்து செல்ல முயற்சி செய்தான்.
இந்நிலையில், இச்செயலால் தனக்கு வர இருக்கும் கடுந்துன்பங்களை திரௌபதியும், தௌம்யரும், எச்சரித்தும், தன் புத்தியை முற்றிலும் இழந்த அவன், தான் விரும்பியபடியே திரெளதியை கடத்திச் சென்றான்.
ஆனால் முன்பே எச்சரிக்கப்பட்டபடி, ஜெயத்ரதனோ தன்னுடைய நிலை அழிந்து, கர்வமும் முற்றிலும் அழிந்து பீமனால் முற்றிலும் கேவலப்படுத்தப்பட்டு, யுதிஷ்டிரரின் அடிமையாக்கப்பட்டு வீழ்ச்சி அடைந்தான்.
ஆகையால் ஒருவன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சி அடைவதை தவிர்க்க, ஆரம்ப நிலையிலேயே ஒருவன் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதாவது வேண்டாத விஷயங்களை பார்ப்பதையோ, சிந்திப்பதையோ தவிர்க்க வேண்டும். நிலைதடுமாறிய பின், மீள்வது கடினம்.