கிருத்ஸமதர்: இவர் ஸ்வர்க லோகங்களைச் சேர்ந்த முனிவர்களுள் ஒருவராவார். அவர்
ஸ்வர்க ராஜனான இந்திரனின் நெருங்கிய நண்பரும், பிருஹஸ்பதிக்கு ஈடான
சிறப்புடையவருமாவார். அவர் யுதிஷ்டிர மகாராஜனின் ராஜசபைக்குச் செல்வது வழக்கம்.
மேலும் பீஷ்மதேவர் உயிரைவிட்ட இடத்திற்கும் அவர் சென்று வந்தார். சில சமயங்களில்
அவர் சிவபெருமானின் பெருமைகளை யுதிஷ்டிர மகாராஜனுக்கு விளக்கினார்.
விதஹவ்யரின் மகனான அவர் இந்திரனையொத்த தேக அம்சங்களைக் கொண்டிருந்தார்.
சில சமயங்களில் இந்திரனின் எதிரிகள் அவரை இந்திரனென்று எண்ணி கைது செய்தனர்.
அவர் ரிக் வேதத்தில் மிகுந்த புலமை பெற்றவராவார். இதனால் பிராமண சமூகத்தால் அவர்
மிகவும் மதிக்கப்பட்டார். பிரம்மச்சாரிய வாழ்வை மேற்கொண்ட அவர் எல்லா விதத்திலும்
சக்தி வாய்ந்தவராக இருந்தார்.
அஸிதர்: இதே பெயரைக் கொண்ட ஓர் அரசரும் இருந்தார். ஆனால் இங்கு குறிப்பிடப்படும்
அஸிதர், அக்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த முனிவரான அஸித தேவலோக ரிஷியாவார்,
மகாபாரதத்திலிருந்து 15,00,000 சுலோகங்களை அவர் தமது தந்தைக்கு விளக்கிக் கூறினார்.
ஜனமேஜய மகாராஜனின் பாம்பு யாகத்தில் பங்கேற்றவர்களுள் அவரும் ஒருவராவார்.
யுதிஷ்டிர மகாராஜனின் முடிசூட்டு விழாவின் போது மற்ற சிறந்த ரிஷிகளுடன் அவரும்
அங்கிருந்தார். அஞ்சன மலையில் இருந்த யுதிஷ்டிர மகாராஜனுக்கு அவர் உபதேசங்களை
வழங்கினார். மேலும் அவர் சிவபெருமானின் பக்தர்களுள் ஒருவராகவும் இருந்தார்.