Tuesday, April 30

நரசிம்ம சதுர்தசி -ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை

நரசிம்ம சதுர்தசி என்று அறியப்படும் நரசிம்மர் தோன்றிய நன்னாளில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை நகரில் வழங்கப்பட்ட உபன்யாஸம்.

பகவான் நரசிம்மர் தோன்றிய தினத்தை நரசிம்ம சதுர்தசி என்று அழைப்பர். நரசிம்மருக்கும் ஹிரண்ய கசிபுவிற்கும் இடையில் நடைபெற்ற போர், ஆஸ்திகத்திற்கும் நாஸ்திகத்திற்கும் இடையிலான போராட்டமாகும். இத்தகு போராட்டம் எப்போதுமே உண்டு. ஒருவர் கடவுளிடம் பக்தி கொள்ளத் தொடங்கினால், அதாவது கிருஷ்ண உணர்வுடையவராக மாறினால், அவருக்கு பல எதிரிகள் தோன்றுவர். ஏனெனில், இவ்வுலகம் அசுரர்களால் நிரம்பியுள்ளது.

கிருஷ்ணரையும் கொல்ல முயற்சிப்பர்

பக்தர்கள் மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றிய போதும், அவர் பல அசுரர்களை வதம் செய்ய வேண்டியிருந்தது. கிருஷ்ணரின் தாய் மாமனான கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல நினைத்தான். தனது தங்கை தேவகிக்குப் பிறந்த எல்லா குழந்தைகளையும் அவன் கொன்றான்; ஏனெனில், கிருஷ்ணர் எப்போது வருவார் என்பதை அவன் அறியவில்லை. தேவகியின் எட்டாவது குழந்தையே கம்சனைக் கொல்லும் என்பது அசரீரியின் வாக்கு, இருப்பினும் கம்சன் எல்லாக் குழந்தைகளையும் கொன்றான். ஆனால் கிருஷ்ணரைக் கொல்ல முடியவில்லை. இறுதியில் கிருஷ்ணர் அவனைக் கொன்றுவிட்டார். யாராலும் கிருஷ்ணரைக் கொல்ல முடியாது. அசுரர்களும் நாஸ்திகர்களும் கிருஷ்ணரைக் கொல்ல முயல்கின்றனர். உண்மையில் கடவுள் ஒருபோதும் கொல்லப்படுவதில்லை. மாறாக அசுரர்களே கொல்லப்படுகின்றனர். அதுவே இயற்கையின் நியதி.

மரண வடிவில் இறைவனைக் காணுதல்

பிரகலாதரின் சரிதத்திலிருந்து இதனை நாம் புரிந்து கொள்ளலாம். பகவத் கீதையும் (10.34) இதையே கூறுகிறது. ம்ருத்யு: ஸர்வ-ஹரஷ் சாஹம்: “உம்மிடம் இருக்கும் அனைத்தையும் மரணத்தின் உருவில் தோன்றி பறித்துக் கொள்ளப்போவது நானே” என்று கிருஷ்ணர் அங்கே கூறுகிறார். பௌதிக சொத்துக்களினால் நாம் மிகவும் பெருமைபட்டுக் கொண்டுள்ளோம். ஆனால் கிருஷ்ணர் (மரணத்தின் உருவில்) வரும்போது, அவையனைத்தும் மறைந்துவிடும். பிரகலாதரும் நரசிம்மரைக் கண்டார், அவரது தந்தையான ஹிரண்யகசிபுவும் நரசிம்மரைக் கண்டார். ஆனால் ஒருவர் பக்தியுடன் இறைவனாகக் காண, மற்றவரோ பயத்துடன் மரணமாகக் கண்டார்.

ஹிரண்யகசிபுவும் பிரகலாதரும்

பௌதிகவாதிகளையும் விஞ்ஞானிகளையும் போல ஹிரண்யகசிபு மிகவும் புத்திசாலியாக இருந்தான். தங்களது புத்தியை உபயோகித்து அவர்கள் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். எதற்காக? நீண்ட காலம் வாழ்ந்து மேன்மேலும் புலனுகர்ச்சியில் ஈடுபடலாம் என்பதற்காகவே. இதுவே நாஸ்திக நாகரிகத்தின் முன்னேற்றம் .ஹிரண்யகசிபு ஒரு சிறந்த பௌதிகவாதி. ஹிரண்ய என்றால் தங்கம் என்றும்; கசிபு என்றால் பஞ்சணை என்றும் பொருள்படும். இவ்வாறு ஹிரண்ய கசிபுவைப் போன்ற பௌதிகவாதிகள் தங்கத்தின் மீதும் பாலுறவின் மீதும் மிகுந்த பற்றுடையவர்களாக உள்ளனர். பிரகலாத என்றால், ப்ரக்ருஷ்ட- ரூபேன ஆஹ்லாத. ஆஹ்லாத என்றால் தெய்வீக ஆனந்தம். தெய்வீக ஆனந்தமுடையவர் என்பதே பிரகலாதர் என்பதன் பொருள். அனைத்து உயிர்வாழிகளும் தங்களது உண்மை நிலையில் அத்தகு ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியவர்கள். ஆனால் பௌதிக சங்கத்தினால் நாம் துன்பப்படுகின்றோம்.

சாகாவரம் சாத்தியமா?

சாகாவரம் வேண்டிய ஹிரண்யகசிபு கடுந்தவத்தை மேற்கொண்டான். அவனது தவத்தின் கடுமையான தன்மையினால் பிரபஞ்சமே நடுங்கியது. அவனை சாந்தப்படுத்த பிரம்மதேவர் தோன்றி, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, “சாகாவரம் வேண்டும்” என்றான். நீண்ட ஆயுள் கொண்ட பிரம்மதேவராலும் அவ்வரத்தை அளிக்க முடியவில்லை. பிரம்மதேவரின் ஆயுள் பகவத் கீதையில் (8.17), ஸஹஸ்ர-யுகபர்யந்தம் அர்ஹத் யத் ப்ரஹ்மனோ விது: என்று கூறப்படுகிறது. சத்ய, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்கள் சுமாராக நாற்பத்து மூன்று இலட்சம் வருடங்களாகும். இந்த நாற்பத்து மூன்று இலட்சத்தை ஆயிரத்தால் பெருக்கினால் அதுவே பிரம்மாவின் ஒரு பகல், அதாவது அவரது பன்னிரண்டு மணி நேரம். இவ்வாறு நமது கணக்கில் பல கோடி வருடங்களை தன் வாழ்நாளாக கொண்ட பிரம்மதேவருக்கும் இறப்பு உண்டு. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி து:க-தோஷானு தர்ஷனம் (பகவத் கீதை 13.9). அதாவது, பிரம்ம லோகம் முதல் பாதாள லோகம் வரை எங்கு சென்றாலும், அங்கும் இறப்பு உண்டு. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்குமே முக்கியமான பிரச்சனைகள் என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். ஆனால் ஹிரண்யகசிபு பௌதிகமான வழிகளில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண எண்ணினான். ஆனால் அஃது இயலாத காரியமாயிற்றே.

பக்தன் என்றும் அழிவதில்லை

எப்போதும் அடக்கத்துடன் இருக்கும் பகவானின் நித்திய பக்தர்களுக்கு ஒருபோதும் ஆபத்து இல்லை. பகவத் கீதையில் (9.31) பகவான் கிருஷ்ணர், கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி, “குந்தியின் மகனே, எனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிப்பாயாக,” என்று கூறுகிறார். மேலும், தன்னிடம் சரணடையும் பக்தர்களை எல்லா பாவத்திலிருந்தும் விடுவித்து முக்தியளிப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார். அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச: (பகவத் கீதை 18.66). இவையே பகவானின் உத்திரவாதம். ஆ ன h ல் ஹிரண்யகசிபுவைப் போன்ற நாஸ்திக வாதிகளுக்கு இவை புரிவதில்லை, அவர்கள் எப்போதும் பகவானுக்கு எதிராக சவால் விடுகின்றனர். இங்கு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள சச்சரவு என்னவெனில், மகன் கிருஷ்ணரை நம்பும் ஆஸ்திகன்; தந்தை யோ நாஸ்திகர் என்பதுதான் . இறப்பின் வடிவிலே கடவுள் யார் என்பதை ஹிரண்யகசிபு பார்த்த போது, அவனால் தன்னைக்காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இதுவே ஆஸ்திகவாதிக்கும் நாஸ்திகவாதிக்கும் உள்ள வேறுபாடு. நாஸ்திகர்கள், “கடவுள் எங்கே? கடவுளைக் காட்ட முடியுமா?” என எப்போதும் சவால் விடுகின்றனர். “ஆமாம், கடவுளைப் பார்க்கலாம். ஆனால் தற்போது இல்லை. உங்களுடைய பாவ காரியங்கள் முதிர்ச்சியடைந்ததும், இறக்கும் தருவாயில் நீங்கள் அவரைக் காணலாம்.” இதுவே பிரகலாதரின் இந்த சரிதம் நமக்குப் புகட்டும் போதனை.

மஹாஜனங்களில் ஒருவரான பிரகலாதர்

 பிரகலாதர் நமக்கு குருவாக செயல்படுபவரில் ஒருவர்

.ஸ்வயம்புர் நாரத: ஷம்பு:

கௌமார: கபிலோ மனு:

பிரஹ்லாதோ ஜனகோ பீஷ்மோ

பலிர் வையாஸகிர் வயம்

(ஸ்ரீமத் பாகவதம் 6.3.20)

பிரம்மதேவர், நாரதர், சிவபெரு மான், குமாரர்கள், கபிலர், மனு, பிரகலாதர், ஜனகர், பீஷ்மர், பலி சக்ரவர்த்தி, சுகதேவ கோஸ்வாமி, எம தர்மராஜர் என பன்னிரண்டு மஹாஜனங்கள் உள்ளனர். ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்புவோர் இவர்களைப் பின்பற்றுவது அவசியம் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சாஸ்திரங்களும் பலதரப்பட்ட தத்துவவாதிகளும் இருப்பதால், வாழ்வின் இலக்கை அடைய எந்த வழியை தேர்ந்தெடுப்பது என்பதை நம்மால் சுயமாக அறிந்துகொள்ள முடியாது. இத்தகு சூழ்நிலையில், உண்மையான பாதையை அடைவது எப்படி? மஹாஜனோ யேன கத: ஸ பந்தா, மஹாஜனங்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதே வாழ்வின் இலக்கை அடைவதற்கான வழி என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பிரகலாதர் அத்தகு மஹாஜனங்களில் ஒருவர் என்பதால் அவரைப் பின்பற்றுதல் அவசியம்.

இருண்ட பாழுங்கிணறு

அசுர குலத்தில் தோன்றிய பிரகலாதரிடம், மன்னனான ஹிரண்யகசிபு ஒருமுறை, “நீ கற்றறிந்தவற்றில் சிறந்தவற்றை எனக்குக் கூறுவாயாக” என்று கேட்க, பிரகலாதர் பின்வருமாறு பதிலளித்தார்,

 தத் ஸாது மன்யே (அ)ஸுர-வர்ய தேஹினாம்

ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத்

ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம்

வனம் கதோ யத் தரிம் ஆஸ்ரயேத

“இருண்ட பாழுங்கிணற்றைப் போன்ற தற்காலிக குடும்ப வாழ்வையும் தற்காலிக உடலையும் எவனொருவன் ஏற்றுக் கொண்டுள்ளானோ, அவன் துன்பத்தில் மூழ்குவது உறுதி. அத்தகு நிலையை விட்டுவிட்டு வனத்திற்குச் (விருந்தாவனத்திற்குச்) சென்று முழுமுதற் கடவுளிடம் தஞ்சமடைய வேண்டும். இதுவே சிறந்த வழிமுறை.” (ஸ்ரீமத்பாகவதம் 7.5.5)

கிருஷ்ணரை என்றும் மறவாத பிரகலாதர்

இதைக் கேட்டதும் ஹிரண்ய கசிபுவிற்கு கடுங்கோபம் வந்தது, நாஸ்திகரும் ஆஸ்திகரும் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை. அதே சமயம் ஆஸ்திகர்கள் அடிபணிவதும் இல்லை. அடிபணியாத பிரகலாதர் தனது தந்தையால் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திர ஜெபத்தை அவர் ஒருபோதும் நிறுத்த வில்லை. கிருஷ்ணரை அவர் ஒருபோதும் மறக்கவில்லை . மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் கூட கிருஷ்ணரை மறக்கக்கூடாது என்பதை நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது கிருஷ்ணர் நம்மைப் பாதுகாப்பார்.

 கருணையே உருவான பிரகலாதர்

கிருஷ்ண உணர்வு ஆனந்தமயமானது. ஒருவர் கிருஷ்ண உணர்வைப் பெற்ற பின்னர், இதர இலாபத்தையோ ஆதாயத்தையோ எதிர்பார்ப்பது இல்லை. இது வேண்டும், அது வேண்டும், என்று நாம் ஒன்றன் பின் ஒன்றாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால்கிருஷ்ண உணர்வைப் பெற்றவன் திருப்தியுடன் உள்ளான். என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்று நரசிம்மர் பிரகலாதரிடம் உரைத்தபோது, அவர் தனக்காக எதையுமே வேண்டவில்லை. அதுவே சிறந்த வைஷ்ணவரின் அடையாளம். அவரது தந்தையால் பல தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டபோதிலும், பிரகலாதர், தன் தந்தைக்கு முக்தியளிக்குமாறு நரசிம்மரிடம் வேண்டினார். தனக்காக அவர் எதையும் கேட்கவில்லை. உடனே நரசிம்மதேவர், “உன் தந்தைக்கு மட்டுமின்றி பதினான்கு தலைமுறைக்கும் முக்தியளிக்கிறேன்” என்று உறுதியளித்தார். பிரகலாதரைப் போன்ற ஒரு மகன் அக்குலத்தில் தோன்றியதால் அனைவரும் முக்தி பெற்றனர். இவ்வாறு குடும்பத்திலுள்ள ஒரு மகன் தூய வைஷ்ணவரானால், அவர் பதினான்கு தலைமுறையினரை முக்தி பெறச் செய்கிறார். நம்மால் நமது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பௌதிகமாக என்ன செய்துவிட முடியும்? ஆனால் நாம் பக்தரானால், குடும்பத்திற்கும் நாட்டிற்கும் மட்டுமின்றி, மனித சமுதாயம் முழுவதற்கும் நாம் சிறந்த சேவையை அளிக்க இயலும்.

நீங்களும் கிருஷ்ண பக்தராகலாம்

நமது தத்துவம் இதுவே. எங்களது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இதைத்தான் பிரச்சாரம் செய்கிறது. கிருஷ்ண உணர்வு உள்ளவராகி, வாழ்வைப் பூரணமாக்குங்கள், இந்த வழிமுறை மிகவும் எளிது இதில் இரகசியம் ஏதுமில்லை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம,ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்பதுதான் எங்களது மந்திரம். இஃது இரகசிய மந்திரம் அல்ல. இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபம் செய்வதால் நாம் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளை அடைய முடியும் என்னும் பட்சத்தில், அஃது ஏன் இரகசியமாக வைக்கப்பட வேண்டும்? அஃது அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு பரப்பப்படுமானால் அனைவருமே கிருஷ்ணரை அடைய இயலும். இதில் இரகசியம் ஏதும் இல்லை. நாங்கள் இரகசிய மந்திரத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை.

ஹரேர் நாம ஹரேர் நாம

ஹரேர் நாமைவ கேவலம்

கலௌ நாஸ்த்-யேவ நாஸ்த்-யேவ

நாஸ்த்-யேவ கதிர் அன்யதா

(சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 17.21)

 சண்டையும் சச்சரவுகளும் நிறைந்த இக்கலி யுகத்தில் ஹரி நாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை என்று மூன்று முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. தவம்புரிதல், யாகம் செய்தல், ஆலயவழிபாடு என பல வழிமுறைகள் உள்ளன. இருப்பினும் இக்கலி யுகத்தில் அவை உதவாது என்பதே “வேறு வழியில்லை” என்று மூன்று முறை கூறப்பட்டதன் உட்பொருளாகும். சிறு குழந்தை கூட இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்கலாம். சிறு குழந்தைகள் மட்டுமின்றி வயது முதிர்ந்தவர்களும் எளிதாக பங்கேற்கலாம். பகவானை அறிந் துணர இஃது ஒன்றே மிகச்சிறந்த வழிமுறையாகும். பணமோ, பொருளோ, செலவின்றி, அதே சமயம் இலாபகரமான மிக உயர்ந்த வழிமுறை. இதுவே பிரகலாத மஹாராஜரின் போதனை. இதையே நாங்கள் பின்பற்றுகிறோம். மஹாஜனங் களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மேன்மேலும் கிருஷ்ண பக்தியில் முன்னேறுவோம். நன்றி. ஹரேகிருஷ்ண!

+7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question