Saturday, July 27
இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

15.1

ஸ்ரீ-பகவான் உவாச

ஊத்வா-மூலம் அத:ஷாகம்
அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி
யஸ் தம் வேத ஸ வேத-வித்

மொழிபெயர்ப்பு:-

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: மேல்நோக்கிய வேர்களையும் கீழ்நோக்கிய கிளைகளையும், வேத பதங்களை இலைகளாகவும் கொண்ட ஓர் ஆலமரம் உள்ளது என்று கூறப்படுகின்றது. இம்மரத்தை அறிந்தவன் வேதங்களை அறிந்தவன்.

கருத்து:-

பக்தி யோகத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய பின்னர், “வேதங்களைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று ஒருவர் கேட்கலாம்.  வேதக் கல்வியின் நோக்கம் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே என்று இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகின்றது. எனவே, கிருஷ் உணர்வில், பக்தித் தொண்டில் ஈடபட்டுள்ளவன், ஏற்கனவே வேதங்களை அறிந்தவன்.  ஜடவுலகின் பிணைப்புகள், ஓர் ஆலமரத்திற்கு இங்கே ஒப்பிடப்பட்டுள்ளன. பலன்நோக்குச் செயல்களில் ஈடுபட்டிருப்பவனைப் பொறுத்தவரை, ஆலமரத்திற்கு முடிவே இல்லை. அவன் ஒரு கிளையிலிருந்து மற்ற கிளைக்கும் அதிலிருந்து வேறு ஒன்றுக்கும் என திரிந்து கொண்டுள்ளான். ஜடவுலகம் எனும் இந்த மரம் முடிவற்றது, இந்த மரத்திடம் பற்றுதல் கொண்டவனுக்க முக்தி பெற வாய்ப்பில்லை.  ஒருவனை உயர்த்துவதற்கான வேத மந்திரங்கள், இம்மரத்தின் இலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் வேர்கள் மேல்நோக்கி வளர்கின்றன; ஏனெனில், இவ்வகிலத்தின் மிகவுயர்ந்த கிரகமான, பிரம்மா வசிக்கும் இடத்திலிருந்து அவை தொடங்குகின்றன. மாயையின் இந்த அழிவற்ற மரத்தை ஒருவன் புரிந்து கொண்டால், இதிலிருந்து அவன் வெளியேற முடியும். இந்த பந்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையினை புரிந்து கொள்ளுதல் அவசியம்.  முந்தைய அத்தியாயங்களில் பெளதிக பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான பற்பல வழிமுறைகள் விளக்கப்பட்டன. மேலும், பரம புருஷருக்கான பக்தித் தொண்டே மிகச்சிறந்த வழி என்பதையும் பதிமூன்றாம் அத்தியாயம் வரை நாம் கண்டோம்.  பக்தித் தொண்டின் அடிப்படைக் கொள்கை, ஜடச் செயல்களில் பற்றில்லாமல் இருப்பதும், இறைவனுடைய தெய்வீகத் தொண்டில் பற்றுதல் கொள்வதுமாகும்.  ஜடவுலகின் மீதான பற்றுதலை உடைத்தெறியும் வழிமுறை இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் விவாதிக்கப்படுகின்றது.  ஜட வாழ்வின் வேரானது மேல்நோக்கி வளர்கின்றது.  இந்த வேர், மொத்த ஜட வஸ்துக்களிலிருந்து, அதாவது, பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த கிரகத்திலிருந்து தொடங்குகின்றது என்று பொருள்.  அங்கிருந்து பிரபஞ்சம் முழுவதிலும் விரிவடைகின்றது,   விரிவடையும் கிளைகள் பல்வேறு கிரக அமைப்புகளை குறிக்கின்றன.  அதன் பழங்கள், உயிர்வாழிகளின் செயல்களான, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைக் குறிக்கின்றன.  அடுத்ததாக, கிளைகள் கீழும் வேர் மேலுமாக இருக்கும் மரத்தினுடைய அனுபவம் நமக்கு இந்த உலகில் இல்லை, இருப்பினும் அதுபோன்று ஒன்று உள்ளது. அத்தகு மரத்தினை நீர்த் தேக்கத்தின் அருகில் காண முடியும். கரையிலிருக்கும் மரங்கள், தங்களது கிளைகள் கீழேயும் வேர்கள் மேலேயுமாக நீரில் பிதிபலிப்பதை நம்மால் காண முடியும்,  வேறு விதமாகக் கூறினால், ஜடவுலகம் என்னும் இந்த மரம், ஆன்மீக உலகம் என்னும் உண்மையான மரத்தின் பிரதிபலிப்பாகும்.  மரத்தின் பிம்பம் நீரில் அமைந்திருப்பதைப் போல, ஆன்மீக உலகின் பிம்பம் ஆசையில் அமைந்துள்ளது. பிம்பமான ஜட ஒளியின் மீது விஷயங்கள் அமைந்திருப்பதற்கான காரணம், ஆசையே.  ஜட வாழ்விலிருந்து வெளியேற விரும்புபவன், ஆய்வறிவின் மூலம் இந்த மரத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். அதன் பின்னர், இம்மரத்துடனான உறவை அவனால் துண்டிக்க முடியும்.  உண்மை மரத்தின் பிம்பமான இம்மரம், துல்லியமான நகல் ஆகும். ஆன்மீக உலகில் எல்லாம் இருக்கின்றன.   அருவவாதிகள் இந்த ஜட மரத்தின் மூல வேராக பிரம்மனை எடுத்துக்கொள்கின்றனர். ஸாங்கியத் தத்துவத்தின் படி, அந்த வேரிலிருந்து, பிரக்ருதி, புருஷர், மூன்று குணங்கள், பிறகு பஞ்ச மஹா பூதங்கள், அதன்பின் பத்து புலன்கள் (தஷேந்த்ரிய), மனம் என ஒவ்வொன்றாக வருகின்றன. இவ்வாறு மொத்த ஜடவுலகையும் அவர்கள் இருபத்துநான்கு மூலக்கூறுகளாகப் பிரிக்கின்றனர். எல்லாத் தோற்றங்களுக்கும் பிரம்மனை மையமாக எடுத்துக் கொண்டால், இந்த ஜடவுலகம் அந்த மையத்தின் 180 கோணங்கள் (டிகிரிகள்) கொண்ட தோற்றமே, மீதமுள்ள 180 கோணங்கள் ஆன்மீக உலகமாகும். ஜடவுலகம் ஒரு திரிபடைந்த பிம்பம் என்பதால், இங்குள்ள வேறுபாடுகள் ஆன்மீக உலகிலும் இருக்க வேண்டும்.  ஆனால் அங்கு அவை உண்மையானவை.  ப்ரக்ருதி என்பது முழுமுதற் கடவுளின் வெளிப்புறச் சக்தி, புருஷ என்பது சாக்ஷாத் முழுமுதற் கடவுளே, இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றம் பெளதிகமானது என்பதால், அது தற்காலிகமானதும்கூட.  பிம்பம் என்பது தற்காலிகமானது, ஏனெனில் அது சில சமயங்களில் காணப்படுகிறது, சில சமயங்களில் காணப்படுவதில்லை. ஆனால் எதை அடிப்படையாக வைத்து இந்த பிம்பம் பிரதிபலிக்கப்படுகின்றதோ, அந்த மூலம் நித்தியமானது. உண்மையான மரத்தின் பெளதிக பிம்பம் வெட்டப்பட வேண்டும். வேதங்களை அறிந்தவன் என்று ஒருவனைக் குறிப்பிடும் பொழுது, அவன் இந்த ஜடவுலகின் பற்றுதலை எவ்வாறு துண்டிப்பது என்பதை அறிந்தவன் என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  அந்த வழிமுறையை ஒருவன் அறிந்தால், அவன் உண்மையில் வேதங்களை அறிந்தவன்.  வேதங்களின் சடங்குகளால் கவரப்படுபவன்,  இம்மரத்தின் அழகான பச்சை இலைகளால் கவரப்படுபவனாகின்றான். உண்மையில், அவன் வேதங்களின் குறிக்கோளை சரியாக அறியவில்லை. முழுமுதற் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, வேதங்களின் நோக்கம், பிம்பம் போன்ற இம்மரத்தை வெட்டிச் சாய்த்து ஆன்மீக உலகின் உண்மை மரத்தை அடைவதாகும்.

15.2

பாடல்:-

உரை

அதஷ் சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ் தஸ்ய ஷாகா

குண-ப்ரவ்ருத்தா விஷய-ப்ரவாலா:

அதஷ்ச மூலான்-யனுஸந்ததானி

கர்மானுபந்தீனி மனுஷ்ய-லோகே

மொழிபெயர்ப்பு:-

இம்மரத்தின் கிளைகள், ஜட இயற்கையின் முக்குணங்களால் வளப்படுத்தப்பட்டு, மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் விரிகின்றன.   உபகிளைகள் புலனின்ப விஷயங்களாகும்.  இம்மரத்திலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள், பலன் நோக்குச் செயல்களால் பந்தப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்து:-

ஆலமரத்தைப் பற்றிய வர்ணனை இங்கு மேலும் விவரிக்கப்பட்டுள்ளது. அதன் கிளைகள் எல்லா திக்குகளிலும் பரந்துள்ளன. கீழ்ப் பகுதிகளில், மனிதர்கள், மிருகங்கள், குதிரைகள், பசுக்கள், நாய்கள், பூனைகள் என ஜீவாத்மாக்களின் பலதரப்பட்ட தோற்றங்கள் இருக்கின்றன. இவை கிளைகளின் கீழ்ப்பகுதிகளில் நிலைபெற்றிருக்க, மேற்பகுதிகளிலோ, தேவர்கள், கந்தர்வர்களைப் போன்ற உயர்நிலை ஜீவன்கள் உள்ளனர். மரம் நீரால் வளப்படுத்தப்படுவதுபோல,    இந்த மரம் ஜட இயற்கையின் முக்குணங்களால் வளப்படுத்தப்படுகின்றது.  சில சமயங்களில், ஒரு நிலப்பகுதி மிகவும் பசுமையாக இருப்பதையும், வேறு நிலப்பகுதி போதிய நீரின்றி வறண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்;  அதுபோல எங்கு எத்தகு குணம் அதிக அளவில் உள்ளதோ, அதன் அடிப்படையில் பல்வேறு இனங்கள் தோன்றுகின்றன.  மரத்தின் உபகிளைகள் புலனின்ப விஷயங்களாகக் கருதப்படுகின்றன. இயற்கையின் பல்வேறு குணங்களின் அபிவிருத்திக்கேற்ப நாம் பல்வேறு புலன்களை வளர்த்துக் கொள்கிறோம்,   அப்புலன்களால் நாம் பலதரப்பட்ட புலனின்ப விஷயங்களை அனுபவிக்கின்றோம்.   கிளைகளின் நுனியில், காதுகள், மூக்கு, கண்கள் போன்ற புலன்கள் உள்ளன. அவை பல்வேறு புலனின்ப விஷயங்களை அனுபவிப்பதில் பற்றுக் கொண்டுள்ளன. சப்தம், உருவம், தொடு உணர்வு, போன்ற புலனின்ப விஷயங்கள் உபகிளைகள். உபவேர்கள், பலதரப்பட்ட இன்பத்தினாலும் துன்பத்தினாலும் வரும் விருப்பு வெறுப்பினைக் குறிக்கும்.  பாவ புண்ணியங்களுக்கான நாட்டங்கள், எல்லாத் திக்குகளிலும் பரவி இருக்கும் இந்த உபவேர்களிலிருந்து வளர்வதாகக் கருதப்படுகின்றன. மூல வேர் பிரம்ம லோகத்திலும், மற்ற வேர்கள் மானிட லோகத்திலும் உள்ளன. புண்ணிய செயல்களின் பலன்களை உயர் லோகங்களில் அனுபவித்த பிறகு, ஒருவன் இந்த பூவுலகத்திற்கு இறங்கி வந்து, மீண்டும் தனது கர்மத்தினை (உயர்வு பெறுவதற்கான பலன் நோக்குச் செயல்களை) புதுப்பிக்கின்றான். மானிடர்களின் இந்த உலகம், செயல்களின் களமாகக் கருதப்படுகின்றது.

15.3-4

பாடல்:-

உரை

ரூபம் அஸ்யேஹ ததோபலப்யதே

நான்தோ ந சாதிர் ந ச ஸம்ப்ரதிஷ்டா

அஷ்வத்தம் ஏனம் ஸு-விருட மூலம்

அஸங்க-ஷஸ்த்ரேண த்ருடேன சித்த்வா

தத: பதம் பரிமார்கிதவ்யம்

யஸ்மின் கதா ந நிவர்தந்தி பூய:

தம் ஏவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே

யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ

மொழிபெயர்ப்பு:-

இம்மரத்தின் உண்மை உருவம் இவ்வுலகில் காணப்படக் கூடியதல்ல. இஃது எங்கே முடிகின்றது, எங்கே தொடங்குகின்றது, அல்லது இதன் அஸ்திவாரம் எங்கே இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்கொள்ள முடியாது. ஆனால் பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை பற்றின்மை எனும் ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டிச் சாய்க்க வேண்டும். அதன் பின்னர், எங்கே செல்வதால் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தை நாடி, அங்கே, யாரிடமிருந்து எல்லாம் தொடங்குகின்றதோ, யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகின்றதோ, அந்த பரம புருஷ பகவானிடம் சரணடைய வேண்டும்.

கருத்து:-

இந்த ஆலமரத்தின் உண்மை உருவம், இந்த ஜடவுலகில் புரிந்து கொள்ளப்பட முடியாதது என்று இங்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வேர்கள் மேல்நோக்கி இருப்பதால் உண்மை மரத்தின் விரிவு மறுபக்கத்தில் இருக்கின்றது. ஒருவன் மரத்தின் பெளதிக விரிவுகளால் பிணைக்கப்படும் போது, மரம் எவ்வளவு தூரம் விரிந்துள்ளது என்பதையோ, இதன் ஆரம்பத்தையோ அவனால் காண முடியாது. இருப்பினும் இதன் காரணத்தை அவன் கண்டறிதல் அவசியம்: “நான் எனது தந்தையின் மகன், எனது தந்தை வேறு ஒருவரின் மகன்…” இவ்வாறு தேடுவதன் மூலம் ஒருவன் பிரம்மதேவரை அடைகிறான், அவர் கர்போதகசாயி விஷ்ணுவினால் உருவாக்கப்பட்டவர்.  இவ்வாறாக, இறுதியில் அவன் பரம புருஷ  பகவானை அடைகிறான், இதுவே ஆராய்ச்சியின் முடிவு. இம்மரத்தின் மூலமான முழுமுதற் கடவுளை, அவரது பக்தியில் ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் சங்கத்தில் ஒருவன் ஆய்ந்தறிய வேண்டும். பிறகு, உண்மையின் பொய்யான பிம்பத்திலிருந்து அவன் படிப்படியாக விடுபடுகின்றான், மேலும், ஞானத்தினால் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு, உண்மையான மரத்தில் அவன் உண்மையிலேயே நிலைபெறுகின்றான்.  இவ்விஷயத்தில் அஸங்க என்னும் சொல் மிகவும் முக்கியமானது; ஏனெனில், புலனுகர்ச்சிக்கான பற்றுதலும் ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான நாட்டமும் கிமவும் வலிமையானவை. எனவே, அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக விஞ்ஞானத்தை விவாதித்து, பற்றின்மையை கற்க வேண்டும். மேலும், ஞானத்தில் உண்மையாக வீற்றிருப்பவர்களிடமிருந்து கேட்க வேண்டும். பக்தர்களின் சங்கத்தில் நடைபெறும் இத்தகு விவாதங்களின் விளைவாக, ஒருவன் பரம புருஷ பகவானிடம் வருகின்றான். பின்னர் அவன் செய்ய வேண்டிய முதல் பணி, அவரிடம் சரணடைவதாகும். எங்குச் செல்வதால் இந்த பொய்யான பிம்ப மரத்திற்கு ஒருபோதும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தின் விவரம் இங்கே கொடுக்கபட்டுள்ளது. யாரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ, அந்த நபர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே, அந்த பரம புருஷரின் கருணையைப் பெறுவதற்கு அவரிடம் சரணடைந்தால் போதும். அந்த கருணையே,  ஸ்வரணம், கீர்த்தனம் போன்ற பக்தித் தொண்டினை ஆற்றுவதன் விளைவாகும். ஜடவுலகத்தின் விரிவாக்கத்திற்கு அவரே காரணம். ஏற்கனவே இஃது இறைவனாலேயே விளக்கப்பட்டது.  அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ “நானே எல்லாவற்றிற்கும் மூலம்.” எனவே, பெளதிக வாழ்க்கை என்னும் பலமான ஆலமரத்தின் பந்தத்திலிருந்து வெளியேற, கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்.  கிருஷ்ணரிடம் சரணடைந்த உடனே, இந்த பெளதிக விரிவாக்கத்தின் மீது ஒருவன் தானாகவே பற்றற்றவனாகின்றான்.

15.5

பாடல்:-

உரை

நிர்மான-மோஹா ஜித-ஸங்க-தோஷா

அத்பாத்ம-நித்யா வினிவ்ருத்த-காமா:

த்வந்த்வைர் விமுக்தா: ஸுக-து:க-ஸம்ஞைர்

கச்சந்த்-யமூடா: பதம் அவ்யயம் தத்

மொழிபெயர்ப்பு:-

பொய் கெளரவம், மயக்கம் மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்தைப் புரிந்து கொண்டு, பெளதிக காமத்தை நிறுத்திவிட்டு, இன்ப துன்பம் என்னும் இருமையை ஒழித்து, மயக்கமுறாமல் இருப்பவர்கள், பரம புருஷரிடம் சரணடைவது எவ்வாறு என்பதை அறிந்து, அந்த நித்திய ராஜ்ஜியத்தை அடைகின்றனர்.

கருத்து:-

சரணடையும் முறை இங்கே மிக அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. முதல் தகுதி என்னவெனில், கர்வத்தினால் மயங்காமல் இருக்க வேண்டும். கட்டுண்ணட ஆத்மா, ஜட இயற்கையின் எஜமானனாக தன்னையே எண்ணிக் கொண்டிருப்பதால், பரம புருஷ பகவானிடம் சரணடைவது அவனுக்கு மிகவும் கடினமாக உள்ளது. உண்மை அறிவை விருத்தி செய்து கொள்வதன் மூலம், ஜட இயற்கையின் எஜமானன் தான் அல்ல என்றும், பரம புருஷ பகவானே எஜமானர் என்றும் அவன் அறிய வேண்டும். கர்வத்தினால் உண்டாகும் மயக்கத்திலிருந்து அவன் விடுதலை பெறும்பொழுது, சரணடையும் முறையை தொடங்க முடியும்.  இந்த ஜடவுலகில் ஏதேனும் மரியாதையை எப்போதும் எதிர்பார்க்கும் நபரால் பரம புருஷரிடம் சரணடைய முடியாது. ஒருவன் இவ்வுலகிற்கு வந்து, சில காலம் தங்கி, பின்னர் சென்று விடுகிறான் என்றபோதிலும், அவன் தானே இவ்வுலகின் எஜமானன் என்ற முட்டாள்தனமான எண்ணத்தில் உள்ளான், இந்த அறியாமையே கர்வத்திற்கு காரணமாகும். இவ்வாறு எல்லா விஷயங்களையும் சிக்கலாக்கி, அவன் எப்போதும் தொல்லையிலேயே இருக்கின்றான். முழு உலகமும் இந்த எண்ணத்தின் கீழ் இயங்குகின்றது.  இந்த பூமியினை, நிலத்தினை மனித சமுதாயத்திற்கு உரியது என்று மக்கள் கருதுகின்றனர்,  மேலும் இந்த பொய்யான எண்ணத்தின் கீழ் நிலத்தைப் பாகுபடுத்தி, தங்களையே உரிமையாளர்களாக ஆக்குகின்றனர். இவ்வுலகின் உரிமையாளர் மனித சமுதாயமே என்னும் நோக்கத்திலிருந்து ஒருவன் விடுபட வேண்டும். இத்தகு தவறான நோக்கத்திலிருந்து அவன் விடுபடும்போது, குடும்பப் பற்று, சமூகப் பற்று மற்றும் தேசப் பற்றினால் விளையும் தவறான தொடர்புகளிலிருந்து அவன் விடுதலை பெறுகின்றான்.  இத்தகு தவறான உறவுகள் ஒருவனை இந்த ஜடவுலகில் பிணைக்கின்றன. இவ்வாறு தவறான தொடர்புகளிலிருந்து விடுபட்ட பிறகு, அவன் ஆன்மீக ஞானத்தை வளர்க்க வேண்டும். உண்மையில் தன்னுடையது என்ன, தன்னுடையதல்லாதது என்ன என்ற ஞானத்தை அவன் விருத்தி செய்துகொள்ள வேண்டும். மேலும், அவன் விஷயங்களை உள்ளபடி புரிந்துகொள்ளும்போது, இன்ப துன்பம், சுகம் துக்கம் போன்ற இருமைகள் எல்லாவற்றிலிருந்தும் அவன் விடுதலை பெறுகிறான்,  ஞானத்தில் முழுமை பெறுகின்றான்; அதன் பின் பரம புருஷ பகவானிடம் சரணடைவது அவனுக்குச் சாத்தியமாகிறது.

15.6

பாடல்:-

உரை

தத் பாஸயதே ஸூர்யோ

ந ஷஷாங்கொ ந பாவக:

யத் கத்வா ந நிவர்தந்தே

தத் தாம பரமம் மம

மொழிபெயர்ப்பு:-

எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.

கருத்து:-

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் வாசஸ்தலம் இங்கு விவரிக்கப்படுகின்றது. அந்த ஆன்மீக உலகம், கிருஷ்ண லோகம் என்றும் கோலோக விருந்தாவனம் என்றும் அறியப்படுகின்றது.  ஆன்மீக வானில், சூரிய ஒளி, சந்திர ஒளி, நெருப்பு மற்றும் மின்சாரத்திற்கு அவசியம் இல்லை; ஏனெனில், அங்குள்ள எல்லா கிரகங்களும் சுயமாகவே பிரகாசமுடையவை.  இப்பிரபஞ்சத்தில், சுயமாக பிரகாசிக்கக்கூடிய கிரகமாக, சூரிய கிரகம் மட்டுமே உள்ளது, ஆனால் ஆன்மீக வானிலுள்ள எல்லா கிரகங்களும் சுயமாக பிரகாசிப்பவை. வைகுண்டங்கள் என்று அழைக்கப்படும் அந்த கிரகங்களின் பிரகாசமே பிரம்மஜோதி எனப்படும் பேரொளியாகும். உண்மையில், அந்த ஒளி கிருஷ்ணரின் லோகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து வெளிவருகின்றது. ஒளிரும் அந்த ஜோதியின் ஒரு பகுதி, மஹத் தத்துவத்தினால் (ஜடவுலகினால்) மறைக்கப்பட்டுள்ளது.  இதைத் தவிர, அந்த ஒளிரும் வானத்தின் பெரும்பாலான பகுதி, வைகுண்டங்கள் என்று அழைக்கப்படும் ஆன்மீக கிரகங்களால் நிறைந்துள்ளது. அவற்றில் முதன்மையானது கோலோக விருந்தாவனம். இந்த இருண்ட ஜடவுலகில் இருக்கும் வரை, ஜீவாத்மா கட்டுண்ட வாழ்வில் உள்ளான், ஆனால் இந்த ஜடவுலகின் பொய்யான திரிபடைந்த மரத்தை வெட்டிவிட்டு ஆன்மீக வானத்தை அடைந்தவுடன் அவன் முக்தி பெறுகின்றான்.  பின்னர் அவன் மீண்டும் இங்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. கட்டுண்ட வாழ்வில், உயிர்வாழி தன்னை இந்த ஜடவுலகின் எஜமானனாகக் கருதுகின்றான், ஆனால் முக்திபெற்ற நிலையிலோ அவன் ஆன்மீக ராஜ்ஜியத்தில் நுழைந்து பரம புருஷருடன் உறவு கொள்கின்றான். அங்கே அவன் நித்தியமான ஆனந்தம், நித்தியமான வாழ்வு, மற்றும் நித்தியமான ஞானத்தினை அனுபவிக்கின்றான்.  இத்தகவலை கேட்டு ஒருவன் கவரப்பட வேண்டும். அந்த நித்திய உலக்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ளவும் உண்மையின் இந்த பொய்யான பிம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் அவன் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இந்த ஜடவுலகில் மிகுந்த பற்றுக் கொண்டிருப்பவனுக்கு அந்த பற்றுதலைத் துண்டித்தல் மிகவும் கடினம்; ஆனால் அவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால், படிப்படியாக பற்றின்மையை அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ண உணர்வில் இருக்கும் பக்தர்களுடன் அவன் தொடர்புகொள்ள வேண்டும். கிருஷ்ண உணர்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இயக்கத்தைத் தேடி, பக்தித் தொண்டினை செயலாற்றுவது எவ்வாறு என்பதைக் கற்க வேண்டும்.  இவ்வாறு ஜடவுலகின் மீதான தனது பற்றுதலை அவன் துண்டித்துக்கொள்ள முடியும்.  வெறும் காவி உடையை அணிவதால் ஜடவுலகின் கவர்ச்சியிலிருந்து விடுபட முடியாது.  பகவானின் பக்தித் தொண்டில் பற்றுள்ளவனாக அவன் ஆக வேண்டியது அவசியம். எனவே, பன்னிரண்டாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள பக்தித் தொண்டே உண்மையான மரத்தின் இந்த பொய் பிம்பத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்பதை அறிந்து, ஒருவன் அதனை மிகவும் தீவிரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதர வழிமுறைகள் அனைத்திலும் உள்ள ஜட இயற்கையின் களங்களைப் பற்றி பதினான்காம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டது.  பக்தித் தொண்டு மட்டுமே பூரண தெய்வீகத் தன்மையை உடையதாக அங்கே விளக்கப்பட்டது.  பரமம் மம என்னும் சொற்கள் இங்கே மிகவும் முக்கியமானவை. உண்மையில் ஒவ்வொரு மூலைமுடுக்கும் பரம புருஷருடைய சொத்தாகும், ஆனால் ஆன்மீக உலகம் பரமமானது, ஆறு வைபவங்களைப் பூரணமாகக் கொண்டது. ஆன்மீக உலகில் சூரிய ஒளி, சந்திர ஒளி அல்லது நட்சத்திரங்களின் அவசியம் இல்லை (ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர-தாரகம்) என்று கட உபநிஷத்திலும் (2.2.15) கூறப்பட்டுள்ளது. ஏனெனில், ஆன்மீக வெளி முழுதும் பரம புருஷரின் அந்தரங்க சக்தியினால் பிரகாசப்படுத்தப்பட்டுள்ளது.  சரணடைவதால் மட்டுமே அந்த பரம வாசஸ்தலம் அடையப்படக் கூடியது,  வேறு வழிகளால் அல்ல.

15.7

பாடல்:-

உரை

மமைவாம்ஷோ ஜீவ-லோகே

ஜீவ-பூத: ஸனாதன:

மன:-ஷஷ்டானீந்த்ரியாணி

ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

மொழிபெயர்ப்பு:-

இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர்.  கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.

கருத்து:-

இந்தப் பதத்தில் ஜீவாத்மாவின் அடையாளம் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜீவாத்மா, பரம புருஷரின் நித்தியமான அம்சமாகும். கட்டுண்ட வாழ்வில் அவன் தனித்தன்மையை ஏற்பதோ, பிறகு முக்தி பெற்ற நிலையில் இறைவனுடன் ஒன்றாகி விடுவதோ அல்ல. நித்தியமாக அவன் அம்சமே.  ஸனாதன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வேதக் கருத்தின்படி பரம புருஷ பகவான் எண்ணற்ற ரூபங்களில் தன்னை விரிவுபடுத்தித் தோற்றமளிக்கின்றார். இவற்றில் முதல் நிலை விரிவுகள் “விஷ்ணு தத்துவம்” என்றும், இரண்டாம் நிலை விரிவுகள் “ஜீவ தத்துவம்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.. வேறு விதமாகக் கூறினால், விஷ்ணு தத்துவங்கள் சுய அம்சங்கள் என்றும் ஜீவாத்மாக்கள் பின்ன அம்சங்கள் என்றும் கூறப்படுகின்றனர். பகவான் இராமர், நரசிம்மதேவர், விஷ்ணுமூர்த்தி மற்றும் வைகுண்ட லோகங்களில் வீற்றிருக்கும் எண்ணற்ற உருவில், பகவான் தனது சுய விரிவுகளின் மூலம் தோன்றுகிறார். ஜீவாத்மாக்கள் எனப்படும் பின்ன விரிவுகள், அவரது நித்தியமான தொண்டர்கள். பரம புருஷ பகவானின் சுய விரிவுகள் ஒவ்வொருவருக்கும் எப்போதும் தனித்தன்மை இருக்கின்றது. அதுபோல, பின்ன விரிவுகளான ஜீவாத்மாக்களும் தங்களுக்கென்று தனித்தன்மை உடையவர்களாக இருக்கின்றனர். பரம புருஷரின் அம்சங்கள் என்பதால், ஜீவாத்மாக்கள் அவரின் குணங்களிலும் பங்குடையவர்களாக உள்ளனர். அத்தகு குணங்களில் சுதந்திரமும் ஒன்று.   தனிப்பட்ட ஆத்மா என்ற விததத்தில் ஒவ்வொரு உயிர்வாழியும், தனக்கென்று தனித்தன்மையையும் சிறிதளவு சுதந்திரத்தையும் பெற்றுள்ளனர். இந்த சுதந்திரத்தைத் தவறாக உபயோகிப்பதால் ஒருவன் கட்டுண்ணட ஆத்மாவாக ஆகின்றான், இதே சுதந்திரத்தைச் சரியாக உபயோகிப்பதால் ஒருவன் எப்போதும் முக்தி பெற்ற நிலையில் உள்ளான். இரண்டு நிலைகளிலும் அவன் பரம புருஷரைப் போன்று தன்மையில் நித்தியமானவன். முக்தி பெற்ற நிலையில் அவன் ஜட வாழ்விலிருந்து விடுபட்டு, இறைவனுடைய தெய்வீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளான்; கட்டுண்ட வாழ்வில் அவன் ஜட இயற்கையின் குணங்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, இறைவனுடைய திவ்யமான அன்புத் தொண்டினை மறக்கின்றான். விளைவு, இந்த ஜடவுலகில் தனது வாழ்வை தக்கவைத்துக் கொள்ள அவன் மிகவும் கடினமாகச் சிரமப்பட வேண்டியுள்ளது.  மனிதர்கள், பூனைகள், மற்றும் நாய்கள் மட்டுமல்ல, ஜடவுலகின் மிகப் பெரிய அதிகாரிகளான பிரம்மா, சிவபெருமான், ஏன் விஷ்ணு உட்பட, எல்லா உயிர்வாழிகளும் பரம புருஷ பகவானின் அம்சங்களே. அவர்கள் அனைவரும் நித்தியமானவர்கள், தற்காலிகமான தோற்றங்கள் அல்ல. கர்ஷதி (சிரமப்படுதல், அல்லது கடினமாக உழைத்தல்) என்னும் சொல் மிகவும் முக்கியமானது. இரும்புச் சங்கிலிகளால் விலங்கிடப்பட்டிருப்பது போன்று கட்டுண்ட ஆத்மா பிணைக்கப்பட்டுள்ளான்.  அஹங்காரத்தினால் பந்தப்பட்டுள்ள அவனை இந்த ஜட வாழ்வில் இயங்கச் செய்யும் முக்கிய வஸ்து மனமே. மனம் ஸத்வ குணத்தில் இருக்கும்போது, அவனது செயல்கள் நல்லவையாக உள்ளன; மனம் ரஜோ குணத்தில் இருக்கும்போது, அவனது செயல்கள் தொல்லை கொடுப்பவையாக உள்ளன; மனம் தமோ குணத்தில் இருக்கும்போதோ, அவன் கீழ்நிலை உயிரினங்களுக்கு பிரயாணம் செய்கின்றான்.  அவ்வாறு இருப்பினும், மனதாலும் புலன்களாலும் ஆன ஜடவுலகினால் மறைக்கப்பட்டுள்ள கட்டுண்ட ஆத்மா முக்திபெறும்போது, அவனது ஜடவுடல் அழிவுற்று, ஆன்மீக உடல் அதன் தனிப்பட்ட தகுதிகளுடன் தோன்றுகின்றது என்பது இப்பதத்திலிருந்து தெளிவாகிறது. மாத்யந்திநாயன-ஷ்ருதியில் பின்பரும் தகவல் காணப்படுகின்றது: ஸ வா ஏஷப்ரஹ்ம-நிஷ்ட இதம் ஷரீரம் மர்த்யம் அதிஸ்ருஜ்ய ப்ரஹ்மாபி ஸம்பத்ய ப்ரஹ்மணா பஷ்யதி ப்ரஹ்மணா ஷ்ருணோதி ப்ரஹ்மணைவேதம் ஸர்வம் அனுபவதி.  இங்கு கூறப்பட்டுள்ளது என்னவெனில், உயிர்வாழி இந்த பெளதிக பந்தத்தினைக் கைவிட்டு ஆன்மீக உலகில் நுழையும்போது, அவன் தனது ஆன்மீக உடலை மீண்டும் பெறுகின்றான், மேலும் அவன் தனது ஆன்மீக உடலில் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் காண முடியும்.  நேருக்கு நேராக அவரிடம் பேசவும் அவரிடமிருந்து கேட்கவும் அவரை உள்ளபடியே புரிந்து கொள்ளவும் அவனால் முடியும். ஸ்மிருதியிலிருந்தும் இதனைப் புரிந்து கொள்ள முடியும், வஸந்தி யத்ர புருஷா: ஸர்வே வைகுண்ட-மூர்தய: —ஆன்மீக உலகங்களில் வாழும் ஒவ்வொருவரும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளைப் போன்ற உடல்களில் வாழ்கின்றனர். உடல் அமைப்பைப் பொறுத்தவரை, அம்சங்களான ஜீவாத்மாக்களுக்கும் விஷ்ணு மூர்த்தியின் விரிவுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வேறு விதமாகக் கூறினால், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் கருணையால் முக்தியின்போது, உயிர்வாழி ஆன்மீக உடலைப் பெறுகின்றான்.  மமைவாம்ஷ: (“பரம புருஷரின் அம்சங்கள்”) என்னும் சொற்களும் மிக முக்கியமானவை. பரம புருஷரின் அம்சங்கள் உடைந்து போன  ஜடப் பொருளின் பகுதிகளைப் போன்றவை அல்ல. ஆத்மாவை துண்டுகளாக வெட்ட முடியாது என்பதை நாம் ஏற்கனவே இரண்டாம் அத்தியாயத்தில் புரிந்து கொண்டோம். இந்த நுண்ணிய பகுதியை ஜட ரீதியில் உணர முடியாது. துண்டுகளாக வெட்டப்பட்டு மீண்டும் ஒன்றாகச் சேர்க்கப்படும் ஜடப்பொருளைப் போன்றதல்ல ஆத்மா.  அத்தகு கருத்து இங்கே பொருந்தாது, ஏனெனில் ஸனாதன (“நித்தியமான”) என்னும் சமஸ்கிருதச் சொல் இங்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. நுண்ணிய பகுதியும் நித்தியமானதே.  இரண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில், ஒவ்வொரு தனிப்பட்ட உடலிலும் பரம புருஷரின் நுண்ணிய பகுதி உள்ளது (தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே) என்று கூறப்பட்டிருக்கின்றது.  அந்த நுண்ணிய பகுதி, பெளதிக பந்தத்திலிருந்து முக்தி பெறும்போது, ஆன்மீக வானிலுள்ள ஆன்மீக கிரகத்தில் தனது சுய ஆன்மீக உடலை மீண்டும் பெற்று, பரம புருஷரின் உறவை அனுபவிக்கின்றான். இருப்பினும், இங்கு புரிந்து கொள்ளப்படுவது என்னவெனில், தங்கத்தின் அம்சங்களும் தங்கமாக இருப்பது போல, பகவானின் நுண்ணிய அம்சங்களான உயிர்வாழிகளும் தன்மையில் அவரைப் போன்றவர்களே.

15.8

பாடல்:-

உரை

ஷரீரம் யத் அவாப்னோதி

யச் சாப்-யுத்க்ராமதீஷ்வர:

க்ருஹீத்வைதானி ஸம்யாதி

வாயுர் கந்தான் இவாஷயாத்

மொழிபெயர்ப்பு:-

காற்று நறுமணத்தைத் தாங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் இருக்கும் உயிர்வாழி, ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு வாழ்வின் பல்வேறு உணர்வுகளைச் சுமந்து செல்கிறான்.  இவ்வாறு, ஒருவகையான உடலைப் பெற்று, பின்னர் மீண்டும் வேறொரு உடலை ஏற்பதற்காக இதனைக் கைவிடுகிறான்.

கருத்து:-

உயிர்வாழி இங்கே ஈஷ்வர தனது உடலின் எஜமானன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளான். அவன் விரும்பினால் தனது உடலை உயர்நிலைக்கு மாற்றிக் கொள்ள முடியும், கீழ்நிலைக்கும் கொண்டு செல்ல முடியும். சிறிதளவு சுதந்திரம் உள்ளது. அவனது உடல் மாற்றம் அவனைப் பொறுத்ததே.  மரண நேரத்தில் அவன் உருவாக்கிய உணர்வு அவனை அடுத்த உடலிற்குக் கொண்டு செல்கின்றது. அவன் பூனை அல்லது நாயைப் போன்ற உணர்வை வளர்த்திருந்தால், பூனை அல்லது நாயின் உடலிற்குச் செல்வது நிச்சயம். அதே சமயம் தெய்வீக குணங்களின் மீது அவன் தனது உணர்வை நிறுத்தியிருந்தால், தேவரின் உடலிற்கு அவன் மாறுவான்.  மேலும், அவன் கிருஷ்ண உணர்வில் இருந்தால், ஆன்மீக உலகிலுள்ள கிருஷ்ண லோகத்திற்கு மாற்றம் பெற்று கிருஷ்ணருடன் உறவு கொள்வான். உடல் அழிவுற்ற பின் எல்லாம் முடிந்து விடுகின்றன என்பது பொய்யான கருத்தாகும். தனிப்பட்ட ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாறிக் கொண்டே உள்ளான்,  அவனுடைய தற்போதைய உடலும் செயல்களும் அவனது அடுத்த உடலுக்குப் பின்னணியாக அமைகின்றன. ஒருவன் கர்மத்தின் அடிப்படையில் பல்வேறு உடல்களை அடைகிறான், நாளடைவில் அவன் அந்த உடலை விட்டு வெளியேற வேண்டும். அடுத்த உடலுக்கான கருத்தினைத் தாங்கிச் செல்லும் சூட்சும உடல், மறுபிறவியில் மற்றொரு உடலை வளர்க்கின்றது என்று இங்கே கூறப்பட்டுள்ளது. ஓர் உடலிலிருந்து மறு உடலுக்கு மாற்றம் பெற்று, அந்த உடலில் இருக்கும்போது துன்பப்படும் இந்த வழிமுறை, கர்ஷதி, அல்லது வாழ்க்கைப் போராட்டம் என்று அழைக்கப்படுகின்றது.

15.9

பாடல்:-

உரை

ஷ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஷனம் ச

ரஸனம் க்ராணம் ஏவ ச

அதிஷ்டாய மனஷ் சாயம்

விஷயான்  உபஸேவதே

மொழிபெயர்ப்பு:-

இவ்வாறு வேறொரு ஸ்தூல உடலைப் பெறும் உயிர்வாழி, மனதை மையமாகக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட விதமான காது, கண், நாக்கு, மூக்கு, தொடு புலன் ஆகியவற்றை அடைகிறான்.  இதன் மூலம் குறிப்பிட்ட புலனின்ப விஷயங்களை அவன் அனுபவிக்கின்றான்.

கருத்து:-

வேறு விதமாகக் கூறினால், ஜீவாத்மாவின் உணர்வானது நாய், பூனையின் குணங்களால் மாசுபடுமானால், அவன் தனது அடுத்த பிறவியில் நாய் அல்லது பூனையின் உடலை அடைந்து அனுபவிக்கின்றான்.  உணர்வு, அதன்  உண்மை நிலையில் நீரைப் போன்று தூய்மையானதாகும். ஆனால் நீரை ஒரு குறிப்பிட்ட நிறத்துடன் கலந்தால், அது மாற்றமடைகின்றது. அதுபோல, தூய்மையாக இருக்கும் தூய ஆன்மீக ஆத்மாவின் உணர்வு, பெளதிக குணங்களின் தொடர்புகளுக்கேற்ப மாற்றமடைகின்றது.  உண்மையான உணர்வு கிருஷ்ண உணர்வாகும்.  எனவே, ஒருவன் கிருஷ்ண உணர்வில் நிலைபெறும்போது, அவன் தனது தூய வாழ்வில் இருக்கின்றான். ஆனால் அவனது உணர்வு ஏதேனும் பெளதிக எண்ணங்களால் களங்கமுறும் போது, அடுத்த பிறவியில் அவன் அதற்கேற்ற உடலை அடைகிறான். மீண்டும் மனித உடலையே அவன் அடைவான் என்பது நிச்சயமல்ல; நாய், பூனை, பன்றி, தேவர் அல்லது 84,00,000 வகையான உயிரினங்களில் ஏதேனும் ஒன்றை அவன் பெறலாம்.

15.10

பாடல்:-

உரை

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி

புஞ்ஜானம் வா குணான்விதம்

விமூடா நானுபஷ்யந்தி

பஷ்யந்தி க்ஞான-சக்ஷுஷ:

மொழிபெயர்ப்பு:-

முட்டாள்கள், உயிர்வாழி எவ்வாறு தனது உடலைக் கைவிடுகிறான் என்பதையோ, இயற்கை குணங்களின் மயக்கத்தின் கீழ் எத்தகு உடலை அவன் அனுபவித்துக் கொண்டுள்ளான் என்பதையோ புரிந்து கொள்ள முடியாது. ஆனால் யாருடைய கண்கள் ஞானத்தில் பயிற்சி பெற்றுள்ளதோ அவரால் இவை யனைத்தையும் காண முடியும்.

கருத்து:-

க்ஞான–சக்ஷூஷ: எனும் சொல் மிகவும் முக்கியமானது. ஞானம் இல்லாவிடில், எவ்வாறு உயிர்வாழி தனது தற்போதைய உடலைக் கைவிடுகிறான் என்பதையோ, எந்த விதமான உடலை அடுத்த பிறவியில் அடையப் போகிறான் என்பதையோ ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது;  அது மட்டுமின்றி, தான் ஏன் ஒரு குறிப்பிட்ட உடலில் தற்போது வாழ்கிறேன் என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடியாது. அங்கீகரிக்கப்பட்ட  ஆன்மீக குருவிடமிருந்து கேட்டறிந்த சாஸ்திரங்கள் மற்றும் பகவத் கீதையிலிருந்து புரிந்து கொள்ளப்பட்ட பேரறிவு இதற்குத் தேவை. இவ்விஷயங்கள் அனைத்தையும் காண்பதற்கான பயிற்சி பெற்றவன் அதிர்ஷ்டசாலி.  ஒவ்வொரு உயிர்வாழியும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தனது உடலை நீக்குகின்றான், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டுள்ளான், மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஜட இயற்கையின் மயக்கத்தின் கீழ் அனுபவித்துக் கொண்டுள்ளான். இதன் விளைவாக, புலனின்பம் என்னும் மயக்கத்தின் கீழ் பலவிதமான இன்ப துன்பங்களில் அவன் துன்பப்பட்டுக் கொண்டுள்ளான். காமத்தினாலும் ஆசையினாலும் நித்தியமாக முட்டாளாக்கப்பட்ட நபர்கள், தங்களது உடல் மாற்றத்தையும் ஒரு குறிப்பிட்ட உடலில் தங்களது வாழ்வையும் பற்றி அறிவதற்கான எல்லா சக்திகளையும் இழக்கின்றனர். அவர்களால் இவற்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாது. ஆனால் ஆன்மீக ஞானத்தில் முதிர்ச்சி பெற்றோர், ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டவன் என்பதையும், அவன் தனது உடலை மாற்றி பல வழிகளில் அனுபவிக்கின்றான் என்பதையும் காண முடியும்.  இத்தகு அறிவில் உள்ளவன், கட்டுண்ட ஜீவன் எவ்வாறு இந்த ஜட வாழ்வில் துன்புறுகின்றான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  எனவே, கிருஷ்ண உணர்வில் மிகவும் முன்னேற்றம் அடைந்த நபர்கள், கட்டுண்ட மக்களின் வாழ்வு மிகவும் தொல்லை நிறைந்ததாக உள்ளது என்பதால், இந்த ஞானத்தினை பொதுமக்களுக்கு வழங்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்கின்றனர். மக்கள் கட்டுண்ட வாழ்விலிருந்து விடுபட்டு, கிருஷ்ண உணர்வைப் பெற்று, ஆன்மீக உலகத்திற்குச் செல்லும்படி தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

15.11

பாடல்:-

உரை

யதந்தோ யோகினஷ் சைனம்

பஷ்யந்த்-யாத்மன்-யவஸ்திதம்

யதந்தோ (அ)ப்-யக்ருதாத்மானோ

நைனம் பஷ்யந்த-யசேதஸ:

மொழிபெயர்ப்பு:-

தன்னுணர்வில் நிலைபெற்று முயற்சி செய்யும் ஆன்மீகவாதிகள் இவற்றையெல்லாம் தெளிவாகக் காண முடியும். ஆனால் வளர்ச்சி பெறாத மனமுடையவர்களும் தன்னுணர்வில் நிலை பெறாதவர்களும், முயற்சி செய்தாலும் கூட என்ன நடக்கின்றது என்பதைக் காண இயலாது.

கருத்து:-

ஆன்மீகத் தன்னுணர்வுப் பாதையில் பல்வேறு ஆன்மீகவாதிகள் உள்ளனர், ஆனால் தன்னுணர்வில் நிலைபெறாத ஒருவன், உயிர்வாழியின் உடலில் மாற்றங்கள் நிகழ்வது எங்ஙனம் என்பதைக் காண இயலாது. யோகின: எனும் சொல் இவ்விஷயத்தில் முக்கியமானது.  இன்றைய தினங்களில், பல்வேறு போலி யோகிகளும் பல்வேறு போலி யோக நிலையங்களும் உள்ளன, ஆனால் உண்மை என்னவெனில், தன்னுணர்வின் விஷயத்தில் இவர்கள் அனைவரும் குருடர்களே.  வெறுமனே ஒருவகையான உடற்பயிற்சிகளில் மயங்கியுள்ள இவர்கள், உடல் நான்றாக வளர்க்கப்பட்டு ஆரோக்கியமாக இருந்தால் அதில் திருப்தி பெறுகின்றனர். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றுத் தெரிவதில்லை. இவர்கள் யதந்தோ (அ)ப்-யக்ருதாத்மான: என்று அழைக்கப்படுகின்றனர். பெயரளவிலான யோகப் பயிற்சியில் முயற்சி செய்தாலும், அவர்கள் தன்னுணர்வு அடைந்தவர்கள் அல்ல. அத்தகு மக்கள் ஆத்மாவின் உடல் மாற்றத்தினைப் புரிந்துகொள்ள முடியாது. ஆத்மா, உலகம், பரம புருஷர் ஆகியவற்றை உணர்ந்தவர்களும், உண்மையிலேயே யோக முறையில் இருப்பவர்களும் மட்டுமே—அதாவது, கிருஷ்ண உணர்வுடன் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் பக்தி யோகிகள் மட்டுமே—இவ்விஷயங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

15.12

பாடல்:-

உரை

யத் ஆதித்ய-கதம் தேஜோ

ஜகத் பாஸயதே (அ)கிலம்

யச் சந்த்ரமஸி யச் சாக்னெள

தத் தேஜோ வித்தி மாமகம்

மொழிபெயர்ப்பு:-

உலகம் முழுவதிலும் இருளை விலக்குகின்ற சூரியனின் பிரகாசம் என்னிடமிருந்தே வருகின்றது. மேலும், சந்திரனின் பிரகாசமும் நெருப்பின் பிரகாசமும் கூட என்னிடமிருந்தே வருகின்றன.

கருத்து:-

விஷயங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை அறிவில்லாதவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும், இறைவன் இங்கு விளக்குபவற்றைப் புரிந்து கொள்வதால், ஒருவன் ஞானத்தில் நிலைபெற ஆரம்பிக்க முடியும். சூரியன், சந்திரன், நெருப்பு மற்றும் மின்சாரத்தினை அனைவரும் காண்கின்றனர். சூரியனின் பிரகாசம், சந்திரனின் பிரகாசம், நெருப்பு அல்லது மின்சாரத்தின் பிரகாசம் ஆகியவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளிடமிருந்தே வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  அவ்வளவே. வாழ்வைப் பற்றிய இத்தகு கருத்து, கிருஷ்ண உணர்வின் தொடக்கமாகும்.   இது ஜடவுலகிலுள்ள கட்டுண்ட ஆத்மாவின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும். உயிர்வாழிகள் இயற்கையாகவே பரம புருஷரின் அம்சங்கள்.  அந்த அம்சங்கள் எவ்வாறு இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும் என்பதற்கான ஒரு சிறு குறிப்பை இங்கு அவரே வழங்குகின்றார்.  சூரிய மண்டலம் முழுவதையும் சூரியனே பிரகாசப்படுத்துகின்றது என்பதை இந்தப் பதத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். பற்பல பிரபஞ்சங்களும் சூரிய மண்டலங்களும் உள்ளன. பல்வேறு சூரியன், சந்திரன், கிரகங்கள் இருக்க, ஒரு பிரபஞ்சத்தில் ஒரு சூரியன் மட்டுமே உள்ளது. பகவத் கீதையில் (10.21) கூறப்பட்டுள்ளபடி சந்திரன் நட்சத்திரங்களில் ஒன்றாகும் (நக்ஷத்ராணாம் அஹம் ஷஷீ). சூரிய ஒளிக்கு காரணம், பரம புருஷருடைய ஆன்மீக வெளியில் இருக்கும் ஆன்மீக ஒளியே.  சூரியன் உதித்தவுடன் மனிதனின் செயல்கள் தொடங்குகின்றன.  மக்கள் உணவுப் பொருள்களைத் தயாரிக்க நெருப்பை மூட்டுகின்றனர். தொழிற்சாலைகள் போன்றவற்றைத் தொடங்கவும் நெருப்பை மூட்டுகின்றனர். நெருப்பின் உதவியால் பற்பல காரியங்கள் செய்யப்படுகின்றன. எனவே, சூரிய உதயம், நெருப்பு, சந்திரனின் ஒளி ஆகியவை உயிர்வாழிகளுக்கு மிகவும் இன்பம் தருபவை. இவற்றின் உதவியின்றி எந்த உயிரினமும் வாழ முடியாது. எனவே, சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவற்றின் ஒளியும் பிரகாசமும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரிடமிருந்தே தோன்றுகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தால், ஒருவனது கிருஷ்ண உணர்வு ஆரம்பமாகும். சந்திரனின் ஒளியால் எல்லா காய்கறிகளும் வளப்படுத்தப்படுகின்றன. பரம புருஷ பகவானான கிருஷ்ணரது கருணையாலேயே தாங்கள் வாழ்கின்றோம் என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி நிலவொளி மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கின்றது.  அவருடைய கருணை இல்லாவிடில், சூரியன் இருக்க முடியாது, சந்திரன் இருக்க முடியாது, நெருப்பும் இருக்க முடியாது. சூரியன், சந்திரன், மற்றும் நெருப்பின் உதவியின்றி யாரும் வாழ முடியாது.  இவை கட்டுண்ட ஆத்மாவில் கிருஷ்ண உணர்வை தூண்டக்கூடிய சில சிந்தனைகள் ஆகும்.

15.13

பாடல்:-

உரை

காம் ஆவிஷ்ய ச பூதானி

தாரயாம்-யஹம் ஒஜஸா

புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா:

ஸோமோ பூத்வா ரஸாத்மக:

மொழிபெயர்ப்பு:-

நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் நுழைகின்றேன், எனது சக்தியினால் அவை பாதையில் நிலைபெற்றுள்ளன. நான் சந்திரனாகி எல்லாக் காய்கறிகளுக்கும் வாழ்வு ரஸத்தை வழங்குகின்றேன்.

கருத்து:-

எல்லா கிரகங்களும் காற்றில் மிதப்பது இறைவனின் சக்தியினாலேயே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறைவன், ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு கிரகத்திலும் ஒவ்வொரு உயிர்வாழியிலும் நுழைகின்றார். இது பிரம்ம சம்ஹிதையில் விளக்கப்பட்டுள்ளது. பரம புருஷ பகவானின் சுய விரிவுகளில் ஒருவரான பரமாத்மா, எல்லா கிரகங்கள், பிரபஞ்சங்கள், உயிர்வாழிகள், மற்றும் அணுக்களிலும்கூட நுழைவதாக அங்கு கூறப்பட்டுள்ளது.  எனவே, அவர் நுழைவதால் அனைத்தும் முறையாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. உடலில் ஆத்மா இருக்கும்போது, மனிதன் நீரில் மிதக்க முடியும்; ஆனால் உடலை விட்டு அந்த உயிர் பிரிந்த பிறகு, அதாவது மரணத்திற்குப் பிறகு, உடல் மூழ்குகின்றது. உடல் அழுகிப் போன பிறகு குச்சிகளைப் போன்று அதுவும் மிதப்பது உண்மையே, ஆனால் மனிதன் மரணமடைந்த உடன், உடல் நீரில் மூழ்கிவிடும். அதுபோல, இவ்வெல்லா கிரகங்களும் விண்வெளியில் மிதக்கின்றன, இதற்கு காரணம் பரம புருஷ பகவானின் உன்னத சக்தி அந்த கிரகங்களினுள் நுழைந்திருப்பதே. அவரது சக்தி ஒவ்வொரு கிரகத்தையும் கைப்பிடி மண்ணைப் போன்று தாங்கிக் கொண்டுள்ளது. யாரேனும் கைப்பிடி மண்ணை பிடித்துக் கொண்டிருந்தால், மண் கீழே விழுவதற்குச் சாத்தியம் இல்லை, ஆனால் அவன் அதனை காற்றில் விட்டெறிந்தால் அது கீழே விழுந்துவிடும்.  அதுபோலவே காற்றில் மிதந்து கொண்டுள்ள இந்த கிரகங்கள், உண்மையில் பரம புருஷரின் விஸ்வரூபத்தின் கைப்பிடியில் இருக்கின்றன. அவரது வலிமையினாலும் சக்தியினாலும், அசைகின்ற அசையாத பொருள்கள் அனைத்தும் தத்தம் இடங்களில் நிலைத்துள்ளன. புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாலேயே சூரியன் பிரகாசிக்கின்றது என்றும் கிரகங்கள் நிலையாகத் தத்தம் பாதையில் செல்கின்றன என்றும் வேத மந்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அவரது உதவி இல்லாவிடில், காற்றில் வீசப்பட்ட மண்ணைப் போன்று எல்லா கிரகங்களும் சிதறிப்போய் அழிந்து விடும். அதுமட்டுமின்றி, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாலேயே சந்திரன் எல்லா காய்கறிகளையும் வளப்படுத்துகின்றது.  சந்திரனின் தாக்கத்தினால் காய்கறிகள் சுவை பெறுகின்றன. நிலவொளி இல்லாவிடில், காய்கறிகள் வளரவும் முடியாது. சுவை கொடுக்கவும் முடியாது. மனித சமுதாயம், வசதியாக வாழ்ந்தபடி உணவுப் பொருள்களை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு பரம புருஷரின் கருணையே காரணம். இல்லாவிடில் மனித சமுதாயம் உயிர் பிழைக்க முடியாது.  ரஸாத்மக: எனும் சொல் மிகவும் முக்கியமானது. பரம புருஷருடைய கட்டுப்பாட்டில் சந்திரனுடைய ஆதிக்கத்தினால் எல்லாம் சுவையைப் பெறுகின்றன.

15.14

பாடல்:-

உரை

அஹம் வைஷ்வானரோ பூத்வாஅ

ப்ராணினாம் தேஹம் ஆஷ்ரித:

ப்ராணாபான-ஸமாயுக்த:

பாசம்-யன்னம் சதுர்-விதம்

மொழிபெயர்ப்பு:-

நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் நுழைகின்றேன், எனது சக்தியினால் அவை பாதையில் நிலைபெற்றுள்ளன. நான் சந்திரனாகி எல்லாக் காய்கறிகளுக்கும் வாழ்வு ரஸத்தை வழங்குகின்றேன்.

கருத்து:-

எல்லா கிரகங்களும் காற்றில் மிதப்பது இறைவனின் சக்தியினாலேயே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறைவன், ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு கிரகத்திலும் ஒவ்வொரு உயிர்வாழியிலும் நுழைகின்றார். இது பிரம்ம சம்ஹிதையில் விளக்கப்பட்டுள்ளது. பரம புருஷ பகவானின் சுய விரிவுகளில் ஒருவரான பரமாத்மா, எல்லா கிரகங்கள், பிரபஞ்சங்கள், உயிர்வாழிகள், மற்றும் அணுக்களிலும்கூட நுழைவதாக அங்கு கூறப்பட்டுள்ளது.  எனவே, அவர் நுழைவதால் அனைத்தும் முறையாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. உடலில் ஆத்மா இருக்கும்போது, மனிதன் நீரில் மிதக்க முடியும்; ஆனால் உடலை விட்டு அந்த உயிர் பிரிந்த பிறகு, அதாவது மரணத்திற்குப் பிறகு, உடல் மூழ்குகின்றது. உடல் அழுகிப் போன பிறகு குச்சிகளைப் போன்று அதுவும் மிதப்பது உண்மையே, ஆனால் மனிதன் மரணமடைந்த உடன், உடல் நீரில் மூழ்கிவிடும். அதுபோல, இவ்வெல்லா கிரகங்களும் விண்வெளியில் மிதக்கின்றன, இதற்கு காரணம் பரம புருஷ பகவானின் உன்னத சக்தி அந்த கிரகங்களினுள் நுழைந்திருப்பதே. அவரது சக்தி ஒவ்வொரு கிரகத்தையும் கைப்பிடி மண்ணைப் போன்று தாங்கிக் கொண்டுள்ளது. யாரேனும் கைப்பிடி மண்ணை பிடித்துக் கொண்டிருந்தால், மண் கீழே விழுவதற்குச் சாத்தியம் இல்லை, ஆனால் அவன் அதனை காற்றில் விட்டெறிந்தால் அது கீழே விழுந்துவிடும்.  அதுபோலவே காற்றில் மிதந்து கொண்டுள்ள இந்த கிரகங்கள், உண்மையில் பரம புருஷரின் விஸ்வரூபத்தின் கைப்பிடியில் இருக்கின்றன. அவரது வலிமையினாலும் சக்தியினாலும், அசைகின்ற அசையாத பொருள்கள் அனைத்தும் தத்தம் இடங்களில் நிலைத்துள்ளன. புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாலேயே சூரியன் பிரகாசிக்கின்றது என்றும் கிரகங்கள் நிலையாகத் தத்தம் பாதையில் செல்கின்றன என்றும் வேத மந்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அவரது உதவி இல்லாவிடில், காற்றில் வீசப்பட்ட மண்ணைப் போன்று எல்லா கிரகங்களும் சிதறிப்போய் அழிந்து விடும். அதுமட்டுமின்றி, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாலேயே சந்திரன் எல்லா காய்கறிகளையும் வளப்படுத்துகின்றது.  சந்திரனின் தாக்கத்தினால் காய்கறிகள் சுவை பெறுகின்றன. நிலவொளி இல்லாவிடில், காய்கறிகள் வளரவும் முடியாது. சுவை கொடுக்கவும் முடியாது. மனித சமுதாயம், வசதியாக வாழ்ந்தபடி உணவுப் பொருள்களை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு பரம புருஷரின் கருணையே காரணம். இல்லாவிடில் மனித சமுதாயம் உயிர் பிழைக்க முடியாது.  ரஸாத்மக: எனும் சொல் மிகவும் முக்கியமானது. பரம புருஷருடைய கட்டுப்பாட்டில் சந்திரனுடைய ஆதிக்கத்தினால் எல்லாம் சுவையைப் பெறுகின்றன.

15.15

பாடல்:-

உரை

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ

மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச

வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ

வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்

மொழிபெயர்ப்பு:-

நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.

கருத்து:-

பரமாத்மாவின் உருவில் முழுமுதற் கடவுள் எல்லாரின் இதயத்திலும் வீற்றுள்ளார், அவரிடமிருந்தே எல்லாச் செயல்களும் தொடங்குகின்றன.   உயிர்வாழி தனது முந்தைய பிறவியின் அனைத்து விஷயங்களையும் மறக்கின்றான்,  ஆனால் அவனது செயல்கள் எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கின்ற பரம புருஷருடைய வழிநடத்தலுக்கு ஏற்ப அவன் மீண்டும் செயல்பட்டாக வேண்டும். அவன் தனது முந்தைய செயல்களுக்கேற்ப காரியங்களை தொடங்குகின்றான்.  தேவையான அறிவு அவனுக்கு வழங்கப்படுகின்றது, ஞாபகசக்தியும் வழங்கப்படுகிறது, மேலும் அவன் தனது முந்தைய பிறவியை மறக்கின்றான். இவ்வாறு இறைவன் எங்கும் நிறைந்தவராக மட்டுமின்றி, ஒவ்வொரு தனிப்பட்ட இதயத்திலும் உறைபவராக உள்ளார். பல்வேறு செயல்களுக்குப் பலன்களை வழங்குபவரும் அவரே. அருவ பிரம்மனாக, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக, மற்றும் இதயத்தில் உறையும் பரமாத்மாவாக வழிபபடப்படுவது மட்டுமின்றி, வேதம் என்னும் அவதார ரூபத்திலும் அவர் வழிபடப்படுகிறார்.  மக்கள் தங்களது வாழ்வை சரியான முறையில் வடிவமைத்து, முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நற்பாதையினை வேதங்கள் வழங்குகின்றன. அவை பரம புருஷ பகவான் கிருஷ்ணரைப் பற்றிய அறிவை நல்குகின்றன.   கிருஷ்ணர் வியாசதேவராக அவதரித்தபோது வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தார். மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு வியாச தேவரால் கொடுக்கப்பட்ட விளக்கவுரையான ஸ்ரீமத் பாகவதம், வேதாந்த சூத்திரத்தின் உண்மை அறிவை வழங்குகின்றது. முழுமுதற் கடவுள் கட்டுண்ட ஆத்மாக்களின் விடுதலைக்காக கருணையே வடிவாக உள்ளார்; அவர் உணவுப் பொருள்களை வழங்கி  அவற்றைச் செரிக்கவும் செய்கின்றார், உயிர்வாழியின் செயல்களுக்கு சாட்சியாக உள்ளார், வேதங்களின் வடிவில் ஞானத்தை வழங்குகிறார், அது மட்டுமின்றி, பகவத் கீதையின் ஆசிரியராக பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வடிவிலும் ஞானத்தை வழங்குகின்றார். அவரே கட்டுண்ட ஆத்மாவின் வந்தனைக்குரியவர்.  இவ்வாறாக, கடவுள் மிகவும் நல்லவர்; மிகவும் கருணை வாய்ந்தவர்.  அந்த: ப்ரவிஷ்ட: ஷாஸ்தா ஜனானாம். உயிர்வாழி தனது த்றபோதைய உடலை நீத்த உடனேயே அதனை மறந்துவிடுகிறான், ஆனால் முழுமுதற் கடவுளால் ஊக்குவிக்கப்பட்டு அவன் மீண்டும் தனது செயலைத் தொடங்குகின்றான்.  அவன் மறந்துவிட்டாலும் கூட முந்தைய பிறவியில் எங்கு விட்டானோ அங்கிருந்து மீண்டும் தனது செயலைப் புதுப்பித்துக் கொள்ள இறைவன் அவனுக்கு அறிவைக் கொடுக்கின்றார். இதயத்தில் வீற்றிருக்கும் பரம புருஷரின் ஆணைகளுக்கேற்ப, உயிர்வாழி இவ்வுலகில் இன்ப துன்பத்தை அடைகிறான் என்பது மட்டுமின்றி, அவரிடமிருந்து வேதங்களைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றான். வேத ஞானத்தைப் புரிந்துகொள்வதில் ஒருவன் தீவிரமாக இருந்தால், கிருஷ்ணர் அவனுக்குத் தேவையான புத்தியை வழங்குவார். நாம் புரிந்து கொள்வதற்காக அவர் ஏன் வேத ஞானத்தை வழங்க வேண்டும்? ஏனெனில், ஒவ்வொரு உயிர்வாழியும் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வேத இலக்கியமும் இதனை உறுதி செய்கின்றது,  யோ (ஆ)ஸெள ஸர்வைர் வேதைர் கீயதே. நான்கு வேதங்களில் தொடங்கி, வேதாந்த சூத்திரம், உபநிஷத்துகள், புராணங்கள் என எல்லா வேத இலக்கியங்களிலும் பரம புருஷரின் பெருமைகள் கொண்டாடப்படுகின்றன. வேதச் சடங்குகளை செய்வதாலும், வேதங்களின் தத்துவத்தை விவாதிப்பதாலும், பக்தித் தொண்டில் வழிபடுவதாலும் இறைவன் அடையப்படுகின்றார்.  எனவே, வேதங்களின் குறிக்கோள் கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதே.   வேதங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்கான பாதையையும் அவரை உணர்வதற்கான வழிமுறையையும் நமக்கு அளிக்கின்றன. இறுதி இலக்கு புருஷோத்தமரான முழுமுதற் கடவுளே. பின்வரும் சொற்களில் வேதாந்த சூத்திரம் (1.1.4) இதனை உறுதி செய்கின்றது: தத் து ஸமன்வயாத். பக்குவ நிலை மூன்று படிகளில் அடையப்படுகிறது. வேத இலக்கியங்களைப் புரிந்து கொள்வதால், ஒருவன் பரம புருஷ பகவானுக்கும் தனக்கும் உள்ள சம்பந்தத்தினை புரிந்து கொள்ள முடியும்,  பின்னர் பல்வேறு வழிமுறைகளை பயிற்சி செய்து அவன் அவரை அணுகுகிறான், மேலும் இறுதியில் பரம இலக்கான சாக்ஷாத் பரம புருஷ பகவானையே அவனால் அடைய முடியும்.   இப்பதத்தில், வேதங்களின் நோக்கம், வேதங்களின் அறிவு, வேதங்களின் இலக்கு ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

15.16

பாடல்:-

உரை

த்வாவ் இமௌ புருஷௌலோகே

க்ஷரஷ் சாக்ஷர ஏவ  ச

க்ஷர: ஸர்வாணி பூதானி

கூட-ஸ்தோ (அ)க்ஷர உச்யதே

மொழிபெயர்ப்பு:-

தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் என இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளனர்.  ஜடவுலகில் உள்ள ஜீவன்கள் தவறக்கூடியவர்கள் என்றும், ஆன்மீக உலகில் உள்ளவர்கள் தவறாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கருத்து:-

முன்பே விளக்கியபடி, வியாசதேவராக அவதரித்தபோது இறைவன் வேதாந்த சூத்திரத்தை இயற்றினார். இங்கே வேதாந்த சூத்திரத்தின் உட்பொருளை அவரே சுருக்கமாக வழங்குகின்றார். உயிர்வாழிகள் எண்ணற்றவர்கள், அவர்களை தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று அவர் கூறுகின்றார். ஜீவன்கள் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் நித்தியமான அம்சங்கள். அவர்கள் ஜடவுலகில் தொடர்பு கொள்ளும்போது ஜீவ-பூதா என்று அழைக்கப்படுகின்றனர்;  இங்கு கொடுக்கப்பட்டுள்ள க்ஷர: ஸர்வாணி பூதானி என்னும் சமஸ்கிருதச் சொற்கள், இவர்கள் தவறக்கூடியவர்கள் என்ற பொருளைத் தருகின்றன. ஆனால், பரம புருஷ பகவானுடன் ஒன்றுபட்டவர்கள், தவறாதவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒன்றுபட்டவர்கள் என்றால் தனித்தன்மை இல்லாதவர்கள் என்று பொருளல்ல, மாறாக ஒற்றுமையுடன் செயல்படுபவர்கள் என்பதே பொருள்.  படைப்பின் நோக்கத்திற்கு அவர்கள் எல்லாரும் ஒத்துழைக்கின்றனர்.  ஆன்மீக உலகில் படைப்பு என்னும் விஷயம் இல்லையென்பது உண்மையே, ஆனால் வேதாந்த சூத்திரத்தில், பரம புருஷ பகவானே எல்லாத தோற்றங்களுக்கும் மூலம் என்று கூறப்பட்டிருப்பதால், இக்கருத்து விளக்கப்படுகின்றது.  புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணருடைய கூற்றின்படி உயிர்வாழிகளில் இரு வகுப்பினர் உள்ளனர். வேதங்கள் இதற்கு ஆதாரம் கொடுக்கின்றன, எனவே இதைப் பற்றிய ஐயம் ஏதுமில்லை. மனம் மற்றும் ஐந்து புலன்களுடன் இவ்வுலகில் போராடிக் கொண்டிருக்கும் உயிர்வாழிகள், மாறிக் கொண்டே இருக்கும் ஜடவுடல்களை பெற்றுள்ளனர். ஓர் உயிர்வாழி கட்டுண்டு இருக்கும் வரை, அவனது உடல் ஜடத்தின் தொடர்பினால் மாறிக் கொண்டுள்ளது;  ஜடம் மாற்றமடைவதால் உயிர்வாழியும் மாற்றமடைவதாகத் தோன்றுகின்றது. ஆனால் ஆன்மீக உலகிலுள்ள உடல் ஜடத்தினால் செய்யப்பட்டதல்ல, எனவே அதில் மாற்றம் ஏதும் இல்லை.  ஜடவுலகிலுள்ள உயிர்வாழி ஆறு விதமான மாற்றங்களுக்கு உட்படுகின்றான்—பிறப்பு, வளர்ச்சி, இருப்பு, உற்பத்தி, சிதைவு மற்றும் மறைவு. இவை ஜடவுடலின் மாற்றங்களாகும்.  ஆனால் ஆன்மீக உலகில் உடல் மாற்றமடைவதில்லை; அங்கு முதுமை இல்லை, பிறப்பு இல்லை, இறப்பும் இல்லை. அங்கு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். க்ஷர: ஸர்வாணி பூதானி—ஜடத்துடன் தொடர்பு கொண்ட எந்த உயிர்வாழியும், அதாவது, படைக்கப்பட்ட முதல் உயிர்வாழியான பிரம்மாவிலிருந்து தொடங்கி சிறு எறும்பு வரை ஒவ்வொருவரும், தமது உடலை மாற்றிக் கொண்டுள்ளனர்; எனவே இவர்கள் அனைவரும் தவறக்கூடியவர்கள். ஆனால் ஆன்மீக உலகில் இருப்பவர்களோ, எப்போதும் ஒன்றுபட்ட நிலையில் முக்தி பெற்றவர்களாக உள்ளனர்.

15.17

பாடல்:-

உரை

உத்தம: புருஷஸ் த்வன்ய:

பரமாத்மேத்-யுதாஹ்ருத:

யோ லோக-த்ரயம் ஆவிஷ்ய

பிபர்த்-யவ்யய ஈஷ்வர:

மொழிபெயர்ப்பு:-

இந்த இருவருக்கும் அப்பாற்பட்டு உத்தம புருஷரான பரமாத்மா இருக்கின்றார்., அழிவற்ற இறைவனான அவர், மூன்று உலகங்களுக்குள் நுழைந்து அவற்றைக் காக்கின்றார்.

கருத்து:-

இந்தப் பதத்தின் கருத்து, கட உபநிஷத் (2.2.13) மற்றும் ஷ்வேதாஷ் வதர உபநிஷத்தில் (6.13) மிக அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கட்டுண்ட உயிர்வாழிகள் சிலர், முக்தி பெற்ற உயிர்வாழிகள் சிலர், அத்தகு எண்ணிலடங்காத உயிர்வாழிகளுக்கு அப்பால் முழுமுதற் கடவுளான பரமாத்மா உள்ளார் என்று அங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உபநிஷத்தின் பதம் பின்வருமாறு: நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம். இதன் விளக்கம் என்னவெனில், கட்டுண்ட, முக்தி பெற்ற என்று எல்லா உயிர்வாழிகளுக்குமிடையில், அவர்களைப் பராமரித்து, அவர்களது பல்வேறு செயல்களுக்கு ஏற்ப அனுபவிப்பதற்கான எல்லா வசதிகளையும் வழங்கக்கூடிய உன்னத புருஷர் ஒருவர் உள்ளார். அவரே பரம புருஷ பகவான். அந்த பரம புருஷ பகவான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றிருக்கிறார். அவரைப் புரிந்துகொள்ளக்கூடிய சான்றோன் மட்டுமே பக்குவமான அமைதியை அடையும் தகுதியுடையவன், மற்றவர்கள் அல்ல.

15.18

பாடல்:-

உரை

யஸ்மாத் க்ஷரம் (அ)ஹம்

அக்ஷராத் அபி சோத்தம:

அதோ (அ)ஸ்மி லோகே வேதே ச

ப்ரதித: புருஷோத்தம:

மொழிபெயர்ப்பு:-

தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் ஆகிய இருவருக்கும் அப்பாற்பட்டு நான் திவ்யமானவனாக இருப்பதாலும், நானே உத்தமமானவன் என்பதாலும், உலகிலும் வேதங்களிலும் நான் அந்த புருஷோத்தமனாகக் கொண்டாடப்படுகின்றேன்.

கருத்து:-

கட்டுண்ட ஆத்மாவும் சரி, முக்தி பெற்ற ஆத்மாவும் சரி, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை எவரும் மிஞ்ச இயலாது. எனவே, எல்லா புருஷர்களிலும் அவரே உன்னதமானவர். உயிர்வாழிகளும் பரம புருஷ பகவானும் தனிப்பட்டவர்கள் என்பது தற்போது தெளிவாகின்றது.  வேற்றுமை என்னவெனில், உயிர்வாழிகள், கட்டுண்ட நிலையிலும் சரி, முக்தி பெற்ற நிலையிலும் சரி, பரம புருஷ பகவானின் அசிந்திய சக்திகளை அளவில் மிஞ்ச இயலாது.   முழுமுதற் கடவுளும் உயிர்வாழிகளும் சமநிலையில் உள்ளவர்கள் அல்லது எல்லா விதத்திலும் சமமானவர்கள் என்று நினைப்பது தவறாகும்.  அவர்களுக்கு இடையில் எப்போதும் உயர்வு தாழ்வு என்னும் கேள்வி உண்டு.  உத்தம என்னும் சொல் மிகவும் முக்கியமானது. பரம புருஷ பகவானை யாராலும் மிஞ்ச முடியாது.  லோகே என்னும் சொல் “புருஷ ஆகமத்தில் (ஸ்மிருதி சாஸ்திரத்தில்)” என்னும் முக்கியமான பொருளைத் தருகின்றது. நிருக்தி அகராதியில் உறுதி செய்யப்பட்டுள்ளபடி, லோக்யதே வேதார்தோ (அ)னேன—”வேதங்களின் குறிக்கோள் ஸ்மிருதி சாஸ்திரத்தில் விளக்கப்பட்டள்ளது.” முழுமுதற் கடவுளின் பரமாத்மா என்னும் தன்மை வேதங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பதம் வேதங்களில் (சான்தோக்ய உபநிஷத் 8.12.3) தோன்றுகிறது: தாவத் ஏஷ ஸம்ப்ரஸாதோ (அ)ஸ்மாச் சரீராத் ஸமுத்தாய பரம் ஜ்யோதி-ரூபம் ஸம்பத்ய ஸ்வேன ரூபேணாபினிஷ் பத்யதே ஸ உத்தம: புருஷ:. “உடலிலிருந்து வெளிவரும் பரமாத்மா அருவ பிரம்மஜோதியினுள் நுழைகிறார்; பின்னர், அவர் தனது ஆன்மீக அடையாளத்துடன் தனது ரூபத்தில் வீற்றுள்ளார்.   அந்த பரம்பொருள், பரம புருஷர் என்று அழைக்கப்படுகிறார்.” இதன் அர்த்தம் என்னவெனில், பரம புருஷர், பிரகாசத்தின் இறுதியாக விளங்கும் தனது ஆன்மீக தேஜஸை வெளிப்படுத்தி அதனைப் பரவச் செய்கின்றார்.  அந்த பரம புருஷர் எல்லாரின் இதயத்திலும் பரமாத்மாவின் உருவில் வீற்றுள்ளார்.  சத்யவதிக்கும் பராசரருக்கும் மகனாக அவதரித்த அவர், வியாசதேவராக வேத ஞானத்தை விளக்குகிறார்.

15.19

பாடல்:-

உரை

யோ மாம் ஏவம் அஸம்மூடோ

ஜானாதி புருஷோத்தமம்

ஸ ஸர்வ-வித் பஜதி மாம்

ஸர்வ-பாவேன பாரத

மொழிபெயர்ப்பு:-

எவனொருவன் என்னை பரம புருஷ பகவானாக ஐயமின்றி அறிகின்றானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான். எனவே, பரதனின் மைந்தனே, அவன் எனது பக்தித் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றான்.

கருத்து:-

உயிர்வாழிகள் மற்றும் பரம பூரண உண்மையின் ஸ்வரூப நிலையைப் பற்றி பற்பல தத்துவக் கற்பனைகள் இருக்கின்றன. தற்போது இப்பதத்தில், பகவான் கிருஷ்ணரே புருஷோத்தமர் என்பதை அறிபவன் எல்லாவற்றையும் அறிபவன் என்று மிகத் தெளிவாக முழுமுதற் கடவுளே விளக்குகின்றார். பக்குவமற்ற அறிவாளி, பூரண உண்மையைப் பற்றி வெறும் கற்பனை செய்து கொண்டே போகின்றான்; ஆனால் பக்குவமான அறிஞனோ, தனத மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்காமல், பரம புருஷரின் பக்தித் தொண்டில், கிருஷ்ண உணர்வில் நேரடியாக ஈடுபடுகின்றான். பகவத் கீதை முழுவதும் இந்த உண்மை ஒவ்வொரு அடியிலும் ஆணித்தரமாக உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், பகவத் கீதைக்கு விளக்கவுரை எழுதும் பற்பல பிடிவாதக் கருத்துரையாளர்கள், பரம பூரண உண்மையையும் உயிர்வாழிகளையும் ஒன்றாகவும் சமமாகவும் கருதுகின்றனர். வேத ஞானம், ஷ்ருதி, கேட்பதால் அறியப்படுவது என்று அழைக்கப்படுகின்றது. உண்மையில், வேதங்களின் செய்தியை கிருஷ்ணரிடமிருந்தும் அதிகாரம் பொருந்திய அவரது பிரதிநிதிகளிடமிருந்தும் பெற வேண்டும். இங்கே எல்லாவற்றையும் மிக அருமையாக தரம் பிரித்து விளக்குகின்றார் கிருஷ்ணர், இத்தகு மூலத்திடமிருந்து ஒருவன் கேட்க வேண்டும். வெறும் பன்றிகளைப் போன்று கேட்டல் போதுமானதல்ல; அதிகாரிகளிடமிருந்து புரிந்து கொள்ளக்கூடியவனாக இருக்க வேண்டும். வெறும் ஏட்டளவில் கற்பனை செய்யக் கூடாது. உயிர்வாழிகள் எப்போதுமே புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்பதை அடக்கத்துடன் பகவத் கீதையிலிருந்து கேட்டறிய வேண்டும். எவனொருவன் இதனைப் புரிந்து கொள்ளக்கூடியவனோ, அவனே வேதங்களின் நோக்கத்தை அறிந்தவன்; வேறு யாரும் வேதங்களின் நோக்கத்தை அறியவில்லை—இதுவே முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் கருத்து.  பஜதி என்னும் சொல் மிகவும் விசேஷமானது. பரம புருஷரின் தொண்டு சம்பந்தமாக இச்சொல் பல இடங்களில் உபயோகிக்கப்பட்டள்ளது. பகவானின் பக்தித் தொண்டில், பூரண கிருஷ்ண உணர்வில் ஒருவன் ஈடுபட்டிருந்தால், அவன் வேத ஞானம் முழுவதையும் புரிந்து கொண்டவனாக அறியப்பட வேண்டும். ஒருவன் கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருந்தால், பரம பூரண உண்மையைப் புரிந்து கொள்வதற்கான வேறு எந்த ஆன்மீக வழிமுறையும் அவனுக்குத் தேவையில்லை என்று வைஷ்ணவ பரம்பரையில் கூறப்படுகின்றது. அவன் ஏற்கனவே பக்குவ நிலைக்கு வந்துவிட்டான், ஏனெனில் அவன் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளான். அறிவின் ஆரம்ப வழிமுறைகள் அனைத்தையும் அவன் கடந்துவிட்டான்.  ஆனால், யாரேனும் பல்லாயிரக்கணக்கான பிறவிகளில் கற்பனை செய்தபின்னும், “கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், நாம் அவரிடம் சரணடைய வேண்டும்” என்னும் கருத்தினை புரிந்துகொள்ளாவிடில், பற்பல வருடங்களாக, பிறவிகளாக அவன் செய்த கற்பனை விசாரங்கள் அனைத்தும் உபயோகமற்ற கால விரயமே.

15.20

பாடல்:-

உரை

இதி குஹ்யதமம் ஷாஸ்ரம்

இதம் உக்தம் மயானக

ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத்

க்ருத-க்ருத்யஷ் ச பாரத

மொழிபெயர்ப்பு:-

வேத சாஸ்திரங்களின் மிகமிக இரகிசயமான பகுதி இதுவே, பாவமற்றவனே, தற்போது என்னால் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் புரிந்துகொள்பவன் அறிஞனாவான், அவனது முயற்சிகள் பக்குவத்தை அறியும்.

கருத்து:-

இதுவே எல்லா சாஸ்திரங்களின் சாரம் என்று பகவான் இங்கே தெளிவாக விளக்குகின்றார்.  முழுமுதற் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள இதனை உள்ளது உள்ளபடி ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு, அவன் திவ்ய ஞானத்தில், அறிவுடையவனாகவும் பக்குவமானவனாகவும் ஆகின்றான். வேறு விதமாகக் கூறினால், பரம புருஷ பகவானின் இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு, அவரது திவ்யமான தொண்டில் ஈடுபடுவதால், ஒவ்வொருவரும் ஜட இயற்கை குணங்களின் எல்லா களங்கங்களிலிருந்தும் விடுதலை பெற முடியும்.  ஆன்மீகத்தைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறை பக்தித் தொண்டேயாகும்.  எங்கெல்லாம் பக்தித் தொண்டு இருக்கின்றதோ, அங்கே அதனுடன் ஜடக் களங்கங்கள் இருக்க முடியாது.  பகவானுக்கான பக்தித் தொண்டும் சாக்ஷாத் பகவானும் ஒன்றே, ஏனெனில் இரண்டும் ஆன்மீகமானவை; பக்தித் தொண்டு, முழுமுதற் கடவுளின் அந்தரங்க சக்தியில் நடைபெறுகிறது. பகவானை சூரியனுக்கும், அறியாமையை இருளுக்கும் ஒப்பிடுகின்றனர். எங்கே சூரியன் இருக்கின்றதோ அங்கே இருளைப் பற்றிய கேள்விக்கு இடமே இல்லை. எனவே, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் சரியான வழிநடத்தலின் கீழ் எங்கெல்லாம் பக்தித் தொண்டு ஆற்றப்படுகின்றதோ, அங்கு  அறியாமையைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை.  இந்த கிருஷ்ண உணர்வினை ஒவ்வொருவரும் ஏற்று, பக்தித் தொண்டில் ஈடுபட்டு, அறிவுடையவனாகவும் தூய்மையானவனாகவும் ஆக வேண்டும். கிருஷ்ணரைப் புரிந்து கொண்டு பக்தித் தொண்டில் ஈடுபடும் இந்த நிலைக்கு வரவில்லையெனில், சாதாரண மனிதனின் மதிப்பில் ஒருவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும், அவன் பக்குவமான அறிவாளியல்ல.  அர்ஜுனனனைக் குறிப்பதற்கான அனக என்னும் சொல் மிகவும் விசேஷமானது. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபடாவிடில் கிருஷ்ணரைப் புரிந்து கொள்வது கடினம் என்பதே, அனக, “பாவமற்றவனே,” என்பதன் பொருளாகும்.  ஒருவன் எல்லாக் களங்கங்களிலிருந்தும், எல்லா பாவச் செயல்களிலிருந்தும் விடுபட வேண்டும்; பின்னரே அவனால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பக்தித் தொண்டு தூய்மையும் சக்தியும் நிறைந்ததாக இருப்பதால், இதில் ஈடுபட்ட உடனேயே ஒருவன் தானாகவே பாவமற்ற நிலைக்கு வந்து விடுகின்றான்.  தூய பக்தர்களின் உறவில், பூரண கிருஷ்ண உணர்வில் ஒருவன் பக்தித் தொண்டு ஆற்றும்போது, அவன் அடியோடு அழிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவ்வாறு அவன் கடக்க வேண்டியவற்றில் மிகவும் முக்கியமானது இதய பலவீனம். முதல் வீழ்ச்சி, ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான விருப்பம். அந்த விருப்பத்தினால் ஒருவன் பரம புருஷரின் திவ்யமான அன்புத் தொண்டினை கைவிட்டு விடுகின்றான். இரண்டாவது இதய பலவீனம் என்னவெனில், ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான தன்மையை அவன் அதிகப்படுத்தும்போது, ஜடப் பொருள்களின் மீதும் அதன் உரிமையின் மீதும் அவன் பற்றுதல் கொள்கின்றான். ஜட வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம் இதயத்தின் இந்த பலவீனங்களேயாகும்.  இந்த அத்தியாயத்தின் முதல் ஐந்து பதங்கள், இந்த இதய பலவீனத்திலிருந்து ஒருவன் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான வழிமுறையை விளக்கின.  மேலும், ஆறாவது பதத்திலிருந்து இறுதிவரை, அத்தியாயத்தின் மீதமுள்ள பதங்கள் புருஷோத்தம யோகத்தை விவாதிக்கின்றன.  ஸ்ரீமத் பகவத் கீதையின் “புருஷோத்தம யோகம்” என்னும் பதினைந்தாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தா பொருளுரைகள் இத்துடன் நிறைவடைகின்றன.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question